Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

வரலாறு என்பது மனிதனின் ஓர் அடையாளத் தேடல். அதற்காகப் பரிணமித்தவுடனே அவன் அதைத் தேடத் தொடங்கவில்லை. தனது நினைவுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் எப்போது ஏற்பட்டதோ, அப்போதுதான் அதற்கான தேடலை மனிதன் தொடங்கினான். பெரும்பாலும், சமூகமாக அவன் வாழத் தொடங்கியபோதுதான் இது நடந்திருக்கவேண்டும்.

வாய்மொழியாகவும் மரபுக் கதைகள் மற்றும் பாடல்கள் வழியாகவும் ஆரம்பத்தில் வரலாறு வளர்ந்தது. பின்னாளில் பாறை ஓவியங்கள் மூலமாகவும், எழுத்துமுறை தோன்றியவுடன் சிறியதும் பெரியதுமான ஆவணங்கள் வழியாகவும், அது விரிவடைந்தது. அதேநேரம் எழுத்து முறை தோன்றியவுடன் மிகப்பெரிய அளவில் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டது என்று சொல்லிவிட முடியாது.

நமக்குக் கிடைத்த தரவுகளின்படி, பொயுமு 3000 ஆண்டுகளுக்கு முன்பு மெசோபடோமியாவின் சுமேரியர்கள்தான் உலகிலேயே முதல்முறையாக வரலாற்றை ஆவணப்படுத்தினார்கள். உலகின் பிற சமூகங்களில் இந்த வழக்கத்தைக் காணமுடியவில்லை. இதனால் `வரலாறு எழுதுதல்’ வெவ்வேறு நாகரிகங்களிலும் சமூகங்களிலும் நாடுகளிலும் ஒரே மாதிரியான வளர்ச்சியை எட்டவில்லை.

உலகளவில் காலனித்துவம் பரவியபோது வரலாறு எழுதுதல் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றது; வரலாற்று ஆவணங்கள் முறையான திட்டமிடல் மூலம் முதலில் தொகுக்கப்பட்டு பிறகு வகைப்படுத்தப்பட்டன. கிரேக்க, சீன மற்றும் இஸ்லாமிய நாடுகளில் வரலாறு எழுதும் பழக்கத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், அங்கெல்லாம் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

இந்தியாவில் வரலாறு எழுதுதல் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக இருந்தது. ஆரம்பத்தில் குறைவாக இருந்த இந்தப் பழக்கம் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் நன்கு வளர்ந்து, பின்னர் காலனி ஆட்சியின்போது உச்சத்தைத் தொட்டது.

நாகரிகம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை மையப்படுத்தியே வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அடிப்படையில் கடந்த காலம் குறித்து வரலாறு பேசினாலும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான தொடர்பை அது தன்னகத்தே கொண்டுள்ளது. முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், கடந்தகால நிகழ்வுகள் நிகழ்காலத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளன, பாதித்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் வரலாறு துணை நிற்கிறது.

அதேபோல கடந்தகால அனுபவங்கள் எதிர்காலச் சாதனைகளுக்கு உதவும் காரணிகளாக இருந்திருக்கின்றன. இதனாலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டதாக இன்றளவும் வரலாறு இருந்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக வெற்றி பெற்றவர்களின் கண்கள் ஊடாகவே வரலாறு எழுதப்பட்டு வருவதாகவும், தோற்றவர்களின் கண்கள் பார்த்தவை பெரும்பாலும் மறைக்கப்படுவதாகவும் ஒரு கருத்து உண்டு. இதை முற்றிலுமாக ஏற்கவும் முடியாது; புறம் தள்ளவும் முடியாது.

பல வரலாறுகள் ஈட்டிகளாலும் அந்த ஈட்டிகளில் வழிந்த குருதியாலும் எழுதப்பட்டிருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், வரலாறு என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு என்ற கருத வேண்டியிருக்கும்.

14ஆம் நூற்றாண்டில்தான் வரலாறு என்ற சொல் ஆங்கிலத்தில் அறிமுகமானது. ஆரம்பத்தில் உண்மையும், கற்பனையும் கலந்த கதைகளைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டாலும், 15ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் கடந்தகால உண்மைகளை மட்டுமே பேசும் துறையாக வரலாறு மாற்றம் கண்டது. இந்த வரலாற்றுடன் இயற்கை வரலாறு (Natural History) என்ற பிரிவும் சேர்ந்தே வளரத் தொடங்கியது.

வரலாறு எப்படி மனிதனை மையப்படுத்தி அவனது கடந்த காலத்தைப் பேசத் தொடங்கியதோ, அதேபோல் கடந்த காலத்தில் அவனுடன் இருந்த உயிரினங்களையும் சூழல்களையும் விளக்கி இயற்கை வரலாறு வளரத் தொடங்கியது. இயற்கை வரலாறு என்ற சொல் இன்று புவியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், சூழலியல், தொல்லியல் போன்ற அறிவியலின் பல்வேறு பிரிவுகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில், இயற்கை வரலாறு என்பது ஓர் அறிவார்ந்த உலகப் பார்வையாக மட்டுமே இருந்தது. இயற்கை வரலாறு என்ற சொல்லின் லத்தீன் மூலச்சொல் `ஹிஸ்டோரியா நேச்சுராலிஸ்’ (Historia Naturalis). ஹிஸ்டோரியா என்பது அறிந்துகொள்ளும் முயற்சி என்ற பொருளிலும், நேச்சுராலொஸ் என்பது இயற்கை சார்ந்த என்ற பொருளிலும் எடுத்தாளப்பட்டது.

பண்டைய ரோமப் பேரரசில் வாழ்ந்த அறிவியலாளரான மூத்த பிளினி (Pliny the Elder) இந்தச் சொல்லாடலை முதல்முதலில் பயன்படுத்தினார். அவரது நூலான நேச்சுராலிஸ் ஹிஸ்டோரியா, (Naturalis Historia) இயற்கை மற்றும் மனித சமூகம் குறித்த ஒரு விசாலமான களஞ்சியம். இயற்கை வரலாறு என்ற சொற்றொடருக்கு இந்த நூல்தான் அடித்தளமாக அமைந்தது

அதுமட்டுமல்லாமல், பிற்காலத்தில் கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்ற வார்த்தைக்கும் இந்த நூல்தான் அடித்தளமிட்டது. தனி ஒரு மனிதனால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமாக, இந்த நேச்சுராலிஸ் ஹிஸ்டோரியா இன்றுவரை நம்மிடம் உள்ளது. இதைத் தொகுத்த மூத்த பிளினி குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

ரோமப் பேரரசின் ஒன்பதாம் சக்ரவர்த்தியான வெஸ்பேசியனுக்கு பிளினி நெருங்கிய நண்பராவார். அந்தக் காலகட்டத்தில் அரிஸ்டாட்டிலுக்குச் சமமான புகழை பிளினி பெற்றிருந்தார். பொயு 23ஆம் ஆண்டில் இவர் வெரோனாவில் பிறந்ததாக ஒரு பிரிவினரும், கோமோ நகரில் பிறந்ததாக மற்றொரு பிரிவினரும் உரிமை கோரினார்கள்.

கோமோ நகரின் சுற்றுவட்டாரத்தில் பிளினியின் மாமா மிகப்பெரிய அளவில் சொத்துக்கள் வைத்திருந்ததற்கும், அந்நகருக்கு அருகில் பிளினியின் குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்ததற்கும் பின்னாளில் சான்றுகள் கிடைத்ததால், கோமோவே அவரது பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தனது சிறு வயதில் அதாவது, ரோமப் பேரரசர் டைபீரியசின் ஆட்சிக்காலத்தின்போது பூர்வீக இடத்திலிருந்து ரோம் நகருக்கு பிளினி இடம்பெயர்ந்தார். ரோமப் பேரரசி லொளியா பாலினாவின் ஆபரணங்கள் குறித்துத் தன்னுடைய இயற்கை வரலாறு நூலில் எழுதியிருந்ததை வைத்து ரோமப் பேரரசர் கலிகுலாவின் ஆட்சியில் அவர் அரண்மனைப் பணியில் இருந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் லொளியா பாலினா குறுகிய காலமே பேரரசியாக இருந்தவர். இதனால், பிளினி இவரைச் சில பொது நிகழ்ச்சிகளில் கண்டதை வைத்து ஆபரணங்கள் பற்றி எழுதியிருக்கலாம் என்பது பின்னாளில் உறுதிப்படுத்தப்பட்டது.

பேரரசியின் தலை முதல் கால் வரை ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் அணிந்திருந்ததைக் கண்ட பிளினி, `ரோமப் பேரரசு அதிக பொருள் கொடுத்து இந்தியாவில் இருந்து மிளகு மற்றும் முத்துக்கள் வாங்குவதைப்போல இது அவசியமற்றது’ என இயற்கை வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ரோமப் பேரரசர்களான டைபீரியஸ், கலிகுலா, கிளாடியஸ், நீரோ ஆகியோரின் அரசவைகளில் பிளினி பணியாற்றியதற்குச் சான்றுகள் இல்லை.

பேரரசர் கலிகுலாவின் காலத்தில் வாழ்ந்த அபின் என்ற புகழ்பெற்ற தத்துவவியலாளரிடம் பிளினி கல்வி பயின்றுள்ளார். பிறகு ஆப்பிரிக்காவிற்குச் சென்று அப்பகுதி குறித்து நன்கு அறிந்துகொண்டு, பின்னாளில் அந்தப் பகுதியைப் பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிடவும் செய்தார். அதன்பிறகு ரோமப் பேரரசின் காலாட்படையில் வீரனாகச் சேர்ந்து ஒரு கட்டத்தில் அப்படைக்குத் தளபதியாக உயர்ந்தார்.

லூசியஸ் போம்போனியானஸ் என்கிற செனெட்டரின் தலைமையில் அன்றைய ஜெர்மன் பகுதிக்குச் சென்றபோது, அப்பகுதி குறித்து நன்கு தெரிந்துகொண்டு அதைப் பற்றியும் தன்னுடைய நூலில் எழுதினார்.

இந்தக் காலகட்டத்தில் இயற்கை வரலாறு தவிர்த்து நிறைய நூல்களை (ஜெர்மனில் நடைபெற்ற யுத்தங்கள் குறித்த சுருக்கம், பொம்போனியசு செகுண்டசின் வாழ்க்கை, குதிரை வீரனின் வீச்சு, யூதப் போர்கள், சில இலக்கணக் கட்டுரைகள் போன்றவற்றை) எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் அவை இன்றுவரை கிடைக்கவில்லை.

பின்னர் மீண்டும் ரோம் நகருக்குத் திரும்பி சில காலம் அங்கே கழித்துவிட்டு, பேரரசர் நீரோவின் ஆட்சிக்காலத்தில் ஸ்பெயின் பகுதிக்குச் சென்றார். இறுதியாகப் பேரரசர் வெஸ்பாசியன் காலத்தில் அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் பின்னாளில் உலகளவில் புகழ்பெற்ற இயற்கை வரலாறு நூலை எழுதி முடித்தார்.

அன்றைய இளவரசர் டைட்டஸுக்கு இந்த நூலை பிளினி அர்ப்பணித்தார் (பேரரசர் வெஸ்பாசியனின் மகனான டைட்டஸ் அப்போது பேரரசராக இல்லை). இந்தச் செயல் பிளினி மற்றும் டைட்டஸ் குடும்பத்தினருக்கு இடையே இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பேரரசராக டைட்டஸ் பதவியேற்றுக்கொண்டதும் மிசேனம் என்ற இடத்தில் இருந்த ரோமக் கடற்படையின் தளபதியாகப் பிளினி பொறுப்பேற்றார். மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அதில் அவர் வெற்றியும் பெற்றார். அந்தச் சமயத்தில்தான், வெசூவியஸ் எரிமலை வெடித்து பாம்பேய், ஹெர்குலேனியம் நகரங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின.

அந்தச் சம்பவம் (பொயு 79) நடைபெற்றபோது பிளினி மிசேனத்தில் இருந்தார். திடீரென வானில் உருவான ஓர் அசாதாரணமான மேககூட்டத்தை அவர் கண்டார். அதை அருகில் பார்க்கும் ஆர்வத்தில் ரெசினா என்கிற இடத்திற்கு பிளினி கப்பலில் சென்று இறங்கி, அந்த நிகழ்வைக் கவனித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கு இருந்தபடி அந்த அசாதாரண மேககூட்டம் பற்றிக் குறிப்பெடுத்துவிட்டு அதன்பிறகு அவர் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்.

அதுவரை அமைதியாக இருந்த வெசூவியஸ் எரிமலை, அவர் உறங்கிய பிறகே சீற்றம்கொள்ளத் தொடங்கியுள்ளது. வெகு விரைவிலேயே நெருப்புக் கற்கள், சாம்பல், வாயு போன்றவை எரிமலையில் இருந்து வெளியேறத் தொடங்கின. பிளினி தங்கியிருந்த வீட்டைச் சாம்பல் மண்டலம் சூழத் தொடங்கியதும், அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். தலையணையையும் மெத்தையையும் கவசமாக உபயோகித்து நெருப்பு கற்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொண்டார்.

கப்பலுக்குச் சென்று வந்த வழியே திரும்பிச் செல்ல அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போது கடல் மிகுந்த சீற்றத்தில் இருந்ததால் அவரால் சீராக கப்பலை செலுத்த முடியவில்லை. இதனால் மீண்டும் கடற்கரையை அடைந்து கப்பலைவிட்டுக் கீழே இறங்கி, பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஓர் இடத்தில் தங்கினார்.

ஆனால், எரிமலையில் இருந்து வெளியேறிய அதிகப்படியான சாம்பலும், கந்தக வாயுவும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் இறந்துபோனார். பிளினியின் இறப்பு குறித்த தகவல் பின்னாளில் அவரது உறவினரான இளைய பிளினி வழியாகவே உறுதிபடுத்தப்பட்டது. வெசூவியஸ் எரிமலை வெடிப்பால் இறந்தபோது அவருக்கு 56 வயதுதான். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பிளினிக்கு ஒரு சகோதரி இருந்தார்.

அறிவியலும் கலையும் செழித்தோங்கிய ரோமப் பேரரசில் பிளினி வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், கடும் உழைப்பாளியாக இருந்த பிளினி இயற்கை வரலாற்றின் ஆகப்பெரும் ஆய்வாளராகத் திகழ்ந்தார். அவருடைய மருமகனும் எழுத்தாளருமான இளைய பிளினி, அன்றைய புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாசிடசுக்கு எழுதிய கடிதத்தில், மூத்த பிளினியின் அசாதாரண உழைப்பை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

`அவர் எப்போதும் படித்துக்கொண்டிருப்பார் அல்லது ஒருவரிடம் வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். இல்லையெனில் அவர் எழுதிக்கொண்டிருப்பார் அல்லது வேறொருவரை எழுதச் சொல்லி….! காலை, மாலை, குளிக்கும் நேரங்களில்கூட அவருடன் எப்போதும் ஒரு வாசகர் அல்லது எழுத்தாளர் இருப்பது வழக்கம்!’

படிப்பதோடு பிளினி நிறுத்திக்கொள்ளவில்லை, படித்தவற்றில் இருந்து குறிப்புகள் எடுக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. படித்த நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள், மேற்கோள்கள் போன்றவற்றை வைத்து மட்டும் அவர் 160 நூல்களைத் தொகுத்துள்ளார்.

பிளினி உயிரிழந்த பிறகு, லார்ஜியஸ் லிகினியஸ் என்ற நபர் அந்தக் குறிப்புகளுக்காகவே சுமார் நான்கு லட்சம் செஸ்டர்செஸ்களை (செஸ்டர்செஸ் – பண்டைய கால ரோம நாணயம்) அவரது மருமகனிடம் கொடுக்க முன்வந்துள்ளார். தனது சுய அறிவுப் பங்களிப்பை விலைமதிப்புடையதாகப் பிளினி மாற்றியதற்கு இதுவே ஆகச்சிறந்த சான்று.

இயற்கையை மிகுந்த ஆர்வத்துடன் பிளினி அணுகினார். சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும், உலகம் தன்னை மறுபடியும் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒவ்வொரு முறையும், பிளினியின் விழிகள் மாய உலகை நோக்கிச் சென்று உண்மையைத் தேடின. ஆனால், நிரந்தர நுட்பத்தையும் அறிவியலின் ஆழத்தையும் அவரது பார்வை தொட்டிருக்கிறதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.

அரிஸ்டாட்டிலைப்போல் பிளினி ஓர் ஆழமான சிந்தனையுடைய தத்துவவாதி அல்ல என்றும், அறிவியலின் அடித்தளங்களை அமைத்த மாமனிதராக அவரைப் போற்ற இயலாது என்றும், பின்னாளில் அறிவியலாளர்கள் சிலர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள்.

அவரது எழுத்துகளின் உள்ளர்த்தம், அந்தக் காலகட்டத்தில் ஒளிர்ந்த அறிவியல் மீதான புரிதலை நிறைவாகப் பிரதிபலிக்கவில்லை. மாறாகப் பழமையான புனைவுகளையும், சமூகத்தில் பரவியிருந்த கதைகளையும் விமர்சனம் ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு அவற்றை தனது நூல்களில் அவர் பதிவு செய்திருந்தார்.

சில நேரங்களில் அந்தக் கதைகள் மீது அவருக்கே விசித்திரமான நம்பிக்கையும், ஆழ்ந்த ஈடுபாடும் இருந்ததுபோலவே தோன்றுகிறது. இதையே அவரது இயற்கை வரலாறு நூலில் இருந்த குறையாக அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவரது நூல்களில் நுட்பமான கட்டமைப்பும், தெளிவான அறிவியல் ஒழுங்கும் காணப்படவில்லை.

இதன் விளைவாக, அவற்றைப் படிக்கும் ஒரு வாசகர் முடிவற்ற அறிவுப் பயணத்தில் இழுக்கப்பட்டு அதில் பயணிக்க நேரிடுகிறது. இதனால்தான் பிளினியை ஓர் அறிவியலாளராக பாராட்டுவதற்கு பதிலாக, ஒரு வியக்கத்தக்க தொகுப்பாளராகவும் உலகின் அறிவுப் பொக்கிஷங்களைச் சேகரித்து அவற்றை காக்கத் துணிந்த வரலாற்றின் ஒரு மாபெரும் மனிதராகவும் நினைவுகூர்கிறோம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *