Skip to content
Home » மக்கள்தான் இந்தியா

மக்கள்தான் இந்தியா

மக்கள்தான் இந்தியா

ஒரு நாடு என்பதற்கான வரையறை என்ன? ஓர் அரசைக் கொண்டிருப்பது மட்டும்தான் நாடா? தேசியக் கொடி, தேசியப் பாடல், வரைபடம் ஆகியவைதான் ஒரு நாட்டின் அடையாளங்களா?

இந்தியாவை நவீன அரசியலமைப்பின்மூலம் உருவான ஓர் இறையாண்மைமிக்க ஜனநாயக குடியரசு என்கிறோம். இதன் பொருள் மக்களிடமிருந்துதான் இறையாண்மை உருவாகிறது என்பதுதான். ஆக, இந்தியா என்பதும் மக்களின் இறையாண்மையால் கட்டி எழுப்பப்பட்ட குடியரசு. அரசு மக்களை உருவாக்கவில்லை. மாறாக, ஓர் அரசின் முதலும் முடிவுமாக மக்கள் இருக்கிறார்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே நவீனக் காலத்தை சேர்ந்தவைதான். அவை அனைத்தும் மக்களால் உருவாக்கப்பட்டவைதான். அறிவொளி இயக்கத்துக்குப் பின்பும் பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகளைத் தொடர்ந்தும் நவீன நாடுகள் உலகெங்கும் தோன்ற ஆரம்பித்தன. 20ஆம் நூற்றாண்டில் இச்செயல் முழுமையடைந்தது.

இந்திய ஒன்றியத்துக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட அதன் மாநிலங்களுக்கும் இன்று எழுந்திருக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இந்துத்துவச் சிந்தனை திகழ்கிறது. இந்தச் சூழலில் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் பொய்களையும் மெய்களையும் அறிந்துவைத்து கொள்வது அவசியமாகும். அதற்கு பார்த்தா சாட்டார்ஜி எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள The Truths And Lies Of Nationalism: As Narrated by Charvak எனும் முக்கியமான நூல் நமக்கு உதவும். பார்த்தா சாட்டர்ஜி இந்தியாவின் முக்கிய அரசியல் ஆய்வாளர். காலனியம், தேசியம், அதிகாரம், விடுதலைப் போராட்டம், ஜனநாயகம் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர்.

மேற்கூறிய நூல் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு சாட்டர்ஜியால் எழுதப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவவியலில் ஒன்றான சார்வாகத்தை அடிப்படையாக வைத்து பகுத்தறிவுடன் தேசியம் பற்றிய உண்மைகளையும் பொய்களையும் சாட்டர்ஜி தனது நூலில் விவாதிக்கிறார். சார்வாகர் விவரிப்பதைப் போன்ற நடையை நூல் கொண்டுள்ளது.

இன்றைக்கு இந்தியா என்று நாம் சொல்லிக்கொள்ளும் நாடு காலனிய கால நிர்வாகத்தாலும் அரசியலாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்தச் சுவடுகளைக் கொண்டுதான் இன்றுவரை அது இயங்கி கொண்டிருக்கிறது (இந்தியாவின் வரைபடம் முதல் அரசமைப்புச் சட்டம் வரை). விடுதலை இயக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே நவீன இந்தியா உருவானது.

இந்தியாவின் எல்லைகள் பற்றிய கதை இன்னும் சுவாரசியமானது. அவை அனைத்தும் எதிர்பாரா விபத்துகளின் விளைவாக உருவானவை. தேசிய இயக்கம் தோன்றாத இடங்கள் எல்லாம் இன்றைக்கு இந்தியாவின் பகுதிகளாக இருப்பதை எந்தப் பாடப் புத்தகமும் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

