Skip to content
Home » காலத்தின் குரல் #4 – நாங்கள் நிலவுக்குச் செல்லத் தீர்மானிக்கிறோம்!

காலத்தின் குரல் #4 – நாங்கள் நிலவுக்குச் செல்லத் தீர்மானிக்கிறோம்!

ஜான் கென்னடி

அமெரிக்காவும் சோவியத்தும் பனிப்போரில் மூழ்கிய காலம் அது.‌ பூமியில் மட்டுமல்ல, ஆகாயத்திலும் உக்கிரமான போட்டி நடைபெற்றுவந்தது. 1957இல் சோவியத்தின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் பூமியின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத்தின் யூரி ககாரின் என்ற விஞ்ஞானி விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக அறிவிக்கப்பட்டார்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்காவின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தன. சோவியத் முந்திக்கொண்டிருப்பதை உணர்ந்த அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பி வைக்கத் தீர்மானித்தது. இதுவரை அமெரிக்கா சந்தித்த விண்வெளி தோல்விகளைக் காரணம்காட்டி, நிறைய எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி (1917-1963) விடுவதாக இல்லை.‌ டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டன் நகரில் தனியார் நிறுவனம் அன்பளித்த நிலத்தைக் கொண்டு ஆள்-அமர் விண்கலம் ஆய்வு நிலையத்தைக் கட்டியெழுப்ப விரும்பினார். நிலம் கைமாறுதலுக்கு உதவியாக இருந்தது ‘வில்லியம் மார்ஷ் ரைஸ்’ என்ற பல்கலைக்கழகம்.

1962ஆம் ஆண்டு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஆராய்ச்சி நிலையத்தை பார்க்கச் சென்ற கென்னடி, இதன் தீவிரத்தை உணர்த்த உடனடியாக ஓர் உரை தயாரித்தார். வரலாற்றின் பக்கங்களில் தீர்க்கமாக தங்கிவிட்ட ‘நாங்கள் நிலவுக்குச் செல்ல தீர்மானித்துவிட்டோம்’ என்ற உரை கென்னடியின் தசாப்த கனவை ஏந்தி நிற்கிறது. பல்கலக்கழகங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என்று பலர் முன்பு 12 செப்டெம்பர் அன்று ஆக்ரோஷம் பொங்கப் பேசினார் கென்னடி.

அமெரிக்கர்கள் நிலவில் கால் பதிப்பதைப் பார்க்க அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் கண்ட கனவை 1969இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிறைவேற்றினார். கென்னடியின் கனவுப்படி இதுவரை அமெரிக்கர்களின் பாதமே, நிலவில் நிலைத்திருக்கிறது.

0

பல்கலைக்கழக வேந்தர் பிட்ஸர் அவர்களே; துணை வேந்தர் அவர்களே, ஆளுநர் அவர்களே, காங்கிரஸ் உறுப்பினர்கள் தாமஸ் மற்றும் மில்லர் அவர்களே; செனட் குழு உறுப்பினர் வில்லி அவர்களே, மரியாதைத் தாங்கிய திரு.வெப் மற்றும் திரு.பெல் அவர்களே, மேன்மை பொருந்திய சிறப்பு விருந்தினர்களே, விஞ்ஞானிகளே; இங்குக் கூடியிருக்கும் எனதருமை கனவான்களே, பெண்மணிகளே!

உங்கள் வேந்தர் என்னை இங்கு வருகைதரு பேராசிரியராகப் பணியமர்த்தியதைப் பாராட்டுகிறேன். அதோடு என் முதல் உரை விரிவாக இருக்காது என நீங்கள் உறுதியாக நம்பலாம்.

இங்கு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதை இரட்டிப்பு ஆக்கும்படி அமைகிறது இந்த அழகிய தருணம்.

நாம் சந்தித்திருக்கும் இந்தக் கல்லூரி, கல்வி ஞானத்திற்குப் பெயர்போனது. அது அமைந்திருக்கும் இந்த நகரம் வளர்ச்சிக்குப் பெயர்போனது. இவை சூழ்ந்த இந்த மாநிலம் ஒற்றுமைக்குப் பெயர்போனது. இந்த மூன்றையும் நம்பித்தான் நம் பத்தாண்டுகால பயத்தையும் நம்பிக்கையையும் மடியில் அள்ளிக் கொட்டி, விதியின் மாற்றத்திற்காக இந்தச் சவாலான நொடிப்பொழுதில் ஒன்றுகூடியுள்ளோம். அறியாமையும் ஞானத்தெளிவும் விரவி ஓடும் பருவம் இந்தக் காலம். அறிவு விசாலம் அடைய அடைய, அறியாமை நம்மை விட்டு அகலும்.

இதுவரை உலகம் அறிந்த மாபெரும் அறிவியல் அறிஞர்கள் இன்னும் உயிர்ப்புடன் வேலைசெய்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்க அறிவியல் அறிஞர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்தாலும், விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக உயர்ந்தாலும், இன்னும் அறியப்படாத செய்திகளும் – கேட்கப்படாத கேள்விகளும் – முடிவுபெறாத பணிகளும் இந்தப் பரந்த வெளியில் நம் கூட்டுப் புரிதலை வெறித்தப்படிதான் நிற்கின்றன.

நம் மனித சமுதாயம் எத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறது என்பதை எவராலும் கூற முடியாது. ஒரு வேளை 50,000 வருட மனித வரலாற்றை 50 ஆண்டுகளுக்குள் அடக்கிப் பார்த்தால், ஒருவாறு ஊகிக்கலாம். இந்த வரையறைக்குள் முதல் நாற்பது ஆண்டுகளில் நடந்தவை பற்றி நாம் அறிபவை மிகவும் குறைவு. நாற்பதாம் ஆண்டின் இறுதியில்தான், விலங்குகளின் தோல் கொண்டு உடலை மறைக்க நவீன மனிதன் கற்றுக் கொண்டான். பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் குகைகளில் இருந்து வெளியே வந்து, வீட்டைக் கட்டிக்கொண்டான். வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் எழுதிப் பழகவும், சக்கரம் வைத்த ஊர்திகளை ஓட்டிப் பழகவும் கற்றுக் கொண்டான்.

கிறிஸ்தவ சமயம் தோன்றி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளது. அச்சு இயந்திரங்கள் இந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஒட்டுமொத்த 50 ஆண்டுகால மனித வரலாற்றிலும், வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நீராவி இன்ஜின் கொண்டு புதுவித ஆற்றலை பயன்படுத்தத் தொடங்கினோம். நியூட்டன் புவியீர்ப்பு விசையை அர்த்தப்படுத்தினார். மின்விளக்குகள், தொலைபேசிகள், மோட்டார் வாகனங்கள், ஏரோபிளேன்கள் என சகலமும் கண்டுபிடிக்கப்பட்டது கடந்த வாரத்தில்தான்.

அதே வாரத்தில்தான் பென்சிலின் மருந்தும் தொலைக்காட்சிப் பெட்டியும் அணு ஆயுத சக்தியும் உருவாக்கப்பட்டன. இப்போது அமெரிக்கா அனுப்பியுள்ள புதிய விண்கலம் ‘வெள்ளி’ கோளை அடைந்துவிட்டால், நாம் இந்த இரவின் நடுநிசிக்குள் புகழின் உச்சியை அடைந்துவிடலாம் என்பது எத்தனைக் கைக்கூடான காரியம்!

இந்த வேகம் நம்மை மூச்சடைக்கச் செய்யும். உதவாது போனாலும் இம்சைகள் உண்டாக்கும். பழையன விலகிப் போவதால் அறியாமை வெட்டவெளிச்சமாகி, புதிய சிக்கல்கள் நம்மை அபாயத்தில் தள்ளும். ஆனால் விண்வெளியின் வாசலுக்குக் கம்பளம் விரிக்கும் இந்தப் பயணம், அதீதப் பொருட்செலவும் மனித உழைப்பும் வேண்டுவது போல் அதீத வெகுமதியும் பெற்றுத்தரும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி சிலர் நம்மை வற்புறுத்துவும், காத்திருக்கும் இடத்தில் பிடிமானம் கொண்டு கட்டிவைக்க விழைவதும் ஆச்சரியம் அல்ல. ஆனால் இந்த ஹியூஸ்டன் நகரமும், டெக்சாஸ் மாகாணமும், ஐக்கிய அமெரிக்க நாடும் ஓய்வெடுத்தவர்களாலும் காத்திருந்தவர்களாலும் கட்டி எழுப்பப்பட்டவை அல்ல. அயராது முன்னேறிய பலநூறு பேரின் உந்துதால் உருவான தேசம் இது. விண்வெளியைக் கைப்பற்றுவதிலும் அதையே எதிர்ப்பார்க்கிறது இந்தத் தேசம்.

ஜான் கென்னடி

ப்ளிமவுத் பே காலனியை 1630இல் வில்லியம் ப்ராட்போர்டு கட்டியமைத்தபோது சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. ‘மேன்மை பொருந்திய அசாதாரண காரியங்கள் எல்லாம், கண்காண முடியாத கொடுமைகளின் வழியே பிறந்தவைதான். இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தோடு தைரியமோடு எதிர்கொள்ள வேண்டும்.’

தீராத அறிவுத்தேடலும் சலிக்காத பயணமும் கொண்ட மனிதனை எதனாலும் தடுக்கமுடியாது. இதுவே வரலாற்றின் வரைகோடுகள் நமக்குக் கற்றுத்தருபவை. நாம் அடியெடுத்து வைத்தாலும் அணிசேராவிட்டாலும் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும். விண்வெளி பந்தயத்தில் ராஜாவாக முடிசூட நினைக்கும் எந்தவொரு நாடும், பின்னடைவு சந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நம் முன்னோர்கள் தொழிற்புரட்சியின் முதல் அலையை இந்த மண்ணில் சாத்தியப்படுத்தினார்கள். நவீன கண்டுபிடிப்புகளும் அணு சக்தி அறிவியல்களும் இந்தத் தேசத்தில்தான் முளைவிட்டன. இனி வரவிருக்கும் விண்வெளி ஆராய்ச்சியிலும் அவர்களிட்ட பாதையில் நடைபோட வேண்டும். ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. விண்வெளியில் நமக்கும் பங்கு உண்டு. அந்த உரிமையை நாமே முன்னின்று கேட்க வேண்டும்!

மண்தரையிலிருந்து விண்வெளியைக் கண்டு ரசிக்கும் உலகின் கண்களுக்கு நாம் ஒன்று சூளுரைப்போம். பல மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவிலும் அதற்கப்பால் உள்ள கோள்களிலும் அந்நியர் கொடியைக் காணாது அமைதியும் விடுதலையும் சுடர்விடும் நாளை நாங்கள் பார்க்கப் போகிறோம். இந்த விண்ணில் அழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை அல்ல, அறிவைப் பிரகாசமாக்கும் கருவிகளை நாங்கள் காணப்போகிறோம்.

நம் தேசத்தின் பெயரால் ஏற்ற சத்தியங்கள் நிறைவேற வேண்டுமானால், விண்வெளியில் நமது கால்களைப் பதிக்க வேண்டும். அதற்கே இந்த ஏற்பாடு. சுருங்கச் சொன்னால், அறிவியல் தொழில்நுட்பத்தில் நம் முன்னோடித்தனமும் உலக அமைதியில் நமக்கிருக்கும் கட்டுக்கடங்காத நம்பிக்கையுமே இதைச் செய்ய வைக்கின்றன.‌ கைமாறு செய்யவும், புதிர்களை அவிழ்க்கவும், உலக மாந்தரின் ஒட்டுமொத்த நன்மைக்கும் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ நம்மை காலம் எத்தனிக்கிறது.

புதிய தளங்களில் நம் அறிவைச் சேகரம் செய்யவும், புதுப் புது உரிமைகளை ஈர்த்துக் கொள்ளவும் இந்தப் புதிய கடல் பயணம் நம்மை ஆளாக்கிவிடும். அணுசக்தி விஞ்ஞானம் போல, விண்வெளி விஞ்ஞானமும் ஒரு மனச்சாட்சியற்ற துறை. மனித குலத்திற்கு தீங்கிழைக்குமா, நன்றி பயக்குமா என்பதை ஆட்டிவிக்கும் கைகள்தான் முடிவு செய்கின்றன. இந்த மாபெரும் சமுத்திரத்தில் நம்பகமான இடத்தை அமெரிக்கா அடைந்திடாவிட்டால், விண்ணின் பரந்த வெளி அமைதிப் பூக்கும் அலையா, தீவிரவாத வலையா என்பதை யாராலும் சொல்லமுடியாது.

பழிவாங்கப்படும் குரோத தாக்குதல்களால் கடலும் பூமியும் பாதுகாப்பற்று போனதைப்போல விண்வெளியும் சிக்குண்டு போய்விடும் என நான் சொல்லவில்லை. ஆனால் துப்பாக்கி ரவைகளை குவித்து வைக்கும் தேவையின்றியே விண்வெளி முழுவதையும் கட்டுப்படுத்தலாம். இதுவரை பூமியில் ஏற்பட்ட எந்தவொரு மனிதத் தவறும் இல்லாமலேயே ஒருவர் விண்வெளியை எளிதாக ஆட்சிச் செய்யலாம் என என்னால் உறுதிபடக் கூற முடியும்.

இதுவரை விண்வெளியில் தேசச் சண்டைகளோ, சச்சரவுகளோ, பாரபட்சமோ இல்லை. இருப்பின், நாம் எல்லோருக்கும் அது விரோதமான ஆபத்துக்களை உண்டாக்கும். விண்ணைக் கைப்பற்றுவதன் மூலம் மனிதகுலத்தின் ஆகச்சிறந்த தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். இனி சமாதானத்தை எட்ட முடியாது என என்றைக்கோ நாம் எண்ணப்போகும் நாட்களின் துன்பச் சுவடுகளை இன்றைக்கே அழிக்கமுடியும்!

ஆனால் ஏன் நிலவைத் தேர்ந்தெடுத்தீர்கள் என சிலர் கேட்கிறார்கள். ஏன் இதை நம் இலக்காக நிர்ணயித்தோம்? நாம் ஏன் உயரமான மலையில் ஏற வேண்டும்? 35 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலின் மேல் பறக்கத் துணிந்தது, எதற்காக? ரைஸ் [1] ஏன் டெக்சாஸ் நகர் நோக்கி நகர்ந்தார்?

நாங்கள் நிலவுக்குச் செல்லத் தீர்மானிக்கிறோம். இந்தத் தசாப்தத்தில் நாங்கள் நிலவுக்குச் செல்ல தீர்மானிக்கிறோம். காரணம் அது எளிமையானது என்பது அல்ல, மிகக் கடுமையானது என்பதால். நம் பலத்தை உறிஞ்சி, உழைப்பைக் கொட்டி திக்குமுக்காடச் செய்யும் இந்தச் சவாலை நாங்கள் ஏற்கத் தயாராகிறோம். இந்தத் திட்டத்தை தள்ளிவைக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது. நாம் மட்டுமல்ல மற்றவர்களும் சேர்ந்து ஜெயிக்க வேண்டிய சவால் இது!

இது என் ஆட்சிப் பொறுப்பில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான முடிவு.‌ இந்தக் காரணங்களை மனதில் எண்ணித்தான் ஆமை வேகத்தில் நகர்ந்த கோப்புகளை குதிரையில் ஏற்றினேன்.

மனித வரலாற்றின் மகத்தான பயணத்தை மேற்கொள்ள பல கருவிகள் கொண்டு இந்த மையம் உருவாக்கப்படுகிறது. இதை நாங்கள் நேற்று ஆய்வு செய்தோம். சாட்டர்ன் சி-1 ரக பூஸ்டர் ராக்கெட்டைச் சோதித்துப் பார்க்கும்போது நிலம் அதிர்ந்தது, காற்று கிழிந்துபோனது. இது ஜான் கிளென் ஓட்டிய அட்லஸ் 6 ரக விண்வெளி விமானத்தைவிட பலமடங்கு சக்திவாய்ந்தது. 10,000 வாகனங்களைத் தரையில் நிற்கவைத்து ஒரேமுட்டாக முடுக்கினால் உண்டாகும் ஆற்றலுக்கு ஒப்பானது.

கேப் கனாவிரலின் உயரம் 48 மாடி கட்டடத்தை ஒத்திருக்கும். அதன் அகலம் நகரின் ஒரு பாதியை விஞ்சிவிடும். நாம் ஒன்று கூடியிருக்கும் இந்த மைதானத்தைவிட இரு மடங்கு நீளமானது. அங்குள்ள ஒரே ஒரு எஃப்-1 ரக ராக்கெட் இன்ஜின் மட்டும் சாட்டர்ன் சி-1 ராக்கெட்டின் ஒருங்கிணைந்த எட்டு இன்ஜின்களுக்குச் சமம். இப்படியாக பல இன்ஜின்களை ஒன்றுகூட்டி, அதி நவீன சாட்டர்ன் ஏவுகணையை வடிவமைத்திருந்தனர்.

கடந்த 19 மாதங்களில் 49-கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியை வட்டமிட்டுள்ளன. அதில் 40 சொச்சம் அமெரிக்காவால் அனுப்பப்பட்டது. வேறெந்த செயற்கைக் கோள்கள்களைக் காட்டிலும் அதிநவீனமாகவும் சோவியத் ஒன்றியத்தைக் காட்டிலும் அறிவியல் பூர்வமாகவும் அவை செய்திகளைத் தந்துள்ளன.

நாம் இப்போது வெள்ளி கிரகத்தை நோக்கி செலுத்தியுள்ள ‘மரைனர்’ விண்கலம், மிகச் சிக்கலான இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. கேப் கனாவிரலில் இருந்து நாம் இருக்கும் இந்த ஹியூஸ்டன் நகர மைதானத்தை மிகத் துல்லியமாகத் தாக்கும் நுட்பம் பொருந்தியது.

டிரேன்சிட் செயற்கைக் கோள்கள் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. டிரோஸ் செயற்கைக் கோள்களின் வானிலை அறிக்கை சூறாவளியில் இருந்தும் புயலில் இருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவுகின்றன. அத்தோடு காட்டுத்தீயை அடையாளம் கண்டு, தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க உதவி செய்கின்றன.

மற்றவர்களைப் போல நமக்கும் தோல்விகள் உண்டு. அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் பின்தங்கி இருக்கிறோம். ஆள்-அமர் விண்கலம் செலுத்துவதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். ஆனால் இது நிரந்தரம் அல்ல. இந்தத் தசாப்தத்தில் எல்லாம் கைக்குள் வந்துவிடும். நாம் முன்னேறி விடுவோம்.

நாம் வாழும் பிரபஞ்சம், சுற்றுச்சூழல் பற்றி புதிய செய்திகள் தோன்றும்போது அறிவியல் குறித்த புரிதலும் அதுசார்ந்த கல்விப்புலமும் பலமடங்கு வளர்ச்சி அடையும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு, கற்பிக்கும் உத்திகளை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லலாம். தொழிற்சாலை, மருந்தகம், வீடு, பள்ளி என ஒவ்வொன்றுக்கும் தனித்த கணினிகள் உருவாக்கப்படலாம். ரைஸ் பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்பக்கூடங்கள் இதன் சுவையை ஒருநாள் அனுபவிக்கும்.

இறுதியாக விண்வெளி ஆராய்ச்சித் துறையும் இதனால் பருத்த பலன் அடையும். இந்த ஆராய்ச்சிகள் தொடக்கக்கட்டத்தில் இருக்கும்போதே ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. விண்வெளி சார்ந்த துறைகளில் முன்பின் காணாத முதலீடுகளும் தேர்ந்த வல்லுநர்களுக்கான வேலை வாய்ப்பும் குவிந்துள்ளன. இந்த வளர்ச்சியில் ஹூஸ்டனும் டெக்சாஸும் பெரும் பங்காற்றும். ஒரு காலத்தில் மேற்கின் தொலைதூர எல்லைப் பிரதேசமாக இருந்த டெக்சாஸ் மாகாணம், இனி விண்வெளி அறிவியலின் எல்லைப் பிரதேசமாக உருவெடுக்கும். ஆள்-அமர் விண்கலன் ஆராய்ச்சி நிலையம் அமையப்பெற்றதால் இனி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இதயப்பூர்வமான பகுதியாய் உங்கள் ஹியூஸ்டன் நகரம் விளங்கும்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இங்குள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த நாசா திட்டமிட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு 60 மில்லியன் டாலர் செலவினம் செய்துவந்த துறையில், இனி 200 மில்லியன் டாலர் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகரத்தின் நடுமைய கட்டடத்தில் இருந்து நேரடியாகவும் முதலீடாகவும் 1 பில்லியன் டாலர் பெறுமான விண்வெளி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்டிப்பாக இது கொழுத்த லாபம் கொடுக்கும் முதலீடாக இருக்கும். இந்த ஆண்டுக்கான விண்வெளித் துறை பட்ஜெட்டை, சென்ற ஆண்டு ஒதுக்கியதைவிட மூன்று மடங்காக அதிகரித்துள்ளோம். இது கடந்த எட்டாண்டு கால பட்ஜெட்டின் ஒட்டுமொத்த தொகையை விடவும் அதிகம். 5,400 மில்லியன் டாலர் என்று சொன்னால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும், ஆனால் அது ஆண்டொன்றுக்கு நம் தேசம் செலவழிக்கும் ஒட்டுமொத்த சிகரெட், சுருட்டு விலையை விட குறைவுதான்.

இந்தச் செலவினம் இன்னமும் கூடலாம். ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனிடமிருந்தும் வாரத்திற்கு 40 சென்ட் வசூலிக்கப்படும் இடத்தில் 50 சென்ட்டாக உயரலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோர் பெயரிலும் பாரபட்சமன்றி ஏற்றப்படும் இந்த பாரத்தால், ஐக்கிய அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாய் இது கருதப்படுகிறது. சாத்தியப்படுமா என்ற ஐயத்திற்கு இடம் தராமல் நம்பிக்கையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு செலுத்தப்படும் நன்றிக்கடன் இது.

ஹியூஸ்டன் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2,40,000 மைல்களுக்கு அப்பாலுள்ள நிலவுக்கு நாம் அனுப்பிவைக்கும் பேராற்றல்மிக்க அந்த ராக்கெட், சுமார் 300 அடி உயரம் கொண்டதாய் இந்தக் கால்பந்து மைதானம் அளவுக்கு நீண்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாத உலோகக் கலவையால் உருவாகி, கடும் வெப்பத்தையும் அழுத்தத்தையும் பலநூறு மடங்கு தாக்குப்பிடித்து, துல்லியமான கடிகாரம் அமைக்கப்பட்டு, உந்துவிசைக்குத் தேவையான உபகரணங்கள், இயக்குவதற்கான கருவிகள், தொலைதொடர்பு சாதனங்கள், உணவுப் பொருட்கள், உயிர்க் காக்கும் உசாத்துணைப் பெருள்கள் என எல்லாம் பொருத்தப்பட்டு இதுவரை யாரும் முயற்சி செய்திடாத வானியல் பகுதிக்குள் பிரவேசித்து மீண்டும் பூமிக்கு மிகப் பத்திரமாய் திரும்பி, மணிக்கு 25,000 மைல் வேகத்தில் பறந்து வளிமண்டலத்தை அடைந்து, சூரியனின் சரிபாதி வெப்பத்தை தன்மேல் பூசிக்கொண்டு மண்ணில் இறங்கி சரித்திர சாதனைப் படைத்து, இந்தத் தசாப்தத்திற்குள் ஈடேற்ற வேண்டுமானால் நாம் மிக உறுதியோடு இருக்க வேண்டும்.

இதையெல்லாம் நான்தானே செய்யப்போகிறேன். நீங்கள் அமைதி காத்து பொறுத்திருந்தால் போதும்.

உள்ளங்கை நெல்லிக்கனியாய் இருந்தாலும் நடக்க வேண்டிய பாதைகளைக் கடக்க வேண்டுமே! பணத்தை வீணடிக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. ஆனால் வேலையைச் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். 60களின் தசாப்தத்திலேயே இந்தத் திட்டம் நிறைவேறும். உங்களில் சிலர் இந்தக் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் நாம் நிலவுக்குச் சென்றிருப்போம். மேடையில் அமர்ந்திருக்கும் சில கனவான்கள் பதவியை விட்டு விலகும் முன்பே இந்தத் திட்டம் வெற்றிபெறும். ஆமாம் வெற்றிபெறும். இந்தத் தசாப்தத்தில் வெற்றிபெறும்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் மிக உன்னத பணியில் இந்தப் பல்கலைக்கழகம் இணைந்துகொண்டதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.‌

பல வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை அடைய முற்பட்டு உயர்நீத்த பிரிட்டிஷ் மலையேறுநர் ஜார்ஜ் மல்லோரியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயல்கிறீர்கள்?’ அவர் சொன்னார் ‘ஏனென்றால் அது அங்கே இருக்கிறது.’

அதேதான். விண்வெளியும் இங்கே இருக்கிறது. நாமும் அதில் ஏற முயல்வோம். நிலவும் கோள்களும் அங்கே இருக்கின்றன. உலக அமைதிக்கும் அறிவுப் புலத்திற்கும் புதிய நம்பிக்கைகள் முளைத்துள்ளன. இதுவரை மனித இனம் கண்டிராத மிக ஆபத்தான பயணத்திற்கு நாம் புறப்பட்டிருக்கிறோம். கடவுள் ஆசிவேண்டி கிளம்புவோம்.

நன்றி.

________________

[1] வில்லியம் மார்ஷ் ரைஸ் அமெரிக்காவைச் சேர்ந்த செல்வந்தர். சிறுவயதிலேயே டெக்சாஸ் நோக்கி வந்து அரும்பாடுபட்டு சொத்துச் சேர்ந்திருந்தார். அவர் உயிலைப் போலியாக எழுதும் பொருட்டு, வேலையாள் ஒருவரால் தூங்கும்போதே படுகொலை செய்யப்பட்டார். அவர் தேக்கி வைத்த சொத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே ‘ரைஸ் பல்கலைக்கழகம்’.

(தொடரும்)

 

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *