அன்று பிடிபட்ட மீன்கள் இரண்டும் ஒரே அளவில்தான் இருந்தன. ஆனால் இரண்டாவதாகப் பிடிபட்ட மீன் முதல் மீனை விட எடையில் சற்று அதிகம். மூத்த சகோதரன் புற்களினால் ஆன ஒரு கயிற்றை உருவாக்கி, அதில் முதல் மீனைக் கட்டி, தனது தோள்பட்டையில் சுமந்தபடியே அவனுடைய கிராமத்திற்கு வெற்றிநடையுடன் சென்றான்.
இளையவன் கார்பெட்டிடம் ‘நான்தான் மீனையும், தூண்டிலையும் ஆய்வு பங்களா வரை சுமந்து வருவேன்’ என்று கேட்டுக் கொண்டான். கார்பெட்டும் அதற்குச் சம்மதிக்கவே, இருவரும் ஆய்வு பங்களாவை நோக்கிச் சென்றார்கள். இளையவன் மீனையும், தூண்டிலையும் சுமந்தபடி வந்தான். இளைய சகோதரன் ஒரு கரத்தில் ஒரு பெரிய மீனையும், இன்னொரு கரத்தில் தூண்டிலையும் சுமந்து முன் செல்வதையும், அவனைத் தொடர்ந்து கார்பெட் பின்னால் வருவதையும் பார்க்கும் சாலையில் பயணிக்கும் மக்களும், பஜாரில் உள்ளவர்களும் தங்கள் வாழ்நாளிலேயே பார்த்திராத ஒரு பெரிய மீனை அவன் பிடித்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.
பெளரியிலிருந்து இபாட்சன் திரும்பியிருந்தார். அன்று மார்ச் மாதத்தின் கடைசி நாள். மறுநாள் இபாட்சனும், கார்பெட்டும் காலை உணவருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு ஒரு தகவல் வந்தது. சென்ற இரவு, ருத்ரபிரயாகிற்கு வடமேற்கில் இருந்த ஒரு கிராமத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று சதா உறுமல் சத்தம் போட்டுக் கொண்டு இருந்ததாகத் தகவல் சொல்லப்பட்டது. அந்த இடம் கார்பெட்டும், இபாட்சனும் ஜின் பொறியைக் கொண்டு ஒரு சிறுத்தையை வீழ்த்திய இடத்திற்கு ஒரு மைல் தூரத்தில் இருந்தது.
சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்ட கிராமத்திலிருந்து சுமார் அரை மைல் தூரத்தில், ஒரு பெரிய மலையின் ஏற்றத்தில் தரை மிகவும் கரடுமுரடாக இருந்தது. அவ்விடத்தில் எங்குப் பார்த்தாலும் பெரிய பாறைகளும், குகைகளும் காணப்பட்டன. அங்குப் பெரிய குழிகளும் இருந்தன. அந்தக் குழிகளில்தான் தங்களுடைய மூதாதையர்கள் செம்பை (copper) வெட்டி எடுத்தார்கள் என்ற தகவலை உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அந்த இடம் முழுவதும் புதர்கள் மண்டியிருந்தன. சில இடங்களில் புதர்க் காடுகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அடர்த்தி குறைவாகவும் இருந்தன. மலையில் உருவாகியிருந்த புதர்க் காடுகள், கீழே கிராமத்திற்கு அரை மைலுக்கு முன்னர் இருந்த அடுக்கு வயல்வெளிகள் வரை நீண்டிருந்தன.
ருத்ரபிரயாகிற்கு அருகில் ஆட்கொல்லி சிறுத்தை தங்கியிருந்த சமயங்களில், இந்தக் கற்களும், குகைகளும், பள்ளங்களும் மண்டிய இந்தப் புதர்ப் பகுதியைத்தான் அது தன்னுடைய மறைவிடமாகக் கொண்டிருந்ததா என்று கார்பெட் சந்தேகம் கொண்டார். எனவே அந்தப் பகுதிக்கு அவர் அடிக்கடி சென்று ஓர் உயரமான இடத்திலிருந்து ஆட்கொல்லி சிறுத்தை அங்குக் கீழே இருக்கிறதா என்று பார்வையிட்டார். பொதுவாகக் குளிர் பிரதேசத்தில் இருக்கும் சிறுத்தைகளுக்கு ஒரு குணம் உண்டு. அதிகாலை வேளையில் பாறைகளில் படுத்தபடியே அவை வெயிலில் குளிர்காயும். பொதுவாக. இதுபோன்ற சமயங்களில் சிறுத்தைகள் சுட்டு வீழ்த்தப்படும். இப்படிச் சிறுத்தைகளை வேட்டையாடுபவர்களுக்குச் சிறிது பொறுமையும், துல்லியமாகக் குறிபார்த்துச் சுடும் திறமையும் இருத்தல் வேண்டும்.
முன்னதாகவே மதிய உணவை முடித்துக்கொண்டு இபாட்சனும், கார்பெட்டும் தத்தம் கைகளில் ஒரு .275 ரைபிள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு சென்றனர். அவர்களுடன் இபாட்சனின் ஆட்களில் ஒருவனும், சிறு நீளம் கொண்ட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தான். அவ்வப்போது கார்பெட் வாங்கிக் கட்டி வைக்கும் ஆடுகளை எல்லாம் சிறுத்தை அடித்துக் கொன்று விட்டதால், தற்பொழுது அவர்கள் சென்ற கிராமத்தில் ஓர் இளம் ஆண் ஆட்டை வாங்கிச் சென்றார் கார்பெட்.
கிராமத்திலிருந்து கால்நடைகள் செல்லும் ஒரு வழித்தடம் மலைக்குச் சென்றது. அவ்வழித்தடம் மிகவும் கரடுமுரடாக இருந்தது. பள்ளங்கள் வரை சென்ற அவ்வழித்தடம், பின்னர் இடது பக்கமாகத் திரும்பி, மலையை நோக்கி நூறு கஜ தூரம் சென்றது. பின்னர் அவ்வழித்தடம் மலையைச் சுற்றிச் சென்றது. மலையைக் கடந்து சென்ற அந்த வழித்தடத்தில் ஆங்காங்கே புதர்கள் இருந்தன. மலையை விட்டுக் கீழே இறங்கிச் சென்ற வழித்தடம் மிகவும் செங்குத்தாகவும், சிறு புற்கள் வளர்ந்தும் காணப்பட்டது.
கார்பெட்டும், இபாட்சனும் தாங்கள் கூட்டிச் சென்ற ஆட்டை கால்நடை வழிப்பாதை வழியாக மேலே கூட்டிச் சென்றார்கள். ஒரு திருப்பத்தில், தரையில் ஓர் ஆப்பைச் சொருகி தாங்கள் கூட்டி வந்த ஆட்டை அதில் கட்டினார்கள். பின்னர் இருவரும் புதர்கள் வழியாக ஒரு நூற்று ஐம்பது கஜ தூரம் கீழே இறங்கி ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் மறைந்து கொண்டார்கள். தன்னந்தனியாக விடப்பட்ட ஆடு கத்த ஆரம்பித்தது. ஆட்டின் குரல் மிகவும் க்ரீச்சென்றும், குத்தி ஊடுருவிச் செல்வதுமாக இருந்தது. ஆட்டை பத்திரமாக ஆப்பில் கட்டி வைத்திருந்த காரணத்தினால் இருவருக்கும் ஆட்டைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டைத் தாக்கிக் கொல்லும் சிறுத்தையால் அந்த ஆட்டை தூக்கிச் செல்லமுடியாதபடி ஆடு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
பனி படர்ந்த கேதார்நாத் மலைக்கு மேலே எட்டிப்பிடிக்கும் தூரத்தில் சிவப்புப் பந்து போல், நெருப்புப் பிழம்பாகச் சூரியன் காட்சியளித்தது. கார்பெட்டும், இபாட்சனும் பாறைகளுக்குப் பின்னால் மறைந்தபடி காத்திருந்தனர். ஓர் அரை மணி நேரம் சென்றது. ஆடு கத்துவதைத் திடீரென்று நிறுத்தியது. பாறையின் மறைவில் மெல்லமாக நகர்ந்து சென்று, புற்களின் வழியே, மேலே என்ன நடக்கிறது? என்று கார்பெட் எட்டிப் பார்த்தார். ஆட்டின் இரு காதுகளும் மேலே குத்திட்டு நின்றபடி இருந்தன. ஆடு தனக்கு முன்னால் இருந்த புதரை உற்று நோக்கியவாறு இருந்தது. பின்னர், ஆடு தன் தலையை ஆட்டிய படியே கயிற்றை இழுத்து பின்பக்கமாக ஓட முயன்றது.
சந்தேகமே இல்லாமல் சிறுத்தை ஆட்டை நோக்கி வந்திருக்கிறது. ஆடு தொடர்ந்து கத்துவதைக் கேட்டு சிறுத்தை அவ்விடத்திற்கு வந்திருக்கிறது. ஆடு சிறுத்தையைப் பார்ப்பதற்கு முன்னர், சிறுத்தை ஆட்டைத் தாக்காமல் இருந்ததிலிருந்தே, சிறுத்தை அவ்விடத்தைச் சந்தேகத்துடன் அணுகியிருக்கிறது என்பதை கார்பெட்டால் புரிந்து கொள்ள முடிந்தது. இபாட்சனின் ரைபிளில் தொலைநோக்கி இருந்ததால், அவரால் சிறுத்தையைத் துல்லியமாகச் சுட முடியும் என்று கார்பெட் நினைத்தார். எனவே அவர் சிறுத்தையை வீழ்த்துவதற்கு இபாட்சனுக்கு வழிவிட்டார். இபாட்சன் தரையில் படுத்தபடியே தனது ரைபிள் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்தார். அப்பொழுது கார்பெட், ஆடு பார்க்கும் அதே திசையில் புதர்களைக் கவனமாகக் கவனிக்கும்படி, கிசுகிசுத்த குரலில் இபாட்சனிடம் கூறினார். ஆட்டினால் புதரில் உள்ள சிறுத்தையைப் பார்க்க முடியும் என்றால், கண்டிப்பாக இபாட்சனாலும் அவருடைய சக்தி வாய்ந்த தொலைநோக்கியின் மூலம் புதருக்குள் இருக்கும் சிறுத்தையைப் பார்க்க முடியும் என்பது கார்பெட்டின் திண்ணமான எண்ணம். அடுத்த பல நிமிடங்களுக்கு, இபாட்சன் தொலைநோக்கிக் கருவியின் மூலமாகப் பார்த்தபடியே இருந்தார். பின்னர் அவர் தன் தலையை அசைத்துவிட்டு, ரைபிள் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, அங்கு கார்பெட் வருவதற்கு வழி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சற்று நேரத்திற்கு முன்னர் ஆட்டை எந்த நிலையில் கார்பெட் பார்த்தாரோ அதே நிலையில்தான் ஆடு தற்பொழுதும் இருந்தது. ஆடு பார்க்கும் அதே திசையில் கார்பெட் தொலைநோக்கியைத் திருப்பி, ஆடு உற்று நோக்கும் புதரை அதன் வழியாகக் கவனிக்கலானார். சிறுத்தையின் கண் இமை சிமிட்டலையோ, காது அசைவையோ அல்லது சிறுத்தையின் மீசை அசைவையோ, அவரால் தொலைநோக்கியின் மூலம் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆனால் வெகு நேரமாகியும் கார்பெட்டுக்கு ஒன்றும் தெரியவில்லை.
வெளிச்சமும் வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. இப்போது குன்றின் பக்கப் பகுதியில், சிகப்பு – வெள்ளை மற்றும் நீல நிறத்தில் அந்த ஆடு தெரிந்தது. அவர்கள் ஆய்வு பங்களாவை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். எனவே இனியும் அங்குக் காத்திருப்பது என்பது பயனற்றது, மேலும் ஆபத்தானது என்ற முடிவுக்கு வந்தார் கார்பெட். எனவே அவர் இபாட்சனிடம் அங்கிருந்து கிளம்பலாம் என்று தெரிவித்தார்.
ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்கு இருவரும் சென்றார்கள். கத்துவதை நிறுத்திய அந்தத் தருணத்திலிருந்து இப்போது வரை வேறு எந்த ஒரு சத்தத்தையும் ஆடு எழுப்பவில்லை. ஆப்பில் கட்டப்பட்டிருந்த ஆடு கட்டவிழ்க்கப்பட்டது. இபாட்சனின் வேலை ஆள், ஆட்டை முன் இழுத்துச் செல்ல, இபாட்சனும் கார்பெட்டும் பின்னால் வர, அனைவரும் கிராமத்தை நோக்கிச் சென்றார்கள்.
அந்த ஆட்டின் கழுத்தில் இதுநாள் வரை கயிறு கட்டப்பட்டு இழுத்து வரப்படவில்லை. எனவே, கயிறு கட்டி இழுத்து வரும் பொழுது அது முரண்டு செய்தது. எனவே கார்பெட், இபாட்சனின் வேலை ஆளிடம் ஆட்டின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விடச் சொன்னார். கார்பெட் தன் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயம் என்னவெனில், பொதுவாகக் காட்டில் கட்டிவைக்கப்பட்டுப் பின்பு அழைத்து வரப்படும் ஆடு மிகவும் பயந்து போய் இருக்கும். பயத்தின் காரணமாகவோ அல்லது தோழமையின் காரணமாகவோ ஒரு நாயைப் போல அருகில் வருபவரது காலை ஒட்டியே வரும். ஆனால் இந்த ஆடு சற்று வித்தியாசமானது போலும். அதன் கழுத்திலிருந்து கயிறு அவிழ்க்கப்பட்ட அடுத்த வினாடியே வந்த வழியே திரும்பி ஓடியது அந்த ஆடு.
அந்த ஆடு ஒரு நல்ல ஆடாக கார்பெட்டுக்குத் தெரிந்தது. அது தொடர்ந்து கத்தி சிறுத்தையை, தான் இருந்த இடத்திற்குக் கவர்ந்து கொண்டு வந்திருந்தது. அந்த ஆடு கார்பெட்டுக்கு மிகவும் தேவைப்பட்டது. மேலும் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் அவர் அந்த ஆட்டை நல்ல விலை கொடுத்து வாங்கியிருந்தார். எனவே அந்த ஆட்டை அப்படியே விட்டு விட அவருக்கு மனமில்லை. எனவே, அனைவரும் ஆட்டைப் பிடிக்க அதைப் பின்தொடர்ந்து தாங்கள் வந்த வழியே மேலே ஏறி வேகமாக ஓடினார்கள். வழித்தடத்தின் வளைவில் இடது புறமாக ஆடு ஓடியது. அதன் பின்னர், அவர்களால் அந்த ஆட்டை பார்க்க முடியவில்லை. ஆடு அவர்களது கண்களிலிருந்து மறைந்தது. ஆடு சென்ற வழியே அவர்களும் சென்றார்கள். மலையின் முகட்டிற்குச் சென்றார்கள். அங்கு எங்கும் புற்கள் பரந்து விரிந்திருந்தன. ஆனால் ஆட்டை எங்கும் காண முடியவில்லை. ஆடு ஏதோ ஒரு குறுக்கு வழியில் கிராமத்தை அடைந்திருக்கும் என்று எண்ணியவாறே, மூவரும் வந்த வழியே கிராமத்தை நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கார்பெட் மற்ற இருவருக்கும் முன்பாக நடந்து வந்தார். அவர்கள் அந்த நூறு கஜ தூர வழித்தடத்தில் பாதித் தூரத்தைக் கடந்திருப்பார்கள். ஒரு பக்கத்தில் மலை ஏற்றத்தில் புதர்கள் இருந்தன. மறு பக்கத்தில் இறக்கத்தில் புல்வெளிகள் இருந்தன. இவ்வாறு அவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, கார்பெட்டின் முன்பாக அவரது கண்களில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது.
(தொடரும்)