எடுத்துக்காட்டுக்கு, கைதிகளுக்கென்று உருவாக்கப்பட்ட காலனியாக (பீனல் காலனி) இருந்த அந்தமான் தீவுகளை எடுத்துக்கொள்வோம். பொதுமக்களின் வாழ்விடங்களிலிருந்து கைதிகள் தனியே பிரிக்கப்படவேண்டும் எனும் மேற்கத்திய சிந்தனையால் உருவாக்கப்பட்ட காலனி அது. உலகின் மிகப் பெரிய கைதிகளின் காலனி ஆஸ்திரேலியா. அந்தமானில் இருந்த பூர்வகுடிகள்மீது இந்தியக் கைதிகள் நடத்திய தாக்குதல் ஏராளம். ஆனால் இன்றைக்கு அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதி. தாக்கப்பட்டவர்களும் தாக்கியவர்களும் இன்றைக்கு இந்தியாவின் குடிகள்.

நேபாளம், பூடான் உடனான இந்திய எல்லைகள் இன்றைக்கும் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் விடுதலை இயக்கத்தின் நிழல்கூடப் படாத வடகிழக்கு மாநிலங்கள் இன்றைக்கு இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக இருக்கின்றன. போர்ச்சுகீசியர்கள் ஆண்ட கோவா, பிரெஞ்சு ஆளுகையில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகள் எல்லாம் பல்வேறு அரசியல் உடன்பாடுகள் மூலம் இந்தியாவின் பகுதிகளாக இணைக்கப்பட்டவை. இங்குள்ள சுதேச சமஸ்தானங்களும் அப்படியானவைதான். இன்றைக்கு காஷ்மிரின் பிரச்னை வெறும் ராணுவ பிரச்னையாகத் தெரியலாம், ஆனால் 1947இல் ஹைதராபாத்தும் காஷ்மிரும் நெருங்கிய அரசியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தன.

பிரிவினை சமயத்தின் காஷ்மிரிலும் ஹைதராபாத்திலும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டபோது ஜின்னா காஷ்மிருக்குச் சரி என்றும் ஹைதராபாத்துக்கு இல்லை என்றும் சொன்ன காரணத்தால் இரண்டு பகுதிகளும் இன்றைய இந்தியாவின் பகுதிகளாக ஆகிவிட்டன. பிரிவினைக்கு இணையான வன்முறை ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இந்த வன்முறை தெலங்கானா உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளதை பார்த்தா சாட்டர்ஜி சுட்டிக்காட்டுகிறார்.

இந்நூலை பார்த்தா சாட்டார்ஜி எழுதியதற்கு பாஜக அரசின் இந்துத்துவக் கொள்கையும் அதன் அதிகாரக் குவிப்பும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு என்பது எமெர்ஜென்சி காலகட்டத்திலும் அதன் பின்பும் வீரியமாக நடைபெற்றது. 2014 பிறகான அதிகாரக் குவிப்பு, தடுப்பார் யாருமற்ற விதத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய அதிகாரக் குவிப்பு இரு வகையினருக்குப் பலனளித்தது. அம்பானி, அதானி போன்ற பெருநிறுவன முதலாளிகள் முதல் வகையினர். தரகு முதலீட்டியம் வளர்ந்தது. இரண்டாவதாக, உயரடுக்கு எலைட் மக்கள் பலனடைந்தனர். இவர்களுக்கு அரசின் பல சலுகைகள் கிடைக்கப்பெற்றன. முதலாமவருக்கு வரிச்சலுகையும் இரண்டாமவருக்கு பொருளாதார நிலை அடிப்படையிலான (ஈடபிள்யூஎஸ்) ஒதுக்கீடும் கிடைத்தது. இதன் உச்சத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவக் கொள்கை இருப்பதாகச் சொல்கிறார் சாட்டர்ஜி.

கோல்வால்கரின் புத்தகத்தில் இருந்தும், இந்து மகாசபை நடவடிக்கைகளில் இருந்தும் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார் சாட்டர்ஜி. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைமைகள் தொடக்கம் முதலே கூட்டாட்சிக்கு எதிரான சிந்தனையைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். அவர்களுக்கு தேவை ஒற்றை இந்தியா, அதுவும் மதவாத ஒற்றை இந்தியா.

இந்து-இந்தி-இந்துஸ்தான் என்பதுதான் ஆர்எஸ்எஸ் சிந்தனையின் வேர். இவர்கள் அனைவரும் நிலத்தை அடிப்படையாக வைத்தே சிந்தித்துள்ளார்கள். அவர்களுக்கு முதன்மை இந்த நிலம்தான், மக்கள் எல்லாம் நான்காம்பட்சம். எல்லையில் ஏதேனும் சிக்கல் என்றால் இவர்களின் தேசபக்தி பீறிக்கொண்டு எழும். உள்நாட்டில் மக்கள் படும் துயரங்களைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இப்படி ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளைச் சமகாலப் போக்குடன் பொருத்திக் காட்டுகிறார் சாட்டர்ஜி.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அவர் கூறும் பதில்கள் முக்கியமானவை. ஒன்றியத்தில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாநிலங்களிடன் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அப்படிப் பகிர்ந்தளிப்பது மக்களிடம் நிலவும் சமத்துவமின்மையைக் குறைக்கவும், பல்வேறு பிரச்னைகளுக்குச் சுமூகமாகத் தீர்வு காணவும் உதவும்.

மக்களால் உருவாக்கப்பட்ட மாநிலங்கள்தான் இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக இருக்கிறன்றன. மாநிலங்களுக்கு இடையே நிலவும் சமத்துவமின்மைக்கு ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புதான் மூலக் காரணம் என்கிறார் சாட்டர்ஜி. அம்பேத்கரின் மொழிவாரி மாநிலங்கள் குறித்த நூலை (Thoughts on Linguistic states) தனது வாதத்திற்குத் துணையாகக் கொள்கிறார். திராவிட இயக்கம் தொடர்ந்து பேசிவரும் மாநில சுயாட்சி அரசியலுக்கும் இவர் கூறும் தீர்வுகளுக்குமான நெருக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும்.

அடிப்படைக் கடமைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51 (ஏ), பொது உரிமையியல் சட்டம், மதசார்பற்ற தன்மை, மக்கள் கூட்டமைப்பு ஆகியவவை குறித்து சாட்டர்ஜி முன்வைக்கும் வாதங்கள் முக்கியமானவை.

இந்துத்துவத்திற்கு எதிராக நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை நூலின் இறுதியில் குறிப்பிடுகிறார். சமூகத்தில் இருக்கும் மேட்டுக்குடி மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்குமான இணைப்புப் பாலமாக இந்நூலைப் படிக்கும் இளைஞர்கள் இருக்கவேண்டும் என்கிறார்.

ஆங்கிலத்தில் இருக்கும் சிந்தனைகளை அவரவர் தாய்மொழிக்குக் கொண்டு செல்வதையும் அத்தகைய சிந்தனைகள் குறித்து விவாதங்களை உருவாக்குவதையும் முக்கியமான செயல்பாடாகச் சொல்கிறார் சாட்டர்ஜி. அனைவரது தனித்துவங்களையும் மதித்து, அவர்களைச் சமத்துவமாக நடத்தும் ஒரு கூட்டாட்சி ஜனநாயகத்தையே நாம் நம் கனவாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நூலை நிறைவு செய்கிறார்.

தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை உயர்த்திப்பிடிப்பது மட்டும் தேசப்பற்று ஆகிவிடாது. நாடு என்பது மக்கள் கூட்டம். மக்கள் மீதான பற்றின் மூலமே தேசத்துக்கு உண்மையான பெருமிதத்தை நாம் சேர்க்கமுடியும்.

0

பகிர:
கெளதம் ராஜ்

கெளதம் ராஜ்

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. முதுகலை அரசியல் அறிவியல் மாணவர். அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர். ஆய்வுப் புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *