Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

மதம் சார்ந்த கருத்தை முன்வைத்து வரையப்பட்ட ஓவியங்களுக்கு மட்டுமே பண்டைய காலத்தில் ஆதரவு வழங்கப்பட்டது. மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த ஓவியப் பள்ளிகளில் ஜைன ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், மதம் சாரா கருத்துடைய ஓவியங்கள் 15ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் படைக்கப்பட்டன. இத்தகைய மாற்றத்திற்கு முகலாயர்கள் தூண்டுகோலாக இருந்தனர். மதம் தவிர்த்து இயற்கை, தாவரங்கள், மிருகங்கள் எனப் புதிய கருப்பொருட்களில் ஓவியங்களில் உருவாகின. இதன் மூலம் இந்திய ஓவியங்களில் மறுமலர்ச்சிக்கு வித்திடப்பட்டது.

முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் அரசும் அரசரும் ஆதரவளித்ததால், ஓவியங்களின் வளர்ச்சியுடன் ஓவியர்களும் வளர்ச்சி பெற்றனர். அக்பரிடம் 200-300 அரசவை ஓவியர்கள் பணிபுரிந்ததாக அபுல் ஃபாசல் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். காலங்காலமாக ஆண்கள் மட்டுமே கால்பதித்திருந்த இத்துறையில் நதிரா பானு, அகா ரிஸா போன்ற பெண்கள் அக்பர் காலத்தில் இருந்ததாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அக்பரிடம் பணியாற்றிய 327 ஓவியர்களில் 201 பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதுவே அவரது பரந்த மனப்பான்மைக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதத்தைவிட கலைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் இதன் மூலம் புலப்படும்.

முகலாய ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாணி இருந்தது. ஆனால் பெரும்பாலும் அவர்களின் பெயர்கள் ஓவியங்களில் நேரடியாக இடம்பெறாது. மாறாக சிறிய எழுத்துக்களிலான கையொப்பங்கள் அல்லது குறியீடுகள் ஓவியத் தொகுப்புகளின் ஓரங்களில் இடம்பெற்றிருந்தன.

‘டார்ஹ்’ (அமைப்பு வரைபடம்) மற்றும் ‘அமல்’ (மூல ஓவியத் திறமை) என ஓவியப் பணி இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதலில் ஒருவர் ஓவியத்தின் வடிவமைப்பை (கோலம், பாத்திர நிலை) வரைவார். பின்னர் அதில் பிற ஓவியர்கள் வண்ணங்களை நிரப்பி, அதில் பின்னணியை உருவாக்குவார்கள். இந்த அணுகுமுறையால் ஒரே ஓவியத்தில் பல கலைஞர்கள் பங்களித்தனர்.

முகலாய ஓவியங்களுக்கென தனித்துமான பாணி இருந்தது. குறு ஓவியங்கள் (மினியேச்சர் பெயிண்டிங்) எனப்படும் இந்த ஓவிய முறை சீனத்தில் தோன்றி மங்கோலியப் படையெடுப்பின் வழியாக ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் பரவியது. பாரசீகத்தில் இருந்து இது இந்தியாவை வந்தடைந்தது. பின்னாளில் முகலாய ஓவியங்கள் வாயிலாக இதுவே வெளிப்பட்டது. கையால் எழுதப்பட்ட நூல்களில் இந்த ஓவியங்கள் இணைக்கப்பட்டன. இவை ஆறு அங்குல நீளத்திலான துணியில் அல்லது காகிதத்தில் வரையப்பட்டிருந்தன.

தலை ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கியும் உடல் முழுவதும் பார்வையாளனை நோக்கியும் இருக்குமாறு, பரிமாணம் தவிர்க்கப்பட்டு இந்த ஓவியங்களில் வரையப்பட்டன. வெறும் பார்வையில் இந்தக் குறு ஓவியங்கள் அழகை மட்டுமே பிரதிபலிப்பதாகத் தெரியும். ஆனால் கலை உணர்வுடன் கவனித்தால் மட்டுமே, அவை நம்மை அதிசயத்தில் ஆழ்த்துவது புரியும். ஒவ்வொரு ஓவியமும் ஒரு காலகட்டத்தின் வரலாறு, மதம், மனித வாழ்க்கை, புராணம் போன்றவற்றைக் கையடக்க முறையில் வெளிப்படுத்துகின்றன.

மிகவும் நுண்ணிய தூரிகைகள், பல்வகை நிறங்கள் மற்றும் மென்மையான வடிவமைப்புகளால் இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணில் போன்ற விலங்குகளின் முடிகளால் தயாரிக்கப்பட்ட தூரிகைகள் ஓவியங்களை வரைய பயன்படுத்தப்பட்டன. காகிதம், பனை ஓலைகள், மரத் துண்டு, தந்தம், துணி போன்ற வெவ்வேறு பொருட்களில் ஓவியங்கள் வரையப்பட்டன.

கனிமங்கள், கற்களின் தூள், தூய தங்கம், வெள்ளித் தூள் ஆகியவை ஓவியங்களில் சேர்க்கப்பட்டன. மெல்லிய வர்ணங்களும் அடர்த்தியான வர்ணங்களும், ஓவியர்களின் பாணிகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தளவில் வங்காள பாலா ராஜ்ய அரசர்கள் ஆட்சிக்காலத்தின்போது முதன்முதலில் குறு ஓவியங்கள் வரையப்பட்டன. பொ.யு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டு வரையில் பீஹாரிலும் வங்காளத்திலும் பாலா ராஜ்யத்தின் ஆட்சி நடைபெற்றது. பெரும்பாலும் பௌத்த மதம் தொடர்பான ஓவியங்களைப் பனை ஓலைகளில் உருவாக்குவதை பாலா ஓவியர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பௌத்த தேவதைகள், போதி சாத்வர்கள், மஹாயனா மற்றும் வஜ்ரயனா கருத்துகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன. நாளந்தா, விக்ரமசீலா, ஓடந்தபுரி, சோமரூபா போன்ற கல்வி மையங்களில் இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. மத நூல்களுக்காக கையடக்கமாக அளவில் இவை வரையப்பட்டன. புனித யாத்திரிகர்கள், மாணவர்கள், வணிகர்கள் வழியாக இலங்கை, பர்மா, ஜாவா, திபெத், நேபாளம் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ஓவியங்கள் பரவின.

அஷ்டசாஹஸ்ரிகா ப்ரஜ்னபாராமிதா என்று அழைக்கப்படும் பௌத்த மத நூல் இந்தப் பாலா ஓவியங்களுடன் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் உள்ள போட்லெய்ன் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய படையெடுப்பின்போது பௌத்த மடங்கள் சூறையாடப்பட்டன. இதனால் அந்தக் காலகட்டத்து பாலா ஓவியங்களுக்கும் பளிங்குச் சிலைப் படைப்புகளுக்கும் பெரும் சேதாரம் ஏற்பட்டது.

இந்த குறு ஓவியக் கலையை தங்களுடைய ஒவியப் பாணியுடன் இணைத்து அதற்கு புது பொலிவை முகலாயர்கள் வழங்கினார்கள். பாரசீக தாக்கத்தால் 15ஆம் நூற்றாண்டில் காகிதம் பயன்பாட்டிற்கு வந்தது. வேட்டையாடும் காட்சிகள், தனித்த முக வடிவங்கள் போன்றவை தீட்டப்பட்டு நீலப் பச்சை, தங்கம் போன்ற நிறங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டன.

இந்தக் கலையின் பொற்காலமாக முகலாய ஆட்சி கருதப்படுகிறது. அரசவை – அரண்மனைக் காட்சிகள், இயற்கைக் காட்சிகள், ஐரோப்பிய பாணி நிழலாக்கம், பரிமாணக் காட்சிகள் என இந்த ஓவியங்களை அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் போன்ற ஆட்சியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

 முகலாய ஆட்சிக்காலத்தில் ஓவியங்களுக்காகப் பிரத்யேகப் பணிக்கூடங்கள் (நகர்கானா) செயல்பட்டன. இவற்றின் கீழ் எழுத்துக் கலைஞர்கள், ஓவியர்கள், வர்ணக் கலவையர்கள், வெள்ளிக் கையெழுத்துப் பணியாளர்கள் போன்ற பல்வேறு தொழிலாளர்கள் ஒரே குழுவாக உழைத்தனர். ஒரு நூலை உருவாக்க முடிவு செய்ததும் முதலில் கதை எழுதப்படும், அதன்பிறகு ஓவிய வடிவமைப்புகள் திட்டமிடப்படும், பின்னர் படங்கள் வரையப்படும், இறுதியில் வண்ணங்கள் சேர்க்கப்படும். அந்த வகையில் ஒரே ஓவியத்திற்குப் பல கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவது வழக்கம்.

உதாரணமாக, அக்பரின் ஆட்சிக்காலத்தில் 1562 முதல் 1577 வரையில் ஹம்ஸா நாமா நூல் உருவாக்கப்பட்டது. இதற்காக சுமார் 1,400 ஓவியங்கள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொறு ஓவியமும் மெல்லிய பருத்தித் துணியில் வரையப்பட்டு பின்னர் காகிதத்துடன் ஒட்டப்பட்டன. வரலாற்றில் உருவான மிகப்பெரிய ஓவியத் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் அரசின் ஆதரவு குறைந்ததால், முகலாய ஓவியக் கலைஞர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களுக்குச் சென்று தங்களுக்கான ஆதரவைத் தேடிக்கொண்டனர்.

 உஸ்தாத் மன்சூர்

மன்சூர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. ‘பாபர் தன் சகோதரியை சந்திக்கும் காட்சி’ என்கிற சிறு ஓவியம் (தேசிய அருங்காட்சியகம்) இவருடையதாக கருதப்படுகிறது. இதனால், பாபர் காலத்தில் இருந்தே முகலாய அரசவை ஓவியராக இவர் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பாபர் நாமாவில் இவரைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. பஸ்வந்த், மிஸ்கின், நன்னா போன்ற ஓவியர்கள் இவரது காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

முகலாயர்கள் காலத்தில் ஓவியங்களின் வெளிப்புற அமைப்பை வரைய சிலரும், அதற்கு வர்ணம் தீட்ட வேறு சிலரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஒரு ஓவியரால் மட்டுமே ஒரு ஓவியம் பெரும்பாலும் வரையப்பட்டது என்று சொல்ல முடியாது. இந்த காரணத்தினாலேயே ஓவியங்களில் ஓவியர்களின் கையெழுத்துகள் இடம்பெறவில்லை. இந்த வழக்கத்தை மாற்றி, ஓவியர்கள் தங்களது கையெழுத்தை ஓவியங்களில் இடுவதை அக்பர் நடைமுறைப்படுத்தினார்.

அக்பர் நாமாவில் இடம்பெற்ற ஓவியங்களில் முதலில் வர்ணம் தீட்டுபவராக மன்சூர் பணியாற்றினார். பிறகு அக்பரின் கட்டளைக்கு ஏற்ப அக்பர் நாமாவின் (பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) சில பக்கங்களில் ’உஸ்தாத்’ என்ற பெயரில் இவரது ஓவியங்கள் இடமபெற்றன. வீணை வாசகர் (c. 1595), ஜஹாங்கிர் பட்டாபிஷேகம் (1605), வான்கோழி (1612), பிரவுன் டிப்பர் என்கிற பறவை (1620) போன்ற ஓவியங்கள் இவரது படைப்புகளாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களை மன்சூர் வரைந்தார். இவற்றில் மிகவும் பிரபலமானது ஒரு துலிப் ஓவியம். அந்தப் பூவின் வகையைப் பற்றி சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அக்பர் ஆட்சிக்காலத்தின் இறுதியில் ’உஸ்தாத்’ என்கிற பட்டத்தை இவர் பெற்றார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் காலத்தில் வரையப்பட்ட தலைசிறந்த ஓவியங்களுக்காக, ‘நாதிருல் அஸர்’ (காலத்தில் தன்னிகரற்றவன்) என்கிற சிறப்புப் பட்டமும் இவருக்குக் கிடைத்தது.

இயற்கை ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற மன்சூர், பல கையெழுத்து நூல்களில் மனிதர்கள் இடம்பெறும் ஓவியங்களை வரைந்துள்ளார். புதன் கோளில் இருக்கும் ஒரு எரிமலைக் குழிக்கு மன்சூரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது திறமைக்கு அளிக்கப்பட்ட உலகளாவிய அங்கீகாரமாக இது உள்ளது.

ஆஸ்ட்ரோனாமிக்கல் யூனியன் எனப்படும் சர்வதேச வானியல் அமைப்பின் விதிகளின்படி, புதன் கிரகத்தில் உள்ள எரிமலைக் குழிகளுக்கு இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற கலைஞர்களின் பெயர்களே சூட்டப்படவேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட கலைஞர்கள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது புகழ்பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

புதன் கோளில் இதுவரை பெயரிடப்பட்டுள்ள 350-க்கும் மேற்பட்ட எரிமலைக் குழிகளில், 11 குழிகளுக்கு இந்தியர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆண்டாள் – 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவப் புலவர், 12 ஆழ்வார்களில் ஒருவர்; அஸ்வகோஷர் – தத்துவஞானி மற்றும் கவிஞர்; காளிதாசர் – குப்த காலத்தைச் சேர்ந்த புலவர் மற்றும் நாடகாசிரியர்; மன்சூர் (உஸ்தாத் மன்சூர்) – 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஓவியர்; ஷெர்கில் (அம்ரிதா ஷெர்கில்) – இந்திய ஓவியர்; சூர்தாஸ் – பக்தி புலவர்; தான்சேன் – அக்பர் அரசவையின் நவரத்தினங்களில் ஒருவர், இசைக்கலைஞர்; தாகூர் (ரவீந்திரநாத் தாகூர்) – 1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற வங்கப் புலவர், நாவலாசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி; தியாகராஜர் – கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்; வர்மா (ராஜா ரவி வர்மா) – இந்திய ஓவியர்; வியாசர் (மகரிஷி வியாசர்) – மஹாபாரதத்தை எழுதியவர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *