Skip to content
Home » காலத்தின் குரல் #5 – விதியுடன் ஓர் ஒப்பந்தம்

காலத்தின் குரல் #5 – விதியுடன் ஓர் ஒப்பந்தம்

ஜவாஹர்லால் நேரு

14 ஆகஸ்ட் 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது. 400 ஆண்டுகால ஆங்கிலேய அடிமைச் சாசனத்தைக் கிழித்தெறியக் காத்திருத்தது, இந்தியா.

தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்தரம் நள்ளிரவில் வந்து சேர்ந்தது. இந்தியா உடைந்து போய்விடும் என்ற மேற்கத்திய வாதங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டது அந்த இரவு. இதுவரை இல்லாத, யாரும் கேள்விப்படாத பல பணிகளைத் தன் மேல் இழுத்துவாரிப் போட்டுக் கொண்டனர் தேசாபிமானிகள்.

‘காலனி ஆஃப் பிரிட்டன்’ என்பது ‘இறையாண்மை மிக்க இந்திய தேசமானது’ அன்றுதான். இந்தியாவின் கடமைகளை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய நாள் அது.

‘Long years ago..’ என்று ஜவாஹர்லால் நேரு தன் உரையைத் தொடங்கும் போது, புதிய சுதந்தர தேசம் உயிர்பெற்று எழுந்தது. 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உரைகளுள் ஒன்றாகக் கருதப்படும் ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ இதோ.

0

பல ஆண்டுகளுக்கு முன்பு விதியுடன் நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். முழுமையாக இல்லாவிட்டாலும் மிகக் கணிசமாக அந்தச் சத்தியங்களை சாத்தியப்படுத்தும் காலம் இப்போது வாய்த்திருக்கிறது. நள்ளிரவு மணி நடுங்கிக் கொண்டே ஒலிக்கும் இந்த நடுநிசிப் பொழுதில், ஒட்டுமொத்த உலகமும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தன் விடுதலைக்காகவும் வாழ்விற்காகவும் இந்தியா விழித்துக் கொண்டிருக்கும்!

பழைய நூற்றாண்டுப் பெட்டியைப் பரணில் ஏற்றிப் புது நூற்றாண்டுக் காலத்தை கனிவாக வரவேற்கும் வாய்ப்பு வரலாற்றில் மிக அரிதாகவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நானூறு ஆண்டுகளாக நசுக்கப்பட்ட இந்தத் தேசத்தின் ஆன்மா சுவாசிக்கவும் பேசவும் ஒருவழியாக ஓய்வு கிடைத்துவிட்டது.

இந்தியா, அதன் பிரஜைகள், ஏன் இந்தத் தேசத்தின் கடைசி ஜீவராசி செழிக்கும் நாள்வரை எங்கள் உழைப்பு ஓயாது என்பதை இந்த அற்புதக் கணத்தில் உறுதிமொழிகிறோம்.

வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் தொடங்குகிறது இத்தேசத்தின் தேடல். தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக வியர்வையும் சகதியுமாய், இரத்தமும் சதையுமாய், வெற்றியும் தோல்வியுமாய் பன்னூறு படிமம் கொண்டு இந்தியா என்றொரு வடிவம் திரண்டிருக்கிறது. எந்தத் தோல்வியிலும் கலங்காமல்; எந்த வெற்றிக்கும் மயங்காமல் தான் வலுப்பெற்ற வழிகளையெல்லாம் தேசமோ, நாங்களோ என்றைக்கும் மறந்ததில்லை.

இந்தியாவின் துரதிர்ஷ்டங்கள் இன்றோடு ஒழிந்தன! இந்தியாவின் சாபங்கள் இன்றோடு தீர்ந்தன! இந்தியா தன்னை உணரத் தொடங்கிவிட்டது! இனி நாம் கொண்டாடவிருக்கும் வெற்றிகளுக்கு இந்த நாள் ஓர் இனிய தொடக்கம் மட்டுமே!

விதிக்கு நாம் செய்துகொடுத்த சத்தியத்தை இறுகப் பற்றிக்கொண்டு, இன்றோடு விடுதலை அடையத் திடமாகத் தயாராகிவிட்டோமா? எதிர்வரும் சவால்களைத் தவிடுப்பொடியாக்கி, நூற்றாண்டுகளாகத் தவித்த ‘நாளை’ பற்றிக்கொள்ள நாம் தயாரா?

விடுதலையும் அதிகாரமும் நம் கைகளைக் கடமை என்னும் காப்பால் கட்டிப்போடுகின்றன. அந்தக் கடமைகள், இறையாண்மை மிக்க நம் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைக்குப் போராடிய நம் வலிமிகுந்த நினைவுகள், இதயத்தோடு இன்னும் கனத்தபடி நிற்கின்றன. சில காயங்கள் வடுவாகி, தொடர்கின்றன. எது எப்படியோ! கடந்தகால கசப்புகள் இன்றோடு இனிப்பாகிப் போகட்டும்! நம் முன் பரந்த எதிர்காலம் இருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம் மலர்களால் அல்ல, முட்களால் நெய்யப்பட்ட படுக்கை. இதுநாள்வரை நாம் ஏற்ற உறுதிமொழிகள் நம்மையே சிக்கலுக்கு உள்ளாக்கலாம்; இன்று ஏற்கவிருக்கும் பிரமாணமோ, இந்தியாவை நெறிப்படுத்தும் கனத்த பாரத்தை தலைமேல் சுமத்தலாம்! இந்தியாவிற்குக் கடமைச் செய்வதென்பது நொந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இதயங்களில் மயிலிறகு கொண்டு மெல்ல வருடிவிடும் மெனக்கெடலை நம்மிடம் எதிர்ப்பார்க்கும்.

அறியாமையை அழித்து பஞ்சத்தைப் பொசுக்கும் நாள்வரை இந்தக் கடமை ஓயாது. கசியும் ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கடைசி சொட்டுக் கண்ணீரைத் துடைத்து எறிவதே எங்கள் தலைமுறையின் உயர்ந்த லட்சியமாக இருக்கும். ஒருவேளை எங்களால் அது சாத்தியப்படாமல் போகலாம், ஆனால் சாத்தியப்படும் நாள்வரை இந்தக் கடமை ஓயாது!

பெருத்த கனவுகளை மூட்டைக்கட்டி, ஆடிமாதக் காற்றில் ஆழியில் சுற்றித் திரிகிறோம். கணநேர ஓய்வும் கடலில் சாய்த்துவிடும். இந்தியா பற்றிய நம் கனவுகள் நனவாகும் வரை உழைக்க வேண்டும். ஏனென்றால் அவை இந்தியா சார்ந்தவை மட்டுமல்ல, உலகம் சார்ந்தவை. வெறுமனே உலகம் மட்டுமல்ல, இந்தியா என்றொரு நாடு என்றைக்காவது கரைசேரும் என முணுமுணுத்து வந்த ஒவ்வொரு உயிரும் சாரந்தவை!

அமைதியை நம்மால் பிரித்துக் கொடுக்க முடியாது. விடுதலையும் அப்படித்தான். அந்த வரிசையில் பேரழிவுகளையும் இந்த உலகம் அப்படியே பார்க்க வேண்டும். எங்கோ, எவருக்கோ என்றிருக்கக் கூடாது.

என் அருமை இந்தியர்களே! எங்களோடு இந்தப் பயணத்தில் ஒன்று சேருங்கள். அற்ப விமரிசனம் பேசி ஆயுள் கழிக்க, நம் விதியில் இடமில்லை. தன் குழந்தைகளைப் பாதுகாக்க இந்தியத் தாய் துணிந்து விட்டாள். தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகற்கில்லையோ? வாருங்கள்!

விதி வகுத்த நாள் இதோ வந்துவிட்டது! நீண்ட நித்திரைக்குப் பிறகு, இந்தியா விழித்துக் கொண்டது. இடைவிடாத போராட்டங்களால் இன்றியமையாத இழப்புகளைப் பணயம் வைத்து, சுதந்தரத்தைச் சுவாசிக்க உதயமாகிவிட்டது இந்தியா! ஒட்டடைப் படிந்த பழைய நினைவுகள் அங்குமிங்கும் வந்துபோகின்றன. செய்துகொடுத்த சத்தியங்களைச் சாத்தியப்படுத்தும் முன்னர் பலநூறு கடமைகள் நம்மேல் குவிந்துள்ளன!

நமக்கென்று புது வரலாறு இன்று பிறக்கிறது. இனி எழுதப்படும் இத்தேச வரலாறு இந்தியர்களையே பேசப் போகிறது. ஆகா, எத்தனைப் பெரிய கனவு இது!

இந்த நொடி இந்தியாவுக்கானது. இல்லை, ஆசியாவுக்கு, இல்லை… இல்லை.. ஒட்டுமொத்த உலகுக்குமானது! கிழக்கில் உதிக்கும் இந்த நம்பிக்கை நட்சத்திரம், பூமிப்பந்து எங்கும் விடுதலை வெளிச்சத்தைப் பறைசாற்றப் போகிறது. நெடுநாட்களாக ஏங்கித் தவித்த இந்த ஒளி, அடுத்த கணம் நம் கைக்குள் அடங்கிவிடப் போகிறது. இனி எப்போதும் இவ்வெளிச்சம் மங்காது, எப்போதும் இந்நம்பிக்கை உதிராது.

வருத்தம் வழிகிற முகத்தோடு இக்கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பல இன்னல்கள் நம்மை வாட்டியெடுக்கின்றன. அதனாலென்ன, வாராது வந்த மாமணியை வாசலோடு வழியனுப்பி வைப்பதா? சுதந்தரம் நம்மை தாராளப்படுத்த அல்ல, தயார்படுத்த. ஒழுக்கம் மிக்க தேச அபிமானியாகவே, பாடுபட்டு சுதந்தரம் பெற்றிருக்கிறோம்!

இந்தத் தினத்தில் தேசப்பிதா காந்தி பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்தியாவின் உலர்ந்து போன ஆன்மாவை தன் மேலாடையாகப் போர்த்திக் கொண்டு, இருண்டுப் போன தேசத்துக்கு ஒளியேற்றி வைத்த அந்த மகானை நம்மால் எப்படி மறக்க முடியும்? அவரின் சொல்பேச்சு கேட்காத சீடர்களாய் பல நேரங்களில் வழிதவறியிருக்கிறோம். அசைக்கமுடியாத நம்பிக்கையும் பலமும் துணிவும் பணிவும் கொண்ட இந்தியாவின் மூத்த மகனை இனிவரும் தலைமுறைகள் தன் இதயத்தில் வைத்துப் போற்றுவது திண்ணம். அந்தச் சுதந்தரத் தீபத்தின் ஒளி சூறாவளியோ புயலோ எது வந்தாலும் சாய்க்காமல் பார்த்துக்கொள்வோம்.

கைமாறு கருதாத அகிம்சை போராளிகள், முன்பின் தெரியாத தன்னார்வலர்கள், வீரம் செறிந்த விடுதலை வீரர்களென இன்னுயிர் நீத்த லட்சோபலட்ச இந்தியர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரிவினைக்குப் பிறகு அந்நியராக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பாருங்கள்.

அவர்களின் ஆண்டுக்கணக்கானப் போராட்ட வெற்றியை அற்ப அரசியல் காரணத்தால், கொண்டாட மறுக்கப்பட்டமை கண்டு மனம் இரங்குங்கள். பிரிந்து சென்றால் என்ன, கிளைவிட்டுப் பிரிந்தாலும் இலைகள் மரத்திற்கே சொந்தம்! முன்னெப்போதும் போல நல்லவை கெட்டவைகள் பகிர்ந்தபடியே நாமிருப்போம்!

எதிர்காலம் நம்மை கைநீட்டி அழைக்கிறது. ஆனால் எங்கே செல்வது? என்ன செய்வது? சாமானிய மனிதனுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு சுதந்தரமும் வாய்ப்புகளும் கிடைப்பதற்குப் பாடுபடுவோம். பஞ்சம், பசி, அறியாமை, கொள்ளைநோய் என வேண்டாதவை விரட்டி வளமான, சுதந்தரமான, முற்போக்கான தேசத்தை, சமூகப் பொருளாதார, அரசியல் உரிமைகள் கொண்டு நிலைநாட்டப் பாடுபடுவோம். ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதியும் முழுமையான வாழ்வும் கிடைக்க குரல் கொடுப்போம்!

நம் முன் கடும் பணிகள் காத்திருக்கின்றன. நம் உறுதிமொழியைச் செயல்படுத்தும்வரை நமக்கு ஓய்வென்பது இல்லை. இந்திய மக்கள் அனைவரும் எப்படி இருக்கவேண்டும் என்று விதி தீர்மானித்திருக்கிறதோ அப்படி இருக்கும்வரை பாடுபடுவோம். துணிவாக அடியெடுத்து வைத்து பல முன்னேற்றங்களைக் காணப்போகும் தேசம் இது. நாம் அதன் குடிமக்கள். எனவே நம் விழுமியங்கள் உயர்வானவையாக இருக்கவேண்டும்.

எந்த மதத்தினராய் இருத்தால் என்ன, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மக்கள். வகுப்புவாதங்களை இத்தேசம் என்றைக்கும் ஊக்குவிக்காது. பாகுபாடுக்கு உட்பட்ட தேசமெல்லாம் பாழாய்ப்போனதுதான் வரலாறு.

உலகத் தேசங்களுக்கு நம் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் அனுப்பி வைப்போம். அமைதி, சுதந்தரம், ஜனநாயகம் ஆகியவற்றை முன்னெடுக்கும் பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்போம்.

நாம் பெரிதும் விரும்பும் தாய்நாட்டுக்கு, பழைமையும் பாரம்பரியமும் பின்னிப்பிணைந்திருக்கும் இந்தியாவுக்கு, எப்போதும் இளமையாகத் தோற்றமளிக்கும் தேசத்துக்கு, நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்! தேச சேவைக்கு நம்மை அர்ப்பணிப்போம்!

ஜெய் ஹிந்த்!

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *