Skip to content
Home » காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

சயாத்ரி என மகாராஷ்ட்ராவிலும், சயாபர்வதம் (பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு மலை எனப் பொருள்) எனக் கேரளாவிலும், நீலகிரி எனத் தமிழ்நாட்டிலும் அழைக்கப்பட்ட என்னை ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ன்னு மனதில் எந்த ஒரு கிளர்ச்சியும் (ஒரு மொழிசார்ந்த அல்லது கலாசாரம் சார்ந்த அர்த்தத்தில் தாங்க!) தராத ஒரு பொதுவான பெயருக்குள் அடைத்து வைத்தவர்கள் வெள்ளைக்காரர்கள். அப்புறமென்ன அதுதான் எனக்குப் பேருன்னு ஆச்சு. இல்லையென்றால் ஒரு பொதுப் பெயருக்கு நீங்கள் நிறைய இழப்புகளை உறுதியாய் சந்தித்திருப்பீர்கள். குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில மக்கள் ஒரு பொதுப் பெயருக்கு அவ்வளவு சுலபமாய் ஒத்துப்போயிருப்பாங்களா?

நான் பார்க்க இளமையாக இருந்தாலும் புவியியல் காலத்தின் அடிப்படையில், இமயமலையைவிட வயதானவள். பெண்ணான்னு ஆச்சர்யப்பட வேண்டாம். காளிதாசன் ரகுவம்சத்தில் என்னைப் பெண்ணாகத்தான் பார்த்தான். அகத்திய மலையைத் தலையாகவும், ஆனைமலையையும் நீலகிரி மலையையும் இரு மார்புகளாகவும், கனராவையும் கோவாவினையம் இடுப்பாயும், அதன் பின் சார்ந்த வட மலைப்பகுதிகளைக் கால்களாகவும் கொண்ட ஒரு பெண். நல்ல பச்சை நிற (பசுமை) ஆடைகளை அணிந்திருப்பதுபோல் நான் இருப்பதாய் என்னை அவன் வர்ணித்தாலும் வர்ணித்தான், இந்த நொடிவரை எல்லோராலும் ஏதோ ஒரு வகையில், எதற்காகவோ சிதைக்கப்பட்டு வருகிறேன்.

சரி சரி, என் தொடக்கத்தைப் பார்ப்போம். ஆரம்பத்தில் பூமியில் பாந்தலாசா என்ற ஒரே கடலும், பான்ஜியா என்ற ஒரே ஒரு நிலப்பரப்பும்தான் இருந்தன. அந்த நிலப்பரப்பு பின்னாட்களில் லாராசியா, கோண்ட்வானா என இரு நிலப்பரப்புகளாய் பிரிந்தது. பான்ஜியா என்றால் ‘எல்லா நிலங்களும்’ என்று பொருள். லாராசியா (வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேர்ந்தது) சுமார் 200 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பான்ஜியாவிலிருந்து பிரிந்தது.

பான்ஜியாவின் மீதமுள்ள பகுதி கோண்ட்வானா ஆனது. கோண்ட்வானா இப்போதுள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்களால் ஆனது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆஸ்திரியப் புவியியலாளர் எட்வர்ட் சூ(ய)ஸ்தான் கோண்ட்வானா என்று இதற்குப் பெயரிட்டார். ‘கோண்ட்ஸ்’ என்பது இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாழும் ஒரு பழங்குடியின் பெயர்.

இந்தியா ஒருகாலத்தில் கோண்ட்வானாவின் ஒரு பகுதியாக இருந்தது என்பதற்கான முதல் ஆதாரத்தை உலகிற்கு வழங்கியது இந்தியாவில் கிடைத்த புதைபடிவத் தாவரமான குளோசாப்டரிஸ் (Glossopteris). இத்தாவரம் இந்தியா, தென்அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா முழுவதும் புதைபடிவமாய் கிடைத்தது. அதுவே மேற்சொன்ன கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலமாய் ஒரு காலத்தில் இணைந்து இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து உருவாகக் காரணம்.

பூமியின்கீழ் அதாவது மேற்பரப்பில் இருந்து 100 முதல் 350 கிமீ ஆழத்தில் திரவப் பண்புகளைக்கொண்ட அஸ்தெனோஸ்பியர் (அறிவியல் பெயர்ன்னா அப்படித்தான் இருக்கும்!) இருக்கும். அதற்குமேல் திடமான லித்தோஸ்பியர் உள்ளது. ஒரு கற்பனைக்காக இந்த லித்தோஸ்பியர் அஸ்தெனோஸ்பியரில் ‘மிதக்கிறது’ எனச் சொல்லலாம். அதோடு இந்த லித்தோஸ்பியர் ஒரு விரிசல் விட்ட முட்டையைப்போல் ஏழு பெரிய மற்றும் பல சிறிய தனித்துவமான தட்டுகளைக் கொண்டது. இத்தட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிலையான இயக்கத்தில் உள்ளன. அதற்குக் காரணம் பூமியின் கீழ் அடுக்குகளில் உருவாகும் அதீத வெப்பத்தினால் உருவாகும் சக்தி அந்தத் தட்டுகளின் இயக்க விசைகளுக்குக் காரணமாய் இருக்கிறது. அதுவே பூமியின் மேலோட்டத்தில் உள்ள பெரும்பாலான நிகழ்வுகளுக்கும் காரணமாய் இருக்கிறது.

இதனால் சில இடங்களில் இத்தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதற்கும், ஒரு தட்டு மற்ற தட்டை அழுத்தி மேல் உயருவதற்கும், ஒரு தட்டு மற்றொன்றைக் கீழே வளைப்பதற்கும் அது காரணமாய் ஆகின்றது. பெரும்பாலும் இந்தத் தட்டுகளின் உட்புறம் நிலையானதாகவும் விளிம்புகள் தீவிரச் சிதைவிற்கு உட்படக்கூடய தளங்களாயும் இருக்கின்றன. இந்த எல்லாச் செயல்களையும் ‘பிளேட் டெக்டோனிக்ஸ்’ என்று சொல்லிடுவாங்க.

சுமார் 300 – 260 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அந்த இடைப்பட்ட காலங்களில் கோண்ட்வானாவின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருந்தது. உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலல்ல அது. அதனால் அந்தக் காலத்தில் விலங்குகள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பிற்பகுதியில் அதாவது 225 மில்லியன் வருடங்களுக்குப் பின்தான் பனி உருகி, உயிர்வாழச் சூழல் உருவாகி விலங்குகள் கோண்ட்வானாவை ஆக்ரமிக்கத் தொடங்கின.

இந்நிலையில் கோண்ட்வானா உடைய ஆரம்பித்தது. அண்டார்டிகாவை அது முதலில் தனியே பிரித்துவிட்டது. பின் மேற்கில் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்காவையும் அதன் கிழக்கில் ஆஸ்திரேலியாவையும் பிரித்துவிட்டது. மத்தியப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தது. சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன் மடகாஸ்கர் வடகிழக்குத் திசையில் இடம்பெயர அதிலிருந்து இந்தியத் தட்டு தனியாய் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதி தற்போதைய இந்தியாவாக மாறுவதற்கு முன்பு ஒரு தற்காலிகத் தீவாக இருந்தது.

தொடக்கத்தில் இந்தியாவின் இந்த முக்கோணப் பகுதி (தீவு) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு ஐந்து சென்டி மீட்டர் என்ற வேகத்தில் மேல் நோக்கி நகர ஆரம்பித்தது. சரியாக 30 டிகிரி தெற்கு அட்சரேகையில், இன்றைய ரீயூனியன் தீவுகளின் பகுதியில் பூமிக்குக் கீழேயுள்ள ஆழமான எரிமலை ஹாட்ஸ்பாட் மீது இந்தியத் தட்டு கடந்து செல்லும்பொழுது அடியில் உள்ள அதீத வெப்பம் பாசால்டிக் மாக்மாவை உருவாக்கி லித்தோஸ்பியராக உயர்ந்தது. இது இந்தியத் தட்டைச் சற்றே மேற்கே உயர்த்தி கிழக்குத் திசையில் சாய்த்தது. அப்படித்தான் சயாத்ரியாக நான் உருவாகினேன்.

இந்தச் சாய்வின் காரணமாக என்னில் உருவாகும் பெரும்பாலான முக்கிய ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாயும்படி ஆகிவிட்டது (கோதாவரி, காவேரி, கிருஷ்ணா, தாமிரபரணி, துங்கபத்ரா). இருப்பினும் ஒரு சில ஆறுகள் (பெரியாறு, பரத்புழா, பம்பா, நேத்ராவதி, மான்டோவி, சுவாரி) மேற்கில் சென்று கடலில் கலப்பதையும் காணலாம். மேற்குப் பகுதி செங்குத்தான சரிவுகளையும் கிழக்குப் பகுதி பீடபூமிகளைக் கொண்டதாகவும் மாறிவிட்டது. அந்த அதீத வெப்பமும் என்னுடைய வேகத்தை வருடத்திற்கு ஐந்து சென்டி மீட்டரில் இருந்து 20 சென்டிமீட்டருக்கு ரீயூனியன் தீவுகளின் பகுதியில் இருந்து மாற்றியதென்றும் சொல்லலாம். இதற்கு இந்தியத்தட்டு மெலிதாய் இருந்ததும் ஒரு காரணமாய்ச் சொல்லப்படுவதுண்டு.

இப்படி உருவான நான் இன்று 6 மாநிலங்கள், 44 மாவட்டங்கள் மற்றும் 142 தாலுகாக்களில் பரந்து விரிந்து இருக்கிறேன். இருந்து என்ன பயன்? ஒவ்வொரு நாளும் ஒரு புது சீரழிவுடன்தான் கண் விழிக்கிறேன். கண் விழித்ததும் தினமும் என் சீரழிவையும் என்னில் இருந்து அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளையும்தான் பார்க்கிறேன். இந்த லட்சணத்தில் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் 15% என்னிடம்தான் உள்ளது. அதுவும் 20 தேசியப் பூங்காக்கள் மற்றும் 68 சரணாலயங்கள் வடிவில்.

அதோடு என்னில் இரண்டு உயிர்க்கோளங்களும் அடங்கும் (நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (11,040 கிமீ²) மற்றும் அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் (3,500 கிமீ²). உலகின் மிக முக்கியமான எட்டுப் பல்லுயிர் மையங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவளும் நான்தான். தோராயமாக 508 சிற்றினங்களை பறவைகளிலும், 290 சிற்றினங்களை மீனினத்திலும், 137 சிற்றினங்களை பாலூட்டிகளிலும், 203 சிற்றினங்களை ஊர்வனவைகளிலும், 181 சிற்றினங்களை இருவாழ்விகளிலும் நான் என்னிடத்தில் பாதுகாத்து வருகிறேன். மேற்சொன்னவற்றில் 16 பறவைப் சிற்றினங்களும், 16 பாலூட்டிச் சிற்றினங்களும், 124 ஊர்வனச் சிற்றினங்களும், 159 இருவாழ்வினச் சிற்றினங்களும், 189 மீனினச் சிற்றினங்களும் உலகிலேயே என்னிடத்தில் மட்டுமே இருக்கின்றன.

நான்தான் இந்த ஆறு மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கும் ஒரே வளம். இந்தியாவின் 80% நீர்சக்தியை நான்தான் தருகிறேன். நான்தான் இம்மாநிலப் பருவகாலங்களைத் தீர்மானிக்கிறேன். ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதிகளாய் இருந்ததுபோய் இன்று அனைத்து ஆறுகளும் மழைக்காலத்தில் மட்டும் நீருடனும், மற்ற காலங்களில் வறண்டும் என்னிடத்தில் கிடக்கின்றன. மேலும் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் அது மிகவும் மாசுபட்டுள்ளது. சுத்தமாக இல்லை. என்னைக் காயப்படுத்தி இன்றும் மாறா வடுக்களாய் சிறியதும் பெரியதுமான 50 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதோடு மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளும் என்னிடத்தே உண்டு.

இன்றைய நிலையில் நான் சுமார் 1,40,000 – 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் 1,600 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்த ஒரு பிரமாண்டத் தொடர். தொடர் எனக் கூறினாலும் பாலக்காடு, தாலகாடு, போர்காடு, அப்பாகாடு, சோர்லாகாடு, மால்சோஜ் காடு, நானேகாடு, தாமினிகாடு, அம்போலிகாடு, கும்பர்லிகாடு போன்ற இடங்களில் தொடர்பு சற்றுத் துண்டிக்கப்பட்டுதான் இருக்கிறேன் (நிலச்சரிவு, விண்வெளிக் கற்கள் தாக்கம் போன்றவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது).

என்னில் சுரங்க நடவடிக்கைகள் காலனித்துவக் காலத்தில் இருந்துதான் தொடங்கின. ஆங்கிலேயர்கள் இரும்புத் தாது, மாங்கனீசு போன்ற கனிமங்களைப் பிரித்தெடுக்கச் சுரங்கங்களை நிறுவினர். அதன்பின் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடைந்தது. பிராந்தியத்தின் வளமான கனிம வளங்களைச் சுரண்டத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆரம்பித்தன. இவை பெரும்பாலும் அரசியல்வாதிகளின் நேரடி முயற்சியிலோ, மறைமுக முயற்சியிலேதான் இயங்குகின்றன. தற்போது, சுரங்க நடவடிக்கைகள் முக்கியமாகக் கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் குவிந்துள்ளன. பிரித்தெடுக்கப்படும் முதன்மைத் தாதுக்களில் இரும்புத் தாது, பாக்சைட், மாங்கேன் ஆகியவை அடங்கும்.

என்னுடைய தற்போதைய மோசமான நிலையைப் பார்த்து இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (என்னமோ அவர்களுக்குத் தெரியாமல் திடீர்னு பாகிஸ்தானோ அல்லது தீவிரவாதிகளோ ரெண்டு நாளைக்கு முன்னாள் சீர்கெடுத்த மாதிரி!) மார்ச் 2010இல் ஒரு நிபுணர் குழுவை (காட்கில் கமிஷன்) இந்த மலைத்தொடர்களைப் பாதுகாப்பதற்கான ஓர் உத்தியைக் கண்டறிய அமைத்தது.

அதில் மாதவ் காட்கில் (இந்தியாவின் தலைசிறந்த சூழலியல் அறிஞர்களில் ஒருவர்) தலைமையில் B.J.கிருஷ்ணன், K.N.கணேசய்யா, V.S.விஜயன், ரீணி போர்ஜஸ், ராமன் சுகுமார், லிசிக் நோவன்ஹா, வித்யா நாயக் போன்ற மற்ற சூழல் விஞ்ஞானிகளுடன் தேசியப் பல்லுயிரிய ஆணையம், கேரளப் பல்லுயிர் வாரியம், மற்றும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த இயக்குநர்கள், தலைவர்கள் இருந்தார்கள். இந்த ஆணையம் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (WGEEP) என அழைக்கப்படுகிறது. இந்த ஆணையம் ஆகஸ்ட் 31 அன்று இந்திய அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் இருந்தவர்கள் அனைவரும் சூழலியல் வல்லுநர்களாய் இருந்ததால் அந்த அறிக்கை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குச் சாதகமாக இருப்பதாய் எளிதில் முத்திரை குத்தப்பட்டது.

அவர்களின் அறிக்கை மாநில, தேசிய வளர்ச்சிக்காகச் சுற்றுச்சூழலைச் சமரசம் செய்யவில்லை என்றே கூறலாம். அக்குழு மொத்த மேற்கு மலைத்தொடரையும் ஒரு சுற்றுச்சூழல் உணர்வுப் பகுதி (ESA) என்றும், மலையில் உள்ள 142 தாலுக்காக்களைச் சுற்றுச்சூழல் உணர்வு மண்டலங்கள் (ESZ) 1, 2 மற்றும் 3 எனவும் வகைப்படுத்தியது.

மண்டலம் 1 மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வளர்ச்சிகள் (சுரங்கம், அனல் மின்நிலையங்கள் போன்றவை) முற்றிலுமாய் தடுக்கப்படும். அதுவே ESZ-3க்கு போகும்பொழுது அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்புகள் இருப்பதுபோல் அமைத்திருந்தார்கள். அந்த மண்டலம் 1இல்தான் அப்போதைய கேரளாவின் அதிரப்பல்லி மற்றும் கர்நாடகாவின் குண்டியா வளர்ச்சித் திட்டங்கள் இரண்டும் (இந்த இரு திட்டங்களும் என்னிடம் உள்ள நல்ல மழைக் காடுகளை உள்ளடக்கிய இடங்களில் ஆரம்பிக்கப்பட, அரசிடம் பரிசீலனையில் இருந்தன. உறுதியாய் அந்த மழைக் காடுகளைச் சீர்கெடுத்துத்தான் இத்திட்டங்கள் உருவாக முடியும்) வந்ததால், அதற்கு அனுமதி தர இயலாத நிலை.

மேலும், மேலிருந்து கீழான அணுகுமுறையைவிடக் கீழிருந்து மேல் அணுகுமுறையை (அதிகாரம் கிராமச் சபைகளில் இருந்து வனத்துறை நோக்கி) அந்த ஆணையம் பரிந்துரைத்தது அதோடு உள்ளூர் அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கேட்டது. மேலும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986இன் பிரிவு 3இன் கீழ் அதிகாரங்களைக் கொண்ட, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ ஆணையமாக, மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் ஆணையத்தை (WGEA) காட்கில் ஆணையம் பரிந்துரைத்தது.

ஆனால், இந்தப் பரிந்துரைகள் மாநிலத்தின் எரிசக்தி மற்றும் வளர்ச்சிகளைத் தடுக்கிறது என்றும், WGEA என்ற புதிய அமைப்பு அரசியலமைப்பிற்கு எதிரான ஒன்றும் எனவும் விமர்சிக்கப்பட்டது. அதிசயமாய் காட்கில் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புகளுக்கு அதில் தீர்வில்லை எனவும் சொல்லப்பட்டது. உண்மையில், இதன் பின்னணியில் மணல் அகழ்வு மற்றும் குவாரி மாஃபியாக்கள் இந்த அறிக்கையைத் தவறாய் மக்களிடம் கொண்டுசேர்த்து அச்சத்தை உருவாக்கி இருந்தது. அதற்கேற்ப சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்கில் அறிக்கையை எட்டு மாதங்கள் பாதுகாப்பாகத் தங்களிடம் வைத்திருந்தது.

காட்கில் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்த்தபடி அது பொது விவாதத்திற்குக் கிடைக்கவில்லை. மக்கள் நகலைக் கேட்டனர். ஆனால் அதை வழங்க முடியாது என்று அமைச்சகம் கூறியது. ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டபோதும் அது வழங்கப்படவில்லை. பின் இந்த விவகாரம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும், அமைச்சகம் அந்த அறிக்கையை வெளியிட்டது. 522 பக்க அறிக்கையை, அதுவும் ஆங்கிலத்தில். யார் படிப்பது? அதற்குள் சுற்றுச்சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கிலின் உருவப் பொம்மையை மக்கள் தெருக்களில் எரிக்கும் அளவிற்கு மாஃபியாக்களின் கை ஓங்கியது. இதன் பின்னணியில் எந்த அரசியல் பின்னணியும் இல்லைன்னு வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியரும் சுவடி பார்த்துச் சொன்னார்.

இது நடந்தவுடன் காட்கில் அறிக்கையை ஆய்வு செய்ய இந்திய வான் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்று அரசால் போடப்பட்டது. இந்தக் குழு பெரும்பாலும் HLWG என்று அழைக்கப்படுகிறது – இது கஸ்தூரிரங்கன் தலைமையிலான 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவைக் (HLWG) குறிக்கிறது. அவர் அறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மொத்தப் பரப்பிற்குப் பதிலாக, மொத்தப் பரப்பளவில் 37% (அதாவது 60,000 சதுர கி.மீ.) மட்டுமே ESA-வின் கீழ் கொண்டுவந்து அதை ESAஇல் சேர்த்து அங்கு சுரங்கம், குவாரி மற்றும் மணல் அகழ்விற்கான முழுமையான தடை விதிக்கக் கேட்டுக் கொண்டார். கஸ்தூரி ரங்கன் என்னைக் கலாச்சார நிலப்பரப்பு மற்றும் இயற்கை நிலப்பரப்பு என இரண்டாய் பிரித்து அதில் ESAவைப் பிரித்தார். அந்த ESAஇல் உள்ள தற்போதைய சுரங்கப் பகுதிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அல்லது சுரங்கக் குத்தகை காலாவதியாகும்பொழுது, எது முந்தையதோ அது படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது.

கஸ்தூரிரங்கன் அறிக்கையும் மக்களால் எதிர்க்கப்பட்டு அடுத்ததாய் உம்மன் வி உம்மன் கமிட்டி அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியால் அமைக்கப்பட்டது. அது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுச்சூழல் உடையக்கூடிய நிலத்தின் (EFL) உட்பிரிவுகளில் மாற்றங்களைச் செய்ய அரசுக்குப் பரிந்துரைத்தது. EFL பகுதிகளை நிர்ணயிப்பதில் கடுமையான குறைபாடுகள் நடந்ததாக உம்மன் கமிட்டி அறிக்கை அளித்தது. குழு EFLஐ தீர்மானிக்க ஒரு செயற்கைக்கோள் கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டது. அதில் தோட்டங்களும் சேர்க்கப்பட்டன.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையின்படி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தவும் பரிந்துரைத்தது. இந்தக் குழு விவசாயிகளுக்கு ஆதரவான பல பரிந்துரைகளைச் செய்தது. மாநில அளவிலான குழு, மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கைகள் வன நிலம் மற்றும் மக்கள் குடியிருப்புகளை வரையறுக்க ESA என அடையாளம் காணப்பட்ட இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. கலப்பின வகைப் பால் கறக்கும் விலங்குகளை வளர்ப்பதில் இருந்து விவசாயிகள் நிறுத்தப்படக்கூடாது என்றும், இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான அவகாசம் ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. வனப்பகுதிகளில் விலங்குகள் வழிதவறிச் செல்வதைத் தடுக்க வேலி அமைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

அட! அனேகமாக நான் சிதைக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்திய அரசியலும் தெரியவில்லை, இந்திய அரசியல்வாதிகளின் சக்தியையும் அறியவில்லை என்று அர்த்தம். ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை, அதிகபட்சமாய் சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் மீதான இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக, NGT தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, அமைச்சகத்திற்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

சமீபத்திய ஆண்டுகளில், என்னுடைய கேரளாப்பகுதியில் நிலச்சரிவுகள் ஒரு பொதுவான பருவமழைப் பேரிடராக மாறியுள்ளன. 2018-21க்கு இடைப்பட்ட வருடங்களில் மட்டும் உண்டான பல நிலச்சரிவுகளால் (4728) குறைந்தது நூறு பேர்களாவது கொல்லப்பட்டு இருப்பார்கள். இந்த நிலச்சரிவுகளுக்குத் தூண்டுதல் 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் 266 மி.மீ. மழையால் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. நான் செங்குத்தான சரிவுகளைக் கொண்டிருப்பதால் நிலச்சரிவுகளுக்கு வாய்ப்பு அளிப்பதாக உள்ளேன்.

ஒர் இடத்தில் திடீரெனப் பெய்யும் அதிக மழை என் சரிவுகளை மேலும் பலவீனப்படுத்துகிறது. அதோடு சேர்ந்து நிலப் பயன்பாட்டு மாற்றங்கள். விவசாய நடைமுறைகள், காடழிப்பு மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நிலப்பரப்பை மாற்றி, என்னில் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கின்றன. அட இந்தக் கட்டுமான நடவடிக்கைகள் வேறு. சாலைகள் மற்றும் அணைகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகூட என் சரிவுகளைச் சீர்குலைக்கும் மற்றும் நிலச்சரிவைத் தூண்டும். இந்த நிலச்சரிவுகளுக்குப் பின்தான் மக்களும் அரசும் காட்கில் அறிக்கையின் உண்மையை ஓரளவிற்கு புரிந்துள்ளார்கள்ன்னு நினைக்கிறேன்.

சிறிது காலமாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால், உங்களிடம் கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லனும்னு தோன்றியது. கொஞ்சம் சிதைப்பதை நிறுத்தலாமே? நீங்கள் மட்டுமே ரசித்துக்கொண்டிருக்கும் என்னை உங்கள் குழந்தைகளும், அவர்கள் குழந்தைகளும் ரசிக்கட்டுமே!

(தொடரும்)

பகிர:
nv-author-image

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *