Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #17 – முட்டையின் கதை

காக்கைச் சிறகினிலே #17 – முட்டையின் கதை

கருவுறுதல் என்ற செயல் ஒரு கருவுறா முட்டையைக் கருவாக மாற்றுகிறது. அதன்பின் முட்டை உருவாக்கம் நடைபெறுகிறது. கருநாளம் என்பது நீண்ட நீட்சித் தன்மைகொண்ட சுவர்களாக முட்டையின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் வசதியுடையதாக உள்ளது.

சுருங்கி விரியும் தன்மைகொண்ட தசையின் இயக்கத்தால் முட்டையின் இடப்பெயர்பு சாத்தியமாகிறது. இந்தக் கருநாளம் வழியே ஒரு முட்டை நகர்ந்து செல்ல 24 மணி நேரமே ஆனாலும் இந்த நகர்தலுக்கு முட்டை ஒரு வாரம் எடுத்துக்கொள்கிறது. இன்பண்டிபுலத்தில் 20 நிமிடம் இருந்து பின் ஒரு நிமிடத்திற்கு 2.3 மிமீ என முட்டை இடம் பெயர்கிறது. முதலில் முட்டையுடன் அல்புபின் சேர்க்கப்பட்டுப் பின் சவ்வுகளும் ஓடுகளும் அதனுடன் சேர்க்கப்படுகின்றன. முட்டை 19 முதல் 20 மணி நேரத்தில் கருப்பையில் உருவாகிறது.

கருநாளத்தின் முன் பகுதியில் அல்புமின் சுரக்கிறது. அதே இடத்திலேயே நான்கு அடுக்குகளாக முட்டையின் வெண்கரு சேர்க்கப்படுகிறது. இவ்வடுக்குகள் ஒன்றில் இருந்து மற்றொன்று அதன் அடர்த்திப் பொருளின் கூட்டுத்தன்மை போன்றவற்றில் வேறுபட்டு இருக்கின்றன.

இதில் உட்புறத்தில் கடைசியாகக் காணப்படும் அடுக்கு மற்ற அடுக்குகளால் அழுத்தப்படுகிறது. கரு உணவானது கருநாளத்தின் பின்னிய அமைப்பின் காரணமாகச் சிறிது சுழற்சிக்கு உள்ளாகிறது. இச்சுழலும் பகுதி சலஜா என்று அழைக்கப்படுகிறது. இதுவே கரு உணவை ஒரு நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் முட்டையின் மேல் பாகத்தில் கருவின் பிளவிப்பெருகல் நடைபெறுகிறது.

இந்நிலையில் முட்டை இஸ்துமஸ் பகுதியை அடைய, அங்கு முட்டையின் மேற்புற ஓட்டுச்சவ்வு சேர்க்கப்படுகிறது. இந்த வெளிப்புறச்சவ்வு ஓட்டுடன் மிக நேர்த்தியாக ஒட்டிக்கொண்டுள்ளது. இச்சவ்வு புரத நார்களால் ஆனது. இது அல்புமினால் இறுகி, வாயு மற்றும் திரவம் உள்ளேயும் வெளியேயும் செல்லாதவாறு முட்டையைப் பாதுகாக்கிறது.

மிக மெலிதான உட்புற சவ்வு இஸ்துமஸின் மேல் கெரட்டினால் ஆன நார்களை இணைக்கும்போது உருவாகிறது. ஓட்டுச்சவ்வுடன் சிறிய அளவில் நிறமிகள் இணைக்கப்படுவதால் அது இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறுகிறது. ஓட்டு உருவாக்கத்தில் முதலில் நிறமிகளில் ஓட்டு நிறம் சேர்க்கப்படுகிறது. ஓட்டு நிறமிகள் போர்பைரின்ஸ் எனப்படுகின்றன. பழைய ரத்த செல்களில் உள்ள ஹிமாடின், ஈரலால் சிதைக்கப்பட்டு பைல் நிறமிகளாக மாற்றம் அடைவதிலிருந்து இந்த நிறமிப் பெறப்படுகிறது.

முட்டை உருவாக்கத்தின் இறுதிக்கட்டம் கடின ஓட்டை இணைப்பதாகும். இந்தக் கடின ஓடு கால்சியம் கார்பனேட்டால் (CaCo3) ஆன கால்சைட் கிரிஸ்டல்களால் முட்டை நாளத்தின் கருப்பையில் உருவாகிறது. இத்துடன் சிறிய அளவில் மக்னீசியமும் பாஸ்பேட்டும் கலந்துள்ளன. இந்தப் பொருள்களின் அளவில் அல்லது கலவையில் ஏற்படும் சிறு மாற்றம்கூட முட்டை ஓட்டின் கடினத்தன்மையைப் பெருமளவில் பாதிக்கிறது. சிறிய அளவில் பாஸ்பேட் உயர்ந்தால் அது கால்சைட் கிரிஸ்டல்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

பறவைகளின் உடலுக்குள்ளே செல்லும் பூச்சி மருந்துகள் இங்குதான் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. DDT மற்றும் DDE பூச்சி மருந்துகள் இந்த மக்னீசியம் மற்றும் பாஸ்பேட்டின் கலவையின் அளவில் மாற்றத்தை உருவாக்குவதால் முட்டை ஓடு இளகின தன்மையை அடைகிறது. அதனால் இளம் உயிரி உருவாக்கம் பெரும்பாலும் தடுக்கப்படுகிறது. 1.547 ஆக இருக்கும் மக்னீசியமும் 0.25 விழுக்காடாக இருக்கும் பாஸ்பேட்டும் முறையே 2.17 மற்றும் 0.6 விழுக்காடாக ஆலா பறவையில் மாற்றத்தை உருவாக்கி சந்ததி உருவாக்கத்திற்குப் பெரும் தடையை ஏற்படுத்தியது ஒரு வரலாறு.

இவ்வாறு அனைத்து அடுக்குகளும் ஓடுகளும் முட்டையில் உருவாகியவுடன் அது வெளியேறுவதற்குத் தயாராகிறது. இக்கட்டத்தில் சில பறவைகள் 180 டிகிரிக்கு முட்டையைச் சுழளச் செய்து, அதன் தட்டைப்பகுதி முதலில் வெளியே வருமாறு செய்கிறது.

முட்டை வெளியேறும் பகுதியில் காணப்படும் தசைகளின் இயக்கத்தினால் முட்டைகள் தானாக வெளியேற்றப்படுகின்றன. பெரும்பாலும் இளம் காலை நேரங்களில் முட்டைகள் இடப்படுகின்றன. பறவைகள் மற்ற நேரங்களில் முட்டை நாளத்தில் முட்டையைச் சுமந்துகொண்டு வேறு வேலையில் ஈடுபடுவதால், இதில் உண்டாகும் பாதுகாப்பற்ற தன்மையைத் தவிர்ப்பதற்காகக் காலை நேரத்தை முட்டை இடுதலுக்குப் பறவைகள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

நாள்தோறுமோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ முட்டையிடுதல் நடக்கும். இருப்பினும் பாடும் பறவைகள், வாத்துகள், கோழிகள், மரங்கொத்திகள் போன்றவை ஒரு நாள் இடைவெளியில் முட்டைகளை இடுகின்றன. இதற்கு மாறாக மெகாபோட் பறவைகள் ஒரு முட்டை இடுதலுக்கும் அடுத்த முட்டை இடுதலுக்குமான இடைவெளியாய் 4 முதல் 8 நாட்களை எடுத்துக்கொள்கின்றன. பெரிய கழுகினங்கள், பென்குயின் போன்றவை 3 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. முட்டைகளின் அளவு 0.2 கிராமில் ஆரம்பித்து, பெரிய அளவாக 9 கிலோ அளவில் இருந்துள்ளது (அழிந்து போன யானைப் பறவையினுடையது).

முட்டை ஈடு

ஒரு பறவை ஒருமுறை அடைகாக்க இடும் முட்டைகளின் எண்ணிக்கையினை முட்டை ஈடு (Clutch) என அழைக்கிறோம்;. இந்த எண்ணிக்கை பறவையின் சக்தி சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மேலும் இவ்வெண்ணிக்கை சில பறவைகளில் ஒரே தன்மையில் இருப்பதில்லை. இந்த ஈடு சராசரியாக 3 முதல் 12 வரை நீர்ப் பறவைகளிலும், 2 முதல் 23வரை கோழிகளிலும் உள்ளன.

வயது, உணவு, காலம் போன்றவை இந்த ஈட்டின் முட்டை எண்ணிக்கையை நிர்ணயிப்பதாய் உள்ளன. இது போன்றே புரதமும், தாதுக்களான பொட்டாசியம், கால்சியம், போன்றவையும் இதனை நிர்ணயிக்கின்றன.

முட்டை உருவாக்கத்திற்குத் தேவையான வளம் அல்லது சக்தியானது பறவைகள் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவினை உயர்த்துவதன் மூலமும் சக்தியை வீணடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் கிடைக்கிறது. முட்டையிடும் காலத்தில் பெரும்பாலான பறவைகள் அதிக உணவு தேடுதலை மேற்கொள்கின்றன. அதுமட்டுமின்றி சேமித்து வைக்கப்படும் சக்தியையும் முட்டை உருவாக்கத்திற்குப் பறவைகள் பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை.

முட்டை

பறவைகளைவிடப் பறவைகளின் முட்டைகள்தான் ஆரம்பகால பறவையியல் ஆய்வாளர்களை மிகுதியாகக் கவர்ந்தன. அவற்றின் வேறுபட்ட அளவு, அமைப்பு, நிறம் ஆகியன அதற்குக் காரணங்களாகும். கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க பறவையியலாளர்கள் அதிக அளவில் இதைப் பற்றிய ஆய்வு நூல்கள் எழுதியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். முட்டைப் பற்றிய தனிப்படிப்பாக முட்டையியல் (Oology) உருவானதும் அப்போதுதான்.

முட்டையின் உள்ளே இருக்கும் கரு முற்றிலுமாக வெளிப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் கருவின் உயிருக்கு ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர் போன்றவற்றின் பரிமாற்றம் வெளிப்புறத்திலிருந்து உட்புறத்திற்குச் செலுத்தப்படுவது அவசியமாகிறது.

இணை

பறவைகளில் பல்வேறு விதமான இணைமுறைகள் இனப்பெருக்கக் காலத்தில் காணப்படுகின்றன. அவை முறையே ஓரிணை, பல்லிணை, பல ஆணிணை, பல பெண்ணிணை, பல ஆண் பெண்ணிணை மற்றும் பிரித்தறியா இணை என்று வகைப்படுத்தலாம்.

ஓரிணை என்பது அதிக அளவில் காணப்படக்கூடிய ஒன்றாகும். இது பருவகாலத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் மட்டுமே இணைந்து வாழ்க்கை நடத்துவதைக் குறிக்கும். பல்லிணை என்பது ஏதேனும் ஓர் பாலினம் பல எதிர் பாலினத்துடன் இணைந்து வாழ்க்கை நடத்துவதாகும். இப்பல்லிணையில் மூன்று விதமான முறை காணப்படுகிறது.

பல ஆண்பெண்ணிணை

இது ஒரு பெண் பறவை பல ஆண்களுடன் இணைதலையும், ஓர் ஆண் பறவை பல பெண் பறவைகளுடன் இணைதலையும் குறிக்கும். இதுமட்டுமன்றி பிரித்தரியா இணையில் ஆண் பறவைகள் தங்களை அனுமதிக்கும் எல்லாப் பெண் பறவைகளுடன் மிகக் குறுகிய காலத்துக்கு இணைவு நடைபெறுவதைக் குறிக்கும்.

ஓர் இணை

ஓர் இணை உறவானது பருவகாலம் முழுவதுமோ அல்லது வாழ்வு முழுவதுமாகவோ தொடர்கிறது. கிளிகள், கழுகுகள், புறாக்கள் ஆகியன ஓர் இணையாக வாழ்கின்றன. ஆனால் இதில் இனப்பெருக்கம் வெற்றிகரமாக இல்லாதபோது இந்த இணைகள் பிரிவது தவிர்க்கமுடியாததாகிறது. இந்நிகழ்வில் ஒரு ஜோடி எல்லாவற்றிலும் பங்கேற்பதால் அதிக எண்ணிக்கையில் இளம் உயிர்களை வளர்ப்பது எளிதான வேலையாகிறது. ஓரிணை ஜோடிகளில் ஒன்று மிகத்திறமையான இணையைப் பெற்றுக்கொள்வது இதிலுள்ள சிறப்பம்சமாகும். அதாவது ஆண் பறவைகள் பெருமளவில் தங்களின் திறனைச் சில சிறப்புச் செய்கைகள் மூலம் (நடனம்) வெளிப்படுத்தும். பெண் பறவைகள் தகுதி அடிப்படையில் சிறப்பான ஓர் ஆண் பறவையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

பல பெண்ணிணைவு

ஓர் ஆண் பறவை பல பெண் பறவைகளோடு சேர்ந்திருப்பது இந்த நிலையாகும். பொதுவாகப் பறவையின் தேவைகள் அனைத்து இடங்களிலும் சமமாய் இல்லாமல் ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கும் பட்சத்தில் இந்நிலை உருவாவதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்நிகழ்வில் முதல் பெண் பறவை மற்ற பெண் பறவைகளைவிட அதிகமாய் ஆண் பாதுகாப்பைப் பெறுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் வருகின்ற பெண் பறவைகள் இந்த ஆணின் கடைசி பாதுகாப்பில் தங்களின் குஞ்சுகளைப் பராமரிக்கின்றன.

பல ஆணிணைவு

இது மிகக் குறைவாகவே நிகழ்கிறது. இதில் பெண் பறவை சிறிது பலம் வாய்ந்து இருப்பதாகவே கருதவேண்டும். ஏனெனில் இந்நிகழ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் பறவைகள் பெண்ணிற்கு உதவியாய் இளம் உயிரி வளர்ப்பில் ஈடுபடுகிற செயலை இதில் காணலாம்.

வளமற்ற இடங்களில் உள்ள சில பறவைகளின் ஆண் இனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்துக்கொண்டு தங்கள் இருப்பைப் பெண் பறவைகளுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும். ஓர் ஆண் பறவை தனக்குரியதாக நிர்ணயித்துக்கொண்ட இடம் லெக் (Lek) என அழைக்கப்படுகிறது.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *