Skip to content
Home » அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

கடவுள் என்னும் சொல்லின் பயன்பாட்டை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, இன்று அச்சொல் பொதுவாக நாம் வணங்கும் அனைத்து வகை வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக வழங்கப்படுகிறது. தற்போதைய நிலை இவ்வாறு இருக்கையில், உண்மையில் கடவுள் என்கிற சொல் எதைக் குறிப்பிட்டு முதலில் வழங்கப்பட்டது என்பது குறித்து அயோத்திதாசர் விரிவான ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

கடவுள் என்கிற சொல்லை நாம் பிரித்துப் பார்ப்பது, அதற்கான சிறந்த வழியாக அமையும். கடவுள் என்பதை ‘கட+உள்’ எனப் பிரித்துப் பொருள் கூறுவர். அதாவது நமது புறத்தில் காணப்படும் மனத்தின் மாயத் தோற்றங்களைக் கடந்து, உள்ளிருக்கும் ஆன்மாவின் உண்மையுருவினைக் கண்டு தெளிந்து, தமது இனத்தினரை வழிநடத்திய ஞானிகளைக் குறிப்பதாக இச்சொல் ஆரம்பக் காலத்தில் கையாளப்பட்டதாகப் பண்டிதர் குறிப்பிடுகின்றார்.

கடவுள் என்ற சொல்லுக்கு ‘நன்மை’ என்கிற பொருள், பண்டைய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ‘கடவுளர்’ என்பது மனிதர்களுக்கு நன்மை அளிப்பவர்கள் என வரையறுக்கப்பட்டு, மனிதருள் உயர்ந்த ஞானம் பெற்று விளங்கி, மெய்ப்பொருள் கண்டுணர்ந்த மனிதர்களை, அச்சொல் குறிப்பதாக அமைந்தது. இச்சொல்லை முதலில் பயன்படுத்தியவர்கள் சாக்கிய (பௌத்த) சமயத்தவர் என்பது பண்டிதரின் கருத்தாகும். மேலும், இச்சொல்லானது புத்தரைக் குறிப்பதாகவே முதலில் அமைந்தது என்றும் அவர் கூறுகிறார். இதற்கு உதாரணமாக,

இகல்பகை வலியார் பூப்பெருகுலையே தோழிற்பாம்
பகரென்ப மழைக் கோளுற்றம் புற்றெனுநீறுழும்பேர்
நகமனையுயிர் மரப் போர் நகைமிகிரொளி சிறிப்பாங்
ககனம் விண்படை காடென்ப கடவுள்தே முன்னினைப்பேர்.

(11ஆம் நிகண்டு கரவெதுகை)

தருமராசன் முன்னிந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
யருள் சுரந்தவுணர் கூட்டுந் தாதகதன் ஆதிதேவன்
விரிவுசக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசு நீழலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்.

(பிங்கலை நிகண்டு – தெய்வப் பெயர் தொகுதி)

மேற்காணும் நிகண்டுகளில் கடவுள் மற்றும் ஆதிபகவன் ஆகிய சொற்கள் புத்தரைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பண்டிதர் எடுத்துக்காட்டியுள்ளார். இதன்மூலம் கடவுள் என்கிற சொல், முதலில் சாக்கிய துறவிகளையும், அவர்களுக்குப் பின்னர் வந்த அடியார்களையும் குறிப்பதாக அமைந்தது. மேலும், நன்மையைக் கடைப்பிடித்து இல்லறம் துறந்த ஞானிகளையும் குறிப்பதாக இது அமைந்தது என்பதை,

தணக்குறப் பறித்த போதுந்தானனை விடுத்தல் செல்லா
நிணப்புடையுடும் பனாரை யாதனானீக்கலாகு
மணப்புடை மாலை மார்ப னொரு சொலே யேதுவாகக்
கணைக்க வினழித்த கண்ணார்த் துறந்துப் போய்க்கடவுளானான்

என்று சீவக சிந்தாமணியின் முக்தி இலம்பகத்தில் வரும் செய்யுள் குறிப்பிடுகிறது. நன்மையைக் கடைப்பிடித்த துறவிகள் பின்னாளில் தன் இனத்தையும் மக்களையும் வழிநடத்திடும் மெய்ஞானிகளாக வாழ்ந்து, கடவுள் என்னும் நிலைமைக்கு உயர்ந்து சென்றனர் என்பதைப் பண்டிதர் எடுத்துக்காட்டுகிறார். மேலும், திவாகரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கமல சூத்திரம், சூளாமணி உள்ளிட்ட நூல்கள் புத்தருக்குரிய பெயர்களாகப் பிரமம், கடவுள், ஈசன், பகவன், பரமன் ஆகியவற்றைக் குறிப்பிடுவதையும் அயோத்திதாசர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். கடவுள் என்பது தம்முள் மெய்யுணர்ந்த அறிவோர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். காணாத பொருளுக்குக் கடவுள் என்று ஒரு பெயரினைப் பெரியோர் இட்டுக்கூறுவது என்பது சற்று சிந்திப்பதற்கு உரியதாகும். காரணம், நம்முடைய முன்னோர்கள் மெய்யுணர்ந்த பொருளினை மட்டுமே, அதாவது உணர்வாலும் உள்ளத்தாலும் தாம் உணர்ந்தவற்றை மட்டுமே தமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அறிவுறுத்திச் சென்றனர் என்கிற உண்மையைப் பண்டிதர் இங்கு பதிவு செய்கிறார்.

இவ்வாறு சமயம் கூறும் உண்மைப் பொருளை உணராத மக்களின் அறிவிலித்தனத்தைப் பண்டிதர் மற்றுமொரு உதாரணம்கொண்டு விளக்குகிறார். இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்யும்போது, வண்டிகளின் பட்டைகள் உரசும் சத்தம் நன்கு கேட்கும். இதனை ‘இரிசி உராய்தல்’ என்று கூறுவர். இந்த வண்டிகளின் சத்தத்தைக் கேட்டுக் குழந்தைகள் தூங்காமல் பயம் கொள்ளும். இந்தப் பயத்தைப் போக்கும் பொருட்டு, குழந்தைகளின் தாய்மார்கள், இந்த வண்டி உரசும் சத்தத்தை ஒரு பெண்ணாக உருவகம் கொண்டு, ‘உறங்கவில்லை என்றால் இசிரி வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளுவாள்’ என்று தம் பிள்ளைகளுக்குப் பயம் காட்டி, அவர்களை உறங்க வைத்தனர்.

ஆனால் இந்த வாக்கியத்தின் அடிப்படையான பொருளைப் பின்னாளில் உணர்ந்துகொள்ளாத மனிதர்கள், இரிசி என்னும் ஓசைக் குறியீட்டினை ஒரு பெண் தெய்வமாகவே கருதி அதற்குப் பலி கொடுப்பது, சடங்குகள் செய்வது உள்ளிட்ட மூடப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினர்.

இதைப் போன்று இரவு நேரங்களில் காடுகளின் வழியே பயணம் செய்யும்போது அங்குள்ள மரங்களின் கிளைகளில் வௌவால்களும் மற்ற பறவைகளும் தொங்கிக்கொண்டு இருப்பதைக் காணும்போது, ஒரு மனிதன் இருப்பதுபோன்ற கருப்பு உருவத் தோற்றத்தை அவை தரும். மேலும், காடுகளில் உள்ள ஏரிகளில் எழும் சத்தம் மிகுந்த இரைச்சலுடன் கேட்கும். இந்த ஏரிகளில் இருந்து உண்டாகும் சத்தம் இரவு நேரத்தில் பயணம் செய்வோருக்குப் பயத்தை ஏற்படுத்துவதாக அமையும். ஆனால் இவற்றைக் கண்டு இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் பயம் கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் தம் மக்களுக்குக் கூறினர். காட்டில் உள்ள ஏரி, என்பதே பிற்காலத்தில் காட்டேரி என்று திரிந்து வழங்கப் பெற்றது.

இதனை உணராதவர்கள், காட்டேரி தாக்கிவிட்டது என்றும் கருப்பு அண்டிவிட்டது என்றும் கூறியதால், அதை நம்பி, பலி இடுதலும் மூடநம்பிக்கைகளைக் கைக்கொள்ளுதலும் பிற்காலத்தில் நடைபெற்றதைக் காண்கின்றோம். முன்னோர்களின் கருத்தில் இருந்தவற்றின் உட்பொருளை அறியாது, நமது மக்களால் பின்பற்றப்பட்ட அறிவற்ற மூடப் பழக்க வழக்கத்தால் உண்டான பல தெய்வ வழிபாட்டு முறையைப் பற்றி பண்டிதர் குறிப்பிடுகிறார்.

இவற்றைப்போல் இள வயதில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் உணர்வு மாற்றத்தைக் கேலி செய்யும் நோக்கில், ஆண்களுக்குக் கன்னிமார் பிடித்துவிட்டது என்றும் பெண்களுக்கு அண்ணன்மார் பிடித்துவிட்டது என்றும் கூறியதைப் பிற்காலத்தில் உணர்ந்து கொள்ளாது, கன்னிமார்களுக்கும் அண்ணன்மார்களுக்கும் பலி கொடுக்கும் செயலை, பகுத்தறிவுக்கு ஒத்துவராத கடவுள் வழிபாடென்று பண்டிதர் சாடினார்.

நமது வரலாறு மற்றும் புராணங்களை நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது, பிறப்புச் சூழலில் வாழ்ந்து உண்மை அறிவைப் பெற்று தம் மக்களுக்கு மெய்யறிவு புகட்டிய பெரியோர்களைத்தான் நம் முன்னோர்கள் கடவுள் என்னும் சொல்லால் குறிப்பிட்டனர் என்பதை நம்மால் தெளிவாக உணர முடியும். கடவுள் – தெய்வம் – ஈசன் – பரமன் – சிவன் போன்ற சொற்களை ஆராய்ந்து பார்க்கும்போது அவை அனைத்தும் இரு பிறப்புப் பெற்று அந்தண நிலையை அடைந்து வழிகாட்டிய மெய்யியலாளர்களைக் குறிப்பதாக அமைவதை நம்மால் தெளிவுற உணர முடியும் என்று பண்டிதர் குறிப்பிடுகிறார். இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக,

கவ்வுண்டு நாசிமுனை காலால் கனலெழுப்பி
வவ்வுதனை யொவ்வாக் கமாட்டாமல் – தெய்வம்
ஒருவனே யென்பார் ஒன்று நூறாகித்
திரிவரே வீணே தினம்

என்னும் சிவ ஞானப் பாடல், தெய்வம் ஒன்றுதான் என்பதை உணராத தன்மை உடையவர்கள், வீணாகப் பிதற்றிக்கொண்டு திரிபவர்கள், என்று குறிப்பிடுவதைப் பண்டிதர் மேற்கோள்காட்டுகிறார்.

இவ்வாறு முற்காலத்தில் முன்னோர்கள் கூறியதன் பொருள் விளக்கம் தெரியாத மதவாதிகள் தங்களின் ஆடம்பர வாழ்விற்காக மக்களிடம் பல தெய்வ வழிபாட்டு முறைகளை உருவாக்கி, அவற்றின் மூலம் அவர்களைப் பிளவுபடுத்தியது மட்டுமல்லாமல் உண்மை நெறியைப் புகட்டிய மெய்ஞானிகளையும், அவர்களுடைய போதனைகளையும் தங்களுக்குச் சாதகமாகத் திரித்துக் கொண்டதோடு, அவற்றின் பொருளை மாற்றி மக்களிடையே பரப்பி, மூடத்தனமான கடவுள் கோட்பாடுகளை உருவாக்கி வந்ததைத் தமிழ் இலக்கியச் சான்றுகள் வாயிலாகவே பண்டிதர் எடுத்துக்காட்டியதோடு, அறிவியல் முறையில் அவற்றுக்கான விளக்கங்களையும் அளித்தார்.

ஆனால் சந்தர்ப்பச் சூழல் காரணமாகக் கடவுள் குறித்த பண்டிதரின் கட்டுரையானது நிறைவு பெறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *