Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #16

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #16

ஜிம் கார்பெட்

சிலரது வாழ்க்கையில் எப்பொழுதோ நடந்த நிகழ்வுகள் அவர்கள் நினைவில் என்றும் மறையாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் அன்று கார்பெட்டுக்கு ஏற்பட்டது. அன்றிரவு, கார்பெட் இபாட்சனுடன் இருளில் மலையேறியது அவரது ஞாபகத்தில் இருந்து என்றும் மறைந்ததில்லை.

அன்றிரவு மலையை விட்டு இறங்கி நடைபாதையில் நடந்த போதும் அவர்களுடைய பிரச்னை தொடர்ந்தது. நடைபாதை நெடுகிலும் எருமை மாடுகள் புரண்ட சேறும் சகதியுமாக இருந்தது. தங்களுடைய ஆட்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வெளிச்சம் இல்லாமல் அந்தக் கும்மிருட்டில் ஈரத் தரையில் தட்டுத் தடுமாறி இருவரும் நடந்து சென்றனர். செல்லும் வழியில் கீழே கிடந்த பாறைகளில் மோதிக் கொண்டனர். பாதையின் முடிவில் அவர்களது கால்களில் ஏதோவொரு படிக்கட்டு தென்பட்டது. அந்தப் படிக்கட்டு அவர்களை ஒரு முற்றத்திற்குக் கூட்டிச் சென்றது. முற்றத்திற்கு எதிராக ஒரு கதவு தென்பட்டது. இருவரும் படியில் ஏறி வரும்பொழுதே உள்ளே யாரோ ஹூக்காவில் புகைபிடிக்கும் ஓசை கேட்டது.

கார்பெட் கதவை எட்டி உதைத்தார். உள்ளே இருப்பவர்களிடம் கதவைத் திறக்கும்படிக் கத்தினார். ஆனால் உள்ளே இருந்து ஒரு பதிலும் வரவில்லை. கார்பெட், தான் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் குலுக்கினார். இன்னும் ஒரு நிமிடத்தில் கதவு திறக்கப்படவில்லையென்றால், கூரை வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவேன் என்று எச்சரித்தார். எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறு வினாடியே உள்ளேயிருந்து ஒரு குரல் கதவு திறப்பதாகவும், வீட்டை கொளுத்த வேண்டாம் என்றும் பதற்றத்துடன் கெஞ்சியபடி கேட்டுக் கொண்டது.

முதலில் உட்கதவு திறக்கப்பட்டது. அதனையடுத்து வெளிக்கதவும் திறந்தது. கார்பெட்டும் இபாட்சனும் இரண்டே தாவலில் வீட்டினுள் சென்றனர். உள் கதவைப் படார் என்று சாத்தினர். இருவரும் தங்களது முதுகைக் கதவின் மீது வலுவாகச் சாய்த்தனர்.

அந்த அறையில் சுமார் பன்னிரண்டிலிருந்து பதினான்கு பேர் இருந்தனர். அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம். பல்வேறு வயது நிரம்பிய மாந்தர்கள் இருந்தனர். வீட்டிற்குள் முரட்டுத்தனமாக நுழைந்தது மனிதர்கள்தான் என்று உள்ளே இருந்தவர்கள் உணர்ந்த பின், அவர்கள் கார்பெட்டிடமும், இபாட்சனிடமும் தாங்கள் தாமதமாகக் கதவைத் திறந்ததற்கு மன்னிப்புக் கோரினர். பல ஆண்டுகளாக அவர்களது குடும்பம் ஆட்கொல்லி சிறுத்தையின் மீது பயம் கொண்டிருந்த காரணத்தால், தைரியத்தை இழந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆட்கொல்லி சிறுத்தை எந்த ரூபத்தை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால், இரவில், வெளியில் எந்தச் சத்தம் கேட்டாலும் அச்சம் தோன்றுவதாகத் தெரிவித்தனர். அவர்களது கூற்று நியாயமானதாக கார்பெட்டுக்கும், இபாட்சனுக்கும் பட்டது. அவர்கள் மீது இருவருக்கும் அனுதாபம் ஏற்பட்டது.

சற்று முன்னர், காட்டில் இபாட்சன் பாறையில் தடுமாறி விழுந்து, பெட்ரோமாக்ஸ் விளக்கின் மாண்டல் உடைந்து, சற்று நேரத்திற்கெல்லாம் பெட்ரோல் விளக்கு வெடித்துவிடாமல் இருக்க அதை அணைத்தபோது, இருவரில் ஒருவர், அல்லது இருவருமே தப்பிக்க மாட்டோம் என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. அதே மனநிலைக்குத்தான் கார்வால் மக்களும் ஆட்பட்டிருந்தனர். அதனால் வீட்டில் இருந்தவர்களின் மன நிலைமையைக் கார்பெட்டால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டில் இருந்தவர்கள், இபாட்சன் மற்றும் கார்பெட்டின் ஆட்கள் மாலையே கிராமத்தை அடைந்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் மலையை ஒட்டிய கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அங்கிருந்தவர்களில் திடகாத்திரமான இருவர், இபாட்சனையும் கார்பெட்டையும் அவர்களது ஆட்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் செல்வதாகத் தெரிவித்தனர். ஆனால், அவ்விருவரும் இபாட்சனையும், கார்பெட்டையும் விட்டுவிட்டுத் தனியாகத் திரும்ப வேண்டும். அப்படி அவர்களைத் தனியே வரவிடுவது கொலைக்குச் சமம் என்று உணர்ந்ததால், இபாட்சனும், கார்பெட்டும் அதற்கு மறுத்து விட்டனர். மாறாக இபாட்சனும், கார்பெட்டும் தங்களுக்கு ஒரு விளக்கை ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும் என்று தெரிவித்தனர். வீட்டில் இருந்தவர்கள், வீட்டின் மூலையில் உள்ள பொருள்களைக் கிளறி, ஒரு பழைய சிதிலமுற்ற விளக்கைத் தேடிக் கொடுத்தனர். அவ்விளக்கின் கூண்டு உடைந்திருந்தது. அவ்விளக்கை ஆட்டிப் பார்த்ததில் அதில் சிறிதளவே எண்ணெய் இருப்பது தெரியவந்தது. விளக்கு ஏற்றப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் வழியனுப்பி வைக்க, கார்பெட்டும், இபாட்சனும் வீட்டை விட்டுக் கிளம்பினர். அவர்கள் கால்களை வெளியே எடுத்து வைத்த அடுத்த வினாடியே வீட்டின் கதவுகள் படாரென்று சாத்தப்பட்டன.

இருவரும் வெளியே நடந்து சென்றார்கள். மறுபடியும் அவர்கள் எருமை மாடுகள் புரண்ட சேற்றில் நடக்க வேண்டியிருந்தது. வழி நெடுக நிறையப் பாறைகள் இருந்தன. கையில் வைத்திருந்த விளக்கிலிருந்து கிடைத்த சுமாரான வெளிச்சத்தை வைத்து இருவரும் பாதையில் முன்னேறி நடந்து சென்றனர். வழியில் படிக்கட்டுகள் வரும், அதில் ஏறிச் செல்ல வேண்டும் என்று வீட்டில் இருந்தவர்கள் சொல்லியிருந்தார்கள். அதன்படியே படிக்கட்டுகள் வந்தன. அதில் ஏறிச் சென்ற இருவரது கண்களிலும் நீண்ட முற்றம் தென்பட்டது. எதிர்புறத்தில் வரிசையாக இரண்டடுக்கு வீடுகள் இருந்தன. அவ்வீடுகளின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. வீடுகளிலிருந்து எந்த வெளிச்சமும் வரவில்லை.

வெளியில் இருந்தபடியே இபாட்சனும், கார்பெட்டும் வீட்டில் இருந்தவர்களை அழைத்தனர். அப்பொழுது ஒரு வீட்டின் கதவு மட்டும் திறந்தது. அவ்வீட்டின் படிக்கட்டில் ஏறி மேல் மாடிக்கு இருவரும் சென்றனர். அங்கு வராந்தாவை  ஒட்டியிருந்த இரண்டு அறைகள் இபாட்சன், கார்பெட் மற்றும் அவர்களது ஆட்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இருவரிடமிருந்தும் துப்பாக்கியையும், விளக்கையும் அவர்களின் ஆட்கள் வாங்கிக் கொண்டனர். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு நாய் அங்கு வந்தது. அது ஒரு நாட்டு நாய். நட்பாகப் பழகியது. அது கார்பெட் மற்றும் இபாட்சனின் கால்களை மோப்பம் பிடித்தபடியே, வாலை ஆட்டிக் கொண்டு இருவரையும் சுற்றி வந்தது. பின்னர் படியின் வழியாக நாய் கீழே இறங்கிச் சென்றது. அடுத்த நொடி, அந்த நாய் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டது. பின்னர் வெறித்தனமாகக் குரைத்தவாறே கார்பெட் மற்றும் இபாட்சன் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தது. அதன் உடம்பில் உள்ள முடிகள் அனைத்தும் கத்தி போல் விரைத்துக் காணப்பட்டது.

அவர்கள் கொண்டு வந்த விளக்கு, கட்டடத்தின் முற்றத்திற்கு வந்ததுமே அணைந்து விட்டது. அவர்களுடைய ஆட்கள் மற்றொரு விளக்கைக் கொண்டு வந்து கொடுத்தனர். இபாட்சன் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சம் தெரியும்படி அவ்விளக்கைப் பிடித்தார். கார்பெட் தன் ரைபிள் துப்பாக்கியில் குண்டைப் பொதித்து தயாராக வைத்துக் கொண்டார். விளக்கிலிருந்த வெளிச்சம், அவர்களுக்கு எட்டு அடி கீழே இருந்த தரையைப் பார்க்கப் போதுமானதாக இல்லை.

நாயின் நடவடிக்கைகளை வைத்து சிறுத்தையின் நகர்வை அவர்களால் ஓரளவிற்குக் கணிக்க முடிந்தது. சிறுத்தை முற்றத்தைக் கடந்து படியின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றுவிட்டது. சிறுத்தை செல்வதைக் கவனித்த நாய் குரைப்பதை படிப்படியாக நிறுத்திக் கொண்டது. சிறுத்தை செல்லும் பாதையை உன்னிப்பாகப் பார்த்தபடியே அந்த நாய் இருந்தது. நடு நடுவே நாய் ஓலமிட்டது.

இபாட்சனுக்கும், கார்பெட்டுக்கும் ஒதுக்கப்பட்ட அறையில் ஜன்னல்கள் இல்லை. அறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் அறையின் கதவை அடைக்க வேண்டும். கதவை அடைத்தால் அறையினுள் காற்றோ, வெளிச்சமோ புக முடியாது. எனவே இபாட்சனும், கார்பெட்டும் வராந்தாவில் தங்க முடிவு செய்தனர். அங்கிருந்தவரின் நாய் என்பதால் அது அங்கேயே தூங்கிப் பழக்கப்பட்டிருந்தது. நாய் கார்பெட் மற்றும் இபாட்சனின் கால்களுக்கு அடியில் நிம்மதியாகப் படுத்துக் கொண்டது. நாய் தங்கள் காலடியில் படுத்திருப்பது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுத்தது. அன்றிரவு இபாட்சனும், கார்பெட்டும் மாறி மாறிக் காவல் காத்தனர்.

மறுநாள் விடிந்ததும், இருவரும் பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர். ஆட்கொல்லி சிறுத்தை அச்சடலத்தைச் சீண்டவில்லை. இது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. சென்ற இரவு, ஆட்கொல்லி சிறுத்தை, தங்கள் இருவரில் ஒருவரை வேட்டையாட முயற்சி செய்து தோற்றிருக்கிறது என்பது புரிந்தது. எனவே இன்று அது பெண்ணின் சடலத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகக் கருதினர்.

பகல் பொழுதில் இபாட்சனுக்கு அலுவலகப் பணி இருந்தது. அதனால் அவர் அதைக் கவனித்தார். கார்பெட் தன் ரைபிள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடப் புறப்பட்டார். பைன் ஊசிகள் நிறைந்த கட்டாந்தரையில் ஆட்கொல்லி சிறுத்தையைத் தேடிப் பின்தொடர்ந்து செல்வது என்பது சாத்தியமில்லை. எனவே உள்ளூர் மக்கள் வலியுறுத்தியபடி, மலையைச் சுற்றியிருந்த அடர்ந்த வனத்தின் ஊடே கார்பெட் சென்றார். ஆனால் வனத்தின் வழியே செல்வது அவருக்கு மிகக் கடினமாக இருந்தது. புதர்கள் நிறைய மண்டியிருந்தன. கூடவே கால் வைக்கவே முடியாதபடி நிறைய செங்குத்தான பாறைகள் இருந்தன. ஆனால் இப்பகுதியில் வேட்டையாடுவதற்கு நிறைய விலங்குகள் இருந்தன. அவர் சென்ற வழியில் குறுக்கிட்ட பாதைகளில் கரட்டாடுகள், ஹிமாலயக் கோரல்கள், வராகங்கள், மலையாடுகள் ஆகியவற்றின் கால் சுவடுகளை அவரால் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் தேடி வந்த சிறுத்தையை மட்டும் அவரால் பார்க்க முடியவில்லை. சிறுத்தையின் பழைய கீறல்களை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.

ருத்ரபிரயாகிலிருந்து ஜின் பொறி வரவழைக்கப்பட்டது. இபாட்சனும், கார்பெட்டும் ஜின் பொறியை எடுத்துக் கொண்டு பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர். அதை அங்குப் பொருத்தினர். கூடவே சடலத்தில் தாங்கள் கொண்டு வந்த சயனைடு விஷத்தையும் ஆட்கொல்லி சிறுத்தை பெண்ணின் உடலில் கடித்த பகுதிகளில் புகுத்தினர். கார்பெட்டுக்கோ, இபாட்சனுக்கோ சயனைடு விஷத்தைப் பயன்படுத்துவதில் பெரிய அனுபவம் இருந்ததில்லை. கார்பெட் நைனிடாலிலிருந்து கிளம்புவதற்கு முன்னர் அங்கு ஒரு மருத்துவரிடம் உரையாடினார். அப்பொழுது அவரிடம், ஆட்கொல்லி சிறுத்தையை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று அரசாங்கம் தன்னைப் பணித்திருப்பதாகவும், ஆனால், தான் விஷத்தைப் பயன்படுத்தி ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்லப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். காரணம், ஆட்கொல்லி சிறுத்தை விஷத்திற்கு மடியவில்லை என்று அறிக்கைகள் தெரிவிப்பதாக கார்பெட் கூறினார். இதுவரை என்னென்ன விஷங்கள் ஆட்கொல்லி சிறுத்தைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்ற விவரத்தையும் கார்பெட் தெரிவித்தார். அதைக் கேட்ட மருத்துவர் சயனைடு விஷத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு சயனைடு விஷம் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மருத்துவரின் அறிவுறுத்தலை கார்பெட் இபாட்சனுக்கு தெரிவிக்க, இபாட்சன் காப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்ட சயனைடு விஷத்தைத் தருவித்தார். சயனைடு காப்ஸ்யூல்கள் சிலவற்றை கார்பெட்டும், இபாட்சனும் சடலத்தினுள் வைத்தனர்.

எப்படியும் ஆட்கொல்லி சிறுத்தை சடலத்தை நோக்கி வரும் என்று இருவரும் யூகித்தனர். சென்ற இரவு மரத்தின் மீது இருவரும் அமர்ந்திருந்ததை ஆட்கொல்லி சிறுத்தை பார்த்துவிட்ட காரணத்தால், இம்முறை இபாட்சனும் கார்பெட்டும் மரத்தில் காத்திருப்பதைத் தவிர்த்தனர். ஆட்கொல்லி சிறுத்தை, ஒன்று ஜின் பொறியில் மாட்டிக்கொள்ளும் அல்லது சயனைடு விஷத்தை உண்டு மாண்டு போகும் என்று இருவரும் கணித்தனர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *