Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

ஜிம் கார்பெட்

மறுநாள் காலை, கம்பி வலையையும் இரும்பு ஆணிகளையும் எடுத்துக்கொண்டு கற்களால் மூடப்பட்ட குகைக்குச் சென்றார் கார்பெட். குகையின் முகப்பில் அடைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றிவிட்டு, தான் கொண்டு வந்த கம்பி வலையைக் கொண்டு அக்குகையின் முகப்பை முழுவதுமாக அடைத்தார்.

அடுத்த பத்து நாட்களுக்குக் குகையைக் காலையிலும், மாலையிலும் சென்று பார்த்து வந்தார். அந்தப் பத்து நாட்களில், அலக்நந்தா நதியின் இடது கரையில் அமைந்துள்ள கிராமங்களிலிருந்து ஆட்கொல்லி சிறுத்தையைப் பற்றி எந்தவொரு செய்தியும் வரவில்லை. இதை வைத்து ஆட்கொல்லி சிறுத்தை கண்டிப்பாக இறந்திருக்கும் என்று கார்பெட் நம்பினார். அடுத்தமுறை குகைக்குச் செல்லும்போது, ஆட்கொல்லி சிறுத்தை குகையில் இறந்திருப்பதற்கான அறிகுறி ஏதேனும் தனக்குக் கிடைக்கலாம் என்று கார்பெட்டுக்குத் தோன்றியது.

பத்தாவது நாளன்று குகைக்குச் சென்றார் கார்பெட். முகப்பில் கட்டப்பட்டிருந்த கம்பி வலை அப்படியே இருந்தது. கார்பெட் குகையைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். இபாட்சன் அவரைச் சந்தித்து ஒரு தகவலைத் தெரிவித்தார். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 5 மைல் தொலைவில், ருத்ரபிரயாக் – பத்ரிநாத் யாத்திரிகர்கள் செல்லும் சாலைக்கு மேலே ஒரு மைல் தொலைவில், ஒரு பெண்ணை ஆட்கொல்லி சிறுத்தை சென்ற இரவு அடித்துக் கொன்றுவிட்டது என்பதுதான் அத்தகவல்.

கார்பெட்டும், இபாட்சனும் வைத்த சயனைடு ஆட்கொல்லி சிறுத்தையை ஒன்றும் செய்யவில்லை. ஆர்சனிக் ஸ்ட்ரைக்னைன் போன்ற தனிமம் / நஞ்சு ஆட்கொல்லி சிறுத்தையின் உடலினுள் சென்று ஏற்கெனவே கலந்து விட்டதனால், அதன் உடல் நஞ்சைத் தாங்கும் நிலைக்குத் தயாராகிவிட்டது. எனவேதான், சயனைடு விஷம் கலந்த இரையைச் சாப்பிட்டும் ஆட்கொல்லி சிறுத்தை சாகவில்லை.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆட்கொல்லி சிறுத்தை சயனைடு கலந்த இரையைச் சாப்பிட்டிருந்தது. அது குகையினுள் நுழைந்து மறைந்ததற்கும் ஆதாரம் இருந்தது. ஆட்கொல்லி சிறுத்தை குகையின் சிறு முகப்பு வழியாக நுழைந்த பொழுது, சிறுத்தையின் பின்பகுதி மயிர், குகையின் முகப்பில் உராய்ந்து பாறையில் ஒட்டிக் கொண்டிருந்தது.

சயனைடு அதிக அளவில் ஆட்கொல்லி சிறுத்தையின் உடலில் சென்றதனால் அது போதிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதே போல் தூரத்தில் மலைக் குகையின் வேறொரு முகப்பின் வழியாக ஆட்கொல்லி சிறுத்தை குகையை விட்டு வெளியே வந்திருக்கலாம் என்று கார்பெட்டுக்குத் தோன்றியது.

ஆனால் இவை அனைத்தும் கார்பெட்டை பெரிய அளவில் ஆச்சர்யப்படுத்தவில்லை. அவருக்கு இந்த ஆட்கொல்லி சிறுத்தையுடனான அனுபவங்கள் சில மாதக் காலம்தான். ஆனால் கார்வால் மக்களுக்கு ஆட்கொல்லி சிறுத்தையைப்பற்றிக் கடந்த 8 வருடங்களாக நன்றாகத் தெரியும். அவர்கள் அதனுடன் நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அச்சிறுத்தையை மாயாவியாகத்தான் நினைத்து வருகிறார்கள். அதை அமானுஷ்ய சக்திகள் கொண்ட ஒரு பிராணியாக அல்லது ஆவியாகத்தான் கருதுகிறார்கள். மேலும், இந்தத் துஷ்ட ஆவியை நெருப்பைத் தவிர வேறு எதைக் கொண்டும் அழிக்க முடியாது என்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

முக்கியமான செய்திகள் எப்போதும் விரைவாகப் பரவும். ஆட்கொல்லி சிறுத்தை விஷம் உண்டிருந்த செய்தியும், அது குகையினுள் அடைபட்ட செய்தியும், சென்ற பத்து நாட்களில் கார்வால் பகுதியில் அனைவர் மத்தியிலும் காட்டுத் தீ போல் பரவியிருந்தது. அதனால் மக்கள் சற்று அசட்டையாக இருந்து விட்டார்கள். ஆனால் மறுபக்கம் விஷத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்த ஆட்கொல்லி சிறுத்தை, குகையிலிருந்து எப்படியோ மாற்று வழியில் வெளியே வந்துவிட்டது. வெளியே வந்ததும், தன் கண்ணில் பட்ட அசட்டையாக இருந்த நபரை அது அடித்துக் கொன்று விட்டது.

கார்பெட்டுக்கும், இபாட்சனுக்கும் அவர்களது கை வசம் அன்றைய ஒரு முழு நாள் அவகாசம் இருந்தது. அன்று காலையில்தான் கார்பெட் குகைக்குச் சென்று திரும்பி வந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு ஆட்கொல்லி சிறுத்தை ஒரு பெண்ணைக் கொன்ற தகவல் கிடைத்தது. இருவரும் தங்களது காலை உணவை முடித்துக் கொண்டு, இபாட்சனின் குதிரைகளில் தங்களுடைய ரைஃபிள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, கொல்லப்பட்ட பெண்ணின் கிராமத்திற்குச் சென்றனர்.

இருவரும், யாத்திரிகர்கள் செல்லும் சாலையின் வழியே வேகமாக விரைந்தனர். பிறகு அங்கிருந்து மலையின் குறுக்கே ஏறிச் சென்ற பாதை வழியாகச் சென்றனர். ஒரு மைல் சென்றதும், அந்தப் பாதை, இறந்துபோன பெண் வசித்த கிராமத்திலிருந்து வரும் பாதையைச் சந்தித்தது. அவ்விடத்தில் பெண்ணிற்கும், சிறுத்தைக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்திற்கான அடையாளங்கள் தென்பட்டன. அங்கு நிறைய ரத்தம் சிந்தியிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது.

கிராமத் தலைவரும், பெண்ணின் உறவினர்களும் இபாட்சன் மற்றும் கார்பெட்டின் வருகைக்காகக் காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன், இருவரிடமும் சம்பவம் நடந்த இடத்தைக் காண்பித்தனர். அப்பெண் தன் வீட்டின் கதவை மூடும் தறுவாயில் ஆட்கொல்லி சிறுத்தை அவளைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறது. ஒரு நூறு கஜ தூரத்திற்கு அவளை இழுத்துச் சென்றதும், சிறுத்தை தன் பிடியைத் தளர்த்தியிருக்கிறது. இதற்கிடையில் அப்பெண்ணிற்கும், ஆட்கொல்லி சிறுத்தைக்கும் இடையே கடுமையான போராட்டம் நடைபெற்று, அப்போராட்டத்தில் சிறுத்தை பெண்ணைக் கொன்றிருக்கிறது. சிறுத்தை அப்பெண்ணை இழுத்துச் செல்லும்போது, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்பெண் அலறியிருக்கிறாள். அவளின் அலறல் சத்தமும், போராட்டமும் கிராமத்தில் இருந்தவர்களுக்கு கேட்ட போதிலும், ஒருவரும் அவளைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘அனைவரும் பயத்தினாலும், பீதியினாலும் பீடிக்கப்பட்டிருந்தோம்’ என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அப்பெண்ணின் உடலை விட்டு உயிர் பிரிந்த பின், அவ்வுடலை ஆட்கொல்லி சிறுத்தை தரிசு நிலத்தைத் தாண்டி தூக்கிச் சென்றிருக்கிறது. பின்னர் அங்கிருந்து ஒரு நூறு கஜம் அகலம் கொண்ட ஒரு பள்ளத்தாக்கின் வழியாகச் சென்று, அங்கிருந்து ஒரு மலையின் மீது ஏறி சுமார் இருநூறு கஜ தூரத்திற்குச் சென்றிருக்கிறது. அதற்குப் பிறகு பெண்ணின் சடலம் இழுத்துச் செல்லப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. ஆனால் நிலத்தில் ரத்தம் சொட்டியிருந்தது. அந்தத் தடயத்தைப் பின்பற்றி எளிதாக இபாட்சனும், கார்பெட்டும் சென்றனர். அந்தத் தடயம் அவர்களை ஒரு சமதளமான இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் நான்கு அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டதாக இருந்தது. அந்த இடத்தின் குறுகலான மேல் பகுதியில் 8 அடி உயரத்திற்கு ஒரு செங்குத்தான கரை இருந்தது. அக்கரையில் ஒரு வளர்ச்சி குன்றிய மகிழ மரம் இருந்தது. அவ்விடத்தின் குறுகலான கீழ்ப் பகுதியில் மலைச் சரிவு காணப்பட்டது. அச்சரிவில் காட்டு ரோஜாச் செடிகள் மண்டியிருந்தன. காட்டு ரோஜாச் செடிகள் புதர்கள் போல் பல்கி மகிழ மரத்தை நெருக்கியபடி வளர்ந்திருந்தன. அந்தச் சரிவான பகுதிக்கும் காட்டு ரோஜாச் செடிகளுக்கும் இடையே இறந்த பெண்ணின் உடல் கிடந்தது. அப்பெண்ணின் தலை கரையின் மீது கிடந்தது. பெண்ணின் உடலிலிருந்து துணிகள் அனைத்தும் கிழித்து எடுக்கப்பட்டிருந்தன. நிர்வாணமாக இருந்த அவ்வுடலில் ஆங்காங்கே ரோஜாப் பூக்களின் வெள்ளை இதழ்கள் காணப்பட்டன. இறந்து கிடந்தது நரைமுடி கொண்ட 70 வயது மூதாட்டி.

இந்த வருந்தத்தக்கச் செயலுக்காக ஆட்கொல்லி சிறுத்தை ஒரு நாள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று கார்பெட் நினைத்துக் கொண்டார். அடுத்து என்ன செய்யலாம் என்று கார்பெட்டும், இபாட்சனும் கலந்தாலோசித்தனர். இபாட்சன் தன்னுடைய குதிரையில் ஏறி தேவையானப் பொருள்களை எடுத்து வர ருத்ரபிரயாகிற்குச் சென்றார். இதற்கிடையில், பகல் பொழுதிலேயே ஆட்கொல்லி சிறுத்தையை எதிர்கொண்டு வீழ்த்துவதற்கான முயற்சியில் கார்பெட் இறங்கினார்

கார்பெட்டுக்கு அவர் அன்று வந்திருந்த இடம் புதிது. பரிச்சயமற்றது. எனவே அவ்விடத்தைச் சுற்றிலும் பார்த்தார். அக்கிராமத்தில் இருந்த மலையானது பள்ளத்தாக்கிலிருந்து செங்குத்தாகச் சுமார் 4000 அல்லது 5000 அடி உயரத்திற்கு மேலெழுந்திருந்தது. மலையில் இரண்டாயிரம் அடிக்கு மேல் கருவாலி மரங்களும் (oak), பைன் காடுகளும் நிறைந்திருந்தன. அதற்குக் கீழ், திறந்த வெளியில், சுமார் அரை மைல் அகலத்திற்கு உயரம் குறைந்த புற்கள் வளர்ந்திருந்தன. அதற்குக் கீழ் புதர்க்காடுகள் இருந்தன.

கார்பெட் புதர்க்காடுகளுக்கும், புல்வெளிகளுக்கும் நடுவே சென்று மலையை அப்படியே சுற்றி வந்தார். அப்படி வரும் பொழுது, அவர் கண்ணெதிரே ஒரு பெரிய பள்ளம் தென்பட்டது. அப்பள்ளம் அரை மைல் தூரத்திற்கு இருந்தது. மேலும் யாத்திரிகர்கள் செல்லும் சாலை வரை அப்பள்ளம் சென்றது. அப்பள்ளத்தைப் பார்த்த கார்பெட்டுக்கு, அது முன்னொரு காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது உருவான பள்ளமாக இருக்கலாம் என்று தோன்றியது.

பள்ளத்தின் மேற்பகுதி சுமார் 100 கஜ அகலம் உடையதாக இருந்தது. கீழே அப்பள்ளம் யாத்திரிகர்கள் செல்லும் சாலையை ஒட்டியிருந்தது. அங்கு அதன் அகலம் சுமார் 300 கஜ தூரத்திற்கு இருந்தது. அதன் பிறகு அவ்விடம் திறந்த வெளியாக இருந்தது. பள்ளத்தின் தரைப்பகுதி ஈரமாக இருந்தது. அந்த ஈரப்பாங்கான இடத்தில் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. அம்மரங்களுக்குக் கீழ் புதர்க்காடுகள் இருந்தன. பள்ளத்தின் மேல் பகுதியில் ஒரு செங்குத்தான பாறை ஒன்று தொங்கும் பாறை போல் இருந்தது. அதனுடைய உயரம் வெவ்வேறு இடங்களில் சுமார் 20 அடி முதல் 40 அடி வரை இருந்தது. அந்தச் செங்குத்தான பாறையின் பாதி உயரத்தில் சில அங்குல அளவிற்கு ஒரு பிளவு காணப்பட்டது. அந்தப் பிளவிற்குக் கீழ் நீர் சிற்றோடையாகச் சென்றது. அந்தச் செங்குத்தான பாறையின் மேல் புதர்க் காடுகள் இருந்தன. அதற்கு மேல் திறந்த புல்வெளியாகக் காணப்பட்டது.

கார்பெட் அந்த இடத்தைக் கவனமாகச் சுற்றிப் பார்த்தார். அந்தப் பள்ளத்தில்தான் ஆட்கொல்லி சிறுத்தை மறைந்திருப்பதாக கார்பெட் நம்பினார். அவ்விடத்தில் வேட்டையாடுவதற்குத் தனக்குத் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், ஆட்கொல்லி சிறுத்தை அவர் அங்கு இருப்பதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில் கார்பெட் மிகவும் கவனமாக இருந்தார். ஆட்கொல்லி சிறுத்தை அந்தப் பள்ளத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள முனைந்தார் கார்பெட். அதைத் தெரிந்து கொள்வதற்காக, அவர் இரை இருந்த இடத்திற்கு மறுபடியும் சென்றார்.

கிராமத்தில் இருந்தவர்கள், ஆட்கொல்லி சிறுத்தை மூதாட்டியைத் தாக்கிக் கொன்றபோது வெளிச்சம் இருந்ததாகத் தெரிவித்தனர். தான் கொன்ற இரையை ஆட்கொல்லி சிறுத்தை 400 கஜ தூரத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கிறது. அதன் பின்னர், தன்னுடைய இரையைக் கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறது. பிறகு, இரையை மறைத்து வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டுச் சென்றிருக்கிறது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது, நன்றாக வெளிச்சம் வந்த பிறகே ஆட்கொல்லி சிறுத்தை அவ்விடத்தைவிட்டுச் சென்றிருப்பது கார்பெட்டுக்குப் புரிந்தது.

ஆட்கொல்லி சிறுத்தை மலையில் அதன் இரையை விட்டுச் சென்ற இடம், கீழே கிராமத்திலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. பகல் பொழுது என்பதால் ஆட்கள் நடமாட்டம் இருக்கும், எனவே ஆட்கொல்லி சிறுத்தை அவ்விடத்தைவிட்டுச் செல்லும்போது மனிதர்கள் கண்களில் படுமாறு சென்றிருக்காது, முடிந்தவரை அது மறைவாகத்தான் சென்றிருக்கும். இந்த யூகத்தின் அடிப்படையில் ஆட்கொல்லி சிறுத்தை சென்ற வழியைப் பின் தொடர்ந்தார் கார்பெட்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *