Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே வேப்பமரத்தூர் செல்லும் ஒரு வழி பிரியும். அதன் வழியாகப் போனால், கேரளாவில் உள்ள அட்டப்பாடிக்கு அருகில் சென்றுவிடலாம். பாலத்தின் மறு கரையில், ஆற்றின் ஓரமாக ஓர் அழகான பரண் வீடு இருந்தது. அங்கிருந்து நீரருந்த வரும் விலங்குகளைப் பார்ப்பது வெகு ரம்மியமாக இருக்கும். ஆனால், அது பழுதடைந்து கிடந்தது வருத்தமளித்தது. அங்கிருந்து சாலை சற்று மேலே ஏறிச் செல்லும். சின்ன வாட்டமான உயர்வு என்றாலும், சற்று நிதானமாகவே செல்ல வேண்டும். ஏனெனில், திருப்பங்கள் கூர்மையானவை… திடீரென்று வரும். சாலையும் நல்ல அகலம் இருக்காது. ஒரு புறம் மலையின் தடுப்பு, மறுபுறம் பள்ளம் என்று ஓட்டுனருக்குச் சோதனையான குறுகிய மலைப்பாதை. அதில் ஜீப் நிதானமாக ஏறிக்கொண்டிருந்தது. முன்னிருக்கையில் ஓட்டுநர் அருகில் மாவட்ட வன அதிகாரி; அவர் பின்னே பின்னிருக்கையில் நான்; எனதருகே ஓட்டுநரின் பின்னே வனவர்; கடைசி இருக்கையில் இரண்டு வாச்சர்கள்.

ஒரு கொண்டை ஊசி வளைவைத் தாண்டி பள்ளமாக இருந்த பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு ஏறிக்கொண்டிருந்தோம். ஏற்றத்தின் முடிவில் ஒரு மறைவு வளைவு (blind curve) இருந்தது. மாவட்ட வன அதிகாரி தனது இடது கையை வெளியில் வைத்து ஹேண்டி காமில் இந்தப் பயணத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் ஏதாவது வன உயிரினம் கண்ணில் படுகிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தேன். வளைவு வரை ஒன்றும் தென்படவில்லை; எந்த அறிகுறியும் இல்லை. ‘யு’ (U) போன்ற அந்த வளைவில் சற்றுச் சிரமப்பட்டே திருப்பிய ஓட்டுநர், நேரே கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார்! பத்தடி அகலம் மட்டும் உள்ள அந்தச் சாலையில், வெகு சாவதானமாக ஓர் ஒன்பது அடி உயரக் கொம்பன் யானை வந்து கொண்டிருந்தது! எனக்கு என் கண்களை நம்ப முடியவில்லை! அத்தனை ஆஜானுபாகுவான ஒரு கொம்பனைக் காண்பது அரிது என்பதோடு, அதன் நிதானம் வியக்க வைத்தது! ஓட்டுநர் ஆடிப்போனதோடு, அனிச்சையாக ஜீப் கதவையும் திறந்து விட்டார்! ஒரு வேளை, ஓடி விடலாம் என்று முடிவு செய்து விட்டாரோ? ஒன்றும் புரியவில்லை!

நல்ல வேளையாக, கூட இருந்த வனவர் தெளிவான சிந்தனையுடன் இருந்தார். நானும் அனாவசியமாக அலட்டிக்கொள்ளாமல் பின்னோக்கிச் செல்வதே சிறந்தது என்று கூறினேன். ஓட்டுநர் (வெள்ளியங்காடு கடை முதலாளி) ‘என்னால் இனி ஓட்ட இயலாது’ என்று கைவிரித்து விட்டார்! யானையோ நிற்பது போலத் தெரியவில்லை! தனது நிதான நடையில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. முதலில் நாங்கள் பார்த்த போது யானை 150 மீட்டர் தொலைவில் சாலையை அடைத்துக்கொண்டு வந்த வண்ணம் இருந்தது. ஒரு சில நொடிகள் நின்று அவதானித்த பின் தற்போது 100 மீட்டர் தொலைவில் வந்து விட்டது! எங்களுக்கு நேரமில்லை என்பதோடு ஒதுங்க இடமும் இல்லை! யானைக்கும் அதேதான் பிரச்னை! சற்று விரைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயம்! நல்லவேளையாக, வனவருக்கு வண்டி ஓட்டத் தெரிந்திருந்ததுடன், சமயோசிதமாகச் செயல்படவும் முடிந்தது! அவர் கடைக்காரரை இறங்கி பின்னால் வரச் சொன்னார். சடுதியில் வனவர் இறங்கி, ஓட்டுநர் இடத்துக்கு மாறினார். மிக வேகமாக இந்த வேலை நடைபெற்றது, சுமார் 30 மணித்துளிகளில்! அதன் பின் ஜீப்பை மெதுவாக இயக்கி, பின்னோக்கிச் செலுத்தினார். அப்போது யானை சுமார் 50 மீட்டர் தொலைவில் வந்து விட்டது! அதே நேரம், நாங்கள் வேகமாகச் சரிவான சாலையில் கீழே இறங்கத் தொடங்கிவிட்டோம்.

கொம்பனோ நிற்பதாகத் தெரியவில்லை! மேட்டில் இருந்த வளைவுக்கு அருகில் வந்து நின்று நோக்கியது. நாங்கள் சரிவின் கீழே, சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்தோம். மற்றொரு வளைவு திரும்பினால், இன்னும் கீழே போக வேண்டி இருப்பதுடன், குறுகிய சாலையில் பின்னோக்கி (ரிவர்சில்) வெகு தூரம் செல்ல முடியாது என்ற நிலை வேறு! மலைப் பாதையில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு, இந்தக் கஷ்டம் புரியும். மேலும் இருள் கவியத் தொடங்கி விட்டது. இன்றுபோல அன்றிருந்த வண்டிகளில் பல பின்னோக்கும் சாதனங்கள் கிடையாது. சற்று ஏமாந்தாலும், வண்டி பள்ளத்தில் உருண்டு போகும் வாய்ப்பு அதிகம். இப்படியெல்லாம் யோசித்ததுடன், ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ­– யார், நானும் ஓட்டுனரான வனவரும்தான் ­– அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டு வந்தோம். அதற்குள் யானை கீழே இறங்கத் தொடங்கியது. எங்கள் ரத்த அழுத்தம் மேலும் கூடியது. ஆனால், சற்று தூரம் முன் வந்த யானை, சட்டென்று அங்கிருந்த ஒரு சின்னப் பாறைக்கு அடுத்திருந்த தட்டையான இடத்தில் இறங்கி நின்றது. நாங்கள் எங்களது பதற்றத்தில் அப்படி ஒரு சிறிய ஒதுங்குமிடம் இருந்ததைக் கவனிக்கவே இல்லை! பெரிய உருவமான யானைக்கு அது சரியான இடம் இல்லைதான் என்றாலும், கொம்பன் உடலைக் குறுக்கிக் கொண்டு, தலையும், பாதி தந்தமும் சாலையில் துருத்திக்கொண்டு இருக்கும் வகையில் நின்றது.

நான் அப்படியே முன்னேறி, இடது புறமே சென்று, சட்டென்று வளைவைக் கடந்து விடலாம் என்று சொன்னேன்! ஆனால், அப்படிப் போனால், தந்தத்துக்கும் எங்களுக்கும் இடையே ஒரு மூன்றடி வித்தியாசம் கூட இருக்க வாய்ப்பில்லை! அதுவரை எந்தச் சத்தமும் காட்டாத மாவட்ட வன அதிகாரி, ‘வேண்டாம், வேண்டாம், அது தற்கொலைக்குச் சமம். நான் அதற்கு உடன்பட மாட்டேன்’ என்றார்! யானை அதன் பெரிய தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டியது! வனவர், ‘அது வரச் சொல்லுது’ என்றார். மாவட்ட வன அதிகாரி, ‘இல்லை. கோபத்தில் இருக்கிறது’, என்றார்! எது எப்படி ஆயினும், யானைகள் வண்டிகளுக்குப் பழகி விட்டதால், அடுத்துப் போனாலும் பதறாது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், மாவட்ட வன அதிகாரியை மீறி எதுவும் செய்ய இயலாத நிலை. எத்தனை நேரம் ஆனாலும், யானைக்கும் வேறு வழி இல்லை. காரணம், சாலை குறுகியது; நாங்கள் வெகு தூரம் கீழே சென்றால்தான் இடம் கிடைக்கும். அல்லது முள்ளி போகும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு ரிவர்சில் பின்னால் போய், சாலை அகலமாக உள்ள இடத்தில் திரும்பி, கோவை செல்ல வேண்டியதுதான்!

