சென்னையில் அன்று அதிகாலை மூன்றரை மணிக்கு வந்து சேர்ந்த அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். ஏற்காடு விரைவு வண்டி எப்போதும் முதல் வண்டியாக ஈரோட்டில் இருந்து வரும் நேரம் காலை மூன்றரை. நல்லவேளையாக, எனக்கு வசதியாக அந்நேரத்தில் பேருந்து இருப்பதால், சுகமாக நாலு, நாலரைக்கெல்லாம் வீட்டை அடைந்து விடுவேன். பின் ஒரு நல்ல தூக்கம் போட்டுவிட்டு, எட்டு மணிக்கு எழுந்து என் வேலைகளைப் பார்க்கத் துவங்குவேன். பெரும்பாலும் எனது தூக்கத்தை எந்தத் தொலைபேசி அழைப்பும் கெடுக்காது. மிக்கவாறும் எல்லோரும் எட்டு மணிக்கு மேல்தான் சுறுசுறுப்பாவது வழக்கம்.
அன்று ஏழு மணிக்கு கைபேசி அலறியது. யார் அந்த நேரத்தில் என்று யோசித்தவாறு அரைத் தூக்கத்தில் எடுத்தேன். சத்தியமங்கலம் ஸ்ரீராம் மறு முனையில் பேசினார். ‘அண்ணா, நம்ம கல்யாண மண்டபத்தில ஒரு ஆந்தை மாட்டிண்டுடுத்து. அத எடுத்து வெளிய விடணும். நீங்க பாரஸ்ட் காராட்ட கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்றார். விஷயத்தைக் கேட்டதும் எனக்குத் தூக்கம் கலைந்து போனது! ஆந்தையா, அது எங்கே ஊருக்குள் வந்தது என்று யோசித்தவாறு, ‘ஏம்ப்பா, உனக்கே டி.எஃப்.ஓவைத் தெரியுமே? நேரே பேச வேண்டியதுதானே?’ என்றேன். அவர், ‘அண்ணா, நான் சென்னையில் இருக்கிறேன், அதனால்தான் உங்களைக் கேட்கிறேன்’ என்றார்! ‘நானும் சென்னையில்தான் இருக்கிறேன். ஆனாலும், பேசுகிறேன்’ என்று சொல்லி கைபேசியை வைத்தேன்.
வாட்ஸப் இருப்பது எவ்வளவு உபயோகம் என்று அப்போது தெரிந்தது! சரகருக்கும், டி.எஃப்.ஓவுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன். இதுபோல ஓர் ஆந்தை சத்தி நகரின் மையப்பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது, தயவு செய்து அதை மீட்க ஏற்பாடு செய்யவும் என்று. அவர்கள் சற்று நேரத்தில், அலுவலர்கள் அனுப்பப்படுவர் என்று உறுதிப்படுத்தினர். அதற்குள் நண்பர் ஸ்ரீராம், ஆந்தையின் படத்தை அனுப்பினார். பார்த்தவுடன், அது கூகை என்பது தெளிவானது. ஆங்கிலத்தில், Barn Owl என்று அறியப்படும் நமது கூகை அல்லது களஞ்சிய ஆந்தை (நேரடி தமிழாக்கம்) அது. சாதாரணமாக இது நகரப் பகுதிகளில் காணப்படுவதோடு, கிராமப் புறங்களிலும் காணப்படும் ஆந்தை. சென்னையில் திருவல்லிக்கேணியில் இதை நான் பார்த்திருக்கிறேன். அங்குள்ள மசூதியின் கூம்பு வடிவ ஸ்தூபிகளில் கூடு வைத்துப் பார்த்திருக்கிறேன். இரவு பத்து மணி அளவில் அவை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும். திருநள்ளாறு கோயில் கோபுரத்தில் வாழும் பறவைகளில் இதுவும் ஒன்று. இவற்றின் உணவு, எலிகள், சிறு பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள், பெருச்சாளிகள், அசைவ உணவுக்கூடங்களில் வீசப்படும் மாமிசத் துணுக்குகள் போன்றவை. மிக அமைதியாகப் பறப்பதாலும், சட்டென்று புலப்படாத நடத்தையாலும் இவற்றைப் பலர் பார்ப்பதே இல்லை! மற்றொன்று, பழைய இடிபாடுகளிலும், பழங்காலக் கட்டடங்களிலும் இவை கூடு வைப்பதால், சட்டென்று யார் கண்ணிலும் தென்படாது!
என்னுடைய அடுத்த கவலை, ‘இது ஏன் இந்தக் கல்யாண மண்டபத்துக்கு வந்தது?’ என்பதுதான்! சத்தி, சென்னை போன்ற பெரு நகர் இல்லை என்பதால், கூகைகள் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டுதான். ஆனால் கல்யாண மண்டபத்தில் என்ன வேலை அதற்கு? எனக்குத் தெரிந்த வரை இரண்டு காரணங்கள்தான் இருக்கச் சாத்தியம். ஒன்று, அந்தக் கல்யாண மண்டபத்தில் கண்ணாடித் தடுப்புகள் சுவர் போல முதல் மாடியில் பொருத்தப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட கண்ணாடி மாளிகை போல! அதனால், அதில் மோதி ஆந்தை விழுந்திருக்கலாம்; அதிர்ச்சியில் அப்படியே கிடந்திருக்கலாம்.
இரண்டாவது, கல்யாண மண்டபத்தில் பல ரக மக்கள் கல்யாணம் நடத்துவதால், அசைவ உணவு மிச்சமாவது இயல்பு. அதை நாடி எலிகள், பெருச்சாளிகள், பூனைகள் வரலாம். அவற்றை வேட்டையாட ஆந்தை வருவது இயல்புதான். சுற்றுமுற்றும் பல சிதிலமடைந்த கட்டடங்கள் வெகுவாக இருக்கின்றன. ஆகவே, கூகைக்கு இது ஓர் இயல்பான வேட்டையாடும் இடமாக (இரவில்) இருக்கலாம். தவறிப் போய் உள்ளே சிக்கி இருக்கலாம். எனக்கென்னவோ, இரண்டாவது காரணம் இருக்க சாத்தியக்கூறு அதிகம் என்று பட்டது! ஆனால், நானோ சென்னையில் இருக்கிறேன். நேரில் சென்று பார்க்க இயலாது என்பதோடு, மீட்புப் பணியிலும் கலந்துகொள்ள இயலாது! வனத் துறையினர் நல்லபடி மீட்டு ஆந்தையை வெளிக்கொணர்வர் என்ற நம்பிக்கையில் இருக்க வேண்டியதுதான்.
ஆந்தையை மீட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் ஸ்ரீராம் மனைவி அபிதாவிடம் சொன்னேன். ஒரு துளையிட்ட அட்டைப்பெட்டியில் அதை வனத்துறையினர் வரும் வரை வைத்திருந்து கொடுக்கச் சொன்னேன். வேலையாட்கள் ஆந்தையைப் பிடிக்கப் போனால், கவனமாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அரை மணி நேரத்தில் அபிதா போன் செய்து, வேலுச்சாமி ஆந்தையை அது கிடந்த இடுக்கில் இருந்து மீட்டு, படிகளில் வைத்து இருப்பதாகச் சொன்னாள். கூடவே, ஒரு சில போட்டோக்களையும் அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்தபோது, அது கூகை என்று உறுதி ஆயிற்று. அதிர்ச்சியில் அப்படியே கிடப்பது போலத் தோன்றியது. எனவே, முன் சொன்னது போல அட்டைப்பெட்டியில் கவனமாக வைத்து வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறு போனில் சொன்னேன்.
இன்னொரு அரை மணியில், வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்த விவரமும் எனக்கு வந்தது. அவர்கள் அதை எடுத்துக்கொண்டு சென்றதும் வனத்துறை மூலம் தெரிந்தது. என்ன, ஏதேனும் காயம் ஆந்தைக்கு பட்டிருக்குமா என்ற என் கவலைக்குப் பதில் இல்லை! அதைப் பார்க்க யாருக்கும் நேரமும் இல்லை; சமயோசித எண்ணமும் இல்லை. அபிதாவுக்கு அதற்கு மேல் இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை; மனமும் இல்லை! நல்ல வேளையாக, மாலை நாலு மணிக்கு டி.எஃப்.ஓ ஒரு வீடியோவை அனுப்பினார். அதில் காட்டில் விட்ட ஆந்தை பறந்து போகும் காட்சியைக் கண்டதும், ஆந்தை சேதாரம் இல்லாமல் பிழைத்தது தெரிந்தது! பெருமூச்சு விட்டேன்! ஒரு நல்ல மீட்புப் பணி நடந்தது என்று!
சத்திக்கு வந்ததும், வேலுச்சாமியை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தேன். ஞாயிறு காலை கல்யாண மண்டபத்தைச் சுத்தம் செய்ய வந்தவர், ஆந்தை கிடந்ததைப் பார்த்து அபிதாவுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். அபிதா உடனே வேலுவை அழைத்து ஆந்தையை எடுத்து விட முடியுமா என்று கேட்டிருக்கிறார். வேலு மேலே (முதல் மாடி) சென்று நிலைமையை அவதானித்திருக்கிறார். கண்ணாடிச் சுவருக்கும், கான்கிரீட் தளத்திற்கும் இடையில் உள்ள ஓர் இடைவெளியில் அது கிடந்திருக்கிறது.
சிறிய கால்வாய் போன்ற அதன் முடிவில், கண்ணாடி அறைக்கும், படிக்கட்டுக்கும் போகும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஆந்தையால் கால்வாயில் சிறகை விரிக்க இயலவில்லை; காரணம் கால்வாய் மிகவும் குறுகியது. மூன்றாம் மாடி திறந்தவெளி. அதன் வழியாகத்தான் அது வந்து, முதல் மாடி கண்ணாடி மண்டபத்தில் நுழைந்திருக்க வாய்ப்பு. ஒரு வேளை எதையாவது விரட்டிக்கொண்டும் (எலி, பூனை போல) வந்திருக்கலாம்; அது இடைவெளி வழியே கால்வாயின் உள்ளே நுழைவதைக் கண்டு பின்தொடர்ந்துவந்து மாட்டிக் கொண்டிருக்கலாம். அல்லது, கண்ணாடி இருப்பது தெரியாமல், வெளியே பறக்க முயன்று கண்ணாடியில் முட்டி, பின் இடைவெளியில் நுழைந்து சிக்கிக் கொண்டிருக்கலாம். ஆக மொத்தம், அது அந்தச் சிறிய இடைவெளியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. வேலு அது கொக்கு போன்ற பறவை என்று எண்ணி, கையால் எடுக்கக் குனிந்திருக்கிறார்!
அப்போது கூகை, பாம்பு போல் உஸ்ஸென்று சீறி இருக்கிறது! கூகைகள் அதுபோல் சீறுவது ஒரு தற்காப்புச் செயல்! அதன் சீறலும், மந்தி போன்ற முகமும் வேலுவைப் பயமுறுத்தி விட, அவர் பின் வாங்கி, என்ன செய்யலாம் என்று யோசித்தார்! பழைய தமிழ் இலக்கியம் நற்றிணை காலத்திலேயே மக்கள் ஆந்தையின் அலறலுக்குப் பயந்தார்கள் என்றால், வேலு எம்மாத்திரம்?
‘வலிமைமிகு கூகையே! ஊர் வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய். உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு’ – ( நற்றிணை 83 ).
மேலும், அந்த ஆந்தை நெடுநேரம் தவித்துக் கொண்டிருந்ததால், சற்றுக் கோபத்தில் இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு! அதன் பின், வேலு வீட்டிற்குப் போய் ஒரு கொக்கி போன்ற கொம்பைக் கொண்டு வந்து, ஆந்தையின் அடியில் கொடுத்து மேலே தூக்கியுள்ளார். அவரது நல்ல நேரம், கூகை சரியாக அந்த இடைவெளிக்கு எதிரே வந்ததும் கண்ணாடி அறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டது! அதை அதே இடத்தில் இருக்கும்படி கையில் கம்புடன் காவல் இருந்திருக்கிறார். பின்னர் நான் சொன்னது போல மெதுவாகப் பிடித்து, அட்டைப்பெட்டியில் ஏற்றி விட்டார். அதன் பின் பெட்டியுடன் ஆந்தையை வனத்துறை நண்பர்கள் வந்ததும் தந்து விட்டார்.
வனத்துறையினர் அதை அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விடுவித்தனர். உண்மையில், அதைக் காட்டில் விடவேண்டிய அவசியம் இல்லைதான். ஏனெனில், கூகைகள் நாட்டை ஒட்டி வாழ்பவை. ஆயினும், அந்த நேரத்தில் அவர்கள் செய்த இந்த உதவி, அவர்கள் வரை சரியானது.
கூகைகளின் வாழிடம் பரவலானது என்பதைச் சுந்தரர் தேவாரத்தில் இருந்து அறியலாம்! அவர், கோடிக்கரை குழகரை வர்ணிக்கும் போது, ‘கடிதாய் வந்து கடற்காற்று எத்த, கூகை குழற….தனியனாய் வந்து ஏன் இருந்தீரே’ என்று பாடுகிறார்!
கடற்கரைப் பகுதியான நெய்தல் நிலத்திலும் இவை இருக்கும் என்பது தெரிகிறது. ‘ஆந்தை அலறும் சுரபுன்னைக் காட்டின் நடுவே ஏனய்யா இருக்கிறீர்’ என்று சிவனின் நிலை கண்டு வருந்துகிறார்!
கூகை ஓரிரு நாட்களில் அதன் இருப்பிடத்திற்கு நிச்சயம் வந்து விடும்! அவற்றின் திசை அறியும் திறன் அலாதியானது! வருடா வருடம் மங்கோலியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா வரை வலசை போகும் ஆமூர் வல்லூறுகள் எப்படித் திசை அறிந்து சென்று வருகின்றன என்ற ஆராய்ச்சி இன்னும் முடிவடையவில்லை!
இப்படியாக, கூகை என்னை, சென்னையில் இருந்தாலும், விடாது வன உயிரினம் தொடர்பான வேலையில் ஈடுபட வைத்துவிட்டது. என்ன, நேரில் பார்க்க இயலாது போனதும் விடுவித்தலில் பங்கேற்காததும்தான் வருத்தம்!
(தொடரும்)