பூமியின் தொடக்கக் காலத்தில் தற்போதுள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து ஒரே கண்டமாக இருந்தது. இது ‘பான்ஜியா’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. உச்ச கண்டமான இந்நிலப்பரப்பு அதன் தோற்றம் தொடங்கி ‘கார்போனிபெரஸ்’ காலம் வரை ஒரே கண்டமாகப் பல மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருந்தது.
இக்கண்டத்தைத் தவிர பூமியின் மற்ற பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தன. இந்நிலையை வல்லுநர்கள் ‘பான்தலாசா’ என அழைத்தனர். இந்த உச்ச கண்டம் சுமார் 225 – 200 மில்லியன் வருடத்திற்கு முன்பு இரண்டாகப் பிளவுபட்டது. அதன் வடபகுதியில் உள்ள கண்டத்திற்கு லாராசியா (Laurasia) எனவும் தென்புறக் கண்டத்திற்கு கோண்ட்வானா லேண்ட் (Gondwana) எனவும் வல்லுநர்கள் பெயரிட்டனர்.
தென்புறக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய அனைத்தும் கோண்ட்வானாவில் அடங்கின. வடபுறக் கண்டங்களான வட அமெரிக்கா, ஐரோப்பா, கிரீன்லேண்ட், ஆசியா, ஸ்கேண்டிநேவியா போன்றவை லாராசியாவில் அடங்கின. இந்த இரு கண்டங்களையும் பிரித்த கடல் ‘டீதீஸ்’ (Tethys) ஆகும்.
இவ்வாறு பிரிந்த இரு கண்டங்களும் காலவோட்டத்தில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து தற்கால அமைப்பை அடைந்தன. இவை பூமித் தட்டுகளின் இயக்கங்களால் நடக்கின்றன என்று கூறுகிறார்கள். பூமியின் மையத்தில் உண்டான கதிரியக்க நடவடிக்கைகள் கீழ்ப்புற ‘மேன்டில்’ பகுதியைச் சமமற்ற முறையில் வெப்பப்படுத்தியதன் விளைவால் ‘மேன்டில்’ பகுதியில் உள்ள பாதி உருகிய பாறை வெப்பமடைந்து பூமியில் ஒரு பெரிய மெதுவான வெப்பப்படுத்தல் நிகழ்வைத் தூண்டியது.
இவ்வாறு வெப்பமடைந்த பாறையின் பக்கவாட்டில் உள்ள கடினமான திடநிலையில் உள்ள லித்தோஸ்பியரின் அடியின் விளிம்பும் பூமியின் மேற்பகுதியும் கீழே இழுக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வே பூமித் தட்டுகளின் இடப் பெயர்ச்சிக்குக் காரணமாகும்.
கண்டங்கள் தானாக நகருவதில்லை. ஆனால் நகரும் லித்தோஸ்பியர் தட்டுடன் பூமியின் மேற்பரப்பும் பயணிக்கின்றது. இதுதான் ‘கண்ட நகர்வு’ எனப்படுகிறது. இதை அறிவதற்கு முதலில் அடிக்கோடிட்டவர் ஆல்ஃபிரட் வெஜினர் எனும் ஜெர்மானியர் ஆவார். ஆனால் கண்ட நகர்வுக்குக் காரணமாக பூமியின் சுழற்சியையும் பூமியின் ஈர்ப்பு விசையையும் இவர் குறிப்பிட்டது பின்னர் நிராகரிக்கப்பட்டது. எனினும் அவரின் கண்ட நகர்வுக் கோட்பாடு ஒத்துக்கொள்ளப்பட்டது.
ஐந்து மாபெரும் இன அழிவுகள்
இன அழிவு என்பது ஒரு சிற்றினம்சார் உயிரிகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால் முற்றிலுமாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். இதில் மாபெரும் இனப் பேரழிவு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பல சிற்றினங்கள் சார்ந்த உயிரிகள் ஒரே காலத்தில் குறிப்பிட்ட காரணத்தால் அழிக்கப்படுவதாகும்.
இன்று நம்முடன் வாழும் உயிரினங்கள் பலவும் புதியதாகத் தோன்றியவை. ஆரம்பத்தில் தோன்றிய 99% மேற்பட்ட உயிரினங்கள் தற்போது இல்லை. இந்த மாபெரும் அழிவு என்பது சமமற்ற விகிதத்தில் நடந்த வெவ்வேறு மாபெரும் பேரழிவுகளைக் குறிப்பதாகும். நமக்குக் கிடைத்த படிவங்களின் மூலம் இந்த நிகழ்வை அறிவியலாளர் 2 அல்லது 5 வகைப்பட்ட குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கிடையிலும் அழிவுகள் நடந்திருப்பதாகக் கணக்கிடுகின்றனர்.
பொதுவாகக் கடல் படிவங்களே அழிவுகளைப் பற்றிப் படிக்க உதவுகின்றன. ஏனெனில் இவை நிலம்சார் உயிர்களைவிட எண்ணிக்கையில் அதிகமாகவும், நீண்ட காலத்தைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இப்படி ஆராய்ந்ததில் பூமியில் மாபெரும் 5 பேரழிவுகள் நிகழ்ந்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அவை ஆர்டோவிஷியன் (Ordovician) முடிவுகாலம், திவோனியன் (Devonian) இறுதிகாலம், பெர்மியனின் (Permian) இறுதிகாலம், திரையாசிக்கின் (Triassic) இறுதிகாலம் மற்றும் கிரட்டேசியசியனின் (Cretaceous) இறுதிகாலம் என்பனவாகும். மேலும் சிறு சிறு இனப்பேரழிவுகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்துகொண்டுதான் இருந்தன.
மாபெரும் இனப் பேரழிவுகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.
ஹலோசின் (Holocene) என்று அழைக்கப்படும் நம்முடைய காலமே மாபெரும் இனப்பேரழிவினைச் சந்தித்த காலம் எனலாம். இது முற்றிலும் மனிதனால் ஏற்பட்டது. இன்னும் 100 வருடங்களில் பூமியில் பாதிக்கும் மேலான உயிரினங்கள் மனிதனால் அழிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. இது கடந்த காலத்தில் நடந்த மாபெரும் இனப்பேரழிவிற்குச் சமமானதாக இருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு சுமார் 75% நிலம்சார் சிற்றினங்கள் மாபெரும் இனப்பேரழிவில் அழிந்தன. அது டைனோசர்களைச் சூழ்ந்து பாலூட்டிகள் மற்றும் பறவைகள் வளர வழிவகுத்த காலமாகும். இது ஒரு மாபெரும் இனப்பேரழிவாக இருப்பினும் இக்காலத்தில் வாழ்ந்த எல்லா இனங்களும் அழிக்கப்படவில்லை. சில இனங்கள் குறைந்த அளவிலும் சில இனங்கள் முற்றிலுமாகவும் வேறு சில பெரிய அளவிலும் அழிக்கப்பட்டன.
சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு திரையாசிக் மற்றும் ஜுராசிக் இரண்டும் இணையும் காலத்தில் 20% நீர்வாழ் குடும்பங்கள் அழிந்திருக்கின்றன. அதே காலக்கட்டத்தில், அதாவது 251 மிஆமு நடந்த இனப்பேரழிவில் 53% கடல்சார் குடும்பங்களும் 84% பேரினங்களும் அதாவது மொத்தத்தில் 96% கடல்சார் உயிரினங்களும் 70% நிலம்சார் விலங்குகளும் அழிந்தன. இந்நிகழ்வு ‘மிகப் பெரிய சாவு’ என அழைக்கப்படுகிறது.
சுமார் 360 மிஆமு திவோனியனும் கார்போனிபெரசும் சேரும் காலத்தில் ஒரு தொடர் அழிவு ஏற்பட்டு 70% உயிரினங்களை அழித்தது. உயிரினங்களின் 70% தொடரழிவு சுமார் 20 மில்லியன் வருடங்களில் நிகழ்ந்தது. 447 மிஆமு ஆர்டோவிசியன் – சைலூரியன் கால இடைவெளியில் இரண்டு அழிவு நிகழ்வுகள் நடந்தன. இவை இரண்டையும் இணைத்து அதை மாபெரும் இனப்பேரழிவு நிகழ்வில் இணைத்துள்ளனர்.
கடைசியில் (அதாவது பூமியின் தோற்ற ஆரம்பத்தில்) மேற்சொன்னது போன்ற தொடர் இனப்பேரழிவு பல நடந்ததாகவும் இதனை மாபெரும் இனப்பேரழிவு காலமாகவும் சித்திரிக்கின்றனர்.
மாபெரும் இனப்பேரழிவு : பரிணாம முக்கியத்துவம்
மாபெரும் இனப்பேரழிவு பூமியில் பரிணாமத்தையும் அதன் வேகத்தையும் உயர்த்திய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓர் இனத்தின் உயர் பண்பைத் திடீரென அழித்து மற்றொரு இனம் தன் உயர் பண்பை வெளிப்படுத்த வழங்கப்படும் ஒரு வாய்ப்பாக இப்பேரழிவைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக, பாலூட்டிகள் டைனோசர் காலத்திலேயே வாழ்ந்திருந்தாலும் டைனோசர்களைத் தன் பண்புகளாலும் வாழும் முறைகளாலும் அவற்றால் கீழ்ப்படுத்த முடியவில்லை. டைனோசர்களே அக்காலப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. டைனோசரின் அழிவு பாலூட்டிகளைத் தங்களின் அறிவுசார் வாழ்முறையின் மூலம் பூமியை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உருவாக்கியது. அதே நேரத்தில் இனப்பேரழிவில் தப்பித்த பல உயிரினங்கள் தங்களை அதிலிருந்து முழுவதுமாய் மீட்க முடியாமல் இருக்கின்றன. இத்தகைய இனங்கள் நீண்டகாலப் பேரழிவுப் பயணத்தை மேற்கொண்ட உயிரினங்களாக உள்ளன. இதனை Dead Clades walking என்று அழைக்கின்றனர்.
மேற்சொன்ன இனப்பேரழிவுகள் புள்ளியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது கிடைத்த உண்மைகள் வியப்பளிப்பதாக உள்ளன. இனப்பேரழிவுகளுக்கு இடையிலான காலம் பெரியதாகக் காணப்பட்டாலும் அழிவு என்பது சராசரிக்கும் குறைவாய்தான் உள்ளது.
இனப்பேரழிவுக்கான காரணங்கள்
மாபெரும் இனப் பேரழிவை முற்றிலுமாக ஆராய்ந்து அதற்கு விடை தரும் வகையிலான கோட்பாடு நம்மிடம் இல்லை. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில இனங்களின் அழிவுகளை மட்டுமே மையப்படுத்தி காரணங்கள் ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வுமுறை தவறான முடிவுக்குத்தான் வழிவகுக்கும். மாபேரழிவிற்கான காரணங்களை, இனங்களை மையப்படுத்தாமல் மாபேரழிவில் அழிந்ததையும், உயிர்ப்பிழைத்ததையும் ஆராய்ந்து முடிவுகளைக் கூறுவதே நம்பகத்தன்மை கொண்ட ஆய்வுமுறையாக இருக்கும்.
இப்படி ஆராய்ந்ததன் விளைவால் ஒரே ஒரு காரணம்தான் மாபேரழிவிற்குக் காரணம் என்று கூறமுடியாமல் பல்வேறு காரணங்களின் கூட்டு விளைவுதான் மாபேரழிவிற்குக் காரணமெனக் கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
சில மாபேரழிவிற்கான காரணங்கள் இவைதான் என்று கூறுவதற்கு நம்பத்தக்க சில ஆதாரங்கள் உள்ளன. அது குறித்து கீழே காண்போம்.
ஒரு மாபேரழிவிற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. 1) நீண்டகால அழுத்தத்திற்கு உட்பட்ட சுற்றுப்புறம். 2) அதன் விளைவாக இறுதியில் உருவாகும் அழிவு (Press/ Pulse model). இக்காரணங்களை ஆரேன், வெஸ்ட் (2006) எனும் அறிஞர்கள் எடுத்துக்கூறினாலும் சில மாபேரழிவுகளில் இவை மட்டுமே போதுமானதாய் இருக்கவில்லை.
ஆக மாபேரழிவிற்கும் அதற்கான காரணங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே இப்போது நம்மால் நம்ப முடிகிறது.
>> லாவாக்குழம்பு வெள்ளம்
லாவாக் குழம்பின் தாக்கம் : இதுவரை நடந்த 11 லாவா குழம்பு வெள்ளமும் பல்வேறு மாபேரழிவும் சமகாலத்தில் நடந்திருக்கின்றன என்றும் மாபேரழிவிற்கு இதுவும் ஒரு காரணியாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவும் பின்னர் மறுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் 5 லாவா குழம்பு வெள்ளத்தை மட்டுமே நேரடியாக இப்பேரழிவுடன் தொடர்புபடுத்தமுடியும்.
>> கடல் நீர் உள்வாங்கல்
இதுவரை நடந்த 12 கடல்நீர் உள்வாங்கல் நிகழ்வுகளில் 7 நிகழ்வுகள் மட்டும் மாபேரழிவு நடந்த காலத்தில் நடந்துள்ளன.
>> விண்வெளிக் கற்களின் தாக்கம்
இதுவரை 100 கிமீ அகலமுடைய பள்ளம் உருவாக்கக்கூடிய விண்வெளிக் கற்களின் தாக்கம் ஒன்றே ஒன்றுதான் நடந்துள்ளது. அதுவும் ஒரு மாபேரழிவு நடந்த காலத்தில் நடந்துள்ளது. ஆனால் 100 கிமீக்குக் குறைவான அகலம் கொண்ட 50 பள்ளங்கள் மாபேரழிவுகளின்போது ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் பெருபாலானவை மாபேரழிவோடு தொடர்பில்லாதவை.
மேற்சொன்ன நிகழ்வுகள் எவ்வாறு அழிவினை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதனைக் காண்போம். எரிமலைக் குழம்பு வெளியே வெள்ளமாகப் பாயும்போது அதிக அளவில் வானத்தில் தூசு, துகள்கள் பரவுகின்றன. அதன் விளைவாக ஒளிச்சேர்க்கை நடப்பது தடுக்கப்பட்டு உணவுச் சங்கிலி நிலத்திலும் நீரிலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எரிமலைக் குழம்பு வெளிப்படும்போது உருவாகும் சல்பர் டை ஆக்ஸைடு, அமில மழைக்கு வழிவகுத்துப் பல உயிரிகளுக்கு நஞ்சாய் அமைந்து மேலும் உணவுச் சங்கிலியைப் பாதித்திருக்கலாம். அல்லது எரிமலைக்குழம்பு வெளியேற்றத்தில் உருவான கார்பன் டை ஆக்ஸைடு உலக வெப்பமாக்கலை உருவாக்கி இருக்கலாம். இத்தகைய நிகழ்வுகள் கிரிடேசியஸ், பெர்மியன், திரையாசிக் மற்றும் ஜுராசிக் கால இறுதியில் நடந்திருக்கலாம்.
நில உயர்வு நடந்த காரணத்தினால் கடல் நீரின் அளவு குறைந்து (Continental shelf area) உயிர்கள் அழிந்திருக்கலாம். மேலும் கடற்கரையில் ஏற்பட்ட மாபேரழிவுகளில் பெரும்பாலானவை கடல் நீர் அளவு குறைந்த காலத்திலேயே நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, விண்வெளிக் கற்கள் பூமியின் உணவுச் சங்கிலியைப் பாதித்திருப்பதற்குக் காரணங்கள் உள்ளன. இத்தாக்குதலின்போது தூசுக்கள் வானில் பரவி ஒளிச்சேர்க்கையைக் குறைத்திருக்கலாம். சல்பர் அதிகம் உள்ள பாறைகளை விண்வெளிக் கற்கள் தாக்கியிருக்கும் பட்சத்தில் அதிக அளவில் சல்பர் டை ஆக்ஸைடு வெளிப்பட்டு அமில மழை உருவாகி அதன்மூலமும் மாபேரழிவு நிகழ்ந்திருக்கலாம்.
இது போன்ற ஒரு பெரிய தாக்குதல் கிரிடேசியஸ் மற்றும் டெர்ஷியரி காலத்தில் நடந்த மாபேரழிவின்போது நடந்துள்ளது. இவை மட்டுமன்றி உலக வெப்பமயமாக்கல், அனாக்சிக் நிகழ்வு, ஹைட்ரஜன் சல்பைட் வெளிப்படுதல், கடலில் ஏற்பட்ட வெப்பநீர் சுழற்சி, கண்ட நகர்வு, பூமித்தட்டுகளின் அசைவு போன்றவற்றையும் மாபெரும் இன அழிவுகளுக்கான காரணங்களாகக் கூறலாம்.
(தொடரும்)