ஒரு பறவையின் அலகு உணவூட்டத்துக்கு ஏற்ற வகையில் பரிணமித்திருக்கிறது. அந்த வகையில் ஓர் அலகின் அளவு, அமைப்பு மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டு அந்த அலகைக் கொண்டிருக்கும் பறவையின் உணவுப் பழக்கத்தைச் சொல்லிவிடமுடியும்.
கழுகுகள், வல்லூறுகள் மற்றும் ஆந்தைகளின் அலகுகள் இறைச்சியைத் தின்பதற்காகக் கூர்மையாக அமைந்துள்ளன. கிழிப்பதற்கும் கொத்தி எடுப்பதற்கும் விதைகளை உடைப்பதற்கும் துளைகளை ஆராய்வதற்கும் வெவ்வேறு வகையான அலகுகளைப் பறவைகள் பெற்றுள்ளன.
பெரும்பாலான பறவைகள் பல்வேறு உணவு வகைகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. பருவ காலத்தில் தங்கள் உணவு வழக்கத்தை மாற்றிக் கொள்ளும் குணமும் அதற்கு இருக்கின்றன. அலகானது மேல் மண்டையோட்டு எலும்புடன் தொடர்புகொண்டு கீழ்த்தாடை மற்றும் மேல்தாடையுடன் அசைந்து செயல்படும் வகையில் அமைந்துள்ளது. பார்க்க மிகத் தடிமனாக இருந்தாலும் அலகின் முன்பாகத்தைச் சிறிது வளைக்கவோ விரிக்கவோ முடியும்.
பிளமிங்கோ அலகுதான் பறவைகளின் அலகுகளிலேயே உணவு உண்ணும் முறையில் சிறப்புத்தன்மை பெற்றதாக விளங்குகிறது. பிளமிங்கோ அலகு ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பையும் உறிஞ்சுவதற்கு ஏற்ற நாக்கையும் கொண்டுள்ளது. நாக்கில் இருக்கும் சிறுசிறு உறிஞ்சிகள், அமைப்பில் மாறுபாட்டைக் கொண்டுள்ளன.
குறிப்பாகச் சில இடங்களில் தடித்துக் கொக்கி போன்றும் சில இடங்களில் வெல்வெட் விரிப்பு போன்று மென்மையாகவும் அமைந்துள்ளன. நீர் கழிவுகளிலிருந்து தேவையான உணவுப்பொருளை மட்டும் பிரித்துச் சாப்பிடும் தன்மையையும் கொண்டிருக்கிறது. இத்தகைய வடிகட்டும் அமைப்பு பிளமிங்கோவின் உணவைத் தீர்மானிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அளவில் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கின்ற இரு வகையான பிளமிங்கோக்களும் தங்களின் வடிகட்டும் திறமையில் வேறுபட்டிருப்பதால் எளிதில் தங்களுக்கு இடையிலான போட்டியைத் தவிர்த்துவிடுகின்றன.
சில பறவைகள் விதைகளை (கொட்டைகளை) முழுவதுமாக விழுங்கி கிஸார்டுகளால் அரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. சில பறவைகள் விதைகளை உடைத்து அதில் உள்ள பருப்பை உண்கின்றன. உடைத்துத் தின்னும் பறவைகளின் அலகுகள் பாக்கு உடைக்கும் கருவியைப் போல் அழகாக இருக்கின்றன.
பூவிலுள்ள தேனை உறிஞ்சும் பாடும்பறவை மற்றும் தேன்சிட்டு போன்றவற்றின் அலகுகள் குழல் போன்று அமைந்து தேனை உறிஞ்சும் வகையில் உள்ளன. பூக்களின் அமைப்பிற்கேற்ப இப்பறவைகளின் நாக்கும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
செரிமான மண்டலம்
பறவைகளுக்குப் பற்கள் இல்லாததால் அவற்றின் செரிமான மண்டலம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பற்களின் வேலையான அரைத்தலை ஈடுகட்டும் வகையில் செரிமான மண்டலம் அமைந்துள்ளது. அதன் முக்கியப் பகுதிகள் வாய்க்குழி, உணவை அரைக்க உதவும் கிராப் எனும் பகுதி, ஈரறை வயிறு, ஈரல், குடல் மற்றும் மலவாய்.
பல் இல்லாத காரணத்தால் உணவை முழுவதுமாகப் பறவைகள் விழுங்கிவிடுகின்றன. பல்லில்லாத் தன்மையானது ஒரு எடைக் குறைப்புக்கு உண்டான அமைப்பாக உள்ளது. ஏனெனில் பல்லைத் தாங்குவதற்குப் பலம் வாய்ந்த பெரிய தாடை எலும்பு தேவை. அது எடையை அதிகரிக்கும் தன்மை உடையது.
வாய்ப்பகுதியானது சுவை உணரும் பகுதிகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாக்குப் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. சுவை உணர்விகள் மேலண்ணத்தில் காணப்படுகின்றன. இந்தச் சுவை உணர்வி உணவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. மேலும் இப்பகுதியில் மூன்றுவிதமான பெரிய உமிழ்நீர் சுரப்பிகளும் சில சிறிய உமிழ்நீர் சுரப்பிகளும் காணப்படுகின்றன. இவை உணவை எளிதாக உணவுக் குழலுக்குச் செலுத்தும் ஓர் உராய்வு நீக்கியாகப் பயன்படுகின்றன.
சில பறவைகளில் இந்த உமிழ்நீர், பூச்சிகளைப் பிடிக்கும் வகையில் பசை போன்றும் (மரங்கொத்திகளில்), உணவைக் கூழாக்கவும் கூடுகட்டுவதற்கும் உதவுகிறது. சில பறவைகள் உமிழ்நீரை மண்ணுடன் கலந்து கூடு கட்டுகின்றன.
பறவைகளின் நாக்கு முழுவதுமாகச் சதைகளால் ஆக்கப்பட்டதாக இல்லாமல் எலும்புகளில் இருந்து நீள்வதுபோல் அமைந்துள்ளது. இதனை ஹையாய்டு நீட்சி என அழைக்கிறார்கள். தேன்சிட்டு மற்றும் மரங்கொத்திகளுக்கு நாக்கு வித்தியாசமாக நீண்டு வளைந்து மண்டையின் மேல் பகுதியில் உள்ளது.
வாய்க்குழலை அடுத்துள்ள உணவுக் குழலானது விழுங்கப்படும் உணவைத் தடையின்றி கீழ்ச் செலுத்தும் வகையில் விரியும் தன்மையுடன் உள்ளது. புறாக்களில் பால் உருவாகும் இடமாகவும் இது உள்ளது. இந்த உணவுக்குழல் உப்பி, இனக்கவர்ச்சிக்கு உதவும் உறுப்பாகவும் மாறுகிறது. கிராப் எனும் உறுப்பில் உணவுகளைச் சேர்த்துவைக்கவும், உணவு தடையின்றி கீழே செல்லுமாறு ஒழுங்குபடுத்தவும் உணவுக்குழல் உதவுகிறது. இவ்வுறுப்பு, பறவைகளுக்கிடையே வேறுபட்ட அமைப்பில் காணப்படுகிறது.
பறவைகள் ஈரறைகள் கொண்ட வயிற்றைக் கொண்டுள்ளன. மேல்புற வயிறு சுரப்பிகள் நிரம்பியதாகவும், அடிப்புற வயிறு தசைகளால் ஆனதாகவும் உள்ளன. இந்த மேற்புற வயிற்றுக்குழல் மீன்களை உணவாய் உண்ணும் பறவைகளிடத்தில் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. இதில் சுரக்கும் அமிலங்கள் உணவைச் செரிக்கவைக்க உதவுகின்றன. பெப்டிக் நொதி, எலும்புகளை இரண்டு நாட்களில் செரிக்கக்கூடியதாக மாற்றிவிடுகின்றது.
சில பறவை இனத்தில் உள்ள நொதி ஒரு முழு எலியையும் மூன்று மணி நேரத்தில் செரிக்கச் செய்துவிடும். சில பறவைகள் செரித்தலின் போது உருவாகும் சில எண்ணெய்ப் பொருட்களைச் சேமித்து வைத்துப் பிறகு அதனையே தன் குஞ்சுகளுக்கு உமிழ்ந்து உணவாகக் கொடுக்கும்.
அடுத்துள்ள கிஸார்டு எனும் அமைப்பு பாலூட்டிகளிடத்தில் உள்ள கடைவாய்ப் பற்கள் செய்யும் வேலையைச் செய்கின்றது. இதிலுள்ள வலிமை மிக்க வரித்தசைகள் அரைக்கவும் உதவுகின்றன. கிரீப் எனும் பறவை தன்னுடைய இறக்கையை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இறக்கை குடற்பகுதியில் சேமிக்கப்பட்டு உணவில் முள் போன்ற பொருட்கள் வருவதைத் தடுக்கிறது.
கிஸார்டில் கற்களும் சேமித்து வைக்கப்படுகின்றன. சில பறவைகளிடம் 2.3 கிலோ கிராம்வரைகூடக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மென்மையான உணவுகளை உட்கொள்ளும் பழக்கமுடைய பறவைகளில் கிஸார்டு அவ்வளவு தசைப்பிடிப்பாய் இருப்பதில்லை. சில பறவைகளில் இந்தக் கிஸார்டு அமைப்பானது பருவகாலத்திற்கு ஏற்ப மாறும்.
பறவைகளின் குடல், அவற்றின் உடல் நீளத்தைவிட 8.6 மடங்கு நீளமுடையது. இருப்பினும் இது பறவைகளிடையே 3 மடங்கிலிருந்து (ஸ்விட்) 20 மடங்கு வரை (நெருப்புக்கோழி) வேறுபாட்டோடு காணப்படுகிறது. சாப்பிட்ட உணவு பழமாயிருக்கும் பட்சத்தில் அது அரைமணிக்குள்ளாகவே அனைத்து மாற்றத்திற்கும் உட்பட்டு வாய்க்குழியிலிருந்து மலவாய்க்குத் தள்ளப்படுகிறது.
கடின உணவாக இருப்பின் இந்தச் செயல்முறை நடக்க அரை நாளுக்கு மேல் ஆகும். பறவைகள் தேன் போன்ற உணவை உட்கொள்ளும்போது அவற்றிலிருந்து 97 முதல் 99 சதவீதத்தைச் சக்தியாக எடுத்துக் கொள்கின்றன. இதே போன்று தாவர உணவை உண்ணும் பறவைகள் 60 முதல் 70 சதவிகித சக்தியை இளம் தளிர்களிடம் இருந்து பெறுகின்றன.
மெழுகு எளிதில் செரிமானமாகாத ஒரு பொருளாகும். ஆனால் பெரிய பறவைகள் மெழுகை வளர்ச்சிதை மாற்றத்திற்குரிய ஒரு பொருளாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் மெழுகு எவ்வாறு செரிக்கப்படுகிறது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது. சில தேன்சிட்டுகள் மெழுகினை மட்டுமே தின்கின்றன.
பாலூட்டிகளிடத்தில் கருவிகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைப் பார்க்கலாம். இப்பழக்கம் பறவைகளில்கூட காணப்படுகிறது. மரங்கொத்திப் பறவைகள் துவாரங்களில் இருக்கும் புழுக்களைச் சிறு குச்சிகளின் உதவிகொண்டு வெளியில் எடுத்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளன.
பிணம் தின்னும் கழுகுகள் சிறு பாறைத்துண்டுகளைக் கொண்டு நெருப்புக்கோழியின் முட்டையை உடைக்கின்றன. சில நாரைகள் உணவுப் பொருட்களை நீரில் போட்டு அதைத் தின்னவரும் மீன்களைப் பிடிக்கும். மீண்டும் அந்த உணவுப்பொருளை எடுத்துக்கொண்டு வேறு இடத்தில் அதைப் போட்டு மீனுக்காகக் காத்திருக்கும்.
அனைத்துத் திறன்களையும் தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு வெவ்வேறு வகைகளில் கற்றுக் கொடுக்கிறது. ஒவ்வோர் இளம் பறவையும் பெற்றோரிடமிருந்த இரை தேடுவதற்குக் கற்றுக்கொள்கிறது. தன் இரை எது என்பதையும் எதை உண்ணக்கூடாது என்பதையும்கூட அவ்வாறே கற்றுக்கொள்கிறது.
இளம் பறவைக்கு வயது ஏற, ஏற கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். சில திறன்கள் அதன் மரபுக்கூறுகளிலேயே (ஜீன்ஸ்) இருப்பதால் கற்கும் போது அத்திறன்களை மெருகேற்றிக் கொள்கின்றது. உணவுத் தேடலோ, உணவு உண்ணும் பழக்கமோ அப்பறவையின் உணவுத் தேவையைச் சார்ந்ததாகும்.
ஒவ்வொரு பறவையும் தன்னிடம் அதிக அளவு சக்தியைக் கொழுப்பாகச் சேமித்து வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது எடையை அதிகரித்துவிடும். பறப்பதற்குத் தடையாகிவிடும். ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொழுப்பைச் சேமித்து வைத்துக்கொள்கிறது. இருப்பினும் பல பறவைகள் தாங்கள் புலம் பெயர்வதற்கும் உணவு கிடைக்காத காலத்தைக் கடக்கவும் சக்தியைச் சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
பறவைகள் உணவைச் சக்தியாகத் தங்கள் உடலில் சேமிப்பது ஒருபுறம் இருக்க, உணவை வெளியில் சேமித்து வைக்கும் பழக்கமும் இருக்கிறது. மரங்கொத்தி பறவை எதிர்காலத்திற்காக உணவைச் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஸ்ரைக் வகை இனப் பறவைகள் உணவை முட்களில் கழுவேற்றி, தேவைப்படும்போது உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளன.
(தொடரும்)