Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

இந்த முழு விவகாரத்தில், நாற்பது ஆடுகளில் ஓர் ஆட்டிற்குக் கூட ஒரு சின்னக் கீறலும் சிறுத்தையால் ஏற்படவில்லை.

இது போன்ற பல துணிகரத் தாக்குதல்களை ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை நடத்தியிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

0

அண்டை வீட்டினர் இருவர், ஒருவரது வீட்டில் சந்தித்து அளவளாவினர். அப்பொழுது இரவு நேரம். இருவரும் வீட்டு அறையின் தரையில் அமர்ந்தபடியே ஹூக்காவில் (புகைக்குழாயில்) மாறி மாறிப் புகைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த அறை ஆங்கில எழுத்தான L வடிவில் இருந்தது. அந்த அறைக்கு ஒரே ஒரு கதவுதான். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கதவு இருப்பது தெரியாது. இருவரும் முதுகை அறையின் சுவற்றில் சாய்த்தவாறு, புகையை இழுத்துக்கொண்டிருந்தனர். அறைக்கதவு சாத்தப்பட்டிருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை. அதுநாள்வரை அந்தக் கிராமத்தில் சிறுத்தை ஒருவரையும் தாக்கியிருக்கவில்லை.

அறை இருட்டாக இருந்தது. வீட்டின் உரிமையாளர் தான் வைத்திருந்த ஹூக்காவை நண்பரிடம் கொடுத்தார். அப்பொழுது ஹூக்கா தரையில் விழுந்துவிட்டது. ஹூக்காவில் இருந்த கரித்துண்டும், புகையிலையும் கீழே விழுந்தது. ஹூக்காவை கவனமாகக் கையாளும்படி, வீட்டின் உரிமையாளர் தன் நண்பரிடம் கேட்டுக்கொண்டார். ஹுக்காவிலிருந்து வெளியே விழுந்த கரியானது அறையில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பைப் பற்றவைத்துவிடும் என்று தெரிவித்தார். நண்பர் கீழே விழுந்த கரித் துண்டையும், புகையிலையையும் எடுக்க முற்படும்பொழுது, அறைக்கதவின் வழியே வெளிச்சம் வந்தது. வெளியே, நிலவின் ஒளி பரவியிருந்தது. அந்த நிலவொளியில், தன் அருகிலிருந்த நண்பரை (வீட்டின் உரிமையாளரை), சிறுத்தை கதவின் வழியே தூக்கிச் செல்வது நிழலாகத் தெரிவதைக் கண்டு அவர் அதிர்ந்து போய்விட்டார்.

சில நாட்கள் கழித்து இச்சம்பவத்தை ஜிம் கார்பெட்டிடம் விவரித்த அந்த நண்பர், நடந்த சம்பவம் உண்மை என்றும்; சிறுத்தை தன் நண்பரைக் கொன்று தூக்கிச் செல்லும் வரை அவர் கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருந்தது என்றும்; சிறுத்தை அவரைத் தூக்கிச் செல்லும்போது ஒரு துளி சப்தம் கூட எழவில்லை என்றும் தெரிவித்தார். தவிர தன்னால் அப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும்; சிறுத்தை சற்றுத் தொலைவு செல்லும் வரை காத்திருந்து விட்டு, பின்னர் சத்தமில்லாமல் பதுங்கிச் சென்று அறையின் கதவை அவசரமாக மூடித் தாழிட்டதாகவும் தெரிவித்தார்.

0

ஒரு கிராமத் தலைவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு ஜுரத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பெண்ணை இரு பெண் தோழிகள் கவனித்து வந்தனர். தலைவரின் வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. வெளியில் இருந்த அறையில் இரண்டு கதவுகள் இருந்தன. ஒரு கதவின் வழியே முற்றத்திற்கும், மற்றொரு கதவின் வழியே உள் அறைக்கும் செல்லலாம். வெளியறையில், சுமார் நான்கு அடி உயரத்தில், ஒரு திறந்த ஜன்னல் இருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த பெண்ணிற்குத் தண்ணீர் தேவைப்படும்போது கொடுப்பதற்காக, ஜன்னலருகே ஒரு பித்தளைச் சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. வெளியறையிலிருந்து உள் அறைக்குச் செல்ல ஒரு கதவு மட்டுமே இருந்தது. அக்கதவைத் தவிர உள்ளறையில் வேறு எந்தக் கதவுகளும் கிடையாது.

வெளி அறையிலிருந்து முற்றத்திற்குச் செல்லப் பயன்படும் கதவு நன்கு தாழிடப்பட்டுப் பூட்டப்பட்டிருந்தது. இரண்டு அறைகளுக்கும் இடையேயான கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

உள் அறையில் மூன்று பெண்களும் தரையில் படுத்திருந்தனர். நோய்வாய்ப்பட்டிருந்த பெண் நடுவிலும், மற்ற இருவரும் அவளுக்கு இருபுறமும் படுத்திருந்தனர். வெளி அறையில், ஜன்னலருகே கிராமத் தலைவர் கட்டிலில் படுத்திருந்தார். அவர் அருகாமையில் ஒரு லாந்தர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவ்விளக்கின் வெளிச்சம் உள் அறையிலும் விழுந்தது. எண்ணெய்யை மிச்சப்படுத்துவதற்காக விளக்கின் ஒளி குறைக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு, அனைவரும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர். வெளியறையின் ஜன்னல் வழியாகச் சிறுத்தை வீட்டினுள் நுழைந்தது. ஆச்சர்யப்படும்படியாக, சிறுத்தை ஜன்னலருகே இருந்த பித்தளைச் சொம்பைத் தள்ளிவிடாமல், கட்டிலில் படுத்திருந்த தலைவரை லாகவமாகச் சுற்றிச் சென்று, உள் அறையினுள் நுழைந்து, நோய்வாய்ப்பட்டிருந்த பெண்ணைக் கொன்றது. தன் இரையை ஜன்னல் வழியாகத் தூக்கிச் செல்லச் சிறுத்தை முயன்றபோது, பித்தளைச் சொம்பு தட்டிவிடப்பட்டு கீழே விழுந்தது. அந்தச் சத்தத்தில் அனைவரும் விழித்துக்கொண்டனர்.

லாந்தர் விளக்கின் வெளிச்சத்தை உயர்த்தி என்ன நடந்தது என்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த பெண்ணின் குரல்வளை கடிக்கப்பட்டு, அவளின் உடல் ஜன்னலின் அருகே கிடந்தது.

அப்பெண்ணிற்கு உதவியாக இருந்த அண்டை வீட்டுக்காரப் பெண் ஜிம் கார்பெட்டிடம் நடந்த விவரங்களைக் குறிப்பிடும் பொழுது, ஒரு விஷயத்தைத் தெரிவித்தாள். சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த பெண் ஜுரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்; அவள் எப்படியும் இறந்திருப்பாள் என்றும்; எனவே சிறுத்தை மற்றவர்களை விட்டுவிட்டு அவளைத் தேர்ந்தெடுத்துத் தாக்கிய சம்பவம் அதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டாள்.

0

குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் 30 எருமை மாடுகளை மேய்த்து வந்தனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து தங்களது மாடுகளை மேய்த்து வந்தனர். மூத்த சகோதரனுக்கு 12 வயதில் ஒரு மகள் இருந்தாள். அவளும் தன் தந்தையுடனும், சித்தப்பாவுடனும் சேர்ந்து மேய்ச்சலுக்குச் செல்வாள். சகோதரர்கள் மாடுகளை மேய்ச்சலுக்காகப் புதிதாக ஓர் இடத்திற்கு ஓட்டி வந்தனர். ஆட்கொல்லி சிறுத்தை அங்கிருப்பதைப் பற்றி அவர்களுக்கு யாரும் சொல்லவில்லை போலும் அல்லது அவ்விஷயம் தெரிந்தும், தங்களுடைய மாடுகள் தங்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர்கள் எண்ணியிருக்கலாம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில், சாலையோரத்தில், ஒரு சமதளப் பகுதியில், கதிர் அரிவாள் வடிவத்தில், கால் ஏக்கரில் அடுக்கு நிலமொன்று இருந்தது. அந்த நிலத்தில் வெகு நாட்களாகப் பயிர்கள் ஏதும் விளைவிக்கப்படவில்லை. சகோதரர்கள் அவ்விடத்தைத் தங்களுடைய முகாமாகத் தேர்வு செய்தனர். காட்டிலிருந்து மரக்கழிகளை வெட்டிக் கொண்டு வந்து, தாங்கள் தேர்வு செய்த இடத்தில் அவற்றை நட்டனர். நட்ட மரக்கழிகளில் எருமை மாடுகளை வரிசையாகக் கட்டி வைத்தனர்.

இரவில், அந்தச் சின்னப் பெண் தயார் செய்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, மூவரும் தரையில் விரிப்பை விரித்துப் படுத்து உறங்கினர். அவர்கள் படுத்திருந்த இடத்தின் ஒரு பக்கம் சாலை இருந்தது, மறு பக்கத்தில் எருமை மாடுகள் கட்டப்பட்டிருந்தன.

நள்ளிரவு முடிந்து விடியலுக்கான நேரம் அது. ஒரே இருட்டாக இருந்தது. அப்பொழுது மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் ஆடின. அந்தச் சப்தமும், மாடுகள் பயத்தினால் விட்ட பெருமூச்சுகளும் சகோதரர்கள் இருவரையும் எழுப்பியது. மாடுகள் ஏற்படுத்திய சப்தங்களை வைத்து, அங்கு ஏதோ விலங்கு வந்திருப்பதைப் புரிந்து கொண்டனர். இது அவர்கள் அனுபவம் மூலமாகக் கற்ற பாடம். இருவரும் லாந்தர் விளக்கை ஏற்றிக்கொண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று அவற்றை அமைதிப்படுத்தினர். மரக்கழிகளைப் பெயர்த்துக் கொண்டு மாடுகள் சென்றுவிட்டனவா என்றும் பார்வையிட்டனர்.

சகோதரர்கள் தாங்கள் படுத்திருந்த இடத்தை விட்டுச் சென்று சிறிது நேரம் தான் ஆகியிருக்கும். தங்களுடைய விரிப்பிற்குத் திரும்பி வந்து பார்த்தபொழுது அதிர்ச்சி காத்திருந்தது. தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை. அந்தச் சிறுமி படுத்திருந்த விரிப்பில் பெரியளவில் ரத்தம் தெளித்திருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது.

விடிந்த பிறகு, இருவரும் ரத்தச் சுவடு படிந்திருந்த பாதையைத் தொடர்ந்து சென்றனர். அந்தப் பாதை, மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தைத் தாண்டிச் சென்றது. ஒரு குறுகிய வயல்வெளியின் வழியாக, ஒரு செங்குத்தான மலைப்பாதையில் சில கஜ தூரம் இறங்கிச் சென்று, சிறுத்தை தன் இரையைச் சாப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தார்கள்.

‘என்னுடைய சகோதரன் பிறந்த நட்சத்திரம் சரியில்லை சாஹிப். அவனுக்கு ஆண் வாரிசு கிடையாது. அவனுக்கு இருந்தது ஒரேயொரு மகள்தான். அவளுக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது. மகள் மூலமாக தனக்கு வாரிசு ஏற்படும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டம், அவனது மகளைச் சிறுத்தை கொன்று தின்றுவிட்டது’ என்று இளைய சகோதரன் கார்பெட்டிடம் வருத்தத்துடன் தெரிவித்தான்.

0

இதுபோல, பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆட்கொல்லி சிறுத்தையால் ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இம்மாதிரி நிகழ்வுகளைக் கண்டும், கேட்டும் வந்த கார்வால் மக்கள், ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையை நினைத்து பெரும் அச்சத்தில் இருந்தனர். போதாத குறைக்கு கார்வால் மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளும், சிறுத்தையைப் பற்றி அவர்களிடையே நிலவி வந்த அமானுஷ்ய விஷயங்களும், அவர்களைப் பீதிக்கு உள்ளாக்கியிருந்தன.

ஒரு நாள் விடியற்காலையில், ஜிம் கார்பெட் ருத்ரபிரயாக் ஆய்வு பங்களாவிலிருந்து கிளம்பினார். பங்களாவின் தாழ்வாரத்தை விட்டு இறங்கிய போது ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடங்கள் தெரிந்தன.

கால் தடங்களைப் பார்த்தபொழுது அவை சமீபத்தில் உருவான கால் தடங்களாகத் தெரிந்தன. கார்பெட் தாழ்வாரத்திலிருந்து இறங்கி வருவதற்குச் சற்று முன்னர்தான் சிறுத்தை பங்களாவின் தாழ்வாரத்திற்கு வந்திருக்கிறது. பங்களாவில் ஏதும் கிடைக்காது என்று முடிவெடுத்த சிறுத்தை, அங்கிருந்து சென்றிருக்கிறது. அதன் கால் சுவடுகள் சென்ற திசையை வைத்துப் பார்க்கும் போது, சுமார் 50 கஜ தூரத்தில் உள்ள யாத்திரிகர்கள் செல்லும் பாதையை நோக்கிச் சிறுத்தை சென்றிருக்கலாமென்று கார்பெட்டிற்குத் தோன்றியது. பங்களாவிலிருந்து சாலையை நோக்கிச் செல்லும் மண் பாதையின் மேற்பரப்பு மிகவும் கடினமாக இருக்கும். சுவடை அடையாளம் கண்டு பின்தொடர்வதற்கான சாத்தியம் குறைவு. ஆனால் முந்தைய தினம் ஆட்டு மந்தைகள் அவ்விடத்தைக் கடந்து சாலையை நோக்கிச் சென்றதனால் மண்தரைப் புழுதியாக இருந்தது. புழுதியான மண் தரையில் சிறுத்தையின் தடங்கள் தெளிவாகவே பதிந்திருந்தன. சிறுத்தையின் கால் தடங்களை வைத்துப் பார்க்கும்பொழுது அது கோல் பாறையை நோக்கிச் சென்றதாகத் தெரிந்தது.

ஜிம் கார்பெட்டிற்கு ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடங்கள் நன்கு பரிச்சயமாகியிருந்தது. நூறு சிறுத்தைகளின் கால் தடங்களைக் காட்டினாலும், அதில் ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையின் கால்தடத்தை கார்பெட் சிரமமே இல்லாமல் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்.

ஒரு சிறுத்தையின் கால் தடத்தை வைத்தே அதன் பாலினம், வயது, அளவு போன்ற விஷயங்களைச் சரியாக கணிக்க முடியும். அந்த வகையில், ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடத்தை வைத்து ஜிம் கார்பெட் கணித்த விவரங்கள், 1) அது ஓர் ஆண் சிறுத்தை, 2) அது இளம் வயதைக் கடந்த, ஒரு வயதான சிறுத்தை.

ஜிம் கார்பெட், சிறுத்தையின் கால் தடங்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவர் செல்வதற்குச் சற்று முன்னர்தான், சிறுத்தை அந்த இடத்தின் வழியாகச் சென்றிருக்கிறது. சிறுத்தை செல்லும் போது, மெதுவாகவும் சீராகவும் அது நடந்து சென்றிருப்பது தெரியவந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *