டோடோ பறவை
மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பாக அதன் சொந்த இடத்திலேயே அழிக்கப்பட்டது.
1598இல் ஐரோப்பியர்களுக்கு முதல்முறையாக டோடோ அறிமுகமானது; உயிருள்ள கடைசி டோடோ 1681இல் கண்டறியப்பட்டது. இடைப்பட்ட 83 வருட காலத்தில் பல்வேறு டோடோ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை பலவிதங்களிலும் உண்மைக்கு வெகு தொலையில் இருக்கின்றன. மிகவும் மோசமான முறையில் வரையப்பட்ட துல்லியமற்ற அந்த ஓவியங்களில் டோடோவை அடையாளம் காண்பது கடினமான செயலாகும்.
அந்த ஓவியங்களுக்கு அப்பால் மிகச்சிறந்த டோடோ ஓவியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அவை டச்சு பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரோலண்ட் சவெரி வரைந்தவை. மடகாஸ்கர் தீவில் இருந்து சில டோடோக்கள் ஐரோப்பாவுக்கு கொண்டுவரப்பட்டபோது அவற்றை நேரடியாகப் பார்த்து அந்த ஓவியங்களை அவர் வரைந்தார். சவெரியின் டோடோ ஓவியங்கள் மிகச்சிறந்த அறிவியல் ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.
உயிரோட்டமுள்ள அந்த ஓவியங்களைப் பிரதியெடுத்த பல ஓவியங்களும் உள்ளன. அவை சவெரியின் ஓவியங்களை அப்படியே நகலெடுத்தோ அல்லது காரணமில்லாமல் திருத்தியோ உருவாக்கப்பட்டவை. பல்வேறு நூல்களில் இத்தகைய ஓவியங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 1848இல் வெளியான ஸ்ட்ரிக்லாந்த் மற்றும் மெல்விலின் நூல் முக்கியமானது.
பல்வேறு அருங்காட்சியகங்களால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த டோடோ ஓவியங்கள் அனைத்தும் விவரிக்கப்பட்டுவிட்டதாகவே எண்ணப்பட்டது. ஆனால் அந்தக் கருத்தை மறுக்கும் விதமாக அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு மேற்பார்வையாளர் டாக்டர் ஹெர்பர்ட் ஃப்ரிட்மேன், ’டோடோ மற்றும் அதன் ஓவியர்கள் குறித்த புதிய தகவல்கள்’ என்ற தலைப்பில் 1956இல் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். அதுவரை வெளிவராத டோடோ ஓவியங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் அதில் கூறியதாவது,
’லெனின்கிராட், மாஸ்கோ கலை அருங்காட்சியகங்களில் டோடோ ஓவியங்களைத் தேட முயன்ற என்னுடைய முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. லெனின்கிராட் ஹெர்மிட்டேஜ் அருங்காட்சியகத்திலும் மாஸ்கோ கலை அருங்காட்சியகத்திலும் சவெரியின் சில ஓவியங்களும் வரைபடங்களும் இருந்தன. ஆனால் அவற்றில் டோடோ இல்லை. எனக்கு தெரிந்த ஒரே டோடோ ஓவியம் யு.எஸ்.எஸ்.ஆரில் ஹன்ஸ் சவெரி 1651இல் வரைந்த புகழ்பெற்ற ஓவியத்தின் முழு அளவு நகல் மட்டுமே. அதன் மூல ஓவியம் தற்போது ஆக்ஸ்ஃபோர்டில் உள்ளது.
1955ஆம் ஆண்டின் இறுதியில் லெனின்கிராட் ஹெர்மிட்டேஜ் அருங்காட்சியகத்தில் பழைய இந்திய மற்றும் பாரசீக சித்திரங்களின் கண்காட்சிக்கு நான் சென்றபோது, அறியப்படாத ஒரு டோடோ ஓவியம் எனக்குக் கிடைத்தது. இந்த ஓவியம் மிகவும் சுவாரசியமானது என்றே சொல்லலாம். இந்தக் கண்காட்சியில் வரலாறு, உயிரியல், தாவரவியல் எனப் பல்வேறு தலைப்புகளுக்கு உரிய பழைய சித்திரங்கள் இருந்தன.
அவற்றில் இருந்த பறவைகளின் அழகான ஓவியங்கள் என் கவனத்தை முதலில் ஈர்த்தன. குயில்கள், காடைகள், புறாக்கள், ட்ராகோபன்கள் போன்வற்றின் ஓவியங்கள் இருந்தன. டோடோவின் ஓர் அழகான ஓவியமும் அவற்றில் இருந்தது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த டோடோ ஓவியம் ஐரோப்பியர் ஒருவரால் வரையப்பட்டது அல்ல. இது கிழக்கிந்தியரால் வரையப்பட்ட ஒரு கிழக்கு ஓவியம் ஆகும். இதைப் பற்றிய வருத்தமான ஒன்றைச் சொல்ல வேண்டியதுள்ளது — ஓவியரின் பெயர் எவருக்கும் தெரியவில்லை.
அதை இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் உஸ்தாத் மன்சூர் அல்லது அவரது பள்ளியைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் வரைந்திருப்பார் என்று கருதப்படுகிறது. ஆனால் ஓவியத்தில் கையொப்பம் இல்லாததால் உறுதியாக எதையும் சொல்ல இயலவில்லை. இதே காரணத்தால் அது எந்தக் காலத்தில் வரையப்பட்டது என்பதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. பாரசீகக் கலை நிபுணர்களுடன் ஆலோசித்தபோது, அதிகபட்சமாக 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம் என்று கூறினர். அது டோடோக்கள் உயிருடன் இருந்த காலகட்டம்தான்.
பல்வேறு வித்தியாசமான பழைய இந்திய, பாரசீக சித்திரங்களை உள்ளடக்கிய தொகுப்பில் இந்த ஓவியமும் ஒன்றாகும். லெனின்கிராட் கிழக்கு ஆய்வியல் நிறுவனம் வசமுள்ள கிழக்கு கையெழுத்துப் பிரதிகளின் சேகரிப்பில் இருக்கும் ஒரு புத்தகத் தொகுப்பில் தற்போது அது உள்ளது. சமீபத்தில் இரண்டு இளம் லெனின்கிராட் கிழக்கு ஆய்வாளர்கள் இதை ஆராய்ந்து வெளியிடத் தயாராக வைத்துள்ளனர்.
இந்த ஓவியத்தை ஆழமாக ஆய்வு செய்தால் பல்வேறு கருத்தாக்கங்கள் தோன்றுகின்றன. ஒரு பறவை ஆராய்ச்சியாளரை மிகவும் ஈர்க்கக்கூடிய கருத்தாக்கம் என்னவென்றால் — டோடோவை நேரில் பார்த்துதான் இந்த ஓவியத்தை வரைத்திருக்கவேண்டும். இது நம்பத்தக்கது. ஏனெனில் ஜஹாங்கிர் போன்ற முகலாயப் பேரரசர்கள் வசம் சிறந்த பூங்காக்களும் உயிரினங்கள் நிறைந்த இடங்களும் இருந்ததைக் காட்டும் ஆதாரங்கள் உண்டு.
இந்த ஓவியத்தைக் கண்டதும் டாக்டர் சலிம் அலிக்கு நான் கடிதம் எழுதினேன். அவர் அனுப்பிய பதில் கடிதத்தில், இந்திய அல்லது பாரசீக கையெழுத்து நூல்களில் டோடோ பற்றிய எந்தவொரு குறிப்பையும் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் டோடோ போன்ற அற்புதமான பறவை எந்தவொரு அரண்மனைப் பூங்காவிலும் ஓர் ஆடம்பர அணிகலனாக இருந்திருக்கும்.
மொரிஷியஸ் தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட டோடோ, இந்திய அல்லது பாரசீகப் பிரயாணிகளால் அல்லது டச்சு அல்லது போர்த்துகீசியர்களால், பேரரசர் அல்லது ஷாவுக்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம். இந்த ஓவியத்தில் டோடோ தவிர பிற உள்நாட்டு ஆசியப் பறவைகள் — டிராகோபன், இந்திய மணிப் புறாக்கள், ஒரு கிளி மற்றும் வாத்துகளும் வரையப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்திற்குரிய அறிவியல் துல்லியத்துடன் அது இருப்பதாகக் கருதப்படுகிறது. நேரில் பார்த்து வரையப்பட்டதை அந்த ஓவியம் உறுதிப்படுத்துகிறது.
ஆனால் மற்றொரு சாத்தியக்கூற்றையும் மறுக்க முடியாது — ஐரோப்பிய ஓவியத்தின் நகலாகவும் அது இருக்கலாம். ஏனெனில் அதே ஒவியத் தொகுப்பில் பல ஐரோப்பிய ஓவியங்களின் நகல்களும் உள்ளன. ஆனால் இந்தச் சித்திரத்தை நான் இதுவரை கண்ட எந்தவொரு டோடோ ஓவியத்துடன் ஒப்பிட்டாலும் அது முழுமையான நகல் அல்ல என்பதை உறுதிசெய்யலாம். எனவே நான் தொடர்ந்து ஆய்வு செய்ய நினைக்கிறேன். இந்த புதிர் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.
மாலுமிகளால் சூரத் (குஜராத்) நகரத்திற்கு இரண்டு டோடோக்கள் கொண்டுவரப்பட்டதாக ஜஹாங்கிர் காலத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கிலேயப் பயணியான பீட்டர் முண்டி, தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அச்சமயம் போர்த்துகீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கோவாவில் இருந்து சூரத் வழியாக ஜஹாங்கிரின் அரசவைக்கு டோடோக்கள் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது.
முதல் கருத்திற்கான ஆதாரமாக இதையே எடுத்துக்கொள்ளலாம். உஸ்தாத் மன்சூர்தான் உயிருடன் இருந்த டோடோவை முதன்முதலாக வரைந்த ஓவியர் என்று கூறப்படுகிறது. அதேபோல் சைபீரியன் கொக்கை வரைந்த முதல் ஓவியரும் இவர்தான்.
சைபீரியன் கொக்கு
உலகின் மிக அபூர்வமான கொக்கு இனங்களில் ஒன்றாகச் சைபீரியன் கொக்கு கருதப்படுகிறது. ஜெர்மானிய இயற்கையியல் வல்லுநர் பீட்டர் சைமன் பாலஸ் இந்தப் பறவைக்கான அறிவியல் பெயரை வழங்கி, அது குறித்த முதன்மையான அறிவியல்ரீதியான விளக்கத்தை அதிகாரபூர்வமாக 1773ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
ஆனால் அதற்கும் வெகு காலத்திற்கு முன்பே 1625இல் இந்திய மண்ணில் அதன் அழகை முகலாய ஓவியர் உஸ்தாத் மன்சூர் காட்சிப்படுத்தினார். ஜஹாங்கிரின் ஆட்சிக்காலத்தின்போது சைபீரியன் கொக்கை நேரில் பார்த்து மன்சூர் ஓவியமாக வரைந்தார். சைபீரியன் கொக்கு தொடர்பாக உலகளவில் கிடைக்கப்பெற்ற முதல் பார்வை ஆவணமாக இது கருதப்படுகிறது.
இயற்கைக்கும் விலங்குகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து அது தொடர்புடைய விவரங்களைத் தனது நினைவுக் குறிப்பான துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலில் ஜஹாங்கிர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பரத்பூர் பறவைகள் சரணாலயம் (ராஜஸ்தான்) வரை சைபீரியன் கொக்குகள் வலசை வந்திருப்பதால், மன்சூரின் காலத்திலும் அவ்வாறே அவை வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அல்பினோ சிவிங்கிப்புலி
முகலாய காலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் அல்பினோ (வெள்ளைத் தோல்) சிவிங்கிப்புலி 1608ஆம் ஆண்டில் ஓர்ச்சா ராஜ்யத்தின் மன்னர் ராஜா வீர்சிங் தேவ் வசம் இருந்துள்ளது. அந்தச் சிவிங்கிப்புலி குறித்து துஸுக்-இ-ஜஹாங்கிரியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கருப்புப் புள்ளிகளுக்கு பதிலாக அந்தச் சிவிங்கிப்புலிக்கு விநோதமான நீல நிறப் புள்ளிகள் இருந்ததாகவும் அதன் உடலும் அதே நிறத்தில் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்பினோ சிவிங்கிப்புலி குறித்து அந்தக் காலத்தைச் சேர்ந்த ஒரே பதிவு இது மட்டுமே.
இந்திய விலங்குகள் குறித்த பாபரின் பதிவுகளிலும் ஹுமாயூனின் குறிப்புகளிலும் சிவிங்கிப்புலிகள் பற்றிக் குறிப்புகள் இல்லை. அக்பர் நாமாவில் இடம்பெற்றுள்ள ஹுமாயூன் வேட்டையாடும் ஓவியத்தில் சிவிங்கிப்புலி உள்ளது. பறி, சிமாவாலி, அலப்பூர், பதிண்டா, பட்னிர், பாட்டன், ஃபத்பூர், நகோர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளில் சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டதாக அக்பர் காலத்து தரவுகள் கூறுகின்றன.
குழி வெட்டிப் பிடித்தல், ஓட விட்டு சோர்வடையச் செய்து பிடித்தல் மற்றும் சுருக்கு வைத்து பிடித்தல் என மூன்று வழிமுறைகளில் சிவிங்கிப்புலிகள் பிடிக்கப்பட்டதாக அக்பர் குறிப்பிட்டுள்ளார். இந்த மிருகங்களைக் கவனிக்க மட்டும் அவரது அரண்மனையில் 200 ஆட்கள் இருந்துள்ளனர். மான்களைப் பிடிப்பதற்காக சுமார் மூன்று மாதங்கள் அவற்றுக்குக் கடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிவிங்கிப்புலியும் ஒரு மானும் நண்பர்களைப்போல அரண்மனையில் சுற்றித் திரிந்ததாக அபுல் ஃபாசல் எழுதியுள்ளார். ஆயிரக்கணக்கில் இவை அரண்மனையில் இருந்தபோதும் அவற்றுக்கிடையே எந்தவொரு இனப்பெருக்க நிகழ்வும் அக்பர் காலத்தில் நடந்ததில்லை. அதற்காக அக்பர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
தனது அரண்மனையில் ஒரு ஜோடி சிவிங்கிப்புலிகளுக்கு இடையே இனச்சேர்க்கை நடந்து மூன்று குட்டிகள் ஈனப்பட்டதாக ஜஹாங்கிர் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். சிறை வைக்கப்பட்ட இடத்தில் இனப்பெருக்கம் நடந்தது அதுவே முதல்முறை. இதேபோன்ற ஒரு நிகழ்வு 1956இல் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்ஃபியா விலங்குப் பூங்காவில் நடந்துள்ளது.
முகலாயர்கள் காலத்தில் காண்டாமிருகம்
இந்தியத் துணைக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதிகளில் இயற்கையாக வாழ்ந்த ஒரு விலங்கு காண்டாமிருகம். 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரையில் முகலாய அரசர்களின் வேட்டை ஆர்வத்திலும், ஆட்சி சின்னங்களிலும், ராஜதந்திர உறவுகளிலும் இந்த விலங்கு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. வெறும் விலங்காக அல்லாமல் வீரம், பெருமை, அறிவியல் ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காண்டாமிருகம் அப்போது கருதப்பட்டது.
பாபரின் சந்திப்பு (1526-க்கு முன்)
முகலாயப் பேரரசின் நிறுவனர் பாபர், தனது சுயசரிதையான பாபர் நாமாவில் காண்டாமிருகங்கள் பற்றிய முக்கியமான பல குறிப்புகளைப் பதவி செய்துள்ளார். 1519ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஸ்வாட் நதிக்கரைப் பகுதியில் வைத்து முதல்முறையாக காண்டாமிருகங்களைப் பாபரின் படை எதிர்கொண்ட நிகழ்வு குறித்து விளக்கமாக அதில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முகலாய வீரனின் குதிரையை ஒரு காண்டாமிருகம் தன் கொம்பால் தூக்கி எறிந்த சம்பவத்தையும் பாபர் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீரன் ’மக்சூத்-இ-கார்க்’ என்று அழைக்கப்பட்டான்.
பாபரின் பார்வையில், அசாதாரணமான வலிமையின் சின்னமாகவும் வீரர்களின் வீரத்தைச் சோதிக்கும் விலங்காகவும் காண்டாமிருகம் இருந்துள்ளது. 1525ஆம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் அருகே சியாஹ்-ஆப் நதிக்கரையில் நடைபெற்ற பாபரின் மகன் ஹுமாயூனின் முதல் வேட்டையில், துப்பாக்கியால் ஒரு காண்டாமிருகத்தை அவர் சுட்டு வீழ்த்தியுள்ளார். அதே நாளில் முகலாயப் படை வீரர்கள் மேலும் இரண்டு விலங்குகளைக் கொன்றனர்.
அந்த விலங்கின் கொம்பில் இருந்து ஒரு குடுவையைத் தயாரிக்க உத்தரவிட்டதாக பாபரின் குறிப்பில் உள்ளது. காண்டாமிருகத்தை வெறும் விலங்காக அல்லாமல் பெருமைக்கான பொருளாக எடுத்துக்கொண்டதை இது காண்பிக்கிறது.
அக்பரின் அரண்மனையில் காண்டாமிருகங்கள்
அக்பர் ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசின் எல்லைகள் விரிவடைந்தன. அச்சமயம் வங்காளம், அஸ்ஸாம், பீஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காண்டாமிருகங்கள் இருந்தன. காண்டாமிருகத்தின் வலிமை, இந்திய துணைக் கண்டத்தில் அவை வசித்த இடங்கள் போன்றவை அபுல் பசல் எழுதிய ஐன்-இ-அக்பரி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
அக்பரின் உத்தரவின்படி அவரது அரண்மனைக்குள் காண்டாமிருகங்கள் வளர்க்கப்பட்டன. ஆக்ரா கோட்டைக்குள் வைத்து இரண்டு காண்டாமிருகங்கள் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்குக் காண்பிக்கப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன.
1575ஆம் ஆண்டில் வங்காளத்திலிருந்து அலெப்போ (சிரியா) வழியாகக் காண்டாமிருகம் ஒன்று ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1577இல் மற்றொரு காண்டாமிருகம் லிஸ்பனைச் (போர்ச்சுகல்) சென்றடைந்தது. அங்கே அதற்கு ’அபாடா’ எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு முகலாய அரசவையிலிருந்து ஐரோப்பிய அரசவைகளுக்கு அனுப்பப்பட்ட தூதர்களாக இந்தியக் காண்டாமிருகங்கள் இருந்தன.
அக்பரின் போர்க் குதிரைகள் காண்டாமிருகத்தின் தோலால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்திருந்ததாக, இயேசு சபையைச் சேர்ந்த மிஷனரியான அண்டோனி டி மொன்ட்செராட் 1580இல் குறிப்பிட்டார். காண்டாமிருகத்தைப் பார்த்தாலே யானைகள் பயந்து பின் வாங்கும் என்கிற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் இருந்தது.
ஜஹாங்கிரின் வேட்டையும் ஆய்வும்
வேட்டைக்கும் இயற்கை மீதான ஆர்வத்திற்கும் அக்பரின் மகன் ஜஹாங்கிர் பெயர்போனவர். 1580 முதல் 1619 வரையில் 64 காண்டாமிருகங்களை வேட்டையாடியதாகத் துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலில் அவர் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். 1624இல் அலிகார் அருகே நடந்த வேட்டையில், முகலாய வீரர்கள் 20–30 அம்புகளை எய்தும் ஒரு காண்டாமிருகம் இறக்கவில்லை. அதன்பிறகு ஒரே துப்பாக்கிக் குண்டில் அதைக் கொன்றதாக ஜஹாங்கிர் பதிவு செய்துள்ளார்.
தனது ஓவியர்களை அழைத்து வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களை ஜஹாங்கிர் விரிவாக வரையச் சொன்னார். தோல் மடிப்புகள், கொம்பின் வளைவு, கண்களில் வெளிப்பட்ட உணர்ச்சி போன்றவை அந்த ஓவியத்தில் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. மேலும், சோதனை முயற்சியாக சில விலங்குகள் மீது குண்டுகளைப் பிரயோகித்து, அவற்றின் தோல் வலிமை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
ஷாஜஹான் காலம்
தாஜ்மஹாலைக் கட்டியெழுப்பியதைப்போல காண்டாமிருகங்களை அரண்மனையில் வைத்திருப்பதிலும் ஷாஜஹான் ஆர்வம் காட்டினார். 1632 வாக்கில் எடாவாவில் வைத்து இரு காண்டாமிருகங்களை அவர் பராமரித்துள்ளார். 1665இல் தனது நான்கு மகன்களுடன் சேர்ந்து அவர் யானை – காண்டாமிருக சண்டையைப் பார்த்ததாக நெதர்லாந்து ஓவியர் வில்லியம் ஷெல்லிங்ஸால் வரையப்பட்ட ஓவியம் சான்றளிக்கிறது. அரச குடும்பத்தின் பொழுதுபோக்குச் சின்னமாக காண்டாமிருகம் மாறியதை இது வெளிப்படுத்துகிறது.
ஒளரங்கசீப் காலகட்டம்
மதப்பற்று காரணமாக வேட்டையில் அதிகம் ஈடுபடாதவராக ஒளரங்கசீப் இருந்தார். எனினும் அவரது ஆட்சியின்போது 1659இல் டெல்லியில் காண்டாமிருகங்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லபட்டதைப் பார்த்ததாக பிரெஞ்சு பயணி பெர்னியர் குறிப்பிட்டுள்ளார். 1665–1672 காலகட்டத்தில் பட்டணத்தில் பிடிக்கப்பட்ட ஒரு காண்டாமிருகத்தின் ஓவியம், இன்று வரை ஒளரங்கசீப் அரண்மனையின் கோப்பில் உள்ளது.
சோகமான விளைவு
முகலாயர்கள் காலத்தில் வீரத்தின் சின்னமாகக் காண்டாமிருகம் இருந்தாலும், வேட்டையாடுதலால் அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. ஜஹாங்கிர் பதிவு வழியாக 64 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. அகோம் ராஜ்யத்திற்கும் முகலாயர்களுக்கு இடையே நடைபெற்ற போர்களின்போது பல காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன.
விவசாய நில விரிவாக்கம், காட்டுத் தீ, தொடர் வேட்டை ஆகியவற்றால் ஒரு காலத்தில் வட இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்த காண்டாமிருகம், 18ஆம் நூற்றாண்டுக்குள் வங்காளம், அஸ்ஸாம், நேபாள தராய் ஆகிய பகுதிகளுக்குள் சுருங்கிவிட்டது.
பாபர் வீரர்களின் அச்சம், அக்பர் அரண்மனையின் ஆச்சரியம், ஜஹாங்கிரின் அறிவியல் சோதனை, ஷாஜஹானின் பொழுதுபோக்கு என முகலாயர்கள் காலத்து வேட்டை நினைவுகள் அனைத்தையும் சுமந்துகொண்டு காலம் கடந்தும் காண்டாமிருகங்கள் இன்றும் இருக்கின்றன.
(தொடரும்)

