அன்று காலை மொட்டை மாடிக்குத் தண்ணீர்த் தொட்டி பராமரிப்புக்குப் போகும் பொழுது, கைப்பிடிச் சுவருக்கு இணையாகச் செல்லும் மின்கம்பியில் ஒரு சிறிய பறவை வந்து அமர்ந்தது. குருவியாக இருக்கும் என்று அசட்டையாக நான் விட்டுவிட்டேன். தொட்டியைக் கவனித்து விட்டு இறங்கும்போது, மேலும் ஒரு சிறிய பறவை வந்து முன்பே இருந்த பறவையின் அருகே அமர்ந்தது. சிட்டுக்குருவி என்றால் சற்றே குண்டாகவும், கட்டையான வாலும் கொண்டிருக்கும். இவையோ நல்ல ஒல்லியான உடலுடன், சற்றே செந்நிறம் கூடுதலாக, சன்னமான வாலுடன் இருந்தன.
படியில் இறங்காமல், அப்படியே சற்று உற்றுக் கவனித்தேன். வெகு அருகில்தான் அவை இருந்தன. அதனால், பைனாகுலர் தேவைப்படவில்லை. தேன்சிட்டு போன்ற உடல்; முதுகுப்புறம் சிவப்பு; தொண்டையில் இருந்து மார்பு, வயிறு வெண்ணிறத்தில் புள்ளிகளுடன்; வால் சன்னமாகவும் நீண்டும் இருந்தது. எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் அடையாளம் காணக்கூடிய கூம்பு வடிவ மூக்கு அது சில்லை (முனியா – Munia) என்பதைத் தெளிவுபடுத்தியது. இவனுக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வி அடுத்து எழுந்தது!
கீழே போய் மற்ற வேலைகளைக் கவனிப்பதைத் தள்ளிப்போட்டேன். பின், பறவை நோக்கல் என்றால் என்ன அர்த்தம்? இதுபோன்ற நேரங்களில் நாம் அசிரத்தையாக இருந்து விட்டால், நல்ல நிகழ்வுகளை இழந்து விடுவோம். நண்பர் மனோஜ் பற்றிய தகவலை நேற்றுதான் படித்தேன். அவர் வயநாட்டில், நாய்க்கட்டி என்ற இடத்தில் வசிக்கும் காப்பித் தோட்டக்காரர். அவரது எஸ்டேட்டில் உள்ள நெடிய மரங்களில் பல வேட்டையாடிப் பறவைகள் கூடு வைப்பதுண்டு. அவற்றை அவர் குறிப்பெடுத்துப் பின்னர் பறவையியல் இதழ்களில் வெளியிடுவார். கடந்த வருடம் ஒரு லெக்கி கொண்டைப் பருந்தின் (Legge’s Hawk Eagle) கூட்டை எஸ்டேட்டில் கண்டுபிடித்தார். உடனே அவரும் அவரது மகனும், அதன் கூட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் படம் மற்றும் குறிப்பு எடுக்க ஒரு மறைவை (ஹைட் – Hide) கூடு இருந்த மரத்தின் எதிரே இருந்த மற்றொரு மரத்தில் 80 அடி உயரத்தில் கட்டி, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அதே வேலையாக இருந்து ஓர் அற்புதமான கட்டுரையை இந்தியப் பறவைகள் என்கிற இதழில் வெளியிட்டுள்ளார்! அந்த அபூர்வப் பருந்தின் வளர்ப்பு முறை; குடும்ப கவனிப்பு; குஞ்சு பராமரிப்பு; எனப் பல தகவல்கள் விஞ்ஞான உலகிற்குக் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும்போது, நான் ஒரு சில மணி நேரம் சில்லைகளுக்காகச் செலவிடக்கூடாதா, என்ன?
முதலில் வந்து அமர்ந்தது ஆண் என்று நினைக்கிறேன். அடுத்து வந்து அமர்ந்தது பெண் என்று நினைக்கிறேன். இவற்றில் ஆண், பெண் பேதம் கண்டுபிடிப்பது கடினம். சற்றுப் பயமின்றி ஓடிச் சாடினால், ஆணாக இருக்கும்! இரண்டும் அப்படியே மின்கம்பியில் என்னைப் பார்த்தபடி சற்று நேரம் இருந்தன. பின் ஆண் சற்றுத் தொலைவில் சென்று அதே கம்பியில் அமர்ந்தது. பெண் உடனே பறந்து சென்று முன் போல ஆணின் அருகே, அதே அளவு இடைவெளி விட்டு அமர்ந்தது! சற்று நேரம் அவ்வாறு போனது. பின்னர் ஆண் கிளம்பி, அடுத்த வீட்டு எதிரே உள்ள மின் கம்பியில் அமர்ந்தது. பெண்ணும் தொடர்ந்தது! எனக்கு இந்த விளையாட்டில் ஆர்வம் வந்துவிட்டது! சற்று மறைவில் இருந்த நான் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்னும் இரண்டு முறை இந்த இடம் மாறும் விளையாட்டு தொடர்ந்தது. இப்போது அவை அடுத்த வீட்டைத் தாண்டி, இரண்டாம் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் குடியிருப்பின் ஜன்னலின் எதிரே இருந்தன. அந்தக் குடியிருப்பில் பல வீடுகளில், ஜன்னல்கள் மூடியே இருக்கும். இந்தச் சில்லைகள் எதையோ தேடி அங்கு போகின்றன என்று நான் உணர்ந்தேன். அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
அந்த ஜன்னல்கள் பழங்கால முறையில் அமைந்தவை அல்ல. தற்காலப் பாணியில், நகரும் சாளரங்கள். அங்கு கூடு வைக்க இயலாது. வேறு ஏதாவது கம்பி அல்லது தொங்க விடக்கூடிய அமைப்பு இருக்கிறதா என்று யோசிக்கத் தொடங்கினேன். காரணம், அவை பந்து போன்ற கூடுகளைக் கிளையின் இடையில் வைக்கும் இயல்புடையவை. அதற்கான அமைப்பு அந்த இடத்தில் இருக்க வாய்ப்பே இல்லை. இப்படி நான் யோசித்துக் கொண்டு, அவற்றைக் கண் பார்வையிலேயே வைத்திருந்தேன். அப்போது சடாரென்று ஆண் ஜன்னலுக்குள் பாய்ந்து சென்றது! என்னால் எங்கே சென்றது என்பதைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை. காரணம் ஜன்னல் நான் இருந்த வாடையில், உள்ளடங்கி இருந்தது. ஒருவேளை நேர் எதிரே இருந்திருந்தால், பார்த்திருக்க முடியும். போன வேகத்தில் ஆண் சில்லை மூக்கில் எதையோ கொண்டு வந்து எதிரில் இருந்த காலி மனையை நோக்கிப் பறந்தது; பெண்ணும் பின்தொடர்ந்தது! ஒரு துப்பறியும் கதை நல்ல இடத்தில் ‘தொடரும்’ என்று முடிந்தது போல இருந்தது! எப்படியும் நான் அந்த வழியில்தான் எனது காலை உணவைச் சாப்பிடப் போகவேண்டும். அப்போது கொஞ்சம் நெருக்கமாகக் கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.
போகும்போது ஜன்னலுக்கு நேரே நின்று நன்றாகப் பார்த்தேன். எந்த ஓர் அமைப்பும் இல்லை என்பதோடு, கூடு வைக்க லாயக்கே இல்லாத இடம் அது என்று தெரிந்தது. சில்லை வீட்டின் உள்ளிருந்தோ அல்லது ஜன்னல் சட்டத்தில் இருந்தோ எதையோ கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது புரிந்தது. அது தானியமாக இருக்கலாம்; அல்லது ஒட்டடையாக இருக்கலாம். காரணம், ஜன்னல் திறந்திருந்தது. சில்லைகளின் நடத்தை இது ஒரு காதல் முன் விளையாட்டு என்பதுபோல எனக்குத் தோன்றியது. காரணம். இதுபோல் ஒவ்வொரு படியாக முன்னேறிச் செல்வதும், எச்சரிக்கையாகச் செயல்படுவதும், இது ஒரு பழக்கப்பட்ட செயல் என்று உணர்த்தியது. நான் இன்றுதான் இந்த நிகழ்வைக் காண்கிறேன் என்றும் பட்டது. எது வரை எனது கணிப்பு சரி என்பதை நாளைய நிகழ்வு உணர்த்தலாம் அல்லது மாலையில் சற்று நேரம் நோக்கினால் தெரியலாம்! இந்தப் புதிரை விடுவிக்கும் வரை எனக்குத் தூக்கம் வருமா என்று தெரியவில்லை! என்ன, சற்று மெனக்கெட வேண்டும்; வெயிலில் வாட வேண்டும்; மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்! செய்வோம்!
தொடர்ந்து இரண்டு நாட்கள் தவமிருந்தும் பயனில்லை. அவை எப்போது வருகின்றன என்று கண்டுபிடிக்க இயலவில்லை. நான்தான் தவறாகப் புரிந்துகொண்டு மொட்டை மாடியில் கிடக்கிறேனோ என்றும் தெரியவில்லை. இரண்டாம் நாள் இரவு கூகுளில் சென்று புள்ளிச் சில்லையைப் பற்றிய குறிப்புகளைத் தேடினேன். கோகுலாவின் இனப்பெருக்கம் மற்றும் கூடு கட்டும் முறை பற்றிய ஒரு குறிப்புதான் தமிழ்நாட்டு நடப்பு பற்றியது. மற்றவை எல்லாம் இந்தியத் துணைக் கண்டத்தில் பல இடங்களில் அவதானித்தவை. குருநாதர் சாலிம் அலி இது குறித்து விலாவாரியாக ஏதும் எழுதவில்லை. எனவே நான் அந்தக் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் பற்றிச் சற்றுத் துருவிப் பார்த்தால், ஏதாவது துப்பு கிடைக்கும் என்று தோன்றியது. கூம்பு அலகு குடும்பத்தின் நடத்தை (behaviour) குறித்து அலச ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல முடிவு என்பதை விரைவிலேயே உணர்ந்தேன்!
எப்படி மனிதர்களுக்கிடையில் உடல்மொழி பெரும் பங்கு வகிக்கிறதோ, அதுபோல விலங்குகள், பறவைகள் இவற்றுக்கிடையே உடல்மொழி பெரும் பங்கு வகிக்கிறது! அதற்கிணங்க, நான் கண்ட இரு பறவைகளும் புள்ளிச் சில்லை ஆணும், பெண்ணும் என்பதும், காதல் வயப்பட்டவர்கள் என்பதும் புலனானது! அதனால்தான், ஒன்றின் நெருக்கத்தை மற்றொன்று விரும்பியது! இல்லை என்றால் அது சண்டையில் முடிந்திருக்கும். அவை இரண்டும் இன்னும் புணர்ந்து, கூடு வைக்க வில்லை; அதன் முன்பாகமான களவியல் காலத்தில் இருக்கின்றன என்று புரிந்தது!
விரைவில் அவை புணர்ந்து கூடு வைக்கலாம். ஆனால், என்னால் கூட்டைப் பார்க்க இயலுமா என்பது சந்தேகம்தான்! காரணம், அவை இரண்டாம் வீட்டு ஜன்னலில் இருந்து நேரே பகவதி விலாஸ் வீட்டின் காலி இடத்தில் மண்டிக் கிடக்கும் புதர்களின் ஊடே பறந்து சென்றன. அந்தக் காலி இடத்தில், பேய் அத்தி, எருக்கு, ஆமணக்கு, குப்பைமேனி போன்ற பல முன்னோடி தாவரங்கள் பெருகிக் கிடந்தன. அது போதாது என்று ராவ் வீட்டின் பின்புறம் அந்தக் காலி இடத்தில் வந்து சேர்கிறது. அவர் வீட்டுப் புழக்கடை ஒரு கட்டுக்குள் இல்லாத புதர்க்காடு! இவற்றுக்குள் போக இயலாதவாறு முள்கம்பி வேலி மற்றும் கட்டடங்களின் இடிபாடுகள். மேலும், இரண்டு வீட்டிலும் ஆளில்லாததால், வெளி ஆட்கள் செல்வதைச் சுற்றியுள்ள வீட்டுக்காரர்கள் விரும்புவதில்லை, பாதுகாப்பு கருதி! இதை நான் சங்கரனின் பேச்சில் இருந்து அறிந்தேன்! ‘மாமா, சுத்தி வீடுங்க இருக்கு. யார் வர்ரா, போறான்னு தெரியறதில்ல. நீங்க பாட்டுக்கு பைனாகுலர் எடுத்திட்டு சுத்தினா…’ என்று இழுத்தார்!
முன்பே, ஷிக்ராவின் கூட்டை இதே காரணங்களால்தான் சென்று நோக்க இயலவில்லை. அந்தக் கூடும் இந்தப் பகுதியில் இருக்கும் மாமரத்தில்தான் இருந்தது! என்னுடைய கணிப்பு சரி என்றால், சில்லைகள் அந்தப் புதர்க்காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கும் எலுமிச்சை மரத்தில் கூடு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அவ்வளவு எளிதில் என்னால் விடை காண முடியும் என்று தோன்றவில்லை! நாய்க்கட்டி மனோஜைப் போல, எனக்குப் பகவதி விலாஸ் வீட்டின் காலி இடம் சொந்தம் இல்லையே! என்ன செய்ய?
(தொடரும்)
Photo by Ashutosh Jhureley (Birds Around Me)