Skip to content
Home » கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த பல புலவர்களையும் அவர் அணுகி விசாரித்தார். அவருடைய ஐயத்தை அகற்றும் விதமாக ஒருவராலும் விடை சொல்லமுடியவில்லை.

இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி மிக்க பண்டிதர் ஒருவர் பின்னந்தூரில் வசிப்பதாகவும் அவரைச் சந்தித்து தெளிவு பெறலாம் என ஒருவர் வழங்கிய ஆலோசனையைக் கேட்டு, அடுத்தநாள் காலையிலேயே அந்த இளைஞர் பின்னந்தூருக்கு நடந்து சென்றார். அவர் சென்ற நேரத்தில் அப்பண்டிதர் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்தவர்கள் அவர் குளக்கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிவித்தனர். அவர் வரும் வரைக்கும் வீட்டில் காத்திருக்க அந்த இளைஞருக்குப் பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு நேரிடையாக குளத்தங்கரைக்கே சென்றுவிட்டார்.

அங்கே பண்டிதர் கரையில் நின்றுகொண்டு துணிதுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் சென்று நின்றார் இளைஞர். அவரை ஏறிட்டுப் பார்த்த பண்டிதர் என்ன வேண்டுமென விசாரித்தார். சந்தர்ப்பச்சூழல் எதையும் பொருட்படுத்தாது, அந்த இளைஞர் தனக்கு ஏற்பட்ட இலக்கண ஐயங்களை அவரிடம் தெரிவித்தார். இளைஞரின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த பண்டிதரும், துவைக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு எண்ணற்ற எடுத்துக்காட்டுகளோடு ஒவ்வோர் உவமையையும் ஆர்வத்துடன் விளக்கமாகச் சொன்னார். பண்டிதர் கூறிய தெளிவான விவரங்களைக் கேட்டு இளைஞரின் ஐயம் அகன்றது. நன்றி கூறி புறப்படுவதற்காகத் திரும்பினார். பண்டிதர் புன்னகைத்தபடி அவரைத் தடுத்து குளத்தில் இறங்கி நீராடும்படி கூறி கீழ்ப்படிய வைத்தார். பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்று உண்ணவைத்து, மேலும் சிறிது நேரம் இலக்கணம் சார்ந்து உரையாடிவிட்டு வழியனுப்பி வைத்தார். ஐயத்தைப் போக்கிய அத்தமிழறிஞர் நாராயணசாமி ஐயர். இலக்கிய வேட்கை கொண்ட அந்த இளைஞர் திரு.வி.க. என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கலியாணசுந்தரம்.

சிறுவயதிலிருந்தே பள்ளிக்குச் செல்வதிலும் கல்வி கற்பதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் கலியாணசுந்தரம். காலில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக அவர் சில ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டியதாயிற்று. குணமடைந்து வெஸ்லி கல்லூரியில் ஏற்கனவே படித்த நான்காவது வகுப்பில் அவர் சேர்ந்தபோது, அவருக்கு பதினான்கு வயது முடிந்திருந்தது. அங்கு உயர்நிலை வகுப்பில் அவருக்கு தமிழாசிரியராக இருந்து பாடம் கற்பித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதிரைவேற்பிள்ளை. அவர் பாடம் நடத்தும் விதத்தால், இயல்பாகவே அவர் மனத்தில் தமிழிலக்கியம் மீது படிந்திருந்த ஆர்வம் பெருகியது.

பள்ளியிறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கதிரைவேற்பிள்ளைமீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளில், அவருக்குச் சார்பாக சாட்சி கூறுவதற்காக அவரோடு சேர்ந்து கலியாணசுந்தரமும் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அதன் காரணமாக அவரால் பள்ளியிறுதிக்குரிய செலக்‌ஷன் தேர்வுகளை எழுதமுடியாமல் போய்விட்டது. அதனால் பள்ளித் தலைமையாசிரியர் கலியாணசுந்தரத்துக்கு, தேர்வு எழுத அனுமதி வழங்க மறுத்தார். அதே வகுப்பில் இன்னொரு ஆண்டு படித்த பிறகு தேர்வு எழுதலாம் என்று சொல்லிவிட்டார் அவர். அதை ஏற்க விரும்பாத கலியாணசுந்தரம் பள்ளியை விட்டு வெளியேறினார்.

பள்ளிக்கல்வி தடைபட்ட போதும் தக்க ஆசிரியர்களை அணுகி விரும்பியதைக் கற்கத் தொடங்கினார் கலியாணசுந்தரம். பள்ளியில் ஆசிரியராக இருந்தபோதும் கோவில்களில் புராணம் சொல்வதிலும் நாட்டம் கொண்டவராக இருந்தார் அவருடைய பழைய ஆசிரியரான கதிரைவேற்பிள்ளை. கந்தசாமி கோவிலில் ஞாயிறு தோறும் தணிகைப்புராணத்தையும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலே செவ்வாய்க்கிழமைகளில் கந்தபுராணத்தையும் வெள்ளிக்கிழமைகளில் திருவிளையாடற் புராணத்தையும் சொல்லிவந்தார் அவர். தொடர்ந்து அவ்வகுப்புகளுக்குச் சென்று அவ்விலக்கிய நூல்களை ஆர்வத்துடன் தொடர்ந்து கேட்கத் தொடங்கினார் கலியாணசுந்தரம். இதனால் அவரிடம் தமிழிலக்கிய ஆர்வம் மேன்மேலும் பெருகியது.

அவ்வகுப்புகளுக்கு ஒதுக்கிய நேரம் போக, எஞ்சிய நேரங்களில் தணிகாசல முதலியாரிடம் சைவ நூல்களையும் சிதம்பர முதலியாரிடம் திருக்குறளையும் தேவப்பிரகாசம் பண்டிதரிடம் இராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளிடம் சமஸ்கிருதத்தையும் உபநிடதங்களையும் கற்றுக்கொண்டார். புதுப்பேட்டை தோட்டத்தெருவைச் சேர்ந்த பார்சுநாத நயினாரிடம் சமணக் கோட்பாடுகளையும் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். இராயப்பேட்டையில் அயோத்திதாஸ் பண்டிதர் நடத்திவந்த பெளத்த சங்கத்தில் திரிபிடகத்தையும் பிறநூல்களையும் கற்றார். மெளல்வியின் புதல்வரான அப்துல் கரீம் என்பவரிடம் குரானையும் தெரிந்துகொண்டார். அந்தக் காலத்தில் கிளின்பார்லோ என்பவருடைய ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘மதராஸ் டைம்ஸ்’ நாளேட்டின் இணைப்பிதழாக வெளிவந்த ‘ஷேக்ஸ்பியர் கிளப்’ என்னும் பகுதியில் வாரம்தோறும் ஷேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் போன்றோரின் படைப்புகளை அறிமுகப்படுத்தி வெளிவரும் கட்டுரைகளைப் படித்து ஆங்கில இலக்கியம் சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொண்டார்.

அத்தருணத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. லோயர் செகண்டரி தேர்விலும் புக் கீப்பிங் தேர்விலும் தேர்ச்சியடைந்த சான்றிதழ்கள் மட்டுமே அவர் கல்வியறிவு மிக்கவர் என்பதற்குச் சாட்சிகளாக விளங்கின. அச்சான்றிதழ்களின் துணையோடு கலியாணாசுந்தரத்தின் சகோதரர் ஸ்பென்சர் கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது.

1902ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த சுரேந்திரநாத் பானர்ஜியின் ஆங்கில உரையைக் கேட்ட கலியாணசுந்தரம் சுதந்திரப்போராட்டத்தின் மீது ஆர்வம் கொண்டார். லஜபதிராய், திலகர், விபின் சந்திரபால் ஆகிய மூவரும் தேசமெங்கும் பயணம் செய்து தம் உரைகளால் மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டினர். வங்காளத்திலிருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையும் மகாகவி பாரதியாருடைய ‘இந்தியா’ பத்திரிகையும் தேசப்பற்றை ஊட்டும் கட்டுரைகளை வெளியிட்டன. அவற்றை வாங்கிப் படித்த கலியாணசுந்தரத்தின் நெஞ்சில் தேசபக்தி வேகம் நிறைந்தது. அக்கட்டுரைகள் வழியாக அறிந்த அரசியல் செய்திகளை ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் ஸ்பென்சர் கம்பெனி ஊழியர்களிடம் படித்துக் காட்டவும் மொழிபெயர்த்துச் சொல்லவும் தொடங்கினார் அவர். அதன் விளைவாக கலியாணசுந்தரம் தன் இருபத்தைந்தாவது வயதில் ஸ்பென்சர் கம்பெனி நிறுவனத்தின் வேலையை இழந்தார்.

சொந்த முதலீட்டில் ஓர் அச்சுக்கூடத்தைத் தொடங்கி பெரிய புராணத்தையும் திருமந்திரத்தையும் புதிய பதிப்புகளாகக் கொண்டுவந்தார். ஆயினும் இரண்டாண்டுகளில் ஏற்பட்ட பொருளிழப்பைத் தாங்கமுடியாமல் அச்சுக்கூடத்தை விற்கவேண்டியிருந்தது. நண்பர் ஒருவருடைய உதவியால் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த வெஸ்லியன் மிஷன் பள்ளியில் தமிழாசிரியராக வேலை கிடைத்தது. அதற்குப் பிறகே அவர் திருமணம் செய்துகொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் படித்த இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் விளக்கு பள்ளியிலிருந்து இராயப்பேட்டை பள்ளிக்குச் சென்று சேர்ந்தார் கலியாணசுந்தரம்.

1914ஆம் ஆண்டில் முதல் உலகப்போர் மூண்டது. அப்போதுதான் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே அந்த இயக்கம் தேசமெங்கும் வேரூன்றியது. அதை விரும்பாத ஆங்கில அரசு அன்னிபெசன்ட் அம்மையாரை 1917இல் ஜூன் மாதத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அரசின் எண்ணத்துக்கு மாறாக தேசமெங்கும் சுயராஜ்ஜிய எண்ணம் ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. 1916இல் தொடங்கிய ஜஸ்டிஸ் கட்சி, ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியது. பிராமணரல்லாதோர் முன்னேற்றம் தொடர்பாகப் பேசிப் பேசி சாதிகளின் அடிப்படையில் மக்களிடையில் பிளவை உருவாக்க முயற்சி செய்தது. ஒரே நேரத்தில் தெலுங்கு மொழியில் ஆந்திர பிரகாசிகா என்றும் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்றும் தமிழில் திராவிடன் என்னும் தலைப்பிலும் பத்திரிகைகளைக் கொண்டுவந்து விடுதலை இயக்கத்தை எதிர்த்தது. ஜஸ்டிஸ் கட்சி எழுப்பிய குரலைக் கடந்து மக்களிடையே சுதந்திர வேட்கையை உருவாக்கவேண்டியது தேசபக்தர்களின் கடமையாக இருந்தது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டி தலைவர்கள் உரையாற்றினர்.

1917இல் செப்டம்பர் மாதத்தில் கோகலே மண்டபத்தில் திவான்பகதூர் கேசவப்பிள்ளை தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அச்சமயத்தில் ‘திராவிடரும் காங்கிரசும்’ என்னும் தலைப்பில் முதன்முதலாக மேடையேறி கலியாணசுந்தரம் உரையாற்றினார். அவ்வுரையில் திராவிடர் வரலாற்றையும் ஆரியர் வரலாற்றையும் அவற்றுக்கிடையில் உள்ள முரண்பாடுகளையும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார் அவர். எல்லா வகுப்பாரும் ஒன்றாக ஓரணியில் நின்று சுதந்திரத்துக்காகப் போராடவேண்டிய தருணத்தில் அவ்வாறு ஒன்றுபடாமல் ஒதுங்கி வகுப்புவாத எரியூட்டுவது நாட்டைப் பாழாக்கும் என்று தெளிவூட்டினார். ஜஸ்டிஸ் கட்சி தென்னாட்டுப் பிராமணரல்லாதோர் அனைவருக்கும் உரியதாக மாறாது என்றும் தென்னாட்டுப் பிராமணரல்லாதோரில் பெரும்பான்மையோர் காங்கிரஸ் மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார். அதன் விளைவாக சென்னை மாகாண சங்கம் என்னும் பெயரில் ஓர் அமைப்பு உருவானது. கேசவப்பிள்ளை, கோவிந்ததாஸ், ஈ.வெ.இராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமி பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், ஜார்ஜ் ஜோசப், தி.வி.கோபாலசாமி முதலியார், குருசாமி நாயுடு, வரதராஜுலு நாயுடு, சர்க்கரைச்செட்டியார் ஆகியோரோடு அந்த அமைப்பில் கலியாணசுந்தரமும் இருந்தார். அனைவரும் அவரை, திருவாரூர் என்னும் அவருடைய முன்னோர் வாழ்ந்த ஊரையும் விருத்தாசல முதலியார் என்ற தந்தையாருடைய பெயரையும் முன்னொட்டாக் கொண்டு திரு.வி.க. என அழைக்கத் தொடங்கினர்.

சென்னை மாகாண சங்கத்தின் கருத்துகளை மக்களிடையில் கொண்டு சேர்ப்பதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்க நினைத்தனர் அதன் அமைப்பாளர்கள். அவர்களுடைய கூட்டுமுயற்சியால் ஓர் அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அதன் சார்பில் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்னும் தினசரிப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பதற்காக, 05.12.1917 அன்று வெஸ்லி கல்லூரியில் செய்துவந்த தமிழாசிரியர் பணியை உதறி வெளியே வந்தார் திரு.வி.க. தேசபக்தன் பத்திரிகையில் அவர் பயன்படுத்திய தூய, எளிய தமிழ்ச்சொற்களும் ஆவேசமான நடையும் அனைவரையும் கவர்ந்தன.

1917இல் ரஷ்யாவில் நடைபெற்ற மக்கள் புரட்சியும் பொதுவுடைமைக் கட்சிக்குக் கிடைத்த வெற்றியும் உலகத்தின் கவனத்தை ஈர்த்த செய்திகளாகும். சொந்த முயற்சியால் புரட்சி தொடர்பான செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்ட திரு.வி.க.வின் நெஞ்சில் தொழிலாளர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஆர்வம் பிறந்தது. அப்போது மில் தொழிலாளர்களின் துன்பங்களை முன்வைத்து கேசவபிள்ளை பல கட்டுரைகளை ‘இந்தியன் பேட்ரியாட்’ என்னும் ஆங்கிலப்பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். அவற்றில் முக்கியமான பல கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேசபக்தன் இதழிலும் வெளியிட்டார் திரு.வி.க.

02.03.1918 அன்று ஜங்கா ராமியம்மாள் பங்களாவில் ‘வேங்கடேச குணாமிர்த வர்ஷிணி சபை’ சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் உரையாற்றிய திரு.வி.க. மேற்கு நாட்டில் தொழிலாளர் இயக்கம் தோன்ற் வளர்ந்த வரலாற்றையும் தொழிற்சங்கத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளர்கள் தமக்காகவும் ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அது எப்போது அமைக்கப்படும் என்று உற்சாகத்துடன் கேட்கவும் தொடங்கினர். அதன் விளைவாக 27.04.1918 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் உருவானது. வாடியா தலைவராகவும் கேசவப்பிள்ளையும் திரு.வி.க.வும் உதவித்தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அன்றுமுதல் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிதோறும் சென்று தொழிற்சங்கம் அமைப்பதை ஒரு கடமையாகவே மேற்கொண்டார் திரு.வி.க. டிராம்வே தொழிலாளர் சங்கம், எம்.அன்ட்.எஸ்.எம்.தொழிற்சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத்தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம், அலுமினியம் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத்தொழிலாளர் சங்கம் என எண்ணற்ற சங்கங்களை திரு.வி.க. உருவாக்கி வழிநடத்தினார்.

அதே சமயத்தில், சென்னை மாகாணசங்கத்தின் முதலாண்டு நிறைவு விழா தஞ்சையில் நடைபெற்றது. ‘இந்தியன் பேட்ரியாட்’ பத்திரிகையின் ஆசிரியரான கருணாகர மேனன் அந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் தமிழ்ப்பயன்பாடு பற்றிய தீர்மானம் மிகவும் முக்கியமானது. திரு.வி.க. அதை வழிமொழிந்து உரையாற்றினார். பொதுக்கூட்டங்களில் தமிழர்கள் தாய்மொழியில் தாய்மொழியிலேயே பேசவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ‘தமிழில் பேசத் தெரியாது’ என்றுரைத்து தலைவர்கள் மேடைகளில் ஆங்கிலத்தில் முழங்கி வந்த காலம் அது. திரு.வி.க. முன்னெடுத்த கிளர்ச்சியால் அந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடையத் தொடங்கியது.

கிலாபத் கிளர்ச்சி, சத்தியாகிரக இயக்கம், பஞ்சாப் படுகொலை ஆகியவை நிகழ்ந்த காலகட்டத்தில் தேசபக்தன் நாளேட்டில் வெளிவந்த கட்டுரைகள் மக்களிடையே எழுச்சியைத் தூண்டும் வகையில் இருந்தன. அரசு அதிகாரிகள் பத்திரிகை அலுவலகத்துக்கு பலமுறை வாய்மொழி எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பி வைத்தனர். ஆயினும் தேசபக்தன் தன் போக்கை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் காவல்துறை திரு.வி.க.வைக் கண்டு பறிமுதல் கட்டளையை வழங்கிவிட்டுச் சென்றது. பல வகையாலும் முயற்சி செய்து ஐயாயிரம் ரூபாய் பணத்தைத் திரட்டி எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் செலுத்திய பிறகே தேசபக்தன் இதழை மீண்டும் நடத்த அனுமதி கிடைத்தது.

அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை அடக்குவதற்காக ஆங்கிலேய அரசு ரெளலட் சட்டத்தை 1919இல் இயற்றியது. அப்போது காந்தியடிகள் உடல்நலம் குன்றிய நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அரசு இயற்றிய சட்டத்தைப்பற்றி அறிந்துகொண்டதும் சத்தியாகிரகப் பிரதிக்ஞையைத் தயார் செய்துகொண்டு தேசம் தழுவிய ஒரு பிரயாணத்தை உடனடியாகத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 18.03.1919 அன்று சென்னைக்கு வந்தார் காந்தியடிகளைச் சந்திக்க விரும்பிய திரு.வி.க. சேலம் விஜயராகவாச்சாரியாரைச் சந்தித்து கடிதமொன்றைப் பெற்றுக்கொண்டு அரக்கோணம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது காந்தியடிகளைச் சந்தித்தார். தேசபக்தன் இதழைப்பற்றியும் அதில் வெளிவரும் கட்டுரைகளைப்பற்றியும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அவருக்கிருந்த மொழிப்புலமையைப்பற்றியும் திரு.வி.க.விடம் ஆவலுடன் விசாரித்துத் தெரிந்துகொண்டார் காந்தியடிகள். அன்று நடைபெறும் கூட்டத்தில் தன்னுடைய உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்குமாறு சொல்லி திரு.வி.க.வை தன்னோடு அழைத்துச் சென்றார். சென்னை கூட்டத்தில் சத்தியாகிரக பிரதிக்ஞையை விளக்கி உரையாற்றிவிட்டு, விருப்பமிருப்பவர்கள் அதில் கையெழுத்திடலாம் என்று அறிவித்தார். திரு.வி.க.வும் சத்தியாகிரக உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

06.04.1919 அன்று சத்தியாகிரக நாளாக கொண்டாடப்படவேண்டும் என தெரிவித்துவிட்டு காந்தியடிகள் தன் பயணத்தைத் தொடர்ந்தார். சென்னை நகரத்தை பல வட்டாரங்களாகப் பிரித்து, கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அனைவரும் செய்தனர். இராயப்பேட்டை வட்டாரத்தின் பொறுப்பை திரு.வி.க. ஏற்றுக்கொண்டு எண்ணற்ற தொண்டர்களை அந்நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்தார். காந்தமென கவர்ந்திழுத்த திரு.வி.க.வின் பேச்சாற்றல் பல இளைஞர்களை சத்தியாகிரகத் தொண்டர்களாக உருமாற்றியது.

அதே 1919இல் டிசம்பர் மாதத்தில் திலகர் சென்னைக்கு வந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பராய காமத் ஆகியோருடன் திரு.வி.க.வும் சென்று அவரைச் சந்தித்து உரையாடினார். திரு.வி.க.வின் தெளிவான கருத்துகள் திலகரைப் பெரிதும் கவர்ந்தன. புறப்படும்போது அவரை ஒருமுறை புனாவுக்கு வந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டுச் சென்றார் திலகர். துரதிருஷ்டவசமாக 01.08.1920 அன்று திலகர் இயற்கையெய்திவிட்டார். திரு.வி.க.வும் திட்டமிட்டபடி புனாவுக்குச் செல்லமுடியாமல் போனது.

திரு.வி.க. பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அச்சுக்கூடத்தை பத்திரிகையின் நலம்விரும்பிகளில் ஒருவரான காமத் என்பவர் அடகுவைத்து பணம் பெற்ற செய்தி திரு.வி.க.வின் செவியை எட்டியது. அச்செய்தி உண்மையே என்பதை விசாரணைக்குப் பிறகு தெரிந்துகொண்ட திரு.வி.க. தேசபக்தன் பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தார். தன் நிலையை விளக்கி ஒரு கட்டுரையாக எழுதி வெளியிட்ட பிறகு 22.07.1920 அன்று பத்திரிகையிலிருந்து விலகினார்.

திரு.வி.க. தேசபக்தன் இதழைவிட்டு வெளியேறிய செய்தி காட்டுத்தீயென தமிழகமெங்கும் பரவி அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. உடனே வேறொரு பத்திரிகையைத் தொடங்கும்படி பலர் நேரில் சந்தித்து ஊக்கமூட்டிச் சென்றனர். சென்னை பங்கிம்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர்கள் ஐயாயிரம் ரூபாய் நிதி திரட்டிக் கொண்டுவந்து திரு.வி.க.விடம் கொடுத்தனர். இன்னும் சில நண்பர்களும் இப்படி நன்கொடை திரட்டிவந்து அவரிடம் அளித்தனர். அதை மூலதனமாகக் கொண்டு திரு.வி.க. ஓர் அச்சுக்கூடத்தை வாங்கி ‘சாது அச்சுக்கூடம்’ என்று பெயர் சூட்டினார். நண்பர்களுடன் கலந்து பேசி நவசக்தி என்னும் பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். முதல் பத்திரிகை 22.10.1920 அன்று வெளிவந்தது. வாரப்பத்திரிகை என்பதால், அரசியல், சமூக சீர்திருத்தம், பெண் நலம், மொழிச்சிறப்பு, கலை என பல களங்கள் சார்ந்து படைப்புகளை எழுதி வெளியிட்டார். தேவையான பண உதவி செய்வதாகவும் நவசக்தி இதழை தினசரிப்பத்திரிகையாக நடத்துமாறும் பலர் திரு.வி.க.வை அணுகி ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் திரு.வி.க. எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. நவசக்தியை வாரப் பத்திரிகையாகவே தொடர்ந்து நடத்திவந்தார்.

1920இல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் நாடுமுழுதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சிறை சென்றவண்ணம் இருந்தனர். திரு.வி.க.வுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்னும் ஆவல் இருந்தது. ஆனால் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவரால், போராட்டத்தின்பால் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. எதிர்பாராத விதமாக பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் உருவான தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் பரவி பல மாத காலம் தொடர்ந்து நீடித்தது. ஏறத்தாழ பதின்மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போராட்டத்தை விரும்பாத பலர் தொழிலாளர்களிடையில் ஊடுருவி அதை வகுப்புக்கலவரமாக திசைதிருப்ப முயற்சி செய்தனர். தொழிலாளர் பாதுகாப்புச்சட்டம் என எதுவும் இல்லாத அக்காலத்தில் முதல் தடுப்பு நடவடிக்கையாக திரு.வி.க.வைக் கைது செய்து அந்தமானுக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தது அரசு. திரு.வி.க.வை நேரில் அழைத்துப் பேசினார் கவர்னர். வகுப்புக்கலவரத்துக்கும் தீவைப்புக்கும் கொலைகளுக்கும் தொழிற்சங்கமே பொறுப்பு என கவர்னர் குற்றம் சுமத்தினார். திரு.வி.க. அதை மறுத்தார். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைய சோர்வோடு வீட்டுக்குத் திரும்பினார் திரு.வி.க. நல்ல வேளையாக, அத்தருணத்தில் பிட்டி தியாகராயர் குறுக்கீட்டால் திரு.வி.க.வை நாடு கடத்தும் திட்டம் அப்போதைக்கு கைவிடப்பட்டது.

1925ஆம் ஆண்டில் நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டுக்கு திரு.வி.க தலைமை வகித்தார். அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானமொன்றை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஆதரவோடு எஸ்.ராமநாதன் என்பவர் கொண்டுவந்தார். அது பிளவுப்பார்வை எனக் கருதிய திரு.வி.க. அத்தீர்மானத்தை நிராகரித்தார். இதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் திரு.வி.க.வுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. அதன் காரணமாக அந்த அரங்கத்திலும் அரங்கத்துக்கு வெளியேயும் திரு.வி.க. பிறர் பழிச்சொல்லுக்கு ஆளானார். ஈ.வே.ரா. காங்கிரஸை விட்டு வெளியேறினார். ஆயினும் அதைக் கண்டு மனம் கலங்காமல் திரு.வி.க. தன் நிலைபாட்டில் உறுதியாக இருந்தார்.

1925இல் கான்பூரில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் நடைபெறவிருக்கும் தேர்தலில் பங்கெடுக்கும் முடிவை எடுத்தது. சட்டசபையைக் கைப்பற்றினால் மட்டுமே மக்கள் காங்கிரஸ் சார்பினராக இருப்பதை அரசுக்கு உணர்த்தமுடியும் என்றும் வேறொரு அரசு உருவாகாத வகையில் முட்டுக்கட்டையிட்டு ஒத்துழையாமை மீண்டும் மீட்டெடுக்கமுடியும் என்றும் மேடைகளில் முழக்கமிடப்பட்டது. திரு.வி.க.வும் அதை ஏற்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜஸ்டிஸ் கோட்டையாக விளங்கிய செங்கற்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு திரு.வி.க.விடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்கெங்கும் பிரச்சார அலை வீசிக்கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் முட்டுக்கட்டை இடுவதற்குப் பதிலாக அரசு அமைக்கவே முயற்சி செய்யும் என்னும் வதந்தி திடீரென பரவியது. அதைக் கேட்டு சற்றே மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார் திரு.வி.க. தெளிவுபெறும் பொருட்டு அடுத்தநாளே சென்னையிலேயே இருந்த ஸ்ரீநிவாச ஐயங்காரைச் சந்தித்து வதந்தியைப்பற்றி தெரிவித்தார். சட்டசபையில் பெரும்பான்மை கிடைத்தால் காங்கிரஸ் நேரடியாக ஒருபோதும் ஆட்சியமைக்க முயற்சி செய்யாது என்றும் சுயேச்சைகள் ஆட்சியமைக்க மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதைக் கேட்டு மனமுடைந்து சோர்வோடு வீடு திரும்பிய திரு.வி.க. அடுத்த நாளே செயற்குழு பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு வெளியேறினார். அவருக்காகக் காத்திருந்த தொழிற்சங்கப்பணிகள் அவரை ஆட்கொண்டன.

தொழிற்சங்கப்பணிகள், பெண் முன்னேற்றம் சார்ந்த பணிகள், பத்திரிகைப்பணி, எழுத்துப்பணி என பல பணிகளில் வற்றாத ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டார் திரு.வி.க. ராமாமிர்தம் அம்மையார் 1925இல் இசைவேளாளர் மாநாட்டைக் கூட்டியபோது, அதற்குத் தலைமையேற்று உரையாற்றினார் திரு.வி.க. அம்மையாரின் நோக்கமான தேவதாசி முறை ஒழிப்பை முன்வைத்து திரு.வி.க. எழுதிய கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் முக்கியமானவை. குழந்தைமணத் தடுப்புச் சட்டமான சாரதா சட்டத்துக்கு ஆதரவாகவும் திரு.வி.க. பல கட்டுரைகளை எழுதினார். விதவை மறுமணத்துக்கும் அவர் ஆதரவாக நின்றார். குடியாத்தத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் பள்ளிக்கொண்டை என்னும் கிராமத்தைச் சேர்ந்த விதவை ஒருவரை மறுமணம் செய்துகொள்ள முன்வந்தபோது, திரு.வி.க. அத்திருமணத்துக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

பிறர் முன்னேற்றம் தொடர்பான சிந்தனைகளே திரு.வி.க.வின் மனத்தில் நிறைந்திருந்தன. ஒருபோதும் தன் சொந்த முன்னேற்றம் தொடர்பாக அவர் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஒருமுறை அவர் வாடகை வீட்டில் வசிப்பதை அறிந்த ஸ்ரீநிவாச ஐயங்கார் அவருக்காக வீடும் வாகனமும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். “சொந்த வீடும் காரும் எனக்கு எதற்கு? வசிப்பதற்கு வாடகைக்கு ஒரு வீடு இருக்கிறது. அச்சுக்கூடம் இருக்கிறது. பத்திரிகை இருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களால் ஓரளவு வருவாயும் இருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்? தேவைக்கு மேல் விரும்புவது அறமல்ல” என்று கூறி மறுத்துவிட்டார். அவருடைய மணிவிழா கொண்டாடப்பட்ட சமயத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் போன்றோர் அவரைக் கெளரவிக்கும் விதமாக அவருக்கு பணமுடிப்பு வழங்கத் திட்டமிட்டனர். ஆயினும் அதை முன்கூட்டியே அறிந்துகொண்ட திரு.வி.க. அந்த ஏற்பாட்டை உறுதியாக மறுத்துவிட்டதால், அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது.

கால ஓட்டத்தில் திரு.வி.க. தன் தமையனாரை இழந்து, அச்சுக்கூடத்தின் வருவாயும் குறைந்து, நீரிழிவு நோயால் கண்பார்வை இழந்து துன்பப்படும் நிலை ஏற்பட்டது. அதைக் கண்டு மனம் வருந்திய உலகநாத முதலியார் என்னும் பெருஞ்செல்வர் அவருக்கு பண உதவி செய்ய முன்வந்தார். உங்கள் அன்புக்கு நன்றி என்று சொல்லி, அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் திரு.வி.க. ஆயினும் அப்படிச் செல்ல மனமொப்பாத செல்வந்தர் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு காசோலையை எழுதி அமைதியாக திரு.வி.க. படுத்துறங்கும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதைக் கண்டெடுத்து திரு.வி.க.விடம் கொடுத்த போது, ஒரு கடிதத்தோடு அந்தக் காசோலையை அவருக்கே அஞ்சலில் திருப்பி அனுப்பிவைத்துவிட்டார் திரு.வி.க.

கண்பார்வை மங்கி உடல்நலம் குன்றியிருந்த சமயத்திலும் தொழிற்சங்க இயக்கச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் திரு.வி.க. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்த தருணத்தில் பங்கிம்ஹாம் ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது. நிர்வாகத்தின் பிடிவாதப் போக்கினால் போராட்டம் மாதக்கணக்கில் நீண்டுகொண்டே சென்றது. தொழிற்சங்கத் தலைவரான அந்தோணிப்பிள்ளையும் திரு.வி.க.வும் தொழில் அமைச்சரைச் சந்தித்து விவரங்களைத் தெரிவித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்ட உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொல்வதை பொறுமையாக அமைச்சர் கேட்டுக்கொண்டபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சில தினங்களுக்குப் பிறகு அந்தோணிப்பிள்ளையைக் கைது செய்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தார்.

பெரம்பூரில் நடைபெறவிருந்த கூட்டத்துக்கும் அந்த அமைச்சர் தடை விதித்தார். கூட்டம் நடைபெறும் இடத்துக்கு திரு.வி.க. சென்ற பிறகே அவரிடம் தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எதுவும் பேசாத திரு.வி.க. கூட்டம் நடைபெறவிருந்த இடத்திலிருந்து வெளியேறி மெளனமாக நடக்கத் தொடங்கினார். என்ன காரணம் என்று புரியாவிட்டாலும் தொழிலாளர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி நடந்தனர். காவலர்களும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். நீண்ட நேரம் நடந்து சென்ற திரு.வி.க. திருவள்ளூருக்குச் சென்ற பிறகே நின்று திரும்பிப் பார்த்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த தொழிலாளர்கள் அனைவரும் அவரைச் சுற்றி நின்றனர். அரசின் தடை உத்தரவு சென்னை நகர எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். திருவள்ளூர் செங்கற்பட்டு மாவட்ட எல்லைக்குள் இருக்கும் ஊர். இங்கு யாரும் நம்மைத் தடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டு தொழிலாளர்களிடையில் ஊக்கமுடன் உரையாற்றத் தொடங்கிவிட்டார். அந்த அளவுக்குத் தொழிலாளர் பிரச்சினைகளில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். திரு.வி.க. வீட்டுக்குத் திரும்பிய திரு.வி.க.வை ஒரு சிறப்பு உத்தரவின் வழியாக போராட்டம் முடிவெய்தும் வரைக்கும் வீட்டுக்காவலிலேயே வைத்திருந்தது அரசு.

காந்தியடிகளின் கொள்கையைப் பின்பற்றி திரு.வி.க. மக்கள் தொண்டாற்றுவதே தனக்குரிய வாழ்க்கை முறை என முடிவெடுத்து இயங்கத் தொடங்கிய பிறகு, அவர் தன் தேவைகளை முடிந்த அளவு குறைத்துக்கொண்டு வாழ்வதற்குப் பழகிக்கொண்டார். பயணங்களில் கூட மிகுதியாக எதையும் சுமந்து செல்லமாட்டார். நாலுமுழக் கதர் வேட்டி, கதர் ஜிப்பா, கழுத்தில் ஒரு கதர்த்துண்டு, கையில் ஒரு பை. அதிலே ஒரு ஜதை மாற்று உடுப்புகள். அவர் உடமைகள் அவ்வளவுதான். இறுதிமூச்சு வரைக்கும் அவ்விதமாகவே எளிமையாக வாழ்ந்து மறைந்தார் திரு.வி.க.

***

திரு.வி.க. என்று அழைக்கப்படுகிற கலியாணசுந்தரம் திருவாரூரைச் சேர்ந்த விருத்தாசல முதலியார் – கனகம்மாள் இணையருக்கு ஆறாவது குழந்தையாக 26.08.1883 அன்று பிறந்தார். 1917இல் நடைபெற்ற ரஷ்யப்புரட்சியின் விளைவாக தொழிற்சங்க ஈடுபாடும் திலகர் வழியில் இந்திய சுதந்திரப்போராட்ட ஈடுபாடும் அவரிடம் குடிகொண்டிருந்தன. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த போதும் சொந்த ஆர்வத்தின் காரணமாக பல அறிஞர்கள் வழியாக தமிழிலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேரூன்ற பாடுபட்ட மூத்த தலைமுறையைச் சார்ந்த தலைவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாக சென்னையில் தொழிலாளர் இயக்கத்தை திரு.வி.க.வே முன்னின்று உருவாக்கினார். தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்கள் வழியாக தீண்டாமை ஒழிப்பு, விதவைத்திருமணம், கலப்புத்திருமணம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட முன்னோடிச் சிந்தனையாளர். தனித்துவம் வாய்ந்த அவருடைய தமிழ்நடையின் காரணமாக அவரைத் தமிழுலகம் ’தமிழ்த்தென்றல்’ என்ற பட்டப்பெயருடன் அழைத்து மகிழ்ந்தது. சமூகம், அரசியல், சமயம் வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறை சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். திரு.வி.க. தனித்தமிழ் சார்ந்தும் ஆர்வமுள்ளவராக இருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மு.வரதராசனார், ம.ரா.போ.குருசாமி, சக்திதாசன் சுப்பிரமணியம் ஆகிய மூவரும் எழுதியுள்ளனர். நீரிழிவு நோயின் காரணமாக திரு.வி.க. 17.09.1953 அன்று மறைந்தார்.

0

பகிர:
பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *