Skip to content
Home » காட்டு வழிதனிலே #12 – கிணறு

காட்டு வழிதனிலே #12 – கிணறு

காட்டு வழிதனிலே

வலது காலை உயர்த்தி அடுத்த அடி எடுத்து வைத்ததுதான் தெரியும், மட மடவென மண்ணும் கற்களும் சரிய அந்தக் கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டேன். ஒரு வரியில் சொல்லியாகிவிட்டது. ஆனால் அவ்வரியில் கிணற்றின் சுவரில் முட்டியதாலும், பாறைகளில் மோதியதாலும் ஏற்பட்ட கால் முறிவும், வெட்டுகளும், சிராய்ப்புகளும், இரத்தக் கசிவுகளும் மறைந்துள்ளது. கிணற்றில் நீரும் அதிகம் இல்லை. தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்தாலும் முயலாமல் இருக்க முடியாதல்லவா. அந்த இரவு முழுதும் என்னால் முடிந்த அளவுக்கு உயிரோடு இருக்க முயன்றேன். அதீத இரத்தப் போக்கின் காரணமாய், அதிகாலையில் அம்முயற்சியில் தோற்று உயிர் பிரிந்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன்தான் வேலாயுதம் இங்கு வந்தார். பாரதியின் கவிதைகளில் உருகி ஊரின் நடுவே இருந்த வீட்டில் தனக்குப் பங்கு வேண்டாம் என்று சகோதரர்களிடம் சொல்லிவிட்டு, ஊருக்கு வெளியே இருந்த இந்தக் காட்டையும் அதில் இருந்த கிணற்றையும் தனதாக்கி வாழ்பவர். மனைவியை முதல் பிரசவத்தில் இழந்து, அவள் பிரசவித்த மகனுடன்தான் முதலில் இங்கு வந்தார். அவர் பார்த்த அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை அவருக்குப் பொருளாதாரத் துணிச்சலைத் தந்தது. நல்ல மழையும் விளைச்சலைத் தந்தது. மனைவியின் இழப்பில் இருந்து விடுபட்டு, மகனை நன்கு படிக்க வைத்து இராணுவத்தில் பணிக்கும் அனுப்பி விட்டார்.

ராணுவத்தில் இரு வருடங்கள் பணிபுரிந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் மகனும் இறக்க முற்றிலுமாய் ஒடுங்கி விட்டார். அதோடு விவசாயத்திலும் ஈடுபாடு குறைய, மழையும் பொய்க்க, கடந்த சில வருடங்களாய் ஏதோ வாழ்கிறார். பணம் இருந்து என்ன செய்ய? எதையும் பகிரத் துணை இல்லையே எனும் நினைப்பிலேயே மனதில் ஊனமாகிப் போனார். இது, ஒருவர் தேவையான எல்லாவற்றையும் தானே, தனக்காகச் செய்துகொள்ள வேண்டும் என்ற நிலை வெகுநாட்கள் தொடரும்போது ஏற்படும் தொய்வு. இதைப் பெண் எளிதில் கடந்துவிடுவாள். ஆண் அப்படியல்ல!

அந்த வீடும் கிணறும்தான் அவருக்கு இப்போது ஆறுதல் தருகின்றன. அவைதான் இன்றும் அவரைத் தொடர்ந்து வருகின்றன. கிணற்றில் தற்போது இரண்டடிக்கு மட்டும்தான் நீர் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் பெய்த பெரு மழையின் காரணமாகக் கிணற்றின் சுற்றுப்புறச் சுவரில் ஓர் இடம் மட்டும் இடிந்து, மண் சரிந்து, இன்றளவும் கிணறு அபாயகரமாய்த்தான் காட்சியளிக்கிறது.

கிணற்றின் கீழ் செல்ல, ஒருவர் மட்டும் நிற்கும் அளவுக்குப் பாறையால் ஆன படிகள், சுவரில் இருந்து பிதுங்கி வருவதுபோல் ஓர் அடி இடைவெளியில், மேலிருந்து கீழ் நோக்கிச் சுற்றுகின்ற வாக்கில் கட்டப் பட்டிருக்கும். அந்த ஆழமான பெரிய கிணற்றில் உள்ள பொந்து ஒன்றில் ஒரு ஜோடி ஆந்தைகளும் வாழ்கின்றன. வேலாயுதம், தினசரி அக்கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்து, அவ்வாந்தைகளை வேடிக்கை பார்ப்பது வழக்கம். அவற்றை அவற்றின் குஞ்சுகளுடன் பார்த்தால் அவரின் உலகம் வேறாகி விடும்.

ஆந்தைக் குஞ்சுகளைப் பார்க்க விரும்பினால் மட்டும் கீழ் இறங்கி, பொந்தின் எதிரே உள்ள படியில் அமர்வது உண்டு. ஆரம்பத்தில் பயந்த அவ்வாந்தைகள் பின் நாட்களில் பயம் தெளிந்து வேலாயுதம் முன்பே தம் வேலைகளை இயல்பாய் செய்ய ஆரம்பித்து விட்டன. அவர் தந்தை இறக்கும் முன் தோண்டியது இக்கிணறு.

வேலாயுதம் வேலைக்குச் சேர்ந்த புதிது. நீரோட்டம் பார்க்கத் தேனியிலிருந்து ஒருவரை அவரது தந்தை கூப்பிட்டிருந்தார். அவரும் தோட்டத்தின் ஈசான்ய வாயு மூலையைத் தேர்ந்தெடுத்து, அங்கு Y வடிவக் கொய்யாமரக் கட்டை ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, கீழே தரையில் காட்டியபடியே இடத்தைச் சுற்றி வந்தார். அப்போது ஓர் இடத்தில் கடிகாரச் சுற்றுப்படி அக்கட்டை சுற்ற, அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்ல மழைக்காலமும் வெயில் காலமும் இல்லாத ஆகஸ்ட் மாத நல்ல நாள் ஒன்றில் பூசை போடப்பட்டு, கிணறு தோண்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு மாதத்தில் கிணறு வேலை முடிந்து, நீரும் நன்றாய் சுரக்க, வீடே அம்மகிழ்ச்சியைக் கொண்டாடியது. பெரும்பாலும் அக்கிணற்றில் முக்கால் கிணறு நீர் நிரம்பித்தான் இருக்கும். கிணற்றையும் இரு வருடத்திற்கு ஒரு முறை தூர் வாரி அழகாய்தான் வைத்திருந்தது அக்குடும்பம். தந்தை இறந்த பின் அது கொஞ்சம் குறைந்து, பின் வேலாயுதம் மனைவி மறைந்த பின் தூர் வாருவது முற்றிலுமாய் நின்று போனது. போதும்! என்னோட கதைக்குப் போகலாம்.

அது ஓர் ஈர இலையுதிர் காடு. அங்குதான் பிறந்தேன். ஏறக்குறைய 275 நாட்கள் நான் தாயின் வயிற்றில் இருந்தேன். பிரசவிக்கும்போது தாய் கூட்டத்தில் இருந்து பிரிந்து, என்னைப் பிரசவித்தப் பின் நான் விழுந்து எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் (இரு மணி நேர நிகழ்வுதான்!) மீண்டும் கூட்டத்துடன் அவளையும் என்னையும் இணைத்துக் கொண்டாள். பாலைக் குடித்துப் பின் தாவரங்களை உட்கொள்ள ஆரம்பித்தேன். இளம் புற்களையும் இலைகளையும் விரும்பி உண்டேன். அதோடு பூக்களையும், இளம் தண்டுகளையும்கூட குறுஞ் செடிகளிடம் இருந்து தின்பது வழக்கம்.

நீர்த் தேவை அதிகம். அதனால் உணவு தேடுவது போல் நீரையும் தேடுவோம். ஆனால் அதற்காக வீட்டு எருமைபோல் நீரில் ஊறிக்கொண்டு இருப்பது இல்லை. எங்கள் குழு முதிர்ந்த பசுவினால் வழிநடத்தப்பட்டாலும் எங்கள் கூட்டத்தில் வளர்ந்த ஒரு காளையும் இருக்கும். ஒரு குழுவில் 16 முதல் 35 எண்ணிக்கையில் நாங்கள் இருப்போம்.

இனப்பெருக்கக் காலங்களில் வேறு சில காளைகளும் எங்கூட்டத்தில் இணைந்து கூட்டத்தில் உள்ள பசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும். இதனால் முழுவதும் காளைகளால் ஆன குழுக்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். ஒரு சில காளைகள் குழுக்களின்றித் தனியாகவே வாழவும் செய்யும். அதுபோலக் குழுக்களிடையே இடநிர்ணயிப்பில் நாங்கள் பெரிதாய் நேர விரயம் செய்வதில்லை. அதற்காய் சண்டைகளும் பொதுவாய் செய்வதும் இல்லை. ஒரே இடத்தில் இரண்டு மூன்று குழுக்கள் இணைந்து மேய்வதும் உண்டு. புலி, செந்நாய், கழுதைப் புலி ஆகியவற்றிடம் இருந்து குழு எங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஓர் ஒன்பது மாதம் தாயுடன் அக்குழுவில் இருந்துவிட்டு, பின் வெளியேறி இருவருடங்கள் தனியாய் சுற்றினேன். புலிதான் எங்களின் பிரதான எதிரி. அதுவும் நான் வசிக்கும் பகுதியில் இல்லாததால் எனக்கு வசதியாகி விட்டது. நிறைய சுற்றினேன், தின்றேன், பருகினேன். எம்மினத்தில் காளை இரு வருடங்களிலும் பசு மூன்று வருடங்களிலும் இனபெருக்கம் செய்யும் தகுதியைப் பெறுகின்றன. ஒரு பருவ காலத்தில் நான் சந்தித்த ஒரு குழுவுடன் இணைந்து, பிடித்த பசுக்களுடன் புணர்ந்து அவர்களுடனே சுற்றி வந்தேன்.

நாங்கள் பகலாடிகள்தான். ஆனால் மனிதத் தொந்தரவுகள் நிறைந்த பகுதிகளில் இரவாடிகளாய் பயணிப்பதும் உண்டு. கடந்த சில வருடங்களாய் மழை பொய்த்ததால் கடும் வறட்சி. இடம் பெயர ஆரம்பித்து ஓர் உலர் இலையுதிர்காட்டுப் பகுதியில்தான் தஞ்சமடைந்தோம். இப்பகுதியை அடுத்து இருப்பது சிறு சிறு ஊர்கள். சில நேரங்களில் அவ்வூர்காரர்களின் விளைநிலங்களையும் உணவிற்காய் உபயோகப்படுத்துவதுண்டு (மனிதர்களுக்கு அதன் பெயர் நாசப்படுத்துதல்!).

இன்றும் நெடுந்தூரம் பயணித்து விட்டோம். ஏதோ ஓர் இடத்தில் நான் சற்றுத் தாமதிக்கப்போய் எம்குழுவை விட்டுப் பிரிந்தேன். பிரிந்து விட்டது தெரிந்து விட்டது. என்ன செய்ய! ஒரு புலம்பெயர்பவரின் நிலைதான். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தேட வேண்டியதுதான்! உணவையும் நீரையும் தேடியலைகிறேன். ஓர் அதிகாலையில் அருகில் உள்ள ஊருக்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தேன். அரை மணிக்குள்ளாகவே மனிதர் கூட்டம் திரண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தது. பயமின்றி வளர்ந்த நான் பயத்துடன் வேகமாய் ஒடி அடுத்த ஊரின் சோளக்கொல்லையில் என்னை மறைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

அரண்டு போய் வெகு நேரம் எதுவும் செய்யாது அங்கேயே கிடைத்ததைத் தின்று பகலைக் கழித்தேன். தேவையான நீர் கிடைக்கவில்லை. கடும் தாகத்துடன் அந்த இரவில் வெளியேறினேன். அது ஒரு முழுநிலவு நாள். மக்கள் பார்த்துவிடுவார்களோ எனும் பயத்திலேயே வெகு தூரம் நடந்தேன். எதேச்சையாய் நான் இருக்கும் மேட்டில் இருந்து சற்றுக் கீழே பார்க்க, நிலா ஒளியில் கிணறு ஒன்றில் நீர் இருப்பது தெரிந்தது. மெதுவாய் அக்கிணற்றை நோக்கி நடந்தேன். அருகே சென்றவுடன்தான் தெரிந்தது அக்கிணறின் அமைப்பும் ஆழமும் எனக்கு உதவப் போவதில்லை என்று! என்ன செய்ய! அக்கிணற்றை ஒரு சுற்றுச் சுற்ற இடிந்த பகுதி வந்தது. கீழே இறங்க வாய்ப்பு இருக்குமா என ஓர் அடி எடுத்து வைக்கும் போதுதான் இக்கதையின் தொடக்கம் எனக்கு முடிவுரை எழுதியது.

வேலாயுதம் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே வீட்டின் கதவைத் திறந்தார். வெளியே வந்து திண்ணையில் அரைமணி நேரம் உட்கார்ந்து எதை எதையோ யோசனை செய்து கொண்டு, பின் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து தன் காலைக் கடன் முடித்து, காலை உணவுக்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டார்.

சரியாய் ஒன்பது மணிக்குக் காலை உணவெல்லாம் முடித்துவிட்டு கிணறு பக்கம் வந்தார். வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்தால் கிணறு. உடைந்த சுவர்ப் பகுதியைத் தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஏதோ வித்தியாசமாய் தெரிய, அவசர அவசரமாய் நடந்து அங்கே சென்று பார்க்க, கிணற்றின் உள்ளே இறந்த நிலையில் நான்.

வேலாயுதத்திற்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. இரண்டு படி கீழே இறங்கி எனக்கு உயிரில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கைப்பேசியில் அவரின் அண்ணனிடம் அச்செய்தியைச் சொல்லலானார். அடுத்த அரை மணியில் ஆட்கள் செய்தி தெரிந்து ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர். பெரும்பாலோர் வந்த உடன் என்னைக் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும், வேலாயுதத்திடம் எப்படி நடந்து என விசாரிப்பதுமாய் இருந்தனர்.

மெதுவாய்தான் வனத்துறை அதிகாரிகள் வந்தனர். என்னைப்பற்றி சற்று விசாரித்துவிட்டு கிணற்றின் ஆழம் கருதி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வர பொதுமக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்தில் என்னைக் கயிறு கட்டி மேல் தூக்கினார்கள். இறந்த உடல் எங்கு மோதினால், உராய்ந்தால், இடித்தால் என்ன எனும் நிலையில் மேலே கொண்டு வரப்பட்டேன். வனத்துறை அதிகாரிகள் அவசர நிலையில் என்னைப் பிணப் பரிசோதனையும் செய்து அருகே இருந்த ஓர் இடத்தில் ஊர் மக்களின் ஒப்புதலுடன் அடக்கமும் செய்தனர்.

இதெல்லாம் முடிந்த அன்றைய சாயங்கால வேலையில் வேலாயுதம் அக்கிணற்றில் இருந்த படிகள் வழியே சற்றுக் கீழே இறங்கிப் பார்த்தார். சிறிது நேரம் படியிலேயே அமர்ந்து பின் எழும்போதுதான் கிணற்றின் ஒரத்தில் ஓர் ஆந்தை இறந்து மிதப்பதைக் கவனித்தார். ஆந்தைகளின் ஞாபகமே அப்போதுதான் வந்தது. உடன் தலையை உயர்த்தி அந்தப் பொந்தைப் பார்த்தார். பொந்து சிதைந்திருந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *