Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12

ஜிம் கார்பெட்

புலியின் கொடும்பாவி ஒரு பெரிய கம்பத்தில் கட்டப்பட்டு, செங்குத்தான பாதை ஒன்றின் வழியாக ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொடும்பாவியுடன் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் சென்றனர். அதில் சிலர் சேகண்டி அடித்தபடியும், தாரைகளை ஊதியபடியும் சென்றனர்.

ஆற்றங்கரைக்கு வந்ததும் கொடும்பாவி, கம்பத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டது. தலைப்பாகையிலும், மார்பிலும் சிலுவை ஏந்திய வெள்ளை அங்கி உடுத்திய நபர், கையில் ஆறு அடிச் சிலுவையை வைத்திருந்தபடி ஆற்று மணலில் மண்டியிட்டு, துஷ்ட ஆவியைத் தன் பிரார்த்தனையின் மூலம் கொடும்பாவியினுள் புகுத்தினார். பின்னர் கொடும்பாவி கங்கை நதியில் விடப்பட்டது. கூடவே சேகண்டிச் சத்தமும், தாரை சத்தமும் காதைப் பிளந்தது. கொடும்பாவி கடலை நோக்கி வேகமாகப் பயணித்தது. கூடியிருந்தவர்கள் மலர் தூவி, இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.

மறுநாள் காலை அந்த வெள்ளை அங்கி நபரை கார்பெட்டால் பார்க்க முடியவில்லை. விடியற்காலையில் ஆற்றில் நீராடச் சென்று கொண்டிருந்த சிலரை நிறுத்தி, ‘அந்த வெள்ளை அங்கி நபர் எங்கிருந்து வந்தார்? எங்கு சென்றார்?’ என்று கார்பெட் வினவினார். அதற்கு அவர்கள், ‘ஒரு புனித நபர் எங்கிருந்து வந்தார்? அல்லது எங்கே சென்றார்? என்று யாரால் கேட்கமுடியும்?’ என்று பதிலளித்தனர்.

நீராடச் சென்ற நபர்கள் அனைவரும் தங்களது நெற்றியில் சந்தனத்தைக் குழைத்து சாதி அடையாளங்களைத் தரித்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளை அங்கி உடுத்தியிருந்த மனிதரை ‘புனிதர்’ என்று குறிப்பிட்டனர். இவர்களும், சென்ற தினம் கொடும்பாவியை ஆற்றில் விட வந்திருந்த மற்ற அனைவரும் ஹிந்துக்கள்.

இந்தியாவில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லக் கடவுச்சீட்டோ அல்லது அடையாள அட்டையோ தேவையில்லை. இங்கு அனைவரும் மதத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். காவி உடை தரித்து, கையில் பிக்‌ஷைப் பாத்திரம் ஏந்திய ஒரு நபரோ அல்லது தலைக்கவசத்திலும், மார்பிலும் சிலுவை தரித்த ஒரு நபரோ, கைபர் கணவாய் முதல் குமரிக் கடல் வரை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்ல முடியும். அவர்களை எங்குச் செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள் என்று ஒருவரும் கேட்கமாட்டார்கள்.

கார்பெட், தொங்கு பாலத்தில் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்துக்கொண்டிருந்த நாட்களில், இபாட்சனும் அவரது மனைவியான ஜீனும் பெளரியிலிருந்து ருத்ரபிரயாக்கிற்கு வந்தார்கள். ஆய்வு பங்களாவில் மூவர் தங்குவதற்குப் போதுமான இடம் இல்லாததால், கார்பெட் ஆய்வு பங்களாவை விட்டு வெளியேறினார். யாத்திரிகர்கள் செல்லும் சாலைக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு மலையில் கூடாரம் அமைத்துத் தங்க முனைந்தார்.

ஆட்கொல்லி சிறுத்தை நடமாடும் ஒரு வனப்பகுதியில் ஒரு கூடாரத்தில் தங்குவது, அதுவும் அச்சிறுத்தை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் தன் நகக் கீறல்களை விட்டுச் சென்றிருக்கும் பொழுது, அங்குக் கூடாரத்தில் தங்குவது என்பது பாதுகாப்பற்ற ஒன்று. எனவே, கார்பெட், தான் கூடாரம் அமைக்கவிருக்கும் இடத்தில் தன் ஆட்களைக் கொண்டு முட்களினால் ஆன ஒரு வேலியை அமைத்தார்.

அவர் கூடாரம் அமைக்கவிருந்த இடத்திற்கு மேலே ஒரு சப்பாத்திக் கள்ளி மரத்தின் கிளை நீட்டிக் கொண்டிருந்தது. அம்மரக்கிளை கூடாரம் அமைக்க இடைஞ்சலாக இருந்ததால், கார்பெட் தன் ஆட்களை விட்டு அந்தச் சப்பாத்திக் கள்ளி மரத்தை வெட்டிவிடும்படிக் கட்டளையிட்டார். ஆட்கள் சப்பாத்திக் கள்ளி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது கார்பெட்டுக்கு ஒரு யோசனை தோன்றியது. பகல் நேரத்தில் அம்மரம் கூடாரத்திற்கு நல்ல நிழலைக் கொடுக்கும் என்று எண்ணிய கார்பெட், அம்மரத்தை வெட்டுவதற்குப் பதிலாக இடைஞ்சலாக இருக்கும் மரக்கிளையை மட்டும் வெட்டும்படி தன் ஆட்களைப் பணித்தார். அந்தச் சப்பாத்திக் கள்ளி மரம், முள்வேலிக்கு வெளியே சற்றுத் தூரத்தில் இருந்தாலும், அது கூடாரத்தின் மேல் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக இருந்தது.

கார்பெட்டுடன் சேர்ந்து மொத்தம் 8 பேர் அந்தக் கூடாரத்தில் தங்கினர். இரவு உணவுக்குப் பின், வேலியின் முகப்பை முட்புதர் கொண்டு பாதுகாப்பாக மூடினார் கார்பெட். அப்பொழுதுதான் அவருக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. ஆட்கொல்லி சிறுத்தையால் சுலபமாகச் சப்பாத்திக் கள்ளி மரத்தின் மீது ஏறி அப்படியே லாகவமாக வேலியைத் தாண்டிக் கூடாரம் இருக்கும் இடத்தில் குதித்து விட முடியும். ஆனால் அவரால் அப்பொழுது செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. ஆட்கொல்லி சிறுத்தை ஒருவேளை கார்பெட்டையும், அவரது ஆட்களையும் மறுநாள் வரை உயிருடன் விட்டு வைத்திருந்தால், மறுநாள் அச்சப்பாத்திக் கள்ளி மரத்தை வெட்டி அகற்றத் தீர்மானித்திருந்தார் கார்பெட்.

கார்பெட்டிடம், தன் ஆட்களைத் தங்க வைக்கத் தனியே கூடாரம் இல்லை. எனவே அவர்களை ஆய்வு பங்களாவிற்கு வெளியே உள்ள சிறிய கட்டடத்தில் இபாட்சனின் ஆட்களுடன் தங்கிக் கொள்ளுமாறு வேண்டினார். அவர்களோ அதற்கு மறுத்து விட்டனர். கார்பெட்டுடன் வெளியில் கூடாரத்தில் தங்குவதைப் பாதுகாப்பாகக் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர். கார்பெட்டுக்கு அருகாமையில் அவரது சமையல்காரர் படுத்துறங்கினார். அவர் ஒரு பெரிய குறட்டை விடும் பேர்வழி. அவருக்கு அடுத்தாற்போல் கார்பெட் நைனிடாலிலிருந்து அழைத்து வந்திருந்த ஆறு கார்வாலிகள் வரிசையாகப் படுத்திருந்தனர்.

கார்பெட்டின் கூடார ஏற்பாட்டில் ஒரு பலவீனமான பகுதி உண்டென்றால், அது வேலியின் மீது சாய்வாக இருக்கும் சப்பாத்திக் கள்ளி மரம் தான். இதை மனதில் நினைத்தவாறே கார்பெட் தூங்கச் சென்றார்.

அன்று இரவு நிலா வெளிச்சம் நன்றாக இருந்தது. நள்ளிரவில் சிறுத்தை சப்பாத்திக் கள்ளி மரத்தில் ஏறும் சத்தம் கேட்ட கார்பெட் திடீரென்று கண் விழித்தார். தன் படுக்கையின் அருகே தயாராக வைத்திருந்த ரைபிள் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு, கட்டிலை விட்டுக் கீழே இறங்கி தன் செருப்புகளுக்குள் காலை நுழைத்தார். காரணம் சுற்றிலும் தரையில் முட்கள் சிதறிக் கிடந்தன. அப்பொழுது பாதி வெட்டப்பட்டிருந்த சப்பாத்திக் கள்ளி மரத்திலிருந்து ஒரு விரிசல் விழும் சப்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து ‘புலி! புலி!’ என்று கார்பெட்டின் சமையல்காரனிடமிருந்து அலறல் சத்தம் கேட்டது. ஒரே துள்ளலில் கார்பெட் தன் கூடாரத்தை விட்டு வெளியே வந்தார். சப்பாத்திக் கள்ளி மரம் இருக்கும் திசையில் பார்த்தார். தன் துப்பாக்கியைச் சிறுத்தை மீது குறி வைப்பதற்குள், சிறுத்தை மரத்திலிருந்து கீழே உள்ள அடுக்கு வயல் கரையின் மீது தாவிக் குதித்துச் சென்றது. வேலியின் முட்புதரை நீக்கி விட்டு வயலை நோக்கி ஓடினார் கார்பெட். அது நாற்பது கஜ தூரம் அகலம் உள்ள வயல். அதில் பயிர்கள் எதுவும் இல்லை. அங்கிருந்தபடியே கார்பெட் பாறைகளும், முட்புதர்களும் நிறைந்த மலையை உற்றுக் கவனித்தார். அப்பொழுது தூரத்தில் மலை முகட்டில் ஒரு குள்ள நரி எச்சரிக்கை ஒலி எழுப்பும் சத்தம் கார்பெட்டின் காதில் கேட்டது. அந்தச் சத்தம் ஆட்கொல்லி சிறுத்தை கார்பெட் இருந்த இடத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டது என்பதை உணர்த்தியது.

கார்பெட்டின் சமையல்காரன் மல்லாந்து படுத்திருந்த பொழுது சப்பாத்திக் கள்ளி மரம் விரிசல் விடும் சத்தத்தைக் கேட்டு கண் விழித்துப் பார்த்த போது, சிறுத்தையின் முகம் அவனுக்கு நன்கு தெரிந்தது. சிறுத்தை மரத்திலிருந்து குதிக்கத் தயாராகிக் கொண்டிருந்த தருணம் அது.

மறுநாள் காலை, சப்பாத்திக் கள்ளி மரம் வெட்டப்பட்டு அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. முள் வேலி மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கார்பெட்டும் அவரது ஆட்களும் அந்தக் கூடாரத்தில் பல வாரங்கள் தங்கினர். ஆனால் அவர்களது தூக்கத்திற்கு எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை.

அருகாமையில் இருந்த கிராமங்களில் உள்ள வீடுகளில் ஆட்கொல்லி சிறுத்தை நுழைய முயற்சித்ததாகக் கார்பெட்டுக்குத் தகவல் வந்தது. சாலைகளில் உள்ள சிறுத்தையின் கால் சுவடுகளை வைத்து, ஆட்கொல்லி சிறுத்தை அந்தச் சுற்று வட்டாரப் பகுதியில்தான் சுற்றித் திரிகிறது என்பதைக் கார்பெட் உறுதிப்படுத்திக் கொண்டார். இபாட்சன் வந்த சிறிது நாட்களில், ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தை ஒன்று மாட்டை அடித்துக் கொன்றதாகத் தகவல் வந்தது. இக்கிராமமானது கார்பெட் ஏற்கெனவே ஒரு வால்னட் மரத்தின் மீது வைக்கோல் போரில் ஆட்கொல்லி சிறுத்தைக்காகக் காத்திருந்த இடத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில்தான் இருந்தது.

கார்பெட்டும் அவரது ஆட்களும் மாடு கொல்லப்பட்ட கிராமத்தை அடைந்தனர். அந்தக் கிராமத்திற்கு வந்த ஆட்கொல்லி சிறுத்தை ஓர் அறை கொண்ட வீட்டின் கதவை உடைத்து, அங்கிருந்த மாடுகளில் ஒன்றை அடித்துக் கொன்று, அதன் உடலை இழுத்துச் செல்லப் பார்த்திருக்கிறது. கதவின் வழியே மாட்டை இழுத்துச் செல்ல முடியாது போகவே, அங்கேயே தன் இரையை உண்டு, மீதத்தை வாசலிலேயே விட்டுச் சென்றிருக்கிறது சிறுத்தை.

அந்த வீடு, கிராமத்தின் மையப் பகுதியில் இருந்தது. கார்பெட்டும் அவரது ஆட்களும் அவ்விடத்தைச் சுற்றி வந்த பிறகு, அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. இரை இருந்த இடத்திலிருந்து சில கஜ தூரத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் துளையிட்டு, அதன் வழியே ஆட்கொல்லி சிறுத்தை அங்கு வருவதைக் கண்காணிக்கலாம் என்ற யோசனைதான் அது.

அந்த வீட்டின் உரிமையாளரும், இறந்த மாட்டின் உரிமையாளரும் ஒருவரே என்பதால், அவர் தன் வீட்டுச் சுவரில் துளையிட அனுமதித்தார். மாலை வேளை வந்தது. கார்பெட்டும் அவரது ஆட்களும் அந்த வீட்டின் அறையில் பாதுகாப்பாக இருந்தனர். கொண்டு வந்த சாண்ட்விச்சுகளையும், தேநீரையும் பருகிய பிறகு, மாறி மாறி சுவரில் போடப்பட்ட துளையின் வழியே கண்காணித்து வந்தனர். ஆனால் அவர்களின் காவல் பலனளிக்கவில்லை. ஆட்கொல்லி சிறுத்தை அன்றிரவு அங்கு வரவில்லை.

மறுநாள் காலை கார்பெட்டும் அவரது ஆட்களும் அவ்வீட்டை விட்டு வெளியே வந்ததும், அக்கிராம மக்கள் தங்கள் கிராமத்தை அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்தனர். அது ஓர் அளவிற்குப் பெரிய கிராமம். அங்குள்ள வீடுகளின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் ஆட்கொல்லி சிறுத்தை அதன் நகக் கீறல்களைப் பதித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆட்கொல்லி சிறுத்தை அவ்வீடுகளில் நுழைய முயற்சித்தபோது ஏற்பட்ட கீறல்கள் அவை. குறிப்பாக ஒரு வீட்டின் கதவில் அதிகமாகவும், ஆழமாகவும் நகக் கீறல்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்னர் ஒரு முறை, நாற்பது ஆடுகளும் ஒரு சிறுவனும் வீட்டினுள் இருந்தபோது ஆட்கொல்லி சிறுத்தை அவ்வீட்டினுள் நுழைந்து அச்சிறுவனை மட்டும் அடித்துத் தூக்கிச் சென்றிருந்தது., ஆகவேதான் அந்த வீட்டின் கதவில் அவ்வளவு கீறல்கள் இடம்பெற்றிருந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆய்வு பங்களாவின் அருகாமையில் சுமார் நூறு கஜ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சிறுத்தை ஒரு மாட்டை அடித்துக் கொன்றது. இம்முறையும் சிறுத்தை வீட்டிலிருந்த மாட்டை அடித்துக் கொன்றிருக்கிறது. பின்னர், தான் அடித்த மாட்டை வீட்டின் கதவு வரை இழுத்துச் சென்றிருக்கிறது. பின்னர் அங்கேயே தன் இரையைப் பாதி தின்று விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அந்த வீட்டின் கதவிற்கு நேர் எதிராகச் சுமார் 10 கஜ தூரத்தில், தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் ஒரு மர மேடை அமைக்கப்பட்டு, அந்த மர மேடையில் சுமார் 16 அடி உயரத்திற்கு வைக்கோல் போர் இருந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *