நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்‘ எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார், அக்களூர் இரவி. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து சில பகுதிகள் கீழே.
0
ஒரு காலத்தில் இந்தியா, நிலையான படிநிலை கட்டமைப்பைக் கொண்டிருந்த சமுதாயமாக இருந்தது. அந்த சமுதாயம் வெளியில் புலப்படாத, மிகக் குறைவான அரசியல் செயல்பாட்டைப் பெற்றிருந்தது. ஆனால் இன்று இந்தியா உலக அளவில் தீவிரமான அரசியல் நடக்கும் இடமாக மாறியிருக்கிறது.
இந்தியாவிற்கான மீட்பை அரசியல் வெளியில் தேடிப்பெற முடியாது என்று ஒருமுறை கர்சான் பிரபு சொன்னார். அந்தக் கருத்திற்கு இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்தனர். தங்கள் நம்பிக்கையை அவர்கள் அரசியலில் குவித்தார்கள்: ஒருகாலத்தில் மிகப்பெரிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சியிலோ, அல்லது தற்போது அதற்கெதிராக சவால் விட்டு கொண்டிருக்கும் இந்து தேசியத்திலோ அல்லது அலையென எழுந்துவரும் இந்தியாவின் கீழ்நிலைச் சாதிகளின் அல்லது தலித் கட்சிகளில் ஒன்றிலோ நம்பிக்கையை வைத்தனர்.
அரசியல், தேசத்தைப் பிரிக்கிறது. அதே நேரத்தில், பல்கிப்பெருகும் மக்களின் குரல்கள், கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் இவற்றின் இணக்கமான இருப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஒற்றையான, பகிர்ந்துகொள்ளப்பட்ட, திரட்சியின் வெளியாகவும் அதற்கு உருக்கொடுக்கிறது. இந்தியர்கள் இந்த அரசியல் மூலமாகத்தான் சமகால உலகில் நுழைந்துகொண்டு இருக்கிறார்கள்.
இவற்றிற்கான அடிப்படைக் காரணமாக ஜனநாயகம் இருக்கிறது. ஐரோப்பியப் பேரரசுகளின் உருக்குலைவிலிருந்து எழுச்சிபெற்ற புதிய அரசுகளிலிருந்து இந்தியாவை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயக நடைமுறைகள் வரலாற்றுரீதியாகத் தொடர்ந்து உறுதியாகப் பின்பற்றப்படுகின்றன.
1947ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தின் மிகச்சிறப்பான ஓர் அம்சம் இதுவே. 1970களில் இருபத்திரண்டு மாதங்கள் நிகழ்ந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை கிரகணத்தால் மட்டுமே இது தடைப்பட்டது. சாதி அமைப்பின் சமத்துவமின்மை நிலவும் சமுதாயம் மற்றும் ஏகாதிபத்திய, எதேச்சாதிகாரஅரசு என்ற இந்த இரண்டின் பின்னணியில் இந்தியாவில் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. தொடக்கத்தில் நிலைமைகள் சாதகமற்றவையாக இருந்தன. ஏழ்மையும், கல்லாமையும் நிறைந்த சமுதாயம்; தொடர்பற்றவர்களாக, வெவ்வேறு தன்மை கொண்டவர்களாக குடிமக்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர்.
மரபுவழி அரசியல் சிந்தனைகள் இசைவற்றப் புறச்சூழல்களாக இவற்றை அடையாளப்படுத்துகின்றன; இந்தச் சூழலில்தான் ஜனநாயகம் இயங்க வேண்டியிருந்தது. அது நீடித்து, நிலைத்திருந்தது. அதுமட்டுமின்றி எதிர்பாராத வழிகளிலெல்லாம் இந்தியச் சமூகத்திற்கு சக்தியளிப்பதில் வெற்றியும் பெற்றது.
மிகக் கவனத்துடன் இயங்கிய தேசியவாத மேல்வர்க்கத்தினரால் அரசாங்கத்தின் ஒருவடிவமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜனநாயகம் விரிவடைந்தது; இந்தியர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை, சாதகமாக உருமாற்றியது; ஆழமாக வேரூன்றி, சமுதாயத்தின் கொள்கையாக அது உருமாறியது. நூல்களைத் தேடிப் படித்ததன்மூலம் அவர்கள் இதைத் தழுவவில்லை; அறிந்து கொள்ளவில்லை; உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் மூலமே தெரிந்துகொண்டனர். ஆயினும், ஜனநாயக முறையில் இந்தியா அடைந்திருக்கும் இந்த வெற்றிதான், அரசு அமைப்புகளின் தொடர்ந்த இருப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
மத உணர்வின் அடிப்படையில் பெறும் பெரும்பான்மையின் வழியாக, கொடுங்கோலாட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஆபத்தை அரசியல் சமத்துவம் என்ற சிந்தனை பிறப்பித்திருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதியை 1992இல் இந்து தீவிரவாத அமைப்புகளின் செயல்வீரர்கள் இடித்துத் தள்ளியபோது, அதிர்ச்சியளிக்கும் அச்சுறுத்தலாக இந்த அபாயம் வெளிப்பட்டது.
அரசியலில், நிச்சயமற்ற சமநிலை கொண்டதாக இந்தியா இருந்தாலும், ஒப்புமைநோக்கில் அது வெற்றியை முயன்று அடைந்திருக்கிறது எனலாம்.
தனது குடிமக்களில் பெரும்பான்மையோர் முன்னெப்போதையும்விட அதிக சுதந்திரத்துடன், ஒன்றாக வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறது; புதிதாகத் தோன்றிய தேசிய அரசுகளுடன் ஒப்பிடும்போது, மற்ற நாடுகளின் குடிமக்களைவிட அதிகமான சுதந்திரம் (சீனாவைக் கணக்கில் கொள்வோம்) இங்கு இருக்கிறது. ஆனால், நவீன உலகில் நாம் காணும் சுதந்திரத்தின் தர அளவை வைத்துப் பார்க்கும்போது, நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களை அது அனுமதிக்கவில்லை (ஒப்பீட்டிற்கு, மீண்டும் சீனாவை எடுத்துக் கொள்ளலாம்).
பொருளாதார நவீனத்துவம் நோக்கிய விழைவு, பெருமளவில் இங்கு சமமற்ற சமுதாயச் சித்திரத்தைத் தீட்டியிருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு தோல்வியாகவே இது முடிந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா. இக்காரணங்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. அவை சிக்கல் நிறைந்தவை, சர்ச்சைகளுக்கு உட்பட்டவை என்று கூறமுடியும். மறுக்கப்படும் வாய்ப்புகளும், சமமற்ற விநியோக முறையும்தான் இவற்றிற்கான தரமாதிரிகள்.
இந்தியன் என்ற தனது சுயத்தை உருவாக்க, தாகூர் கவிதை மொழியைப் பயன்படுத்தினார்; காந்தி, மதம் சார்ந்த மரபுகளின் பக்கம் திரும்பினார். நேரு, வரலாறு என்ற ஊடகத்தின் மூலம் இந்தியாவையும் தன்னையும் கண்டறிந்தார். தனது இயல்பிற்கு ஏற்றவாறு, அவர் வரலாற்றின் போக்கில் உலகத்தைப் பார்த்தார். அரசியல்மூலம் சாத்தியம் என்ற அவரது உணர்வை உடனடியாக வரையறை செய்த பார்வை அது. அவரது செயல்பாடுகளை எதிர்காலம் எப்படித் திரும்பிப் பார்க்கப் போகிறது என்பது குறித்து கவனத்துடன் அவரைச் செயல்பட வைத்த பார்வை.
0
இந்தியாவை மூடுண்ட இனங்களின் சமுதாயமாகப் பிரிட்டிஷ் வரலாறுகள் விவரித்தன; உண்மையில், வல்லமைமிக்க பேரரசு ஒன்று இல்லாததால், இவ்வினங்கள் தங்களுக்குள் ஆற்றலுடன் வெறுப்பூட்டும் வகையில் எப்போதும் மோதிக் கொண்டிருந்தன.
தனது புகழ்பெற்ற ”இந்திய வரலாற்றின் செய்தி” (1902) என்ற கட்டுரையில் ’அயல்நாட்டவரின் வரலாற்றை’ தாகூர் இவ்வாறு விவரிக்கிறார்: குருதியாறு ஓடும் யுத்தங்கள் வெடித்தன; தந்தை மகனோடு சண்டையிடுவதும், தனது சகோதரனைக் கொன்று மற்றொரு சகோதரன் ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுவதும்; சூறையாடும் கூட்டம் ஒன்று வெளியில் சென்றதும், மற்றொரு கூட்டம் உள்ளே வருவதும்; பதான்கள், முகலாயர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரித்தானியர்கள்; அனைவரும் இந்த பயங்கரக் கனவின் குழப்பத்தை அதிகரிக்கவே செய்தனர்.
தாகூரின் இந்த வருத்தம் தோய்ந்த ஒளிவுமறைவான நினைவுகூறலில், கடந்தகால இந்தியாவைப் பற்றிய நம்பத்தக்கச் செய்தியாகத் தான்அவதானித்ததை நேரு எடுத்துக்கொண்டார். அதனை விரிவுபடுத்தி இந்திய வரலாற்றை அவர் எழுதினார்.
பிரிட்டிஷாரும் இந்து தேசியவாதிகளும் வரலாற்றைப் பயன்படுத்திய முறையை இந்தவரலாறு மறுத்தது. முதன்முறையாக, இந்தியாவின் இதிகாசத்தை நேரு உருவாக்கினார்; அதன் கடந்தகால வரலாறு, பொருளற்ற புழுதிக் காற்றாகவோ, போற்றிப் புகழப்படும் இந்துவின் பகட்டான காட்சியாகவோ தோற்றமளிக்காத இதிகாசம். ஆனால், இடம்பெறுதல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற தர்க்கரீதியான செயல்களால் நகர்த்தப்படும் வரலாறு. அவரது கற்பனையில் இந்தியா என்பது, இடைவிடாமல் கலாசாரங்கள் ஒன்றாகக் கலந்திடும் வெளி. அந்தக் கலாச்சாரங்களின் கலப்பை, அந்தத் திரட்சியின் மண்மணக்கும் விளைவுகளை கொண்டாடும் வரலாறு இது.
செயற்கையான துல்லியத்துடன் வரையறுக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பிற்குள் காணப்படும் வேறுபாடுகள் குறித்த நேருவின் உணர்வு, முற்றிலும், நூல்களைக் கற்றதனாலோ, அறிவார்ந்தவர்களைச் சந்தித்ததாலோ ஏற்பட்டதல்ல: மிகச்சரியாக, அரசியல் மூலமே அவரிடம் அது உண்டானது
0
தாகூர் குறித்து ஐசையா பெர்லின், ”மிகக் கடினமான நடுநிலைப் பாதையை தேர்ந்தெடுத்ததன் மூலம் தனது நுண்ணறிவை மிகத் தெளிவாக அவர் வெளிக்காட்டினார். புரட்சிகர நவீனத்துவம் என்ற ஆபத்தையோ, மரபுநெறி என்ற பெருமையும் விரக்தியும் நிறைந்த அகழியின் பக்கமோ அவர் நெருங்கவில்லை” என்கிறார்.
நடுநிலைப் பாதையை விட்டு விலகாமல் இருக்கும் அத்தகு திறனை நேரு பெற்றிருந்தார். அதுமட்டுமின்றி, இந்தியன் என்ற அவரது சுயத்தின் மற்றொரு அடுக்காக, அவரது ஆங்கிலேயத் தன்மையை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கும் கலாச்சார சமநிலையைக் கண்டுபிடிக்கும் திறனும் அவருக்கு இருந்தது.
கடந்தகால புனிதத்திற்குத் திரும்புவது நேருவால் இயலாது. வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் சாத்தியமும் இல்லை. காலனியம் இழிவானதுதான். ஆனால், நவீனத்துவ நறுமணத்தையும் அது சுமந்து வந்தது. அந்த நவீனத்துவம், அந்த எழுதுபலகையை ஊடுருவக்கூடியதாக, தன் தடத்தை அதில் பதித்துச்செல்லக் கூடியதாக இருக்கவும் வேண்டும்.
அந்தவகையில், இந்தியாவைக் கண்டுபிடிப்பது என்பது இதுவரை விவரிக்கப்படாத, உருவாக்கப்படாத வரலாற்றின் வழியாக முன்செல்லும் ஓர் இயக்கமே. வெறுமனே, கடந்தகாலத்தை மீட்டெடுப்பது மட்டுமே, இந்தியர்களை, சுயதேவை பூர்த்தி அடைந்தவர்களாக மாற்றாது: வளமான, அசாதாரண அந்த வரலாற்றைப் போற்றும் இன்றியமையாத அந்தச் செயல், பழமையின் மாபெரும் தோல்விகளை அங்கீகரித்த, நவீன, மேலான சுய-விமர்சனப் பார்வையுடன் இணைந்து இருக்கவேண்டும்.
விடுதலைக்குப் பிந்தைய இருபதாண்டுகளில் முயற்சி செய்யப்பட்ட விஷயங்களின் களங்கமற்றப் புதுமையை, இப்போது, அரை நூற்றாண்டிற்கு பின்னர் உணரமுடியாதது சாதாரணவிஷயம். மேலேட்டமானது என்றாலும், பன்முகக் கலாச்சார சிந்தனை இன்று மிகவும் பிரபலமான ஒன்று.
0
இந்தியாவை உருவாக்கிய கருத்தாக்கம் ஒருபடித்தானதோ அல்லது ஒற்றை பொருள் கொண்டதோ அல்ல. உண்மையில், வேறு எந்த ஒற்றைக் கருத்தாக்கத்தாலும் நூறு கோடி இந்தியர்களின் எண்ணிலடங்கா சக்திகளையும், கோபங்களையும், நம்பிக்கைகளையும் உள்வாங்கிக்கொள்வது இயலாத ஒன்றே. அல்லது, ஒற்றைப் பண்பை அடிப்படையாகக் கொண்ட, குறுகிய சிந்தனைகள் எவற்றாலும் இந்தியர்களது விருப்பங்களை நிறைவேற்றவும் இயலாது.
இந்தியாவின் தனிப்பண்பு என்பதன் அடிப்படை எதுவென்று இது வரையிலும் முடிவு செய்யப்படவில்லை. 1947க்குப்பின் இந்திய அரசு சுவீகரித்துக் கொண்ட, சிதைக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் ஒப்பிடமுடியாத அளவிற்கு வேறுபாடுகள் கொண்ட மக்கள் திரட்சியின் கைகளில் அது உள்ளது.
அவர்கள், பெருமளவிலான இந்து சாதிகள், சாதிகளுக்கு வெளியிலிருப்போர், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பழங்குடிகள்; பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட பெரும்பான்மை மொழிகள் பேசுவோர்; பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும், பிரதேசம் சார்ந்த ஆயிரக்கணக்கான மொழிகள் பேசுவோர்; எண்ணற்ற தொல்குடியினர்; தனிக்கலாச்சாரம் பேணும் இனத்தவர்கள்.
இத்தகு இசைவற்ற அம்சங்களில் இருந்து தேசிய அரசுகள் உருவாக்கப்படுவதில்லை; ஒரு நவீன அரசிற்குள் இணக்கத்தை ஏற்படுத்தவல்ல, பொதுவான அடையாளத்தை அல்லது ஒற்றுமைக்கான அடிப்படையை இது அறிவுறுத்தவில்லை. அதனைச் சார்ந்து ஒன்றுபடுவதற்குரிய, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கொள்கை சார்ந்த கோட்பாடோ அல்லது அடையாளமோ, ஒரு ”சோசலிசமோ”, ஒரு பேரரசனோ இப்படி எதுவுமே இல்லை.
ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான இந்தியத் தன்மைக்கான கருத்துருவம் ஒன்றை நேரு மேம்படுத்தினார். இந்திய உணர்வு என்பதற்கான அடித்தளம் ஒன்றை அது பரிந்துரைப்பது போல் தோன்றியது.
விடுதலைக்குப் பின்னர், சோதனைகள் நிறைந்த சில பத்தாண்டுகளுக்கு இது நீடித்தது. வெளிப்படையாக, அதுவொரு அரசியல் கருத்தாக்கம்; தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க, அக்கருத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் நிலவிய பிறரை விலக்க விரும்பிய பல்வேறு சிந்தனைகளாலும், இந்திய அரசியல் சமூகத்தாலும் அக்கருத்தாக்கம் அரிக்கப்பட்டது. விலகி வழிவிட்டது.
0
இந்தியா என்கிற கருத்தாக்கம்
சுனில் கில்நானி / தமிழில்: அக்களூர் இரவி
சந்தியா பதிப்பகம்
335 பக்கங்கள் / விலை ரூ.315
தொடர்புக்கு : 094447 15315