தெய்வாதீனமாக, அப்போது ஒரு மின்வாரிய மினி லாரி வளைவில் திரும்பி, யானையைக் கடந்து எங்களை நோக்கி வந்தது. உடனே கை காட்டி அதை நிறுத்தினோம். அந்த மினி லாரி ஓட்டுனரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவர் நான் நினைத்ததையே சொன்னார். ‘யானை ஒண்ணும் செய்யாது. சும்மா போங்க’ என்று! அவரிடம் அதிகாரியின் தயக்கத்தை விளக்கினேன். பின் ஒரு விண்ணப்பத்தையும் வைத்தேன். ‘நீங்கள் சற்றுப் பின்னே சென்று வளைவின் மேல் புறத்தில் டிரக்கை நிறுத்தினால், நாங்கள் உட்புற வளைவில் புகுந்து, விரைவாகக் கடந்து விடுவோம்’, என்று சொன்னேன். அவர் அடிக்கடி இந்த வழியில் செல்பவர் என்பதோடு, யானைகளின் சுபாவத்தையும் அறிந்தவர் என்பதால், நான் சொன்ன யோசனையைப் புரிந்து கொண்டதுடன், வனத்துறை அதிகாரியின் அச்சத்தையும் உடனே உணர்ந்து கொண்டார். உடனே டிரக்கைப் பின்னோக்கிச் செலுத்தத் தொடங்கினார். வனவரும் எங்கள் ஜீப்பை இடது புறமாக ஒதுக்கி டிரக்கை அணைத்தவாறு செலுத்தினார். யானைக்குச் சற்று முன்னே டிரக் நின்றது. யானையால் சட்டென்று வெளியே வர முடியாது! நாங்கள் வேகமாக வளைவைக் கடந்து சென்றோம். அதே வேகத்தில் டிரக்கும் இறங்கிப் போனது! கிட்டத்தட்ட நாங்கள் இருவரும் அல்லது இரு வண்டிகளும் ஒரே நேரத்தில் யானையை விட்டு விலகி விட்டோம்! வளைவில் இருந்து சற்றுத் தொலைவு சென்று யானை வருகிறதா என்று பார்த்தோம். காணவில்லை என்றதும் மகிழ்வுடன் முள்ளி நோக்கிச் சென்றோம்.

முள்ளி சென்ற பின்னும், வன அதிகாரி இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. வெள்ளியங்காடு கடை முதலாளியான ஓட்டுனரும் கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருந்தார். அவருக்குத் திரும்ப வேண்டுமே என்ற கவலை! யானை திரும்ப வழியில் நின்றால் என்ன செய்வது என்ற யோசனை! எனக்கும் வனவருக்கும் பெரிய தாக்கம் இருக்கவில்லை. காரணம், யானைகளைக் காட்டில் அடிக்கடி பார்ப்பதாலும், கால்நடையாகவே காட்டில் திரியும்போது யானைகள் விரட்டிய அனுபவம் இருந்ததாலும்தான்! அப்போது அங்கிருந்த ஊழியர்கள், அருகில் இருந்த கடையில் இருந்து சுடச்சுட தேநீர் வாங்கி வந்து தந்தனர். அதன் பின், நிலைமை சற்றுச் சீரானது! வன அதிகாரி தனது பையில் உடைமைகளைச் சோதித்துப் பார்த்தார். அவரது ஹாண்டி காம் இல்லை என்பது தெரிந்தது. அவரது இடது கையில் இருந்ததை நாங்கள் அனைவருமே பார்த்தோம். (முன்னால் சொன்னது போல). யானையைப் பார்த்தபோதுதான் விழுந்திருக்க வேண்டும் என்று நான் ஊகித்தேன். அது சரி என்பதை அப்போது செக் போஸ்ட் வந்த ஒரு காய்கறி வியாபாரி உறுதிப் படுத்தினார்! ‘அய்யா, நானும் அத்திக்கடவில் இருந்துதான் வருகிறேன். மானார் வளைவுக்கு முன் ஒரு பெரிய கொம்பன் யானையைப் பார்த்துப் பதறிப் போய், என் வண்டியை (பஜாஜ் எம் 80!) விட்டு இறங்கி, குழியில் பதுங்கி இருந்து பின் வண்டியை எடுத்துக் கொண்டு வருகிறேன். அந்த நேரத்தில் ரோட்டில் பளபளவென ஏதோ கிடப்பதைப் பார்த்தேன். யானை இருந்ததால், திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டேன்’ என்றார்.

வனவர் அது நிச்சயமாக ஹாண்டி காம்தான் என்று சொன்னார். ஜீப்பை எடுத்துக் கொண்டு திரும்பச் சென்று, வெள்ளியங்காடு கடை முதலாளியை அப்படியே ஒரு வாச்சருடன் கீழே அனுப்பிவிட்டு, ரோட்டில் கிடந்த ஹாண்டி காமை எடுத்துக் கொண்டு வேறு ஒரு வண்டியில் திரும்பி வந்தார்! அடுத்த நாள் கெத்தைக்காடு பழங்குடியினரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ‘அய்யா, அது நம்ம செவிட்டுக் கொம்பங்க. ரொம்பச் சாது. யாரையும் தொந்தரவு செய்யாதுங்க. காது கேக்காததாலே, பக்கம் வந்த பின்னேதான் அது நகருங்க’ என்றனர்! அவர்கள் மட்டுமல்ல, பில்லூர், வீரக்கல், கோரப்பதி, பரலி ஆகிய இடங்களில் வாழும் பழங்குடி மக்களும் இதையே சொன்னார்கள்! ஆனால், அன்று செவிட்டு யானை எங்களை அரை மணி நேரம் ஒரு வழி ஆக்கியதை மறக்க இயலாது! அதே போல மொபெட் போன்ற வாகனங்களில் வாடிக்கையாகப் பயணம் செய்யும் மக்களின் தைரியத்தையும் எண்ணி வியந்தேன்! அவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு; அடிக்கடி நேர்வது. இதற்குப் பயந்தால், பிழைப்பு நடக்காது! எப்படி நகரத்தில் சாலை விபத்துகள் சாதாரணமோ, அது போல!

பழங்குடிகளுக்கு, யானை, புலி போன்றவை வருவதும் போவதும் ஓர் இயல்பான விஷயம். அதனால்தான், ஒவ்வொரு விலங்கின் குணாதிசயங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளனர்! செவிட்டு யானை, நொண்டிப் புலி, என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர்! நகரத்தில் நாம் ஒவ்வொரு மனிதருக்கும் பெயர் வைத்து அறிந்திருப்பது போலக் காட்டு விலங்குகளுக்கு ஒரு பட்டப்பெயர் வைத்து அழைக்கின்றனர்! இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்று நாம் பாடம் மட்டும் படிக்கிறோம். இவர்கள் இயல்பாகவே அதைக் கடைப்பிடிக்கிறார்கள்! மேலும் வன உயிரினங்களை அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே பாவிக்கின்றனர். இவர்களுக்கிடையில் பொழுது போக்குவது உண்மையிலேயே ஒரு சுகானுபவம்தான்! அதே போல, இன்று வரை அத்தனை ஆஜானுபாகுவான ஒரு கொம்பனை நான் கண்டதில்லை என்பதும் உண்மைதான்! மறக்க முடியாத கொம்பன், செவிட்டு யானை!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *