அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே, ஒரு நல்ல மகிழுந்தைத் (கார்) தெரிவு செய்து பயணத்தைத் தொடங்கினோம். ஏனெனில், சுந்தரராமன் 85 வயது முதியவர் என்பதோடு, முழங்கால் வலியால் சற்றே சிரமப்படுபவர். எனவே, சற்று வசதியான கார் இருந்தால் நல்லது என்று நினைத்தோம். காலை 7 மணிக்கெல்லாம் புறப்பட்டாகி விட்டது. வெயிலின் கடுந் தாக்கத்தின் முன்பு பெரும்பாலான பணியை முடித்து விட்டால், கஷ்டப்பட வேண்டாம் என்று திட்டம். 8 மணிக்கு அரேபாளையத்தில் சுப்பப்பா கடையில் நல்ல காலை உணவை முடித்துக் கொண்டு கேர்மாளம் நோக்கிப் பயணமானோம். அங்கு உள்ள நண்பருக்குத் தகவல் கொடுத்தாகிவிட்டது. இந்த வழியும் சரி மற்றும் இந்த வழியில் உள்ள கிராமங்களும் சரி, வன உயிரினங்களைக் காணத் தோதாக அமைந்தவை. பழைய கென்னெத் அன்டேர்சன் கதைகளைப் படித்தவர்கள் இதுபற்றி அறிவார்கள்.
கெத்தேசால் தாண்டியதும், சாலையின் ஓரத்தில் ஒரு காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. நல்ல திடகாத்திரமான உருவம்; திமிறும் தசைகள்; உறுதியான கொம்புகள்; சற்றும் பதறாத பார்வை என மிகக் கம்பீரமாக இருந்தது! நல்ல வயதான எருமை எனப்பட்டது எனக்கு. ஏனெனில், கண்கள் சுருங்கி, பார்வையில் ஓர் அசட்டை தெரிந்தது. என்னுடைய கணிப்பில், வயது முதிர்ந்ததால், அது கண் புரையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. சற்றும் கவலையில்லாமல் அது எங்கள் வண்டி அடுத்து வருவதையும், நிற்பதையும் கண்டுகொள்ளாமல் மேய்வதிலேயே கவனமாக இருந்தது. அவ்வப்போது, சற்றே தலையை உயர்த்திப் பார்த்ததோடு சரி; வேறு பெரிய அணுக்கம் தெரியவில்லை! எனக்கு கென்னெத் அன்டேர்சனின் ‘கெத்தேசாலின் பெரிய காளை எருமை’ (the big bull bison of geddesaal) என்கிற கதைதான் நினைவுக்கு வந்தது!
அதில், அன்டேர்சன் எப்படிச் சற்றே வளைந்து குத்தூசி போல இருந்த அதன் ஒரு கொம்பு, அந்த எருமைக்கு பெரிய ஆயுதமாகப் பயன்பட்டது என்று அற்புதமாக எழுதியிருப்பார்! சற்றுக் குனிந்து தலையை பக்கவாட்டில் சுழற்றித் தூக்கும்போது, எப்படி அந்தச் சிதைந்த அல்லது ஊனமுற்ற கொம்பு எதிரி எருமைகளைக் கிழித்துப் புண்படுத்தியது; பயமுறுத்தியது; ஓட வைத்தது என்பதை விலாவாரியாக எழுதியிருப்பார். இந்த எருமையும் அதைப் போன்ற ஒரு திடகாத்திரமான உடல் கொண்ட எருமைதான்! என்ன, கொம்பு வளைந்திருக்கவில்லை! மற்றபடி, ஒரு குட்டி யானையைப்போல் தான் இருந்தது! மேலும், அவர் அந்த எருமை எப்படித் தன்னுடைய கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது என்பது குறித்தும் மிக விரிவாக எழுதி இருப்பார்! அந்தக் காலத்தில் இந்த வழியாகப் போனவர்கள் பலர் அந்தத் திருகுக் கொம்பு எருமையைப் பார்த்து வியந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறோம். இதேபோல முன்பு பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் சமதரையிலேயே ஒரு பெரிய காட்டெருமை இருந்தது; அதற்கும் நல்ல வயதாகியிருந்தது! ஆங்கிலத்தில், sinewy என்று சொல்லுவார்கள். நல்ல கட்டுமஸ்தான உடல் மற்றும் திமிறும் தசைகள் கொண்ட உடல் என்று பொருள் பட. எனக்கு இது போன்ற எருமைகளைக் காணும் போது இதுதான் நினைவுக்கு வரும்! அதே போல கோத்தகிரி போகும் வழியில் மாமரத்துக்கு அருகில் இதைப் போன்ற நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட காட்டெருமைகளைக் காணலாம்.
காட்டெருமைகள் பார்ப்பதற்குச் சாதுபோலத் தோன்றினாலும், அவற்றின் ஆக்ரோஷம் மற்றும் வேகம் மின்னல் போன்றது. அவை நிலை மாறி விட்டால், எல்லாம் சர்வ நாசம் தான்! எப்படி கெத்தேசால் திருகு கொம்பு காட்டெருமை ஒரு ஜீப்பைப் புரட்டிப் போட்டது என்று அன்டேர்சன் மிகச் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார்! அதே வகையில், சில ஆண்டுகளுக்கு முன் திம்பம் அருகே ஒரு புகழ் பெற்ற நடிகரின் ஜீப்பைப் பந்தாடி விட்டது! அதுவும் காயமடைந்தது என்பது வேறு விஷயம். கோத்தகிரி போகும் வழியில் உள்ள எஸ்டேட்டுகளில் பணி புரிபவர்களைக் கேட்டால் தெரியும் காட்டெருமையின் சினம் என்ன செய்யும் என்று! சாதாரணமாக, தேயிலை பறிப்பவர்கள் அருகில் காட்டெருமைகள் நின்றாலும், பயமின்றி இருப்பது போலத்தான் தோன்றும். ஆனால், அவற்றின் நடமாட்டத்தை அனிச்சையாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள். சட்டென்று அவை மாறும் முன்பு இவர்கள் விலகி விடுவார்கள். அப்படியும் ஓரிரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்வதுண்டு. அரவேனுவில் இரவு ஏழு மணிக்கு மேல் நடமாடுவது சற்றுச் சிரமம்தான். போன வாரம், வெலிங்டனில் இரண்டு எருமைகள் போக்குவரத்தை நிறுத்தின!
தமிழ்நாட்டின் தலைசிறந்த புகைப்படக் கலை நிபுணர் மற்றும் உயிர் இயலாளரும் ஆன திரு.எம். கிருஷ்ணன், முதுமலையில் ஒரு காட்டெருமைக் கூட்டத்தைப் படம் எடுக்க, தான் பட்ட கஷ்டத்தைத் தனது புத்தகத்தில் மிக நன்றாக விவரித்திருப்பார். மாலை வெயிலில் மேய்ந்து கொண்டிருந்த மந்தை எப்படி இவர்களது சமீபத்தை விலக்கி உண்ணிச்செடிகளின் உள்ளே சென்றது; பின் எப்படி இவர்களது யானையைப் பரிச்சயப்பட்டு மேயத் தொடங்கி நல்ல படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தது என்று எழுதியிருப்பார். அதேபோல எப்படி மக்கள் காட்டு எருமையின் பலத்தையும், கணிக்க முடியாத இயல்பையும் அறிந்து வைத்துள்ளனர் என்றும் விவரித்திருப்பார். காட்டெருமை என்று சொல்லக்கூடாது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். காரணம், இவை காட்டில் வாழும் மாடுகள் என்றும், நமது நாட்டு மாடுகளின் மூதாதையர் என்றும் அவர்கள் வாதிடுவர்! பின்னே சொன்னது உண்மை என்றாலும், மற்றத் தென்னிந்திய மொழிகளிலும் இவை எருமை என்றே பேசப்படுகிறது. உதாரணமாக, கன்னடத்தில் காடெம்ம; மலையாளத்தில் காட்டு போத்து அல்லது காட்டி.
பழந்தமிழ் இலக்கியங்கள் ‘ஆமான்’ என்று குறிக்கின்றன என்பது சற்றே உயிரியல் அறிந்தோர் கூற்று. துலங்கிமில் நல்லேறு என்று இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது, நல்ல உறுதியான திமில் கொண்ட காளை எனப் பொருள் கொள்ளலாம். அவை கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை என்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றன. மலைபடு கடாம் காட்டு எருமைக் காளையும் மற்றொரு மானின (nilgai) காளையும் மோதிய காட்சியைக் காட்டுகிறது. இவை பெரும்பாலும் குறிஞ்சித் திணை நாடுகளிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. இப்படிக் காட்டெருமைகள் பண்டுதொட்டே நமது காடுகளில் வாழ்ந்து வருகின்றன என்பது உண்மை. என்னுடைய இந்தப் பயணம் இப்படிக் காட்டெருமைகளைக் குறித்து பல சிந்தனைகளைக் கிளறி விட்டது. முடிக்கு முன், தேனிலவுக்குத் தலைமலை சென்ற எனது இனிய நண்பர் அபிஷேக்கின் அனுபவம் பற்றி எழுதாவிட்டால், சரியல்ல என்று பட்டது!
அவரும் அவரது மனைவியும் (27 வயது சின்னப் பெண்) தலைமலை ரெஸ்ட் ஹவுஸ் அடுத்த காடுகளில் காலையில் ஒரு நடைப் பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது, எதிரில் உள்ள உண்ணிப் புதரில் சலசலப்பு கேட்டு நின்று பார்த்தனர். ஓர் ஆறடி உயரமும், குட்டி யானையைப் போன்ற உருவமும் கொண்ட காட்டெருமை தலையை உயர்த்தி நோக்கியது! இவர்கள் உறைந்து போய் அப்படியே நின்றனர்! ‘தம்பி, தேனிலவுக்கு இந்த இடம் சரிப்படாது, கிளம்பு!’, என்பது போலப் பார்த்து விட்டு, ஒரு முக்காரத்துடன் அந்த எருமை திரும்பிச் சென்றது! இன்றும், அதைச் சொல்லிச் சொல்லி நாங்கள் ரசிப்போம்!
(தொடரும்)