எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுத்து ஆசை தீரக் கடைசியாய் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுப் பின் அட்டைப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தேன்.
ஒரு வழியாக 16 பெரிய பெட்டிகளில் அனைத்தையும் அடுக்கியாகி விட்டது. எல்லாப் புத்தக அலமாரிகளையும் மீண்டும் ஒருமுறை பார்த்தேன். எல்லாம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரு அலமாரியின் கீழ் அறையில் மட்டும் ஓர் அட்டைப்பெட்டி இன்னமும் இருந்தது. அது இருந்த நிலையே அதைத் திறந்து வருடங்கள் பல ஆகிறது எனச் சொல்லியது. அதில் என்ன இருக்கும் என்றுகூட என்னால் யூகிக்க முடியவில்லை.
பெட்டியை வெளியே எடுத்துத் திறந்தேன். அதில் முழுக்க என் களக்குறிப்பேடுகள்! கிட்டதட்ட முப்பது இருக்கும். என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. ஒரு களக்குறிப்பேட்டை எடுத்து அட்டையைப் புரட்டினேன். எதோ கால இயந்திரத்தில் முப்பத்து எட்டு ஆண்டுகள் பின்நோக்கிப் பயணம் செய்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு புல்வெளி காட்டில் இறங்கியதுபோல அந்தப் பக்கங்கள் என்னைச் செய்து விட்டன. அந்தக் குறிப்பேடுகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவையா? நான் இதை எதிர் பார்க்கவேயில்லை! ஆனால் இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன், இப்போதுதான் முதல் முதலாய் உணர்கிறேன்.
நான் 1980-90களில் வன ஆய்வின்போது உபயோகப்படுத்தியவைதான் அவை. எதோ நானே கண்டுபிடித்து உபயோகப்படுத்தின மாதிரியெல்லாம் நினைக்க வேண்டாம். விலங்கியல், தாவரவியல், மண்ணியல், தொல்லுயிரியல் ஆய்வு செய்பவர்களால் (அதோடு மட்டுமின்றி கடந்த காலங்களில் கடற்பயணம் செய்தவர்களும் இதைத்தான் வைத்திருந்தனர்!) அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய பொருளாய் இருந்த ஒன்றைத்தான் நானும் உபயோகித்திருந்தேன். இருபதாம் நூற்றாண்டிலே இப்படி எனில் சில நூறு ஆண்டுகள் பின் இருந்திருக்கும் நிலையை நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட காலங்களில் அதன் தேவை மிக முக்கியமானதாய் இருந்திருந்தது.
பதினேழாம் நூற்றாண்டில் வில்லியம் டாம்பியர் எனும் கடற்கொள்ளையர் கடற்கிராமங்களைக் கொள்ளை அடித்துவிட்டு இளைப்பாரும் நேரத்தில் அங்கிருந்த தாவர விலங்குகளைப் பற்றி நுணுக்கமாய் தன்னுடைய களக்குறிப்பேடுகளில் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி அக்குறிப்பேடுகளை மூங்கில் உள்ளே வைத்து, மூங்கிலின் இரு பக்கமும் மெழுகால் அடைத்துப் பத்திரமாய் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதுபோன்று அவர் எழுதியவற்றையெல்லாம் தொகுத்து பின்னாட்களில் ‘A new voyage round the world’ எனும் புத்தகமாய் வெளியிட்டார். இவர்தான் ஆஸ்திரேலியாவின் முதல் இயற்கை வரலாற்று ஆய்வாளராய் கருதப்படுபவர். இவருடைய பதிவைத்தான் டார்வின் அடிக்கடித் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இவருக்குப் பின் பதினெட்டாம் நூற்றாண்டின் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் களக்குறிப்பேடுகள் உலகப் புகழ் பெற்றவையாக இருந்தன. அவரும் டாம்பியரைத் தன்னுடைய குறிப்புகளில் மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். லின்னேயஸ்கூட தன் களக்குறிப்பேட்டில் மோசஸ், லைகன் மட்டுமன்றி ஈ பற்றிக்கூடப் படத்துடன் குறித்து வைத்திருப்பது இன்றும் லண்டனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரிச்சர்டு ஸ்புருஸ், ஆல்பர்ட் ரஸல் வாலஸ் போன்றவர்களின் களக்குறிப்பேடுகள் அதிகக் கவனம் பெறுகின்றன. இவை ஒரு புறம் இருக்க கள அறிவியலின் வளர்ச்சியின் விளைவாய் களக்குறிப்பேட்டில் குறிப்புகள் எடுக்கும் வழிமுறைகள்கூட முறைப்படுத்தப்பட்டது. பாரிங்டன் என்பவர் அப்படி வகுத்த ஒரு வழிமுறையைத்தான் கில்பர்ட் வயிட் (புகழ்பெற்ற இயற்கையிலாளர் மற்றும் பறவையிலாளர்) தான் இறக்கும் வரையில் தான் பார்த்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அன்றாட காலநிலையைக் களக்குறிப்பேட்டில் பதிவுசெய்ய உபயோகப்படுத்தினார்.
இந்நூற்றாண்டில் எழுதப்பட்ட டார்வினின் களக்குறிப்பேடுகள் இன்றளவும் பிரபலம். ‘The voyage of the Beagle’ என்ற அவரின் புத்தகம் அவரின் களக்குறிப்பேட்டின் விரிவாக்கம்தான். HMS Beagleலில் பயணித்தபொழுது டார்வின் எழுதியவற்றைப்போல் இன்று நாம் எழுத வாய்ப்பில்லை. கடல் இகுவனாவைப் பற்றி அவர் எழுதியவை இன்று வரையில் எல்லோரும் வியக்கும் வகையில்தான் உள்ளது.
1831-36களில் டார்வினின் கடற்பயணத்தில் எழுதப்பட்ட அவரின் 14 களக்குறிப்பேடுகள் இன்றும் லண்டனில் அவர் வாழ்ந்த டவுன்ஹவுசில் பத்திரமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது 15வது குறிப்பேடு திருடப்பட்டுவிட்டது. இன்றுவரை அது இருக்குமிடம் தெரியவில்லை. அவருடைய குறிப்பேடுகள் செவ்வக வடிவிலும், சிகப்பு அல்லது பழுப்பு நிறமுடைய தோலாலான அட்டை கொண்டதாயும், பென்சில் வைத்துக் கொள்வதற்கான ஓர் அமைப்பு உடையதாயும், இருநூறுக்குக் குறைவான பக்கங்களைக் கொண்டவைகளாகவும் இருக்கிறன. முன்னூறுக்கும் அதிகமான முழுமையான வரைபடங்களும், நிறையக் கிறுக்கல் வரைபடங்களும் அவரின் குறிப்பேடுகளை ஆக்கிரமித்திருக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் ஜியார்ஜ் பீ சாலர் என்பவர் செரங்கெட்டிச் சமவெளியில் சிங்கங்கள் வேட்டையாடுவதைப் பற்றி எழுதிய களக்குறிப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. 12×19 cm அளவிலான குறிப்பேடுகளைத்தான் அவர் உபயோகித்த்தாகக் குறிப்பிடுகிறார்.
நம் நாட்டில் வாழ்ந்த சாலிம் அலி, இந்தியா முழுவதும் சென்று பறவைகளைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்து 4000 பக்கங்களைக் கொண்ட 1200க்கும் அதிகமான பறவை இனங்களை விவரிக்க முடிந்ததற்கும் இந்தக் களக்குறிப்பேடுகள்தான் காரணமாய் இருந்திருக்கின்றன. அந்தப் புத்தகத்தில் அவர் பயன்படுத்திய ஆங்கிலச் சொல்லாடல் இன்றளவும் ஆங்கில இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகிறது. அந்தப் புத்தகம் ஒரு களக்குறிப்பேடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையே காண்பிப்பதாய் உள்ளது.
உதாரணமாய், திருப்பரங்குன்றத்தில் இரு Egyptian vultureகள் தினமும் வந்து செல்வதை அவர் எழுதியிருப்பார். அத்துடன் அந்த நிகழ்வுக்கு அப்பகுதியில் சொல்லப்பட்டு வந்த நம்பிக்கைகளையும் மிக நுணுக்கமாகக் கேள்வி கேட்டிருப்பார். அங்குத் தரப்பட்டது அதன் உணவே இல்லை எனக் கூறியிருப்பார். நல்ல குறிப்பேடுகளில் பார்த்ததும், அப்போது ஏதேனும் எழுந்த சந்தேகங்களும் சேர்ந்தே இருக்க வேண்டும்.
இந்தக் களக்குறிப்பேடுகளில் குறிப்புகள் மட்டுமன்றிப் படங்களையும் பெரும்பாலானவர்கள் முடிந்த அளவிற்கு வரைந்திருந்தனர். நுணுக்கமாய் எழுதுகிறோம் என எழுதும்போது படிப்பவர்களை அது எளிதில் குழப்பிவிடும். அதுவே அதோடு சில படங்களையும் இணைக்கும்போது அவ்வாறு நிகழ்வதில்லை. இதைத்தான் அவர்கள் செய்திருந்தனர். புதிதாய் கண்ட தாவர விலங்குகளை இப்படித்தான் பதிவு செய்திருந்தனர். தேவைப்பட்டால் வண்ணங்களுடன்கூட படம் வரைந்திருந்தனர் (ஓவியர்கள் ஓவியப் பேடுகளை உபயோகப்படுத்துவதும் இதுபோலத்தான்)
குறிப்பாய் விலங்குகளின் நடத்தைகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் வளர்ந்தபோது களக்குறிப்பேடுகளில் ஓவியங்கள் அதிகம் இடம்பெற ஆரம்பித்தன. டா வின்சி தொடங்கி டார்வின் வரை இந்த ஓவியங்கள் புகழ் பெற்றதுதான். ஓவியங்களில் ஏதேனும் அம்சங்களை நீங்கள் முதலில் விட்டுவிட்டால், உங்களின் அடுத்த தேடல் அம்மிருகத்தின் விடப்பட்ட அம்சமாய்தான் இருக்கும். மிருகங்களைப்போல தாவரங்களை வரைவது அடுத்த முக்கியமான ஒன்று. ஆனால் அது முற்றிலும் அழியும் தருவாய்க்குச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தாவரங்களையே அவர்கள் சேகரித்து எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம். அதனாலேயே தாவரவியலாளர்களிடையே இந்தப் பழக்கம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றும் இரு விலங்கியல் கள ஆய்வாளர்கள் சந்தித்தால் தங்களின் களக் குறிப்பேடுகளுடன் விவாதிப்பதைப் பழக்கமாய் வைத்திருக்கின்றனர். இந்தக் களக்குறிப்பேடுகளின் முறைதான் ஓர் இடத்தின் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், தாவரங்கள் பட்டியல் தயாரிக்க உதவிய மாதிரி எனக் கூறலாம்.
இந்தக் களக்குறிப்பேடு உபயோகிக்கும் பழக்கம் மாணவப் பருவத்திலேயே பழக்கப்படும்போதுதான் செம்மையடைகிறது. குறிப்பாக விலங்கியல், தாவரவியல், மண்ணியல், தொல்லுயிரியல் மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை அவர்களின் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இது இருப்பின் நல்லது. நான் ஆய்வு செய்யும்போது என்னுடன் இருந்த பலர் நேரிடையையாய் தகவல்தாளிலேயே (Data sheet) தேவையானதை மட்டும் குறித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அது அவர்களின் சிறப்பு என விட்டுச் செல்ல வேண்டியதுதான். வேறு என்ன செய்ய!
மேற்சொன்னவர்கள் தங்களின் ஞாபகசக்தியை முழுமையாக நம்பியதில்லை. அவர்களுக்குத் தெரியும், இந்த நொடியில் தெளிவாய் புரியும் ஒன்று நாளாக நாளாகத் தெளிவற்ற நிலைக்குச் சென்றுவிடும் என்று. காகிதத்திற்குப் பென்சிலால் உயிர் ஊட்ட முடியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் காகிதத்தில் தாவரத்தின் வாசனை இருந்தது. கடல் அலை பாறையில் மோதும் சப்தம் இருந்தது. சிங்கம் அடித்த மானின் இரத்தத்துளி படிந்திருந்தது. அது உங்களின் கருத்துகளையும் பார்வைகளையும் பாதுகாக்கும் ஓர் அடைகாக்கும் கருவி.
ஆனாலும், எத்தனைப் பேருடைய களக்குறிப்பேடுகள் இன்று பாதுகாக்கப்படுகின்றன! சிபைலா மெரியன், தாமஸ் ஜெவ்வர்சன், வில்லியம் கிளார்க், ஜான் ஜேம்ஸ் அடுபன், தொரியு (1851-58களில் மேற்கொண்ட கள ஆய்வில் மட்டுமே 500 தாவரங்களின் பூக்கும் காலங்களைத் தன் களக்குறிப்பேடுகளில் குறித்து வைத்திருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த தாவரங்களில் 30 சதவிகிதத்திற்கும் மேல் 2004இல் அழிந்து விட்டிருந்தன.) மற்றும் மேற்சொன்னவர்கள் என மிகச் சிலரின் களக்குறிப்பேடுகள்தான் நம்மிடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஏன் இப்படி? ஆய்வு நிறுவனங்களே அதைத் தங்கள் ஆய்வாளர்களிடம் கேட்டு வாங்கிப் பத்திரப்படுத்தியதாய் சரித்திரம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று பல இடங்களில் குப்பைகளாய் போனதுதான் வேதனை.
உங்களுக்கும் களக்குறிப்பேட்டில் எழுத ஆசை இருந்தால் சிறிய, கடின அட்டை கொண்ட, கோடுகள் இல்லாத நோட்டை வாங்குங்கள். உங்கள் முகவரியை முதலில் அதில் எழுதிவிடுங்கள். எழுத அஞ்ச வேண்டாம். தெளிவாய் எழுதுங்கள். இடம் பற்றிய விவரங்கள், கைபேசி, ஜிபிஎஸ் கொண்டு எழுதுங்கள். நேரத்தைத் தவறாமல் குறிப்பிடுங்கள். உங்களால் முடிந்த அளவிற்குப் படம் வரையுங்கள். எல்லாவற்றையும் பாதுகாத்து வையுங்கள்.
‘என்ன தயாராகி விட்டீர்களோ?’
‘ஓ! சரி சரி! போங்க’
நானும் என்னுடைய களக்குறிப்பேடுகளைப் படிக்க வேண்டும்.
‘ஜூலை 16, 1985. நுலாக புல்வெளிக் காடுகள், சைலான கார்மோர் சரணாலயம், ரட்லன் மாவட்டம், மத்திய பிரதேஷ்: அந்த இடத்தில் புற்கள் நன்கு வளர்ந்து இருந்தது. ஒரு வரகுக் கோழி தன்னை வெளிப்படுத்த உயரே எழும்பிக் குதித்துக் கொண்டு இருந்தது….’
(தொடரும்)