களப்பணியில் நானும் நண்பர்கள் ஸ்ரீதர் மற்றும் அபிஷேக் மூவரும் டாப்ஸ்லிப் சென்று பின்னர் முதுமலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஊட்டி வழி நெடுக மலையேற்றம் இருப்பதால், பண்ணாரி வழியாக சாமராஜ நகரா, குண்டல்பேட், பண்டிபூர் மார்க்கமாகப் போவது என்று முடிவு செய்து வந்து கொண்டு இருந்தோம். மற்றொரு காரணம், இந்த வழி மிகுதியான காட்டுப் பகுதிகளின் ஊடே வருவதால், வன உயிரினங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதும்தான்.
எப்போதும் திம்பம் மலைப் பாதையில், புழிஞ்சுர் வரையில் உள்ள பகுதியில் யானைகளைப் பார்ப்பது ஒரு சாதாரணச் சமாச்சாரம். ஆனால், அன்று அந்தப் பகுதியில் அவற்றின் நடமாட்டம் இல்லை. இனி, பண்டிபூர் அருகில்தான் வாய்ப்பு. அதே போல, பண்டிபூர் நுழைவு வாயிலைத் தாண்டி சாலைகள் பிரியும் இடத்தில் ஓர் அருமையான கொம்பன் யானையைப் பார்த்தோம். நல்ல திடகாத்திரமான வாலிபப் பருவ ஆண் யானை! நீண்ட உறுதியான கொம்புகள் அல்லது தந்தங்கள். சாலையை ஒட்டிய காட்டில் விறுவிறு என்று நடந்து மறைந்தது. அது போன்ற நீண்ட உறுதியான தந்தங்களைக் காண்பது அரிது. எனக்கோ அது இப்படிச் சாலையை ஒட்டி உலவுகிறதே என்று கவலை! ஏனெனில், போகும் எல்லோரும் இப்படி ரசித்துக்கொண்டு மட்டுமா போவார்கள்? எத்தனை கண்கள் வேறு விதமாகப் பார்த்தனவோ, யார் கண்டது? ஆனால் அந்தக் காட்சி பெரும் மகிழ்வைத் தந்தது.
இரண்டு தினங்கள் கழித்து, அதே வழியில் திரும்பும் போது, அதே இடத்தில் கண்கள் அனிச்சையாகக் காட்டின் இரு புறமும் நோட்டம் விட்டன. என்ன ஆச்சரியம், அதே கொம்பன் அதே நடையில் எங்களுக்குத் தரிசனம் தந்து மறைந்தான்! இந்தச் சுற்றுவட்டாரம் அவனது நிலப்பகுதி போல! நாங்கள்தான் அத்துமீறி நுழைந்து விட்டோம் போல! ஆயினும், மிகுந்த மகிழ்வோடு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்த நூறு மீட்டரில், இடது புறம் நான்கு யானைகள் சாலையை ஒட்டியே மேய்ந்து கொண்டிருந்தன. முன்னும் பின்னும் வண்டிகள் சென்ற வண்ணம் இருந்தன; சில வெகு அருகில் கூடச் சென்றன. ஆயினும், அவை சட்டை செய்யாமல் மேய்ந்து கொண்டிருந்தன. முறம் போன்ற காதுகள் இடைவிடாமல் விசிறிக் கொண்டிருந்தன. எனவே, அவை மிகுந்த அமைதியான மனநிலையில் இருந்தன என்று ஊகிக்க முடிந்தது. ஆகவே, சற்று முன்னே சென்று ஒரு சில படங்களை எடுத்தோம். எங்களைப் பார்த்து எல்லோரும் நின்று விட்டால் என்ன செய்வது என்ற கவலை வேறு! அதனால், யானைகள் பதற்றம் அடைந்து விரட்டினால் என்ன செய்வது என்ற கவலை வேறு! மேலும், அவற்றைத் தொந்தரவு செய்யும் அளவு நிற்பதும் சரியல்ல என்ற நல்லெண்ணமும் சேர்ந்து கொண்டது. ஆகவே, வண்டியை எடுத்தோம்.
எதேச்சையாக வலது புறம் பார்த்த போது, சாலையின் வலது மருங்கில், இரண்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர்! வனத்துறை ஊழியர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில், சீருடை இல்லை. நகரவாசிகள் போல, கால்சராயின் உள் செருகிய மேல்சட்டை, காலில் ஷூக்கள், கையில் கோப்புகள் என வியாபாரக் கூட்டத்திற்குப் போகிறவர்கள் போல இருந்தனர்! யானைகள் இடது புறம், அவர்களுக்கு எதிரில், ஒரு 30 மீட்டர் தொலைவில் மேய்ந்து கொண்டிருந்தன. என்னால் என் கண்களை நம்ப இயலவில்லை! இப்படிப் பயமில்லாமல் ஒரு மனிதனா? அபிஷேக் என்னை விடக் கவலை ஆனார்! உடனே வண்டியை நிறுத்தி விசாரித்தோம், ‘ஏன் இப்படி யானைக்காட்டில் நடந்து போகிறீர்கள்?’ என்று. எந்தப் பதட்டமும் இல்லாமல், ‘வண்டி ரிப்பேர் ஆகி விட்டது. நுழைவாயில் ஒரு கிலோமீட்டர்தான். ஆகவே நடந்து போகலாம் என்று போகிறோம். அங்கே போய் உதவி கேட்கலாம் என்றிருக்கிறோம்’ என்றனர்!
யானைக் காட்டில் அது போல நடந்து போவது தற்கொலைக்குச் சமம் என்று புரிய வைக்க நான் படாதபாடு பட்டேன்! நுழைவாயில் ஒரு கிலோமீட்டர்தான். ஆகவே ஒன்றும் ஆகாது என்ற வியாக்கியானம் வேறு! பின் நாங்கள் எல்லோரும் அவர்களைச் சம்மதிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இத்தனையும் யானைகள் ஒரு 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது! ஒரு வழியாக எங்கள் வண்டியில் வருகிறோம் என்று ஒப்புக் கொண்ட பின், எங்களுடைய உடமைகள் காரில் இருக்கின்றன, எடுத்துக் கொண்டு வருகிறோம் என்று மீண்டும் காரை நோக்கிச் சென்றனர்! அது யானைகள் உள்ள இடத்திற்கு நேர் எதிரே ஒரு 30 மீட்டர் தொலைவில்! உண்மையில், அவர்களுக்கு நிலைமை புரிந்ததா என்று தெரியவில்லை! நான் அபிஷேக்கை வண்டியைச் சற்றுப் பின்னோக்கி ஓட்டச் சொன்னேன். ஏனெனில், யானைகள் துரத்தி ஓடி வந்தால், ஏற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால்! நல்ல வேளையாக, எந்த அசம்பாவிதமும் இல்லாமல், கைப்பைகளை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து எங்கள் வண்டியில் ஏறிக் கொண்டனர். பின் நுழைவாயிலில் அவர்களை இறக்கி விட்ட பின் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அவர்களது நல்ல நேரம், யானைகளுக்கு அவ்வளவு அருகில் அவர்கள் இத்தனை நடவடிக்கைகள் செய்தும், எந்தப் பிரச்னையும் வரவில்லை. யானைகளின் மனநிலை மிகவும் சாந்தமாக இருந்ததுதான் காரணம்.
யானைகள் எப்போதும் சாந்தமான சுபாவம் கொண்டவைதான் என்றாலும், சில நேரங்களில் அவை மோசமாக நடந்து கொள்ளும். சாந்தமானவை என்பதற்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வலம் வந்த ஒரு சில வீடியோக்களே சான்று. அதில் ஒரு மனிதர் காரில் இருந்து இறங்கி, சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் யானையின் முன் நின்று கும்பிட்டு, மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு, பின் யானையின் முன் கீழே விழுந்து கும்பிட்ட பின்னர் சாவகாசமாக நடந்து வந்து காரில் ஏறிப் போனார்! யானைதான் அவரைப் பார்த்துப் பயந்தது போலத் தோன்றியது! இன்னொரு நிகழ்வில், சாலை நடுவே நின்று கொண்டிருக்கும் யானையைக் கடந்து போக ஒரு பைக் ஓட்டி, யானையின் எதிரே மண் பாதையில் இறங்கிப் போக முயலும்போது, யானையின் எதிரிலேயே கீழே விழுந்து விடுவார்! பின் எழுந்து ஓடித் தப்பிப்பார்! யானை அப்படியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அசையாமல் நிற்கும்! பல முறை யானைகளை நேருக்கு நேர் நான் எனது கழுகுகள் ஆய்வின் போது கண்டதுண்டு. அவை அப்படியே நின்று விடும் அல்லது நாம் போவதற்கு வழி விடும். ஆயினும், எப்போதும் இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. அங்குதான் பிரச்னை.
உதாரணமாக, மூணாறில் படையப்பா என்கிற கொம்பன் மிகப் பிரசித்தம். கடைவீதி, தெருக்கள், மார்க்கெட் என்று எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டு வரும் காட்டு யானை. ஆனால், மனிதர்களின் சகவாசத்திற்குப் பழகி விட்டது. அங்குள்ள மக்களும் அதனுடன் வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள். யாரும் ‘யானையின் சல்லியம்’ (தொந்தரவு) என்று புகார் கொடுப்பதில்லை! மாறாக, ‘பாவம் ஈ கொம்பன்’ என்று ஆதரவாக இருக்கின்றனர்! இன்று வரை ஒரு சில நேரங்களில் ஏற்பட்ட பொருள் சேதம் தவிர, வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அதே போலக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வரை, மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் ரிவால்டோ என்ற யானை சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. காட்டு யானை என்றாலும், தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தால், ஊர்ப்புறமே உணவு தேடித் திரிந்து கொண்டிருந்தது. மக்களும் அன்புடன் ஆதரித்து வந்தனர். கோவை அனுவாவி மற்றும் மருதமலைக் கோயில்களைச் சுற்றி உள்ள காடுகளில் இருந்து யானைகள் கோயிலின் அருகிலும், அடுத்தும் வருவதும், காணப்படுவதும் சாதாரண நிகழ்வு. பெரும்பாலான நேரங்களில், யானைகள் இருப்பது தெரியாமல் போயிருப்பார்கள்! இப்படி அவை மிகுந்த பொறுமையும் அமைதியும் கொண்டவைதான்.
ஆனால், சில நேரங்களில், மிகவும் கோபம் அடைந்து விடுவதும், தவிர்க்க முடியாத நிலைதான். கோயில் யானைகள், கொல்லும் யானைகளாக மாறுவதும் உண்டு. காட்டு யானைகள் ஆடு மாடு மேய்ப்பவர்களைக் கொன்ற கதைகளும் உண்டு. சமீபத்தில் வன உயிரினக் கல்லூரியில் (சேகான், கோவை) நிகழ்ந்தது போல, ஒரு முகாந்திரமும் (நம்மைப் பொறுத்தவரை) இல்லாமல், ஓர் இளநிலை விஞ்ஞானியைக் கொன்ற சம்பவமும் உண்டு. இத்தனைக்கும் இவர்கள் யானையிடம் இருந்து தொலைவில் நின்றவர்கள். நம் நண்பர்களைப் போல 30 மீட்டர் தொலைவில் அல்ல! எனவே, விலங்குகளின் மன நிலை ஒரு முக்கிய காரணம் என்று தெரிகிறது. அதனால், நாம் போதுமான தொலைவில், அதாவது விரட்டினால் தப்பிக்கக் கூடிய இடத்தில், இருக்க வேண்டும். நீதி வெண்பா என்ற அருமையான நூலில் சொன்னபடி இருந்தால் பிரச்னையே இல்லை!
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)
இது தீயோர் சேர்க்கை பற்றி என்றாலும், சில விலங்குகளை எத்தனை தூரத்தில் வைக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருப்பது விசேஷம்தானே! நான் அவர்களிடத்தில் சொன்னது போல, தீமையிலும் நன்மை, அவர்கள் யானைகளால் தாக்கப்படாமல் போனதுதான்! இன்றும் அவர்களது நல்ல நேரத்தையும் அதிர்ஷ்டத்தையும் எண்ணி நான் வியப்பேன்!
(தொடரும்)