நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. 14வது சட்டத்திருத்தத்தால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமை பெற்ற கறுப்பின மக்கள், தங்கள் முதல் தேர்தலில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குச் செலுத்தினர்.
திடீரென ஒரு பெண் கூட்டத்திற்குள் நுழைந்தாள். ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் வாக்குச் செலுத்த வந்த அந்த ஒரே பெண், சூசன் பி அந்தோணி (1820-1906). பல ஆண்டுகளாக அமெரிக்க, ஐரோப்பிய தேசம் முழுக்க பெண்ணுரிமைக்குக் குரல்கொடுத்து வரும் சூசன், நேரடியாகக் களத்தில் குதித்தது இந்தத் தேர்தலில்தான். அடுத்த ஒரு வாரத்திற்கு அமெரிக்கா முழுக்க இவர் பெயர்தான்.
மாதம் கழிந்தது. சட்ட உரிமை மீறி வாக்கு செலுத்தியதற்காக சூசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. $100 கட்டியதும் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அத்தோடு நிற்கவில்லை.
17 ஜூன் 1873 அன்று நியூ யார்க் நகர நீதிமன்றத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது சூசன் அளித்த வாக்கு செல்லுபடியாகாது போனாலும், அந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்ற 13வது அமெரிக்க அதிபர் மில்லார்ட் ஃபில்மோர் அந்த அவையில்தான் வீற்றிருந்தார். விசாரணை ஆரம்பமானது. தன் தரப்பு வாதங்களாக சூசன் சொன்னவை ‘பெண் வாக்குரிமைக்கு வாய்ப்பூட்டு போட்டவர்களை வாயடைக்கச் செய்தது’. அத்தனை ஆண்களுக்கு முன்னதாகத் தனியொருப் பெண்ணாகப் பேசத் தொடங்கினார் சூசன்.
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, மகளிர் வாக்குரிமை வரலாற்றிலேயே சூசனின் போராட்டம் ஒரு மகத்தான மைல்கல். அவர் இறந்த 14 ஆண்டுகளில் அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை பெற்றுவிட்டனர்.
உலகெங்கிலும் உள்ள பெண்கள், இன்று ஜனநாயக முறைப்படி வாக்களிக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ சூசன் ஒரு காரணமாக இருந்துள்ளார். அமெரிக்காவை நடுங்க வைத்த அந்த ஒற்றைப் பெண்ணின் மெல்லிய குரல் இதோ.
0
தோழர்களே, என் சக அமெரிக்கவாசிகளே!
மாபெரும் தீங்கிழைத்த குற்றத்துக்காக உங்கள் முன் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்ட ரீதியான உரிமையின்றி நான் வாக்களித்து விட்டேனாம்! என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அழகிய மாலைப் பொழுதில் உங்களிடம் ஒன்றை தெளிவுபடுத்தியே ஆக வேண்டும்!
நான் செய்தது சட்ட விதிமீறல் அல்ல, இந்தத் தேசமும் ஆட்சியும் நமக்கு இழைத்துக் கொண்டிருப்பதுதான் உச்சபட்ச விதிமீறல்; நான் செய்தது ஒரு ஜனநாயகக் கடமை என்பதை நீங்கள் உணர வேண்டும்; இந்தத் தேசம் இதை சரிசமமாக வழங்க நமக்கு கடமைப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்; இதை யாராலும் நம்மிடம் இருந்து பறித்துவிட முடியாது என்பதை மிகத் திடமாக பதிவுசெய்ய விரும்புகிறேன்!
நமது கூட்டாச்சித் தத்துவத்தின் அரசியலமைப்பு முகவுரையை மறந்துவிட்டீர்களா?
‘ஐக்கிய நாடுகளின் மக்களாகிய ‘நாம்’, கனகச்சிதமான ஒன்றியத்தை ஏற்படுத்த, நீதியை நிலைநாட்ட, உள்நாட்டில் அமைதியை உறுதிபடுத்த, சமூகப் பாதுகாப்பிற்கும் ஒட்டுமொத்த நலனிற்கும், நமது விடுதலையை நாமே மேம்படுத்தி பாதுகாக்க இந்த அரசியலமைப்பு சட்டத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெயரால் ஏற்றுக்கொள்கிறோம்‘ என்றல்லவா உறுதி எடுத்தோம்? அதில் குறிப்பிடப்படும் ‘நாம்’ என்பவர்கள் யார்?
வெறும் வெள்ளைத் தோல் ஆண்களா, இல்லை கறுப்பின ஆண்களா? இல்லை. இல்லவே இல்லை. நாம் என்றால் நாமெல்லோருமே! ஒன்றுவிடாமல் தொகுத்துக் கூட்டி, இந்த உதிர்ந்து போன பிரதேசத்தை ஒற்றைத் தேசமாக்கிய நாம் எல்லோருமே. நாம் இதை ஏன் செய்தோம்? விடுதலை தரும் வசதிகளை வைத்து சிம்ம சொப்பனமாக அமர்ந்து வெட்டிக் கதைப் பேசிக் கழிக்கவா? இல்லை. விடுதலை நமக்கு கடமைகளை கையளிக்கிறது. அந்தக் கடமைகளைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பு நம்மேல் விழுந்துள்ளது. ‘நாம்’ என்றால் இந்தச் சமூகத்தின் பாதியோ, அவர்தம் சந்ததியின் அடுத்த சரிபாதியோ அல்ல. நாம் என்றால் நீங்களும் நாங்களும்; ஆண்களும் பெண்களும்!
ஒரு ஜனநாயக நாட்டில் மிகச் சாதாரணமாக நீங்கள் அனுபவிக்கும் வாக்குரிமையைப் பெண்கள் என்பதாலேயே எங்களுக்கு மறுத்துவிட்டு, விடுதலையால் நாங்கள் கொஞ்சிக் குலாவி இன்புற்றிருக்கிறோம் என்று சொல்வதில் துளியாவது நியாயம் இருக்கிறதா? எங்களை ஆளும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், எங்களுக்கே மறுக்கப்பட்ட பின் அந்த சுதந்தரம் இருந்தால் என்ன, செத்தால் என்ன? குடியாட்சியின் அடிப்படையே ஆட்டம் காணாதா?
பாலினத்தை ஒரு தகுதியாக வைக்க எந்த ஒரு மாகாணமாவது முயன்று கொண்டிருந்தால், உடனே தன் முடிவை மாற்றிக் கொள்ளட்டும். இது தன் சரிபாதி தேசத்தை அரிவாள் கொண்டு அறுத்து எரிய முற்படும் முட்டாள் செயல். இந்த மண்ணின் அரசியல் நாமெல்லோருக்கும் ஒரே நியதிதான் வழங்கியிருக்கிறது. சட்டத் திருத்தத்தினாலோ புதியதொரு சட்டத்தினாலோ பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுமேயானால், அமெரிக்கா உதிர்ந்துப் போய்விடும்!
பெண் சமூகத்திலிருந்து, நான் அளித்த ஒற்றை வாக்கையும் செல்லாது என கிழித்து விட்டீர்கள். பின் யார் அளித்த அதிகாரத்தால், எங்களை ஆண்டு வருகிறீர்கள்? பெண்களுக்கு இது ஜனநாயக நாடு அல்ல; குடியாட்சி தேசம் அல்ல. பிரபுக்களால் ஆளப்படும் சர்வாதிகார அரசு; பாலினத்தால் பிளவுபடுத்தும் சுயநலக்கார அரசு; வலிமை பொருந்திய ஆண்கள், பலம் குன்றிய பெண்களை அடக்கி ஆளும் ஆணவ அரசு! உலக வரலாற்றிலேயே ஜனநாயகப் போர்வையில் பிரபுக்கள் ஆளும் மிகக் கொடுங்கோன்மையான தேசம் இதுதான்.
தந்தைமார்களும் கணவன்மார்களும் தன் சொந்த மகள்களையும் மனைவிகளையும் ஆளும் அழுக்குப்பிடித்த தேசம், இந்த அமெரிக்கா.
ஆண்கள் இறையாண்மைக்கு உட்பட்டவர்கள் என்றும் பெண்கள் அற்பப் பண்டத்திற்கு ஈடானவர்கள் என்னும் உங்கள் அலட்சியப் போக்கால், நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கருத்து வேறுபாட்டைக் கண்ணிவெடியாகப் புதைத்து, அமைதியைச் சீர்குலைக்கின்றீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் முரண்பாடு, ஒவ்வொரு வீட்டிலும் கிளர்ச்சி.
வெப்ஸ்டர், வொர்செஸ்டர், பூவியர் முதலாக எல்லோரும் சொல்வது ஒன்றுதான். ‘அமெரிக்காவில் வாக்குச் செலுத்த உரிமை உள்ள மனிதன், அங்கு வசிக்கும் ஒரு சாதாரண குடிமகனாக இருத்தலே போதுமானது.’
இப்போது என் கேள்வியெல்லாம் ஒன்றுதான். பெண்களும் மனிதர்கள் தானே?
நம் எதிராளிகள் யாரும் இதை இல்லை எனக் கூறி மறுக்க முடியாது. நாங்கள் வெறும் மனிதர்கள் அல்ல, அமெரிக்க குடிகள். எங்கள் வாக்குகளை வழிமறிக்க, எந்த மாகாணத்திற்கும் அதிகாரமில்லை. சட்டமியற்றவோ பழைய சட்டங்களை தூசித்தட்டி நிறைவேற்றவோ, என்ன நினைத்தாலும் இனி எடுபடாது. சில நாட்களுக்கு முன் கறுப்பின மக்களுக்கு நிகழ்ந்ததுபோல, பெண்களுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களும் இன்றோடு நீர்த்துப் போய்விடும்!
(தொடரும்)