இயற்கை வரலாறு நூலில் 2000க்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோள்காட்டப்பட்டு, 480 எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பல நூல்களை நாம் இழந்துவிட்டதால், பிளினியின் நூல்தான் அவற்றுக்கான ஆதாரமாக விளங்குகிறது.
பல லத்தீன் சொற்கள் இயற்கை வரலாறு நூலில் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் லத்தீன் மொழியை மீள் உருவாக்கம் செய்யவும் பிளினியின் இந்த நூல் மிகவும் அவசியமாகிறது.
இயற்கை வரலாறு படைப்பை 10 தொகுதிகளைக் கொண்ட 37 நூல்களாக பிளினி எழுதியிருக்கிறார். வானியல் மற்றும் அது சார்ந்த சிந்தனைகளுக்கு இரு நூல்கள் அடங்கிய முதல் தொகுதியை ஒதுக்கியதன் மூலம், அவர் இயற்கையை கடவுளாகக் கருதுபவர் என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். உலகத்தின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளும், நட்சத்திரங்கள், சூரிய கிரகணம், மின்னல் போன்றவை குறித்த விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
நான்கு நூல்கள் (3-6) அடங்கிய இரண்டாம் தொகுதி புவியியல் குறித்துப் பேசுகிறது. மூன்று பெரும் நிலப்பரப்புகளான ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்கள் பற்றிய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அடுத்த புத்தகம் (7) மானுடவியலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நான்கு நூல்கள் (8-11) அடங்கிய மூன்றாம் தொகுதி விலங்கியலையும், பதினாறு நூல்கள் (12-27) அடங்கிய நான்கு முதல் ஏழு வரையிலான தொகுதிகள் தாவரவியலையும் விளக்குகின்றன. மந்திரம், நீர், மருந்தியல் போன்றவற்றுக்காக ஐந்து நூல்கள் (28-32) அடங்கிய எட்டாம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுரங்கம் மற்றும் கனிமவியலுக்காக ஒன்பது மற்றும் பத்தாம் தொகுதிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பிளினி ஒருபோதும் இந்தியாவிற்கு வந்ததில்லை. மெகஸ்தனீஸ், ஹேரோடோடஸ், கட்டேசியஸ், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட கிரேக்க-ரோம எழுத்தாளர்களின் நூல்களையும், வர்த்தகர்களின் தரவுகளையும் அடிப்படையாக வைத்தே இந்தியா குறித்த தகவல்களை இயற்கை வரலாறு நூலில் அவர் எழுதியுள்ளார்.
குறிப்பாக மெகஸ்தனீஸ் எழுதிய `இண்டிகா’ நூலில் இடம்பெற்றிருந்த தரவுகளை பிளினி எடுத்துள்ளார். செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகேடரின் தூதராக சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் மெகஸ்தனீஸ் இருந்துள்ளார். அவரை மிகச்சிறந்த அறிவாளியாகப் பிளினி கருதினார்.
இந்தியா என்பது ஒரு மாபெரும் நிலப்பரப்பு, கங்கை நதியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் ஒருபுறம் இமயமலையும், மறுபுறம் பெருங்கடலும் (இந்தியப் பெருங்கடல்) இருக்கின்றன என்று பிளினி குறிப்பிட்டுள்ளார். இந்தியா உலகின் வளமான நாடாகும், சூரியன் தோன்றும் இடத்திலிருந்து வந்த ஒளி அந்நாட்டை சிறப்பாக்குகிறது என்றும் கூறுகிறார்.
புவியியல் ரீதியாக ஈரமும், வெப்பமும் இந்தியாவில் மிகுந்திருப்பதாகக் குறிப்பிடும் பிளினி, இவற்றின் காரணமாக தனித்துவமான உயிரினங்கள், பசுமை பரப்பு, மருந்துணவுகள் ஆகியவை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக உறுதியாக நம்பினார்.
இந்திய மக்கள் மிகவும் விசித்திரமாகவும், தூய்மையாகவும் வாழ்பவர்கள் எனப் பிளினி வர்ணித்துள்ளார். `அவர்கள் துணிவும் பொறுமையும் நிறைந்தவர்கள், எளிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்; சில பகுதிகளில் பெண்கள் 130 வயது வரை வாழக்கூடியவர்கள்; சில இனத்தவர்கள் உணவைத் தவிர்த்து மருந்துகளை மட்டுமே உட்கொள்கிறார்கள்’ என்கிறார்.
இந்திய மக்களின் வாழ்க்கை முறை பிளினிக்குப் புதுமையான ஒன்றாக இருந்துள்ளது. துறவிகள் குறித்த விவரங்கள் ரோமக் கலாசாரத்துக்கு முற்றிலும் வேறுபட்டு இருப்பதாக அவர் கருதியுள்ளார்.
`இந்தியத் துறவிகள் சாமர்த்தியமான ஆத்ம பலம் நிறைந்தவர்கள்; மண், கல், மரம் போன்றவற்றையே அவர்கள் உணவாக ஏற்கின்றனர்; இறக்கும் தருவாயில் தங்களது உடலை எரித்துக்கொள்கின்றனர்’ எனவும் பிளினி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக ரோமப் பேரரசால் செலவிடப்பட்ட பெரும் தொகை என்றுமே பிளினிக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை. அவரது எழுத்துக்கள் வழியாக இதை அறிந்துகொள்ள முடிகிறது.
`ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டெனாரியஸ்கள் மதிப்பிலான பொன்னையும், வெள்ளியையும் இந்தியாவிற்கு ரோம் அனுப்புகிறது! மிளகு, முத்து, யானைத் தந்தம், வாசனைப் பொருட்கள், ஊதுபத்திகள், வைரங்கள் போன்றவை இந்தியாவிலிருந்து பெறப்படுகின்றன. விலையுயர்ந்த இந்திய வாசனைப் பொருட்கள் இன்றி ரோமப் பெண்களுக்கு உணவு தயாரிக்க தெரியாது, அத்தனை பணம் காற்றில் பறக்கிறது!’ எனப் பிளினி மிகவும் சுவாரசியமாகப் பகடி செய்துள்ளார்.
பிளினியின் இந்தியக் குறிப்புகளில் மிக முக்கியமானதொரு இடத்தை யானை பிடித்துள்ளது. யானை பற்றிய அவரது விவரிப்பில் உண்மைகள், கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள், அறிஞர்களின் பார்வைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. யானையின் தன்மை குறித்த வரலாற்றுப் பார்வையுடன், இயற்கை பற்றிய ரோம நாட்டவரின் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
`யானைகள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. அளவில் பெரிதாகவும், பலமானதாகவும், அறிவில் சிறந்ததாகவும் இந்திய யானைகள் இருக்கின்றன. அடர்ந்த காடுகளில் கூட்டமாக யானைகள் வாழ்கின்றன. யானைகள் குழுவை ஒரு முதிய யானை வழிநடத்தும், வயதின் அடிப்படையில் யானைகளின் நடத்தை அமையும்’ என்று பிளினி கூறுகிறார்.
யானையை சாதாரண விலங்காக அல்லாமல், அறிவும், நாகரிகமும் நிறைந்த ஓர் உயிரியாகவே பிளினி கருதுகிறார். அவரது பார்வையில் யானைகள் நேர்மை, புத்திசாலித்தனம், நியாய உணர்வு மற்றும் தெய்விக அம்சத்தைக் கொண்டவை. `யானைகள் மனித மொழியைப் புரிந்துகொண்டு கட்டளைகளை ஏற்கின்றன, பழக்கப்படுத்தப்படும் செயல்களை நன்கு நினைவில் வைத்திருக்கின்றன, காதல், நாணம், புகழ், மதிப்பு ஆகிய உணர்வுகள் அவற்றிடம் இருக்கின்றன’ என்கிறார்.
200 முதல் 300 ஆண்டுகள் வரை யானைகள் வாழ்வதாகவும், 60வது வயதில் அவை முழுமையான வளர்ச்சியை எட்டுவதாகவும் பிளினி உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, யானைகளின் உடலமைப்பு குறித்த நுட்பமான தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.
`யானையின் தும்பிக்கையானது மிகப் பிரமாண்டமான கருவியாகும், உணவை உட்கொள்ளவும், தண்ணீர் குடிக்கவும், பாதுகாப்பிற்காகவும் அது பயன்படுகிறது; மனிதனின் கைகளைப் போன்ற ஆற்றலுடன் தும்பிக்கை இருக்கிறது’ என்கிறார்.
இயற்கை வரலாறு நூலில் இடம்பெற்றுள்ள யானைகளின் இனப்பெருக்கம் பற்றிய பகுதி, ஓர் உயிரியின் வாழ்க்கைச் சூழல் குறித்த விவரங்களாக மட்டுமல்லாமல் பண்பாட்டின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது. மனிதனுக்குச் சமமான அல்லது சில நேரங்களில் மனிதனையே மிஞ்சக்கூடிய ஒழுக்கநெறி கொண்ட உயிரிகளாக யானைகள் அதில் அடையாளம் காணப்படுகின்றன.
யானைகளுக்கு இடையிலான இனப்பெருக்க நடவடிக்கையை அறமும், ஒழுக்கமும் சார்ந்த ஒன்றாகப் பிளினி குறிப்பிடுகிறார். அவரது பார்வையில், யானைகள் வெறுமனே உடல் பிணைப்பைத் தேடும் உயிரிகள் அல்ல; மாறாக அவை துணையைத் தேர்ந்தெடுக்கும், பாசம் காட்டும், நாகரிகமான நடவடிக்கையை வெளிப்படுத்தும் என்கிறார்.
`பொதுவெளியில் யானைகள் புணர்ச்சியில் ஈடுபடாது; அதற்கென தனிமையான இடங்களை அவை தேடிக்கொள்கின்றன; இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்; புணர்ச்சியை ரகசியமான மற்றும் புனிதமான ஒன்றாக யானைகள் கருதுகின்றன; அவை கூட்டமாக வாழ்ந்தாலும், இணை சேர்தல் தனிமையில் மட்டுமே நிகழ்கிறது’ எனக் குறிப்பிடுவதன் மூலம், யானைகளை நாகரிகமிக்க உயிரிகளாக பிளினி ஏற்றுக்கொள்கிறார்.
திருமண வாழ்க்கை, குடும்ப ஒழுக்கம் போன்றவை அன்றைய ரோம சமூகத்தில் உயர்ந்த மதிப்புகளாகப் போற்றப்பட்டன. அத்தகைய கண்ணோட்டத்தை யானைகள் வெளிப்படுத்துவதாகப் பிளினி கூறுகிறார்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே யானைகள் புணர்ச்சியில் ஈடுபடும், அதுவும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்கிறார். யானை கட்டுப்பாடுடன் வாழும் ஓர் உயிரி என்பதை இக்கருத்து வலியுறுத்துகிறது. ஒழுக்கநெறியின் அடிப்படையில் இயற்கையை சித்தரிப்பதே பிளினியின் நோக்கமாக உள்ளது.
`ஐந்தாம் நாளில் புணர்ச்சி முடிவடைந்ததும், ஆறாம் நாளில் யானைகள் நீரில் இறங்கி தூய்மையடைந்த பிறகு கூட்டத்திற்கு திரும்புகின்றன’ என்கிறார். புனிதம், தூய்மை குறித்துப் பண்டைய சமூகங்களில் நிலவிய கருத்தாக்கங்கள் விலங்குகளுக்கும் பொருந்தும் விதமாக இந்தக் கூற்று அமைந்துள்ளது.
யானைகளின் கர்ப்பகாலம் பத்து ஆண்டுகள் என்று முதலில் பிளினி குறிப்பிட்டுள்ளார். எனினும் இது மிகைப்படுத்தபட்ட கருத்தாகும். பின்னர் அரிஸ்டாட்டிலின் கூற்றை ஏற்றுக்கொள்ளும் பிளினி, யானையின் கர்ப்பம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்கிறார். நவீன உயிரியல் பார்வையின்படி, யானைகளின் கர்ப்பகாலம் என்பது 18–22 மாதங்களாகும்.
யானைகளின் தாய்ப்பாசம், குட்டி யானைகளின் வளர்ப்பு முறை ஆகியவற்றை மிகவும் ஆழமாக பிளினி விவரிக்கிறார்.
`ஒரே ஒரு குட்டியை ஈன்று அதை மிகப் பாசமாகவும், மிகுந்த எச்சரிக்கையாகவும் யானை வளர்க்கிறது. புதிதாகப் பிறக்கும் குட்டிகளை யானைகள் கூட்டாகப் பாதுகாக்கின்றன’
இந்தக் கூற்றின் மூலம் யானைகளை சமூகப் பிணைப்பைக்கொண்ட உயிர்களாக சித்தரிக்கும் பிளினி, அவற்றை உணர்வுப்பூர்வமான விலங்காக முன்னிறுத்தி அன்னையின் பிம்பத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்.
தங்களது குட்டிகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, மரக்கிளைகளை வைத்து நிழல் தரும் அமைப்புகளை யானைகள் அமைக்கின்றன என்பது போன்ற தவறான தகவல்களும் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், `ஒரு பெண் யானையைக் கவர்வதற்காக ஆண் யானைகள் ஒன்றோடொன்று போட்டியிடுவது இல்லை. இதனால், கொலைகள் அல்லது தாக்குதல்கள் நிகழ்வதில்லை’ என்கிறார்.
மற்ற விலங்குகளைப்போல் புணர்ச்சி என்பது ஒரு குரூரமான, போட்டிமிக்க நிகழ்வாக யானைகளிடம் இருப்பதில்லை எனவும் குறிப்பிட்டு, யானைகள் மீது தனக்கு இருக்கும் உயர்வான எண்ணத்தை பிளினி வெளிப்படுத்துகிறார். விலங்குகள் உலகத்தில் இல்லாத அறம், பொறுமை, மரியாதை, நேர்மை, கட்டுப்பாடு ஆகியவை யானைகளிடம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
புணர்ச்சி நேரம், நீராடுதல், கர்ப்பகாலம், நாணம் என யானைகளைப் பற்றி பிளினியால் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், மூடநம்பிக்கை கலந்த புனைவாக இன்றைய காலகட்டத்தில் தெரியலாம். ஆனால் அவை அனைத்தும் பண்டைய சமூகத்தின் உளவியல் தேவைகளையும், அறநெறி நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
யானைகள் மனிதர்களைப்போல் நடந்துகொள்கின்றன, குற்றவுணர்வுடன் செயல்படுகின்றன, ஒழுக்கநெறிகளைக் கடைபிடிக்கின்றன என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதன் மூலம், யானையை அறம் கொண்ட விலங்காக பிளினி முன்நிறுத்துகிறார்.
யானைகளின் பயன்பாட்டையும், அவற்றைப் பிடிக்கும் வழிமுறைகளையும் விவரிப்பதில் தனி கவனம் செலுத்தியுள்ள பிளினி, யானைகளைப் பிடிக்கும் வழிமுறைகள் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வேறுபடுவதாகக் குறிப்பிடுகிறார்.
`பழக்கப்பட்ட யானைகளைப் பயன்படுத்தி காட்டு யானைகளை பிடிக்கும் முறை இந்தியாவில் பின்பற்றப்பட்டது. ஒரு பழக்கப்பட்ட யானையின் வழிகாட்டுதலுடன் செல்லும் ஒரு மனிதன், முதலில் ஒரு காட்டு யானையைத் தாக்கிச் சோர்வடையச் செய்வான். பின்னர் அந்த யானையின் மீதேறி அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவான். இதை செய்து முடிக்க அனுபவம், ஒழுக்கம், வீரம் ஆகியவை அடிப்படையாக இருந்தன.
பெரும்பாலும் குழிகளை உபயோகித்து ஆப்பிரிக்காவில் யானைகளைப் பிடித்துள்ளனர். யானைகள் நடமாடும் பாதைகளில் பெரிய பெரிய குழிகள் தோண்டி வைக்கப்பட்டு, அவற்றில் விழும் யானைகள் பிடித்துச் செல்லப்பட்டன. ஒரு யானை குழியில் விழுந்தவுடன் மரக்கிளை, களிமண் போன்றவற்றை வைத்துத் தங்கள் கூட்டாளியை மீட்டெடுக்க பிற யானைகள் முயல்கின்றன. இதன் மூலம் பரஸ்பர பரிவு உணர்வை அவை வெளிப்படுத்துகின்றன.’
இயற்கை வரலாறு நூலில் யானைக்கும், பாம்புக்கும் இடையிலான சண்டை பற்றி பிளினி குறிப்பிட்டுள்ளது, மிகவும் சுவாரசியமான மற்றும் தொன்மை கலந்த பகுதியாகும்.
`இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் டிராகன் போன்ற பாம்புகள் காணப்படுகின்றன. மிகப் பெரிதாக இருக்கும் இந்த வகையான பாம்புகள், யானையை சுற்றிவளைத்து அதன் சுவாசத்தை நிறுத்தும் வகையில் தாக்குதலை மேற்கொள்ளும். யானை கீழே விழும்போது அதனால் பாம்பு நசுங்கி, இந்த சண்டையில் இரண்டுக்கும் மரணம் ஏற்படுகிறது.’
மலை பாம்பைத்தான் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளதாகச் சிலர் கூறுவது உண்டு. இத்தகைய கதைகள் நமது ஆர்வத்தைத் தூண்டலாம், ஆனால் பண்டைய உலகில் இவை இயற்கையின் வெளிப்பாடாகவும், புரிந்துகொள்ள முடியாத நம்பிக்கைகளாகவும் கருதப்பட்டன.
யானைகளின் தந்தங்கள், கொழுப்பு, கழிவு போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார். யானையின் கொழுப்பு வலியைக் குறைக்கும் மருந்தாகவும், மந்திரவாதிகளால் பயன்படுத்தப்படும் பொருளாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.
மேலும், மங்களகரமான உயிரியாக யானைகள் இருந்துள்ளன, அவற்றை சில சந்தர்ப்பங்களில் காண்பது அதிர்ஷ்டமானதாகக் கருதப்பட்டுள்ளது.
தொலைதூர நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட யானைகள் வெற்றிக்கான ஓர் அடையாளச் சின்னமாக ரோமப் பேரரசில் இருந்துள்ளன. படைகளின் வெற்றி அணிவகுப்பு ஊர்வலங்களில் யானைகளைப் பயன்படுத்தித் தங்கள் வல்லமையை உலகிற்கு ரோமப் பேரரசு வெளிப்படுத்தியது.
அந்தக் காலகட்டத்தில் பிளினியைப் போன்ற அறிஞர்களுக்கு வியப்பை அளித்த யானைகள், இயற்கையின் பலத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன. அறிவு, நாகரிகம், ஒழுக்கம் போன்ற பண்புகள் யானையில் காணப்படுவதாக பிளினி நம்பினார். அவரால் குறிப்பிடப்படும் ஆச்சரியமான கதைகள், யானைகளைப் புனிதமான உயிரியாகக் காண்பிக்கின்றன.
யானைகள் குறித்து இயற்கை வரலாறு நூலில் இடம்பெற்றுள்ளவை வெறுமனே உயிரியல் தகவல்களாக அல்லாமல், பண்டைய உலகின் இயற்கை அறிவையும், நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. உண்மை, நம்பிக்கை, தொன்மை ஆகியவை ஒன்றிணைந்த ஒரு சித்திரமாக பண்டைய அறிவியல் பார்வை உள்ளது.
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள யானையின் வாழ்க்கை முறை, அதன் உடல் அமைப்பு, மனிதனுடனான உறவுகள், புராணத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள உணர்வுபூர்வமான விஷயங்கள் போன்றவை பண்டைய உலகின் அறிவியல், கலாசாரம், ஆன்மீகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
இவற்றில் பெரும்பாலானவை இன்றைய காலகட்டத்தில் சரியான தகவல்களாக இல்லையென்றாலும், இயற்கையுடன் மனிதன் மேற்கொண்ட உரையாடலின் முதல் கட்டமாகவே பிளினியின் இந்த முயற்சி பார்க்கப்படவேண்டும். அந்த வகையில், விஞ்ஞானத்திற்கு முன்னோடியாகவும், மனிதனின் ஆழமான வியப்பிற்கு சாட்சியாகவும் நேச்சுராலிஸ் ஹிஸ்டோரியா காலம் கடந்தும் நிற்கிறது.
(தொடரும்)