Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #12 – பிரிட்டிஷ் ஆட்சி – இயற்கையும் சமூகமும் எதிர்கொண்ட சவால்கள்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #12 – பிரிட்டிஷ் ஆட்சி – இயற்கையும் சமூகமும் எதிர்கொண்ட சவால்கள்

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் வனச் சட்டங்கள்: இயற்கையும் சமூகமும் எதிர்கொண்ட சவால்கள்

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் ஆரம்ப காலங்களில், இந்திய வனங்கள் மீதான அவர்களது தவறான அணுகுமுறை, வனங்களைப் பெரும்பாலும் பாலைவனங்களாக்கும் நோக்கமுடையதாகவே இருந்தது.

1860-க்குள் உலகின் முக்கிய வன அழிப்பு நாடாக பிரிட்டன் மாறியது. உள்நாட்டு வனங்களையும், அயர்லாந்து, தென் அமெரிக்கா, வடகிழக்கு அமெரிக்கா ஆகிய இடங்களிலுள்ள வனங்களையும் விவசாயம், இரும்பு உருக்காலை, கப்பல் கட்டும் தொழில் ஆகியவற்றுக்காக அந்நாட்டு அரசு அழித்தது. அதையேதான் அது இந்தியாவிலும் மேற்கொண்டது என்று கூறுவதில் தவறில்லை.

வன அழிப்பிற்கான முக்கிய நோக்கங்கள்:

  1. வரி வசூலுக்காக நில விரிவாக்கம்: முகலாய ஆட்சி காலத்திலிருந்தே வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக நில வரி இருந்து வந்தது. ஆனால் பிரிட்டிஷ் காலனி அரசு அதை மேலும் கடுமையாக்கியது. அதிகமான விளை நிலங்களை உருவாக்கும் நோக்கத்தில், வனங்கள் அழிக்கப்பட்டு அவை விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. நில வரி செலுத்த முடியாதவர்கள் நிலங்களை விட்டுவிட்டு வனப்பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் சட்டவிரோத குடிகளாக நடத்தப்பட்டனர். பிரிட்டன் சமூகத்தில் வனங்கள் ’பராமரிக்கப்படாத நிலம்’ எனக் கருதப்பட்டன. இந்தியாவிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வனங்களைப் பராமரிக்க முடியாத நிலங்களாகக் காண்பித்து, அவை விவசாய நிலமாக மாற்றும் செயல் நியாயப்படுத்தப்பட்டது.

  2. கப்பல் கட்டுமானம் மற்றும் ராணுவத் தேவைகள்: கிழக்கிந்திய கம்பெனியின் கடற்படை மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தின் தேவைகளுக்காகத் தேக்கு, சால், தேவதாரு உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டன. கப்பல்களின் உறுதியான கட்டமைப்புக்கு இந்த மரங்களின் தேவை அதிகளவில் இருந்தது. 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், இந்த மரங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்தது.

  3. ரயில்வே வளர்ச்சி: இந்தியாவின் முதல் ரயில் பாதை 1853ஆம் ஆண்டில் மும்பை –தானே இடையே (34 கி.மீ.) திறக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 40,000 கி.மீ. ரயில் பாதை உருவாக்கப்பட்டது. 1947இல் சுதந்திரத்தின்போது இது 65,000 கி.மீ. ஆக உயர்ந்தது. இந்த விரைவான வளர்ச்சி பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தியது.

மெட்ராஸ் மாகாணம் (தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம்): 1850–1880 காலகட்டத்தில் மட்டும், ரயில்வே கம்பங்கள் மற்றும் தூண்களுக்காகச் சுமார் 20 லட்சம் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டதாக மெட்ராஸ் வனத்துறையின் வருடாந்திர நிர்வாக அறிக்கை (வன அறிக்கை-1878) குறிப்பிடுகிறது. நீலகிரி, ஆனைமலை மற்றும் வால்பாறை பகுதிகளில் 30% வரை காடுகளின் பரப்பளவு குறைந்தன. மழைக்காடுகள் அகற்றப்பட்ட காரணத்தால் 1880–1890இல் சுமார் 10,000 ஹெக்டேர் நிலம் மண் அரிப்புக்குள்ளானது.

வங்காள மாகாணம் (மேற்கு வங்காளம், பீகார், ஒடிஷா, அஸ்ஸாம்): 1860–1900 காலகட்டத்தில், சுந்தரவன அலையாத்திக் காடுகளில் இருந்து சுமார் 15 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஹௌரா–ராஞ்சி–அஸ்ஸாம் ரயில் பாதைகளைக் கட்டியபோது, ஒவ்வொரு மைல் பாதைக்கும் சராசரியாக 1,500–2,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வங்காள மாகாண அரசின் வன அறிக்கை (1894), ’ரயில்வேக்காகக் கிடைக்காத வனப்பகுதி எதுவுமில்லை’ என்று குறிப்பிடுகிறது.

பம்பாய் மாகாணம் (மஹாராஷ்டிரம், குஜராத்): 1870-களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 30,000 ஏக்கர் காடுகள் வெட்டப்பட்டன. பம்பாய்–கல்யாண் ரயில் பாதைக்கு மட்டும் சுமார் 50,000 டன் கற்கள் வெடித்தெடுக்கப்பட்டன. 1860–1880 காலகட்டத்தில் மட்டும் சுமார் 5,000 யானைகள் வனப்பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டன.

வட இந்தியா (உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்): 1880–1900 காலகட்டத்தில் கங்கை ஆற்றுப் பகுதியில் சுமார் 25,000 ஏக்கர் அளவுக்குச் சால் மரக் காடுகள் வெட்டப்பட்டன. ஒவ்வொரு பாலம் கட்டும் பணிக்கும் சுமார் 20,000–30,000 கன மீட்டர் மணல் எடுக்கப்பட்டதாக இந்திய ரயில்வே பொறியியல் அறிக்கை (1895) தகவல் தெரிவிக்கிறது.

மத்திய இந்தியா (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்): 1870–1900-க்கு இடையே சத்புரா மலைப் பகுதியில் சுமார் 40% காடுகள் குறைந்தன. சத்தீஸ்கர் நிலக்கரி சுரங்கங்களுக்காக (கொர்பா, தன்பாத்) 250 கி.மீ. அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதால், சுமார் 60,000 ஏக்கர் காடுகள் அழிந்தன.

வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம், மேகாலயா): தேயிலைத் தோட்டங்களுக்கான ரயில் பாதைகள் 1880-க்கு முன்பு 2,500 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டன. காஸிரங்கா தேசிய பூங்காவுக்கு அருகே 1900–1910-க்கு இடையே ரயில்கள் மோதி சுமார் 200 யானைகள் இறந்ததாக உள்ளூர் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

  1. மர எரிபொருளுக்கான தேவை: நகரங்கள், ராணுவ முகாம்கள், நீராவிக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்தும் மரக் கட்டைகளை எரிபொருளாகப் பயன்படுத்தின. நிலக்கரி பயன்பாடு தொடங்கும் முன்பு முக்கிய எரிபொருளாக மரக்கட்டைகள் இருந்தன.

  2. சமூகக் கட்டுப்பாடு: பழங்குடியின சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை ஆதாரமாக வனங்கள் இருந்தன. காலனி அரசு இந்தச் சமூகங்களை ‘ஒழுங்கின்மையைத் தூண்டும் மக்கள்’ எனக் கூறி, அவர்களது வாழ்விடங்களை அழிக்கத் திட்டமிட்டது. வனங்களில் இருக்கும் மரங்களை வெட்டுவதன் மூலம், அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களை அழிக்க முடியும் என்ற அரசியல் உள்நோக்கமும் அதில் இருந்தது.

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் பசுமைச் சூழலை முற்றிலுமாக மாற்றியது. நிலத்தடி நீர் மட்டம் சரிவைச் சந்தித்து மழை பெய்வது குறைந்ததால், வறண்ட நிலங்கள் அதிகரிக்கும் பிரச்னை தீவிரமானது. போலியாக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீரழித்த வரலாற்றின் ஒரு காலகட்டம் இதுவாகும்.

வன அழிப்பு, வறட்சி, மழையின்மை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என 18ஆம் நூற்றாண்டின் முடிவில் மேற்கத்திய விஞ்ஞானிகள் கூறத் தொடங்கினர். இதனால் அரசால் மட்டுமே நீடித்த சூழலியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனக் கருதப்பட்டது. இதைப் பிரிட்டிஷ் அரசு கொஞ்சம் உணர்ந்ததாகவே கூறவேண்டும். இதன் விளைவாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பழைய பாணியில் காடு அழிப்பு சற்று புறம் தள்ளப்பட்டு, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுவே 1800இல் தென் இந்தியாவில் தேக்கு மர இருப்பு குறித்த ஆய்வு நடைபெறவும், 1805இல் மரங்களை வெட்ட அனுமதி மற்றும் உரிமைகள் அளிப்பது குறித்த மதிப்பீடு ஒன்றை வனக்குழு மேற்கொள்ளவும், 1806இல் வனக் கண்காணிப்பாளர் என்ற பணியிடம் உருவாக்கப்படவும் (முதன்முதலில் கேப்டன் வாட்ஸன் என்பவர் பணியமர்த்தப்பட்டார்), 1842இல் நிலம்பூரில் முதல் தேக்குத் தோட்டம் (கொனொல்லி) உருவாகவும் மற்றும் 1864இல் இந்திய வனத்துறை உருவாக்கப்படவும் வித்திட்டது.

அத்துடன் வன மேலாண்மையில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட சட்டங்களும் கொள்கைகளும், இந்திய சமூக அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. இவை, ஒருபுறம் அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தின; மறுபுறம், பாரம்பரிய உரிமைகள் மற்றும் வன ஆதாரங்களை மக்களிடமிருந்து விலக்கின.

  1. 1865 – முதல் வனச் சட்டம்: வனங்கள் மீதான காலனி அரசின் உரிமையை உறுதி செய்யும் முதல் முயற்சி இந்தச் சட்டமாகும். ஆனால், இதில் மக்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த தெளிவான வரையறைகள் இல்லாததால், அதிகாரிகள் மக்கள் உரிமைகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். ரயில்வே பயன்பாட்டிற்கான மரங்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
  2. 1878 – விரிவாக்கப்பட்ட வனச் சட்டம்: இந்த சட்டம் மூன்று பிரிவுகளாக வனங்களை வகைப்படுத்தியது:

காப்புக் காடுகள் (Reserve Forests): அரசின் முழு உரிமையில் அமைக்கப்பட்ட இந்தக் காடுகளில் பொதுமக்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. மரம் வெட்டுதல், சுள்ளி பொறுக்குதல், கால்நடை மேய்ச்சல் போன்றவை தடை செய்யப்பட்டன;

பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected Forests): குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு அதிகாரிகள் அனுமதியளித்தனர். உரிமைகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

கிராமக் காடுகள் (Village Forests): இது கிராம நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பசுமைப் பகுதிகளாகும். ஆனால் இந்தத் திட்டம் பெரும்பாலான இடங்களில் நடைமுறைக்கு வரவில்லை.

1878 சட்டம், மாகாணங்களுக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கியது. குறிப்பாக பஞ்சாப், பீகார், அஸ்ஸாம் பகுதி வனங்கள் அரசுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டன. அங்கிருந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கையை இது பெரிதும் பாதித்தது.

  1. 1894இல் தீர்மானம் (Resolution No. 22F) ஒன்று இயற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் வனங்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதற்கு வழிவகை செய்தது. வனங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன: காலநிலை மற்றும் புவியியல் ரீதியாகப் பாதுகாப்புக்குரிய வனங்கள், வணிக மர வளங்களைக்கொண்ட வனங்கள், சிறிய வனங்கள், மேய்ச்சல் நிலங்கள். பொதுமக்களின் தேவைகள் முக்கியமானதாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டாலும், வருவாயும் துணை நோக்கமாக முன்வைக்கப்பட்டது.
  1. 1927 – இந்திய வனச் சட்டம்: 1865, 1878 சட்டங்களை ஒருங்கிணைத்து, மேம்படுத்தப்பட்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் தெளிவான சட்ட மொழியில் வன உரிமைகள் குறிப்பிடப்பட்டன. வனங்கள் மீதான முழு உரிமை அரசுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு தேவைகளுக்காக வனத்தைப் பயன்படுத்த மக்களுக்கு ’அரசு அனுமதி’ கட்டாயமாக்கப்பட்டது. வனப் பகுதிகளில் வசித்த மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது எளிதாக்கப்பட்டது.

இந்தச் சட்டங்கள் அனைத்தும் வனங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், பொதுமக்கள் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தச் சட்டங்கள் பிரிட்டிஷ் காலனி அரசின் அடிமைத்தன அடிப்படையிலான சூழலியல் நிர்வாகத்தைக் காண்பிக்கும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.

இவை, வனங்களை ’அரசு சொத்து’ எனும் கோட்பாட்டில் நகர்த்தும் காரணிகள் என்பதை வரலாற்றுப் பார்வையில் புரிந்துகொள்ள முடியும். இது வனங்களைப் பொருளாதார ஆதாய மூலதனமாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறையாகும். இதனால் அந்த வனங்களில் வாழ்ந்து வந்த பழங்குடிகளின் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் அவர்களின் கலாசார அடையாளங்களும் அழிக்கப்பட்டன.

  1. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை மீதான தாக்கம்: வனங்களை நில வசூலுக்கு உரியதாக மாற்றியபோது, அவை பெரும்பாலும் பழங்குடியினரின் வாழ்விடங்களாகவும், தொழில்கள், உணவு மற்றும் ஆன்மீக நடைமுறைகளின் மூல ஆதாரங்களாகவும் இருந்தன. வேட்டை, தேன் எடுத்தல், மர வளப் பயன்பாடு போன்ற பாரம்பரிய செயல்கள் சட்டவிரோதமாக்கப்பட்டதால் அம்மக்களின் வாழ்வாதாரம் சிதைந்தது.

  2. இடப்பெயர்ச்சி: அரசால் காப்புக் காடுகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில், பழங்குடியின மக்கள் சட்டப்படி வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பலர் வனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர் அல்லது அடக்குமுறைகளுக்கு உட்பட்டு அங்கேயே வாழக்கூடியவர்களாக இருந்தனர். வனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுள் ஒரு பகுதியினர் நகர்ப்புறங்களின் விளிம்பில் வாழும் மக்களாக மாறினார்கள்.

  3. கலாசார அழிவு: பழங்குடி சமுதாயங்களின் கோவில் காடுகள் (Sacred groves) அனைத்தும் அவர்களின் வாழ்க்கை முறைக்கான அடையாளமாக இருந்தன. ஆனால், வனங்களை அரசின் வருமான ஆதாரமாக மாற்றும் முயற்சியால், அவர்களால் புனிதமானதாகக் கருதப்பட்ட இந்த இடங்கள் பொருளாதார மதிப்பீட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இதனால், காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட பல மரபுகள் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டது.

  4. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் வானிலை மாற்றங்கள்: வன அழிப்பு மற்றும் விவசாய நில விரிவாக்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரைப் பெரிதும் பாதித்தன. பல இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு, மழை தட்டுப்பாடு, நிலச்சரிவுகள், பாலை நிலங்களின் விரிவாக்கம் போன்ற சூழலியல் சிக்கல்கள் ஏற்பட்டன. 1890-களில் வன அழிப்பாலும், வானிலை மாற்றங்களாலும் விவசாயத்திற்குச் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவ அதிகாரிகளே கவலை தெரிவித்துள்ளனர்.

  5. சூழலியல் பாதுகாப்பு எனும் போர்வையில் அதிகார விரிவாக்கம்: வனப் பாதுகாப்பு என்ற நல்லெண்ண நோக்கத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்கள், உண்மையில் அரசின் ஆளுமையை வலுப்படுத்தும் கருவிகளாகவே இருந்தன. மக்கள் மற்றும் வன உயிரினங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் முயற்சிகள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள இயற்கை சமநிலையைச் சிதைக்கும் நிலையை உருவாக்கியது.

  6. வனங்கள் மற்றும் விலங்குகளின் நிலை: பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக அதிகளவில் வனங்கள் அழிக்கப்பட்டன. புலி, நரி, மான் போன்ற உயிரினங்கள் வேட்டைக்காரர்களின் இலக்குகளாக மாறின. வேட்டையாடுவதற்கு அனுமதி இருந்தது, ஆனால் பாரம்பரியமாக வேட்டையாடும் பகுதிகளில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இது உயிரியல் பன்முகத்தன்மையைக் குறைத்தது.

  7. சமூக எதிர்வினைகள்: வனச் சட்டங்கள் மக்கள் வாழ்வில் கெடுதல்களை விளைவித்ததால், பல இடங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு கிளர்ச்சிகள் நடைபெற்றன. சந்தால் கிளர்ச்சி (1855), முண்டா கிளர்ச்சி (1899–1900) போன்ற பழங்குடியின கிளர்ச்சிகள், வெறுமனே வரி அல்லது மத மாற்றங்களுக்கு எதிரானவை அல்ல; அவை வன உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாகவே இருந்தன.

  8. பெண்கள் மீது தாக்கங்கள்: வனங்களை உபயோகப்படுத்த உருவான தடையால், தங்கள் தேவைகளுக்காகப் பெண்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவர்களின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் சிக்கல்களை ஏற்படுத்தியது.

இத்தகைய தாக்கங்கள் அனைத்தும், வனங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் மற்றும் சமூக உறவுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தின. வனங்கள் என்பது வெறும் மரங்களின் கூட்டமல்ல. அது பல உயிர்களின் வாழ்விடம் – இந்த அடிப்படையான கோட்பாட்டைப் பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகர்த்தெறிந்தது.

இந்தியாவில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வனங்களுடனான மனிதனின் உறவுமுறை, காலனி ஆட்சியின் கீழ் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. பண்டைய காலத்தில் பசுமை வளங்கள் ஆன்மீக நம்பிக்கையின் ஒரு பாகமாகவும், சமூக வாழ்வின் ஓர் அங்கமாகவும் இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் வருகையோடு, வனங்கள் வருமானத்துக்குரிய பண்டமாக மாற்றப்பட்டன. இது, இயற்கையையும், அதனைச் சார்ந்த சமூகங்களையும், குறிப்பாகப் பழங்குடிகளின் நலனைப் புறக்கணிக்கும் நிகழ்வாக அமைந்தது.

வனங்களை விவசாய நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள், சூழலியல் சமநிலையைச் சிதைத்தன. அதேவேளையில், வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் பாரம்பரிய உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. 1865, 1878 மற்றும் 1927 வனச் சட்டங்கள், வனங்கள் மீதான அரசின் முழு உரிமையை உறுதி செய்தாலும், பொதுமக்களின் சம வாய்ப்பு மற்றும் சமூக நலன்களைக் கட்டுப்படுத்தும் சட்ட கருவிகளாகவே அவை பயன்பட்டன.

பழங்குடிகள், பெண்கள், விவசாயிகள், பசுமை வளங்களைச் சார்ந்து வாழும் வாழ்வாதாரக் குழுக்கள் ஆகியோரின் வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்பட்டது. வேட்டை, மர வளப் பயன்பாடு, மூலிகை சேகரிப்பு போன்ற பாரம்பரிய செயல்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன. இவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு, வாழ்விட உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகப் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலம், இந்தியாவை மரங்களை வெட்டித் தள்ளும் நாடாகவும், அதே மரங்களைப் பாதுகாக்கச் சட்டங்களை அமல்படுத்தும் நாடாகவும், இரு வேறு விதமாகச் செயல்பட வைத்தது. இது இன்று வரையில் நமது சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் வன மேலாண்மையில் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழலில், காலனிய காலத்துச் சட்டங்களை மதிப்பீடு செய்வது மிக அவசியம்.

வனங்கள் என்பவை வருமானத்தின் அடிப்படை அல்ல; அது சமூகத்தின் உயிர்நாடி. இயற்கையுடனான பழங்குடிகளின் உறவை மதிக்க வேண்டிய தேவை அதிகமாகி வருகிறது. சூழலியல் நீதிக்கான நடைமுறைகளில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கவேண்டும். வனங்களைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கும் இந்த வரலாற்று பயணம், ஒரு பாடமாகவும் எதிர்காலத்துக்கான திட்டமாகவும் அமைய வேண்டும். அப்போது மட்டுமே நம்மால் இயற்கையையும் சமூகங்களையும் புனரமைக்க முடியும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *