Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

வெண்தொண்டை மீன்கொத்தி

ஒரு சில பெயர்கள் அந்தக் குறிப்பிட்ட குணத்தையோ அல்லது தொடர்பையோ தெளிவாகக் குறிப்பிடாது. நல்ல கருநிறம் உடைய பெண்ணுக்கு வெள்ளையம்மா என்று பெயர் இருப்பது போல! ‘வெண்மார்பு மீன்கொத்தி’ என்ற பெயரும் அப்படித்தான். பழைய பெயர் வெண்மார்பு மீன்கொத்தி என்று சிலர் ஆட்சேபிக்கலாம். தற்போது இது ‘வெண்தொண்டை மீன்கொத்தி’ என்று அழைக்கப்படுகிறது. மீன்கொத்தி வகையைச் சார்ந்தாலும், அது பெரும்பாலும் காணப்படுவது நீர் உள்ள இடங்களில் அல்ல; மாறாக, வயல் மற்றும் திறந்த வெளிகளில் தான். அதன் உணவும் மீன் அல்லாத பல உயிரினங்கள் – பல்லி, ஓணான், தேள், பூரான் என்று பல ஊர்வன மற்றும் பூச்சிகள்தான். அவ்வப்பொழுது, நண்டு, மீன்களை அரிதாகப் பிடித்துத் தின்னும்! ஆனாலும், இது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்ததுதான். அடைக்கலங்குருவி போல, மனிதனைச் சார்ந்து வாழும் ஒரு பறவையினம்.

நல்ல நீல வண்ண முதுகு; தடித்த பவள நிற அலகு மற்றும் கால்கள்; அடர் பழுப்பு நிற அடிப்புறம் மற்றும் கழுத்து; தொண்டையில் இருந்து மார்பு வரை ஒரு வெண்ணிறத் திட்டு எனக் கண்கவரும் மீன்கொத்தி. கிடைக்கும் இரையைத் தடித்த அலகில் பிடித்துக் கொண்டு தலையைப் பக்கவாட்டில் சுழற்றிக் கல்லிலோ, கிளையிலோ அடித்துக் கொன்று பின் அப்படியே விழுங்கி விடும். மீன்கொத்திகள் இரையை மேலே தூக்கிப் போட்டு, வாயைத் திறந்து நேரே விழுங்கும் காட்சி எப்போதும் பரவசத்தை உண்டாக்கும்! பழம்பெரும் புகைப்படக் கலைஞர் ஹனுமந்த ராவின் வெண்மார்பு மீன்கொத்தி ஒரு கொழுத்த நண்டைப் பிடித்தவாறு மண் திட்டில் உட்கார்ந்திருக்கும் ஒரு புகைப்படம் வெகு பிரசித்தி பெற்றது ஆகும். அத்தனை பெரிய நண்டை அதனால் சாப்பிட முடியுமா என்று நமக்கு மலைப்பாக இருக்கும்! அதற்குத்தான் இரையை இப்புறம், அப்புறம் சுழற்றி அடிக்கும் அடி வைத்தியம்!

சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யும் முன்பு, நான் வீட்டின் மொட்டை மாடியில் மாலை வேளைகளில் சற்று உலாவுவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம், மாலை அந்தி சாயும் நேரம், ஒரு வெண்மார்பு மீன்கொத்தி மாடி கைப்பிடிச் சுவரின் அடுத்துள்ள மின்கம்பத்தில் வந்து அமைதியாக அமரும். ஒரு ஐந்து நிமிடங்கள், சுற்றுமுற்றும் நோட்டம் விடும்; எந்தவித அசைவும் இன்றி எதிர் வீட்டு ஓட்டுக் கூரையை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டே இருக்கும். அந்த வீட்டின் ஓடு பழைய கால சொருகு ஓடுகள் என்பதால், இடுக்குகளில் பூச்சிகள் இருக்கும். நமது நண்பர் வெண்மார்பு மீன்கொத்தி அந்த அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருப்பார்!

எனக்கு இது வியப்பைத் தந்ததோடு, அதன் உத்தேசம் தான் என்ன என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது! இதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று ஒரு நாள் நான் மாடியின் எதிர் மூலையில் நின்று கவனிக்கத் தொடங்கினேன். சற்று இருட்டு கூடும் நேரம், இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு, எதிர் வீட்டு ஓட்டின் மேலே ஓடின. அவை நன்கு புலப்படும் வரை அமைதி காத்த மீன்கொத்தி, மின்னல் வேகத்தில் பறந்து ஒன்றைக் கொத்திக்கொண்டு போனது! எல்லாம் ஒரு பத்து வினாடிகளுக்குள் முடிந்து போனது! அந்த மின்னல் வேகச் செயல்பாடு, சரியான நேரம் வரை பொறுமை மற்றும் எதிராளியின் பழக்க வழக்கங்களை அறிதல் எனப் பல விஷயங்களை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டது, வெண்மார்பு மீன்கொத்தி! அடுத்த நாள் மற்றொரு பல்லி; அதன்பின் சுண்டெலி; தேள் என இருப்புத் தீரும் வரை தினமும் அவன் வருவது தொடர்ந்தது; நானும் விடாமல் இந்த வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தேன்!

எனக்கு என் மானசீகக் குருநாதர் கோனேரி ராவின் அற்புதமான ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது! சென்னை இயற்பியலாளர்கள் சங்கம் வெளியிட்ட ‘த ஸ்பிரிண்ட் ஒப் த பிளாக்பக்’ என்கிற பதிப்பில் மிக அருமையானதாகப் போற்றப்பட்ட ஒரு கட்டுரை அது. எப்படி, திருவல்லிக்கேணியில் மக்கள் நெரிசலின் இடையில் ஒரு வெண்மார்பு மீன்கொத்தி கூடு வைத்து இனப்பெருக்கம் செய்தது; குஞ்சுகளை எப்படி வளர்த்தது; என்னென்ன பிரச்னைகளை எதிர் கொண்டது என்று பல விஷயங்களை அதில் அவர் விவரித்திருப்பார். படிக்கப் படிக்க ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக இருக்கும்.

ஒரு காக்கை எப்படி மீன்கொத்தி மீனுடன் வரும்போது துரத்தும்; குஞ்சுக்குக் கொண்டு வந்த மீனை இழக்காமல் இருக்க மீன்கொத்தி என்னென்ன தந்திரங்களைக் கையாண்டது என்று படு சுவாரசியமாக அந்தக் கட்டுரை நீளும்! மீன்கொத்தி ஒரு மீனுடன் குஞ்சுக்கு இரை கொடுக்க வரும்போது, காக்கை அந்த மீனைக் கபளீகரம் செய்ய அதைப் பின் தொடர்ந்து வரும். மீன் அலகில் குறுக்காக இருப்பதால், காக்கை ஒரு பாய்ச்சலில் அதைப் பறித்து விடலாம் என்பதை உணர்ந்த மீன்கொத்தி, லாகவமாக அதை அலகின் உள்ளே, அதாவது, நெடுங்கிடையாக மாற்றி வைக்கும் அறிவை மிக அழகாக விவரித்திருப்பார். அதே போன்று திருவல்லிக்கேணியில் கள்ளப் பருந்து கூடு வைத்த மற்றொரு கட்டுரையும் அவரது தலைசிறந்த கட்டுரை (படைப்பு). இதுவெல்லாம் நடந்த இடம் பார்த்தசாரதி கோயிலின் பின்புறமுள்ள துளசிங்கப் பெருமாள் சந்தில்! இப்போது உங்களுக்கு, இந்த மீன்கொத்திக்கு மனிதர்களோடு உள்ள தொடர்பு புரியும்!

பழைய நண்பன் நீலப் பொன் மான் போல இவனும், மணல் திட்டுகள் அல்லது பொந்துகள் உள்ள மணற்பாங்கான பகுதிகளில் கூடு வைப்பான். சில நேரங்களில் கட்டட இடிபாடுகளில் உண்டாகும் பொந்துகள் கூடப் பயன்படுத்தப் படும். தேவை, சற்றுக் குழல் போல நீண்ட பொந்து; குடைய மிருதுவான மண்; செப்பனிடத் தோதாக உள்ள இடம்; இடையூறுகள் இல்லாத பிரதேசம். வீடுகள் நிறைந்த பகுதிகளில், ‘டட், டட், டட்’ என்று கத்திக் கொண்டு ஒரு நீல மின்னல் பறந்து சென்றால், அது பெரும்பாலும் நமது நண்பன் வெண்மார்பு மீன்கொத்தி ஆகத்தான் இருக்கும். தண்ணீர் தொட்டிகளின் அருகே, மின் கம்பங்கள் மேலே, வேலியின் மேலே, என்று எல்லா இடங்களிலும் காணப்படும். ‘குரிகுரிகுரீ’ என்ற உருட்டல் ஒலியும் அவ்வப்போது வெளிப்படும்.

மிகச் சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹைதர்பூர் சதுப்பு நிலப் பறவைச் சரணாலயத்தில், வெண்மார்பு மீன்கொத்திகள் கூடு வைக்கும் அழகையும், அவற்றின் இணை சேரும் களியாட்டங்களையும் காணக் கிடைத்தது. ஒரு பறவை, ஈர மணல் திட்டில் மோதி, மோதிக் குடைவதையும், மற்றொன்று அதை ஊக்கப்படுத்துவதையும் ஒரு அரை மணி நேரம் கண்டு மகிழ்ந்தேன். முடிவில், ஓர் அரை அடி ஆழக் குழல் போன்ற சுரங்கம் குடையப்பட்டது. மாலை இருள் கவிந்து விட்டதால், அன்றைய பணி அத்துடன் முடிக்கப்பட்டு அவை சென்று விட்டன. அடுத்த நாள் அவை தொடர்ந்து பணியைச் செய்து கூடு அமைக்கப்பட்டது என ஹைதர்பூர் சரணாலய வழிகாட்டி (கைடு) எனக்குப் பின்னர் தெரிவித்தார். இப்படி, வெண்மார்பு மீன்கொத்தியுடனான தொடர்பு இன்னும் அறுபடாமல் இருக்கிறது!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *