Skip to content
Home » காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

சிறுத்தை

பட்… துப்பாக்கிக் குண்டு! நல்ல திறமை வாய்ந்தவர் சுட்டிருப்பார் போல! சரியான இடத்தில் பட்டு உடன் சரிந்தேன்.

ஒரு சோலை மரத்தின் வேர் அடியில் அமைந்த பெரிய இடைவெளியில் என் தாய் என்னையும் என்னுடன் மற்றொன்றையும் பிரசவித்திருந்தாள். அதற்கு முன் ஒரு நூறு நாட்கள் நாங்கள் எம் தாயின் வயிற்றில்! இந்த இடம் வால்பாறை அருகே உள்ள அக்காமலைப் புல்வெளிகளை ஒட்டிய ஒரு சோலைக்காடு. மழைக்காடு போன்று மரங்கள் உயரமாய் இல்லாமல் இங்குக் குட்டையாய் இருக்கும். இதற்கென்றும் சில மரவகைகள் உண்டு. தாய்ப்பாலை, கண் விழிக்காது ஒன்பது நாளும், பின் கண் விழித்து மூன்று மாதமும் குடித்து வளர்ந்து வைத்தோம்.

தாயுடன் இன்றுதான் வெளியே வேட்டைக்குக் கிளம்பினோம். அவளின் காதின் பின் பக்கம் இருக்கும் வெள்ளை நிறமும், வாலின் நுனியின் வெள்ளை நிறமும் ஏதோ செய்திகளைச் சொல்வதுபோல் இருந்தது. ஆனால் புரியவில்லை! கிட்டத்தட்ட இரு வருடம் அவளுடன்தான் சேர்ந்து வேட்டையாடினேன். ஆம்! நான் மட்டும்தான் இப்போது என் தாயுடன்! என் சகோதரனை நான் இழந்து விட்டேன். என் தாயிடம் வேட்டையாடுவது எப்படி, இரையைப் பாதுகாப்பது எப்படி, மரத்தில் ஏறுவது எப்படி, கிளைகளிடையே நடந்து செல்லும்போது கீழே விழாமல் இருக்கச் சமநிலைக்கு வாலை உபயோகிப்பது எப்படிப் போன்ற பலவற்றையும் பயின்றேன்.

தாயிடம் இருந்து பிரிந்து இரைச்சல் பாறை அருவி அருகே எனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனியேதான் வாழ்வோம். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் ஆண், பெண் என இருவர் சேர்ந்து சில நாட்கள் கழிப்போம். அதே போல் குட்டிகளை வளர்க்கும் பொருட்டும் இரு ஆண்டுகள் தாயும் குட்டிகளுமாய் சேர்ந்து வாழ்வோம். மற்றபடி தனிக்காட்டு ராசாதான்!

ஒரு முறை இரையைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். அங்கே அதிசயமாய் கருமை நிறத்தில் இருந்த ஒருத்தியைப் பார்த்தேன். அவள் உடல் முழுதும் கருமை அப்பியிருந்தது. இருவரும் பருவத்தில் இருந்ததால் இணைவதில் சிரமமில்லை. அப்போதுதான் கவனித்தேன்! என் உடலில் காணப்படும் புள்ளிகள் அவள் உடலிலும்! ஆம் அருகில் பார்த்தால்தான் தெரிகிறது. மெலனின் நிறமிகள் அதிகரிப்பதால் உருவாவது இந்தக் கருமை. என் பருவ ஆசை தீர்ந்தது, பிரிந்தோம்! அதன்பின் அவளை வேறெங்கும் பார்க்கவில்லை.

அதன்பின் இரைச்சல் பாறை அருவி அருகேயே இருந்து விட்டேன். பெரிய மானிலிருந்து சிறிய பூச்சிவரை என் இரைப் பட்டியல் பெரிதாய் இருந்தது. அவ்வப்போது வழி தவறி மாட்டும் வீட்டு நாய்களும், கால்நடைகளும் இதில் அடக்கம். மரத்தில் நன்றாய் ஏறத் தெரியுமாதலால் இரையை அலட்சியமாய் தூக்கிச் சென்று மரத்தில் மேல் வைத்து உண்ணுவதுண்டு. இது வேறு வேட்டையாடிகளிடம் இருந்து என் இரையைப் பாதுகாக்க உதவும். எங்களில் மரத்தில் எடுத்துச் சென்று இரையை உண்ணும் பழக்கம் ஆண்களிடம்தான் அதிகம்.

ஒரு 12 வருடங்கள் நன்றாய்க் கடந்தது. ஒருநாள் கரடி ஒன்றுடன் நடந்த மோதலில் பின்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதான் என் வாழ்க்கையை மாற்றிய தருணம். அக்காயம் அடுத்த ஒரு வருடத்தில் என்னை வேகமாய் செயல்பட முடியாது முடக்கிப்போட்டது. அதேக்காலை ஒற்றை யானையின் உதை மேலும் சேதப் படுத்தியது. வயதும் 14ஐ நெருங்கக் கண் பார்வையும் சற்று மங்க ஆரம்பித்தது. இதனால் வேட்டையாடுவதில் அடிக்கடித் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. பசி ஒரு பக்கம், நொண்டிக் கால் ஒரு பக்கம், பார்வைக் கோளாறு ஒரு பக்கம் என என் வாழ்க்கை சிரமமானது.

இந்நிலையில் பாலாஜி கோவிலருகே பனிக்கால மாலைப் பொழுதில் ஏதோ மிருகம் ஒன்று நிற்பதாக நினைத்துக் குனிந்து நின்று கீழே எதையோ பொறுக்கிக் கொண்டிருந்த வயதான பெண்ணைத் தாக்கினேன். தாக்கியபின்தான் தெரிந்தது அது பெண் என்று! தாக்கிய வேகத்தில் கீழே பாறையில் முட்டி அவள் இறந்து விட்டிருக்க வேண்டும். பட்டெனப் பதுங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. பசி வேறு என்னை வாட்டியது. உடன் பாய்ந்து, காலைக் கவ்வி, அருகே உள்ள புதருக்கு இழுத்துச் சென்று தின்ன ஆரம்பித்தேன். திடீரெனப் பாதியை மட்டும் தின்றுவிட்டு, பயத்தில் சென்று விட்டேன். ஓர் இரண்டு நாள் கழித்து மீண்டும் அவ்விடம் நோக்கிச் சென்றேன். அன்று (என்னால்!) அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாய் இரவில் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வதும் நாய்கள் ஆடுகளை வேட்டையாடுவதுமாய் காலம் கழித்தேன். இதில் அதிகச் சக்தி செலவழிக்க வேண்டியதில்லை. ஓட வேண்டியதில்லை. அதிகத் தூரம் ஓடவும் என்னால் இப்போது இயலாது. என் உடல் நிலைக்கு அவைதான் எளிதான உணவு என்பதை என் மூளை உணர்த்தி இருந்தது. பதுங்கிப் பாய்ந்தால் போதும். உணவுத் தயார். என் பாதுகாப்புக்காக அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொள்வேன். இன்றும் அதற்காகத்தான் போனேன். இரண்டு மணி நேரத் தேடலில் தோல்விதான் மிச்சம். பசியுடன் அவ்விருளில் வந்து கொண்டிருந்தால் எதிரே ஒரு மனிதன்! இரண்டாவது மனித வேட்டை! இது விபத்து அல்ல. இப்போது நான் ஆட்கொல்லி!

ஒரு வாரம் பயத்தில் காட்டை விட்டு வெளியே வராது கிடைத்ததை உண்டு ஓட்டி விட்டேன். இப்போதும் நான் கால்நடைகளுக்காகவும் நாய்களுக்காகவும்தான் வால்பாறை நகருக்குச் செல்கிறேன் (நம்பவும்). இதற்காகவே நள்ளிரவு தாண்டித்தான் காட்டை விட்டு வெளியே வந்தேன். மனிதர்கள் இரவு இரண்டு மணிக்கு மேல் ஆழ்ந்து உறங்குவதால் அந்நேரத்தில் நகருக்குள் செல்வதற்குப் பழகிவிட்டேன். சுற்றுலாக் காலமில்லையாதலால் பெரும்பாலான இடங்கள் ஆட்களின்றித்தான் இருந்தது. வீட்டு மதில் தாண்டித் தேடியும் சாலையில் தேடியும் அலைகிறேன். எதுவும் சிக்கவில்லை.

தூரத்தில் நாயின் குரைக்கும் ஒலி! அவசர அவசரமாய் அங்கே நொண்டத் தொடங்குகிறேன். திடீரென என்மேல் கல் ஒன்று விழ, ஒரு துள்ளுத் துள்ளி கல் வந்த திசை பார்த்தால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர்! மூன்றாவது கொலையும் அரங்கேறியது. என் மூளை எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டு, கணித மாதிரி ஏதாவது தயார் செய்ய முடியுமா என்று பார்த்தது. ஆனால் தரவுகளின் எண்ணிக்கைக் குறைவால் தடுமாறிக் கொண்டிருந்தது. இம்முறையும் அதே பயத்தில் முடங்கி விட்டேன். ‘இனி வேண்டாம்!’ என உள்ளுணர்வு கூறியது.

பத்துநாட்கள் கழித்து ஓர் இரவில் நகரத்திற்குச் செல்லாது ஒதுக்குப் புறமாய் இருக்கும் எஸ்டேட் பக்கம் சென்றேன். அங்கு இருந்த குடியிருப்புப் பகுதி வழியே தேடிச்சென்று கொண்டிருந்தேன். இதோ ஒரு நாய்! பதுங்கிப் பதுங்கி நான்! வீட்டில் திடீரென வெளிச்சம். நான் பதுங்கி இருக்கும் இடம் ஒரு வீட்டின் கதவின் முன். வெளியே வருவதற்காக உள்ளே இருப்பவர் யாரோ லைட்டைப் போட்டிருக்கிறார்கள். யோசிக்கும் முன்னே கதவு உள் திறந்து ஒரு வயதான பெரியவர் வெளியே வந்து, மிக அருகே என்னைப் பார்த்த அதிர்ச்சியில் தடுமாறி என் மீதே விழப்போக அதைத் தவிர்த்து அழகாய் அவரைக் கவ்வினேன் (என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை!).

ஜயோ! அந்தச் சப்தத்தில்தான் வால்பாறை அல்ல தமிழகமே விடிந்தது. ‘நாலாவதாய் 62 வயது ஆண் கொல்லப்பட்டார்’ அந்த ஐயோ இப்படித்தான் ஊடகங்களில் மாற்றம் பெற்றது.

‘இதுவரை நாலு பேரைக் கொன்னுருக்கு! ஒரு மாசம் போயிடுச்சி, என்ன பண்றீங்க?’ மந்திரி.

‘உயிரோடு பிடிக்கச் செய்த முயற்சி எல்லாம் தோல்வி அடைஞ்சிடுச்சி சார். சட்டப்படி இப்போ அதைச் சுட்டுக் கொல்லலாம் சார்’ வனத்துறை உயர் அதிகாரி. ‘அதை செய்யுங்க! இன்னோருத்தரைத் தாக்கும் முன்னே பண்ணிடுங்க’ போனைத் துண்டித்தார் அமைச்சர்.

உயரதிகாரி போனை டேபிளின் மேல் வைத்துவிட்டு சற்றே கைகளை உயர்த்தி கண்களை மூடி, பின் பழைய நிலைக்கு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் உதவியாளர் இவர் சொல்வதைக் குறிப்பெடுத்து, பின் டைப் செய்து எடுத்து வந்தார். அதைப் படித்துப் பார்த்து சில மாற்றங்களைக் கூற மீண்டும் மாற்றங்களைச் சேர்த்துப் புதிதாய் டைப் செய்து கொண்டு வர, அதில் பச்சை நிறத்தில் ஒரு கையெழுத்து ஒரு சிகப்புக் கொலைக்காக அவ்வதிகாரியால் இடப்பட்டது.

பொள்ளாச்சியில், ஒரு வனத்துறை அலுவலகத்தில், அந்த இயந்திரம் நடக்க இருக்கும் கொலையில் தனக்கும் பங்கு உண்டு என்பதை அறியாமல் அந்தக் காகிதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே தள்ளியது. வெளியில் வந்த காகிதத்தை அவசரமாய் எடுத்துத் தன் உயர் அதிகாரியிடம் கொடுத்தார் அப்பணியாளர்.

அக்காகிதத்தில் ஓர் ஆட்கொல்லியை வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 11(A) அடிப்படையில் கொல்லும் ஆணை இருந்தது. வனத்துறை அலுவலகமே பரபரப்பானது. அடுத்த இரண்டு நாட்களில் சுடுவதில் வல்ல இருவர் வேறு மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை, கால்நடை மருத்துவருடன் கூடிய பெரும் கூட்டம் ஒன்று வால்பாறை-அதிரப்பள்ளி ரோட்டில் போய் இறங்கியது.

அங்கிருந்த மற்றொரு வனத்துறைப் பிரிவினர் வந்தவர்களை வரவேற்று அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது இந்நிகழ்விற்காகத் தற்காலிகமாய் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. சிலர் கையில் மடிக்கணணிகளும் டிரோனும் இருந்தன. அவர்கள் கடந்த ஒரு மாதமாய் அந்த மனித வேட்டையாடியைக் கண்காணித்து வருகிறார்கள். அது மக்கள் இருக்கும் பகுதிகளில் வருவதும், வேட்டையாடுவதும், பின் எஸ்டேட் பக்கம் சென்று காட்டில் பதுங்குவதுமாய் இருப்பதாய் டிரோன்கள் மூலமாயும், கேமராப் பொறிகள் மூலமாயும், பார்த்த மக்கள் மூலமாயும் சேகரித்தச் செய்திகள் உறுதிப்படுத்தின.

ஏற்கெனவே வனத்துறையினர் ஆட்கொல்லியைக் கூண்டு வைத்துப் பிடிக்க இரண்டு இடங்களைத் தேர்வு செய்து அவ்விடத்தில் கூண்டு வைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அருகே மரத்தின் மேல் பரண் (மரத்தின் மேல் வேட்டையாடுபவர்களுக்காக அமைக்கப்படும் சிறிய மேடை போன்ற ஒன்று) அமைத்தும் வைத்தனர். இதற்காகச் சத்தியமங்கலத்திலிருந்து இரண்டு இரும்புக்கூண்டுகள் வால்பாறை வனப்பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன.

ஆட்கொல்லியின் வழித்தடத்தில் கூண்டுகள் வைக்கப்பட்டுக் கூண்டுகளில் ஒன்றில் ஆடு, மற்றொன்றில் நாய் கட்டப்பட்டன. மிக அறிவாய் அந்த ஆட்கொல்லி கூண்டிற்கு அருகில் வருவதோடு நிறுத்திக்கொள்கிறது. அதேபோல் கால்நடை மருத்துவர்களால் மயக்க மருந்துச் செலுத்தியும் அதைப் பிடிக்க இயலவில்லை. அவர்களுக்கு அந்த இடம் ஏற்ற மாதிரி இல்லையாம். இதையெல்லாம் கணக்கில் கொண்டு, சில முடிவுகள் உயரதிகாரிகளால் அடுத்த சில மணி நேரங்களில் எடுக்கப்பட்டு, அவ்விடம் செயலுக்குத் தயாரானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் நான்கு பேர்கள் (ஒரு சுடுபவர், இரண்டு உதவியாளர்கள், ஒரு வழிகாட்டி) கொண்ட இரு குழுக்கள் தகுந்த ஆயுதங்களுடன் களத்தில் இறங்கின. சிறிது தூரம் சென்றபின் குழுக்கள் பிரிந்து ஏற்கெனவே வெவ்வேறு இடங்களில் இரண்டு மரங்களின் மீது கட்டப்பட்டிருந்த பரண்களை வழிகாட்டியின் உதவியுடன் அடைந்தன.

ஒரு மணி நேரத்தில் இரண்டு பரண்களிலும் ஆட்கொல்லியின் வருகையை ஆறு ஜோடிப் பைனாக்குலர்கள் தேடத் துவங்கின. அதோடு 19 கிராம் எடையுடைய 0.375 Calibre மாக்னம் குண்டுகள் டெலஸ்கோப் பொருத்தப்பட்ட துப்பாக்கியில் ஏற்றப்பட்டுக் காத்திருந்தன. நேரம் கடந்தது. சரியாய் 5.35 மணிக்குக் கிழக்கே அமைந்த பரணில் ஒருவர் பைனாக்குலரில் தூரத்தில் ஓர் அசைவைக் கண்டுபிடித்து, கையால் சமிக்ஞை தர அக்குழு தயாரானது. அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆட்கொல்லி நொண்டிக் கொண்டே வெளியே வந்தது. ஆனால், தூரம் அதிகம். சுடுபவர் தயாரானார். அனைவரும் அவர்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு அது வரவேண்டும் என நினைத்துக் கொண்டனர்.

அனைவரும் வியர்க்க ஆரம்பித்திருந்தனர். ஆனால் அது அங்கே இருந்து விலகி மறைந்தது. அனைவரும் அதே பரபரப்பில் இருந்தனர். அரைமணி நேரம் கடந்தது. திடீரென அவர்களின் எதிர்பார்த்த தூரத்தின் அருகே இருந்த புதரின் வழியே ஒரு காலை நொண்டிக் கொண்டு மேலே ஏறியது அது. அது உண்மையில் அதுதான் என உறுதிப் படுத்த இந்த நொண்டிக்கால் போதுமானதாய் இருந்தது. சுடுபவர் தயாராகி விட்டார். இது எதுவும் அறியாது அது இன்னமும் அங்கேயே! அப்படியே! சுடுவதற்கு வசதியான அந்த இடத்திற்கு அது வர, அந்தத் துப்பாக்கியின் குதிரையை அவர் அழுத்த பட்! ஆட்கொல்லி என்ற புதுப் பெயருடன் சரிந்தேன்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *