எந்தக் காட்டிலும், பறவைகளை அதிகம் ஈர்ப்பது பழ மரங்கள், குறிப்பாக அத்தி மரங்கள். ஆங்கிலத்தில் இதை ஃபீகஸ் என்று குறிப்பிடுவர். அதாவது அத்தி வகையைச் சார்ந்தவை என்பது பொருள். காட்டில் பல வகை அத்தி மரங்கள் காணப்படும். ஆல், அரசு அல்லாமல், வேறு பல வகை அத்திகளும் இங்கு இருக்கும். உதாரணமாக, இச்சி என்று இங்குள்ள பழங்குடிகள் குறிப்பிடும் அத்தி மரங்கள், தாவர இயலாளர்களால் வெவ்வேறு இன அத்தியாக அறியப்படும். இச்சி, கல்இச்சி, உதும்பரம் என்ற தமிழ் பெயர்களுக்குப் பல வகையான தாவரவியல் பெயர்கள் காணப்படும். இதன் விளைவாக, இச்சி என்ற பொதுப் பெயர் சரியான இனத்தைக் குறிக்காது. அதனால், இங்குள்ள அத்தி இன மரங்களை நாம் தெளிவாக அறிய, நல்ல தாவரவியலாளருடன் செல்வது நல்லது. காட்டின் ஓர் உயிர்நாடி இந்த அத்தி வகை மரங்கள் என்றால் மிகையாகாது. பில்லூர், பரலி வளாகத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகம் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரம் இவை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். நண்பர் கந்தவேலின் ஆய்வு இது குறித்ததுதான் என்பதை முன்பே நான் சொல்லியிருப்பேன்.
அத்தி இன மரங்களுக்கும், பறவைகளுக்கும் உள்ள தொடர்பை என்னுடைய பழங்கால நண்பர் கண்ணன் (இப்போது அர்கன்சாஸ் கண்ணன்) அவரது ஆய்வும் உறுதிப்படுத்தும். டாப் ஸ்லிப்பில் (பொள்ளாச்சி இந்திரா காந்தி சரணாலயம்) இருவாச்சிகளைக் குறித்த அவரது ஆய்வு எவ்வாறு அத்தி இன மரங்களின் பங்கு இருவாச்சிகளின் வாழ்வை அல்லது இருப்பை உறுதி செய்கிறது என்பதை நன்கு விளக்கும். பெரும்பாலும் கடுங்கோடையில் காய்த்துப் பழுக்கும் அத்தி மரங்கள், பறவைகளின் இனவிருத்திக் காலத்தில் ஒரு நல்ல உணவு ஆதாரமாக விளங்குகின்றன. இதைக் கண்ணனுடைய ஆய்வு மிக அழகாக எடுத்துரைக்கும்.
ஒரு ஃபீகஸ் மரத்தின் பழம் தரும் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஒரே இனத்தைச் சேர்ந்த ஃபீகஸ் மரங்கள் ஒரு காட்டில் அல்லது அருகாமையில், ஒருபோதும் ஒன்றாகக் காய்க்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை ஒரு குறிப்பிட்ட பழம் தரும் பருவத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும் ஒரு காட்டில் உள்ள மற்ற சில ஃபீகஸ் மரங்கள் பொதுவாக ஒரு வருடத்தில் எந்த நேரத்திலும் பழங்களைக் கொண்டிருக்கும். அதனால் இந்தச் சுழற்சி ஒரு காட்டின் சூழலியல் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் பல்வேறு விலங்குகள் ஆண்டு முழுவதும் ஃபீகஸ் மரத்திலிருந்து ஊட்டச்சத்தைப் பெற முடியும்.
இப்படி ஓர் அத்தி இன மரம் பரலி மின்வாரிய ஓய்வு விடுதியின் எதிரில் இருக்கிறது. அது நன்கு வளர்ந்த ஓர் ஆலமரம். (ஃபீகஸ் பெங்கலான்ஸஸ்). நுழைவு வாயிலின் எதிரில் ஒரு 110 பாகை கோணத்தில் பாதை (தார்ச் சாலை) யின் எதிர்புறம் நின்று கொண்டிருக்கும். அதன் பின்னால் காடுபோல புதர், மரங்கள் மண்டிக் கிடக்கும். சாலை ஒரு பெரிய வளைவாக மேலேறி, குடி நீர்த் தொட்டியை அடுத்து மேலேறி காவலர் அறை வரை செல்லும். அந்த ஓய்வு விடுதியைச் சுற்றிலும் காடு போலத்தான் இருக்கும். எனவே பறவைகளுக்குப் பஞ்சமில்லை என்பதோடு, அந்த வளாகம் பறவை நோக்கர்களின் விருப்பப்பட்ட இடமாகவும் இருந்தது. நான் சென்ற காலங்களில், ஓய்வு விடுதி செயல்பட்டுக் கொண்டிருந்தது. திரு. நரேந்திரன் பெரும்பாலான நாட்களில் எங்களது உணவை அங்குதான் ஏற்பாடு செய்வார். காலைக் காப்பியைக் குடித்துக்கொண்டே நான் பறவைகளைக் கவனிப்பதைக் கிண்டலடிப்பார்! ‘வேற ரெண்டு கால் பறவையைப் பார்த்து வாழ்க்கையில் செட்டில் ஆகப் பாருப்பா’ என்பார்! உண்மையில் அந்த வளாகத்தில் வராந்தாவில் இருந்து கொண்டே நாம் நல்ல விதத்தில் பறவை நோக்கல் செய்யலாம். வேளா வேளைக்கு உணவும் வந்து கொண்டிருக்கும்! பிறகென்ன, பொழுது போகாமலா இருக்கும்?
அந்த ஆல மரம் பழுத்து விட்டால், கேட்கவே வேண்டாம்! நம் கண்களுக்குத்தான் வலி எடுத்துவிடும்! அப்படிப் பறவைகள் பறந்து பறந்து வந்து அந்த இடத்தையே ஒரு பெரிய கண்காட்சி போலச் செய்துவிடும். நாள் முழுவதும் ஏதோ ஒரு பறவைக் கூட்டம் காணப்படும்; அணில்களும், ஓணான்களும், வவ்வால்களும், அபூர்வமாக மர நாய்களும் பறவைகளுக்குப் போட்டியாக அங்கு வந்து அடையும். அந்த ஆலமரம் அந்தக் காலத்தில் அந்தப் பிரதேசத்தில் எல்லோரையும் ஈர்க்கும் ஒரு மந்திரவாதி போலச் செயல்படும்! அதிகாலையில் இருந்து அந்தி சாயும் வரை எனக்கு நேரம் போதாது என்பதுதான் உண்மை! அப்படிப் பறவைகள் வந்து சென்ற வண்ணம் இருக்கும். இரவில் யார் வருகிறார்கள் என்று பார்க்க ஆசைதான். ஆனால், கடைசிப் பேருந்து 6.30 மணிக்குப் புறப்பட்டுவிடும் என்பதோடு, உணவு விடுதியும் மூடப்பட்டுவிடும். தனியாக அங்கிருந்து அரை கிலோமீட்டர் நடந்து நரேந்திரன் வீட்டை அடைய வேண்டும். அவருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏனெனில், ஏதாவது ஓர் அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்குப் பதில் சொல்ல அவர் தயாரில்லை! அதனால், இரவு நேரங்களில் எங்கும் சுற்றுவதில்லை. ஆறு அல்லது ஆறரைக்கு ஏறக்கட்டி விடுவது வழக்கம்.
ஆலமரம் பழுத்திருக்கும் காலத்தில், அதிகாலையில் நமது கரிச்சான்கள் முதல் விஜயம் செய்யும்; அதன் பின் குக்குறுவான்கள் வரத் தொடங்கும்; சற்று வெளிச்சம் பரவத் தொடங்கிய பின் வண்ணாத்திக் குருவிகள் வரும்; அதைத் தொடர்ந்து புல்புல்கள் வரும்; பின்னர் ஒன்றன்பின் ஒன்றாகச் சிறிய, பெரிய பறவைகளில் பல இனங்கள் வரத் தொடங்கிவிடும். ஒவ்வொரு கிளையிலும் பல பறவைகள் பல கோணங்களில் தொங்கிக் கொண்டும், ஓடிக்கொண்டும், பழங்களைத் தின்றுகொண்டிருக்கும். சிறிய பறவைகளான தையல் சிட்டு, வெள்ளைக்கண்ணி போன்றவை இருப்பதே தெரியாமல் மரத்தின் உள் கிளைகளில் ஊடாடிக் கொண்டிருக்கும். பெரிய பறவையான நீள வால் காக்கை வந்து விட்டால், ஒரு ரகளையே நடக்கும்! அவன் பெயருக்கேற்றாற்போல் ரவுடிதான்! இலத்தீன் பெயரான வாகபாண்டா என்பது அதன் குணாதிசயத்தை வைத்துத்தான் வந்தது! எல்லாப் பறவைகளும் அவன் வந்தால், தெறித்து ஓடிவிடும்! அதே போல ஷிக்ரா போன்ற வேட்டையாடிப் பறவைகள் வந்தாலும், மற்றவை இடத்தைக் காலி செய்துவிடும்! சமுதாயத்தில் எப்படி ரவுடிகளைப் பார்த்தால் எல்லோரும் ஒதுங்கிப் போவார்களோ, அது போல! ஆனால், கரிச்சான் மாத்திரம் விதிவிலக்கு! அவனைப் பார்த்து இவை பயந்து பயந்து நிற்கும்! கொத்வால் (நம் கரிச்சான்) ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் போல அனைவரையும் மிரட்டுவான்! இப்படி ரசமான நிகழ்வுகள் அங்கு அரங்கேறும்!
வந்ததே தெரியாமல், பெரிய பறவையான சாம்பல் இருவாட்சி, மரத்தின் உள் பகுதியில் அமைதியாகப் பழங்களை பறித்துத் தின்னும். ஆனால், அவற்றின் சிறகோசை அவற்றின் புறப்பாடு மற்றும் வருகையை அறிவித்துவிடும். குக்குறுவான்கள் பழங்களை வாயில், அதாவது அலகில், அதக்கிக் கொண்டு போவதைக் காண அவ்வளவு இனிமையாக இருக்கும்! குக்குறுவான்களில் சிறியதான கன்னான் பறவையும் (குக்குக் என்று ஒலி எழுப்பிக்கொண்டு, தொண்டையில் சிவந்த பொட்டுடன் குருவி போல இருக்கும்) அதன் பங்கிற்குப் பழங்களை அலகில் அதக்கிக் கொண்டு போகும்! நட்சத்திர விருந்தாளியாகப் பச்சைப் புறாக்கள் வரும். இலையின் மறைவில் அவை இருப்பதே தெரியாது! ஏனெனில், அவையும் பச்சை நிறத்தவை! காட்டில் பல பழ மரங்களை, குறிப்பாக அத்தி மரங்களைப் பரப்புவதில் அவை பெரும் பங்காற்றுகின்றன. அவற்றுள் மூன்று இனங்களை நாம் இங்குக் காணலாம். சாம்பல் நெற்றிப் புறா, மஞ்சள் கால் புறா, மரகதப்புறா ஆகியவை இந்த நேரத்தில் இங்கு அதிகமாகக் காணப்படும். மற்றக் காலங்களில், அதாவது இந்த ஆல் பழுக்காத காலங்களில், காட்டில்தான் பார்க்கலாம். இவையன்றி, சாதாரணமாக நாம் பார்க்கும் மாடப்புறா, புள்ளிப் புறா, தவுட்டுப் புறா, ஆரப் புறா போன்றவையும் இவற்றுடன் கூடி அலையும். ஆக, குறைந்தது 35 இனப் பறவைகளை நாம் இருந்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடிய காலம் இந்த ஆலமரம் பழுக்கும் காலம்.
குயில்கள், காக்கைகள், மைனாக்கள், தவிட்டுக் குருவிகள், செம்போத்து, தேன்சிட்டு, மாங்குயில், அயோரா, அக்காக் குயில், கொண்டலாத்தி, வெள்ளை நெஞ்சு மீன்கொத்தி போன்ற பல பறவைகள் அங்குச் சுற்றிக்கொண்டிருக்கும். இந்த வெள்ளை நெஞ்சு மீன்கொத்தி உண்மையில் ஒரு அனைத்துண்ணி. மீன்கொத்தி என்று அறியப்பட்டாலும், இது பெரும்பாலும் நீர் நிலைகளை விட உள்நாட்டில் தான் அதிகமாகக் காணப்படும். நட்சத்திர விருந்தாளிகளில் நாம் நீலக்கண்ணியையும், அவ்வப்போது தலை காட்டும் கறுப்பு வெள்ளை இருவாட்சியையும் சேர்க்கலாம்! இப்போது புரிந்திருக்கும், ஏன் இங்கு ஒரு நிமிடம் கூட கண்ணை எடுக்க இயலாது என்று! யாராவது ஒருவன் சடாரென்று இறங்குவான்; யாராவது ஒருவன் பாய்வான்; யாராவது ஒருவன் பதுங்குவான்; யாராவது ஒருவன் பறப்பான். இப்படி நாள் முழுவதும் நாம் அவதானிக்கப் பல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கும். கண நேரம் கூட எனக்குச் சலிப்பு தட்டாது! என்ன, பசியும், தாகமும், இயற்கை உபாதையும் அடக்க இயலாதவை! பசியையும் தாகத்தையும் இடத்தை விட்டு நகராமலே முடித்துக் கொள்ளலாம்! இரவு கடைசிப் பேருந்தில் முள்ளி சென்று பின்னர் மஞ்சூருக்குப் பேருந்தைப் பிடித்து வீட்டை அடையும் வரை மனதில் இந்த ஆல மரத்தின் காட்சிகள் நீங்காது! இன்றும், அந்த இனிய நினைவுகள் ஒரு திரைப்படம் போல என் மனத்திரையில் நிழலாடுகிறது!
(தொடரும்)