Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

காட்டில் சுலபமாகக் கொல்லப்படும் விலங்கு ஒன்று உண்டு என்றால் அது சிறுத்தைதான். சில சிறுத்தைகள் வேட்டைக்காகக் கொல்லப்பட்டன. சில வருமானத்திற்காகக் கொல்லப்பட்டன. தேவைக்கு ஏற்றார் போல் சிறுத்தைகள் கொல்லப்பட்டு வந்தன. (1972 ஆம் ஆண்டில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு, மிருகங்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது. அதற்கு முன்னர், விலங்குகளை வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனேகம் பேர்.)

ஏனைய மிருகங்களை விடச் சிறுத்தையைக் கொல்வதில் பல உத்திகள் கையாளப்பட்டன. காட்டில் சிறுத்தை இருப்பதைக் கண்டுபிடித்து அதனைப் பின்தொடர்ந்து சென்று சுட்டு வீழ்த்துவது என்பது வேட்டைக்காரர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும், சிலிர்ப்பூட்டும் விதமாகவும் இருந்தது. எளிமையாகவும் அதே சமயத்தில் கொடூரமான முறையில் சிறுத்தையைக் கொல்லும் யுக்தி ஒன்று உண்டு. அது வெடிகுண்டு வைத்துக் கொல்வது. வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் கிராமத்தவர்களுக்குத் தேர்ச்சி உண்டு. சிறுத்தை இல்லாதபோது, அது வேட்டையாடிக் கொன்ற இரையில் வெடியை வைத்து விடுவார்கள். தன்னுடைய இரையை உண்ண வரும் சிறுத்தை, அதில் வெடிகுண்டு இருப்பது தெரியாமல் வெடியைக் கடித்துவிடும். அப்பொழுது வெடிகுண்டு வெடித்துச் சிறுத்தையின் பல், வாய் எல்லாம் சிதறி விடும். இம்மாதிரிச் சம்பவங்களில் சிறுத்தைகள் அனேகமாக உடனே இறந்து விடும்.. பல சமயங்களில் குண்டடிபட்ட சிறுத்தைகள் காயத்துடனே அவ்விடத்தை விட்டுச் சென்று விடும். மிகுந்த வலிக்கும், வேதனைக்கும் ஆளான அச்சிறுத்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடும். வெடிகுண்டு வைத்து சிறுத்தையைக் கொல்ல நினைப்பவர்கள் பொதுவாகத் தைரியசாலிகள் கிடையாது. அதனால் அவர்கள் அடிபட்ட சிறுத்தையைப் பின்தொடர்வது இல்லை. பின்தொடர்ந்து சென்று அவற்றை வீழ்த்துவதும் இல்லை.

ஒரு சிறுத்தையை வனத்தில் பின்தொடர்ந்து செல்வது என்பது கடினமான விஷயம் இல்லை. சிறுத்தைகளின் திண்டுகள் (பாதங்கள்) மென்மையானவை. அதனால் அவை பொதுவாகக் காட்டில் உள்ள நடைபாதைகளிலும், வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் வழித்தடங்களின் வழியாகவும்தான் செல்லும். அதனால் சிறுத்தையை வனத்தில் கண்டுபிடிப்பது கடினமன்று. வனத்தில் இருக்கும் பறவைகளும், இதர விலங்குகளும் சிறுத்தையின் நடமாட்டத்தை மனிதர்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும்.

வேட்டைக்காரர்கள் சிறுத்தைகளை எளிதாகப் பின்தொடர்வதற்கு மற்றொரு காரணம், சிறுத்தைக்கு மோப்பச் சக்தி கிடையாது. சிறுத்தைக்கு நுகரும் தன்மைதான் இல்லையே தவிர, அதற்குக் கூரிய பார்வையும், நல்ல செவித்திறனும் உண்டு. இதனை அடிப்படையாகக் கொண்டு வேட்டைக்காரர்கள் சிறுத்தையைப் பின்தொடர்வார்கள். அவர்கள் காற்றடிக்கும் திசையைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. காரணம், சிறுத்தைக்குத்தான் மோப்ப சக்தி கிடையாதே. இதுவே மோப்பச் சக்தி உள்ள வேறு விலங்குகளாக இருந்தால், மனிதர்கள் பின்தொடர்வதை அறிந்து அவ்விலங்குகள் அந்த இடத்தை விட்டுத் தப்பிவிடும் அல்லது மனிதர்களைத் தாக்கத் தயாராகும்.

வனத்தில் ஒரு சிறுத்தையைத் தேடிச் சென்று, அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதனைப் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் கொல்வதை விட, அச்சிறுத்தையைக் கேமராவில் படம் எடுப்பதுதான் உண்மையில் சிலிர்ப்பூட்டும் விஷயம். சிறுத்தையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகான விலங்கு. சுவாரஸ்யமான விலங்கும் கூட.

துப்பாக்கியின் விசையை அழுத்தினால், குறி சரியாக இருக்கும் பட்சத்தில், அது அடுத்த நொடி சிறுத்தையைச் சென்று தாக்கி வீழ்த்தி விடும். வேட்டைக்காரனின் சிலிர்ப்பும், ஆர்வமும் அத்துடன் அடங்கி விடும். இதுவே கேமராவின் விசையை அழுத்திச் சிறுத்தையைப் படம் பிடித்தால், அப்படத்தை பார்க்கும்போதெல்லாம் நம்முடைய ஆர்வமும், சுவாரஸ்யமும் என்றும் மனதில் நிலைத்திருக்கும்.

கார்பெட் ருத்ரபிரயாக்கிற்கு வந்த பிறகு, வனத்தில் கொட்டுச் சத்தத்திற்கு (beat) ஏற்பாடு செய்திருந்தார் இபாட்சன். பீட் என்பது நூற்றுக்கணக்கான மனிதர்களை வைத்து, வனத்திற்குள் பறை அடித்துச் சத்தத்தை எழுப்புவது. அந்தச் சத்தத்தைக் கேட்டு மிருகங்கள் வனத்தை விட்டு வெளியே வரும். அப்பொழுது எதிர்த் திசையில் தயாராக இருக்கும் வேட்டைக்காரர்கள், வெளியில் வரும் மிருகங்களைச் சுட்டு வீழ்த்துவர். ருத்ரபிரயாக்கில் இபாட்சன் இது போன்ற ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய எதிர்பார்ப்பு, பீட்டின் போது ஆட்கொல்லி சிறுத்தை வெளிப்படும், அதைச் சுட்டு வீழ்த்தி விடலாம் என்பதாகும். இந்த பீட் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், மேலும் 15 நபர்களின் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

பீட் நடப்பதற்கு ஒரு நாள் முன்னர், பத்ரிநாத்திற்குச் செல்லும் 20 யாத்திரிகர்கள், மாலை நேரத்தில் ருத்ரபிரயாக் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்குச் சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய கடையை அடைந்தார்கள். கடைக்காரர் யாத்திரிகர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ‘அந்தி சாய இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது; அனைவரும் வேகமாகப் பயணித்து, மேலே நான்கு மைல் தொலைவில் உள்ள யாத்திரிகர்கள் கூடத்திற்குச் செல்லுங்கள்’ என்று வலியுறுத்தினார். அங்கு யாத்திரிகர்களுக்குத் தங்கும் வசதியும், உணவும் கிடைக்கும் என்றும் கடைக்காரர் தெரிவித்தார்.

ஆனால் யாத்திரிகர்கள் கடைக்காரரின் யோசனைக்கு இசைந்து கொடுக்கவில்லை. ‘நாங்கள் வெகு தூரம் நடந்து வந்திருக்கிறோம். களைப்பாக இருக்கிறது. எங்களால் இன்னும் நான்கு மைல் தூரம் நடக்க முடியாது. எங்களுக்கு உணவு சமைக்க ஓர் இடமும், இரவில் தூங்குவதற்குக் கடையின் வெளியில் உள்ள பிளாட்பாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கொடுங்கள்’ என்று அவர்கள் கடைக்காரரை வேண்டினர்.

யாத்திரிகர்களின் இந்த யோசனைக்குக் கடைக்காரர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார். தன்னுடைய வீட்டிற்கு ஆட்கொல்லி சிறுத்தை அடிக்கடி வந்து போவதாகவும், இரவில் வெட்டவெளியில் படுத்து உறங்குவது என்பது கண்டிப்பாக மரணத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றது என்றும் தெரிவித்தார்.

இப்படியாக யாத்திரிகர்களுக்கும் கடைக்காரருக்கும் விவாதம் நடந்து கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு மதுராவிலிருந்து ஒரு சாது வந்தார். அவர் கடைக்காரரிடம், யாத்திரிகர்களுக்காக வாதாடினார். சாது கடைக்காரரிடம், யாத்திரிகர் கூட்டத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பான இடத்தைக் கொடுக்கும்படியும்; தான் உள்பட கூட்டத்தில் உள்ள மற்ற ஆண்கள் அனைவரும் கடையின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் படுத்துக் கொள்வதாகவும், ஆட்கொல்லி சிறுத்தை ஏதும் வந்து யாத்திரிகர்களைத் தாக்கினால், தான் அதன் வாயைப் பிடித்து இரண்டாகப் பிளந்து விடுவதாகவும் தெரிவித்தார்.

சாது கூறியதைக் கேட்ட கடைக்காரர் வேறு வழியின்றி யாத்திரிகர்களை அங்குத் தங்க ஒப்புக்கொண்டார். கூட்டத்தில் வந்த 10 பெண்கள் மட்டும் கடையினுள் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆண்கள் அனைவரும் வரிசையாகக் கடைக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்துக்கொண்டனர். சாது அவர்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டார்.

மறுநாள் விடிந்தது. யாத்திரிகர்கள் எழுந்தனர். அவர்களின் நடுவே படுத்திருந்த சாதுவைக் காணவில்லை. சாது படுத்திருந்த போர்வை கலைந்திருந்தது. அவர் போர்த்தியிருந்த விரிப்பு பிளாட்பாரத்திற்கு வெளியே கிடந்தது. அதில் ரத்தக்கறை காணப்பட்டது. யாத்திரிகர்கள் ஒருவருக்கொருவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசும் சத்தம் கேட்டு, வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த கடைக்காரர், அங்கு நடந்ததைப் பார்த்தார். சூரிய வெளிச்சம் வந்த பிறகு, கடைக்காரர் யாத்திரிகர்களைக் கூட்டிக்கொண்டு ரத்தக்கறை படிந்திருந்த தடத்தின் வழியே சென்றார். மலையின் இறக்கத்திற்கு அனைவரும் வந்தார்கள். அங்கிருந்து மூன்று அடுக்கு நிலத்தை (terraced field) கடந்தார்கள். பின்னர், அவர்கள் கண்களில் ஒரு சிறிய எல்லைச் சுவர் பட்டது. அச்சுவற்றின் குறுக்கே சாதுவின் பாதி உடல் கிடந்தது. கீழ் பாதி உடலைச் சிறுத்தை தின்றுவிட்டது.

இந்த சமயத்தில்தான், ருத்ரபிரயாக்கில் தங்கியிருந்த இபாட்சன், ஆட்கொல்லி சிறுத்தை எங்கு இருக்கும் என்ற விவரத்தைத் தெரிந்து கொண்டு, பீட் நடக்க ஏற்பாடு செய்தார்.

அலக்நந்தா நதியிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள பகுதியில், பகல் பொழுதுகளில் ஆட்கொல்லி சிறுத்தை தங்குவதாக உள்ளூர் மக்கள் கருதினர். அதனால் அப்பகுதியில் பீட் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இபாட்சனின் வேலையாட்களும் பட்வாரிக்களும், சுற்று வட்டாரக் கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண்களை மறுநாள் நடக்கவிருக்கும் பீட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்தனர்.

மறுநாள் காலை இபாட்சன், அவரது மனைவி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பறை அடிக்கும் 200 பேர்கள் என அனைவரும் தொங்கு பாலத்தின் வழியாக அலக்நந்தா நதியைக் கடந்து, மலைமேல் ஏறி சுமார் ஒரு மைல் தூரம் சென்று, பின்னர் அங்கிருந்தபடியே பறையை அடித்துக் கொண்டு வந்தார்கள்.

இவ்வாறாக பீட் நடந்து கொண்டிருந்த பொழுது, இபாட்சனின் ஏவலன் ஒருவன் அங்கு ஓடிவந்து, முதல் நாள் இரவு ஆட்கொல்லி சிறுத்தை சாது ஒருவரை அடித்துக் கொன்ற விஷயத்தை இபாட்சனிடம் தெரிவித்தான்.

பீட் நடந்து கொண்டிருந்த இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை இல்லை என்பது ஊர்ஜிதமாகியது. அடுத்து என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிக்கப்பட்டது. முடிவில், இபாட்சனும் பறை அடிப்பவர்களும் அலக்நந்தா நதியின் வடகரையிலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ஊஞ்சல் பாலத்தின் மூலமாக தென் கரையை அடைந்தனர். அங்கிருந்து சாதுவின் உடல் கிடந்த இடத்திற்குச் சென்றனர். அதே சமயத்தில் இபாட்சனின் அலுவலகப் பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று, பறையடிக்க மேலும் பல ஆண்களைத் திரட்டிக் கொண்டு, யாத்திரிகர்கள் இருந்த கடைக்கு வந்தனர்.

மதியத்திற்குள் பறை அடிக்க 2000 பேர்கள் கூடிவிட்டனர். ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்கள் நிறையப் பேரும் கூடிவிட்டனர். கடைக்கு மேலே இருந்த கரடுமுரடான மலையிலிருந்து பறை அடிப்பவர்கள், பறையை அடித்துக்கொண்டு கீழ்நோக்கி வந்தார்கள். பறைகள் சரிவர நன்றாகத்தான் அடிக்கப்பட்டன, இருப்பினும் அதனால் எந்தப் பயனும் இல்லை. சிறுத்தை வெளியே வரவில்லை. காரணம், ஆட்கொல்லி சிறுத்தை அப்பகுதியிலேயே இல்லை.

எந்த ஒரு சிறுத்தையோ அல்லது புலியோ, தான் வேட்டையாடிய இரையை, பாதி புசித்துவிட்டுத் திறந்த வெளியில் எந்தக் காரணமும் இல்லாமல் விட்டுச் செல்கிறது என்றால், அதற்கு அந்த இரையின் மீது ஆர்வம் இல்லை என்று அர்த்தம். அது அந்த இரையைத் தேடி மறுபடியும் வராது. அவ்விடத்தை விட்டுச் சுமார் 2 அல்லது 3 மைல் தொலைவிற்கு வேட்டையாடிய விலங்கு விலகிச் சென்று விடும். சில சமயங்களில் பத்து மைல் அல்லது அதற்குக் கூடுதலான தூரத்திற்கும் சென்றுவிடும். அதனால்தான், மலையில் நிறையக் கிராமவாசிகள் பறையடித்துக் கொண்டு வந்தாலும், அங்கு ஆட்கொல்லி சிறுத்தை வெளிப்படவில்லை. மாறாக, சுமார் 10 மைல் தொலைவில், வேறோர் இடத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *