Skip to content
Home » கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

கல்லும் கலையும்

மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர். மஹிஷன் இந்த உலகம் முழுவதற்கும் அரசன் ஆனான். தோற்றுப்போன தேவர்கள் பிரமனை அழைத்துக்கொண்டு விஷ்ணுவையும் சிவனையும் காணச் சென்றனர்.

மஹிஷன் தங்களைத் தோற்கடித்து, தங்களின் சக்தியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொண்டதையும் தாங்கள் பூமியில் சாதாரணர்களாக நடமாடிக்கொண்டிருப்பதையும் சொல்லி தேவர்கள் புலம்பினர். எப்படியாவது தங்கள் பழைய நிலையை மீட்டுத்தரவேண்டும் என்று கதறினர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவும் சிவனும் தங்கள் புருவத்தை நெரித்து, கோபத்தை வெளிக்காட்டினர். விஷ்ணு, சிவன், பிரமன் ஆகியோரது உடல்களிலிருந்து பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. இந்திரன் முதலான தேவர்களின் உடல்களிலிருந்தும் ஒளி தோன்றி ஒன்றாக இணைந்துகொண்டது. இவ்வாறு அனைத்துக் கடவுள்களின் உடலிலிருந்து தோன்றி ஒன்றாகச் சேர்ந்த ஒளிப்பிழம்பு பெண் வடிவம் கொண்டது. தேவி துர்கை தோன்றினாள்.

சிவனின் ஒளி அவள் முகமாகியது. யமனின் ஒளி அவள் கேசமாகியது. விஷ்ணுவின் ஒளி அவள் கரங்களாயின. சந்திரனின் ஒளி அவள் மார்பகங்களாயின. இந்திரனின் ஒளி அவள் வயிறாகியது. வருணனின் ஒளி அவள் கால்கள் ஆயின. பூமியின் ஒளி அவள் இடுப்பாகியது. பிரமனின் ஒளி அவள் பாதங்களாகின. சூரியனின் ஒளி அவள் கால் விரல்களாயின. வசுக்களின் ஒளி அவள் கை விரல்களாயின. குபேரனின் ஒளி அவளுடைய மூக்காகியது. பிரஜாபதியின் ஒளி அவள் பற்களாயின. அக்னியின் ஒளியிலிருந்து அவளுடைய மூன்று கண்கள் உருவாயின. உதயமும் அஸ்தமனமும் அவள் புருவங்களாயின. வாயுவின் ஒளி அவள் காதுகளாயின.

இவ்வாறாக அனைத்துக் கடவுள்களின் கலவையாக துர்கை தோன்றினாள்.

மஹிஷாசுரமர்தினி, காஞ்சி கைலாசநாதர் கோவில், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மஹிஷாசுரமர்தினி, காஞ்சி கைலாசநாதர் கோவில், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இப்படித்தான் மார்கண்டேய புராணத்தில் வரும் தேவி மஹாத்மியம் என்னும் பகுதி தேவியின் உற்பத்திக் கதையைச் சொல்கிறது. தேவிக்கு சண்டிகை, அம்பிகை, துர்கை, காத்யாயனி எனும் பெயர்களை தேவி மஹாத்மியம் தருகிறது. அடுத்து, இவ்வாறு உருவான தேவிக்கு ஆயுதங்கள் வேண்டுமே.

சிவன் அவளுக்குத் தன் சூலாயுதத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தைக் கொடுத்தார். வருணன் சங்கைக் கொடுத்தான். அக்னி ஈட்டியைக் கொடுத்தான். வாயு வில்லையும் அம்புறாத் தூணிகளையும் கொடுத்தான். இந்திரன் மின்னலையும் (வஜ்ராயுதம்) தன் யானையான ஐராவதம் அணிந்திருக்கும் மணியையும் கொடுத்தான். யமன் தடி ஒன்றைக் கொடுத்தான். வருணன் பாசக் கயிற்றை அளித்தான். பிரமன் அக்கமாலையையும் கமண்டலத்தையும் அளித்தார். சூரியன், அவளுடைய தோலிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தைக் கொடுத்தான். காலம், வாளையும் கேடயத்தையும் அளித்தது. பாற்கடல் முத்து மாலையையும் நல்லாடைகளையும், காதுத் தோட்டையும், மகுடாபரணத்தையும், கை வளைகளையும், நிலாச்சுட்டியையும், கேயூரத்தையும், காற்சிலம்புகளையும், கழுத்துக்கு ஹாரத்தையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அளித்தது. விஸ்வகர்மா மின்னும் மழுவையும் துளைக்கவே முடியாத உடற்கவசத்தையும் அளித்தார். கடல், வாடாத தாமரை மாலையை அளித்தது. இமயமலை, அவளைத் தாங்கிச் செல்ல சிம்ம வாகனத்தை அளித்தது. குபேரன் குறையாத மதுவர்கத்தைக் கொண்டிருக்கும் பாத்திரத்தை அளித்தான். அனந்தசேஷன் ரத்தினங்கள் ஒளிவீசும் பாம்புகளால் ஆன மாலையை அளித்தான்.

துர்கை ஆஹாவென்று மூவுலகும் நடுங்கச் சிரித்தாள், உறுமினாள், கனைத்தாள். அண்டங்கள் ஆடிப்போயின. அவளுடைய சிரிப்பு, இடி இடிப்பதுபோல் இருந்தது. பாரதி சொல்வானே,

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம் போட – வெறும்
வெளியில் ரத்தக் களியொடு பூதம் பாட – பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியிற் கூட – களித்து
ஆடுங்காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அதுபோல அவளுடைய கூத்தைத் தாங்க முடியாமல் பூமி நடுங்கியது. மலைகள் குலுங்கின. மஹிஷன் என்ன இது என்று ஆச்சரியம் அடைந்தான். ஒரு புதிய எதிரி தோன்றியிருக்கிறாள் என்றவுடனேயே அவளைத் தாக்கத் தன் படைகளை அனுப்பினான். தேவி மஹாத்மியம் விரிவாக இந்தப் போரைப் பற்றிப் பேசுகிறது. அம்பிகையும் அவளுடைய சிம்மமும், தாக்க வந்த அசுரர்களைத் தவிடுபொடி ஆக்கினர். இறுதியாக மஹிஷனே தன் எருமை உருவத்தில் போருக்கு வந்தான்.

அம்பிகை தன் பாசக்கயிற்றை வீசி அவனைக் கட்டுவித்தாள். உடனே அவன் சிம்ம வடிவம் எடுத்தான். அவள் அவன் தலையைக் கொய்தாள். அவனோ கையில் வாளுடனான மனித உருவம் எடுத்தான். அவளோ தன் அம்புகளால் அவனை நார் நாராகக் கிழித்தாள். அவனோ யானை வடிவம் எடுத்தான். அவளோ அவனுடைய தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினாள். இப்போது அவன் மீண்டும் எருமை வடிவம் எடுத்து அவள்மீது பாய்ந்தான்.

சண்டிகை தன் பாத்திரத்தில் நிரம்பியிருந்த பானத்தைக் குடித்துவிட்டு கண்கள் சிவக்க இடியென நகைத்தாள். மீண்டும் பாரதி.

பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய – வெறித்து
உறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்!

தன் அம்புகளால் மஹிஷனைத் துளைத்தெடுத்த துர்கை, அவனைக் கீழே தள்ளி, அவன் கழுத்தைக் காலால் மிதித்தாள். அப்போது எருமையின் வாயிலிருந்து மனித உருவில் அவன் வெளியே வந்தான். அவள் தன் வாளினால் அவன் கழுத்தை அறுத்துத் தள்ளினாள். பெருத்த சத்தத்துடன் மஹிஷன் வீழ்ந்தான். தேவர்கள் ஆர்ப்பரித்தனர்.

இவ்வாறுதான் அம்பிகை துர்கை, மஹிஷனை அழித்து மஹிஷாசுரமர்தினி என்னும் பெயர் பெற்றாள். இந்த மாபெரும் யுத்தத்தைத்தான் பல்லவர்கள் எக்காலத்துக்கும் அழியாத வகையில் மாமல்லபுரத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். இந்தியச் சிற்பக்கலை வரலாற்றிலேயே தனித்துப் பாராட்டப்படவேண்டிய மாபெரும் சிற்பம் இதுவாகும்.

மஹிஷாசுரமர்தினி, மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இங்கே தேவி தன் சிம்ம வாகனத்தில் கால்களை இருபுறமும் போட்டு வீற்றிருக்கிறாள். அவளுக்கு எட்டு கரங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. சக்கரமும் சங்கும் இரு கரங்களில். வில் ஒரு கரத்தில். அதற்கு இணையான கரத்தில் அம்புறாத் தூணியிலிருந்து அம்பை உருவிக்கொண்டிருக்கிறாள். ஒரு கையில் வாள், இணைக் கையில் கேடயம். ஒரு கையில் மணி. தேவியின் தரப்பில் பல கணங்கள் ஆயுதங்களுடன் முன்னோக்கிச் செல்கின்றனர். ஒரு கணம், அவளுடைய குடையை ஏந்திச் செல்கிறது. தேவியின் படையில் ஒரு பெண் வாளைச் சுழட்டி ஓர் அசுரனைக் கொன்று வீழ்த்திக்கொண்டிருக்கிறாள்.

எதிர்த் தரப்பில் மாபெரும் பலம் பொருந்திய மஹிஷன், கையில் கனமான தடியை ஏந்தி, சற்றே பின்னோக்கி நகர்கிறான். மனித உருவத்தின் கழுத்துக்குமேல் கிரீடம் அணிந்த எருமைத் தலை. அவனுடைய அசுரப் படை வீரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவனுடைய குடை இன்னமும் சாய்ந்துவிடவில்லை. அவன் இன்னமும் தோற்றுவிடவில்லை.

இது சண்டையின் நடுவிலிருந்து ஒரு படம். பல்லவர்கள் மாமல்லையிலேயே மேலும் இரு இடங்களில் இந்தச் சண்டையின் இருவேறு பகுதியைச் செதுக்கியுள்ளனர். சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்துக்குமுன் சிறு கற்பாறையில் ஒரு சிற்பம். இங்கே மஹிஷன் கிட்டத்தட்ட தோற்றேவிட்டான். அவனுடைய மகுடம் கீழே விழுந்துவிட்டது. அவனுடைய குடை சாய்ந்துவிட்டது. இப்போது அவன் ஓட்டம் எடுக்கப்போகிறான். அவனை வெட்டி வீழ்த்த தன் சிம்மத்திலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறாள் தேவி. சிம்ம முகக் கணம் ஒன்று பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது. எருமை முகத்தில் சோர்வு. நாக்கு தள்ளிக்கொண்டு புஸ் புஸ்ஸென்று மூச்சுவிடுகிறது என்பதை ஊகிக்கமுடிகிறது. இப்போது போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

மஹிஷாசுரமர்தினி, அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

அடுத்த கட்டத்தை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பார்க்கலாம். ஐஹொலெயில் எருமை வடிவ மஹிஷனின் பின்புறத்தை சூலத்தால் பிடித்து, கழுத்தை நசுக்கிப் பின்புறமாகத் திருப்பி, முட்டியால் முதுகின்மீது அமர்ந்திருக்கிறாள் துர்கை. எல்லோராவில் காலால் எருமையை மிதித்து கழுத்தை வளைத்துப் பிடித்திருக்கிறாள் துர்கை. சிங்கம் தன் பாட்டுக்கு எருமையைக் கடித்துக்கொண்டிருக்கிறது.

புவனேஸ்வரத்தின் வேதாள தேவன் கோவிலில்தான் பிரமாதமான ஒரு வடிவத்தைப் பார்க்க முடிகிறது. இங்கே மனித உடலும் எருமைத் தலையுமான மஹிஷன். சிற்பத்தில் தன் முதுகைக் காட்டியபடி இருக்கிறான். அவன்மீது ஏறி, மிதித்து, கழுத்தைக் கீழ்நோக்கி அழுத்தி, சூலத்தால் அவன் கழுத்தைக் குத்தும் முயற்சியில் உள்ளாள் துர்கை. அவள் கையில் இருக்கும் பாம்பு மஹிஷனைக் கொத்தச் செல்வதுபோல் உள்ளது. வாகனமான சிம்மமோ அவன்மீது பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது!

குஜராத்தின் ராணி கி வாவ் படிக்கிணற்றில் உள்ள சிற்பத்தில் எருமையின் கழுத்தைப் பிளந்துகொண்டு மனித உருவில் மஹிஷன் வெளியேறுகிறான். சிம்மம் எருமையின் பின்புறத்தைக் கடித்துக்கொண்டிருக்கிறது. தேவி அந்த மனித உருவத்தின் தலையைக் கையினால் பற்றிக்கொண்டு, சூலத்தால் குத்தச் செல்கிறாள்.

மஹிஷாசுரமர்தினி - ஐஹொலெ, எல்லோரா, புவனேஸ்வரம், பாடன் - குஜராத்

மஹிஷாசுரமர்தினி – ஐஹொலெ, எல்லோரா, புவனேஸ்வரம், பாடன் – குஜராத்

0

தமிழ்நாட்டில் ஒரு சிலர் தங்களைத் தனியாகப் பிரித்துக் காட்டிப் பேசிக்கொள்வதுண்டு. எங்கள் கொற்றவை வேறு, உங்கள் துர்கை வேறு; எங்கள் மால் வேறு, உங்கள் விஷ்ணு வேறு; எங்கள் முருகன் வேறு, உங்கள் சுப்பிரமணியன் வேறு என்பார்கள். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் என்று நீங்கள் என்னதான் ஆதாரம் கொடுத்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில் “வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல்” என்கிறார்.

இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் என்றால் இருவேறு உருவங்களில் இருந்த அசுரனான மஹிஷாசுரன். அவன் தலையை அரிந்து அந்தத் தலைமீது நிற்கிறாள் கொற்றவை என்று மிகத் தெளிவாக கொற்றவைதான் துர்கை எனும் மஹிஷாசுரமர்தினி என்று அடையாளம் காட்டுகிறார் இளங்கோ. இதே வேட்டுவ வரியில் இன்னும் வெளிப்படையாகவே,

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக்கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடன் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால்
அரியரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்காகியே நிற்பாய்

என்று சொல்கிறார்.

‘மாமயிடன் செற்று’ என்றால் ‘மஹிஷனை வெட்டி’ என்று பொருள். ‘கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்பவள்’ என்றால் மஹிஷனின் எருமைத் தலைமீது நிற்பவள். அவளுக்கு சிம்மம் மட்டும் வாகனமில்லை, கரியதிரி கோட்டுக் கலையும், அதாவது சுருள் கொம்புடைய மானும் அவள் அருகில் இருக்கும், அல்லது அவள் அதன்மீது நிற்பாள்.

பல்லவர் தொடங்கி, பாண்டிய, சோழர் காலம் வழியாக, தமிழகத்தில் வழிபடப்படும் துர்கையாக, கொற்றவையாக இவள் நிற்பது மஹிஷனின் தலைமீது. இதன் மிக ஆரம்பகட்ட வடிவம் மாமல்லையின் திரிமூர்த்தி மண்டபத்தை ஒட்டிய சுவரில் உள்ளது. மிக அழகான சிற்பம் இது. எட்டு கரங்கள், சமபங்கமாக நிற்கிறாள். சமபங்கம் என்றால் இரு கால்களும் நேராக, எந்த வளைவுகளும் இல்லாமல் நிற்பது. எட்டு கரங்களில் ஆறில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகியவை. ஒரு கை அபய முத்திரையுடனும் ஒரு கை கடி ஹஸ்தம் எனப்படும் இடுப்பில் வைத்த கையுடனும் உள்ளது. மார்புக் கச்சு அணிந்திருக்கிறாள். இரு காதுகளிலும் ஓலைக் குண்டலங்கள் (பத்ர குண்டலம்). தலையில் கரண்ட மகுடம். அவள் பெரும் எருமைத் தலையின்மீது நின்றுகொண்டிருக்கிறாள்.

மஹிஷாசுரமர்தினி, திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

பின்னர் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் திரும்பிய இடமெல்லாம் துர்கை சிலையை வடித்தனர் பல்லவர்கள். சிவன் கோவில்களில் வடக்குத் திசை கோஷ்டத்தில் துர்கையை வடித்தனர். இவற்றில் பலவும் கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்பவை. சில, சிம்மத்திலிருந்து கீழே இறங்குவதுபோன்றவை. அதில் ஒன்றைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தீர்கள்.

மாமல்லையிலேயே, ஆதிவராஹ மண்டபம் என்ற குகைக்கோவிலில் மிக மிக அழகிய மஹிஷமர்தினியின் வடிவம் ஒன்று உள்ளது. இங்கே அவள் மிக ஒயிலாக, திரிபங்கம் என்னும் வடிவில், எருமைத் தலையின்மீது நிற்கிறாள். மூன்று நேர்கோடுகளில் வளைந்து நிற்பதுதான் திரிபங்கம். தலை, உடல், கால்கள் மூன்றும் வெவ்வேறு திசையில் சென்றுகொண்டிருக்கும்.

மஹிஷாசுரமர்தினி, ஆதிவராஹ மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, ஆதிவராஹ மண்டபம், மாமல்லபுரம், படம்: விஜய் பட்

இருபுறமும் காவல்பெண்டிர். ஒருத்தி வாள் ஏந்தியுள்ளாள், மற்றொருத்தி, வில். இரு பக்தர்கள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். இரு கணங்கள், ஒன்று சாமரம் வீச, இன்னொன்று படையலுடன் வருகிறது. கணங்களுக்கு இருபுறமும் சிம்மம், மான் ஆகியவற்றின் தலை தெரிகிறது. துர்கை கைகளில் சக்கரம், சங்கு, வாள், கேடயம், மணி, வில், ஆகியவை. ஒரு கை இடுப்பின்மீது. சாய்ந்த அவள் முகத்தில் அத்தனை சாந்தம். சற்றுமுன்னர்தான் கோபம் கொப்பளிக்க, மஹிஷனைச் செற்றனள்.

எருமைத் தலைமீது நின்றபடி, திருகு கொம்புகளுடன் கூடிய மானின்மீது சாய்ந்தபடி இருக்கும் பல்லவர் கால மஹிஷாசுரமர்தினி சிற்பம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதுவும் மிக அழகிய சிற்பமே, ஆனால் முகம் நன்றாகத் தேய்ந்துபோயிருக்கிறது. கைகளில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகியவற்றுடன், ஒரு கை அபயஹஸ்தமாகவும் மற்றொன்று இடுப்பின்மீதும் வைத்தபடி உள்ளது.

மஹிஷாசுரமர்தினி, சென்னை அருங்காட்சியகம்

சோழர்களின் மூன்று கோவில் கோஷ்டச் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம். முதலாவது, முதலாம் பராந்தக சோழன் காலத்தின் புள்ளமங்கைக் கோவில். இரண்டாவது, மதுராந்தக உத்தம சோழன் காலத்தின் கோனேரிராஜபுரம் கோவில். மூன்றாவது, முதலாம் குலோத்துங்கன் காலத்தின் மேலக்கடம்பூரில் உள்ள மிக அழகிய ரத வடிவிலான கோவில். எருமைத் தலையின் வடிவம், அளவு, கொற்றவையின் நிற்கும் கோலம், அவளுடைய ஆயுதங்கள், முகபாவம் என்று பலவற்றில் மாற்றங்களைக் காணலாம்.

மஹிஷாசுரமர்தினி - புள்ளமங்கை, கோனேரிராஜபுரம், மேலக்கடம்பூர்

மஹிஷாசுரமர்தினி – புள்ளமங்கை, கோனேரிராஜபுரம், மேலக்கடம்பூர், படங்கள்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இன்னொரு மிக அழகான வடிவை பாதாமி சாளுக்கியர்களின் ஆலம்பூரில் ஒரு தூணில் கண்டேன். இதற்கு இணையான வடிவை வேறு எங்கும் பார்த்ததில்லை. இங்கே மஹிஷன் தோற்றுவிட்டான். கையைக் கூப்பிவிட்டான். அவனுடைய காலம் முடியப்போகிறது. அம்பிகை, பாயும் சிம்மத்தின்மீது அமர்ந்தபடி, வில்லை ஏந்தி, அம்புகளைச் சரம் சரமாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறாள். சிதைந்த
சிற்பம்தான். ஆனால் அதன் வடிவ நேர்த்தியும் இடத்தைப் பயன்படுத்திய திறனும் அசாத்தியமானவை.

மஹிஷாசுரமர்தினி, ஆலம்பூர்

மஹிஷாசுரமர்தினி, நவபிரம்மா, ஆலம்பூர்

0

தேவி மஹாத்மியம் காணும் தேவி, முழுமுதற் கடவுளானவள். பராசக்தி என்று பாரதியார் அழைக்கும் கடவுள். சாக்தம் எனும் தேவி வழிபாடு செய்வோரின் கடவுள். அவள்தான் அரி, அரன் இருவருள்ளும் இருந்து இயக்குபவள். தேவி மஹாத்மியத்தின் முதல் அத்தியாயமே, மது கைடபன் இருவரையும் விஷ்ணு வதம் செய்வதிலிருந்துதான் தொடங்குகிறது.

விஷ்ணு, ஆதிசேஷன்மீது படுத்து, யோக நித்திரையில் இருக்கிறார். அப்போது அவர் காது அழுக்கு மது, கைடபன் எனும் இரு அசுரர்களாக ஆகிறது. அவர்கள் உடனேயே, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் அமர்ந்திருக்கும் பிரமனை ஒழித்துக்கட்டவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். பிரமனோ விஷ்ணுவை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் திகைக்கிறார். எனவே தேவியைத் துதிக்கிறார். தேவிதான் யோகநித்திரையாக விஷ்ணுவின் கண்களில் அமர்ந்திருக்கிறாள்.

பிரமனின் துதியினால் மகிழ்ந்த யோகநித்திரையானவள் விஷ்ணுவிடமிருந்து நீங்க, அவர் விழிப்புறுகிறார். மது கைடபனுடன் ஐயாயிரம் ஆண்டுகள் கடுமையான சண்டையிடுகிறார். ஆனால் வெற்றி யாருக்கும் கிட்டுவதில்லை. மீண்டும் மஹாமாயை தலையிட்டு, மது கைடபர்களைக் குழப்புகிறாள். அவர்கள் வெறியில் விஷ்ணுவிடமே, ‘உனக்கு என்ன வரம் வேண்டுமே தருகிறேன்’ என்கின்றனர். விஷ்ணுவும் தன் கையால் அவர்களைக் கொல்லவேண்டும் என்று வரம் கேட்கிறார். சரி என்னும் மது, கைடபன், பூமியில் நீர் இல்லாத பகுதியில் எங்களை வைத்துக் கொன்றுகொள் என்கிறார்கள். விஷ்ணு அவர்களைத் தன் மடிமீது கிடத்தி, சக்கரத்தால் அவர்கள் தலையை அரிகிறார்.

விஷ்ணுவின் சயன மூர்த்தி வடிவைப் பற்றிப் பார்க்கும்போது இதுகுறித்து மேலும் விவரிக்கிறேன். இப்போதைக்கு இந்தக் கதையைச் சொல்வதன் காரணம், தேவிதான் மாயையாக, உலகில் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருப்பதாக தேவி மஹாத்மியம் சொல்வதை விளக்குவதற்கே.

மஹிஷனைக் கொன்றபின் தேவியிடம் அனைத்து தேவர்களும் வரம் கேட்கின்றனர். எப்போதெல்லாம் தங்களுக்குப் பிரச்னைகள் வருகின்றனவோ, அப்போது தாங்கள் அழைத்தால் வந்து உதவவேண்டும் என்கின்றனர். தேவியும், அவ்வாறே செய்வதாக வரம் அளிக்கிறாள்.

அப்படியாகத்தான் சும்பன், நிசும்பன் ஆகியோரை தேவி வதம் செய்கிறாள்.

0

சும்பனும் நிசும்பனும் சகோதரர்கள். அசுரர்கள். இந்திரனைத் தோற்கடித்து, சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன், வாயு, அக்னி ஆகிய தேவர்களின் சக்தியையெல்லாம் பிடுங்கிக்கொண்டு விரட்டிவிடுகின்றனர். அப்போது இந்தத் தேவர்கள் அனைவருக்கும் தேவியின் நினைவு வருகிறது. அவளைத் துதிக்கின்றனர்.

அப்போது அந்தப் பக்கமாக சிவனின் மனைவியாகிய பார்வதி வருகிறாள். அவள் தேவர்களிடம் அவர்கள் யாரைத் துதிக்கின்றனர் என்று கேட்கிறாள். அந்தக் கணத்தில் பார்வதியின் உடலிலிருந்து தேவி அம்பிகை வெளியேறி, அவர்களெல்லாம் தன்னைத்தான் துதிக்கிறார்கள் என்கிறாள். சும்பனையும் நிசும்பனையும் வதம் செய்வதற்காகத்தான் அவ்வாறு அவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என்கிறாள்.

சும்ப நிசும்பனுக்கு சண்டன், முண்டன் என்று இரு தளபதிகள். அவர்கள் அம்பிகையைக் காண்கிறார்கள். அவளுடைய அழகில் மயங்கி, ‘ஆஹா, இவளே நம் தலைவன் சும்பனுக்கு ஏற்ற மனையாள்’ என்று முடிவு செய்து நேராக சும்பனிடம் சென்று அவள் அழகை வருணிக்கிறார்கள். இந்திரன், பிரமன் முதலான தேவர்களிடமிருந்து நீங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டவர்கள்; ஏன் பெண்களிலேயே தலையான இந்த ரத்தினத்தை இன்னமும் பறிக்காமல் இருக்கிறீர்கள் என்கிறார்கள்.

இதைக் கேட்ட சும்பன், சுக்ரீவன் எனும் அசுரனை அம்பிகையிடம் தூது அனுப்புகிறான். அம்பிகையோ, சுக்ரீவனிடம், தான் ஒரு சபதம் செய்திருப்பதாகச் சொல்கிறாள். தன்னைப் போரில் எவன் வெல்கிறானோ, தன் கர்வத்தை எவன் அழிக்கிறானோ, அவனைத்தான் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள்.

தூதன் சொன்னதைக் கேட்ட சும்பன் கடும் கோபம் கொண்டு தூம்ரலோசனன் என்பவனை அனுப்பி, அம்பிகையைத் தரதரவென்று இழுத்துவரச் சொன்னான். அம்பிகை தூம்ரலோசனனைத் தன் பார்வையாலேயே சாம்பலாக்கினாள். அவனுடன் கூட வந்த அசுர சேனையை நிர்மூலம் செய்தாள். அவளுடைய சிம்ம வாகனமும் தன் பங்குக்குப் பலரைக் கொன்றழித்தது.

சும்பன் அடுத்து சண்டனையும் முண்டனையும் அனுப்பினான். அந்தப் பெண்ணைத் தலைமுடியைப் பற்றி இழுத்துக்கொண்டு வா என்று கட்டளையிட்டான்.

சண்டனையும் முண்டனையும் அவர்களுடன் வந்த பெரும் படையையும் கண்ட தேவி கடும் கோபம் கொண்டாள். அவளுடைய முகம் கருத்தது. அவளுடைய புருவங்கள் நெரிந்தன. நெரிந்த புருவங்களிலிருந்து காளி குதித்திறங்கினாள்.

கையில் வாளும் பாசக்கயிறும் கொண்டவளாக இருந்தாள் அவள். கழியின் முனையில் கபாலத்தைக் கொண்ட கட்வாங்கம் என்ற ஆயுதத்தை அவள் தரித்திருந்தாள். கபால மாலை அணிந்திருந்தாள். புலித்தோலை அணிந்திருந்தாள். அவளுடைய தேகம் எலும்பும் தோலுமாக இருந்தது. அவளுடைய வாய் பிளந்திருந்தது. அதிலிருந்து நாக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் உள்ளடங்கியிருந்தன.

அவள் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டே சண்ட முண்டப் படைகள்மீது பாய்ந்தாள். அசுரர்களை அடித்து நொறுக்கி, வாயிலே போட்டு மென்று தின்னத் தொடங்கினாள் காளி. இதைக் கண்ட சண்டன் அவள்மீது அம்புகளைப் பாய்ச்சினான். முண்டனோ அவளை நோக்கிச் சக்கரங்களை எய்தான். காளியோ தன் வாயைப் பிளந்து அனைத்தையும் விழுங்கினாள். பிறகு சண்டன்மீது பாய்ந்து அவன் தலைமுடியைப் பற்றி, ஒரே வெட்டில் அவன் கழுத்தை அறுத்துத் தள்ளினாள்.

சண்டன் இறந்ததைக் கண்ட முண்டன், அவள்மீது பாய்ந்தான். காளியோ முண்டனையும் கீழே தள்ளி ஒரே வெட்டில் அவனையும் சாய்த்தாள். பின்னர் சண்ட முண்டர்களின் அறுத்த தலையைக் கையில் ஏந்தியபடி தேவியிடம் சென்றாள். ‘இதோ, சண்ட முண்டர்களின் தலைகள். இனி நீயே சும்ப நிசும்பர்களை வதம் செய்துகொள்’ என்றாள். தேவியும் மிக்க மகிழ்ந்து, காளியைப் பார்த்து, சண்ட முண்டர்களை வதம் செய்த நீ, இனி சாமுண்டி என்று அழைக்கப்படுவாய் என்றாள்.

சண்ட முண்டர்கள் அழிந்ததைக் கேள்விப்பட்ட சும்பன், மீதமிருந்த தன் படைகளையெல்லாம் ஒன்று திரட்டினான். ஒரு பக்கம் சும்ப நிசும்பர்கள், அவர்களின் பெரும் படை. மற்றொரு பக்கமோ, தேவியும் அவளது சிம்ம வாகனமும் மட்டும்.

உடனே கடவுள்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு, தங்கள் சக்திகளுடன் சண்டிகையை நோக்கிச் சென்றனர்.

பிரமனின் சக்தி, பெண் வடிவாக, கையில் அக்கமாலையையும் கமண்டலத்தையும் ஏந்தியபடி அன்னங்கள் பூட்டிய தேரில் வந்தது. அவளுக்கு பிரஹ்மாணி என்று பெயர்.

மஹேஸ்வரனின் சக்தி, காளையின் மீதேறி, கையில் திரிசூலத்தை ஏந்தி வந்தது. அவள்தான் மாஹேஸ்வரி.

குமரனின் சக்தி, மயில் மீதேறி, கையில் வேலுடன் அசுரர்களை அழிக்க வந்தாள். அவள்தான் கௌமாரி.

விஷ்ணுவின் சக்தி, கருடனின் மீதேறி, கையில் சக்கரம், சங்கு, கதை, வில், அம்பு, வாள் ஆகியவற்றுடன் வந்தாள். அவள்தான் வைஷ்ணவி.

விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் சக்தி, காட்டுப்பன்றி முகத்துடன் வாராஹி என வந்தாள்.

விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தின் சக்தி, சிம்ம முகத்துடன், பிடரி மயிர் சிலிர்க்க, நாரசிம்ஹி என வந்தாள்.

இந்திரனின் சக்தி, கையில் வஜ்ராயுதத்துடன் யானைகளின் அரசனான ஐராவதத்தின்மீதேறி ஐந்த்ரி என்று வந்தாள்.

இறுதியில் சண்டிகையின் சக்தியும் தன் முழு பலத்துடன் வெளிவந்தது.

உடனே சண்டிகை, சிவனைப் பார்த்து, ‘என் தூதராக நீங்கள் சும்ப நிசும்பர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் தாம் தேவர்களிடம் கைப்பற்றிய உலகங்களையும் செல்வங்களையும் தந்துவிட்டுச் சென்றுவிடச் சொல்லுங்கள். அப்படி அவர்கள் கேட்கவில்லையாயின் போருக்கு வரச்சொல்லுங்கள். என் நரிகளுக்கு விருந்தாவார்கள்’ என்றாள்.

சிவனையே தூதனாக அனுப்பியதால் அவளுக்கு சிவதூதி என்ற பெயரும் வந்தது.

தூதனாகச் சென்ற சிவனுடைய சொற்களைக் கேட்ட சும்ப நிசும்பர்கள், காத்யாயனி இருக்கும் இடத்துக்கு வந்தனர். அவளுடன் போர் புரியத் தொடங்கினர். பிரஹ்மாணி முதற்கொண்டு சப்த சக்திகளும் அசுரப் படைகள்மீது பாய்ந்து போரிட்டு அவர்களைக் கொன்று குவித்தனர்.

அப்போதுதான் ரக்தபீஜன் என்ற அசுரன் களமிறங்கினான். ரக்தபீஜனுக்கு ஒரு வரம் உண்டு. அவனுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் தரையில் வீழ்ந்தால், அந்த ரத்தச் சொட்டே மற்றொரு ரக்தபீஜனாக, அவனுடைய அனைத்துச் சக்திகளுடனும் சேர்ந்து உருவாகும். நூறு சொட்டு ரத்தம் என்றால் நூறு ரக்தபீஜன்கள். சப்த சக்திகளும் ரக்தபீஜனை மாறி மாறித் தாக்கினர். ஆனால் அவன் ரத்தம் கீழே சொட்டச் சொட்ட, அவனோ நூறாக, ஆயிரமாக, பலவாகக் கிளைத்தான்.

உடனே தேவி சத்தமாகச் சிரித்தாள். ‘ஓ காளி, ஓ சாமுண்டி, உன் வாயைத் திறந்து கொட்டும் ரத்தத்தையெல்லாம் பருகிவிடு’ என்று ஆணையிட்டாள். தேவி ரக்தபீஜனை அடிக்க அடிக்க, வெட்ட வெட்ட, குத்த குத்த, ரத்தம் பெருகப் பெருக, சாமுண்டி, ஒரு சொட்டு விடாமல் குடித்துத் தீர்த்தாள். இறுதியில் சொட்டு ரத்தம்கூட இல்லாமல் ரக்தபீஜன் வலுவிழந்து வீழ்ந்து இறந்துபோனான்.

அடுத்து தேவி நிசும்பனுடன் கடுமையான போர் புரிந்தாள். அம்புகளால் அவனைத் துளைத்துத் தரையில் வீழ்த்தினாள். நிசும்பன் மயங்கிச் சாய்ந்தான். சும்பனது கோபத்துக்கு அளவே இல்லை. அவன் பாய்ந்து பாய்ந்து பல திசைகளிலிருந்தும் தேவியைத் தாக்கினான். தேவியோ சும்பனைத் தன் ஈட்டியால் தாக்க, அவன் மயங்கிச் சரிந்தான். இதற்கிடையில் நிசும்பன் மயக்கத்திலிருந்து விடுபட்டு, பத்தாயிரம் கைகளை உருவாக்கிக்கொண்டு சண்டிகையை நோக்கி அனைத்துக் கைகளாலும் சக்கரங்களை ஏவினான். மாறி மாறி இருவரும் தாக்கிக்கொண்டனர்.

அப்போது சண்டிகை, ஈட்டியால் அவனது நெஞ்சைப் பிளந்தாள். அவன் கீழே விழுகையில் தன் வாளால் அவன் தலையைக் கொய்தாள்.

சும்பன் இப்போது தேவியை நோக்கி, ‘நான் இப்போது தனி ஆளாக இருக்கிறேன். நீயோ இத்தனை பேருடன் இருக்கிறாய்’ என்றான். அதற்கு தேவி, ‘நான் இவ்வுலகில் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். இவர்கள் அனைவருமே என் சக்தியின் வெளிப்பாடுகளே’ என்றாள். உடனே பிரஹ்மாணி தொடங்கி அனைத்துச் சக்திகளும் தேவியின் உடலுக்குள் புகுந்தன. அம்பிகை தன்னந்தனியாக நின்றனள்.

தேவர்களும் அசுரர்களும் பார்த்துக்கொண்டிருக்கையில் அம்பிகைக்கும் சும்பனுக்கும் இடையில் பெரும் போர் தொடங்கியது. சும்பன் வீசிய அனைத்து ஆயுதங்களையும் தேவி அழித்துக்கொண்டே வந்தாள். இறுதியாக அவன் மார்பில் ஓங்கி அடித்துக் கீழே தள்ளினாள். கீழே விழுந்த சும்பன் பாய்ந்து எழுந்து தேவியின் தலைமுடியைப் பற்றிக்கொண்டு வானில் எழும்பினான். வானிலேயே அவர்கள் போரிட்டனர். வெகு நேரம் நிகழ்ந்த போருக்குப்பின், தேவி சும்பனைக் கீழே வீழ்த்தி தன் ஈட்டியால் அவனைக் குத்திக் கொன்றாள்.

இவ்வாறாக சும்ப நிசும்பர்களை தேவி வதம் செய்தாள்.

0

இந்தக் கதையில் நாம் காளி என்னும் சாமுண்டி, சும்ப நிசும்பனை வதம் செய்த நிசும்பசூதனி, ஏழு கடவுளர்களின் சக்தி வடிவமாகிய சப்த மாதர்கள் ஆகியோரைப் பார்த்தோம். இந்த வடிவங்கள் அனைத்துமே சிற்பங்களாக இந்தியா முழுமைக்கும் கிடைக்கின்றன.

பல்லவர்களின் ஆரம்பகாலக் குகைக்கோவில்களில் சப்த மாதர்கள் இருப்பதில்லை. முதன்முதலில் சப்தமாதர்கள் கிடைப்பது காஞ்சி கைலாசநாதர் கோவிலில்தான். ஆனால் மாமல்லையில் ஓரிடத்தில் பல பின்னணியிலிருந்து வந்த சப்த மாதர் சிலைகள் உள்ளன. அதில் சாமுண்டி ஒருத்திதான் தனிப்பெரும் அழகோடு திகழ்பவள். அவளுடைய சிலையுடன் கூடச் செய்யப்பட்ட சிலைகள் வேறு எங்கோ காணாமல் போய்விட்டன என்று சொல்லலாம்.

சாமுண்டி

மாமல்லை சாமுண்டி, படம்: பாபு மனோ

சாமுண்டியின் காதுகளில் வித்தியாசமான குண்டலங்கள் காணப்படுகின்றன. ஒரு காதில் பொந்தில் இருக்கும் ஆந்தையே குண்டலம். இன்னொரு காதில் பிரேத குண்டலம். செத்த பிணத்தையே குண்டலமாக அணிந்திருக்கிறாள். இதே மாதிரியான குண்டலங்களையே நிசும்பசூதனியும் அணிவதால் பல இடங்களில் சாமுண்டி, நிசும்பசூதனி இரு வடிவங்களையும் பார்ப்போர் குழப்பிக்கொள்கின்றனர். சாமுண்டி கபாலங்களைக் கோத்து பூணூலாக அணிந்துள்ளாள். அவளுடைய கண்கள் உள்ளடங்கியுள்ளன. பல இடங்களில் அவள் உடம்பில் எலும்புகள் தெரியும்வண்ணம் செதுக்கப்படுகிறாள். ஆனால் இங்கே அப்படியல்ல. சாமுண்டியின் தலை அலங்காரமும் மிகவும் வித்தியாசமாக ஜடாபாரமாக உள்ளன.

பல்லவர்களைப்போல் அல்லாமல், முத்தரையர்களும் பாண்டியர்களும் தங்கள் குகைக்கோவில்களிலிருந்தே சப்த மாதர்களைச் சிற்பங்களாகச் செதுக்கிவைக்கத் தொடங்கினர். புதுக்கோட்டையின் திருகோகர்ணம், மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோவில் ஆகிய இடங்களைச் சொல்லலாம்.

சப்தமாதர்கள், மலையடிப்பட்டி, படம்: விஜெய் பட்

சப்தமாதர்கள், மலையடிப்பட்டி, படம்: விஜய் பட்

மேலே உள்ளது முத்தரையர்கள் வெட்டுவித்த மலையடிப்பட்டியின் குகைச் சுவரிலேயே செதுக்கப்பட்ட சப்தமாதர்கள் சிற்பம். மிக மிக அழகானது. பிரஹ்மாணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்த்ரி, சாமுண்டி ஆகிய எழுவரும், அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரரும் கணேசரும். பல இடங்களில் வீரபத்திரர் வீணை வாசிப்பதுபோலவும் இருக்கும். இங்கே வீரபத்திரர் யோகபட்டம் அணிந்தாற்போல் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆஷாபுரி என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒற்றைக்கல்லில் செய்யப்பட்ட கீழ்க்கண்ட சப்தமாதர் சிற்பம் உள்ளது. இங்கே வீரபத்திரர் முதல் கணேசர் வரையில் அனைவருமே நடனமாடிக்கொண்டிருப்பதுபோல் இருக்கக் காண்கிறோம். பல்லவ பாண்டிய சாமுண்டியைப்போல் அல்லாது இங்கே எலும்பும் தோலுமாக, தொங்கும் மார்பகங்களுடன், ஒரு பிரேதத்தைக் காலால் மிதித்தபடிச் சற்றே குரூரமாகக் காட்சியளிக்கிறாள்.

சப்தமாதர்கள், ஆஷாபுரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

சப்தமாதர்கள், ஆஷாபுரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

சோழ சாம்ராஜ்ஜியத்தைச் ஸ்தாபித்த விஜயாலய சோழன், நிசும்பசூதனிக்குத் தஞ்சையில் கோவில் எழுப்பியதாகத் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் ராஜேந்திர சோழன் குறிப்பிடுகிறான். ஆனால் இன்று தஞ்சையில் நிசும்பசூதனி கோவில் என்று பழைய கோவில் ஏதும் இல்லை. தஞ்சையில் உள்ள ஒரு கோவிலில் நிசும்பசூதனி சிலை ஒன்று உள்ளது. ஆனால் அது விஜயாலயன் காலத்ததா அல்லது பிற்காலத்ததா என்பது தெரியவில்லை. பத்மா கைமலின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் இந்தப் படம் கிடைத்தது.

நிசும்பசூதனி, தஞ்சை, படம்: பத்மா கைமல்

நிசும்பசூதனி, தஞ்சை, படம்: பத்மா கைமல்

திருவலஞ்சுழியில் முதலாம் ராஜராஜன் கட்டுவித்த கோவில் ஒன்று உள்ளது. அங்கே ‘ஏகவீரி’ என்ற பெயரில் ஒரு சிற்பம் வழிபாட்டில் உள்ளது. அந்தச் சிற்பம்கூட நிசும்பசூதனியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. வழிபாட்டுக் கோவில்களில் தமிழகத்தில் வேறு இடங்களில் நிசும்பசூதனி படிமம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் சோழர்களுக்கு மிக முக்கியமான கடவுள் வடிவமாக நிசும்பசூதனி ஒரு காலத்தில் இருந்துள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தில் இரண்டு நிசும்பசூதனி படிமங்கள் உள்ளன. ஒன்று கல்லினால் ஆனது; பிற்காலச் சோழர் கலையாக இருக்கவேண்டும். அடுத்தது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புச் சிலை. இரண்டுமே தவறாகப் பெயர் சூட்டப்பெற்றுள்ளன. கற்சிலை காளி என்ற பெயருடனும் செப்புச் சிலை மஹிஷாசுரமர்தினி என்ற பெயருடனும் உள்ளன.

மஹிஷாசுரமர்தினி சிலை வடிவமைப்பில் எருமைத்தலை கட்டாயம் இருக்கவேண்டும். அதன்மீது துர்கை நின்றுகொண்டிருப்பாள், அல்லது மஹிஷனுடன் போர் புரிந்து அவனைக் கொல்லும் நிலையில் இருப்பாள்.

காளியாகவோ அல்லது சாமுண்டியாகவோ இருக்கும்போது அவளுக்கெனத் தனியான படிம இலக்கணம் உண்டு. நிசும்பசூதனியாகக் காண்பிக்கப்படும்போது, காலடியில் பிரேதம் ஒன்று இருக்கும். சாமுண்டிக்கு ஒன்று உடல் எலும்பும் தோலுமாக, மார்பகங்கள் தொங்கியபடி இருக்கும். அல்லது உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தலைமுடி ஜடாபாரமாக இருக்கும். காளியாகக் காண்பிக்கப்படும்போது தலையைச் சுற்றித் தீயின் ஜுவாலைபோல முடி இருக்கும்.

நிசும்பசூதனி, சென்னை அருங்காட்சியகம்

நிசும்பசூதனி, சென்னை அருங்காட்சியகம்

மேலே உள்ளது நிசும்பசூதனி வடிவமாகும். துரதிர்ஷ்டவசமாக, இச்சிலையின் கைகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தத் தலையலங்காரத்தை நினைவில் கொள்ளுங்கள். மார்பைச் சுற்றி நாகப்பாம்பை இழுத்துக் கட்டி முடிச்சு போட்டுள்ளாள். இதனையே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில் ‘துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி’ என்கிறார். உரகத்துக்குப் பல்லில் துளை உள்ளதாம். உரகம் என்றால் நாகம். பல்லில் துளை உள்ள நாகத்தையே கச்சாக அணிந்தவள். இதிலிருந்தே எந்த அளவுக்கு இளங்கோ அடிகளுக்கு கொற்றவை எனும் துர்கையின், நிசும்பசூதனியின் படிம இலக்கணம் தெரிந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதே நிசும்பசூதனியை சோழர் காலச் செப்புப் படிமமாகச் சென்னை அருங்காட்சியகத்தில் காணலாம்.

நிசும்பசூதனி, சோழர் காலச் செப்புப் படிமம், சென்னை அருங்காட்சியகம்

நிசும்பசூதனி, சோழர் காலச் செப்புப் படிமம், சென்னை அருங்காட்சியகம்

மேலே உள்ள கற்சிலைக்கும் செப்புப் படிமத்துக்குமான தொடர்பு எளிதில் விளங்கும். தலை அலங்காரம், பிரேத குண்டலம், ஆந்தைக் குண்டலம், காலின்கீழ் பிரேதம், பாம்பை மார்புக் கச்சாக அணிந்தவள். ஒரு கை தவிரப் பிற கைகள் உடையாமல் உள்ளன. பத்மா கைமல் அளித்திருக்கும் நிசும்பசூதனி படிமத்தின் மேம்பட்ட வடிவங்களாக இவை உள்ளன. படிம இலக்கணத்தை நன்கு புரிந்துகொள்ள இன்னொரு படம் எனக்குக் கிடைத்தது.

மார்சுர் மடிவாலாவின் சாமுண்டி என்ற பெயரில் அழைக்கப்படும் தெய்வத்தின் சிலையை நீங்கள் கீழே பார்க்கலாம். மேலே நாம் பார்த்த நிசும்பசூதனியின் வடிவமேதான். கைகள் முழுமையாகவும் அனைத்து ஆயுதங்களுடனும் நமக்குக் கிடைக்கிறது. வலது கைகளில் திரிசூலம், கீழே உள்ள பிரேதத்தைக் குத்துகிறது. பிற வலது கைகளில் ஒன்றில் உடுக்கை, மற்ற இரண்டில் வாள். இடது கைகளில் ஒன்றில் நாகம், ஒன்றில் பாசக்கயிறு, ஒன்றில் கேடயம், ஒன்றில் பாத்திரம். மேலே உள்ள செப்புச் சிலையின் இடது கைகளில் பாத்திரம், கேடயம், மணி ஆகியவை தெரிகின்றன. வலது கைகளில் வாளின் கைப்பிடியும் கிளி ஒன்றும் தென்படுகின்றன. ஒரு கை உடைந்துள்ளது.

மார்சுர் மடிவாலாவின் சாமுண்டி, படம்: The Mythic Society, Bengaluru

மடிவாலா சிலையில், விரிந்த தலை, கோரைப்பற்கள், ஆந்தை-பிரேதக் குண்டலங்கள், பாம்பைக் கச்சாக அணிந்த மார்பகங்கள், கபால மாலையைப் பூணூலாக அணிந்துள்ளது போன்றவை அப்படியே உள்ளன.

துர்கையின் புருவ நெரிப்பிலிருந்து வெளிவந்த காளி இன்று மிகப் பிரபலமான கடவுள். பல இடங்களில் புதிதாக அவளுக்குக் கோவில் கட்டப்பட்டுள்ளது. காளியின் வடிவம் கிட்டத்தட்ட நிசும்பசூதனியையும் சாமுண்டியையும் ஒத்ததாக இருக்கும், சிற்சில மாறுதல்களுடன்.

காளி, சென்னை அருங்காட்சியகம்

காளி, சென்னை அருங்காட்சியகம்

சாமுண்டியின் தலைமுடி ஜடாபாரமாக இருக்கும் அல்லது உடல் சுருங்கி, தோலும் எலும்புமாக இருக்கும். ஆனால் காளி மதர்த்த மார்பகங்களுடன் நிசும்பசூதனி போன்றே இருப்பாள். தலைமுடி தீஜுவாலையாக மேலே செல்லும்படி இருக்கும். சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் இரு உலோகச் சிலைகளைப் பாருங்கள்.

0

ஆகமங்கள் துர்கை, காளி, சாமுண்டி, மஹிஷாசுரமர்தினி, நிசும்பசூதனி, சப்த மாதர்கள் ஆகியோரின் வடிவங்களைக் குறித்து என்ன சொல்கின்றன? கோபிநாத ராவ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

துர்கையானவள், நான்கு, எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கரங்களைக் கொண்டிருப்பாள். மூன்று கண்கள் உடையவளாக இருப்பாள். கருத்த நிறம் கொண்டவளாக இருப்பாள். மிக அழகிய உருவமும், மதர்த்த மார்பகங்களும், பருத்த தொடையும் கொண்டவளாக இருப்பாள். மஞ்சள் ஆடை அணிந்திருப்பாள். கரண்ட மகுடம் அணிந்து உடல் முழுதும் அணிகலன் பூட்டியவளாக இருப்பாள். நான்கு கரங்கள் மட்டும் இருக்கையில் சக்கரம், சங்கு, அபய முத்திரை, கடக முத்திரையுடன் இருப்பாள். பத்மத்தின்மீது நேராக நெடுக்காக நிற்பாள், அல்லது எருமைத் தலையின்மீது அவ்வாறு நிற்பாள் அல்லது சிம்மத்தின்மீது வீற்றிருப்பாள். அவளது மார்பகங்கள்மீது பாம்பால் முடிச்சிடப்பட்டிருக்கும். சிவப்பு மார்க்கச்சு அணிந்திருப்பாள். சுப்ரபேதாகமம், துர்கைக்கு எட்டு கரங்கள் இருந்தால் அவற்றில் சக்கரம், சங்கு, சூலம், வில், அம்பு, வாள், கேடயம், பாசம் ஆகியவை இருக்கும் என்கிறது.

ஆகமங்களில் ஒன்பது விதமான துர்கைகள் சொல்லப்பட்டிருப்பதாக கோபிநாத ராவ் கூறுகிறார்: அவையாவன: (1) நீலகண்டி (2) க்ஷேமசங்கரி (3) ஹரசித்தி (4) ருத்ராம்ச துர்கை (5) வனதுர்கை (6) அக்னிதுர்கை (7) ஜயதுர்கை (8) விந்தியாவாசி துர்கை (9) ரிபுமாரி துர்கை.

இவை ஒவ்வொன்றும் படிம இலக்கணமும் எப்படி இருக்கும் என்றும் கோபிநாத ராவ் சொல்கிறார். விருப்பம் உள்ளவர்கள் அவருடைய புத்தகத்தைப் படித்துத் தெளிந்துகொள்ளவும்.

0

துர்கையானவள் மஹிஷாசுரமர்தினி வடிவத்தில் இருக்கும்போது அவளுக்குப் பத்து கரங்கள் இருக்கவேண்டும் என்கிறது சில்பரத்தினம். அவளுக்கு மூன்று கண்கள் இருக்கவேண்டும். ஜடாமகுடம் கொண்டவளாக இருத்தல் வேண்டும். அந்த ஜடையில் பிறை சூடியிருக்கவேண்டும். நீல நிறத்தவளாக இருத்தல் வேண்டும். அவளுடைய கண்கள் நீலோத்பல மலர் நிறத்தில் இருக்கவேண்டும். மார்பகங்கள் உயர்ந்தும், மெல்லிய இடையுடனும், திரிபங்கமாக (மூன்று வெட்டுகளுடன்) நிற்கவேண்டும். வலது கைகளில் திரிசூலம், வாள், சக்தி, சக்கரம், வில், இடக்கைகளில் பாசம், அங்குசம், கேடயம், மழு, மணி ஆகியவை இருக்கவேண்டும். கழுத்திலிருந்து ரத்தம் பெருகும் எருமைத் தலைமீது அவள் காலை வைத்திருக்கவேண்டும். இந்த எருமைக் கழுத்திலிருந்து மனித உரு அசுரன் வெளியே வருமாறு இருக்கவேண்டும். அந்த அசுரனை தேவி பாசத்தால் கட்டியிருக்கவேண்டும். அசுரன் கையில் வாளும் கேடயமும் இருத்தல் வேண்டும். தேவியின் திரிசூலம் அவனுடைய கழுத்தில் செருகி அங்கிருந்து ரத்தம் பெருகவேண்டும். தேவியின் வலது கால் சிங்கத்தின்மீதும், இடது கால் எருமைத் தலைமீதும் படவேண்டும்.

விஷ்ணுதர்மோத்தரம், மஹிஷமர்தினி தங்க நிறத்தில் இருக்கவேண்டும் என்கிறது. அழகிய இளம் பெண்ணாக, கோபத்தில் இருப்பவளாக, சிம்மத்தின்மீது வீற்றிருப்பவளாக அவள் இருக்கவேண்டும். அவளுக்கு இருபது கரங்கள் இருக்கவேண்டும். வலக்கைகளில் சூலம், வாள், சங்கு, சக்கரம், அம்பு, சக்தி, வஜ்ரம், உடுக்கை, குடை ஆகியவற்றுடன் அபய முத்திரை. இடக்கைகளில் பாசம், கேடயம், மழு, அங்குசம், வில், மணி, கொடி, கதை, கண்ணாடி, சுத்தியல் ஆகியவை. வெட்டப்பட்ட எருமைத் தலையிலிருந்து மனித உருவில் அசுரன் வெளிப்படவேண்டும். அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்டவேண்டும். தேவியின் சிங்கம் அவனைக் கடிக்கவேண்டும். தேவியின் திரிசூலம் அவனுடைய கழுத்தில் குத்தவேண்டும். பாசக்கயிற்றால் அசுரன் கட்டப்பட்டிருக்கவேண்டும். அவன் கையில் வாளும் கேடயமும் இருக்கவேண்டும்.

0

பத்ரகாளி அல்லது காளி, பதினெட்டு கரங்கள் கொண்டவளாகவும் அழகிய வனப்புடையவளாகவும் இருப்பாள். அவளுக்கு மூன்று கண்கள் இருக்கும். அவள் கைகளில் அக்கமாலை, திரிசூலம், வாள், பிறைச் சந்திரன், அம்பு, வில், சங்கு, தாமரை, ஸ்ருக், ஸ்ருவா (யாகம் வளர்க்க நெய் வார்க்க உதவும் மரக்கரண்டிகள்), கமண்டலம், கழி, சக்தி, நெருப்பு, மான்தோல், நீர், பாத்திரம் ஆகியவையும் ஒரு கரம் அபய முத்திரையுடனும் இருக்கும். நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் அவள் அமர்ந்திருப்பாள்.

இவளே மஹாகாளி என்ற வடிவில் இருந்தால், கருத்த நிறத்தில் இருப்பாள். வாயில் கோரைப்பல் இருக்கும். கண்கள் விரிந்திருக்கும். இடை சிறுத்திருக்கும். நான்கு கைகள் இருக்கும். அவற்றில் வாள், கேடயம், பாத்திரம், கபாலம் ஆகியவை இருக்கும். அல்லது பருத்த உடலும் எட்டு கரங்களும் கொண்டவளாக இருப்பாள். இக்கரங்களில் சக்கரம், சங்கு, கதை, பாத்திரம், சிற்றுலக்கை, அங்குசம், பாசம், வஜ்ரம் ஆகியவை இருக்கும்.

0

சாமுண்டி நான்கு கரங்கள் கொண்டவளாக இருப்பாள். அவளுக்கு மூன்று கண்கள். சிவப்பு வண்ணத்தில் இருப்பாள். அவளுக்கு நிறையத் தலைமுடி இருக்கும். அது மேல் நோக்கிச் செல்லும். அவளது ஒரு கையில் கபாலமும் இன்னொரு கையில் சூலமும் இருக்கும். மற்ற இரு கைகள், அபய, வரத முத்திரையுடன் இருக்கும். அவள் கபாலங்கள் கோத்த பூணூலை அணிந்திருப்பாள். புலித்தோல் அணிந்திருப்பாள்.

விஷ்ணுதர்மோத்திரம், அவளுடைய உடல் ஒட்டிச் சுருங்கி எலும்பு தெரிவதுபோல் இருக்கும், அவள் பிரேதம் ஒன்றின்மீது உட்கார்ந்திருப்பாள், அவளுக்குப் பத்துக் கரங்கள் இருக்கும் என்றும் சொல்கிறது. கண்கள் குழிவிழுந்து, வயிறு ஒட்டி இருப்பாள். கைகளில் தடி, மழு, பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு ஆகியவை வைத்திருப்பாள் என்கிறது.

பூர்வகாரணாகமம், சாமுண்டி சிவனைப் போன்றே தலையில் பிறை சூடியிருப்பாள், அவளுடைய வாகனம் ஆந்தை, அவளுடைய கொடி கருடன், ஒரு கையில் கபாலம், ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் பாம்பு ஆகியவற்றை வைத்திருப்பாள் என்கிறது.

0

தேவி மஹாத்மியம் சப்த மாதர்கள் குறித்த தோற்றக் கதையைக் கூறுவதிலிருந்து விலகி வேறு கதையைச் சொல்கின்றன பிற புராணங்கள். சிவன் அந்தகாசுரனை வதம் செய்யும்போது இந்த சப்த மாதர்கள் உருவானதாக வராஹ புராணம் சொல்கிறது. பிரமன், மஹேஸ்வரன், குமரன், விஷ்ணு, வராஹம், இந்திரன், யமன் ஆகியோரின் சக்தி வடிவங்களான பிரஹ்மாணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்த்ரி (அல்லது இந்திராணி), சாமுண்டி ஆகியோர்தான் சப்த மாதர்கள் என்கிறது இந்தப் புராணம். இந்த எழுவருடன் சிவனின் வாயிலிருந்து யோகேஸ்வரி என்ற சக்தி தோன்றி எட்டானதாகவும் வராஹ புராணம் சொல்கிறது.

சப்த மாதர் வடிவங்கள் இந்தியா முழுமையிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன. நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் இவர்களைக் காணலாம். இவர்கள் அந்தந்தக் கடவுளர்களின் வாகனங்களின்மீது அமர்ந்தவாறும் இருக்கலாம், அல்லது அந்தந்த வாகனங்கள் அவர்களது இருக்கையின்கீழ் செதுக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு சக்தியும் அந்தந்தக் கடவுளரின் ஆயுதங்களைக் கையில் ஏந்தியிருப்பர். சாமுண்டியைத் தவிர மற்ற அனைவரும் அழகாகவும் சாமுண்டி மட்டும் பயமுறுத்தக்கூடியவகையிலும் இருப்பர். பிரஹ்மாணி பல இடங்களிலும் பிரமனைப் போன்றே நான்கு தலைகளைக் கொண்டவளாக இருப்பாள். சில இடங்களில் ஒற்றைத் தலையுடன் இருக்கலாம். சில இடங்களில் கௌமாரி ஆறு தலையுடனும் பன்னிரு கரங்களுடனும் இருக்கக்கூடும்.

சில இடங்களில் சப்த மாதர்கள் கையில் ஒரு குழந்தையைத் தாங்கியிருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளனர். எழுவரும் எப்போதும் வீரபத்திரருக்கும் கணேசருக்கும் இடையில் இருப்பதுபோலவே காட்டப்பட்டிருப்பார்கள். சில இடங்களில் சாமுண்டியின் அருகில் எலும்புக்கூட்டுப் பேயுருவங்கள் ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் செதுக்கப்பட்டிருக்கும்.

கோபிநாத ராவ், தம் கையாலேயே வரைந்து ஒரு படத்தைத் தன் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார். அதில் சப்த மாதர்களைச் சிற்பமாகச் செதுக்காமல் வெறும் பீடங்களாக ஏழு + இரண்டு என்று செய்வதுண்டு என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் என் நண்பர் கிருஷ்ணகுமார், இந்தப் படத்தை அனுப்பிவைத்தார்.

கோபிநாத ராவ், நிசும்பசூதனி வடிவம் குறித்து அவருடைய புத்தகத்தில் எதையும் சொல்லவில்லை.

0

தேவி, தனிப்பெரும் கடவுளாக, சாக்தத்தின் சக்தியாக வரும்போது அவளுடைய சில வடிவங்கள் குறித்து மட்டும்தான் நாம் இங்கே பார்த்திருக்கிறோம். இன்னும் நாம் பார்க்காமல் இருப்பது சிவன், விஷ்ணு, பிரமன் ஆகியோரின் தேவிகளாக வரும் பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரை. கூடவே ஜ்யேஷ்டா எனப்படும் தவ்வை பற்றியும் தனியாகப் பார்க்க இருக்கிறோம்.

யோகினிகள் என்பது மற்றுமொரு தேவி வடிவம். அறுபத்து நான்கு யோகினிகள் வழிபாடு என்பது மத்தியப் பிரதேசம், ஒடிஷா போன்ற இடங்களில் நடைபெற்றது. இன்னமுமே அங்கே சில கோவில்கள் எஞ்சியுள்ளன. முடிந்தால், அவர்களைப் பற்றியும் பார்த்துவிடுவோம்.

0

தேவி படிமங்களில் எது மிக அழகு வாய்ந்தது என்று எப்படிச் சொல்வது? பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தேவியின் சிலைகள் அதி அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. தனிப்பெரும் பெண் தெய்வம் அவள். இங்கும் சீர்தூக்கிப் பார்க்கையில் பல்லவர்களும் சோழர்களுமே முன்னிலை வகிக்கிறார்கள். கல் என்றால் பல்லவர்கள். உலோகம் என்றால் சோழர்கள்.

பல்லவர்களின் காஞ்சி கைலாசநாதர் துர்கையா, சோழர்களின் புள்ளமங்கை துர்கையா? பட்டிமன்றம் வைத்தாலும் முடிவு இருவருமே சிறந்தவர்கள் என்பதாகத்தான் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் நான் இரு சிற்பங்களைச் சொல்வேன். மாமல்லையில் சப்தமாதர் குழுவில் பிற சிலைகளோடு சேராமல் தனித்திருக்கும் சாமுண்டி. அவளுடைய முகத்தில் இருக்கும் ஏளனச் சிரிப்பை வேறு எந்தக் கலைஞனும் இதுவரை நெருங்கவில்லை. கிட்டத்தட்ட இணையான ஒன்றை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள உலோகக் காளி சிற்பத்தில் சோழக் கலைஞன் ஒருவன் நெருங்கிவிட்டான்.

சோழர் காலக் காளி, செப்புச் சிலை, சென்னை அருங்காட்சியகம்

 

(தொடரும்)

பகிர:
nv-author-image

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

3 thoughts on “கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!”

  1. கு. பத்மநாபன்

    நன்றி. மிக மிக சுவையான நடையில் எளிமையாக எளிய நிலை ஆர்வலர்களுக்கும் சென்று சேரும் வண்ணம் தொடர் எழுதப்படுகிறது. நண்பர்களுக்கு இந்தத் தொடரை மிகுந்த மகிழ்வுடன் பரிந்துரைக்கிறேன். அறிஞர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  2. Nice article. சிறந்த ஆராய்ச்சி அது போல தமிழ் நூல் மேற்கோளும் அருமை

  3. பத்ரி சொல்வது சரியான கூற்று. இதை நான் காஞ்சி கைலாசநாதர் கோவில் மற்றும் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்களில் கண்டிருக்கிறேன். எத்தனை முறை சென்றாலும் மீண்டும் காந்தம் போல நம்மை இழுக்கும் சிற்பங்கள் உள்ள கோவில்கள் அவை. என்ன எனக்கு சிற்பக் கலையை பற்றி தெரியாது இருந்தாலும் நமது முகநூல் நண்பர்கள் Babu mano போன்றவர்களின் பதிவுகளை படிப்பதால் ஓரளவிற்கு அதை புரிந்து கொள்ள முடிகிறது.

    வெகு நேர்த்தி.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *