மாடு கொல்லப்பட்ட செய்தி கார்பெட்டுக்கு விடியற்காலையிலேயே தெரிந்ததால், அவரால் மாலைக்குள் ஓர் அருமையான நடைமேடையை அமைக்க முடிந்தது. அந்த மேடை மிக வசதியாகவும் இருந்தது.
வைக்கோல் போர் கலைக்கப்பட்டது. வைக்கோல் போர் இருந்த நடைமேடையைச் சுற்றிக் கம்புகள் ஊன்றப்பட்டன. ஊன்றப்பட்ட கம்புகளைக் கொண்டு ஏற்கெனவே இருந்த நடைமேடைக்கு மேலே சுமார் நான்கு அடி உயரத்தில் ஒரு சிறிய நடைமேடை அமைக்கப்பட்டது. அந்தக் கட்டுமானத்தைச் சுற்றி கம்பி வலை போடப்பட்டது. கீழ் நடைமேடைக்கும் தரைக்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தது. வலையில் உள்ள ஓட்டைகளில் வைக்கோல் கற்றைகள் திணிக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட வைக்கோல் போரைச் சுற்றி, கீழே சிறிய அளவில் வைக்கோல்கள் சிதறடிக்கப்பட்டன. புதிய வைக்கோல் போர் அமைக்கப்படுவதற்கு முன்னர் அந்த இடம் எப்படி இருந்ததோ அதே சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த ஏற்பாடுகளெல்லாம் நடந்து கொண்டிருந்தபொழுது வைக்கோல் போரின் உரிமையாளர்களில் வெளியூருக்குச் சென்றிருந்த ஒருவர் திரும்பி வந்தார். வைக்கோல் போரைப் பார்த்த அவருக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஊருக்குச் செல்வதற்கு முன்னர் வைக்கோல் போர் எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதாக நினைத்தார். பிறகு அருகில் உள்ள நிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் அவருக்குக் காட்டப்பட்டது. அது ஏற்கெனவே இருந்த வைக்கோல் போரிலிருந்து உதிரி வைக்கோல்களை வைத்துத் தயார் செய்யப்பட்ட ஒன்று.
மாலை அந்தி வேளையில், கார்பெட்டும் இபாட்சனும் கம்பி வலையினுள் போடப்பட்டிருந்த துளையின் வழியாக நடைமேடைகளுக்கு ஏறினர். அவர்கள் நடைமேடைகளில் ஏறியவுடன் அவர்கள் உள்ளே வந்த வழி பாதுகாப்பாக அடைக்கப்பட்டது. இபாட்சன் கார்பெட்டை விட சிறிய உருவத்தைக் கொண்டவர் என்பதால் அவர் மேலே உள்ள நடைமேடையில் அமர்ந்து கொண்டார். ஆட்கொல்லி சிறுத்தையைச் சுடுவதற்காக, இருவரும் தத்தம் நடைமேடைகளில் இருந்த வைக்கோல் போரில் ஒரு துளையை ஏற்படுத்திக்கொண்டனர்.
ஆட்கொல்லி சிறுத்தை வருவதை அறிந்து ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியதால் அவர்கள் ஒரு தீர்மானம் செய்து கொண்டனர். ஆட்கொல்லி சிறுத்தை யார் கண்களில் முதலில் படுகிறதோ அவர்கள் அதைச் சுட்டு வீழ்த்துவது என்பதாகும். அன்று இரவு நல்ல நிலவொளி இருந்ததால் டார்ச் லைட் பயன்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
இரவு உணவு வேளை முடிந்த பிறகு கிராமமே சத்தம் இன்றி அடங்கிப் போயிற்று. இரவு சுமார் 10 மணி இருக்கும்; மலையிலிருந்து ஆட்கொல்லி சிறுத்தை வரும் சத்தம் கார்பெட்டுக்குக் கேட்டது. வைக்கோல் போருக்கு அருகில் வந்த ஆட்கொல்லி சிறுத்தை சற்று நேரம் அமைதியாக இருந்தது. பின்னர் கார்பெட் அமர்ந்திருந்த நடைமேடைக்கு அடியில் தவழ்ந்து உள்ளே நுழைய முற்பட்டது. அப்பொழுது கார்பெட்டு அமர்ந்திருந்த இடத்திற்கும், சிறுத்தையின் மண்டைக்கும் இடையே ஒரு மரப்பலகை மட்டுமே இருந்தது. சற்றுக் காத்திருந்து விட்டு சிறுத்தை மறுபடியும் நடைமேடைக்கு உள்ளே தவழ்ந்து முன்னேறிச் செல்ல முயன்றது. சிறுத்தை நடைமேடைக்கு அடியிலிருந்து வெளியே வரும் பொழுது, சுமார் 3 அல்லது 4 அடி தொலைவு எல்லையில் அதைக் குறிபார்த்துச் சுட்டு விடலாம் என்று கார்பெட் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்த நேரம் பார்த்து மேலே இருந்த நடைமேடையிலிருந்து ஒரு கிரீச் என்ற சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட மறு நொடியே ஆட்கொல்லி சிறுத்தை, கார்பெட்டால் பார்க்க முடியாத சூழ்நிலையில், வலது பக்கமாக வேகமாக ஓடி கண் இமைக்கும் நேரத்தில் மலை மேல் ஏறி மறைந்தது. அந்த முக்கியமான கட்டத்தில் மேலே இருந்த நடைமேடையில் கிரீச் சத்தம் கேட்டதற்குக் காரணம், இபாட்சன் தன் கால்களில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் ஏற்பட்ட வலியைச் சரி செய்து கொள்ள, தான் உட்கார்ந்திருந்த நிலையை மாற்றியிருக்கிறார். கிரீச் சத்தத்தைக் கேட்டுப் பயந்தோடி தனது இரையை விட்டு ஓடிச் சென்ற ஆட்கொல்லி சிறுத்தை மறுபடியும் அன்று இரவு வரவில்லை. மறுநாளும் வரவில்லை.
இரு இரவுகள் கழிந்த பிறகு ருத்ரபிரயாக் பஜாருக்கு சில கஜ தூரத்திற்கு மேலே தனியே இருந்த ஒரு வீட்டில் ஆட்கொல்லி சிறுத்தை நுழையப் பார்த்தது. அந்த வீட்டில் ஒருவர் மட்டும் வசித்து வந்தார். அந்த வீட்டில் ஓர் அறை மட்டுமே இருந்தது. அந்த ஓர் அறையும் மரப்பலகைகள் கொண்டு இரு பாதியாகத் தடுக்கப்பட்டிருந்தது. ஒரு பாதியில் சமையல் அறையும், மற்றொரு பாதியில் வாழ் அறையும் (living room) இருந்தது. நள்ளிரவில் அந்த வீட்டில் இருந்தவர் சத்தம் கேட்டு முழித்தார். அவர் தூங்கச் செல்வதற்கு முன்னர் சமையல் அறையின் கதவை அடைக்க மறந்து விட்டார். திறந்திருந்த கதவின் வழியே நிலவொளியின் வெளிச்சம் தெரிந்தது. கதவின் ஊடே வந்த அந்த நிலவொளி அப்படியே சமையல் அறையையும், வாழ் அறையையும் பிரித்திருந்த மரப் பலகைகளின் இடைவெளி வழியாகக் கசிந்தது. அந்த வெளிச்சத்தில் தன் வீட்டின் உள்ளே ஆட்கொல்லி சிறுத்தை வந்திருப்பதைக் கண்ட வீட்டின் சொந்தக்காரர் அப்படியே அச்சத்தில் உரைந்து போனார். அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. ஆட்கொல்லி சிறுத்தை நடுவிலிருந்த பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தன் நகங்களால் பெயர்த்து எடுத்துவிட்டுச் சமையல் அறையைத் தாண்டி வாழ் அறையின் உள்ளே வர முயன்றது. ஆனால் அச்சிறுத்தையால் தடுப்பில் பலவீனமான பலகையைத் தேர்வு செய்ய முடியவில்லை. சமையல் அறையை விட்டுக் கிளம்பிய சிறுத்தை வீட்டை ஒட்டிய மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை அடித்துக் கொன்றது. பின்னர் மாட்டை அது கட்டப்பட்டிருந்த கயிற்றிலிருந்து அறுத்து வெளியே சற்று தூரம் இழுத்துச் சென்றது. அங்கு வெட்ட வெளியில் தனது இரையை உண்ட சிறுத்தை மீதமிருந்த உடலை அப்படியே விட்டுச் சென்றது.
மாட்டின் உடல் கிடந்த இடம் ஒரு மலை அடிவாரம். அந்த இடத்திலிருந்து சுமார் 20 கஜ தூரத்தில் நல்ல தடிமனான மரம் இருந்தது. அம்மரத்தின் மேலே உள்ள கிளைகளில் வைக்கோல் போர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வைக்கோல் போரில் கார்பெட்டும், இபாட்சனும் ஆட்கொல்லி சிறுத்தைக்காக காத்திருக்கத் தயாராயினர். இருவரும் மரத்தின் உயரே கிளைகளிலிருந்த வைக்கோல் போரிலிருந்து கீழே விழுந்தால் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில்தான் நேரே போய் விழவேண்டும்.
இதற்கிடையில் ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்கப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு ஜின் பொறி (gin-trap) கருவியை ருத்ரபிரயாக்கிற்கு தருவித்திருந்தது. 5 அடி நீளமும் 80 பவுண்ட் கனமும் கொண்டதாக இருந்தது அந்தக் கருவி பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. அந்தக் கருவியின் வாயில் 3 அங்குல நீளத்திற்குப் பற்கள் இருந்தன. அந்தக் கருவியின் வாய் அகலம் 24 அங்குலத்திற்கு இருந்தது. ஜின் பொறி செயல்பட அதில் இரண்டு சக்திவாய்ந்த சுருள் வில் (spring) பொருத்தப்பட்டிருந்தன. அந்தச் சுருள் வில்களை அழுத்த இரண்டு ஆட்கள் தேவைப்பட்டனர்.
ஆட்கொல்லி சிறுத்தை மாட்டைத் தின்று, அதன் மீதி உடலைப் போட்டுவிட்டு 40 கஜ தூரம் உள்ள ஒரு வயல் வழியாகச் சென்றிருந்தது. அந்த வயலில் 3 அடி உயரத்திற்கு வரப்பு இருந்தது. அந்த வரப்பை அடுத்து மேலே மற்றொரு வயல் இருந்தது. இந்த வயலை ஒட்டிப் புதர்கள் அதிகமாக மண்டிக்கிடந்த மலை இருந்தது. மேல் வயலிலிருந்து, கீழ் வயலுக்கு வரும் பொழுது அந்த 3 அடி உயரம் உள்ள வரப்பைத் தாண்டித்தான் வரவேண்டும். எனவே ஜின் பொறியை அந்த 3 அடி உயரம் கொண்ட வரப்பில் கார்பெட்டும், இபாட்சனும் வைத்தனர். ஆட்கொல்லி சிறுத்தை சரியாகப் பொறி இருக்கும் பாதையில் வரவேண்டும் என்பதற்காகப் பாதையின் இரு மருங்கிலும் முட் செடிகளை வைத்தனர். ஜின் பொறியை ஒரு 3 அங்குலத் தடிமனான சங்கிலியால் பிணைத்து, அந்தச் சங்கிலியின் முனையிலிருந்த 3 அங்குல விட்டம் கொண்ட வளையத்தில் ஒரு குச்சியோடு சொருகி, அந்தக் குச்சியை மண்ணில் புதைத்தனர்.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு இபாட்சனின் மனைவி ஜீன் பங்களாவிற்கு இபாட்சனின் ஆட்களுடன் திரும்பினார். கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது இருந்த வைக்கோல் போரில் வசதியாக அமர்ந்தனர். தங்களை மறைத்துக்கொள்ளத் தங்களுக்கு முன்னால் ஒரு குச்சியை நட்டு அதில் வைக்கோலைக் கட்டி வைத்தனர். இம்முறை ஆட்கொல்லி சிறுத்தை தங்களிடமிருந்து தப்ப முடியாது என்று தீர்மானத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
மாலைப் பொழுது முடியும் தறுவாயில் வானத்தில் மேகம் சூழ்ந்தது. இரவு 9 மணி. நிலவொளி வெளிச்சம் கிடைக்காது என்பதால் அவர்களுக்கு டார்ச் லைட்டின் வெளிச்சம் அவசியமானது. அந்த வெளிச்சத்தில்தான் அவர்களால் ஆட்கொல்லி சிறுத்தையைத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்த முடியும். அவர்களிடமிருந்த டார்ச் லைட் சற்றே கனமானது அதைத் துப்பாக்கியில் பொருத்துவது என்பது ஒரு கடினமான செயல். ஆட்கொல்லி சிறுத்தை வரும் பொழுது அதைக் கார்பெட் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று இபாட்சன் கேட்டுக் கொண்டதின் பெயரில், கார்பெட் டார்ச் லைட்டை சற்றுச் சிரமத்துடன் தன் துப்பாக்கியில் பொருத்திக் கொண்டார்.
நள்ளிரவில் சிறுத்தை சீற்றத்துடன் தொடர்ச்சியாக உருமும் சத்தம் கேட்டது. அது ஜின் கருவில் மாட்டிக்கொண்டதாக இருவருக்கும் தோன்றியது. கார்பெட் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். சிறுத்தையின் முன்னங் கால்கள் ஜின் பொறியில் சிக்கியிருந்தது. சிறுத்தை தன் காலைப் பொறியிலிருந்து விடுவித்து ஓட முயற்சி செய்து கொண்டிருந்தது. ஜின் பொறி சிறுத்தையின் காலில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்று முடிவெடுத்த கார்பெட் தன் துப்பாக்கியைக் குறி பார்த்துச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளியான .450 குண்டு ஜின் பொறியின் சங்கிலியைத் துண்டித்தது. ஜின் பொறி தரையிலிருந்து விடுபட்டது.
காலில் பொறியுடன் விடுபட்ட சிறுத்தை துள்ளிக் குதித்து வயலில் ஓடியது. கார்பெட்டின் துப்பாக்கியின் இடது குழலிலிருந்து மேலும் ஒரு தோட்டா வெளியானது. இபாட்சனும் தன்னுடைய shot gunலிருந்து தோட்டாக்களை வெளியேற்றினார். அனைத்துத் தோட்டாக்களும் குறியைத் தவற விட்டன. கார்பெட் தன் துப்பாக்கியில் தோட்டாக்களை மறுபடியும் பொதிக்க முயன்றபோது, துப்பாக்கியில் மாட்டப்பட்டிருந்த டார்ச் லைட் விலகியது. அதன் பின்னர் அந்த டார்ச் லைட் வேலை செய்யவில்லை.
சிறுத்தையின் உருமல்களையும், கார்பெட் மற்றும் இபாட்சனின் துப்பாக்கிகளிலிருந்து வெளியான தோட்டாக்களின் சத்தங்களைக் கேட்டவுடன், ருத்ரபிரயாக் பசாரில் வசித்துவந்த மக்களும், சுற்றுவட்டாரக் கிராமத்தில் இருந்த மக்களும் லாந்தர் விளக்குகளையும், தீப்பந்தங்களையும் ஏந்தியபடியே அந்த ஒற்றை வீட்டை நோக்கி அனைத்துத் திசைகளிலிருந்தும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சத்தமாகப் பேசிக்கொண்டபடியே வந்ததால், கார்பெட்டும், இபாட்சனும் அவர்களை அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள் என்று கூறியது அவர்களது காதுகளில் விழவில்லை. எனவே கார்பெட் இருளில் கஷ்டப்பட்டு தன் துப்பாக்கியுடன் மரத்தை விட்டுக் கீழே இறங்கினார். இபாட்சன் தான் கொண்டுவந்திருந்த பெட்ரோல் விளக்கை (petrol lamp) ஏற்றினார். அவ்விளக்கை ஒரு கயிற்றின் மூலம் மரத்திலிருந்து இறக்கினார். பின்னர் அவரும் மரத்தை விட்டுக் கீழே இறங்கினார். இருவரும் சிறுத்தை சென்ற திசையில் சென்றனர்.
(தொடரும்)