Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் இது வெளிப்படுத்துகிறது.

சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், மௌரியர்கள், குப்தர்கள், முகலாயர்கள், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலம், சுதந்திரத்திற்குப் பிறகான காலம் என நாட்டின் இயற்கை வரலாற்றை ஏழு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றிலும் இயற்கை குறித்த மனிதனின் பார்வை மாறுபட்ட கோணங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகம்

இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் தோன்றிய மெஹர்கர் கலாசாரத்திலும் (பொயுமு 7000 – 2500), சிந்து சமவெளி நாகரிகத்திலும் (பொயுமு 2600 – 1900) மனித வாழ்வின் தொடர்ச்சியாகவே இயற்கை இருந்துள்ளது.

சிந்துவெளி நகரங்களில் கிடைக்கப்பெற்ற அகழ்வாய்வு சான்றுகள், அம்மக்களின் வாழ்வியலில் இயற்கைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், அவர்களது நுட்பங்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக, இயற்கையைப் பயன்படுத்த அங்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளை நவீன அகழாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் (முத்திரைகள், சிலைகள், கற்சுவர் ஓவியங்கள்) வழியாகவே இயற்கை பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு குறித்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

மான், புலி, யானை, ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பல பறவைகளின் எலும்புகள் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அந்த உயிரினங்களுடன் சிந்துவெளி மக்களுக்கு இருந்த தொடர்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோதுமை, பார்லி, பருத்தி மற்றும் பல்வேறு காய்கறிகள் உள்ளிட்டவை அங்கு பயிரிடப்பட்ட ஆதாரங்களும் அகழாய்வு வழியாக கிடைத்துள்ளது.

நதிக்கரையோரங்களில் அமைந்திருந்த சிந்துவெளி நகரங்களில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் குடியிருப்புகள் அமைந்திருந்தன. ஒழுங்குமுறையுடன் கூடிய நகரமைப்பையும், நீர் மேலாண்மை முறைகளையும் அறிந்தவர்களாக அம்மக்கள் இருந்துள்ளனர்.

இயற்கை ஆய்வுகளை மேற்கொண்டதற்கான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், அனுபவங்கள் வழியாக இயற்கையைப் புரிந்துகொண்டு அதைத் தங்களது வாழ்வில் அவர்கள் பயன்படுத்தியுள்ளதை அகழாய்வுகள் நிரூபிக்கின்றன. உயிரினங்களின் தன்மைகளைப் புரிந்துகொண்டு அவற்றின் குரல்கள் வழியாக வானிலையைக் கணித்த நடைமுறையை பண்டைய கால இயற்கை அறிவின் வெளிப்பாடாகக் கருதலாம்.

இயற்கை குறித்த அவர்களது அறிவானது உயிர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடல்களின் அடையாளமாகத் திகழ்கிறது. உயிரினங்களைக் காத்தல், நிலப்பரப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், இயற்கையைப் போற்றும் பண்பு போன்றவை இயற்கையுடன் அச்சமூகம் கொண்டிருந்த ஒப்பற்ற உறவை வெளிப்படுத்துகின்றன.

வேத காலம்

போயுமு 1500இல் தொடங்கி 600 வரையில் நீடித்ததாக அறியப்படும் வேத காலம், இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். 

ஆன்மீகத்தின் வழியாக வரலாற்றை அணுக வேத காலம் வழிவகை செய்கிறது. இயற்கையின் கூறுகளான மழை, காற்று, நதி, மழைக்காலப் பறவைகள், காட்டுப் பசுக்கள் போன்றவை இந்தக் காலத்தில் தெய்வீக அம்சங்களாகப் பார்க்கப்பட்டுள்ளன. அக்னி, வாயு, வருணன், இந்திரன் போன்ற வேத கால தெய்வங்கள் இயற்கையின் வடிவங்களாகக் கொண்டாடப்பட்டன.

வேதங்களில் காணப்படும் இத்தகைய பிம்பங்கள் அனைத்தும் இயற்கை மீதான பற்றுதலுடன், அதன் மீது அப்போதிருந்த தெய்வீக நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளன. அந்தக் காலகட்டத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்வை மனிதர்கள் மேற்கொண்டனர்.

வேதங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களான வேதாந்தம், உபனிஷத் போன்றவற்றில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தினாலான கருத்தாக்கங்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

ரிக், யஜுர், சாம, அதர்வ ஆகிய நான்கு வேதங்களில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மான், யானை, சிங்கம், நரி, மயில், புலி ஆகியவற்றுடன் பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. வேத காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விலங்குகள் இருந்துள்ளதை இது உணர்த்துகிறது.

பல்வேறு விலங்குகளில் தெய்வீக அம்சம் இருப்பதாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, காளிதேவியின் வாகனமாக புலியும், விஷ்ணுவின் வாகனமாக கழுகும் (கருடன்) உள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விலங்குகளைக் கடவுள்களுடன் தொடர்புபடுத்திய செயல் அவற்றின் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது. விலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஆன்மீகப் பின்புலம் பயன்படுத்தபட்டுள்ளதை வேதங்கள் உணர்த்துகின்றன.

உதாரணமாக, அந்தரங்க தெய்வீக சக்தி என்பது ரிக்வேதத்தில் (1.164.20: அஷ்வோ வா அனயத் பதி) குதிரையாகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மூலிகைகள், மரங்கள் மற்றும் வனவிலங்குகளை மனிதகுல நலனுக்காகப் பயன்படுத்தப்படும்போது அவற்றில் தெய்வீக சக்தி இருக்கும் என்று ரிக்வேதத்தில் (10.97) குறிப்பட்டுள்ளது. இயற்கை வள சுரண்டல்களை தெய்வத்தின் பெயரால் மட்டுப்படுத்த இவை வழிவகுத்தன.

அதர்வ வேதத்தில் (12.1: பிருத்வி சுக்தம்) பறவைகள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் பூமியின் பிள்ளைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனுக்குச் சமமான உரிமை விலங்குகளுக்கும் உள்ளது என்ற பார்வையை `மாதராம் பூமிம் பிருத்விம் ருதவா தா’ என்ற ஸ்லோகம் வெளிப்படுத்துகிறது.

வேத கால மக்கள் வாழ்க்கையில் யாகங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. சில யாகங்களின்போது மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டதாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை முன்வைத்து வேத கால வாழக்கை முறை குறித்த விவரிப்புகளை சில வரலாற்றாசிரியர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் விலங்குகளைப் பாதிக்காத வகையில் அவற்றின் உருவங்கள் மட்டுமே யாகத்தில் பயன்படுத்தப்பட்டதாக வேறு சில வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.

வேத கால மக்களின் வாழ்வில் இயற்கையும் ஓர் அங்கமாக இருந்துள்ளது. ப்ரக்ருதி என்ற தத்துவத்தின் வழியாக இது விளக்கப்பட்டுள்ளது. விலங்குகளைத் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதி அவற்றுடன் இணைந்து வாழ்வதற்கான சூழலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

வேதங்களில் பல விலங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அப்போது அவற்றின் வாழ்விடங்களாகக் கூறப்பட்டிருந்த பகுதிகளில் தற்போது அவை இல்லை. இதன் மூலம் வன உயிரிகள் அழிந்ததற்கான காரணமாக நாகரிக வளர்ச்சி இருந்துள்ளதை அறியலாம்.

ரிக் வேதத்திலும் (1.64.7), அதர்வ வேதத்திலும் யானை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் யானைகள் இருந்ததற்கான ஆதாரம் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பசுபதி முத்திரை வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த இடங்களில் யானைகள் இல்லை.

அதைப் போலவே அதர்வ வேதத்தின் (8.6) வழியாகவும், பிம்பேட்கா உள்ளிட்ட குகை ஓவியங்கள் மூலமாகவும் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் புலிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் நாட்டின் மேற்குப் பகுதியில் தற்போது புலிகள் அரிதாகவே தென்படுகின்றன.

அஸ்வமேத யாகத்தில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டதாக ரிக், யஜுர் வேதங்களில் கூறப்பட்டிருந்தாலும், அதற்குப் பிந்தைய காலத்தில்தான் அவை இந்திய துணைக் கண்டத்திற்கு வரப்பெற்றதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் குதிரை இங்கு பூர்வீகமாகக் காணப்படும் விலங்கு அல்ல.

உத்தர பிரதேசம், பீஹார், ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளில் காண்டாமிருகங்கள் இருந்ததாக அதர்வவேதம் (5.22) மற்றும் அகழாய்வில் கிடைத்த சில முத்திரைகள் வழியாக சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் தற்போது இயற்கையாகவே அஸ்ஸாமில் மட்டுமே காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.

முட்டைகளை வேறொரு பறவையின் கூட்டில் இடும் குயில்களின் பழக்கம் குறித்து வேத கால இலக்கியங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்ய-வபா (பிறரால் வளர்க்கப்பட்டது) என்கிற சொல் இந்த ஒட்டுண்ணித் தன்மையைக் குறிக்கும் மிகப் பழமையான விவரிப்பாகக் கருதப்படுகிறது.

இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே, ஆசியக் குயில் இனமானது முட்டைகளைப் பிற பறவைகளின் கூடுகளில் இடுவதைப் பற்றி அரிஸ்டாட்டில் (பொயுமு 384–322) குறிப்பிட்டுள்ளார். அறிவியலின் தந்தை என்று அறியப்படும் அரிஸ்டாட்டிலுக்கு முன்பாகவே அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வை நமது இலக்கியங்கள் சுட்டிக்காட்டியிருப்பது இயற்கையை நாம் புரிந்துகொண்டதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

மௌரியர்கள் காலம்

தோராயமாக பொயுமு 320இல் சந்திரகுப்த மௌரியரால் தோற்றுவிக்கப்பட்ட மௌரியப் பேரரசு பொயுமு 185இல் முடிவுக்கு வந்தது. சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர், தசரதர், சம்பிராட்டி, ஷாலிஷுகர், தேவவர்மர், ஷடதன்வன், பிருஹதத்தர் என ஒட்டுமொத்தமாக பத்து மௌரியப் பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். எனினும் அசோகருக்கு பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியை சந்தித்தது.

மௌரியர்களின் ஆட்சிக்காலம் தொடர்புடைய எழுத்துப்பூர்வமான வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன. 

செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகேடரின் தூதராக சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் தங்கியிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய `இண்டிகா’ என்கிற நூல் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றுவரை அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும் அதன் உள்ளடக்கங்கள் பிற்கால கிரேக்க மற்றும் ரோமப் படைப்புகளில் இடம்பெற்றன.

மௌரியர்களின் ஆட்சிக்காலம் தொடர்பாக சமகால உலகிற்குக் கிடைக்கப்பெற்ற நேரடி ஆதாரங்களாக அசோகரின் பிரகடனங்கள் விளங்குகின்றன. இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூண்கள், கல்வெட்டுகள் மற்றும் குகைகளின் சுவர்களில் அசோகரின் பிரகடனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜேம்ஸ் பிரின்செப் என்ற ஆங்கிலேயர் இந்தப் பிரகடனங்களின் (பிராமி மற்றும் கரோஷ்தியில் எழுதப்பட்டவை) அர்த்தத்தை 1838ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.

மேலும், மௌரியர்கள் காலத்து அரசியல் கருத்தாக்கங்களை விளக்கும் நூலாக அர்த்தசாஸ்திரம் கருதப்பட்டது. கௌடில்யர் (அல்லது சாணக்கியர்) என்பவர் இதை எழுதியதாக முன்பு கூறப்பட்டு வந்தது. எனினும் இந்நூல் ஒரே காலகட்டத்தில் எழுதப்படவில்லை என்றும், மௌரியர்களுக்குப் பிந்தைய காலத்தில் பலரால் எழுதப்பட்டு படிப்படியாக தொகுக்கப்பட்டதாக இது இருக்கலாம் என்றும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதனால் மௌரியர்களின் ஆட்சிக்காலம் குறித்த நேரடி வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆதாரமாக இந்த நூலைக் குறிப்பிடுவதற்கான நம்பகத்தன்மை தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மௌரியர்களுக்குப் பிந்தைய அரசியல் சிந்தனைகளின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் இலக்கியமாக இது மாற்றம் கண்டுள்ளது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *