Skip to content
Home » காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

ஃபிடல் காஸ்ட்ரோ

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல் பாடிஸ்டா அரசைக் கவிழ்க்க முயன்ற ஃபிடலின் முதல் தாக்குதல் இது. ஆனால் சின்னச் சின்ன தவறுகளால் முதல் தோல்வியாகவும் அமைந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 122 பேர் மீதான விசாரணை சாண்டியாகோ நீதிமன்றத்தில் நடந்தது. தீரமாக வாதாடிய ஃபிடல் 93 பேருக்கு விடுதலை வாங்கித் தந்தார்.

அக்டோபர் 16, விசாரணையின் இறுதிநாள். அன்று காஸ்ட்ரோவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பரவலாக நம்பவைக்கப்பட்டு, அவர் மீதான விசாரணையை சதுர்னினோ லோரா மருத்துவமனையில் உள்ள செவிலியர் விடுதியில் ரகசியமாக நடத்தினர்.

தனக்கு வழங்கப்பட்ட 2 மணி நேரத்தில், காஸ்ட்ரோ பேசிய 1.30 மணி நேர உரை, கியூப வரலாற்றின் விடிவெள்ளியாக இருந்தது. தன் ஆதர்ச நாயகர் ஹொஸே மார்த்தியின் மீதிருந்த பற்று ஃபிடல் உரையின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெறித்தது.

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று முத்தாய்ப்பாகப் பேசி முடிக்கையில், ‘நேர்மையுடன் தனது நோக்கங்களை ஒப்புக்கொண்ட ஃபிடலை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டது தவறு. எனவே 15 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கிறேன்’ என்று நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்.

ஃபிடல், அடுத்த இரண்டாண்டுகளில் விடுதலைப் பெற்று சில ஆண்டுகளில் கியூபக் குடியுரசின் ஜனாதிபதியும் ஆனார். உலகெங்கிலும் உள்ள புரட்சிசார் அமைப்புகளுக்கு இன்றளவும் உரம் போட்டுக் கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற உரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது.

0

மரியாதைக்குரிய நீதிபதிகளே! உங்கள் நாட்டின்மீது உண்மையாகவே பாசம் இருந்தால், மனித குலத்தின் மீது கரிசனம் இருந்தால், நீதியின்பால் நம்பிக்கை இருந்தால் என் உரையைக் கவனமாகக் கேளுங்கள். என்னைப் பேசவிடாதபடி பல வருடங்கள் மௌனத்தில் முடக்குவார்கள் என்பதை நான் அறிவேன். உண்மையை மூடி மறைக்க தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் இந்த அரசாங்கம் செய்யும்.

மக்களின் ஞாபகத்தில் இருந்து என்னை மெல்ல மெல்ல மழுங்கடிக்க ஏதேதோ சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் என் குரலில் உள்ள வெப்பம் கொஞ்சமும் குறையாது. நான் தனித்துவிடப்பட்டதாய் உணர்ந்தாலும்கூட, இந்தக் கோழைகள் வெறுக்கும் அக்கினிக் கொப்பளிக்கும் உரை வீச்சை என் இருதயத்தில் இருந்து நான் பேசிக்கொண்டுதான் இருப்பேன்.

ஜூலை மாதம் 27ஆம் தேதி, மலை மேல் இருந்த ஒரு கூடாரத்திலிருந்து ஆட்சியாளர் பேசிய உரையை வானொலி மார்க்கமாகக் கேட்டேன். அப்போது அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 18 வீரர்கள் என்னோடு களத்தில் இருந்தார்கள். அந்த மாதிரியான களங்களில் கால் வைத்திராதவர்களுக்கு நாங்கள் அனுபவித்த கோபமும் கசப்பும் எப்படிப் புரியும்?

எங்கள் மக்களை விடுதலை செய்வதற்கான நீண்ட நாளைய நம்பிக்கைகள் எல்லாம் பாழடைந்துக் கிடக்கும்போது, அந்தத் திமிர்பிடித்த கொடுங்கோலரின் பேச்சில் முன் எப்போதையும் விட கொடிய மகிழ்ச்சியைக் கண்டோம். எங்கள் நொறுங்கிப் போன கனவுகளை அந்தக் கொடிய சிரிப்புச் சத்தம் உலுக்கி எடுத்தது.

நாங்கள் மனம் வெதும்பி வெறுக்கும்படி கசப்பான மொழியில் அவர் எல்லையில்லாத பொய்களையும் அவதூறுகளையும் அடுக்கிக் கொண்டே போனார். இந்த முடிவில்லாத வசைகளை, ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் வீரர்களின் சுத்த ரத்தத்தோடு ஒப்பிடலாம். இதற்குக் காரணமும் அதே சர்வாதிகாரிதான். மனிதாபிமானமற்ற கொலைகாரக் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, அவர் ஒப்புதல் அளித்த பின்தான் இத்தனை அப்பாவிகள் ரத்தம் சிந்தி மரித்துப் போனார்கள்.

ஒரு கணம் நாங்கள் அவரை நம்பியிருந்தாலும்கூட, மானமும் மனசாட்சியும் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க இவ்விரண்டும் அற்ற விரோதத்தோடு வாழ நிர்பந்திக்கப்படுவான். அவரை வாழ்நாள் முழுதும் விமர்சித்து வந்த எனக்கு, அந்த வெறுப்பூட்டும் நெற்றியைப் பார்த்து சத்தியவானின் முத்திரைக் குத்த துளியும் நம்பிக்கை எழவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பலம் பொருந்திய ஆயுதங்கள் இருந்தன. எங்களைச் சுட்டுப்பிடிக்கும்படி அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த உண்மைகள் எல்லாம் இனிக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். நான் எனக்கு வகுத்துக்கொண்ட பணியை நிறைவேற்றியதால், உங்கள் முன் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். நான் இனி நிம்மதியாகவும் திருப்தியாகவும் இறந்துபோகலாம். அந்தக் கொலைகாரக் கொடும் பாவிகள் பற்றி இனி ஒரு வார்த்தையும் பேச மாட்டேன்.

மொன்கடா ராணுவ முகாம் சித்திரவதைக் கூடமாக மாறியிருந்தது. பலர் இறந்து கிடந்தார்கள். வெட்கமில்லாத வீரர்களின் சீருடை, கசாப்புக் கடைக்காரனின் மேல் அங்கியைப் போல் ரத்தம் தெறித்து குமட்டல் எடுத்தது. சுவர் முழுதும் ரத்தக்கறை. சுவற்றில் பதிந்து கிடந்த புல்லட் அச்சுகளில் சதைத் துணுக்குளும், மூளைத் திசுக்களும், தலைமுடி தடயங்களும் தென்பட்டன.

முகத்தை நோக்கிச் சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் கொடூரமான நினைவுகளை இவை ஞாபகப்படுத்தின. ராணுவ முகாமைச் சுற்றியிருந்த அடர்த்தியான புல்தரை மீது ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கியூபாவின் விதியை வழிநடத்திச் செல்லும் இந்தக் குற்றவாளிகளின் கைகள், மரணக் குகையின் வாசலில் இருக்கும் கைதிகளுக்காக நரகத்தின் கல்வெட்டுகளை எழுதி வைத்தன. அதில் ‘எல்லா நம்பிக்கையையும் கைவிடு’ என்று இருந்தது.

தங்கள் அடையாளத்தின்மேல் முகமுடி அணியவோ, செய்த காரியங்களை மூடி மறைக்கவோ அவர்கள் கொஞ்சமும் மெனக்கெடவில்லை. தங்கள் பொய்களால் மக்களை ஏமாற்றிவிட்டதாய் நினைத்தார்கள். உண்மையில் அப்படியாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள்.

பிறப்பையும் இறப்பையும் அருளும் அண்ட சராசரத்தின் அகிலக் கடவுள்களாய் தம்மை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் விடிகாலையில் நாங்கள் தாக்கியபோது, பிண விருந்தின் ரத்த போதைக்கு ஆட்பட்டு பயந்து நடுங்கினார்கள்.

தாந்தே தன்னுடைய ‘இன்ஃபெர்னோ’ எனும் படைப்பில் நரகத்தை ஒன்பது வட்டங்களாக வகைப்படுத்துகிறார். குற்றவாளிகளுக்கு ஏழாவது வட்டமும்; திருடர்களுக்கு எட்டாவது வட்டமும்; துரோகிகளுக்கு ஒன்பதாவது வட்டமும் ஒதுக்கினார். மனிதர்களுக்கு ஒருவேளை ஆன்மா இருந்தால், அவர்களுக்கான சரியான வட்டத்தைக் கண்டுபிடிக்க பிசாசுகள் கதிகலங்கி போவதுண்டு. ஆனால் இந்த சாண்டியாகோ டி கியூபாவில் கடும்பாதகச் செயல் புரிந்த மனிதர்களுக்கு இதயம்கூட இல்லையே, என்ன செய்வது!

ஒவ்வொரு சமூகத்திலும் கீழான மனிதர்கள் இருக்கிறார்கள். மற்றவர் துன்பத்தில் இன்பம் கண்டு, முரட்டுமஸ்தான்களாக, பல தலைமுறைக்கு முன்பிருந்த கொடிய நோயை நிகழ்காலத்திற்குக் கடத்தி மனிதப் போர்வையில் வாழ்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் சமூகப் பழக்கவழக்கங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மிகக் கொடிய அரக்கர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

ரத்த ஆறிலிருந்து ஒரு முடக்கு நீர் அருந்துங்கள் என்றால், மொத்த ஆறும் வற்றிப்போகும் வரை தாகம் அடங்காது என்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் ஓர் ஒழுக்கப்பூர்வமான சட்டம் தேவை. மிகத் துணிச்சலான, நேர்மையுள்ள, லட்சியப்பூர்வ கியூபர்களை கொன்று தீர்க்கிறார்கள். அத்தோடு இந்தக் கொடுங்கோலர்கள் உத்தமமான கியூபப் பெருங்குடியை கூலிப்படை என்று வாயக்கூசாமல் அழைக்கிறார்கள்.

கியூப அரசிடமிருந்து சம்பளம் வாங்கும் துரோகக் கரங்கள், அதன் சொந்த மக்களையே கொல்லத் துணிகிறது. இறந்துபோன உத்தமர்களை தலைவர்களாகவும் புனிதர்களாகவும் நாங்கள் அர்த்தப்படுத்தினோம். கியூபக் குடியரசைப் பாதுகாக்க ஏந்திய படைபலங்கள் எல்லாம், அதன் ஒன்றிரண்டு சாராரின் நலன்களைப் பாதுகாக்க மொத்த மக்களையும் காவு கேட்கிறது.

‘ப்ரயோ (முன்னாள் கியூப அதிபர்) பணம் கொடுத்துதான், நாங்கள் இதை செய்தோம் என ஒப்புக்கொள்ளுங்கள்’ என்று ராணுவத்தினர் எங்கள் தோழர்களை மிகக் கடுமையாய் துன்புறுத்தினார்கள். கொள்கையிலிருந்து மாறுபட்டால் ஒழிய உயிரோடு வாழமுடியாது என்று விதவிதமாய் எச்சரித்தார்கள். அதையெல்லாம் கோபத்துடன் மறுத்ததால், மீண்டும் சித்திரவதைப் படலம் தொடங்கியது.

கண்களைத் தோண்டினார்கள். ஆணுறுப்பைச் சிதைத்தார்கள். ஆனாலும் தோழர்கள் மசிந்து கொடுக்கவில்லை. ஒருவர்கூடப் புகார் அளிக்கவோ, கட்சி மாறவோ துணியவில்லை. நார் நாராகக் கிழிந்த எங்கள் தோழர்களின் உடலை, பொய் சொல்லாத புகைப்படங்கள் வெட்ட வெளிச்சமாக்கின. இன்னும் சில சீரழிவு தொடர்ந்தன. ஆண்களின் வீரத்திற்கு முன்னால் ஏமாந்து போன ராணுவத்தினர், இம்முறை பெண்களின் உறுதிப்பாட்டை உடைக்கப் பார்த்தார்கள்.

தோழர்கள் மெல்பா ஹெர்னான்டஸும், ஹைதி சாண்டாமரியாவும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு, குருதி ஒழுகும் ஒரு மனிதக் கண்ணை கையில் எடுத்துக்கொண்டு சார்ஜன்டும் சில ஆண்களும் சென்றார்கள். அதை சாண்டாவிற்கு காட்டி, ‘இது உன் சகோதரனுடைய கண். அவன் சொல்ல மறுப்பதை நீ சொல்லாவிட்டால், மற்றொரு கண்ணையும் பிடுங்கி விடுவோம்’ என பயமுறுத்தினார்கள். தன் சகோதரன் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்த ஹைதி, ‘அவன் ஒரு கண்ணைப் பிடுங்கி விட்டு, பேசவில்லை என்று புளுகுகிறீர்களே, நான் அதைவிடவும் மௌனமானவள்’ என்று கண்ணியத்தோடு பதிலளித்தாள்.

கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் அந்தச் சிறைக்கு சென்றவர்கள், இரு தோழர்களின் கையிலும் சிகரெட் பற்றவைத்து காயம் பதித்தார்கள். வெறுத்துப் போனவர்களாய், காயம் பட்ட ஹைதியை நோக்கி, ‘உன் வருங்கால கணவனையும் நாங்கள் கொன்றுவிட்டோம்’ என்றார்கள். ஆனால் சற்றும் அசைந்துகொடுக்காத ஹைதி, ‘அவன் சாகவில்லை. தேசத்திற்காக மடிந்துபோகிறவன், மக்கள் மத்தியில் என்றென்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருப்பான்’ என பதிலிறுத்தாள். கியூபப் பெண்களின் கண்ணியமும் ஆக்ரோஷம் பொங்கும் வீரமும் இத்தனை மட்டத்திற்கு உயர்ந்தது கிடையாது.

நாங்கள் கியூபர்கள். கியூபனாக இருப்பது எங்கள் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் தேசத்துரோகம். எங்கள் தேசத்தின் வரலாற்றில் நாங்கள் பெருமை கொள்கிறோம். விடுதலை, நீதி, மனித உரிமை போன்ற பதங்களைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே நாங்கள் பயின்று வந்திருக்கிறோம். எங்கள் வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்த உரிமைப் பெற்றிருக்கிறோம். செஷ்பெடஸ், அக்ரமோன்டெ, மாசியோ, கோமெஸ், மார்த்தி போன்ற பெயர்களைத்தான் நாங்கள் முதலில் தெரிந்துகொண்டோம். ‘சுதந்திரம் என்பது பிச்சையெடுத்து வாங்குவது அல்ல, வெட்டுக்கத்தியின் வீரத்தால் வென்றெடுப்பது’ என்று டைட்டன் சொன்னதை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம்.

கியூப மக்களின் விடுதலைக்கான விடை அப்போஸ்தலர் எழுதிய ‘பொற்காலம்’ என்ற புத்தகத்தில் இருக்கிறது. ‘அநியாயமான சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, தான் பிறந்த நாட்டை பிரிதொரு மனிதன் ஏறி மிதித்து ஆட்சிச் செய்ய அனுமதிப்பவன், கௌரவமான மனிதன் அல்ல. உலகில் ஒரு குறிப்பிட்ட அளவு வெளிச்சம் இருப்பதுபோல, குறிப்பிட்ட அளவு மரியாதை இருக்க வேண்டும். மரியாதை இழந்த மனிதர்கள் பலர் உருவாகும் போது, அந்தப் பலரின் மரியாதையை சிலர் இங்கு சுவீகரித்துக் கொள்கிறார்கள். அவர்கள்தான் மக்களின் விடுதலைக்காகப் போராடும் பெரும் புரட்சியாளர்களாய், கௌரவக் கொள்ளையை எதிர்த்துப் போர் தொடுக்கிறார்கள். அதில் இன்னும் ஆயிரக்கணக்கானோரின் மனித மாண்பு அடங்கியுள்ளது.’

அந்நியக் கொடுங்கோன்மைக்கு எதிராக கியூபர்கள் புரட்சி செய்த நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 மற்றும் பிப்ரவரி 24ஆம் தேதிகளில் கொண்டாடி வருகிறோம். ஒற்றை நட்சத்திரமுள்ள நம் தேசியக் கொடியைப் பாதுகாக்கவும், போற்றிப் பாடவும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

‘சங்கிலியால் பிணைக்கப்பட்டு வாழ்வது என்பது,
அவமானங்கள் இழைக்கப்பட்டு வாழ்வது ஆகுமே;
பிறந்த நாட்டிற்காக நாமும் உயிரை விடுவது,
இறந்த பின்னும் உலகில் நம்மை வாழ வைக்குமே’

என்ற நம் சுதேசிய கீத வரிகளை ஒவ்வொரு மதியமும் முணுமுணுக்கக் கற்றிருக்கிறோம். இதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். இந்த உயரிய தொட்டில் வழக்கங்களைப் பின்பற்றும் கியூபர்களுக்கு சிறைத்தண்டனையும் கொலைதண்டனையும் பரிசாகக் கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் உயிலெழுதிக் கொடுத்த சுதந்திர நாட்டில் நாம் பிறந்திருக்கிறோம். நம்மை யாரும் அடிமையாக்க நினைத்தால் இந்தத் தீவு கடலில் மூழ்கிவிடும்.

அப்போஸ்தலர் தன் நூறாவது வயதில் இறந்துபோவார். அவரை எல்லோரும் மறந்துவிடுவது போல் தோன்றும். ஆனால் அது எவ்வளவு பெரிய அவமானம்! அவர் உயிரோடு இருக்கிறார். அவருடைய மக்கள் புரட்சி செய்கிறார்கள். அவரை மதிக்கிறார்கள். அவரின் மகோன்னதத்தை காப்பாற்றுகிறார்கள். அவர் விட்டுச்சென்ற கோட்பாடுகளைக் காப்பாற்ற மண்ணில் புரளும் பல கியூபர்களை நான் கண்டிருக்கிறேன்.

அவர் நினைவை கியூப தேசத்தின் இதயத்தில் ஊன்றிவைக்க, அவர் கல்லறை முன் ரத்தம் சிந்தி மடிந்துபோன பலரைப் பார்த்திருக்கிறேன். அப்போஸ்தலரை இழந்துபோயிருந்தால், கியூபாவின் கதி என்ன ஆகியிருக்கும்?

என் தரப்பு வாதத்தை நான் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். என்னை விடுதலை செய்யுங்கள் என்று வழக்கமான வழக்குரைஞரைப் போல் நான் கெஞ்ச மாட்டேன். பைன் தீவின் இழிவான சிறைச்சாலையில் என் தோழர்கள் வருந்தி வாடும்போது, எனக்கான சுதந்திரத்தை எப்படிக் கேட்க முடியும்? நானும் அவர்களோடு செல்கிறேன். அந்தப் பாரத்தை சேர்ந்து சுமக்கிறேன். திருட்டுப் பாதகம் செய்யும் ஒரு குற்றவாளி ஆட்சி செய்யும் நாட்டில், உத்தமமான குடிமக்கள் வீதியிலோ சிறைச்சாலையிலோ செத்துமடிய வேண்டுமென்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இந்தக் கோழைகளின் கொடூரமான அச்சுறுத்தல்களும் மனிதநேயமற்ற தண்டனைகளும் என் சிறைவாச நாட்களை எப்படியெல்லாம் துன்புறுத்தும் என்று எனக்குத் தெரியும். உயிருக்கு இணையான என் எழுபது தோழர்களை படுபாதகமாய் கொன்ற கொடுங்கோலனுக்கே அஞ்சாத நான், இந்த சிறைச்சாலைக்கா நடுங்கப் போகிறேன்? என்மேல் குற்றம் சுமத்துங்கள். பரவாயில்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்!

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *