19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சியும் புரட்சியும் சமுதாயத்தில் பரவி மக்களை நெறிப்படுத்துவதற்கு அன்றைய நாளில் மிகப்பெரிய ஆயுதமாக இதழ்களே விளங்கின. இதழ்களை நடத்தியவர்கள் பெரும்பாலும் சமுதாய மாற்றத்தை விரும்பியவர்கள், முற்போக்குவாதிகள். மக்களிடையே தங்களது கருத்துகளை வேரூன்றச் செய்திடவும் மாற்றங்களை ஏற்படுத்திடவும் மிகுந்த பயனுள்ள ஊடகமாக இவர்களுக்கு இவ்விதழ்கள் விளங்கின.
அன்றைய காலக்கட்டத்தில் அச்சு இயந்திரங்களை வைத்திருந்தவர்களே பெரும்பாலும் இதழ்களை நடத்தி வந்தார்கள். ஆனால், அச்சு இயந்திரம் வாங்குமளவிற்கான பொருளாதார நிலை அயோத்திதாசரிடம் அப்போது இல்லை. 1894ஆம் ஆண்டிற்குப் பிறகு அயோத்திதாசர் சென்னையில் குடியேறியதன் விளைவாக அவருடைய அறிவுசார் தொடர்பு வட்டாரங்கள் மேலும் வளர்ச்சியடைந்து, வலுப்பெற்றன. இதனால் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கென ஒரு தனி இதழைத் தொடங்கும் செயல் அவருக்கு அவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தவில்லை. சென்னை சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த ஆதிமூலம் பிள்ளை என்பவர், தாம் நடத்தி வந்த ‘புத்திஸ்ட் அச்சு இயந்திர சாலையை’ பண்டிதரின் இதழ் பணிக்குக் கொடுத்து உதவினார். அந்த அச்சுக் கூடத்தில் இருந்தே அவரது ‘ஒரு பைசா தமிழன்’ இதழ் வெளிவரத் தொடங்கியது.
ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் இதழ் மூலமாக முன்பு பண்டிதருக்குக் கிடைத்த இதழியல் அனுபவங்கள் அனைத்தும், ஒரு பைசா தமிழன் இதழை வெற்றிகரமாக நடத்த அவருக்கு உதவியாக இருந்தன. அயோத்திதாசரின் தீவிர முயற்சியால் 1907 ஜூன் 19 அன்று ‘ஒரு பைசா தமிழன்’ வார இதழாக வெளியிடப்பட்டது. டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான இவ்விதழ் காலணா விலைக்கு விற்கப்பட்டது. ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசா தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்திதாச பண்டிதர்.
இந்த ஒரு பைசா தமிழன் இதழின் சிறப்பை அன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்த மேப்ளோட், ஸ்டாண்டர்ட், இந்து, இந்தியன் முதலான ஆங்கில இதழ்களும், சுதேசமித்திரன், பூலோக வியாசதூதன், விகடன் நல்லிந்தியா, தமிழ் மாது போன்ற தமிழ் இதழ்களும் புகழ்ந்து எழுதி வாழ்த்து தெரிவித்தன.
தொடர்ந்து ஓராண்டு காலம் வெளிவந்த ஒரு பைசா தமிழன் இதழ், ஒரு கட்டத்தில் அச்சடிப்பதில் ஏற்பட்ட சில இடையூறுகளால், வெளிவருவதில் சிரமத்தை எதிர்கொண்டது. அப்போது, தமது பௌத்தச் சங்கத்தின் கிளை மடங்களிடமும் அபிமானிகளிடமும் இது குறித்து அயோத்திதாசர் உரையாடினார். ஏற்கெனவே பௌத்தம் சார்ந்த செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய கோலார் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் பண்டிதருக்கென சொந்தமாக ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கி தந்தனர். இதன் விளைவாக இதழ் பணி தங்குதடையின்றி நடைபெறத் தொடங்கியது. புதிதாக வாங்கப்பட்ட அச்சு இயந்திரத்தைக் கொண்டு, ‘கௌதம பிரஸ்’ என்கிற ஓர் அச்சுக் கூடத்தைப் பண்டிதர் நிறுவினார். இந்த அச்சுக் கூடத்திலிருந்து ஒரு பைசா தமிழன் இதழ் தொடர்ந்து வெளியான நிலையில், 1908ஆம் ஆண்டில் இதழின் பெயரை ‘தமிழன்’ என்று அயோத்திதாசர் மாற்றம் செய்தார்.
தமிழன் இதழ் சென்னைப் பகுதி தவிர்த்து, சாக்கிய பௌத்த சங்கங்கள் இருந்த பல இடங்களிலும், அதாவது பர்மா, இலங்கை, மலேயா முதலான நாடுகளிலும் வாசிக்கப்பட்டது. பண்டிதரின் எழுத்துப் புரட்சிக்கான வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதழின் புகழ் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்தது. தமிழன் இதழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்த பிற சமூக மக்களாலும், சமத்துவ விரும்பிகளாலும் பெரிதும் விரும்பி படிக்கப்பட்டது. அவர்களில் பலர் இதழின் சந்தாதாரர்களாகவும் இருந்தனர்.
அதேநேரம் தமிழன் இதழால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை விரும்பாத பலதரப்பட்ட பிரிவினைவாதிகள் அதன்மீது தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் கட்டவிழ்த்து விட்டனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ‘அந்தோ! நாம் சுதேசிகளைத் தூற்றுவதற்கும் பரதேசிகளைப் போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகல மக்களின் சுகங்களைக் கருதி தங்களது நீதியைச் செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும், ஏற்றியும் கொண்டாடுவோம். இதுவே எமது சத்திய தன்மமாகும்.
‘அங்ஙனமின்றி சுதேசி சுதேசியென தம்பட்டம் அடித்துக்கொண்டு சுயப் பிரயோசினங் கருதோம். அதாவது தற்காலம் சென்னையில் நிறைவேறிவரும் கோவில் வழக்குகளில் வாதிகளும் சுதேசிகளாயிருக்கின்றார்கள். பிரதிவாதிகளும் சுதேசிகளாய் இருக்கின்றார்கள். வாதிகளும் லாயர்களும் சுதேசிகளாயிருக்கின்றார்கள். பிரதிவாதிகளும் லாயர்களும் சுதேசிகளாயிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுதேசக் கோவில் சொத்தை அழியாவிடாது சீர்திருத்தக் கூடாதோ அல்லது ஒருவர் முதன்மெயாயிருந்து நியாயவாயலனத் தீர்ப்பளிக்கலாகாதோ?
‘சுதேசமென்றாலென்னை சுதேசிகளென்றால் யாவர், சுதேசக் கிருத்தியென்றால் யாது? சுதேசி பலங்களென்றால் யாவாயென்று உணராதோர் யாவரும் தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காக பேசுகிறதில்லை என்பது வீண் வாக்கியங்களேயாகும்.
‘பல அரசர்களிடம் சண்டையிட்டு உதரங்களைச் சிந்தி கைப்பற்றி ஆண்டு வருகிறவர்களுக்கு இத்தேசம் சுதேசம அன்றேல், அவர்களிடம் ஊழியஞ்செய்பவர்களுக்கும் அவர்களது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கும் இத்தேசம் சுதேசமா என்பதை உசாவி உணர்வார்களாயின் தமிழன் பத்திரிக்கையிற் கூறிவரும் திருத்தங்கள் யாவும் சுதேச திருத்தங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் விளங்கும்.’
(தமிழன் 18 ஆகஸ்டு 1909)
மேற்காணும் தமிழன் பத்திரிகை செய்தி மூலமாகச் சுதேச வேடமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதியாத, உணராத நபர்களின் புரிதல் தன்மையைப் பண்டிதர் வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று தமிழன் இதழ் வெளிவந்தது. இந்த இதழ் தமிழர்களிடையே, ஆய்வு மனப்பான்மையை வளர்த்தல், பௌத்தக் கொள்கைகளைப் பரப்புதல், அறிவியல், மருத்துவம் மற்றும் முற்போக்குச் சிந்தனை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் முகமாக நேரிய முறையில் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்தது. மேலும், புத்தரின் ஆதி வேதம், இந்திரர் தேச சரித்திரம் ஆகியவை இதழில் தொடர்களாக வெளிவந்தன. இலக்கியங்கள் குறித்தும் தமது பார்வையில் பண்டிதர் விளக்கமளித்து வந்தார்.
பண்டிதரின் இத்தகைய தீவிர செயல்பாடுகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிது சிறிதாக வெளி உலகத்தில் ஏற்றம் பெறத் தொடங்கினர். அவர்களின் வாழ்வியல் பிற சமூக மக்களைப் போன்று மேன்மை அடையத் தொடங்கியது. மக்கள் கல்வி கற்கத் தொடங்கினர், அரசுப் பணிகளில் வாய்ப்புகளைப் பெற்றனர், முற்போக்குச் சிந்தனை பெற்று பௌத்தத்தைத் தழுவினர்.
பள்ளிகளை அமைத்தல், மதமாற்றப் பணிகளை மேற்கொள்ளுதல், இதர சமயங்களின் போலித் தன்மையை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பல பணிகளில் பண்டிதர் அயராது ஈடுபட்டதன் காரணமாகவும் வயது மூப்பின் விளைவாகவும் அவரது உடல்நிலை ஒரு கட்டத்தில் குன்றத் தொடங்கியது. நோயின் தீவிரத் தன்மை தொடர்ந்ததால் அவரது இதழியல் பணி சற்று மட்டுப்பட்டது.
1914 மே 5 அன்று தனது குடும்பத்தினர், சக இயக்கத் தோழர்கள் மற்றும் இதர பந்து மித்திரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், தமிழன் இதழைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று தன்னுடைய மகன் பட்டாபிராமனிடம் அயோத்திதாசர் கூறினார். அவர் உறுதியளித்த பின்னர் அங்குக் கூடியிருந்த அனைவரிடமும் பண்டிதர் இறுதியாக,
‘உங்களது தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்’ என்று கூறியபடி இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு, தமது 69வது வயதில் பரிபூரண நிர்வாண நிலையை அடைந்தார்.
பண்டிதரின் மறைவுக்குப் பிறகு அவரது தமிழன் இதழை மாதம் இருமுறை வெளியீடாக பட்டாபிராமன் நடத்தினார். ஓராண்டுக்குப் பின் இதழின் வெளியீடு நின்றது. அதன்பின் தன் தோழர்கள் அய்யாக்கண்ணு புலவர், பி.எம். ராஜரத்தினம் ஆகியோரை ஆசிரியர்களாகக்கொண்டு ஜி. அப்பாத்துரை இதழை நடத்தத் தொடங்கினர். 1933ஆம் ஆண்டில் தமிழன் இதழின் வெளியீடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
(தொடரும்)

