1600ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். இதன் மூலம் போர்த்துகீசிய மற்றும் டச்சு வணிகர்களுடனான நேரடி வணிகப் போட்டியில் பிரிட்டிஷார் இறங்கினார்கள்.
இதன்படி சர் ஜேம்ஸ் லாங்காஸ்டர் அச்சமயம் கிழக்கு இண்டீஸ் (தென்கிழக்காசியா) என்று அறியப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று, அங்கிருந்த சுமத்திராவில் வணிக நிலையத்தை அமைத்தார். மசாலா பொருட்கள், தேயிலை, இண்டிகோ உள்ளிட்ட பொருட்கள் அங்கே கொள்முதல் செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டன. கம்பெனியின் மூன்றாவது முயற்சியில்தான் இந்தியாவை நோக்கி நேரடியாகக் கப்பல் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
1608இல் இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் வணிக நிலையத்தை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் தலைமையில் கம்பெனியின் வணிக நிலையத்தை அமைக்க சூரத் நகரம் (இன்றைய மும்பையிலிருந்து சுமார் 170 மைல் வடக்கில்) தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சமயம் சூரத் ஏற்கனவே முக்கியமான வணிக மையமாக இருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அப்பகுதி போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.
ஹாக்கின்ஸ் சூரத்தில் இறங்கியபோது உள்ளூர் அதிகாரிகள் அவரை மரியாதையுடன் வரவேற்றனர். ஆனால் வணிக நிலையம் அமைக்க, பம்பாய் நவாபிடமும் முகலாய பேரரசரிடமும் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்தனர். எளிதில் அனுமதி பெறும் நோக்கத்தில் இருவரிடமும் துருக்கிய மொழியில் ஹாக்கின்ஸ் உரையாடினார்.
மேலும் 1612இல் சூரத் கடற்கரையில் நடைபெற்ற ஒரு சிறிய சண்டையில் அவர் போர்த்துகீசியர்களைத் தோற்கடித்து நவாபையும் பேரரசரையும் மகிழ்வித்தார். இதனால் 1613இல் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூரத்தில் வணிக நிலையம் அமைத்ததும் கம்பெனியின் விரிவாக்கம் தொடர்ந்தது. மதராஸ் நகரின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, பம்பாய், கடலூர் அருகே செயின்ட் டேவிட் கோட்டை, மிக முக்கியமாக வங்காளத்தில் கல்கத்தா போன்ற இடங்களில் கிழக்கிந்திய கம்பெனி கூடுதல் வணிக நிலையங்களை உருவாக்கியது.
தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை முழுமையாக அறிந்துகொள்ள நேரத்தையும், பணத்தையும், மனித வளத்தையும் கம்பெனி செலவிட்டது. பொருளாதார ரீதியாக முக்கியமான மூலப்பொருட்கள், குறிப்பாக தாவரங்கள், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை இந்தியாவில் ஆய்வு செய்வது அதன் முக்கிய நோக்கமாக மாறியது.
ஒருபுறம் வேட்டையாடுபவர்களாகவும் மறுபுறம் பாதுகாவலர்களாகவும் இரட்டை வேடத்தில் பிரிட்டிஷார் மிகச் சிறப்பாக நடித்தனர். வரிகள் கிடைத்ததால் காலனி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே விவசாய நிலங்களை மட்டும் பாதுகாத்து காடுகளைச் சிதைக்கத் தொடங்கினார்கள். விவசாய நிலங்களைப் பெருக்கி அதிகப்படியான வரிகளை விதித்து, அதன் மூலம் வருவாயை உயர்த்துவது அவர்களின் நோக்கமாக இருந்தது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பி, அதற்கான முயற்சிகளைக் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. அதிகார பலத்தால், இந்தியாவின் காட்டு வளங்களும் விலங்குகளும் எளிதில் அவர்களின் ஆளுகைக்குள் வந்தன. முதலில் வள ஆய்வுக்காகவும் வேட்டையாடுவதற்காகவும் தொடங்கிய இந்தப் பயன்பாடு, பின்னர் வணிகநலனிற்காக மட்டுமே எனச் சுருங்கியது.
காடுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இந்தக் காலத்தில் நிலவிய சுற்றுச்சூழல் மீதான பேராதிக்கம், ஐரோப்பிய முறையிலான அறிவியல் வனப் பராமரிப்பை நிறுவும் நோக்கில் இந்தியாவின் உள்ளூர் சூழலியல் அமைப்புகளை மாற்றியமைத்ததின் விளைவாகவே ஏற்பட்டது. காலனித்துவ முறைப்படி சில குறிப்பிட்ட வகையான மரங்களை வர்த்தக நோக்கில் வளர்ப்பதற்கு ஏதுவாக பல காடுகள் மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட்டன.
பழமையான காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கிருந்த வனவிலங்குகள் தங்களது வாழ்விடங்களை இழந்தன. அரசியல் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வன நிர்வாகத்தை ஒரு கருவியாகப் பிரிட்டிஷ் காலனி அரசு பயன்படுத்தியது. இத்தகைய வனச் சுரண்டல் மராட்டிய அரசிலும், கொச்சின் மற்றும் திருவனந்தபுர சமஸ்தானங்களிலும் முன்பே காணப்பட்டது.
தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தொடக்கத்தை பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசியால் 1855ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வனச்சட்டம் தொடங்கி வைத்தது. பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அந்தச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கு நன்றாக செயல்பட்ட பிறகு அமெரிக்கா மற்றும் கனடாவில் அமல்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
காட்டு வளங்களைப் பயன்படுத்தி வருமானத்தை உயர்த்தும் நோக்கில் வனப் பகுதிகளை பிரிட்டிஷ் காலனி அரசு கைப்பற்றியது. புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளைத் ’தீயவை’ எனச் சொல்லி, அவற்றை வேட்டையாடி அழிப்பதற்கான கொள்கையைப் பிரிட்டிஷ் காலனி அரசு உருவாக்கியது. அவர்களது ஆட்சி மற்றும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது. அரசியல் ஆதிக்கத்தைப் பெருக்கும் முனைப்பிலும் இந்தக் கொள்கை செயல்பட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு, வனவிலங்குகள் கட்டாயம் கொல்லப்படவேண்டும் என எந்தவொரு உள்ளூர் அரசாங்கமும் சட்டம் இயற்றவில்லை. அவை ஆபத்தானவை என்றுகூட அதிகாரபூர்வமாகச் சொல்லவில்லை.
காலனி ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த உள்ளூர் மக்கள், இயற்கை வளங்களைப் பயன்படுத்த உள்ளூர் அரசுகளை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் அவர்களை அரசுகள் அதிகமாகத் தொந்தரவு செய்யவில்லை. காடுகளையும் வனவிலங்குகளையும் சமநிலை குலையாமல் அவர்கள் பயன்படுத்தினார்கள். அதனால் பழங்குடி மற்றும் விவசாய கிராமங்களுடன் வனவிலங்குகள் அமைதியைக் கடைபிடித்தன.
ஆனால் பிரிட்டிஷ் காலனி நிர்வாகத்தால் வனவிலங்குகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டதால், அது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் நடந்த வேட்டைகள் பற்றிய பதிவுகள், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
தேர்ந்தெடுத்து உயிரினங்களைப் பாதுகாப்பதும் அழிப்பதும் பிரிட்டிஷாரின் அணுகுமுறையாக இருந்தது. யானைகளுக்குக் காலனி அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், புலிகள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டன. மகேஷ் ரங்கராஜன் என்கிற இயற்கை வரலாற்று ஆய்வாளர், புலி போன்ற ஆபத்தான விலங்குகளுக்கு எதிராக காலனி நிர்வாகத்தால் ஒரு ’போர்’ நடத்தப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்.
ஆபத்தான விலங்குகளை அழிப்பதற்குத் தாராளமான வெகுமதிகளை காலனி அரசு அறிவித்தது. வங்காள மாகாணத்தில் மட்டும் 1822 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 5,673 புலிகளைக் கொன்றதற்காகக் காலனி அரசு மொத்தம் 38,483 ரூபாயை வெகுமதியாக வழங்கியது. அந்தக் காலத்தில் சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் கரடிகள் போன்ற விலங்குகளுக்குப் பல நாடுகளில் இதேபோல்தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் 1603இல் வட அமெரிக்காவில் ஓநாய்களைக் கொல்பவர்களுக்கு பணம் வழங்குவது புழக்கத்தில் இருந்தது.
சில விலங்குகளை வேட்டையாடுவதும் சில விலங்குகளைப் பாதுகாப்பதுமான இந்த நடைமுறை, பின்னாட்களில் சில தனிப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வனக்காப்பாளர்களின் அணுகுமுறையால் முற்றிலுமாக மாற்றப்பட்டு பாதுகாப்பு மட்டுமே பிரதானம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவிற்குத்தான் உண்மையுள்ளது.
வருவாயும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒரு ஏகாதிபத்திய கொள்கையை, அந்தச் சித்தாந்தத்திலேயே திளைத்த சிலரால் ஓரிரவில் முற்றிலுமாக மாற்றியமைத்துவிட முடியாது. 1864இல் பிரிட்ஷாரால் உருவாக்கப்பட்ட வனத்துறைதான் இந்த மாற்றத்தைச் சிறிது சிறிதாக வளர்த்தெடுத்தது. தனிப்பட்ட அலுவலர்களின் சிந்தனைகளும் பாதுகாப்பு முயற்சியை நனவாக்கியது.
அதேநேரம், எதிர்காலத்தில் வேட்டையைத் தொடர விலங்குகளைப் பாதுகாப்பது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அவசியமாகிப்போனது என்கிற கோணத்தையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், அவர்கள்தான் வேட்டையாடுபவர்களாக இருந்தார்கள். இவ்வாறுதான், ‘வேட்டைக்கான விலங்குகள்’ என்ற எண்ணம் மாறி, ‘வனவிலங்குகள்’ என்ற கருத்தாக்கம் வளர்ந்தது.
காலனி ஆட்சியின்போது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் விலங்குகள் குறித்த அணுகுமுறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜி.பி. சாண்டர்சன், ஈ.எஃப். பர்டன் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜிம் கார்பெட், கர்னல் ரிச்சர்ட் பர்டன் மற்றும் எஃப்.டபிள்யூ. சாம்பியன் போன்றோரின் தாக்கம் வனவிலங்குப் பாதுகாப்பில் நுழைந்தது. ஈ.எஃப். பர்டன் தன்னுடைய குறிப்புகளில் ’வனவிலங்குகள் முற்றிலுமாக அழிவதுபோல் வேட்டையாடுதல் கூடாது’ என்றார்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னணி இயற்கை ஆர்வலர்களில் ஒருவரான எஃப்.டபிள்யூ. சாம்பியன், துப்பாக்கிக்குப் பதிலாகக் கேமராக்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார். காலனி ஆட்சியின்போது முதலில் வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய சாம்பியன், பின்னாளில் முதன்மையான வனவிலங்கு புகைப்படக் கலைஞராகத் திகழ்ந்தார் (சாம்பியனின் ‘புகைப்படக் கருவியுடன் புலிகளின் இருப்பிடத்தில்’ என்ற படைப்பு – புலிகள், கரடிகள், யானைகள், காட்டு பூனைகள், நரிகள் போன்ற இந்திய வனவிலங்குகளின் 219 புகைப்படங்கள் அடங்கிய நூலாகும்).
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், 1875 முதல் 1925 வரை சுமார் 80,000 புலிகள் மற்றும் 1,50,000 சிறுத்தைகள் அழிக்கப்பட்டதையும் குறிப்பிட்டாகவேண்டும். உதாரணமாக 1870களில் வங்காளத்தின் மிட்நாபூர் பகுதியில் புலிகளும் சிறுத்தைகளும் சேர்ந்து சுமார் 227 பேரைக் கொன்றதாகவும் அதற்காக 16 புலிகள் மற்றும் 42 சிறுத்தைகள் கொல்லப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.
இந்தியாவில் ஐரோப்பியர்கள் மேற்கொண்ட ஆரம்பகால இயற்கை வரலாற்று ஆய்வுகள் பெரும்பாலும் அவர்களது நாட்டின் விரிவாக்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகவே இருந்தன. தங்களது வியாபாரத்தையும் பொருளாதார செல்வாக்கையும் இதன்முலம் அதிகரிக்க அவர்கள் முயன்றனர்.
இவற்றின் விளைவாக 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் ராணுவம், ரயில்வே, மருத்துவம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியபோது, இப்பணிகளில் இணைந்த சில அதிகாரிகளின் தனிப்பட்ட ஆர்வத்தால் இயற்கை வரலாறும் வளர்ந்தது. இயற்கை வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலும் ராணுவ மருத்துவர்களாகவே இருந்தனர்.
19ஆம் நூற்றாண்டில் இயற்கை வரலாற்று ஆய்வுகள் வளர்வதற்கும், புதிய ஆராய்ச்சி அருங்காட்சியகங்கள் உருவானதற்கும், அதற்கு முன்பு நடைபெற்ற அரசியல், வணிக நடவடிக்கைகள் அடித்தளத்தை அமைத்தன. 18ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷன் உறுப்பினர்கள் ஜாக்கப் கிளெயின் மற்றும் கிறிஸ்டோபர் சாமுவேல் ஜான் ஆகியோர் இணைந்து ’யுனைடெட் பிரதர்ஸ்’ எனும் தாவர ஆய்வுக் குழுவை உருவாக்கினர்.
தற்போதைய காலகட்டத்தின் அறிவியல் குழுவுக்கான வடிவத்தில் அது இல்லை; ஒரு நண்பர்கள் குழு போன்றுதான் அந்த அமைப்பு செயல்பட்டது. அதனாலேயே 1768 முதல் 1792 வரை பலரும் அதில் இணைந்துகொண்டனர். முக்கியமாக யோஹான் கெர்ஹார்ட் கியோனிக் மற்றும் வில்லியம் ராக்ஸ்பர்க் ஆகியோர் இணைந்தனர். இந்திய தாவர வளம் குறித்து ஐரோப்பிய தாவரவியல் உலகில் பரப்புவதில் இவர்களே பெரும் பங்கு வகித்தனர்.
யுனைடெட் பிரதர்ஸ் குழுவுடன் நேரடித் தொடர்பில்லாத கார்ல் லின்னேயசின் (ஸ்வீடன் உயிரியலாளர்) மாணவர் கார்ல் பீட்டர் துன்பெர்க் (1743–1828) இலங்கையில் தாவரங்களைச் சேகரித்தார். பிரெஞ்சு சேகரிப்பாளரான உயிரியல் வல்லுநர் பியர் சோனெரட் (1748–1814) பாண்டிச்சேரி மற்றும் மெட்ராஸின் வட பகுதி, இலங்கை போன்ற இடங்களில் விலங்கு, தாவர மாதிரிகளை சேகரித்தார். இவை உப்பசாலா, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களைச் சென்றடைந்தன.
மேற்கண்டவர்களில் யோஹான் கெர்ஹார்ட் கியோனிக் (1728–1785) மற்றும் வில்லியம் ராக்ஸ்பர்க் (1751–1815) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கெர்ஹார்ட் கியோனிக், கார்ல் லின்னேயசுடன் பயின்றவர். பின்னர் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தார். 1768இல் இந்தியாவிற்கு வந்து யுனைடெட் பிரதர்ஸ் குழுவில் அவர் இணைந்ததும், உள்ளூர் தாவரங்களைத் திரட்ட ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கினார். அவற்றின் மாதிரிகளை அவர் உப்பசாலா நகரில் இருந்த லின்னேயசுக்கு அனுப்பினார்.
1778இல் மெட்ராஸ் மாகாண அரசு அவரை ’கம்பெனியின் இயற்கை வரலாற்றாசிரியராக’ நியமித்தது. மலாக்கா (மலேசியா) மற்றும் சியாமிலிருந்து (தாய்லாந்து) இந்தியாவுக்குப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை கொண்டு வரவேண்டும் என்பதே இதன் நோக்கம். அதே சமயம் லின்னேயசின் இரு பெயரிடும் முறையை இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்தினார்.
1785இல் கெர்ஹார்ட் கியோனிக் மறைந்தபின், அவர் திரட்டிய சேகரிப்புகள் மற்றும் கைப்பதிவுகள் அன்றைய காலகட்டத்தின் பிரபல தாவரவியல் வல்லுநர் ஜோசப் பாங்க்ஸுக்கு வழங்கப்பட்டன.
கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக வில்லியம் ராக்ஸ்பர்க் பணிபுரிந்தார். 1776இல் மெட்ராஸுக்கு வந்து அவர் தரங்கம்பாடி குழுவுடன் இணைந்தார். 1793இல் கல்கத்தா தாவரவியல் பூங்காவின் நிறுவனர் ராபர்ட் கிட் காலமான பின், அந்த அமைப்பின் முதல் நிர்வாகியாக ராக்ஸ்பர்க் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் அவரது முயற்சிகளின் பலனாகவே நடந்தது. ஏனெனில் ஏலக்காய், மிளகு, இண்டிகோ உள்ளிட்ட வணிக முக்கியத்துவம் வாய்ந்த செடிகளை வளர்க்க சோதனை அடிப்படையில் அவர் தோட்டங்களை உருவாக்கியிருந்தார். ராக்ஸ்பர்க்கால் வரையப்பட்ட 2500-க்கும் அதிகமான தாவரங்களின் வரைபடங்களைக் கொண்டு பிளோரா இண்டிகா உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. ஆராய்ச்சிகளில் ஈடுபடும்படி புதிய ஊழியர்களை அவர் ஊக்குவித்தார். அவரது சேகரிப்புகள் ஜோசப் ஹூக்கர் வசம் சென்றன.
அவர் ’பிளோரா ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற பெயரிலான பிரமாண்ட தொகுப்பை (1875–1896) வெளியிட்டார். கல்கத்தாவில் ’ராயல் பொட்டானிக்கல் கார்டன்’ நிறுவப்பட்டது, இந்திய இயற்கை வரலாற்று ஆய்வுகளின் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டமாகும்.
1786 ஜூன் 1 அன்று லெப்டினன்ட் கர்னல் ராபர்ட் கிட் கிழக்கிந்திய கம்பெனி இயக்குநர்களுக்கு எழுதிய கடிதத்தின் வழியாக இதைத் திட்டமிட்டார். உள்ளூர் மக்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசுக்குப் பயனுள்ள தாவரங்களை வளர்த்து, பொருளாதார வளர்ச்சிக்கும் வணிக வளர்ச்சிக்கும் துணையாக இருப்பதே இதன் நோக்கமாகும். 31 ஜூலை 1787இல் இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.
முதல் முயற்சியாகச் சிலோனில் (இலங்கை) அதிகமாக வளர்ந்த சினமன் (கறுவா/பட்டை) மரத்தை வங்காளத்தில் வளர்க்கத் திட்டமிட்டனர். ராபர்ட் கிட் எதிர்பாராவிதமாக 1793இல் மறைந்ததால், அவரது கனவுகளை ராக்ஸ்பர்க் தொடர்ந்தார். அதிகாரபூர்வ நிர்வாகியாக நியமிக்கப்பட்ட ராக்ஸ்பர்க்குக்கு தனி வீடு கட்ட நிதி வழங்கப்பட்டது. பூங்காவின் நிர்வாக அலுவலகமாகத் தற்போதும் அது செயல்படுகிறது.
பின்னாளில் இந்தத் தாவரவியல் பூங்கா இயற்கை வரலாற்றுப் பொருட்களைத் திரட்டி, ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு மாபெரும் மையமாக உருவெடுத்தது. அருங்காட்சியகத்தின் வளர்ச்சிக்கும் புதிய இயற்கை வரலாற்றுக் குழுக்களின் தோற்றத்திற்குமான அடிப்படையை இது அமைத்தது.
இயற்கை அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய அமைப்பான ’வங்காளத்தின் ஆசிய சங்கம்’ 1784இல் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இதன் நிறுவனரான சர் வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1788இல் ’ஆசிய ஆய்வுகள்’ என்ற இதழ் முதல்முறையாக வெளியிடப்பட்டது. இயற்கை வரலாறு, கலை மற்றும் இலக்கியம் போன்றவற்றை ஆசிய அளவில் வெளியிடும் முதல் தளமாக இது இருந்தது.
நதானியல் வாலிக் என்பவரின் உதவியுடன் 1814இல் சங்கத்தின் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இதில் விலங்கியல், புவியியல், இனவியல், தொல்லியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்தன. பண நெருக்கடி இருந்தபோதும் பல இடங்களில் உள்ளூர் சங்கங்களைத் தொடங்குவதற்கு இது ஊக்கம் அளித்தது. கல்கத்தா, மெட்ராஸ், பம்பாய், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இவ்வாறுதான் அருங்காட்சியகங்கள் உருவாகின.
இந்தியாவில் இயற்கை வரலாற்று ஆய்வுகள் வளர்ச்சியடைவதற்கு முக்கியப் பங்காற்றிய மற்றொரு நிறுவனம் புவி-அறிவியல் ஆய்வு அலுவலகமாகும். 1836இல் கல்கத்தா அருங்காட்சியகத்தின் புதிய அரங்குகளில் நிலவியல் பொருட்கள் திரட்டப்பட்டன. பின்பு 1851இல் அதிகாரபூர்வமாக ’இந்திய புவி-அறிவியல் அளவாய்வகம்’ உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் நிலக்கரி, தங்கம் போன்ற கனிம வளங்களைக் கண்டறிந்து பிரிட்டிஷ் காலனி அரசுக்குப் பொருளாதார ஆதாரங்களை உருவாக்குவதே இந்த அமைப்பின் முதன்மையான நோக்கமாகும். இந்திய இயற்கை வரலாறு ஆய்வுகள், கணக்கீட்டு வரைபடங்கள், நிலவியல் வரிசைகள், புவியியல் ஆய்வுக் கணக்குகள் போன்றவற்றைத் தொகுப்பதில் முன்னணி அமைப்பாக இது இருந்தது. பின்னாளில் இந்த அமைப்பு பன்முக வாய்ப்புகள் கொண்ட ஆய்வு மையமாக வளர்ந்தது. அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழக ஆய்வுப் புள்ளிகள், மேற்கத்திய அறிஞர்கள் ஆகியோருக்கு நிலவியல் ஆய்வு அலுவகத்தின் ஆய்வாளர்கள் மாதிரிகளை அனுப்பினார்கள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி கட்டமைப்பை மாற்றியமைப்பதில் 1857இல் நடைபெற்ற சிப்பாய் கலகம் முக்கியப் பங்காற்றியது. அதன் தொடர்ச்சியாக கிழக்கிந்திய கம்பெனி முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக்கொண்டது. இந்த மாற்றத்துடன் கல்கத்தா அருங்காட்சியகம் தொடர்பாகப் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தன.
1866இல் இந்திய அருங்காட்சியக சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் புதிய விதிகளுடன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கல்கத்தா அருங்காட்சியகம் இயங்கியது. அந்தச் சட்டத்தின் மூலம் ஏராளமான இயற்கை வரலாறு மாதிரிகளும் தொகுப்புகளும் அரசின் சொத்துக்களாகச் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்டன. அருங்காட்சியகத்தின் நிலவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல் பாகங்கள் சீரமைக்கப்பட்டன.
இந்திய அருங்காட்சியகத்துறையின் வளர்ச்சியில் மறக்கடிக்க முடியாத ஒரு பெயரைப் பெற்றவர் ஜான் ஆண்டர்சன். 1865இல் கல்கத்தா அருங்காட்சியகத்தின் முதன்மை விலங்கியல் வல்லுநராக இவர் நியமிக்கப்பட்டார். ஆசிய விலங்குகளைச் சிறப்பான முறையில் ஆய்வு செய்தார்.
குறிப்பாகச் சீனா மற்றும் பர்மாவில் (மியான்மர்) பயணங்களை மேற்கொண்டு அங்கிருந்து விலங்கு மாதிரிகள், அவற்றின் எலும்புகள், கனிமங்கள் போன்றவற்றைத் திரட்டினார். ஆண்டர்சன் எழுதிய குறிப்புக்கள் அனைத்தும் ’விலங்கியல் நினைவுக் குறிப்புகள்’ என்கிற தொடரில் வெளியிடப்பட்டன. இயற்கை வரலாறு மாதிரிகள் அடங்கிய அருங்காட்சியகத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் வகைப்படுத்தினார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த வகைப்படுத்துதல் முறை இந்தியா சுதந்திரம் பெறும் வரை பின்பற்றப்பட்டது.
(தொடரும்)

