பெற்றோர் பேணல்
இளம் உயிர்களை வளர்ப்பதற்காகப் பெற்றோர்கள் தங்களின் காலத்தையும் சக்தியையும் செலவழிப்பது அவசியமான ஒன்றாகும். இப்படிப் பேணுதல் சந்ததியின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. அது பரிணாமத்தின் முதிர்ந்த பண்பு என்று கூறலாம். ஒருவர் பங்கேற்கும் பேணலைவிட பெற்றோர் இருவரும் பங்கேற்கும் பேணுதல்முறை எளிதாக இருக்கிறது. அதனால்தான் ஓரிணைவு முறையானது பறவைகளில் அதிகம் பரிணமித்துள்ளது.
பெற்றோர் பேணலின் அடுத்த நிலை, உதவியாளர்கள் எனும் பெற்றோர் அல்லாத சில பறவைகளின் துணை கிடைப்பதுதான். அதனால் இளம் பறவைகளின் பேணலுக்காகச் செலவிடப்படும் காலமும் சக்திகளும் பெற்றோர் பறவைகளாலும் உதவிக்கு வரும் பறவைகளாலும் மிக எளிதாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
பெற்றோர் பேணலின் குறைகளாகப் பறவைகளிடையே ஏமாற்றும் தன்மையும் கூட்டுறவு இல்லாமல் போவதையும் கூறமுடியும். ஏமாற்றும் தன்மை என்று இங்கே குறிப்பிடப்படுவது சில பறவையினங்கள், தங்களின் முட்டைகளை வேறு கூடுகளில் இட்டுவிட்டு, அம்முட்டைகளுக்குரிய மொத்த பேற்றோர் பேணலையும் அந்தக் கூடுகளின் பெற்றோர்களை ஏற்கும்படி செய்து விடுவது.
ஒரே இனத்திலும் இது நடக்கிறது. இரு வேறுபட்ட இனங்களிடையேயும் நடக்கிறது. ஒரே இனப் பறவைகளைப் போன்று இருப்பதில் இது அதிகம் நடக்கிறது. கூடுகட்ட இடமின்மையால் ஒரே இனத்திலுள்ள பறவைகள் தங்கள் முட்டைகளில் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் வேறு கூட்டில் இடுவதும் உண்டு. இந்த முறையில் இப்பறவைக்குக் கூடுகட்டவும் தெரியும்; பெற்றோர் பேணவும் தெரியும்.
வேறுபட்ட இனத்துப் பறவைகளின் கூடுகளில் தங்கள் முட்டைகளை இடும் பறவைகளுக்கு உண்மையில் கூடுகட்டவும் தெரியாது; பெற்றோர் பேணலைச் செய்யவும் தெரியாது. இந்நிகழ்வில் அனைத்து முட்டைகளையும் வேறு இனப் பறவையின் கூட்டில்தான் இட வேண்டும். பறவைகளிடையே இப்பண்பு தனித்தனியே ஏழுமுறை பரிணமித்ததாய் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பண்புடைய பறவைகள் ஒரு குறிப்பிட்ட இனப் பறவையின் கூட்டையே தேர்ந்தெடுத்து முட்டையை இடுவதுண்டு. இவற்றின் முட்டை ஓடுகள் சற்றுக் கடினமானதாய் இருக்கும். இதனால் முட்டையை வேறு ஒரு கூட்டில் இடும்போது இம்முட்டை அக்கூட்டில் உள்ள மற்ற முட்டைகளைச் சேதப்படுத்துமே தவிர, இம்முட்டை உடைய வாய்ப்புக் குறைவு. இப்படி முட்டைகள் பெரும்பாலும் வேற்று இனப் பறவையின் முட்டையைப் போன்ற அளவுடையதாகவோ அளவில் பெரிதாகவோ இருக்கும்.
இந்த ஏமாற்றும் செயலில் பெரும்பாலும் வேற்று இனப் பறவையின் முட்டைகள் முழுவதுமாய்ப் பொரிப்பதற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. இளம் உயிர்கள் அனைத்தும் வளர்வதற்கும் வாய்ப்பு இருப்பதில்லை. மொத்தத்தில் அவ்வேற்றினத்தின் இனவிருத்தியைப் பெரும்பாலும் இப்பறவைகள் அழிக்கின்றன என்றே கூற வேண்டும்.
இம்முறையில் சில வேற்று இனப்பறவைகள் தங்கள் கூடுகளில் இடப்பட்ட பிற இன முட்டையை ஏற்றுக்கொள்வதுண்டு. ஆனால் சில வேற்றினப் பறவைகள் ஏற்றுக்கொள்வதில்லை. மொத்தத்தில் கூடுகட்ட இயலாத பறவையின் சந்ததியை விருத்தி செய்யவே இச்செயல் நடக்கிறது என்று கூறலாம்.
சில பறவை இனங்களில் இந்த இளம் உயிர்களை வளர்க்கும் செயலைப் பெற்றோர் அல்லாத, அதே இனத்தைச் சார்ந்த வேறு பறவைகளும் செய்கின்றன. அவற்றை உதவிப் பறவைகள் என நாம் அழைக்கிறோம். இவை பெற்றோர்களின் வேலையைச் சிறிது பகிர்ந்து கொள்கின்றன. அச்செயலின் மூலம் தங்களின் இதே போன்ற எதிர்கால செயலுக்குத் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய சிறப்பம்சம்கொண்ட பண்பு 220 இனத்திற்கு மேற்பட்ட பறவைகளில் காணப்படுகிறது.
பறவைகள் ஆய்வு
பறவைகளைப் பற்றிய படிப்பில் மிக முக்கியமானதாக இருப்பது பறவைகள் கணக்கெடுப்பு என்று கூறலாம். இதனைச் செய்வதன் மூலம் (அடிக்கடி அல்லது தொடர்ந்து) ஒரு சிற்றினத்தின் தொகை அல்லது எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த நிலையை சரியாய்க் கணிக்க, கணக்கெடுப்பு சரியான வழிமுறையில் செய்யப்படவேண்டும். ஏனெனில் இதுதான் அச்சிற்றினத்தின் தொகை கண்காணிக்கப்படும் இடத்தில், கண்காணிக்கப்படும் கால இடைவெளியில் எண்ணிக்கையில் உயருகிறதா? அல்லது குறைகிறதா? என்பதனை அறிய உதவும்.
இந்தக் கணக்கெடுப்பின் ஆரம்பம் ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் பறவைகளின் சிற்றினத்தைத் தொகுப்பதில் துவங்குகிறது. குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட இனம் இருக்கிறதா, இல்லையா? என ஆய்வதில் தொடங்கும். பிறகு, ஓரிடத்தில் இடத்தில் காணப்படும் அனைத்துப் பறவைகளின் முழுமையான எண்ணிக்கையை அறிவதுவரை தொடர்கின்றது. பெரிய இடம் எனில் முழுமையாகத் தேடுவதைவிட தேவைப்பட்ட இடத்தைப் பல்வேறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அச்சிறு பகுதிகளில் சிலவற்றை முழுமையான தேடலுக்கு உட்படுத்தி, பின் அதன்மூலம் முழு பகுதிக்குமான முடிவைக் கண்டறிகின்றனர்.
ஒரு சிற்றினம் இருக்கிறதா, இல்லையா? எனும் ஆய்வு ஓர் இடத்தினைப் பற்றிய பல்லுயிர் பகுப்பாய்வுக்குத்தான் பெரும்பாலும் பயன்படும். சில நேரங்களில் அரிதான பறவையின் இடப்பரவலை அறியவும் உதவுகிறது. ஆகவே பறவையின் முழுமையான எண்ணிக்கையை அறிவதில்தான் முழு அறிவியலும் இருக்கிறது என்று சொல்லவேண்டும். ஏனெனில் அவ்வறிவு அப்பறவைகளின் தற்கால நிலைமை மட்டுமன்றி அவ்விடம் சார் வளத்தையும் எடுத்துச்சொல்ல உதவுகிறது.
முழு எண்ணிக்கை
ஓரிடத்தில் உள்ள ஓர் இனம்சார் பறவைகளின் எண்ணிக்கையோ அல்லது எல்லா இனப்பறவைகளின் எண்ணிக்கையோ முழுமையாகக் கணக்கிடுதல் நம்முடைய தேவை என்பதனைத் தீர்மானித்தவுடன் நம்முடைய அடுத்த வேலை அந்த இடத்தை முழுமையாக ஆய்வதா அல்லது அதன் ஒரு சிறிய பகுதியை ஆய்ந்து அதன் மூலம் அந்தப் பெரிய பகுதியைக் கணிப்பதா என்பதேயாகும்.
முதலில் இடத்தை முழுமையாக ஆய்வு செய்வதே சரி என்று நினைத்தாலும் நமக்குள்ள காலம், மனிதசக்தி, பண வசதி போன்றன பெரும்பாலான நேரங்களில் இதற்கு இடம் கொடுப்பதில்லை. பெரும்பாலும் இந்நிகழ்வுகள் காடுகளில் பறவைகளைப்பற்றிய ஆய்வை மேற்கொள்ளும்போது உருவாகக் கூடியவை. ஆனால், சிறிய ஏரிகள் மற்றும் குறுகிய அளவு நிலப்பரப்புகளில் முழுமையான ஒரு கணக்கிடுதலை எளிதாக மேற்கொள்ள முடியும்.
மேலும் நாம் படிக்க விரும்பும் பறவை ஒரு சிறிய இடத்திற்குள்ளாகவே தன் வாழ்வியலை நடத்தும் நிலையில் அப்பறவைக்கான கணக்கிடுதலை நாம் பல இடங்களில் நடத்திக் காலவிரயம் செய்யத் தேவையில்லை. ஆக, நம்மிடம் உள்ள காலம், பணவசதி, மனிதசக்தி, படிக்கும் பறவையின் பரவல் நிலை போன்றவற்றைப் பொறுத்து ஓரிடத்தை முழுமையாக ஆய்வு செய்வதா அல்லது மாதிரி ஆய்வு மட்டும் போதுமானதா என்பதைத் தீர்மானிக்கலாம்.
மாதிரி ஆய்வு
மாதிரி ஆய்வு நடத்த நாம் தீர்மானிக்கும்போது மாதிரிக்கு என்று தேர்வு செய்யும் இடம் உண்மையிலேயே முழுமையான இடத்தின் ஒரு மாதிரியா என்பதனை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மரம் ஒரு முழுமையான இருப்பிடம் என நிர்ணயிக்கும் போது கிளை ஒரு மாதிரியாக இருக்கவேண்டும். அக்கிளையின் கூறுகள் (பழுத்த இலைகள், தளிர் இலைகள், காய், பழம், பூ) மரத்தின் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும்.
நன்றாக இலை, பூ, காய், கனியுடன் காணப்படும் மரத்தில் உயிரற்ற ஒரு கிளை நல்ல மாதிரியாக இருக்கமுடியாது. எனவே நாம் ஆய்வு செய்யவேண்டிய இடத்தின் வரைபடத்தைத் தயார் செய்து அதனைப் பல பாகங்களாக முதலில் பிரித்துக்கொள்ளுதல் வேண்டும். பின்னர் முழுமையான இடத்தின் எல்லாப் பகுதிகளையும் உட்கொணருதல் போல் ஆய்வுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் தேர்வுசெய்து அதற்குள்ளே பறவைகள் கணக்கிடுதலை மேற்கொள்வது நல்லது.
கணக்கிடுதலை ஆரம்பிக்கும்முன் சரியான முடிவு மற்றும் நிலையான முடிவு என்ற இரு சொற்களை அறிதல் வேண்டும். ஓர் இடத்தில் 100 காகங்கள் உள்ள நிலையில் நம்முடைய ஆய்வின் முடிவு 99 என்று வந்தால் நாம் உண்மையின் நெருக்கத்தில் உள்ளோம் என்று பொருள். இது சரியான முடிவாகும். மாறாக நம் ஆய்வின் முடிவு 40 என்று வந்தால் நாம் உண்மையின் நெருக்கத்தில் இல்லாமல் தூரத்தில் உள்ளோம் என்பது பொருள்.
சரியான முடிவை எட்டவேண்டும் எனில் நம் ஆய்வை உண்மையாகவும் ஆழமாகவும் மேற்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. நிலையான முடிவு என்பது நம் தொடர்ந்த ஆய்வுகளின் முடிவுகளுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிடக்கூடியது. குறிப்பாக, ஆறு முறை நடத்திய கணக்கிடலின் முடிவுகள் 98, 98, 99, 97, 99, 99 என இருக்கும் நிலையில் தொடர் முடிவுகளின் இடைவெளி 97-99 என்றாகிறது. அதுவே வேறு ஓர் ஆய்வில் கிடைக்கும் முடிவுகள் 90, 90, 68, 56, 99, 99 என இருந்தால் இடைவெளி 56-99 என்று அமைகிறது.
இங்கே நிலையான முடிவு கேள்விக்குறியாகிறது. ஆனால் வேறொன்றையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். நிலையான முடிவு, சரியான முடிவினைப் போல் உண்மையான முடிவைச் சார்ந்ததல்ல. தொடர்ச்சியான கணக்கிடலின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிலையான முடிவை எட்டிவிட வாய்ப்பு உள்ளது.
கள வழிமுறைகள்
இப்பொழுது நாம் எங்குக் கணக்கிடுதலை நடத்த வேண்டும் என்பதையும் முழுமையான கணக்கிடலா அல்லது மாதிரி கணக்கிடலா என்பதனையும் அறிந்துகொண்டோம். அடுத்து, நாம் கணக்கிடுதல் களத்தில் காணப்படும் வழிமுறைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
இன்று வெவ்வேறு வகையான கணக்கிடுதல்கள் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. எல்லா வகைகளும், எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் சரியானதாக இருப்பதில்லை.
நாம் படிக்கும் பறவைகள், அவை வாழும் இடம் போன்றவற்றைச் சார்ந்தவை. இம்முறையில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த வகை கணக்கிடுதலாக இருப்பினும் பொதுவாகச் சில விதிமுறைகளை அவற்றைச் செயல்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. அவை முறையே 1) எந்தக் காலம் மற்றும் எந்த நேரத்தில் கணக்கிடல் செய்வது 2) கணக்கிடல் செய்யும் இடத்தின் சரியான அளவு 3) எத்தனை முறை கணக்கிட வேண்டும் 4) நம் நடையின் வேகம் (அ) நம் வண்டியின் வேகம் 5) கணக்கிடலுடன் சேகரிக்கக்கூடிய வேறு தகவல்கள் ஆகியனவாகும்.
பறவை கணக்கிடலில் பொதுவாய் வரைபடக் குறியிடல் (Territory mapping), கோட்டுக் கணக்கிடல் (Line transect) மற்றும் வட்டத்தளக் கணக்கிடல் (Point Count) என்ற மூன்று வகைகள்தான் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வரைபடக் குறியிடல்
இம்முறை பெரும்பாலும் பறவைகளின் இனப்பெருக்கக் காலங்களில் பயன்படக் கூடியதாகும். இனப்பெருக்கக் காலங்களில் பறவைகள் தங்களை ஒரு சிறிய இடத்திற்குள், ஒரு குறுகிய காலத்திற்கு முழுமையான வாழ்வியலை மேற்கொள்ளும். பெரும்பாலும் கூடும், அந்தக் கூடு சூழ்ந்த சிறிய இடமுமே அவற்றின் வாழ்விடமாகும்.
உயர்தர வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பறவையைப் பார்க்கும் இடம் வரைபடத்தில் குறிக்கப்படும். இது போன்று பல தொடர் நிகழ்வில் அவ்விடங்களில் இனப்பெருக்கம் செய்யும் ஜோடிப் பறவைகளின் எண்ணிக்கைகள், அவற்றின் கூடுகள், அவை இருக்கும் இடம், அவை பாதுகாக்கும் இடங்களின் அளவு போன்ற செய்திகளை இந்த வரைபடக்குறியிடல் வகையில் எளிதில் அறியலாம்.
இம்முறை வெற்றியடைவதற்கு உயர்தர வரைபடக் குறிப்பும் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியான கணக்கிடலும் தேவையாகின்றன. இவ்வரைபடக் குறியிடல் முறையில் மிகச்சிறிய அளவில் உள்ள இடத்தையே கணக்கிடல் செய்யமுடியும். மேலும், மிக அடர்த்தியான காடுகளில் இம்முறை அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இம்முறை நன்கு பயன்படுத்தப்படுகிறது.
கோட்டுக்கணக்கிடல் (Line transect) வழித்தடக்கணக்கிடுதல்
கோட்டுக்கணக்கிடல் என்பது முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட ஒரு பாதை அல்லது வழியை மூலமாக எடுத்துக்கொண்டு கணக்கிடல் செய்வது ஆகும். இது இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவை ‘நிலையான தூரம் கொண்ட வழித்தடக் கணக்கிடல்’ (Fixed line transect) மற்றும் ‘மாறும் தூரம் கொண்ட வழித்தடக் கணக்கிடுதல்’ என்பனவாகும்.
நிலையான தூரம்கொண்ட வழித்தடக் கணக்கிடல் வகையில் பாதையின் நீளமும் அதன் இருபக்க அகலமும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு உட்பட்டுள்ள பறவைகளை மட்டுமே கண்டும் கேட்டும் கணக்கிடப்படுகிறது. அதுவே மாறும் தூரம்கொண்ட பாதையில் நீளத்தை மட்டுமே நிர்ணயித்துக்கொண்டு அதன் அகலத்தைப் பறவைகளைப் பார்த்த மற்றும் கேட்ட இடங்களின் தூரம்கொண்டு ஆய்வின் முடிவில் நிர்ணயித்துக் கொள்ளப்படுகிறது. இந்த முறையில் நம் நடைவேகம் மிக முக்கியமானதாகும். பொதுவாக மணிக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடப்பது என்பதனைக் காடுகளில் ஓர் உகந்த வேகம் என்று சொல்லலாம்.
வட்டத்தளக் கணக்கிடல் (Point Count)
வட்டத்தளக் கணக்கிடல் என்பது ஒரு நேர்க் கோட்டில் வெவ்வேறு இடங்களில் நின்று அவ்விடங்களில் மட்டும் பறவை கணக்கிடலை மேற்கொள்ளுதல் ஆகும். பெரும்பாலும் 2 முதல் 20 நிமிடங்கள் வரை அவ்விடங்களில் நின்று, கேட்ட மற்றும் பார்த்த பறவைகளைக் கணக்கிடலாம். இம்முறையிலும் தொடர் கணக்கிடல் இன்றியமையாதது.
மேற்சொன்ன மூன்று முறைகள் மட்டுமன்றி வேறு சில முறைகளும் கணக்கிடுதலுக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக ஆயிரக்கணக்கில் மலைமுகடுகளிலோ, மரங்களிலோ, நிலத்திலோ, குகைகளிலோ கூடுகட்டி வாழும் பறவைகளை நேரடியாக எண்ணுதல் மூலமாகவோ, புகைப்படம் எடுத்து அதன்வழி எண்ணுதல் மூலமாகவோ கணக்கிடலாம்.
சில நேரங்களில் அவ்விடத்தைச் சிறு சிறு பாகங்களாகப் பிரித்துக் கணக்கிடலை மேற்கொண்டு அக்கணக்கிடலை அவ்விடம் முழுமைக்குமானதாகக் கணிக்கலாம். இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக இரவில் தங்கும் இடங்களிலும், அவை அதிகாலையில் புறப்படும் நேரத்திலும் கணக்கிடலாம். புலம்பெயரும் பறவைகளையும் இம்முறையிலேயே நாம் கணக்கிடலாம்.
இம்முறைகள் மட்டுமின்றி பறவைகளை வலை கொண்டு பிடித்து அப்பறவைகளைக் குறியிட்டுப் பின் விட்டுவிடுதல் மூலமும் கணக்கிடுதலை நடத்தலாம். மிக அரிதான பறவைகளை, அவை எழுப்பும் ஓசைகளை ஒலிப்பெருக்கியின் வழி வெளிப்படுத்தி அதன் மூலம் அப்பறவையினைத் தூண்டி ஓசை எழுப்பச்செய்து கணக்கிடலாம்.
கணக்கிடலுக்கு எம்முறையினைப் பயன்படுத்தினாலும், எவ்விடமாக இருந்தாலும், சூரியன் உதிப்பதற்குச் சற்று முன்பாக ஆரம்பித்து நல்ல வெப்பம் தாக்கும் மதியத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளுதல் நலம். பெரும்பாலும் 6 முதல் 10 மணிக்கு உட்பட்ட பொழுதை உகந்த பொழுதாகக் கூறலாம். நன்கு மழைபெய்யும் நேரமோ பனிமூட்டம் சூழ்ந்த நேரமோ மேகம் மூடி இருளாகக் காட்சி அளிக்கும் நேரமோ கணக்கிடலுக்கு உகந்த நேரங்கள் அல்ல.
இந்த 6 முதல் 10 மணிவரை என்பது ஒரு பொதுவான கணக்கிடல் பொழுதாகும். நாம் படிக்க நினைக்கும் பறவையைப் பொறுத்து நேரத்தை மாற்றிக் கூட அமைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் 6 முதல் 10 மணியில் பறவைகள் மிகத் துடிப்பாக ஓசை எழுப்பித் தங்கள் பணிகளைச் செய்ய கூடியனவாக இருப்பதால் இந்நேரத்தில்தான் கணக்கிடும் அனைத்துப் பறவைகளையும் நாம் காணவோ அவை எழுப்பும் ஓசைகளைக் கேட்கவோ முடியும். எனவேதான் கணக்கிடுதலுக்கு இந்த நேரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இருப்பினும் சில பறவைகள் இந்த நேரங்களைத் தவிர்த்து இரவும் பகலும் இணையும் நேரங்களில் துடிப்பாய் இருக்கும்.
ஆக மொத்தத்தில் கணக்கிடல் நிகழ்த்த காலை 6 முதல் 10 மணி வரையும் மாலை 4 முதல் 6 மணிவரையும் உள்ள நேரங்களை உகந்த பொழுதுகளாகச் சொல்லலாம். ஆனால் ஓர் இனப்பறவையின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடலுக்கு உட்படுத்தும் போது அப்பறவையின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து கொண்ட பின் அதற்கு ஏற்ப கணக்கிடும் நேரத்தை அமைத்துக் கொள்ளுதல் நலம். (உதாரணமாகக் கழுகுகளை வெப்பம் மிகுதியாக உள்ள நேரத்தில் கணக்கிடல் எளிது).
கணக்கிடும்போது மற்றொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லா பறவைகளும் நம் கண்ணில் தென்படுவது போன்று தம் பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்வதில்லை. சில பறவைகள் மிக ரகசியமாகவே தம்முடைய பழக்க வழக்கங்களை மேற்கொள்கின்றன. இங்கு ரகசியம் என்பது மறைவான இடத்தைக் குறிக்கும். இவ்வாறு மறைவான இடத்தில் வாழும் பறவைகளை அவற்றின் சப்தத்தை வைத்தே நாம் கணக்கிட முடியும். ஆக நேரடியாகப் பார்த்து எவ்வாறு ஒரு பறவையை நாம் இனம் கண்டு கொள்கின்றோமோ அதுபோல் பறவையின் குரலையும் நாம் இனம் காணும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு கணக்கிடல் என்பது முழுமையடையும்.
சில நேரங்களில், மிக மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பறவைகளும் மறைவான இடத்தில் வாழும் பறவைகளும் நம்முடைய கணக்கிடலில் இருந்து விடுபட்டுவிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அப்பறவையின் கூடும் கணக்கிடலுக்கு உட்படுத்தப்படும். இப்படி, பறவையை நேரடியாகப் பார்த்து எண்ணுதல், நேரடிக் கணக்கிடல் எனவும்; பறவையின் ஒலி, கூடு அல்லது வேறு அறிகுறிகளை வைத்துக் கணக்கிடல் மறைமுகக் கணக்கிடல் எனவும் அழைக்கப்படுகிறது.
காலப் பங்கிடலை அறிதல்
ஆய்வில் அடுத்ததாக வருவது பறவைகள் எவ்வாறு தங்கள் பழக்கவழக்கங்களைக் காலப்பங்கீடு செய்கின்றன என்பதனை அறிவது ஆகும். இக்காலப் பங்கீடு அறிதலில் என்ன மாதிரியான பழக்கங்களை ஒரு பறவை தன் வாழ்நாளில் மேற்கொள்கிறது என்பதனையும் அறியமுடியும்.
இவ்வாய்வு இரண்டு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது அவை:
- குழும ஆய்வு (Scan sampling)
- தனி உயிர் ஆய்வு.
குழும ஆய்வு
குழும ஆய்வானது, ஆய்வுக்குரிய உயிரி தன் குழுவினருடன் இருக்கும் நேரங்களில் ஈடுபடக்கூடிய அனைத்துப் பழக்க வழக்கங்களையும் அதற்குச் செலவிடும் நேரத்தையும் கணக்கிட உதவும். இம்முறை கூட்டமாக வாழும் பறவைகளின் சமுதாயப் பழக்கவழக்கங்களை அறியப் பயன்படுகிறது. இந்த ஆய்வானது காலை ஒளி பரவும் போது ஆரம்பித்துப் பின் ஒளி மங்கும் இரவில் முடிவதாகப் பெரும்பாலும் அமைத்துக் கொள்ளப்படுகிறது. 10 நிமிடம் ஒரு குழுவில் ஒவ்வொரு தனி உயிரின் முதல் நடவடிக்கையை (நாம் பார்க்க) மட்டும் பதிவு செய்து பின் 5 நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் முன்பு கூறியது போல் 10 நிமிடம் தனி உயிர் நடவடிக்கையைப் பதிவு செய்யலாம்.
இது போன்று இக்குழுவைக் காலை முதல் மாலை வரை பதிவு செய்யலாம். அல்லது நம்முடைய பார்வையிலிருந்து அக்குழு மறையும் வரை கணக்கிடலாம். இதற்கென்று தயாரிக்கப்பட்ட அட்டவணையில் நேரத்துடன் இந்நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் தேவையாகிறது. முடிந்தவரை குழுவில் பங்கேற்கும் உயிரிகளின் இனம் (ஆண்/பெண்) வயது (குஞ்சு/இனம்/உயிர்/ முதிர்/ உயிர்) போன்ற பதிவுகள் இருத்தல் இன்றியமையாதது. இதுவே குழுவின் இனம் மற்றும் வயது சார் நடத்தைகளை எளிதில் அறியப் பயன்படுகிறது.
தனி உயிர் ஆய்வு
தனி உயிர் ஆய்வில் ஆய்வாளர் ஒரு தனி உயிரியைக் குறிவைத்து அதன் நடவடிக்கைகளைப் பதிவு செய்கின்றார். இம்முறையிலும் காலை முதல் மாலை வரை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். ஆனாலும், அவ்வுயிரி ஆய்வாளரின் பார்வையிலிருந்து மறையும்போது நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில் ஒரு நிமிடத்தின் துவக்கத்தில் இப்பறவை எத்தகைய செயலை நிகழ்த்துகிறதோ அதனை அந்நிமிட நடத்தையாகப் பதிவு செய்து, பின் ஒரு நிமிட இடைவெளி விடவேண்டும். மீண்டும் அடுத்த நிமிட நடத்தையைப் பதிவு செய்து இவ்வாய்வைத் தேவையான நேரம் வரை அல்லது பறவை நம் கண்ணில் படும்வரை தொடருதல் வேண்டும்.
இவ்வாறு கவனிப்பதன்மூலம் ஒரு பறவை எவ்வளவு நேரம் ஒரு நடத்தைக்குச் செலவிடுகிறது என்பதையும் ஒரு பறவையின் நடத்தை அதிகமாக எந்நேரத்தில் நிகழ்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக, எத்தனை விதமான நடத்தைகளை ஒரு பறவை மேற்கொள்கிறது என்பது போன்ற மிக நுட்பமான செய்தி இம்முறையில் அறியப்படுகிறது.
உண்மையில் மேற்சொன்ன இரு முறைகளிலும் ஆய்வாளர் சோர்வடைய வாய்ப்புகள் மிகுதி. எனவே அச்சோர்வு ஆய்வைப் பாதிக்காத வகையில் இடைவெளியைச் சில நேரங்களில் மிகுதிப்படுத்தித் தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பறவைகள் தொடர்ந்து முழுமையாக ஓரிடத்தில் இல்லாது அவ்வப்போது பறத்தலையும் மேற்கொள்ளும். பாலூட்டிகளிடம் ஆய்வு நிகழ்த்தும்போது உண்டாகும் தொய்வு இதில் சற்றுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.
இவ்வாய்வின் முடிவுகளைச் சரியாகச் சொல்வதற்கு வேறு சில உண்மைகளையும் மேற்சொன்ன பதிவுகளுடன் சேர்த்துப் பதிவுசெய்தல் தேவையாகும். உதாரணமாக, ஒவ்வொரு மணிநேரத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றைச் சொல்லலாம். இவ்விரு காரணிகளும் பறவைகளின் நடத்தைகளைச் சில நேரங்களில் நிர்ணயிப்பதும் உண்டு.
இரை தேடல் முறை பற்றிய ஆய்வு
ஒரு பறவையோ ஒரு குழுவோ எந்தெந்த முறையில் இரையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுகிறது என்பது தற்போது நடைமுறையில் காணப்படும் ஆய்வியல் முறையாகும். இம்முறையில் ஒருபறவை எத்தளத்தில் இருந்து எந்த வகையான இரையை எந்த முறையின் மூலம் பெறுகிறது என்ற உண்மைகளை அறியமுடிகின்றது.
இதன் வாயிலாக ஒரு பறவையின் இரை தேடல் முறைகளைக் குறிப்பாகக் கழுகு இனங்களைத் தவிர்த்து மற்ற பறவைகளுக்குக் கீழ்க் கண்ட முறையில் இனம் பிரித்துள்ளார்கள். இருந்தாலும் இம்முறையில்கூட சில அரிதான முறைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்கு, உதாரணமாகச் சிறு கிளைகளின் உதவிகொண்டு பூச்சிகளைத் தோண்டி எடுத்து உண்ணும் பறவைகளின் நடத்தை முறையைக் குறிப்பிடலாம்.
மேல்தள தேடல் முறைகள்
பொறுக்கல்: அமர்ந்திருக்கும் இடமருகே உள்ள தளங்களில் கால்களையோ அல்லது கழுத்தையோ பெரிய அளவில் நீட்டாமலும் எந்தவிதமான சிறப்பு உடல் அசைவுகளைச் செய்யாமலும் இரையை அடைவதைக் குறிப்பது பொறுக்கல் முறையாகும். இதை இலைமீது பொறுக்கல், கிளைமீது பொறுக்கல் என்ற இரு பிரிவாகப் பகுக்கலாம். சக்தி சேமிப்பில் மிகச்சிறப்பான ஓர் உணவுதேடல் முறை என்று இதனைக் குறிப்பிடலாம்.
உடல் நீட்டிப்பொறுக்கல்: இம்முறை மேற்சொன்ன முறையை ஒத்து உடலுறுப்புகளைச் சற்று நீட்டி இரையை அடைவதில் வேறுபடுகிறது. இதில் கீழ்க்கண்ட உட்பிரிவுகளும் உண்டு.
உடல் மேல் நீட்டிப் பொறுக்கல்: இம்முறை கழுத்தைச் சற்று மேல் நோக்கி உயர்த்தி, தலைமேல் உள்ள இலையின் கீழ் உள்ள இரையை உண்ணுதல் ஆகும். பார்ப்லர் இனப் பறவைகள் இம்முறையைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவை.
(அ) உடலைப் பக்கவாட்டில் நீட்டிப் பொறுக்குதல்: இம்முறை உடலை, உடலுறுப்புகளைப் பக்கவாட்டில் நீட்டி இரையை உண்ணுவதைக் குறிக்கும். உடலைக் கீழ்நோக்கி நீட்டிப் பொறுக்கல் முறை என்பது உடலை, உடலுறுப்புகளைக் கீழ்நோக்கி நீட்டி இரையைப் பிடித்தலைக் குறிக்கும்.
மேற்சொன்ன அனைத்துமே சில ஆய்வாளர்களால் “பொறுக்கல்” முறையில் சேர்த்து ஆய்வு செய்யப்படுகிறது.
தொங்கித் தேடல்: இம்முறையில் பறவைகள் தம் கால்களைப் பயன்படுத்தித் தொங்கிக்கொண்டு இரையை அடைவதைக் குறிக்கும். இந்தத் தொங்கும் திறன் சில பறவைகளில் மட்டும் சிறப்பாய் அமைந்துள்ளதால் இம்முறையை ஒரு வகையாக இணைத்துள்ளார்கள்.
கிளி இனங்கள், டிட் இனப் பறவைகள் இம்முறையை அதிகம் பயன்படுத்துகின்றன. இம்முறை சிக்கலான இடங்களில் அமைந்துள்ள இரைகளைப் பிடிப்பதற்காகப் பரிணமித்திருப்பதாகக் கருதலாம். இம்முறையில் விலங்கு மற்றும் தாவரப் பொருட்களும் (பழம், பூ, தேன்) இரையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதிலும் சில உட்பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தலையை மேல்நோக்கி வைத்துத் தொங்குதல், தலையைக் கீழ்நோக்கி வைத்துத் தொங்குதல், உடலையே தரைக்கு இணையாக வைத்துத் தொங்குதல் மற்றும் முற்றிலுமாகத் தலைகீழாகத் தொங்கி இரையைப் பிடித்தல் என்று பிரித்து ஆய்வது நல்லது.
சிறிது நடந்து பொறுக்கல்: இவ்வகை இரை தேடல் என்பது பறவையானது அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி எடுத்து வைத்து இரையை அடைதலைக் குறிக்கும்.
(ஆ) தளத்திற்கு அடியே தேடல்
இம்முறையில் பறவைகள் தாம் நிற்கும் தளத்தைச் சற்று சேதப்படுத்தி (கிண்டி, கிளறி, நோண்டி, உட்புகுத்தி) இரையைப் பெறுகின்றன. இம்முறையை மேற்கொள்ளாமல் பறவைகளுக்கு இரை கிட்டுவதில்லை.
1. அலகை நுழைத்துத் தேடல்: இம்முறையில் அலகை துளைகள், வெடிப்புகள் போன்றவற்றில் நுழைத்து இரையைத் தேடுகின்றன. இதற்கேற்ப பறவைகளுக்கு அலகு நீளமாகப் பரிணமித்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
2. அலகை நுழைத்துப் பின் விரித்துத் தேடல்: இம்முறையில் அலகை நுழைத்துப் பின் சிறிது அலகை விரிப்பதன் மூலம் தளத்தைச் சற்று விரித்தோ, பிளந்தோ இரையைத் தேடுகின்றன.
3. அலகால் கொத்தித் தேடல்: இம்முறை தளத்தை அலகால் கொத்தி இரையைப் பிடித்தலைக் குறிக்கும். பெரும்பாலும் மரங்கொத்திகள் இம்முறையைப் பின்பற்றுகிறது. இதன் மூலம் ஒரே கொத்தலில் இரையைப் பறவை அடைகிறது.
4. தொடர்கொத்தல்: தொடர்கொத்தல் மூலமாகவும் இரையை மரங்கொத்திகள் பிடித்துண்கின்றன.
5. செதுக்கல்: இம்முறையானது சிறிய பட்டைகளை அலகால் செதுக்குவது போல் பெயர்த்து இரையைப் பறவைகள் அடைவதைக் குறிக்கும். இதுவும் மரங்கொத்திகளிடம் காணப்படுகிறது.
6. கிளருதல்: இது தரையைக் கால்களால் கிளரி இரையை, தானியங்களை உண்ணும் முறையாகும். இது கோழி இனங்களில் காணப்படுகிறது.
காற்றில் இரையைப் பிடித்தல்:
இம்முறையில் வானில் பறக்கும் பூச்சிகளை ஓரிடத்தில் இருந்து பறந்து சென்று பிடித்துவிட்டு மீண்டும் தன் பழைய இடத்திற்கே பறவைகள் திரும்பும் அல்லது காற்றிலேயே தொடர்ந்து பறந்து பறந்து பல இரைகளைப் பிடித்தல் போன்ற செயல்களைக் குறிக்கும். ஸ்விட், பீஃஈட்டர் போன்ற பறவைகள் இவ்வகையில் இரையைப் பெறுகின்றன.
மேற்கண்ட அனைத்து முறைகளையும் பதிவு செய்யும்போது எந்தெந்த தளங்களில் இரை பிடிக்கப்பட்டது என்பதனைப் பதிவு செய்வதும் முக்கியம். குறிப்பாகத் தாவரத்தின் பெயர், இலை, கிளை, பட்டைகள், தரை, பாறைகள், பூக்கள் போன்றவற்றைப் பதிவு செய்தல் வேண்டும்.
இதே போல் உணவைக் கையாளும் விதத்தையும் நாம் பதிவு செய்யலாம். உதாரணமாக உணவு உடனே விழுங்கப்படுகிறதா? பிய்த்துப் பின் உண்ணப்படுகிறதா? உணவு மேலும் கீழும் பக்கவாட்டிலும் உண்ணும் முன் ஆட்டப்படுகிறதா? உணவு ஏதேனும் இடத்தில் வைத்துத் தேய்க்கப்படுகிறதா? உணவு கிழிக்கப்பட்டுப் பிறகு உண்ணப்படுகிறதா? என்றும் பதிவு செய்யலாம்.
மேற்சொன்ன அனைத்தையும் ஓர் இனப்பறவைகளிடமோ அல்லது ஓர் இடத்தில் காணப்படும் அனைத்துப் பறவைகளிடமோ ஓர் ஆய்வாளர் தேட முற்படலாம். இவ்வாய்வில் ஓர் ஆய்வாளர் முதன் முதலில் ஒரு பறவையைப் பார்க்கும் போது அப்பறவை மேற்கொள்ளும் செயலைப் பதிவு செய்து ஆய்வை அடுத்த பறவைக்கு மாற்றவேண்டும். ஒரே பறவை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது வெவ்வேறு தாவரங்களில் அல்லது தளங்களில் முதல் நடத்தையை மட்டும் பதிவு செய்தல் நல்லது.
இதுவரை பறவைசார் உண்மைகளை மட்டுமே ஓர் ஆய்வாளர் சேகரிக்கும் முறைபற்றி பார்த்தோம். இவ்வுண்மைகள் மட்டுமே ஓர் ஆய்வை முழுமைப்படுத்திவிடாது. மேற்கூறியவற்றில் சேகரித்த உண்மைகள் இவ்வாறாகப் பறவைகள் நடந்துகொள்கின்றன என்று கூறமுடியுமே தவிர, ஏன் அப்படி நடந்துகொள்கின்றன என்ற கேள்விக்குப் பதிலளிக்க இயலாது. அதற்காகச் சில பெரு இருப்பிட அம்சங்கள், நுண் இருப்பிட அம்சங்கள், வெப்பநிலை, ஈரப்பதம், ஓர் இடத்தில் காணப்படும் உணவின் அளவு போன்றவற்றையும் சேர்த்து அளவிடுதல் தேவையாகும்.
உதாரணமாகப் பழம் உண்ணும் பறவையைப் படிக்கும் ஆய்வாளர், படிக்கும் இடத்தில் காணப்படும் பழங்களின் வகைகள், அப்பழம் தரும் மரங்களின் அடர்த்தி, அவ்விடத்தின் அம்சங்களில் காலமாற்றத்தில் ஏற்படும் இனப்பெருக்கம் மற்றும் இலைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றையும் சேர்த்துப் படித்தல் அவசியம். இதோடு சேர்த்து இப்பழங்களைச் சார்ந்து வாழும் வேறு பறவை மற்றும் விலங்குகளைப் பற்றியும் படித்தால் அவ்விடத்தில் பழங்களுக்காக நடைபெறும் போட்டியையும் தெரிந்து கொள்ளலாம்.
0
சூழ்நிலை மாறிலிகள் சிலவற்றைப் பதிவு செய்யும் முறையையும் சற்றுத் தெரிந்து கொள்வோம். வெப்பநிலையை உயர் தாழ் வெப்பநிலைமானி உதவி கொண்டு அளக்கலாம். இந்தக் கருவியைத் தரையில் இருந்து 1.25மீ உயரத்தில் பொருத்தி வெப்பநிலையை தேவைக்கேற்பப் பதிவு செய்வது ஒரு முறை. வேறுமுறையில் வெப்பநிலைமானியைத் தேவைப்பட்ட இடத்தில் மட்டுமே பொருத்தி அந்நுண்ணிய இட வெப்பநிலையையும் அறியலாம். மழை அளவு அறிவதற்கு, 10-20செ.மீ விட்டம் கொண்ட உருளையை நிலத்தில் புதைத்து அவ்வுருளையின் மேல் ஒரு புனல் ஒன்றைச் சொருகி மழைநீர் சேகரிக்கப்படுகிறது.
பின் மழையின் அளவு = சேகரிக்கப்பட்ட மழைஅளவு / (உருளையின் விட்டம் செ. மீட்டரில்)2
என்ற சூத்திரம் மூலம் மழை அளவு அறியப்படும். நீர் மற்றும் மண் போன்றவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் தரத்தையும் இதற்கென உள்ள தனிக் கருவிகள் (Water & Soil Analyses Kit) மூலம் அறிந்து அப்பண்புகளுக்கும் பறவைகளின் நடத்தைகளுக்கும் தொடர்பேதும் உண்டா என ஆராயலாம்.
அலைவழி ஆய்வு
சில பறவைகள் இரவாடிகளாய் இருக்கும் பொழுதோ நீண்ட தூரம் புலம்பெயரும் பழக்கம் உடையதாய் இருக்கின்ற பொழுதோ ஆய்வாளர் அப்பறவையைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது கடினம். இந்நிலையில் வான்வழி பரவும் அலைவழி மூலம் அவ்வாய்வைச் செய்யும் வழியும் இருக்கிறது. இதன்மூலம் பறவையின் இருப்பிடத் தேர்வு, புலம் பெயரும் வழித்தடங்கள் போன்றவற்றினை எளிதில் அறியலாம்.
சென்சார் எனும் கருவிகள் பறவைகளின் உடலில் பொருத்தப்பட்டு இவ்வாய்வு நடத்தப்பெறுகிறது. இது பறவைகளின் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு சமிக்ஞைகளை அனுப்பும் வசதி கொண்டு இருப்பதால் செயற்கைக்கோள் உதவிகொண்டு அப்பறவை இருக்கும் இடம், அதன் நடவடிக்கைகள் முதலியன இந்தச் சென்சார்கள் மூலம் அறியப்படுகின்றன. இன்று உயிரியின் உடலில் உயிர் இல்லை என்பதனைக்கூட உடனுக்குடன் தெரிவிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேறியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவ்வாய்வு சிறிது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் இருக்கிறது. மேலும் நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதாலும் அனுமதி எளிதில் கிடைக்காமல் போவதாலும் பல நேரங்களில் இந்த ஆய்வுமுறை தவிர்க்கப்படுகிறது.
இரை ஆய்வு
ஒரு பறவை எவ்வகையான இரையை உண்கிறது என்பதனை நேரடியாகப் பார்த்தல் அல்லது அதன் கழிவைச் சேகரித்து அதைப் பரிசோதித்தறிதல் என இருவழிகளில் அறியலாம்.
நேரடியாகப் பார்த்தல் என எளிதாகக் கூறினாலும் உண்மையில் ஓர் இடத்தில் இருக்கின்ற இரைகளைப் பற்றிய அறிவு உள்ளபோதுதான் ஓர் ஆய்வாளர் எந்த இரை உண்ணப்படுகிறது என்பதை அறியமுடியும். அதேபோல் அலகைவிடச் சிறிதாக இரை இருந்தால் ஆய்வாளர் இதை அறிவது சிக்கலாகிறது.
ஒரு காலத்தில் படிக்கும் பறவையைக் கொன்று குடலை ஆய்ந்து அதில் காணப்படும் மீதியை வைத்துப் பறவைகள் உண்ணும் இரையைக் கண்டறிந்தனர். ஆனால் இது பறவையின் உயிருக்கு அழிவு விளைவிப்பதால் இம்முறை தவிர்க்கப்பட்டு இன்று கழிவுகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாம் ஆய்வு மேற்கொள்ளும் பறவையின் கழிவு மற்றும் உமிழும் கழிவுகளை அடையாளம் தெரிந்து, அதை மட்டும் எந்த ஐயத்திற்கும் இடமின்றிச் சேகரிக்க வேண்டும். பொதுவாக இவை, பறவையின் கூட்டிலோ அல்லது அது அடையும் இடத்திலோ பெரும்பாலும் சேகரிக்கப்படுகின்றன.
கழிவுகளை நன்கு நீரில் தொடர்ந்து கழுவுவதன் மூலம் செரிக்காத இரையின் வெவ்வேறு பாகங்களை (எலும்புகள், ஒடுகள் போன்றவை) உருப்பெருக்கி மூலம் தனித்தனியே பிரித்துப் பின் இனம் வாரியாக வகைப்படுத்த வேண்டும். சில நேரங்களில் நுண்ணோக்கியின் தேவையும் இங்கு அவசியமாகிறது.
பைனாக்குலர்
பறவை ஆய்வில் பைனாக்குலர் என்பது ஒரு தவிர்க்க முடியாத கருவியாக இருக்கிறது. இது ஆய்வாளரைப் பொருத்தவரை ஒரு பறவையை நன்றாகப் பார்ப்பதற்கு மட்டுமின்றி பறவைக்கு ஆய்வாளரால் தொந்தரவு ஏற்படுவதையும் குறைக்கிறது.
பைனாக்குலர் இன்று சில நூறு ரூபாயில் இருந்து லட்சம் வரை கிடைக்கிறது. இந்தக் இக்கருவியை இரண்டாக வகைப்படுத்தலாம். போரோ பிரிசம் மற்றும் கூரை (ரூஃப்) பிரிசம். கூரை பிரிசம் பைனாக்குலர் எளிதாகவும் சிறிதாகவும் நீர் மற்றும் தூசுகளால் பாதிக்காததாகவும் கண்ணருகு லென்சும் பொருளருகு லென்சும் ஒரு நேர்க்கோட்டில் அமைந்திருப்பதாகவும் நீண்டநாள் உழைப்பதாகவும் எளிதில் சீர்கெடாததாகவும் இருக்கின்றது.
போரோ பிரிசம் பெரிதாகவும், கடினமானதாகவும், நீர் மற்றும் தூசுகளால் சிறிது பாதிக்கும் தன்மை உடையதாகவும், கண்ணருகு லென்சும் பொருளருகு லென்சும் நேர்க்கோட்டில் அமையாமலும் எளிதில் சீர்கெடுவதாகவும் இருக்கின்றது.
அனைத்துத் தன்மையிலும் கூரை பிரிசம் சிறந்து விளங்குவதால் இதன் விலை சற்று மிகுதியாக இருக்கின்றது. இப்போது குறைவான விலையில் பைனாக்குலர்களும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.
பைனாக்குலரின் மேல் 7×20 என்பது போன்ற எண்கள் குறிக்கப்பட்டு இருக்கும். இவற்றில் முதல் எண் அதாவது 7 என்பது பார்க்கும் பொருள் பெரிதாக்கப்படும் மடங்கைக் குறிக்கும். அதற்கு அடுத்த எண் 20 என்பது பொருளருகு லென்சின் விட்டத்தை அதன் மில்லி மீட்டரில் குறிக்கும்.
பொதுவாக 7, 8, 10 என்ற வகையில் பைனாக்குலர்கள் உருப்பெருக்கத்தில் கிடைக்கின்றன. அதிக உருப்பெருக்கம் கொண்ட பைனாக்குலர்கள் 20க்கும் மேல் வெறும் கைகளால் கையாளும் போது ஏற்படும் சிறு அசைவு கூட ஒரு பறவையைத் தொடர்ந்து பார்க்கமுடியாமல் செய்துவிடும். எனவே இவற்றை முக்காலி கொண்டுதான் பயன்படுத்தவேண்டும்.
அதுவே பெரிய பொருளருகு லென்சைப் பயன்படுத்தும் போது அதிக வெளிச்சம் உள்ளே வருதலால் பார்க்கும் பொருள் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அது பைனாக்குலரின் எடை கூடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் பைனாகுலர் 10* பெருக்க அளவிலும் 40 பொருளருகு லென்சின் விட்டத்திலும் இருப்பது சாலச்சிறந்தது.
இரவு நேரத்தில் பார்க்க உதவும் பைனாக்குலர்களும் இன்று சந்தையில் வந்துவிட்டன. இவை சாதாரண பைனாக்குலரைக் காட்டிலும் சற்று விலை உயர்ந்தது.
(தொடரும்)