Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

ஜிம் கார்பெட்

கார்பெட் ஓர் அரை மைல் தூரம் நடந்து சென்றார். கிராமத்திலிருந்து பார்த்தால் தெரியாத பகுதியில் கார்பெட் சென்று கொண்டிருந்தார். அவர் பள்ளத்தை நோக்கி நடக்கையில், அவர் எதிர்பார்த்தது போலவே ஆட்கொல்லி சிறுத்தை அவர் செல்லும் பாதை வழியாகச் சென்றிருந்தது. சிறுத்தை சென்ற வழியிலேயே அதன் அடியை ஒற்றி நடந்தார் கார்பெட். ஒரு புதரின் அருகாமையில் ஆட்கொல்லி சிறுத்தை பல மணி நேரம் படுத்திருந்ததன் அடையாளத்தை அவரால் பார்க்க முடிந்தது. சிறுத்தை புதரைவிட்டுக் கிளம்பி, பள்ளத்தை நோக்கிச் சென்றதை அதன் கால் தடங்கள் உறுதி செய்தன. சிறுத்தை செங்குத்தான பாறையின் கீழாகப் பள்ளத்திற்குள் நுழைந்தது தெரிய வந்தது.

ஆட்கொல்லி சிறுத்தை தங்கியிருந்த புதரில் கார்பெட் ஓர் அரை மணி நேரம் அப்படியே தங்கினார். அவருக்கு எதிரே இருந்த மரத்தையும், புதர்க் காடுகளையும் உன்னிப்பாகக் கவனித்தார். ஆட்கொல்லி சிறுத்தை அசையும் பொழுது அதன் இருப்பைக் காட்டிக் கொடுக்காதா என்ற ஆவலில் கார்பெட் காத்திருந்தார்.

கார்பெட் அங்குக் காத்துக் கொண்டிருந்தபோது, காய்ந்த இலைகளுக்கு மத்தியில் ஏதோ அசைந்தது அவரது கவனத்தை ஈர்த்தது. வளைந்த அலகுச் சிலம்பன்கள் (Scimitar babbler – குருவி வகையைச் சார்ந்தவை) இரண்டு, இலைகளை விலக்கிக் கொண்டு வண்டினப் புழுக்களைத் தேடியவாறே மும்முரமாக வெளியே வந்தன. காட்டில் வேட்டையாடும் மிருகங்கள் இருப்பதை சிலம்பன்கள் சரியாகக் காட்டிக் கொடுக்கும். சற்று நேரத்தில் இப்பறவைகளைக் கொண்டு ஆட்கொல்லி சிறுத்தை இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கலாம் என்று கார்பெட் எண்ணினார்.

பள்ளத்திலிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. எந்தச் சத்தமும் எழவில்லை. ஆட்கொல்லி சிறுத்தை அப்பள்ளத்தில் இல்லாதது போன்ற ஒரு தோற்றம்தான் நிலவியது. இருப்பினும், ஆட்கொல்லி சிறுத்தை அப்பள்ளத்தில்தான் இருக்கிறது என்று கார்பெட் நம்பினார். சிறுத்தையின் இருப்பைத் தெரிந்து கொள்ள வேறு வழியில் முயன்றார் கார்பெட்.

ஆட்கொல்லி சிறுத்தை பள்ளத்தை விட்டு வெளியே தெரியாமல் பின்வாங்க வேண்டுமென்றால் அதற்கு இரண்டு வழிகள் தான் இருந்தன. ஒன்று பள்ளத்திலிருந்து மலையின் வழியாகக் கீழே இறங்கி யாத்திரிகர் சாலைக்குச் செல்வது. மற்றொன்று, மலையின் வழியாக மேலே ஏறிச் செல்வது. ஆட்கொல்லி சிறுத்தை மலையின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றால் கார்பெட்டுக்கு பிரயோஜனம் இல்லை. இதுவே ஆட்கொல்லி சிறுத்தை மலையின் மீது மேல் நோக்கிச் சென்றால், செங்குத்தான பாறையின் வெடிப்பிற்குச் சென்று அங்குள்ள பாறையின் மீதுள்ள புதர்களுக்குள் பதுங்கிக்கொள்ளும். ஆட்கொல்லி சிறுத்தை அப்படிச் செல்லும் போது, அதைச் சுட்டு வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக கார்பெட் கருதினார். அவர் பள்ளத்தில் இறங்கினார். மெதுவாக வளைந்து வளைந்து சென்றார். ஒவ்வொரு வளைவும் மேடாக இருந்தது. கார்பெட் பாறையின் வெடிப்பைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், பாறை வெடிப்பிற்குக் கீழ் சிலம்பன்கள் பாறை வெடிப்புக்குச் சில அடி கீழே வண்டினப் புழுக்களை தேடிக் கொண்டிருந்தன. ஆட்கொல்லி சிறுத்தை மேலே சென்றால் அதன் நடமாட்டத்தைச் சிலம்பன்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

கார்பெட் ஒரு நாற்பது அடி மேல் நோக்கிச் சென்றார். அவர் பள்ளத்தின் குறுக்கே முன்னும், பின்னுமாகச் சென்றார். பாறைப் பிளவிலிருந்து சுமார் 10 கஜ தூரத்தில், சற்று இடது பக்கமாகக் கார்பெட் சென்ற பொழுது சிலம்பன்கள் கீச்சிட ஆரம்பித்தன. அவை அருகிலிருந்த கருவாலி மரத்தை நோக்கிச் சென்று, அதன் கிளையில் பரபரப்பாக அமர்ந்தன. அங்கிருந்து கீச்சிட்டபடியே தெளிவாக எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தின. சிலம்பன்களின் எச்சரிக்கை ஒலி மலைப் பகுதியில் அரை மைல் தூரத்திற்குத் துல்லியமாகக் கேட்கும். ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்துவதற்காக, ரைபிள் துப்பாக்கியைக் கையில் தயாராக வைத்திருந்தார் கார்பெட். ஒரு நிமிடத்துக்குத் துப்பாக்கியை ஏந்தி அசைவற்று அப்படியே நின்றார். பின்னர் மெதுவாக முன்னேறிச் சென்றார்.

அவர் கடந்து சென்ற வழி ஈரமாகவும், வழுக்கலாகவும் இருந்தது. கார்பெட்டின் பார்வை பாறையின் பிளவை நோக்கியே இருந்தது. அந்த ஈரப்பாங்கான இடத்தில் இரண்டடி எடுத்து வைத்திருப்பார். அப்பொழுது அவருடைய ரப்பர் காலணி வழுக்கியது. தன்னைக் கீழே விழாமல் நிலைப்படுத்தி நிற்க அவர் முயற்சி செய்கையில் ஆட்கொல்லி சிறுத்தை பாறையின் பிளவை நோக்கித் தாவியது. அப்பொழுது பாறைப் பிளவின் மீது இருந்த காட்டுக் கோழிகள் கூட்டம், அவற்றின் சிறகுகளை அடித்தவாறே கார்பெட்டின் தலை மீது பறந்து வந்தன.

கார்பெட்டின் இரண்டாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. கார்பெட்டால் ஆட்கொல்லி சிறுத்தையை அது கிளம்பிய இடத்திற்கே மறுபடியும் வரவைத்திருக்க முடியும். அவருக்கு அதனால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. காரணம், மேலே இருந்து பார்க்கும் பொழுது பாறையின் பிளவு தெரியாது. எனவே பிளவை நெருங்கி வரவேண்டும். அப்படி அங்குச் சென்று, சிறுத்தையைச் சுடுவதற்குத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள், அது பள்ளத்தை விட்டுக் கீழே வெகு தூரம் சென்றிருக்கும்.

மதியம் 2 மணி அளவில், கார்பெட்டும் இபாட்சனும் பள்ளத்தாக்கில் சந்திப்பதாகப் பேசி வைத்திருந்தனர். மதியம் 2 மணிக்கு முன்னதாகவே இபாட்சன் ருத்ரபிரயாக்கிலிருந்து தேவையான பொருள்களுடனும், பல ஆட்களுடனும் பள்ளத்தாக்கிற்கு வந்திருந்தார். அவர் தன்னுடன் உணவு, குடிப்பதற்குத் தேநீர், பெட்ரோமாக்ஸ் விளக்கு, இரண்டு ரைபிள் துப்பாக்கிகள், தோட்டாக்கள், மீன் பிடித் தூண்டில், அதிகப்படியான சயனைட் விஷம் மற்றும் ஜின் பொறி ஆகியவற்றை எடுத்து வந்திருந்தார்.

பள்ளத்தாக்கில் ஓர் ஓடையின் அருகில் இபாட்சனும், கார்பெட்டும் மதிய உணவருந்தினர். பின்னர் தேநீர் தயாரித்துப் பருகினர். பிறகு இருவரும் மூதாட்டியின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர்.

மூதாட்டியின் சடலம் பள்ளத்தாக்கு முடியும் இடத்திலிருந்து ஒரு 5 அடி தூரத்தில், 4 அடி அகலம் மற்றும் 20 அடி நீளம் உள்ள ஒரு சமதள நிலத்திலிருந்தது. அந்த நிலத்தின் மேற்பகுதியை ஒட்டி ஒரு கரை இருந்தது. அந்த நிலத்தின் கீழ்ப் பகுதி செங்குத்தாகச் சென்றது. அங்கு ரோஜாச் செடிகள் இருந்தன. மேலே, கரையின் அருகில் ஒரு வளர்ச்சி குன்றிய மகிழ மரம் இருந்தது. மகிழ மரம் சிறியதாக இருந்ததால் அதில் மேடை அமைக்க முடியவில்லை. அதனால் இம்முறை ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடக் கார்பெட்டும், இபாட்சனும் துப்பாக்கிப் பொறி, ஜின் பொறி மற்றும் சயனைடு விஷத்தை நம்பினார்கள். பொறிகளை வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.

மூதாட்டியின் உடலில் சயனைடு விஷத்தை வைத்தார்கள். ஆட்கொல்லி சிறுத்தை தன்னுடைய இரையைச் சாப்பிடப் போதுமான அவகாசம் கிடைக்காததால், இரையைச் சிறிதளவே சாப்பிட்டிருந்தது. ஆட்கொல்லி சிறுத்தை திரும்பி வந்து தன் இரையை நிறையவே சாப்பிடும். அதனால் சயனைடு விஷம் அதன் உடலில் ஏறி, அது இறந்து போகும் என்று இருவரும் எதிர்பார்த்தனர். ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையை எப்படிச் சாப்பிடும் என்று முடிவு செய்து, அதற்கேற்றவாறு இபாட்சன் தன்னுடைய .256 மான்லிச்சர் ரைபிளையும், கார்பெட்டின் .450 அதிக விசை வேகம் கொண்ட ரைபிளையும் இரண்டு செடிகளில் வலுவாகக் கட்டினார். ஆட்கொல்லி சிறுத்தை அதன் இரையை நோக்கி வரும் வழியில், 15 கஜ தூரத்தில் இரண்டு ரைபிள் துப்பாக்கிப் பொறிகள் வைக்கப்பட்டன.

ஆட்கொல்லி சிறுத்தை இரையை நோக்கி எந்த வழியில் வந்தாலும் தடங்கல் ஏதும் இல்லை. கார்பெட் ஆட்கொல்லி சிறுத்தையைக் கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து இரை இருக்கும் இடத்திற்கு வருவதற்கு, 15 அடி தூரம் கொண்ட சமதள நிலத்தின் ஊடே அச்சிறுத்தை வரும் என்று கருதினார். எனவே அந்தச் சமதள நிலத்தில் பெரிய ஜின் பொறியைப் பொருத்தினார்கள். அதற்கு முன்னேற்பாடாகத் தரையில் இருந்த இலை, குச்சி, புல் என அனைத்தையும் அகற்றினர். பின்னர் ஆழமான ஒரு பெரிய குழியைத் தோண்டினர். அக்குழியைத் தோண்டும்போது கிடைத்த மண்ணை தொலைவில் ஓர் இடத்தில் கொட்டினர். தோண்டப்பட்ட குழியில் ஜின் பொறியைப் பொருத்தினர். பின்னர், ஜின் பொறியைச் சுற்றிலும் அடுக்காகப் பச்சை இலைகளைக் கொண்டு வந்து போட்டனர். அதன் மீது மண்ணைத் தூவினர். முன்னர் அவ்விடத்தில் புற்கள் எப்படி இருந்தனவோ, அதேபோன்று புற்களையும் தூவினர். ஜின் பொறி மிகவும் கவனத்துடன் அவ்விடத்தில் பொருத்தப்பட்டது. ஜின் பொறியைப் பொருத்திய பிறகு இபாட்சனுக்கும், கார்பெட்டுக்கும் அவ்விடத்தில் ஜின் பொறியை எங்கே பொருத்தினோம் என்று தாமே கண்டுபிடிக்கச் சிரமப்பட்டனர்.

கார்பெட்டின் மீன் பிடித் தூண்டில் கயிற்றை ஒரு ரைபிள் துப்பாக்கியின் விசையுடன் இணைத்து, அதைத் துப்பாக்கியின் பின் பகுதி வழியாகப் பிணைத்து, பின்னர் இரைக்கு அருகே 10 அடி தூரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மீன் பிடிக் கயிறு இரண்டாவது ரைபிள் துப்பாக்கியின் பின்பகுதியுடன் பிணைக்கப்பட்டு, துப்பாக்கியின் விசையுடன் இணைக்கப்பட்டது. பிறகு அந்த மீன் பிடிக் கயிறு மூதாட்டியின் சடலத்தின் இடுப்பைச் சுற்றிக் கட்டப்பட்டது. துப்பாக்கி விசையுடன் கயிறு நன்றாக இழுத்துக் கட்டப்பட்டுப் பாதுகாப்பாக முடிச்சுப் போடப்பட்டது.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இருவரும் தங்களுடைய ஏற்பாட்டைப் பார்வையிட்டனர். ஏற்பாடு நல்ல முறையில் செய்யப்பட்டிருப்பதாக இருவருக்கும் தோன்றியது. ஆனால் அப்பொழுது அவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. ஒருவேளை ஆட்கொல்லி சிறுத்தை, எதிர்பார்த்த வழியில் நேரடியாக வராமல், சுற்றி வந்து இரையை அணுகினால் என்ன செய்வது என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. அப்படிச் சுற்றி வந்து இரையை நெருங்கினால் துப்பாக்கியால் உருவாக்கப்பட்ட பொறியின் தாக்குதலிலிருந்தும், ஜின் பொறியிலிருந்தும் அது தப்பித்துவிடும். அதற்காக இருவரும் கிராமத்திற்குச் சென்று ஒரு கடப்பாறையை எடுத்து வந்து அதைக் கொண்டு சமதளத் தரையில் ஓர் அடி ஆழம் கொண்ட ஐந்து குழிகளைத் தோண்டினர். குழிகள் ஒவ்வொன்றிலும் வெட்டிக் கொண்டு வரப்பட்ட முட்புதர்களைச் சொருகினர். பின்னர் முட்புதர்கள் வெளியே வராதபடி குழிகளை நன்றாக மண்ணைப் போட்டு மூடினர். முட்புதர்கள் மலையில் இயற்கையாக உருவானது போல் தோற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் செய்த ஏற்பாட்டில், எலியை விடப் பெரிய உருவம் கொண்ட எந்த ஒரு மிருகமும் அந்த இடத்திற்குள் நுழைந்து சடலத்தைத் தின்று விட்டு, எந்தப் பொறியிலும் சிக்காமல் உயிருடன் திரும்ப முடியாது என்று திருப்திப்பட்டுக் கொண்டனர். பின்னர் ரைபிள் துப்பாக்கிகளின் safety-catch களை நீக்கிவிட்டுக் கிராமத்திற்குத் திரும்பினர்.

கிராமத்திற்கு 50 கஜ தூரத்திற்கு முன்னர், அவர்கள் அக்கிராமத்தில் முதல் முறையாக நுழைந்தபோது மூதாட்டியின் ரத்தம் சிந்தியிருந்த இடத்திற்கு அருகாமையில், பரந்து விரிந்த மாமரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் ஒரு மேடை அமைக்க ஏற்பாடு செய்தனர். மேடை அமைப்பதற்குத் தேவையானப் பொருள்களைக் கிராமத்திலிருந்து தருவித்தனர். அமைக்கப்பட்ட மேடை மீது வைக்கோலைப் பரப்பினர். இபாட்சனும், கார்பெட்டும் அன்றைய இரவு அந்த மேடை மீது தங்கி, ஜின் பொறியில் சிக்கப் போகும் ஆட்கொல்லி சிறுத்தையை ஒழித்துக்கட்டத் தீர்மானித்திருந்தனர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *