Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

சாது தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு இணையான ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் ருத்ரபிரயாக்கில் நடைபெற்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கார்வால் பகுதியில் உள்ள கோதகி கிராமத்தில் இருந்த மனிதர்கள் ஒவ்வொருவராகத் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்பட்டு வந்தனர். உறவினர்களை, நண்பர்களை இழந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், இந்த இறப்புகளுக்கெல்லாம் காரணம் ஒரு சாதுதான் என முடிவு செய்து, அவரைப் பிடித்து இழுத்துவந்து பழி வாங்க முடிவு செய்தனர். அந்தச் சமயத்தில் கார்வாலின் துணை கமிஷனராக இருந்த பிலிப் மேசன் கோதகி கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் முகாமிட்டிருந்தார். செய்தியை அறிந்த அவர், சம்பவ இடத்திற்குச் சென்றார். ஆக்ரோஷமாக இருந்த கூட்டத்தைப் பார்த்த கமிஷனர், சாதுர்யமாகச் செயல்பட்டார்.

கூட்டத்தினரிடம், ‘நீங்கள் உண்மையான குற்றவாளியைத்தான் பிடித்திருக்கிறீர்கள். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கும் முன், அவனுடைய குற்றம் சட்டப்படி நிரூபிக்கப்பட வேண்டும். அந்த வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். சாதுவை என்னிடம் ஒப்படையுங்கள். நான் போலீஸ் காவலில் வைக்கிறேன்’ என்று தெரிவித்தார். பொது மக்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். கமிஷனர் சாதுவை அவ்விடத்தை விட்டு அழைத்துச் சென்றார் போலீஸ் காவலில் வைத்து அவரைப் பாதுகாத்தார். இப்படியாக, அடுத்த 7 நாட்களும் இரவு, பகலாகச் சாதுவைப் போலீசார் கண்காணித்து வந்தனர். எட்டாம் நாள் காலை, கமிஷனருக்கு ஒரு தகவல் வந்தது. சாது கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்தில், முந்தைய நாள் இரவு, ஒரு வீட்டுக்குள் இருந்து ஓர் ஆள் தூக்கிச் செல்லப்பட்டான் என்ற செய்தி வந்தது.

காவலில் அடைக்கப்பட்டிருந்த சாது விடுவிக்கப்பட்டார். இதற்குப் பொதுமக்கள் யாரும் ஆட்சேபம் செய்யவில்லை. ஆனால், ‘இம்முறை தவறான ஆளைப் பிடித்து விட்டோம், அடுத்த முறை சரியான ஆளைப் பிடிப்போம்’ என்று அவர்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டனர்.

கார்வால் பகுதியில் ஆட்கொல்லி விலங்குகளால் நடைபெற்ற கொலைகளுக்குச் சாதுக்கள்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். இதுவே, நைனிடால் மற்றும் அல்மோரா பகுதிகளில், ஆட்கொல்லி விலங்குகளால் நடைபெற்ற கொலைகளுக்குப் போக்சா இன மக்கள் தான் காரணம் என்று அங்குள்ள மக்கள் நினைத்தனர். போக்சா மக்கள் இமயமலை அடிவாரத்தில் உள்ள தெராய் என்று அறியப்படும் புல்வெளிப் பரப்புகள் மற்றும் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள். இவர்கள் காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடிப் பிழைப்பு நடத்துபவர்கள்.

சாதுக்கள் நரமாமிசத்திற்காகவும், ரத்தத்திற்காகவும் பொதுமக்களைக் கொல்வதாக கார்வால் மக்கள் கருதினர். போக்சா மக்கள், மனிதர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்காகவும், விலையுயர்ந்த பொருள்களுக்காகவும் கொல்கிறார்கள் என்ற கருத்து நைனிடால் மற்றும் அல்மோரா பகுதிகளில் நிலவியது. அதற்கேற்றவாறு நைனிடால் மற்றும் அல்மோரா பகுதிகளில் கொல்லப்படும் நபர்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். இதற்கான காரணம் உண்மையில் வேறு.

இப்போது கார்பெட்டிடம் வருவோம்….

கார்பெட் ஆள் ஆரவாரம் இல்லாத அமைதியான இடங்களில் ஆட்கொல்லி விலங்கை வீழ்த்துவதற்காகப் பல மணி நேரம் காத்திருந்தார். ருத்ரபிரயாகில், தொடர்ச்சியாக 28 இரவுகள் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருந்தார். அவர் சிறுத்தையின் வருகைக்காகப் பாலத்திலும், குறுக்குச் சாலைகளிலும், கிராமத்திற்குச் செல்லும் பாதைகளிலும், இறந்து கிடந்த மனித உடல்களுக்கு அருகிலும், இறந்த கால்நடைகளுக்கு அருகிலும் காத்திருந்தார். அப்படி அவர் காத்திருந்தபோது, ஆட்கொல்லி சிறுத்தை ஒருமுறை அவரது கண்களில் பட்டது. அதைப் பார்க்கும்பொழுது அவருக்குச் சிறுத்தையின் உடலில் அரக்கனின் தலை பொருந்தியிருப்பது போல் காட்சியளித்தது.

அந்த அரக்கனும் கார்பெட்டை பல நாட்கள் கவனித்து வந்திருக்கிறான். எவ்வளவு முயற்சி செய்தும், உன்னால் என்னை வீழ்த்த முடியவில்லையே என்று அந்த அரக்கன் எள்ளி நகையாடியது போல் கார்பெட்டிற்குத் தோன்றியது. கார்பெட் சற்று அசந்தாலும், அவரது குரல்வளையில் தன் கோரப்பற்களைப் பதிய வைப்பதற்கான தகுந்த சந்தர்ப்பத்தை அச்சிறுத்தை எதிர்பார்த்திருந்தது என்பது திண்ணம்.

இப்படிப்பட்ட கொடூரச் சிறுத்தையை, பல பேர்களின் உயிரைக் குடித்த அந்த ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்லாமல், அரசாங்கம் என்ன வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததா என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அரசாங்கம் தன்னால் முயன்ற அனைத்தையும் செய்து பார்த்துவிட்டது. சிறுத்தையை வீழ்த்துபவர்களுக்கு ‘பத்தாயிரம் ரூபாய் மற்றும் இரண்டு கிராமங்கள் வெகுமதி’ என அரசாங்கம் அறிவித்தது. கார்வால் பகுதியில் 4000 பேர் துப்பாக்கிப் பயன்படுத்த உரிமம் வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களை ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்வதற்குப் பயன்படுத்தியது. புதிதாக 300 நபர்களுக்குச் சிறப்புத் துப்பாக்கி உரிமம் வழங்கி, அவர்களையும் ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த அரசாங்கம் உத்தரவிட்டது.

லாண்ட்ஸ்டவுன் என்ற இடத்திலுள்ள கார்வால் படைப்பிரிவைச் சேர்ந்த போர் வீரர்கள் விடுப்பில் வீட்டிற்குச் செல்லும்போது அவர்களது துப்பாக்கிகளையும் உடன் எடுத்துச் செல்லப் பிரிட்டிஷ் அரசாங்கம் பணித்தது. போர் வீரர்கள் சிலருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வேட்டையாடும் துப்பாக்கிகளையும் வழங்கியது. இதைத் தவிர ஆங்கில அரசாங்கம், ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த அதிக ஊதியம் நிர்ணயம் செய்து வேட்டைக்காரர்களையும் பணியில் அமர்த்தியது. இப்படி அமர்த்தப்பட்ட வேட்டைக்காரர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றால் அவர்களுக்குத் தகுந்த சன்மானத்தை வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து வேட்டைக்காரர்களிடமும் ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்ல உதவி செய்யுமாறு ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்தது அரசாங்கம்.

ஆட்கொல்லி சிறுத்தை அடிக்கடி பயணிக்கும் சாலைகளிலும், கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளிலும் சிறுத்தையைப் பிடிக்க ஏராளமான கூண்டுப் பொறிகளை அரசாங்கம் அமைத்தது. அந்தப் பொறிகளில் ஆடுகள் தூண்டிலாக வைக்கப்பட்டன. ஆட்டைத் தாக்கப் பொறிக் கூண்டினுள் சிறுத்தை வரும்பொழுது கூண்டின் கதவு மூடிக்கொள்ளும். இது போக அரசாங்கம், பட்வாரிகளிடமும், அரசாங்க அலுவலர்களிடமும் விஷத்தைக் கொடுத்து, அதை ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்ட மனித உடல்களில் சேர்க்கும்படிச் செய்தது. அத்தோடு நில்லாமல் அரசு தன் ஊழியர்களை, அவர்கள் அலுவல்கள் முடிந்த பிறகு ஆட்கொல்லி விலங்கை வீழ்த்தும் பணியிலும் ஈடுபடுத்தியது. இவ்வாறு செய்வதில், அதிக ஆபத்துக்கள் இருந்தும் அரசாங்கம் தன் முயற்சியில் பின்வாங்கவில்லை.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் அரசாங்கத்திற்குக் கிடைத்த பலன் என்னவென்றால், ஆட்கொல்லி சிறுத்தையின் காலில் ஒரு சிறிய காயத்தை ஏற்படுத்தியது மட்டுமே. ஒருமுறை, துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டாவொன்று ஆட்கொல்லி சிறுத்தையின் இடது பின்னங்காலின் திண்டுப் பகுதியை உரசிக்கொண்டு, கால் விரலின் தோலைப் பெயர்த்துக் கொண்டு சென்றது. சிறுத்தைக்குப் பாதிப்பென்பது அவ்வளவுதான்! அதேபோல், தொடர்ந்து நஞ்சு கலந்த இரையைச் சிறுத்தை உண்டதால் நாளடைவில் அந்த நச்சுதன்மை சிறுத்தையைப் பாதிக்கவில்லை என்று துணை கமிஷனர் தன் அரசாங்கப் பதிவில் குறித்திருக்கிறார்.

மேலும், ஆட்கொல்லி சிறுத்தையைக் குறித்து மூன்று சுவாரஸ்யமான விஷயங்கள் அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கிறது. அவை பின்வருமாறு,

அரசாங்கம் வெளியிட்ட செய்தியைப் படித்த இரண்டு இளம் ஆங்கில அதிகாரிகள், 1921 ஆம் ஆண்டு ருத்ரபிரயாக்கிற்கு வந்தார்கள். ஆட்கொல்லி சிறுத்தையை எப்படியேனும் சுட்டு வீழ்த்தி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தார்கள். அலக்நந்தா நதியின் மேல் கட்டப்பட்டுள்ள ருத்ரபிரயாக் தொங்கும் பாலத்தைப் பயன்படுத்தி, ஆட்கொல்லி சிறுத்தை இக்கரைக்கும் அக்கரைக்குமாக கடந்து செல்வதாக இருவரும் முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் எப்படி அந்த முடிவிற்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஓர் அதிகாரி தொங்கு பாலத்தின் கிழக்கு கரையில் அமைந்திருந்த கோபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மற்றொருவர் மேற்கு கரையில் அமைந்திருந்த கோபுரத்தில் அமர்ந்து கொண்டார். இப்படியாக இருவரும் சுமார் இரண்டு மாதங்களுக்குத் தத்தம் கோபுரத்திலிருந்தபடியே ஆட்கொல்லி சிறுத்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஒருவழியாக, ஓர் இரவு, அதிகாரிகள் நினைத்தவாறே ஆட்கொல்லி சிறுத்தை இடது கரையின் வழியாக ருத்ரபிரயாக் பாலத்தினுள் நுழைந்தது. இதை இடதுபுறக் கோபுரத்திலிருந்து கவனித்த அதிகாரி, சிறுத்தை வளைவைத் தாண்டிப் பாலத்திற்குள் செல்லும் வரை காத்திருந்தார். வளைவைத் தாண்டி சிறுத்தை பாலத்தினுள் சென்றபோது அவர் சிறுத்தையை நோக்கிச் சுட்டார். சிறுத்தை வலது கரையை நோக்கி வேகமாக ஓடியது. வலது கரையில் காத்திருந்த அதிகாரி தன்னுடைய சுழல் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டார். அவரது துப்பாக்கியிலிருந்த 6 தோட்டாக்களும் வெளியேறின. மறுநாள் காலை பாலத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. பாலத்தை அடுத்து இருந்த மலைகளிலும் ரத்தக்கறை காணப்பட்டது. சிறுத்தை அவ்வழியாகச் சென்றிருக்கிறது. குண்டடி பட்டதால் சிறுத்தை நிச்சயம் இறந்திருக்கும் என்று அனைவரும் நம்பினர். பல நாட்கள் தேடியும் சிறுத்தையின் உடல் கைப்பற்றப்படவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்குச் சிறுத்தையால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று அரசாங்கப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறுத்தையைச் சுட்ட இரண்டு அதிகாரிகளும், துப்பாக்கியிலிருந்து வெளியான முதல் குண்டு சிறுத்தையின் பின்பகுதியைத் தாக்கியிருக்கும் எனவும், அடுத்தடுத்து வெளியான குண்டுகள் சிறுத்தையின் மண்டையைத் தாக்கியிருக்கலாம் எனவும் நினைத்திருந்தனர். அன்று, சிறுத்தை துப்பாக்கியால் சுடப்படும் சப்தத்தைக் கேட்ட நபர்களும், மறு நாள் சிறுத்தையின் உடலைத் தேடிச் சென்ற நபர்களும் கார்பெட்டிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தனர்.

பாலத்தில் கண்ட ரத்தக் கறைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட கார்பெட், துப்பாக்கிகளிலிருந்து வெளியான தோட்டாக்கள் சிறுத்தையின் பின் பகுதியையோ அல்லது மண்டையையோ தாக்கவில்லை, மாறாக அவை சிறுத்தையின் கால் பகுதியைத்தான் தாக்கியிருக்கும் என்ற முடிவிற்கு வந்தார். பின்னாளில் அவரது கூற்று உண்மை என்று தெரியவந்தது. பாலத்தின் இடது கரையின் கோபுரத்தில் இருந்த அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டு சிறுத்தையின் கால் திண்டை உரசியபடியே சென்று, கால்விரல் பகுதியின் தோலைப் பெயர்த்துக் கொண்டு சென்றிருக்கிறது. பாலத்தின் வலது கரை கோபுரத்தில் இருந்த அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டாக்களில் ஒன்று கூட சிறுத்தையைத் தாக்கவில்லை.

ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க, அரசாங்கம் கூண்டுப் பொறிகளைச் சிறுத்தை செல்லும் வழித்தடங்களில் வைத்தது. இந்தக் கூண்டுப் பொறிகளில் சுமார் 20 சிறுத்தைகள் பிடிபட்டுக் கொல்லப்பட்டன. இறுதியாக, ஆட்கொல்லி சிறுத்தையும் பிடிபட்டது. ஆனால் அச்சிறுத்தையைக் கொல்ல யாரும் முன்வரவில்லை. ஆட்கொல்லி சிறுத்தையைக் கொன்றால், அது கொன்ற மனிதர்களின் ஆன்மா தங்களைத் தொந்தரவு செய்யும் என்று கார்வாலில் இருந்த ஹிந்து மக்கள் அனைவரும் நம்பினர். முடிவாக, சிறுத்தை பிடிபட்ட இடத்திலிருந்து சுமார் 30 மைல் தொலைவிலுள்ள கிராமத்தில் வசித்து வந்த ஒரு இந்திய கிருத்தவர் ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்ல வரவழைக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டம், அவர் வருவதற்குள் சிறுத்தை கூண்டிற்கு அடியே குழிபறித்துத் தப்பிச் சென்றுவிட்டது.

மற்றொரு முறை, இச்சிறுத்தை ஒருவரை அடித்துக் கொன்றது. கொன்ற பிறகு அங்கேயே அமர்ந்திருந்தது சிறுத்தை. அந்த இடம் ஒரு சிறிய தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதி. இறந்தவரைத் தேடிச் சென்றவர்கள் சிறுத்தையைப் பார்த்தனர். அவர்களைப் பார்த்த சிறுத்தை அங்கிருந்து ஓடியது. அவர்களும் சிறுத்தையை விரட்டிச் சென்றனர். சிறுத்தை ஒரு குகையினுள் தஞ்சம் புகுந்தது. துரத்தியவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அக்குகையின் முகப்பை முட்புதர்களை வைத்தும், பெரிய கற்களைக் கொண்டும் மூடினர். ஒவ்வொரு நாளும், அந்தக் குகையைக் காண மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்தவண்ணம் இருந்தது. ஐந்தாம் நாளன்று, கூட்டத்தில் இருந்த அவ்வூரின் முக்கியப் புள்ளி ஏளனமாக, ‘இந்தக் குகையில் சிறுத்தையும் இல்லை ஒன்றும் இல்லை’ என்று கூறி, குகையை மூடியிருந்த முட்புதர்களை நீக்கினார். அவர் புதர்களை விலக்கிய அடுத்த நொடி, சிறுத்தை குகையை விட்டு வெளியேறி அங்குக் கூடியிருந்த சுமார் 500 நபர்களின் கண்ணெதிரேயே லாகவமாகத் தப்பித்துச் சென்றது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *