பறக்கும் திறன் பறவைகளிடையே வேறுபட்டுக் காணப்படுவதைப் போல பறக்கும் வகைகளும் வேறுபடுகின்றன. அவற்றில் மிதத்தல், இறக்கையை அசைத்துப் பறத்தல் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க வகைகளாகும்.
வல்லூறுகள், கழுகுகள் ஆகியன வானில் வட்டமடிக்கும் முறையைக் கவனித்தால் அவை இறக்கைகளை மேலும் கீழும் இயக்காமல் மிதப்பது போல் பறப்பதைக் காணலாம். இம்முறை மேலுயரும் விசையை மட்டுமே அதிகம் நம்பி புவியீர்ப்பு விசையைச் சமன் செய்வதால் வெப்பமடைந்த காற்று லேசாகி மேலெழும்புகிறது. அக்காற்றுடன் கழுகு தன்னை இணைத்துக்கொண்டு தன் சக்தியைச் செலவழிக்காமல் மேலெழும்புகிறது.
இந்நிகழ்வில் ஒரு வினாடிக்கு 4 மீட்டர் வரை காற்று உயரும். இதைப் போன்று தூண்களாக வெப்பக்காற்று மேலெழும்புவது தரையின் மேற்பரப்பில் நிகழ்கிறது. ஆய்வொன்றில் கழுகு இனப்பறவை ஒன்று வெறும் ஆறு வெப்பத் தூண்களை மட்டுமே பயன்படுத்தி 75 கி.மீ தூரப் பயணத்தை நிலத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் நிகழ்த்தியது கண்டறியப்பட்டது. ஒரு வெப்பத் தூணில் இருந்து மற்றொரு வெப்பக்காற்றுத் தூணிற்குமான இடைவெளியைப் பறவைகள் சிறு தாவல்கள் மூலம் அடைகின்றன.
![வானில் வட்டமடிக்கும் கழுகு](https://kizhakkutoday.in/wp-content/uploads/2022/09/kakkai-siraginile_ch09-3.jpg)
காற்று திசைமாறும் இடங்களில் மற்றொரு வகை மிதத்தல் நிகழ்கிறது. இந்நிகழ்வு கடலருகிலுள்ள மலைப்பாதைகள் வேகமாகச் செல்லும் படகுகளின் பின்புறம், கடற்கரையின் மேல் புறம் ஆகிய இடங்களில் நடக்கும். இம்மாதிரியான மிதத்தல் நீண்ட குறுகிய அமைப்புடைய இறக்கைகளைக் கொண்ட பறவைகளில் காணப்படுகிறது.
இறக்கைகளை அசைத்துப்பறத்தல்
இறக்கைகளைத் தகுந்த கோணத்தில் வைத்து மேலும் கீழும் அசைக்கும் போது மேலெழும்பும் விசையையோ அல்லது முன்னோக்கிச் செலுத்தும் விசையையோ ஒரு பறவை உருவாக்கிக்கொள்கிறது. இதனை ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகளின் இயக்கத்திற்கு ஒப்பிடலாம். இந்த இயக்கமும் கோணமும் பறவை முன்னோக்கிச் செல்வதற்கும் பின்னோக்கிச் செல்வதற்கும், (தேன்சிட்டு பறவையினத்தில்) ஒரே இடத்தில் நிலை கொள்வதற்கும் (மீன்கொத்தி பறவையினத்தில்) காரணங்களாய் அமைகின்றன.
![தேன்சிட்டு பறவை](https://kizhakkutoday.in/wp-content/uploads/2022/09/kakkai-siraginile_ch09-2.jpg)
இந்த இறக்கைகள் இயங்கும்போது 50க்கும் மேற்பட்ட தசைகள் செயல்படுகின்றன. இறக்கைகளை விரிக்க, மூட, மேலுயர்த்த, கீழ்த்தள்ள, திசைத்திருப்ப இத்தசைகள் செய்கின்றன.
அனைத்துப் பறவைகளும் இன்று பறப்பதில்லை. பறக்கும் தன்மை இழந்த நெருப்புக்கோழி மற்றும் கேசுவரிஸ் போன்ற பறவை இனங்களுடன் பறக்கும் தன்மை தவிர்த்த சில புறா மற்றும் கிளியினங்களும் பென்குயினும் உள்ளன. இவை பறப்பதில்லை.
பறக்கத் தேவையான உறுப்புகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் பாதுகாப்பிற்கும் அதிக சக்தி தேவைப்படுகிறது. பறவைகள் பறக்கத் தேவையில்லாதபோது பறப்பதற்கான சக்தியைச் செலவு செய்ய பரிணாமத்தில் இடம் இல்லை. ஆக கொஞ்சம் கொஞ்சமாக அச்செலவைத் தவிர்க்க இப்பறக்கும் தன்மை தவிர்க்கப்பட்ட கூறாகப் பரிணமித்துள்ளது. தேவைக்கு மீறிய உணவு, எதிரிகள் இல்லாமை, பறக்க தேவையின்மை ஆகிய மூன்றையும் பறத்தலைத் தவிர்த்தலுக்கான காரணங்களாகப் பரிணாமத்தில் விளக்கலாம்.
இந்தப் பறத்தல் நிகழ்வில் ஒரு வியப்பான உண்மையையும் நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது. வாத்து போன்ற பறவைகள் வானில் ‘V’ வடிவில் பறப்பதைக் காணலாம். அதற்கு அறிவியல்பூர்வமான ஒரு காரணமும் இருக்கிறது. இது போன்ற பறக்கும் பறவைகளின் இறக்கைகள் பொதுவாகச் சிறிதாகவும் எடைக்கேற்பவும் அமையாமல் இருக்கும். எனவே சக்தியைச் சேமிப்பதற்காக இவ்வாறு பறக்கின்றன.
![‘V' வடிவில் பறக்கும் வாத்து போன்ற பறவைகள்](https://kizhakkutoday.in/wp-content/uploads/2022/09/kakkai-siraginile_ch09-1.jpg)
முன்னால் செல்லும் பறவையின் இறக்கையின் நுனிக்குப் பின்னால் பறப்பதன் மூலம் பின்னால் பறக்கும் பறவை காற்றில் உருவாகும் இழுவிசையைக் குறைத்துத் தன் சக்தி செலவாவதைக் குறைத்துக்கொள்கிறது. முன்னால் செல்லும் பறவையின் இறக்கை இயக்கத்தில் உருவாகும் காற்றுச் சுழற்சியைப் பின்னால் வரும் பறவை தான் பறக்கச் சாதகமாய் முன்பறவையின் இறக்கையின் நுனிக்கு நேர் பின்னால் தன் இறக்கையின் நுனியை வைத்துக் கொண்டு குறைந்த சக்தியில் பறக்கிறது.
உடற் செயலியல்
பறவைகள் தம் உடல் வெப்ப நிலையை 40 டிகிரி செண்டிகிரேட்டில் வைத்துக்கொள்வதால் அவற்றால் வேகமான இயக்கத்தினையும் சுறுசுறுப்பையும் பெறமுடிகிறது. இருந்தாலும் இந்த வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வது என்பது உடற்செயலியலைப் பொறுத்தமட்டில் செலவுமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்த நிலை சில நேரங்களில் ஆபத்தினையும் கொடுக்கக்கூடியது. ஏனெனில் 46 டிகரிக்கும் மேல் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் உடலில் பல புரதங்கள் மாற்றியமைக்கப்படுவதை விட அழிவது அதிகமாக இருக்கும். இந்த வெப்பநிலை பறவைகளுக்கு வேகம் மற்றும் திறனைவிட அதிக அளவில் தாங்கும் சக்தியைக் கொடுப்பது சிறப்பம்சமாகும். உதாரணமாக, மிக வேகமாக இயங்கும் உயிரினங்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். ஆனால் பறவைகள் சோர்வடைவதில்லை. இது பறவைகளிடம் காணப்படும் வெப்பநிலையின் சிறப்பம்சமாகும். பல மணி நேரம் விடாது பறக்க இதுவே காரணம்.
இது போன்ற மிக அதிக செயல்பாடுகள் இந்தத் தாங்கும் திறனுடன் இணைந்து பறவைகளுக்குப் புதிய சூழல் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இருந்தாலும் மிகுதியான இச்செயல்களுக்கு அதிக அளவில் ஆக்ஸிஐன் கொடுக்க வேண்டியுள்ளது. உடனடியான வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் நச்சுக் கழிவுகளை நீக்கவேண்டியதும் அவசியம். இச்செயல்பாடுகளுக்குரிய ஆற்றலைப் பறவைகள் தாம் பெற்றுள்ள உறுதிவாய்ந்த சுவாச மண்டலத்திலிருந்தும், ரத்தவோட்ட மண்டலத்திலிருந்தும் பெறுகின்றன.
சுவாச மண்டலம்
பறவைகளின் சுவாசமண்டலமும் அதன் அமைப்பும் செயல்களும் பாலூட்டிகளைவிட முற்றிலும் மாறுபட்டவை. இதிலுள்ள நாசித்துளை, சுவாசக்குழல், நுரையீரல், காற்றுப்பைகள் ஆகியன காற்றின் வளிமண்டலத்திற்கும் ரத்த ஓட்ட மண்டலத்திற்கும் இடையே காற்றைப் பரிமாற்றம் செய்யும் கருவிகளாக இருக்கின்றன. ஒவ்வொரு சுவாசத்திலும் நுரையீரலில் இருந்து காற்று முழுவதுமாய் இடம் பெயர்கிறது. இது பாலூட்டிகளில் இல்லாத ஒரு நிகழ்வாகும்.
உதரவிதானம் எனும் பகுதியானது பாலூட்டிகளில் மார்புக்கூட்டை விரித்துச் சுருக்கி நுரையீரலை விரிந்து சுருங்க வைக்கின்றது. ஆனால் பறவைகள் ஸ்டர்னம் எனும் பகுதியைக் கீழ் அழுத்துவதன் மூலம் மார்புக்கூட்டையும் காற்றுப்பைகளையும் விரித்து காற்றினை உள்ளிழுக்கின்றன. இதே ஸ்டெர்னத்தைச் சுருக்குவதன் மூலம் மார்புக்கூடு சுருங்கி அதன் விளைவால் காற்றுப்பைகள் அழுத்தப்பட நுரையீரல் வழியே காற்று வெளிப்படுகிறது.
பன்னெடுங்காலமாய் இறக்கைகளின் அசைவும் சுவாசமும் ஒன்றாய் நிகழ்வதாய்க் கருதப்பட்டு வந்த ஒரு கருத்து தற்போது மறுக்கப்பட்டுள்ளது. இறக்கைகளின் அசைவு நேரிடையாய்ச் சுவாசத்தினை நடத்துவதில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் சுவாசமும் இறக்கை அசைவும் மத்திய நரம்புமண்டலத்திற்குக் கட்டுப்பட்டவை.
ஒரு பறவையின் எடையும் அளவும் கூடக் கூட அதன் சுவாச எண்ணிக்கை குறைகிறது. உதாரணமாக, பறக்காமல் இருக்கும்போது இரண்டு கிராம் எடையுடைய தேன்சிட்டு ஒரு நிமிடத்திற்கு 143 முறை சுவாசிக்கிறது. பத்து கிலோ எடையுள்ள ஒரு வான்கோழி ஒரு நிமிடத்திற்கு ஏழு முறை மட்டுமே சுவாசிக்கிறது. ஓய்வில் இருக்கும் பறவை மேற்கொள்ளும் சுவாசத்தைவிட 12இல் இருந்து 20 மடங்கு அதிகமாய் அது பறக்கும் போது சுவாசிக்கிறது.
நமக்குள்ள நாசித்துவாரம் போன்ற துவாரத்தைப் பொதுவாகப் பறவைகளின் அலகுகள் ஆரம்பிக்கின்ற இடத்தில் காணலாம். இந்த நாசி துவாரத்தைச் சில பறவைகளில் ஓவர்குலம் எனும் மூடி போன்ற அமைப்பு பாதுகாக்கிறது. இந்த அமைப்பு, குறிப்பாக நீர்ப் பறவைகளில் நீர் புகாமல் இருக்கவும், தேன்சிட்டு போன்ற பறவைகளில் மகரந்தத்தூள் நுழையாமல் இருக்கவும் செயல்படுகிறது. நாசித் துவாரத்தில் இருந்து நாசியறைக்குள் காற்று நுழைகிறது. இந்த நாசியறைகள் இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டடிருக்கும். ஒவ்வோர் அறையிலும் நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புகளும் உள்ளன.
மனிதன் உள்பட பல பாலுட்டிகளின் நுரையீரல் பெரியதாகவும், விரியக் கூடியதாகவும், மார்புக் குழியில் பை போன்று தொங்குவனவாவும் இருக்க, பறவைகளுக்கு இந்த நுரையீரல் சிறியதாகவும், அடக்கமாயும், நுரை போன்றும் காணப்படுகிறது. பறவையின் காற்றுப்பைகள் (air sac) பறவையின் சுவாச மண்டலத்தின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது.
![பறவையின் காற்றுப்பைகள்](https://kizhakkutoday.in/wp-content/uploads/2022/09/kakkai-siraginile_ch09-4.jpg)
இக்காற்றுப்பை அதிகபட்சம் இரண்டு செல் அடுக்குக் கொண்ட ஒரு சுவரால் ஆனது. இது உடற்குழியிலும், இறக்கைகளிலும், கால் எலும்புகளிலும் பரந்து காணப்படுகிறது. இக்காற்றுப்பை நுரையீரலின் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை குழாய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இது பறவைக்குத் தேவையான, அதிக அளவு ஆக்ஸிஜனைப் பெறுவதற்கும், பறக்கும் போது உருவாகும் அபாயகரமான உடல் வெப்பத்தைத் தணிக்கவும் உதவுகிறது. இதற்கு மேல் அமைந்துள்ள விரிந்த காற்றுப்பைகள், பறவைகள் பறக்கும் போது, அவற்றின் மென்மையான உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இந்தக் காற்றுப்பைகளின் எண்ணிக்கை பறவைகளுக்குப் பறவை மாறுபடுகிறது.
உதாரணமாகத் தையற்குருவியில் ஆறு பைகளும் கடற்சார் பறவைகளில் பன்னிரண்டாகவும் காணப்படுகிறது. சராசரியாக ஒன்பது காற்றுப்பைகளைப் பறவைகள் கொண்டிருக்கின்றன. மேல் கழுத்து மற்றும் மார்பினூடாக இருஜோடி பைகளும், கீழ் மார்பினூடாக ஒரு ஜோடி பைகளும், பெரிய வயிற்றுப்புறத்தில் ஒரு ஜோடி பைகளும், இறக்கைகள் இணையும் இடத்தில் ஒரு பையும் காணப்படுகின்றன.
உள்ளிழுக்கப்படும் முதல் காற்றானது கடைசி காற்றுப்பை வரை அனுப்பப்படுகிறது. அதே போல் முதல் முறை வெளிவிடப்படும் காற்று கடைசி காற்றுப்பையிலிருந்து வெளியேறி நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு அங்கு காற்றுப் பரிமாற்றத்திற்கு உள்ளாகிறது. பின் இரண்டாம்முறை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜன் இழந்த காற்று நுரையீரலில் இருந்து முன்புறம் உள்ள பைகளுக்குத் தள்ளப்படுகிறது. இரண்டாம் முறை வெளிவிடப்படும் நிகழ்வின் போது முன்புற பையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய காற்று வெளிப்புறத்திற்கு அனுப்பப்படுகிறது. இதையே ‘இரு சுவாச நிகழ்வு’ என அழைக்கிறோம்.
(தொடரும்)