Skip to content
Home » அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றி நன்கு செழித்திருந்ததாக அயோத்திதாசர் கூறுகிறார். அசோகரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை மூலமாக இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இவருடைய முயற்சியின் வாயிலாகப் பௌத்தம் தமிழகத்தில் செழிப்புற்று வளர்ந்தது என்பதைச் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை மூலமாக அயோத்திதாசர் உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் பரவிய பௌத்த மதம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக வைதீக சமயங்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது வரலாற்றின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் விளைவாகவே, தமிழகத்தில் மீண்டும் சைவம் மற்றும் வைணவம் முதலான வைதீக சமயங்கள் தலையெடுக்கத் தொடங்கின. அதுவரையிலும் தமிழர்கள் சமணம் மற்றும் பௌத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றினார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள ஆரம்பகாலக் கல்வெட்டுகள் அனைத்தும் பிராமி எழுத்து முறையில் அமைந்தவை. இந்தப் பிராமி எழுத்து முறை பௌத்த சமயத்திலிருந்து வந்ததாகக் கூறுவதுண்டு. வெகுஜன மக்களிடையே புத்தரின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் விகாரங்களை அமைத்து, அவற்றின் மூலமாகக் கல்வி மற்றும் சமயப் பணிகளைப் பௌத்தர்கள் செயல்படுத்தி வந்தார்கள் என்பது வரலாறு வெளிப்படுத்தும் உண்மையாகும். புத்தரின் போதனைகளை நாடு முழுவதும் ஸ்தூபிகளாக நிறுவினார் அசோகர். இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி, மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது.

புத்தரின் மறைவுக்குப் பிறகு, கொள்கை அடிப்படையில் பௌத்த மதத்தில் ஏற்பட்ட பிரிவுகள், மக்கள் மத்தியில் பௌத்தம் செல்வாக்கை இழக்கக் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கையில் பின்பற்றப்படும் ‘தேரவாத பௌத்த முறைமை’யைப் பண்டிதர் ஏற்றுக்கொண்டாலும், தனித்த பௌத்தக் கொள்கைகளை அவர் பின்பற்றினார். அக்கொள்கைகளை அவர் தமிழ் இலக்கியங்களிலிருந்து பெற்றுக்கொண்டார்.

இதையே, ‘அயோத்திதாசரின் பௌத்தம் தனித்தன்மை மிக்கது. இலங்கை சென்று பௌத்தத்தைத் தழுவி நாடு திரும்பிய பண்டிதர், ஈழ பெளத்த சாயலைப் பின்பற்றாமல் முற்றிலும் புதிய வழியைத் தேர்வு செய்தார். தமிழ் மரபிலிருந்து பௌத்த விளக்கங்களை வழங்கிய அயோத்திதாசர், சமயம் என்பதற்குத் தேவையான கதையாடல்களை மறுகண்டுபிடிப்புச் செய்தார்’ என்கிற ஸ்டாலின் ராஜாங்கத்தின் கூற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மீளுருவாக்கம் செய்யவேண்டும் என அயோத்திதாசர் நினைத்தது, வள்ளுவர் வகுத்துக் கூறிய ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கருத்துக்கு இணங்கும் உயர்வு தாழ்வற்ற பண்டைய பௌத்த சமூகத்தையே ஆகும். தமிழகத்தில் சங்க இலக்கியக் காலம் தொடங்கி அற நூல்கள் தோன்றிய சங்கம் மருவிய காலம் வரையிலும், இலக்கியங்கள் மற்றும் வாழ்வியல் முறையில் கலந்து நின்ற பௌத்தம், மக்களால் சீரிய முறையில் பின்பற்றப்பட்டது என்பதை அக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக அயோத்திதாசர் கூறுகிறார்.

குறிப்பாக, மணிமேகலையில் இடம்பெற்றிருந்த பௌத்த துறவு அறவண அடிகள் வாயிலாகப் பௌத்த கோட்பாடுகள் தமிழகத்தில் பரவியதை பண்டிதர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், சங்க காலத்தில் பௌத்த சமயத்தைப் பின்பற்றிய புலவரால் இயற்றப்பட்ட பாக்களை மேற்கோள்காட்டி, பௌத்தர்கள் கல்வி கற்றுச் சிறப்புடன் சமுதாயத் தொண்டு ஆற்றியதாக அவர் விளக்குகிறார்.

முற்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அரச மதமாகக் கோலோச்சி வந்த பௌத்தம், புத்தரின் பரிபூரண நிர்வாணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கொள்கை மாற்றங்களால் வீழ்ச்சி கண்டது. பௌத்தம் மற்றும் சமண சமயத்துக்கு இடையே ஏற்பட்ட கொள்கை வாதங்களில் சமணம் வென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் பௌத்தக் கொள்கைகளையும் புத்தரின் போதனைகளையும் வெகுஜன மக்கள் பின்பற்றுவதை வைதீக சமயத்தவரால் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், வேஷ பிராமணர்கள் என்று அழைக்கப்படுவோர் தங்களது நிலையை மீண்டும் உயர்த்தவும் வீழச்சியுற்ற தங்களது அதிகாரத்தை மீட்கவும், அரசர்களையும் மக்களையும் வஞ்சிக்கத் தொடங்கியதாக அயோத்திதாசர் கூறுகிறார். இதற்காக, பௌத்தம் மற்றும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் அவற்றைப் பின்பற்றுதல் வாழ்வில் எந்த நற்பலன்களையும் தராது என்றும் பௌத்தத்திற்கு எதிராகப் பிராமணர்கள் பிரசங்கம் செய்தனர். வேஷ பிராமணர்களின் வார்த்தைகளில் மயங்கிய அரசர்களும் மக்களும் சிறிது சிறிதாக சூழ்ச்சி வலையில் சிக்குண்டார்கள். இதனையடுத்து பூர்வீக பௌத்தர்களை இழிகுலத்தோர் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் மக்களிடையே கருத்துருவாக்கம் பரப்பப்பட்டது. இவ்வாறு பௌத்தத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் வேஷ பிராமணர்களின் சூழ்ச்சியாலும் நமது மக்கள் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்கிற வருணாசிரமக் கோட்பாட்டிற்குள் நுழைந்தார்கள். இவ்வாறே பௌத்தர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது.

‘சகோதரத்துவத்தைத் தடுப்பது பிராமணரால் கொண்டு வரப்பட்ட வைதீக மதம்; மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாட்டை அது உருவாக்கியது; கற்சிலைகளைக் கொண்டு பூசித்து, உணராத ஒன்றைத் தெய்வமாக அது உருவகித்தது; அதைக் கொண்டு வேஷ பிராமணர்கள் வியாபாரம் செய்து மக்களை முட்டாள்களாக்கினார்கள்’ என்றெல்லாம் அயோத்திதாசர் வெகுவாகச் சாடினார். மேலும், ‘இந்துக்களைக் கொண்டே கோயில்களை எழுப்பி, அவர்களது கைகளாலேயே இறைவனின் உருவங்களைச் செய்து, அவர்களுடைய தயவில் வாழும் வேஷ பிராமணர்கள், அவர்களைக் கோயிலுக்குள் நுழையவேண்டாம் என்று கூறுவது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமற்றுக் காணப்படும் செயல்’, என்பதையும் பண்டிதர் கண்டிப்புடன் விளக்குகிறார்.

’வேஷ பிராமணர்களால்தான் இந்தியாவின் சிந்தனைகள் இன்னும் முற்போக்குத் தன்மையை அடையாது முடங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் பகுத்தறிவு கூறும் பௌத்தத்தை விடுத்துப் பொய்களைக் கூறும் வைதீக மார்க்கத்தைப் பின்பற்றியதுதான்’ எனவும் அயோத்திதாசர் சாடுகிறார்.

தாங்களே கடவுள்களின் உலகுக்குச் செல்லும் மார்க்கமாக இருப்பதாகப் பிராமணர்கள் பன்னெடுங்காலமாக இந்தியாவின் சமயக் கருத்துகளில் பதியச் செய்துள்ளார்கள். மனிதம் வளர்க்கும் பௌத்தக் கோட்பாடுகள் இவர்களது பொய்யுரைகளால் மக்களிடையே மங்கியது. மேலும், பௌத்தத்தைப் பின்பற்றியவர்களுக்குத் தாழ்ந்தவர்கள் என்கிற தோற்றத்தை இவர்கள் அளித்ததால், அவர்களது கருத்துகள் வெளிவராது போயிற்று.

இத்தகைய சூழலில் தமிழர்களின் இலக்கியங்களிலிருந்து, அவர்கள் பின்பற்றிய தமிழ்ப் பௌத்தக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் அயோத்திதாசர் வெளிக்கொண்டு வந்தார். குடிமக்களையே காப்பியத் தலைவர்களாகக் கொண்டு உலகுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிலப்பதிகாரம் மற்றும் அதன் இணைக் காப்பியமான மணிமேகலை ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த பௌத்தக் கருத்துகளைச் சுட்டிக்காட்டினார். மணிமேகலை, பௌத்தம் சார்ந்த இலக்கியமாகும். அதன்மூலமாக, வைதீக மார்க்கம் கூறும் பிரிவினைகளையும் பௌத்தம் கூறும் சமதர்மக் கோட்பாட்டையும் பண்டிதர் விளக்கினார்.

இளம்போதியார், சீத்தலை சாத்தனார், சோழநாட்டில் மகாயாண பௌத்தராக வாழ்ந்த சங்கமித்திரர், புத்ததத்த மகாதேரர், புத்தமித்திரர், சீன தேசம் சென்று பௌத்தம் போதித்த போதிதருமர், திக்நாதர், தருமபாலர், சாரிபுத்திரர், வச்சிரபோதி, பெருந்தேவனார் முதலிய தமிழ்ச் சான்றோர் இயற்றிய நூல்களின் வாயிலாக பௌத்த மதத்தின் வரலாற்றையும் அறங்களையும் அயோத்திதாசர் உள்வாங்கினார். மேலும், அவை கூறும் உண்மை விளக்கங்களை மக்களிடையே பரப்புவதற்கும் இன்று தாழ்ந்தவர் என்று கூறப்படும் ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது பூர்வீக சமயமான பௌத்தத்தை வந்தடைவதற்கும், ‘தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்’ என்கிற அமைப்பை அவர் நிறுவினார். இதன்மூலமாகத் தனது பௌத்தக் கோட்பாடுகளையும் தமிழர் மறந்த தமிழ்ப் பௌத்த வாழ்வியலையும் மீண்டும் நடைமுறைப்படுத்தப் பண்டிதர் முயன்றார்.

’தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கமானது’ மெட்ராஸின் ராயபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, தென்னிந்தியாவின் பல இடங்களிலும் கிளைகளைப் பரப்பி, சீரிய முறையில் பணிகளை மேற்கொண்டது. இச்சங்கத்தின் நோக்கம் என்பது, ‘நூதனமாகத் தோன்றியுள்ள பல மதங்களைத் தாவித் தாவிப் பிடித்து, சம்பாதிக்கும் பொருளைப் பொய் குருக்களுக்கு அளித்து பஞ்சபாதகத்துக்கு உள்ளாவதுடன், நூதன சாதி பேதங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ள சத்துருக்களாலும் நிலைகுலைந்து பாழ்பட்டு வருகின்றபடியால், இவர்களது பூர்வ சரித்திரங்களையும் நீதி நெறி ஒழுக்கங்களையும் நன்கு விளக்கித் தெளிவு பெறச்செய்து, அங்கங்கு சங்கங்கள் நிலைபெற்றவுடன் கல்விச் சாலைகளையும், கைத்தொழிற்சாலைகளையும், விவசாய சாலைகளையும், வியாபார சாலைகளையும் ஏற்படுத்தி சகல விருத்தியிலும் முன்னேறச் செய்வதுடன், விவேக விருத்தி பெற்றோர் சங்கத்துச் சமண முனிவர்களிடம் பொன்னாடைப் பெற்றுக் கரபோலேந்தி இராகத்துவேஷ மோகங்களை அகற்றி, அன்பு, ஈகை, சாந்தத்தைப் பெருக்கி, என்றும் அழியா நித்தியானந்த நிலையாம் நிர்வாணத்தைப் பெறுவதற்கேயாம்’ என்று அயோத்திதாசர் அறிவித்தார்.

இந்தச் சாக்கிய பௌத்தச் சங்கத்தின் கிளைகள் சென்னை மட்டுமல்லாது கோலார் தங்க வயல் பகுதியான மாரிக்குப்பம், பெங்களூரு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூர், செகந்திராபாத், பர்மா, ரங்கூன், தென்னாப்பிரிக்காவின் நெடால், டர்பன் ஆகிய பகுதிகளிலும் தொடங்கப்பட்டன. மக்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட அவர்களைப் பிரித்து வைக்கும் வருணாசிரமக் கொள்கைகளை நீக்கவேண்டும் என்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

மேலும், மக்களிடையே பஞ்ச சீல ஒழுக்க முறைகளைப் பரப்புதல் மற்றும் பிரசங்கங்கள் மூலம் புத்தரின் வரலாறு மற்றும் அவரது போதனைகளை எடுத்துரைத்தல், புத்தரின் அவதார நாளான வைகாசி பௌர்ணமி தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடுதல், இதழ்கள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் பூர்வ பௌத்த முறைகளை மக்களிடையே வேரூன்றச் செய்தல் உள்ளிட்ட சீரிய நோக்கங்களுடன் அயோத்திதாசரால் உருவாக்கப்பட்ட சாக்கிய பௌத்த சங்கம் செயலாற்றியது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *