Skip to content
Home » அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்

அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்

அயோத்திதாசரின் தீவிர முயற்சியின் காரணமாக உருவக்கப்பட்ட திராவிட மகாஜன சபை, ஒதுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர அரும்பாடுபட்டது. பன்னெடுங்காலமாக இன்னல்களைச் சந்தித்து வந்த அம்மக்கள், பண்டிதரின் சீரிய நடவடிக்கைகளின் விளைவாக, சிறிது சிறிதாக முன்னேற்றம் அடையத் தொடங்கினார்கள். பண்டிதரைத் தொடர்ந்து பல தலைவர்கள் சபைகளைத் தொடங்கி, ஒதுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகக் குரலெழுப்பி வந்தார்கள்.

இதற்கிடையே, திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பரவி, அப்பகுதியின் அடித்தட்டு மக்களிடையே அந்த அமைப்பு செல்வாக்குப் பெற்றிருந்தது. அமைப்பின் பெயரில் ’திராவிடர்’ என்கிற சொல்லைப் பண்டிதர் பயன்படுத்தக் காரணம் என்னவென்றால், அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், திராவிடர் என்கிற பெயரைவிட தங்களது சாதியப் பெயருக்கே பிற சமூகத்தினர் அதிக முக்கியத்துவம் அளித்து, அதைப் பெருமையாகக் கருதினார்கள். இதனாலேயே ஒதுக்கப்பட்ட மக்களை அடையாளம் காணப் பண்டிதர் இப்பெயரைப் பயன்படுத்தினார்.

திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு 1891ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று நீலகிரியில் நடைபெற்றது. சபையின் தலைவர் அயோத்திதாசர் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக நடைபெற்ற முதல் மாநாடு இதுவாகும். இம்மாநாட்டில் விரிவான ஆய்வுகள் நடந்தேறின. மாநாட்டின் முடிவில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை, அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அன்றைய அரசியல் சூழலில், காங்கிரஸ் இயக்கம் மட்டுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தது. இதன் காரணமாக, தீர்மானங்களின் வடிவில் அவர்களிடம் அளிக்கப்படும் இந்தக் கோரிக்கைகளை அவர்கள் ஆங்கில அரசிடம் தெரிவித்துப் போதிய உரிமைகளைப் பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கோரிக்கைகள் பின்வருமாறு:

1. ஒடுக்கப்பட்ட வகுப்பினரைப் பறையன் என அழைத்தாலோ, குறிப்பிட்டாலோ, ஏளனப்படுத்தினாலோ, அவ்வாறு செய்வோரைத் தண்டிப்பதற்குக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

2. ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற வேண்டுமானால், அவர்களுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும். அக்கடமையை அரசே முழுமையாக ஏற்று அவர்களுக்கென தனிப்பள்ளிகளை அமைத்து தனியாக ஆசிரியர்களையும் பணியமர்த்தவேண்டும்; மாணவர்களிடம் இருந்து அரைக் கல்விக் கட்டணமே பெறப்படவேண்டும்.

3. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரில் ஆண்டுதோறும் மூவரைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு உதவித்தொகை அளித்து பட்டப்படிப்புக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

4. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அரசுப் பணிகள் அளிக்கப்படவேண்டும்.

5. ஒடுக்கப்பட்டோரின் கல்வித்தகுதி, நடத்தை, உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு எந்தவிதமான தடைகளும் இருக்கக்கூடாது. நன்கு கல்வி கற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தடையில்லாமல் பணி நியமனம் செய்யப்பட்டவேண்டும்.

6. ஒடுக்கப்பட்டோரின் வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்களின் குறைபாடுகள் பற்றிய விவரங்களை அரசுக்கு அறிவிப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் பிரதிநிதிகளைப் பணியமர்த்தவேண்டும். பொதுவாக அரசுக்கு வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறே, அரசுக்கு வரி செலுத்தும் ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

7. சிறைச்சாலை சட்ட விதிமுறைகள் 1ஆம் பிரிவு, விதி 646-ன் கீழ் சிறைக் கைதியாக உள்ள பறையர்களை மற்ற சிறையாளிகளின் மலத்தை எடுக்கும்படி கூறுவதை மாற்றவேண்டும். இது மனிதத் தன்மையற்ற செயல்பாடு.

8. பொதுக்குளங்கள், கிணறுகள் ஆகியவற்றிலிருந்து குடி தண்ணீர் எடுக்கும் உரிமை ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இத்தடையை அரசு அகற்ற வேண்டும். பொதுவெளிகளில் சுதந்திரமாக மற்ற இனத்தவரைப்போல் நடமாட அனுமதிக்கவேண்டும்.

9. இந்துக்கள் பணியாற்றும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் வளாகத்திற்குள் செல்லவும், அங்கு அமரவும் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை மறுக்கப்படுகிறது. இத்தடைகளை நீக்கி, அவர்களும் பிற சாதியினரைப்போல் உள்ளே செல்லவும் உட்காரவும் உரிமை வழங்கப்படவேண்டும்

10. ஒடுக்கப்பட்ட வகுப்பினரில் படித்த, நல்ல நடத்தை உள்ள நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அதிகாரிகளாகவும் கிராம முன்சீப்புகளாகவும் பணியமர்த்த வேண்டும். அரசு நிர்வாகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துதல் வேண்டும்.

இத்தீர்மானங்கள் அனைத்தையும் கடிதத்தின் வாயிலாகப் பிரிட்டிஷ் அரசுக்கும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வீரராகவாச்சாரிக்கும், முஸ்லீம் லீக்குக்கும் 21.12.1892 அன்று அயோத்திதாசர் அனுப்பி வைத்தார். ஆனால் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் கடிதத்தை மட்டுமே அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இத்தீர்மானங்கள் தொடர்பாக மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பண்டிதரின் பின்னாளைய குறிப்பின் மூலமாக அறிய முடிகிறது.

இதன் பிறகு 1892ஆம் ஆண்டில் மெட்ராஸ் மகாஜன சபையின் மாநாட்டில் ஒரு பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார். மெட்ராஸ் நகரின் விக்டோரியா அரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் முன்பு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் அளிக்கப்படவேண்டும் என்கிற வேண்டுகோளும் இணைக்கப்பட்டது. இதன் மூலம் கல்வி, வேலை மற்றும் நிலம் என ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மூன்று அடிப்படைத் தேவைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர் தீர்வு காண முற்பட்டார்.

திராவிட மகாஜன சபை மூலமாகத் தொடர்ந்து பல பணிகளைப் பண்டிதர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 1893-1894களில் அன்றைய தலைமைப் பதிவாளர் (ரெஜிஸ்டிரர் ஜெனரல்) சீனிவாச இராகவ ஐயங்கார், அரசாங்கத்திற்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பினார். அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த பரிந்துரையை வழங்கியிருந்த ஐயங்கார், ’தாழ்த்தப்பட்டோர் உண்மையில் நலன்பெற்று உயரவேண்டும் என்றால் அவர்கள் கிறித்துவ மதத்திற்கோ அல்லது இசுலாமிய மதத்திற்கோ மாறிவிடவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பரிந்துரை விவகாரம் குறித்து அறிந்ததும், அயோத்திதாசர் அந்த அறிக்கைக்கு வலுவான கண்டனத்தைப் பதிவு செய்தார். அத்துடன் சீனிவாச ஐயங்காருக்கு ’An argument against Conversion’ என்கிற தலைப்பின் கீழ் விரிவானதொரு கடிதத்தை எழுதி அனுப்பினார். ஐயங்காரின் மத மாற்றக் கருத்துக்கு எதிரான விரிவான விளக்கத்தைப் பண்டிதர் அதில் அளித்திருந்தார்.

‘உண்மையில் பறையர்கள் மதம் மாறினால்தான் உயர்வு பெற முடியும் என்றால், கிறித்துவ தேவாலயங்களில் இன்று பறையர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதும்; இசுலாமிய மதத்தில் அவர்கள் கல்வி மற்றும் இதர சூழல்களில் பின்தங்கி இருப்பதும் ஐயர் அறியார் போலும். இவ்வாறு பறையர்கள் முன்னேற்றம் அடைய மதம் மாற்றம் என்பது அறிவுக்கு ஒவ்வாது என்கிறது கண்கூடு’ என்று பண்டிதர் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, கிறித்துவர்கள் மதமாற்றம் செய்வதை 1870ஆம் ஆண்டிலேயே அத்வைதானந்த சபை மூலமாக அயோத்திதாசர் கண்டித்து வந்தார். 1890ஆம் ஆண்டுக்குப் பின் ’துக்க நிவாரணம்’ என்னும் பௌத்த மார்க்கத்தின் பாதையில் பண்டிதர் செயல்பட்டார். உலகம் முழுவதும் சாதிப் பாகுபாடின்றி மக்கள் செயல்படும் நிலையில், இந்திய நாகரிகத்தில் மட்டும் பல்வேறு சாதிகள் இருப்பதைக் கண்டு அவர் மனம் வருந்தினார். இதற்குப் பின்னரே, ஆதிக்குடிகள் பின்பற்றிய ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கோட்பாட்டைப் பௌத்த மார்க்கத்தின் மூலம் நிலைநிறுத்தவேண்டும் என்கிற முனைப்புடன் பண்டிதர் செயல்படத் தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *