Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

தேன்சிட்டு

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஊதா மஞ்சள் தேன்சிட்டின் (purple-rumped sunbird) குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. எப்போதும் அவை சமையலறை ஜன்னலின் எதிரே உள்ள வாழை மரங்களில் காலையிலும் மாலையிலும் பூச்சிகளைப் பிடிக்கவும், அடுத்துள்ள செம்பருத்திப் பூக்களில் தேன் அருந்த வருவதும் வழக்கமான செயல் தான் என்றாலும், அன்று அவற்றின் உற்சாகம் கொஞ்சம் அதிகமாகப் பட்டது. தேநீர் கொதித்ததும், தள்ளி வைத்து விட்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்க வீட்டின் முன் தாழ்வாரத்துக்கு வந்தேன். தாழ்வாரத்தை ஒட்டிய காலி இடத்தில், இஷ்டம் போல வாழை மரங்கள் வளர்ந்து கிடந்தன. காரணம், நான் அந்த இடத்தை வாங்கும் போது அது வாழை மற்றும் கறிவேப்பிலை காடாகத்தான் இருந்தது. எவ்வளவு குறைவான மரங்களை வெட்ட முடியுமோ அவ்வளவு குறைவாக வெட்டி வீடு அமைக்கப்பட்டது. அதன் விளைவாக, வாழை மரங்கள் குறுக்கும் நெடுக்கும் ஒழுங்கின்றிக் கசகசவென வளர்ந்து ஒன்றின் இலை மற்றொன்றின் மேல் தாங்கலாக ஒரு விதானம் போலப் படர்ந்து கிடக்கும்.

மஞ்சள் தேன்சிட்டு
மஞ்சள் தேன்சிட்டு

இதில், ஒரு வாழையின் நீண்ட இலை, அடுத்துள்ள வாழை இலை மீது படர்ந்து ஒரு பரந்த தூளி போல இருந்தது. இலையின் குழிவில், முன்தினம் பெய்த மழையின் விளைவாக, நீர் தேங்கி இருந்தது. அடுத்துள்ள கிளைகள் தாங்கிப் பிடித்ததால், நீர் கீழே வழியாமல், இலையின் குழிவில் அப்படியே நின்றது. அது நமது தேன்சிட்டிற்கு ஒரு நல்ல குளியல் தொட்டி ஆகிப் போனது! தேன்சிட்டு ஒரு கட்டை விரல் பருமனுள்ள பறவை. எனவே, மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தக் குட்டித் தொட்டியில் கிடந்து கும்மாளமிட்டபோது, ஆர்வத்தில் குரல் உயர்ந்து, குளியலறைப் பாடகர் போலக் காட்டிக் கொடுத்து விட்டது! மிகுந்த உற்சாகத்துடன் நானும் அது குளிக்கும் அழகை ரசிக்கத் தொடங்கி விட்டேன்! சிர்ரி, சிர்ரி என்ற ஒலி இப்போது ஒரு தனி இசை போல, உயர்ந்த தொனியில் ஒலித்தது. அங்குமிங்கும் புரண்டு, இறகுகளை விரித்தும், நனைத்தும், சின்னக் குழந்தை போல ஆட்டம் போட்டது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தேநீரை மறந்தே போனேன்!

சரி, போதும் என்று அவன் விலகியதும், அவனது உறவினன் ஊதா தேன்சிட்டு (purple sunbird) அந்தக் குளியல் தொட்டிக்குப் படையெடுத்தான்! இவன் உடல் முழுவதும் நல்ல ஊதா நிறத்தில் இருந்தாலும், இடையிடையே பச்சை, நீலம், ரோஜா போன்ற வண்ணங்களும் ஒளிரும். அதிலும், நல்ல பிரகாசமான ஒளியில், தகதகவெனப் பல வண்ணங்கள் தெரியும். அவன் ஓர் ஐந்து நிமிடங்கள் குளித்துக் களித்த பின், ஒரு பத்து நிமிடம் இடைவெளி கிடைத்தது. ஓடிச் சென்று தேநீரைச் சூடாக்கிப் பால், சர்க்கரை சேர்த்து கோப்பையில் எடுத்துக் கொண்டு மறுபடியும் தாழ்வாரத்தை அடைந்தேன். தேநீரை உறிஞ்சியபடி அங்குமிங்கும் நோக்கியபடி இருந்தேன். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஒரு செம்பிட்ட புல்புல், அந்த இலையின் மேல் கிளையில் அமர்ந்து நோட்டம் விட்டது. பின் மெதுவாக இறங்கியது. எனக்கு அந்த இலை புல்புலின் கனத்தைத் தாங்குமா என்ற கவலை! ஏனெனில், நீர் மொத்தமும் கீழே வழிந்து விட்டால், மற்ற பறவைகளும் வராதே.

ஊதா தேன்சிட்டு
ஊதா தேன்சிட்டு

என்னுடைய கவலை தேவையற்றது என்று புல்புல் எனக்கு உணர்த்தியது. வெகு நளினமாக இலையின் ஓரத்தில் அமர்ந்து பரிசோதித்த பின், மெதுவாக உள்ளே இறங்கியது. அதிகமாக ஆட்டம் போடாமல், அமைதியாகக் குளியல் போட்டது! தேன்சிட்டிற்கும், புல்புலுக்கும் மிகுந்த வித்தியாசம் இருந்தது, குளிக்கும் முறையில்! நன்கு சோதித்த பின்னரே, புல்புல் உள்ளே இறங்கியது. தேன்சிட்டைப் போல, பிந்தாசாக, அதாவது, கவலையற்று உள்ளே இறங்கவில்லை; ஒரு கள ஆய்வு செய்த பின் தான், புல்புல் இறங்கியது. அதே போல, அதிக ஆட்டம், பாட்டம் எல்லாம் இல்லை; அமைதியான முறையில் குளியல். இவற்றுக்கிடையில், சிறு ஓணான் குஞ்சுகளும், நீர் அருந்த வந்தன. அவற்றுக்கு அதிகம் உள்ளே இறங்க வேண்டிய அவசியம் இல்லை. இலையின் நுனியில் இருந்து நாவை நீட்டி அருந்தினால் போதும் என்ற நிலை! ஒரு சில வண்ணத்துப் பூச்சிகளும் எட்டிப் பார்த்து, பின் நீர் அருந்தின. அவை வெகு லேசான உயிரினங்கள்! ஆங்கிலத்தில் featherlite என்று சொல்வது போல!

எனக்கு அங்கிருந்து போக மனமில்லை; ஆனால், போகவேண்டிய நிர்ப்பந்தம்! உள்ளே போன சூடான தேநீர் தன் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது! வெகு நேரம் நிற்க இயலாத நிலை! கழிவறையில் இருந்து காண இயலாது. ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் திரும்பியதும், மனம் குதூகலித்தது! ஏனெனில், அப்போதுதான் ஒரு தையல் சிட்டு (Tailorbird) வந்து அமர்ந்து நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தது! தையல் சிட்டு, தேன்சிட்டிற்கும், புல்புலுக்கும் இடைப்பட்ட உருவம்; அதாவது, தேன்சிட்டை விடப் பெரியது, ஆனால் புல்புலை விடச் சிறியது. அதற்கு எந்தவிதக் கஷ்டமும் இருக்கவில்லை. என்ன, தேன்சிட்டைப் போலப் பெருங்குரலில் பாடவில்லை. சின்ன சிப், சிப் என்ற துள்ளலோடு சரி! வாசலுக்கு அருகில் தவிட்டுக் குருவிகளின் கலகலவென்று சிலம்பும் சத்தம் கேட்டது. அவை மைனாவின் உருவம் கொண்டவை. தாங்காதே! என்ன நடக்கும் என்றறிய நான் ஆவலாக இருந்தேன்! தையல் சிட்டு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிதானமாகக் குளித்துக் கொண்டிருந்தது.

தையல் சிட்டு
தையல் சிட்டு

தவிட்டுக் குருவிகளின் (Yellow-billed babbler) இயல்பு, எங்கு சென்றாலும் கூட்டமாகத்தான் செல்லும். அதனால் அவற்றை ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். ஹிந்தியில் சாத் பாய்! இவை வந்து அமர்ந்தால், இலை மடிந்து நீர் கொட்டிவிடும். என்னதான் நடக்கும் என்றறிய எனக்கு ஆவலாக இருந்தது. இரண்டு தவிட்டுக் குருவிகள்  வாழையின் மேல் கிளையில் அமர்ந்தன. தையல் சிட்டு, வம்பு வேண்டாம் என்று பறந்து போனது. ஒரு தவிட்டுக் குருவி மெதுவாக நீர் இருந்த குழிவு இலையின் ஓரத்தில் அமர்ந்து பார்த்தது! இலை சற்றுத் தாழ்ந்தாலும், பெரிய பிரச்னை இல்லை என்று உணர்ந்தது. அவற்றின் சிலம்பு மொழியில் ஏதோ சமிக்ஞை தந்தது. ஆச்சரியகரமாக, அவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து அமைதியாக நீரை அருந்தின! எந்தவிதத் தள்ளு முள்ளும் இல்லை. எப்படி அவை இத்தகு உள்ளுணர்வு கொண்டிருக்கின்றன என்று வியக்காமல் இருக்க முடியவில்லை! எந்த வழியில் அந்த இலையின் பளு தாங்கும் சக்தியைக் கணிக்கின்றன என்று அறிய எனக்கு மிகவும் ஆவலாக இருந்தாலும், அவற்றின் மொழி தெரியவில்லையே என்ற ஆற்றாமையும் எழுந்தது. இயற்கையின் இந்த விந்தைகளை எத்தனை பேர் நுணுகிப் பார்க்கின்றனர்?

தவிட்டுக் குருவி
தவிட்டுக் குருவி

இத்தனைக்கும் இது எப்பொழுதும் உள்ள நீர் ஆதாரம் இல்லை; ஒரு நாள் மழையின் விளைவாக வந்த நீர்; அதுவும் அந்தரத்தில் தொங்கும் இலையின் குழிவில் நிற்கும் நீர்; ஒரு பெரிய காற்றின் வேகம் அதை இல்லாததாக்கிவிடும். ஆயினும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த அறிவு (நாம் என்னதான் மிகுந்த அறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டாலும்!); மற்றும் பகிர்ந்துண்ணும் இயல்பு; அதைக் கொண்டாடும் குழந்தை போன்ற மனநிலை; இவற்றையெல்லாம் கண்டு நான் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிந்தனையில் இருந்தேன் என்றால் தவறில்லை! இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் அன்றன்றைய கவலைகளை மட்டும் எதிர்கொள்ளும் மனநிலை மனிதனுக்கும் வாய்த்து விட்டால் பொறாமை ஏது; பேராசை ஏது; சூது ஏது; இனப்பகைமை ஏது? ஒரு காலை நேரப் பறவை நோக்கல் இத்தனை யோசிக்க வைத்துவிட்டது! அதுதான் திரு.வி.க. சொல்வதுபோல இயற்கையோடு இயைந்த வாழ்வு!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *