Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #13 – பசுமைக்காகச் சிந்திய ரத்தம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #13 – பசுமைக்காகச் சிந்திய ரத்தம்

பசுமைக்காகச் சிந்திய ரத்தம்: காலனி ஆட்சிக் காலத்தில் வன உரிமைக்கான கிளர்ச்சிகள்

 

இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் காலனி ஆட்சிக்காலம் ஏற்படுத்தியது. காடுகள் வணிகப் பொருள்களாக மாற்றப்பட்டன; நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; விலங்குகள் கட்டுக்கடங்கா எண்ணிக்கையில் வேட்டையாடப்பட்டன. பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டதால், பழங்குடியின மற்றும் கிராம சமூகங்கள் எதிர்ப்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

’இயற்கை என்பது வாழ்வின் உரிமை, வணிகத்தின் சொத்து அல்ல’ என்ற அடிப்படையான கோட்பாட்டை இந்த எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தும் வெளிப்படுத்தின. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் உருவான சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கும், குறிப்பாக சிப்கோ – அபிகோ இயக்கங்களைப் போன்ற மரத்தைத் தழுவும் நிகழ்வுகளுக்கும் இவை முன்னோடியாக அமைந்தன.

  1. பிஷ்ணோய் பெண்களின் ’கிஜர்லி இயக்கம்’ (1730)

இந்திய சுற்றுச்சூழல் இயக்க வரலாற்றின் ஆரம்பப் புள்ளியாகக் கருதப்படும் நிகழ்வு ராஜஸ்தானில் நடைபெற்ற கிஜர்லி படுகொலை. உலகின் முதல் ’மரத்தைத் தழுவும்’ இயக்கமாகப் போற்றப்படும் இந்தச் சம்பவம், இந்திய இயற்கை வரலாற்றிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் நிகழ்வுகளிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது.

 1730ஆம் ஆண்டில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோத்பூர் மன்னர் அபய்சிங் தனது புதிய அரண்மனை கட்டுமானத் தேவைக்காக மரங்களை வெட்டி எடுத்துவர உத்தரவிட்டார். அந்தக் காலத்தில் மன்னரின் உத்தரவை எதிர்ப்பது உயிரைப் பணயம் வைக்கும் செயலாகக் கருதப்பட்டது. அபய்சிங்கின் படைவீரர்கள் கிஜர்லி கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த காட்டில் அதிகமாக வளர்ந்திருந்த கஜ்ஜரி (Prosopis cineraria) மரங்களை வெட்ட ஆணையிட்டனர்.

இந்தக் காடு பிஷ்ணோய் சமூகத்தினரின் கோயில் காடாக இருந்தது. பிஷ்ணோய் சமூகத்தினர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குரு ஜம்பேஷ்வரின் போதனைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள். இயற்கையோடு ஒத்துழைத்துப் பிழைக்க வேண்டும் என்பதையே அவர் அடிப்படைக் கொள்கையாக அறிவித்திருந்தார். பிஷ்ணோய் என்ற சொல் 29 என்று பொருள்படும். அதாவது சமூகத்தின் வாழ்வியல் அடிப்படைகளுக்காகக் குரு ஜம்பேஷ்வர் உருவாக்கிய 29 விதிகளை அது குறிக்கும்.

அவற்றில் சில முக்கியமான விதிகள்: மரங்களை வெட்டக்கூடாது, விலங்குகளை வேட்டையாடக்கூடாது, எரிபொருளுக்கோ அல்லது கட்டுமானத்திற்கோ உயிருடன் இருக்கும் மரங்களைப் பயன்படுத்தக்கூடாது, கஜ்ஜரி மரங்களைப் புனிதமாகக் கருத வேண்டும், இயற்கையை காப்பது கடவுளை வழிபடுவதற்குச் சமம், உள்ளிட்டவை. இத்தகைய கொள்கைகள் பிஷ்ணோய்களைச் சாதாரண கிராமப்புற மக்களில் இருந்து தனித்து அடையாளப்படுத்தின. இயற்கைப் பாதுகாப்பை அவர்கள் மதக் கடமையாகவே கருதினார்கள்.

 கிஜர்லி கிராமத்தில் வாழ்ந்த அம்ரிதா தேவி பிஷ்ணோய் என்கிற பெண்மணி அபய்சிங்கின் படை வீரர்களை எதிராக நின்றார். ’ஒரு மரம் வெட்டப்பட்டால், என் உயிரும் வெட்டப்படும்’ என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற வாக்கியத்தை அவர் கூறினார். பின்னர் ஒரு மரத்தைத் தழுவிக் கொண்டு அவர் உயிர் நீத்தார். அவரது மூன்று மகள்களான ஆஷு, ரத்னோ மற்றும் பக்கோ ஆகியோரும் தாயின் பாதையைப் பின்பற்றி மரங்களைத் தழுவி உயிர் நீத்தனர்.

அங்கிருந்த யாரையும் அபய்சிங்கின் படை வீரர்கள் விட்டுவைக்கவில்லை. மரங்களோடு சேர்த்து மனிதர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இந்த வீர மரணங்களைத் தொடர்ந்து, கிஜர்லி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் வந்து மரங்களைத் தழுவிக் கொண்டனர். அந்நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 363 நபர்கள் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் இயற்கையைப் பாதுகாக்க மக்கள் உயிரை அர்ப்பணித்த மிகப்பெரிய நிகழ்வாக இது இன்றளவும் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்த பல ஆதாரங்கள் உள்ளன. அந்தக் கால ஜோத்பூர் அரசு ஆவணங்களில் அபய்சிங்கின் உத்தரவு மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட எதிர்ப்புகள் குறித்த குறிப்புகள் உள்ளன. தலைமுறை தாண்டி வாய்மொழியாகக் கடத்தப்பட்ட இந்தச் சம்பவம் பின்னாளில் சமூக வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் வரலாற்றாய்வாளர்கள் ஜக்மோஹன் மகாராஜ் மற்றும் ராமசந்திர குஹா போன்றோர் இந்தச் சம்பவத்துக்கு இந்திய சுற்றுச்சூழல் இயக்க வரலாற்றில் முதன்மையான இடத்தை அளித்துள்ளனர். ஐநா சபையின் யுனெஸ்கோ அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எஃப்.ஏ.ஓ) பிஷ்ணோய் சமூகத்தை ’உலகின் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சமூகங்களில்’ ஒன்றாக அங்கீகரித்துள்ளன.

 கிஜர்லி படுகொலை ஒரு கிராம அளவிலான நிகழ்வாக இருந்தாலும் அதன் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எதிரொலித்தது. மரங்களும் மனிதர்களும் ஓருயிராகக் கருதப்பட்ட புதிய தத்துவத்தை இது உலகுக்கு எடுத்துக்காட்டியது. பிஷ்ணோய் சமூகத்தில் மரங்களையும் விலங்குகளையும் புனிதமாகக் கருதும் உணர்வு மேலும் வலுவடைந்தது. பின்னாளில் இந்தியாவில் நடைபெற்ற சிப்கோ இயக்கம் (1970, உத்தரகண்ட்) இந்தக் கிஜர்லி சம்பவத்தில் இருந்து ஆன்மீகத் தூண்டுதலைப் பெற்றது என்றே சொல்லலாம்.

இந்திய அரசு 2001ஆம் ஆண்டில் ’அம்ரிதா தேவி பிஷ்னோய் வனவிலங்கு பாதுகாப்பு விருதை’ நிறுவியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்குவோருக்கு இன்றும் இது வழங்கப்படுகிறது.

தனது ’சுற்றுச்சூழலியல்: ஓர் உலகளாவிய வரலாறு’ நூலில், ’கிஜர்லி படுகொலை என்பது இந்திய மட்டுமல்லாது உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கங்களின் தொடக்கம்’ என்று ராமசந்திர குஹா குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் வந்தனா ஷிவா இந்நிகழ்வை ’மனிதனும் மரமும் பிரிக்க முடியாத பிணைப்புடன் வாழ்வது எப்படிச் சாத்தியம் என்பதை காட்டிய உண்மைச் சான்று’ என்கிறார்.

 காலநிலை மாற்றம், காடுகள் அழிவு, உயிரினங்கள் அழிவு போன்ற பிரச்னைகளால் இன்றைய உலகம் போராடும் தருணத்தில், கிஜர்லி படுகொலைப் பாடங்கள் முன்பைவிட அதிகப்படியான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. பிஷ்ணோய் பெண்களின் தியாகம் ஒரு பிரதேசத்தின் வரலாறு மட்டுமல்ல; அது உலகின் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கான முன்னோடி மற்றும் முன்னுதாரணம் ஆகும்.

  1. சன்தால் கிளர்ச்சி (1855–56)

 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் நடந்த முக்கியமான பழங்குடியினர் போராட்டங்களில் ஒன்றாக சன்தால் கிளர்ச்சி விளங்குகிறது. இது இயற்கை வளங்களின் மீதான பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் சுரண்டலுக்கும், காடுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடியினரின் எதிர்ப்புக்கும் இடையே எழுந்த மிகப்பெரிய மோதலாகும்.

கடந்த 1855–56இல் இன்றைய ஜார்க்கண்ட் மற்றும் பீகார் பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கிளர்ச்சி, இந்திய சுற்றுச்சூழல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகளில், சந்தால்கள் மிகப்பெரிய சமூகமாகும். அவர்களுக்கான வாழ்வாதாரமும் வாழ்க்கை முறையும் காடுகளோடு பிணைந்திருந்தது.

தங்களது வீடுகளைக் காடுகளில் கிடைக்கும் மரக்கட்டைகள், மூங்கில், இலை தழைகளைக் கொண்டு அவர்கள் கட்டினர்; காடுகளில் கிடைக்கும் பழங்கள், வேர்கள், கிழங்குகள், விலங்குகள் ஆகியவற்றை உட்கொண்டனர். அவர்களின் ஆடைகளும் கருவிகளும் இயற்கை நார், மரத்தின் பட்டைகள், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றால் செய்யப்பட்டிருந்தன.

மேலும், அவர்களின் மத சடங்குகளும் வழிபாடுகளும், காடு மற்றும் இயற்கைத் தெய்வங்களை மையமாகக் கொண்டிருந்தன. சன்தால் சமூகத்திற்குக் காடு என்பது உயிர்மூலமாகும். ’நிலம் எங்களுடையது, காடு எங்களுடையது’ என்கிற கூற்று, அவர்கள் வாழ்வியலின் அடிப்படையான தத்துவமாக இருந்தது.

 இந்தியாவைக் கைப்பற்றிய பின்னர், இயற்கை வளங்களை அதிகளவில் காலனி அரசு சுரண்டத் தொடங்கியது. ஜார்கண்ட், பீகார் பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும், நிலக்கரியை எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டன. இந்த வேலைகளுக்காக மரமும் நிலமும் தேவைப்பட்டன. எனவே சுமார் 50,000 ஏக்கர் காடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அந்தக் கால புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சன்தால்களின் வாழ்வாதாரத்தை இந்நடவடிக்கை முற்றிலும் சிதைத்தது.

மேலும், சன்தால்களை நில வரி முறைக்குள் காலனி அரசு கொண்டு வந்தது. சன்தால்கள் பழங்குடியினராக இருப்பதால் அவர்கள் நிலத்தை ’அரச சொத்து’ என வகைப்படுத்தி, அதிகப்படியான வரி விதிக்கப்பட்டது. மேலும், மஹாஜன்ஸ் என்ற பெயரிலான உள்ளூர் வட்டிக்காரர்கள் சன்தால்களைக் கடனில் சிக்கவைத்து, அவர்களிடம் இருந்து நிலங்களைப் பறித்தனர்.

அத்துடன், சுரங்க வேலைகளிலும், ரயில்வே கட்டுமானங்களிலும் பிணைய வேலைக்காரர்களாக சந்தால்கள் தள்ளப்பட்டனர். இதனால் இயற்கை சார்ந்த அவர்களது சுதந்திரமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 இந்தச் சுரண்டலுக்கும் அநீதிக்கும் எதிராக, 1855ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 10,000 சன்தால்கள் ஆயுதம் ஏந்தினர். அவர்களின் தலைவர்களாக சித்து, கான்ஹு, சாந்து, பைரா ஆகிய நான்கு சகோதரர்கள் இருந்தனர். இந்தப் போராட்டம் ’ஹுல்’ (Revolution) என்று அழைக்கப்பட்டது. ’இந்த நிலம் எங்களுடையது, இந்த காடு எங்களுடையது’ என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வில், அம்பு, வாள், ஈட்டி போன்ற பாரம்பரிய ஆயுதங்களையே சந்தால்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் பிரிட்டிஷ் ராணுவத்தின் துப்பாக்கி, குதிரைப் படை போன்றவற்றை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. அப்படியும் இந்தப் போராட்டம் சுமார் ஆறு மாதங்களுக்கு நீடித்தது. ஜார்கண்ட், பீகார் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சந்தால்கள் கிளர்ச்சியை முன்னெடுத்தனர். ரயில்வே பாதைகளைச் சேதப்படுத்தினர், சுரங்கங்களைத் தாக்கினர்.

பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் டல்ஹௌசியால் ஆணையிடப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளால், வரலாற்று குறிப்புகளின்படி சுமார் 15,000 – 20,000 சன்தால்கள் கொல்லப்பட்டனர்.

 ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தன் அறிக்கையில், ’சன்தால்கள் காடுகளைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்யத் தயங்கவில்லை. அவர்கள் போராடியது பணத்திற்கோ அதிகாரத்திற்கோ அல்ல; அவர்களின் காடுகளுக்காகவே’ என்று குறிப்பிட்டுள்ளார். சன்தால்கள் போராட்டத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சத்தை இது வெளிப்படுத்துகிறது.

சன்தால் கிளர்ச்சி அடக்கப்பட்டாலும், அது காலனி அரசுக்கு மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 1856ஆம் ஆண்டில், ’சந்தால் பார்கானாஸ்’ என்கிற புதிய மாவட்டம் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. சன்தால்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமாக இருந்தது.

இந்தியாவில் இயற்கை வளங்களுக்காகப் பழங்குடியினர் உயிர் தியாகம் செய்யும் நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது. பின்னாளில் இந்திய தேசிய இயக்கத்துக்கும் சுற்றுச்சூழல் இயக்கத்துக்கும் சன்தால் கிளர்ச்சி ஓர் உதாரணமாக மாறியது.

சன்தால் கிளர்ச்சியை ’காலனிய நவீனத்துவத்திற்கு எதிரான முதல் விவசாய – காடு சார்ந்த கிளர்ச்சி’ என்று பழங்குடியினர் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ராமசந்திர குஹா குறிப்பிட்டுள்ளார். டேவிட் ஹார்டிமன் தனது நூலில், ’சன்தால் ஹுல், காடுகளை வணிகப் பொருளாக அல்லாமல், உயிராகவே பழங்குடியினர் மதித்ததை வெளிப்படுத்தியது’ என்று கூறியுள்ளார். இந்திய வரலாற்றாசிரியர் கே.எஸ். சிங், சன்தால் கிளர்ச்சியை ’சுற்றுச்சூழல் உரிமைக்கான பழங்குடியினரின் உரிமை வலியுறுத்தல்’ என்று விளக்குகிறார். 

இன்றும் ஜார்க்கண்ட் பகுதியில் சன்தால்கள் ’ஹுல் திவாஸ்’ என்ற பெயரில் இந்தக் கிளர்ச்சியை நினைவுகூர்கின்றனர். இயற்கையைக் காக்கும் போராட்டங்கள் எவ்வளவு பழமையானவை என்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவின் அடித்தளத்தில் எத்தனை ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதற்கும் இது ஆகச்சிறந்த சான்றாகும்.

  1. வனவாசிகள் எதிர்ப்பு இயக்கம் (Forest Satyagraha, 1870 – 1890)

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக 1865 மற்றும் 1878ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட இந்திய வனச் சட்டங்கள், மக்களுக்குக் காடுகளில் இருந்த பாரம்பரிய உரிமைகளை முற்றிலுமாகப் பறித்தன.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் காலங்காலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் காடுகளில் தங்களுடைய மாடுகளை மேய்த்தும், பழங்கள் – மூலிகைகள் போன்றவற்றைச் சேகரித்தும் வந்தனர். ஆனால் காலனி அரசு அந்தக் காடுகளை காப்புக் காடுகள் அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகள் என வகைப்படுத்தி, மக்கள் நுழைவைக் கட்டுப்படுத்தியது. இதனால் தங்கள் வாழ்வியலின் அடிப்படை அங்கமான காடுகளை அவர்கள் இழக்க நேர்ந்தது.

இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மக்கள் அமைதியான முறையில் வன நுழைவு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக சோன்பத்ரா பகுதியில் 10,000-க்கும் மேற்பட்டோர் வனத்துறைக்கு எதிராகக் காடுகளில் நுழைந்து தங்களுடைய உரிமைகளை அளிக்குமாறு அரசிடம் வலியுறுத்தினர். ’இந்தக் காடு எங்கள் வாழ்க்கை, இதை இழந்தால் நாங்கள் உயிரோடு இருப்பதற்கே அர்த்தமில்லை’ என்று ஒருமித்த குரலில் தங்களின் எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்தினர்.

ஒரு பிரிட்டிஷ் வனத்துறை அதிகாரி தனது 1880ஆம் ஆண்டு வன அறிக்கையில், ’மக்கள் வனச் சட்டத்தைக் கடைபிடிப்பதற்குப் பதிலாக, வனங்களுக்குத் தீ வைத்து எரிக்கின்றனர்’ என்று வருந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டம் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சட்டத்தை மக்கள் மீறியிருந்தாலும், தங்கள் பாரம்பரிய உரிமைகளை கைவிட அவர்கள் தயாராகவில்லை என்பதே இந்த நிகழ்வு வெளிப்படும் முக்கிய கருத்து.

1870 முதல் 1890-கள் வரை நடைபெற்ற வனவாசிகள் எதிர்ப்பு இயக்கம் இந்திய சுற்றுச்சூழல் வரலாற்றில் மக்களின் ’வன உரிமை’ குறித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய நிகழ்வாகும்.

  1. அஸ்ஸாம் தேயிலைத் தோட்ட எதிர்ப்பு (1860–1890)

அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்களை நிறுவுவதற்காக சுமார் 2,50,000 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் வசித்த பழங்குடியினர், தங்கள் கோவில் காடுகள் வெட்டப்படுவதை எதிர்த்து வந்தனர். 1861ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அரசின் தொழிலாளர்களை மரங்களை வெட்ட விடாமல் தடுப்பதில் சில பெண்கள் முனைப்பு காட்டினர்; அவர்களின் முயற்சியையும், அதனால் ஏற்பட்ட தாக்கத்தையும் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் பதிவு செய்துள்ளன.

பின்னர் 1894 ஆம் ஆண்டில், ’தேயிலைத் தோட்ட கலகம்’ (Tea Garden Riot) நடைபெற்றது, இதில் சுமார் 3,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுகள் அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் அமைத்ததால் ஏற்பட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் எதிர்ப்புகளின் பிரதானக் குறியீடுகள் ஆகும்.

  1. பைங்காரி பழங்குடியினர் போராட்டம் (1880–1910)

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த பைங்காரி பழங்குடியினர், காடுகளை தங்களது ’தாயகம்’ எனக் கருதி பாதுகாத்தனர். 1880 முதல் 1910 வரை 20-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கிளர்ச்சிகளை முன்னெடுத்தனர். ஒரு முறை, காடுகளை வெட்ட வந்த ஒப்பந்ததாரரை அவர்கள் தடுத்து, ’எங்கள் மரத்தை வெட்டுவீர்கள் என்றால் முதலில் எங்கள் உயிரை வெட்ட வேண்டும்’ என்றனர். இதன் பதிவு மத்திய பிரதேச வன அறிக்கையில் (1910) இடம்பெற்றுள்ளது.

ரயில்வே பாதைகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்காகச் சுமார் 1,00,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடு அழிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் உரிமை மற்றும் வாழ்வியலுக்கான பைங்காரி பழங்குடிகள் காண்பித்த வீரத்தையும், காடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுரண்டலையும் வெளிப்படுத்துகின்றன.

  1. குமாயூன் காடு சத்யாகிரகம் (1920–30)

1920-களில் உத்தரகண்ட் பகுதி மக்கள் காட்டு உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வெகுண்டெழுந்தனர். ’வன உரிமை எங்களுடையது’ என்ற கோஷத்துடன் 10,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1921ஆம் ஆண்டில் மட்டுமே குமாயூன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காடுகள் எரிக்கப்பட்டதாக சி.எஸ். எலியட் தன்னுடைய அறிக்கையில் (Report on Forest Administration in United Provinces – 1925) குறிப்பிட்டுள்ளார்.

’இங்கு மக்கள் காடுகளை எரிப்பது இயற்கையை அழிக்க அல்ல, அவர்களின் உரிமையை மீட்டெடுக்க’ என்று ஒரு அந்நிய பத்திரிகையாளர் அப்போது குறிப்பிட்டார்.  பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள், காடுகளை வாழ்வாதாரமாகக் கருதி தங்களது உயிரை ஆபத்துக்குள்ளாக்கவும் தயங்கவில்லை; அவர்களின் போராட்டங்கள் இந்திய சுற்றுச்சூழல் வரலாற்றில் சமூக – பாரம்பரிய உரிமைகளைக் காப்பதற்கான முக்கிய தடமாகவும், முன்னோடியான சத்தியாகிரகமாகவும் மதிப்பிடப்படுகின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *