Skip to content
Home » கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

கல்லும் கலையும்

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை மணாளன். குமரனுடைய பிறப்பு மிக விஸ்தாரமாக ஸ்கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குமுன், தாரகாசுரனுடைய பிறப்பு குறித்துப் பார்க்கவேண்டும்.

கஷ்யபருக்கு திதி, அதிதி, தனு முதலாகப் பதினான்கு மனைவிகள். அதிதியின் மகன்கள் ஆதித்யர்கள் என அழைக்கப்படுகிறார்கள். திதியின் மகன்கள் தைத்யர்கள். தனுவின் மகன்கள் தானவர்கள். அதிதிக்குப் பிறந்த ஒரு மகன் இந்திரன். திதிக்குப் பிறந்தவர்களில் இருவர் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகஷிபு. இருவருமே விஷ்ணுவின் கையால் கொல்லப்படுகிறார்கள். எனவே திதி கஷ்யபரிடம் சென்று,  இந்திரனைப் போரில் கொல்லக்கூடிய ஒரு மகன் தனக்கு வேண்டும் என்று கேட்கிறாள். கஷ்யபர் அவளைக் கடுமையான தவம் புரியச் சொல்கிறார்.

திதி ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிகிறாள். அப்போது இந்திரனே அவள் தவத்தைக் கண்டு மெச்சி அவளுக்குச் சேவகம் புரிய வருகிறான். தவம் விரைவில் முடிய இருக்கிறது. திதி அப்போது இந்திரனிடம், ‘உனக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறான். அவன் உன்னுடனேயே இருந்து, இந்த மூவுலகங்களையும் உன்னோடு பங்கிட்டுக் கொள்வான்’ என்கிறாள். ஒரு நாள் அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்திரன் அவள் உடம்புக்குள் புகுந்து அவள் வயிற்றில் வளர்ந்துகொண்டுவரும் கருவைத் தன் வஜ்ராயுதத்தால் ஏழாகக் கூறு போட்டு, ஒவ்வொன்றையும் மேலும் ஏழாகக் கூறுபோடுகிறான்.

பின் அவள் உடலிலிருந்து வெளியே வந்து, ‘உங்கள் பிள்ளை என்னுடனேயே இருப்பான் என்றீர்கள்; இந்த நாற்பத்தொன்பது பேரும் என்னுடனேயே இருக்குமாறு நான் அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர்களுக்கு மருத் என்று பெயர்.

திதி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், மீண்டும் கஷ்யபரிடம் சென்று ‘இந்திரனைக் கொல்லக்கூடிய மகன் வேண்டும், அவனை தேவலோக ஆயுதங்கள் ஒன்றும் செய்யக்கூடாது’ என்று வேண்டுகிறாள். கஷ்யபர் அவளை மேலும் கடுமையான தவம் செய்யச் சொல்கிறார். இப்போது பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிகிறாள் திதி. விளைவாக, வஜ்ராங்கன் என்ற பெயருடைய பிள்ளை அவளுக்குப் பிறக்கிறான். அவனுடைய உடலை இரும்பினாலும் அறுக்க முடியாது.

திதி வஜ்ராங்கனிடம், இந்திரன் தனக்கு இழைத்த அநீதியைச் சொல்லி, பழிவாங்கச் சொல்கிறாள். வஜ்ராங்கனும் பெரிய படையோடு சென்று தேவர்களை வென்று இந்திரனைக் கட்டி இழுத்துவருகிறான். உடனே பிரம்மாவும் கஷ்யபரும் வஜ்ராங்கனிடம் சென்று இந்திரனை விட்டுவிடும்படிக் கேட்டுக்கொள்கிறார்கள். வஜ்ராங்கனும், தனக்கு இந்திரனிடம் எந்தப் பிரச்னையுமில்லை, தாய் கேட்டதால்தான் செய்தேன், மேலும் இந்த உலகங்களை ஆள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி இந்திரனை விட்டுவிடுகிறான்.

பிரம்மா வராங்கி என்ற அழகான பெண்ணை உருவாக்கி, வஜ்ராங்கனுக்குத் திருமணம் செய்விக்கிறார். வஜ்ராங்கனும் வராங்கியும் காட்டுக்குச் சென்று தனித்தனியாகக் கடும் தவத்தில் ஈடுபடுகின்றனர்.

வராங்கியின் தவத்தைக் கலைக்க இந்திரன் முற்படுகிறான். ஒரு குரங்கு வடிவத்தில் சென்று அவளுடைய ஆடைகளைப் பற்றி இழுத்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து, முகத்தைப் பிறாண்டித் தொல்லை கொடுக்கிறான். ஓர் ஆட்டின் வடிவம் எடுத்து முட்டுகிறான். பாம்பாக மாறி அவள் காலைச் சுற்றிக் கடிக்கிறான். நரி வடிவமெடுத்து அவளுடைய ஆஸ்ரமத்தைச் சேதப்படுத்துகிறான். நெருப்பாக ஆகி, ஆஸ்ரமத்தை எரிக்கிறான். காற்றாகி, அவளை அலைக்கழிக்கிறான். சிங்கம், ஓநாய் போன்ற வடிவங்களை எடுத்துத் தொல்லை கொடுக்கிறான். ஆனால் அவளுடைய கற்பின் காரணமாகவும் தவவலிமையின் காரணமாகவும் இந்திரனால் அவளைக் கொல்ல முடியவில்லை.

இதற்கிடையில் வஜ்ராங்கனின் தவம் நிறைவுபெறுகிறது. பிரம்மா அவன்முன் தோன்றுகிறார். ஆனால் வஜ்ராங்கன், தனக்கு இந்திர பதவி வேண்டாம், பக்தி, நல்லெண்ணம், தவம் ஆகியவையே போதும் என்று சொல்லிவிட்டுத் தன் மனைவியைத் தேடி வருகிறான். வராங்கி வஜ்ராங்கனிடம், இந்திரன் தனக்குச் செய்த அவமானங்களையெல்லாம் எடுத்துச் சொல்கிறாள். தன் மனைவியின் நிலையைக் கண்டு வஜ்ராங்கன் கடும் கோபம் கொள்கிறான்.

மீண்டும் தவத்தில் இறங்குகிறான். பிரம்மா அவன்முன் வருகிறார். அவரிடம், தேவர்களின் பெருமையை அழிக்கக்கூடியதான மகன் தனக்கு வேண்டும் என்று கேட்கிறான். வரத்தைப் பெறுகிறான். வராங்கி கர்ப்பம் தரிக்கிறாள். ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை பிறக்கிறது. அதன் பெயர் தாரகன்.

தாரகன் தன் பங்குக்குக் கடுமையான தவம் புரிகிறான். பிரம்மா மகிழ்ந்து அவன்முன் தோன்றுகிறார். தாரகன், இறப்பே இருக்கக்கூடாது என்று கேட்கிறான். ‘அதற்குச் சாத்தியமே இல்லை, பிறந்தோர் அனைவரும் இறந்தே ஆகவேண்டும், எனவே சரியான வரமாகக் கேள்’ என்கிறார் பிரம்மா. சற்று யோசித்தபின், ‘பிறந்து ஏழு நாளே ஆன ஒரு குழந்தையைத் தவிர வேறு யாராலும் தனக்கு இறப்பு வரக்கூடாது. எந்தத் தேவராலும் இறக்கக்கூடாது’ என்ற வரத்தைக் கேட்கிறான். பெறுகிறான்.

அடுத்து என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் எளிதில் ஊகிக்கலாம். ஸ்கந்த புராணம் மிக விரிவாக தாரகனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தை விளக்குகிறது. இந்தப் போரில் சென்ற வாரம் நாம் பார்த்த மஹிஷாசுரன், சும்பன் ஆகியோர் அசுரர் தரப்பிலும் விஷ்ணு தேவர் தரப்பிலும் போரிடுவதாக ஸ்கந்த புராணம் சொல்கிறது. மஹிஷன், சும்பன் ஆகியோர் விஷ்ணுவிடம் அடிபட்டுக் கீழே விழும்போது விஷ்ணு அவர்களை எழுப்பி, உங்களையெல்லாம் கொல்ல நான் தேவையில்லை, ஒரு பெண் வந்து உங்களைக் கொல்வாள் என்று சொல்வதாக இந்தப் புராணம் கூறுகிறது. இப்படி விஷ்ணுவே தேவர்கள் பக்கமிருந்து சண்டையிட்டாலும் இறுதியில் தாரகன் தலைமையிலான அசுரப் படையே வெல்கிறது. தாரகன் அனைத்துலகங்களுக்கும் அதிபதி ஆகிறான்.

0

இந்தக் கட்டத்தில் சிவபெருமான், தக்ஷனின் மகளான சதி என்னும் தன் மனைவியை இழந்து தனிமையில் இருக்கிறார். தேவர்கள் மீண்டும் இழந்த இடத்தைப் பிடிக்கவேண்டுமென்றால், ஏழு நாளே ஆன குழந்தை ஒன்று போருக்கு வந்து தாரகனின் கதையை முடிக்கவேண்டும். அந்தக் குழந்தை சிவபெருமானுடைய குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று தேவர்களும் பிற கடவுள்களும் முடிவு செய்கின்றனர். அதன் விளைவாகத்தான் பார்வதி அவதரிக்கிறாள். சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இவற்றையெல்லாம் நாம் வெவ்வேறு சிற்பங்களைப் பற்றிப் பார்க்கையில் சற்றே விரிவாகக் காண உள்ளோம்.

சிவனும் பார்வதியும் இணைவதன்மூலம் குமரன் பிறக்கிறான் என்பதுதான் கதை. ஆனால் இதற்கான மூலக்கதை மகாபாரதத்தில் உள்ளது. அதிலிருந்து ஸ்கந்த புராணம் வெகுவாக நகர்கிறது. ஆனால் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டிலும் ஒன்றுதான்; வழிமுறையில்தான் மாற்றம். தமிழில் பரிபாடல் மகாபாரதத்துக்கும் ஸ்கந்த புராணத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றியது. அது மகாபாரதத்தை அடியொற்றியே இருப்பதைக் காணலாம்.

சிவன் பார்வதி இணையும்போது சிவனின் விந்து வெளியேறுகிறது. அது அக்னியின் வழியாக சப்தரிஷிகளின் மனைவிகளில் அருந்ததி தவிர்த்துப் பிற அறுவருடைய கருப்பைக்குள் செல்கிறது. இந்த அறுவரும் அவர்தம் கணவரால் சந்தேகிக்கப்படுகின்றனர். ஆறு பேரும் தம் வயிற்றுப் பிண்டத்தை வெளியேற்றுகின்றனர். வெளியேறியும் ஆறு கருக்களும் வளர்கின்றன. ஆறு கார்த்திகைப் பெண்களால் எடுத்து வளர்க்கப்படும் இந்தக் கருக்கள் ஒன்று சேர்ந்து ஆறுமுகன் உருவாகிறான்.

குழந்தை முதல் நாள் வெறும் பிண்டமாக இருந்தது. இரண்டாம் நாள் மனித உருவானது. மூன்றாம் நாள் பச்சிளங்குழந்தை. நான்காம் நாள் முழுதும் வளர்ந்த இளைஞன். ஐந்தாம் நாள் அபிஷேகம் செய்யப்பட்டு, அக்னியிடமிருந்து சக்தி ஆயுதம் பெறுகிறான். அந்தச் சக்தி ஆயுதத்தால் குமாரன் மலைகளைப் பிளக்கிறான். இதனால் உலகமே நடுங்குகிறது. இந்திரன், தேவர்களுடன் வந்து அந்த தெய்வக் குழந்தையுடன் சண்டையிடுகிறான். வஜ்ராயுதத்தால் முருகனைத் தாக்குகிறான். ஆனால் பலனில்லை. இந்திரன் முருகனிடம் தோற்றுப்போகிறான். சரணடைகிறான்.

இந்திரனும் பிற தேவர்களும் கடவுள்களும் சுப்ரமணியனைத் தங்கள் படைகளுக்குத் தலைமை ஏற்று, தாரகனைக் கொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர். முருகன், தேவ சேனாபதி ஆகிறார்.

சிவன், பார்வதி, விஷ்ணு முதலாக அனைத்து தேவர்களும் குமாரனுக்கு ஆயுதங்களையும் அணிகலன்களையும் அளிக்கின்றனர்.

குமாரன், பெரும் படையுடன் தாரகாசுரன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கிறார். இது ஏழாவது நாள். பெரும் போருக்குப்பின், தன் சக்தி ஆயுதத்தை எறிந்து, தாரகனைக் கொல்கிறார் கார்த்திகேயன்.

தேவர்களைத் தொல்லை செய்துவந்த பாணன் என்னும் அசுரன் கிரௌஞ்ச மலையில் இருப்பதாக விஷ்ணு குமாரனிடம் சொல்கிறார். அந்த மலையைப் பிளக்கச் சொல்கிறார். முருகனும் அவ்வாறே செய்கிறார். கிரௌஞ்ச மலை பொடிப்பொடியாகிறது.

இவ்வாறாக சுப்ரமணியரின் பிறப்புக் காரணம் நிறைவுறுகிறது.

0

சுப்ரமணியன் – ஒடிஷா

முருகனின் சிலையுருவங்கள் இந்தியா முழுதும் கிடைக்கின்றன. சிலைகளின் காலத்தைக் கணக்கில் எடுத்தால் வட இந்தியப் பகுதியிலேயே காலத்தால் மிகவும் முற்பட்ட சிலைகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் முருகன் சங்க இலக்கியத்தில் சேயோன் என்று குறிப்பிடப்படுகிறான். தமிழ் நிலங்களை ஐந்து நிலங்களாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தொல்காப்பியம் வகுக்கிறது. அதில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிக்குரிய கடவுளாக சேயோன் எனும் முருகன் வருகிறான். அகத்திணைப் பாடல்களில் அங்கும் இங்குமாக முருகன் காணப்படுகிறான். ஆனால் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில்தான் முருகன் குறித்த முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

பரிபாடல் பலரால் ஆக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு. நமக்குக் கிடைத்துள்ளவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டது. மதுரை நகரைச் சுற்றியுள்ள விஷ்ணு கோவிலான அழகர் கோவில், முருகன் கோவிலான திருப்பரங்குன்றம், வைகை ஆறு ஆகியவற்றையும் விஷ்ணுவையும் முருகனையும் புகழும் பாடல்களுடன் சில அக இலக்கியக் காதல் பாடல்களும் கலந்ததுதான் பரிபாடல்.

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கித்
தீயழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை
மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்

என்கிறார் கடுவன் இளவெயினனார். மாயப் போரில் வல்ல அவுணர்களை முற்றுமாக அழித்தது உன்னுடைய வேல் என்று முருகனைப் புகழ்கிறார். பரிபாடலின் பல்வேறு இடங்களில் முருகனின் பிறப்புக் காரணம், அவன் வள்ளி, தெய்வானையை மணம் செய்துகொண்டது, தாரகன், சூரபத்மன் முதலானோரைக் கொன்றது போன்ற பலவும் வருகின்றன.

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, திருப்பரங்குன்றத்தில் தொடங்கி, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திரு ஆவினன்குடி (பழநி), திரு ஏரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு நகரங்களில் அமைந்துள்ள முருகன் கோவில்களையும் முருகன் தொடர்பான பல்வேறு கதைகளையும் சொல்கிறது. பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் சங்க நூல்களில் அடங்குபவை.

தமிழகத்தில் கந்தன் கதை பிரபலமானது கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தின்மூலம். கந்தபுராணம், 14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது சமஸ்கிருத ஸ்கந்த புராணத்திலிருந்து பல இடங்களில் நகர்ந்துசெல்கிறது. அக்கதையில் தாரகன் வருகிறான். ஆனால் முதன்மை வில்லன் தாரகன் அல்லன்; சூரபத்மனே இங்கே முதன்மை எதிரி. கந்தபுராணத்தின்படி, சூரபத்மன் தாரகனின் சகோதரன். கஷ்யபருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோர். இவர்களுக்கிடையிலான போர் நடப்பது திருச்செந்தூரிலே என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். இன்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா முருகன் சூரபத்மனை வதம் செய்ததைக் கொண்டாடும் நிகழ்வு.

0

தமிழகத்தில் இன்று கிடைத்துள்ளவற்றிலேயே பழமையான கோவில்கள் பல்லவர்களும் பாண்டியர்களும் எழுப்பியுள்ள குகைக்கோவில்கள். இதில் பல்லவர்கள் குகைகளை ஓரளவுக்குக் காலவரிசைப்படுத்த முடியும். பாண்டியர் குகைக் கோவில்களை வரிசைப்படுத்துவது மிகக் கடினம். ஆக்கியோர் குறித்த தகவல்கள் அவற்றில் மிகக் குறைவு. மேலும் பல்லவர் குகைகள் பெரும்பாலும் மாற்றமின்றிக் கிடைக்கின்றன. பாண்டியர் குகைகளோ பிற்கால அரசர்களாலும் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு அதிகாரிகளாலும் உள்ளூர் மக்களாலும் பெரும் மாற்றம் கண்டுள்ளன. பாண்டியர், பல்லவருக்குச் சிற்றரசர்களாக இருந்து, பின்னர் சோழர்கள் ஆட்சியிலும் சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களும் சில குகைக்கோவில்களை வெட்டுவித்தனர். தொடர்ந்து பல்லவரும் பாண்டியரும் கட்டுமானக் கோவில்களைக் கட்ட ஆரம்பித்தனர். பாண்டிய, பல்லவ கட்டுமானங்கள் ஐந்தாம் நூற்றாண்டு இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு மையப்பகுதி வரை சென்றது. அதன்பின் பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்து சோழர் ஆட்சி ஏற்பட்டது. சோழர்களும் பாண்டியர்களும் கட்டுமானக் கோவில்களைத் தொடர்ந்தனர். பின் சோழர்கள் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதையும் தம் ஆளுகைக்குள் கொண்டுவந்தபின் ஒன்பது முதல் பதிமூன்றாம் நூற்றாண்டின் பாதிவரை சோழர் காலக் கலை மட்டும்தான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனித்து நின்றது. மாபெரும் கோவில்கள் இக்காலத்தில்தான் கட்டப்பட்டன. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்கள் சோழர்களை முழுவதுமாக வெற்றிகண்டனர். மீண்டும் பாண்டியர்கள் கோவில்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.

இவற்றை மனத்தில் கொண்டு கிடைத்திருக்கும் கோவில்களையும் அவற்றில் காணப்படும் முருகன் சிலைகளையும் பார்ப்போம்.

பரிபாடல் திருப்பரங்குன்றத்தை முருகன் வசிக்கும் இடமாக வெகுவாகப் புகழ்கிறது. பரிபாடல் காலத்தில் முருகனுக்கு மட்டுமே தனியாக ஒரு கோவில் இங்கு இருந்திருக்கலாம். ஆனால் இப்போதுள்ள பெரும் கோவிலுக்கு உள்ளே குகைக் கோவில் ஒன்று உள்ளது. எட்டாம் நூற்றாண்டு இறுதியில் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் தளபதி சாத்தன் கணபதி என்பவனால் வெட்டுவிக்கப்பட்டது. இதில் முதன்மை முருகன் அல்லன். சிவன், விஷ்ணு ஆகியோருக்கான கோவில்களே முதன்மையானவை. கூடவே முருகன், விநாயகர், துர்கை ஆகியோருக்கும் சுவரில் சிற்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தவிர, ஜேஷ்டா என்ற தவ்வையும் வேறு சில சிற்பங்களும் வெட்டப்பட்டுள்ளன. இன்று நீங்கள் முருகனைக் காணச் செல்லும்போது இந்தப் பிற தெய்வங்களையும் காணலாம். திருப்பரங்குன்றத்தில் உமையாண்டார் கோவில் என்று இன்னொரு குகைக்கோவில் உள்ளது. இதுவும் அதே எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம்தான். இங்கே சிவ அர்தநாரி, பைரவர் ஆகிய சிற்பங்களுடன் முருகனும் வள்ளி தெய்வானையும் சேதமான நிலையில் உள்ள சிற்பம் ஒன்று கிடைக்கிறது.

இதே பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில்தான் கழுகுமலை எனுமிடத்தில் வெட்டுவான்கோவில் என்ற மிக அருமையான ஒற்றைக்கல் தளி உருவாக்கப்பட்டது. அந்தக் கோவில் பாதியிலேயே முற்றுப்பெறாமல் கைவிடப்பட்டது. அதில் மிக அழகிய சுப்ரமணியர் சிலை உள்ளது.

வீற்றிருந்த கோலத்தில் முருகன் - வெட்டுவான்கோவில், படம்: ஶ்ரீனி ராஜகோபாலன்

வீற்றிருந்த கோலத்தில் முருகன் – வெட்டுவான்கோவில், படம்: ஶ்ரீனிவாசன் ராஜகோபாலன்

இங்கே முருகன் சுகாசனம் எனும் வீற்றிருந்த கோலத்தில் உட்கார்ந்திருக்கிறார். தலையில் கரண்ட மகுடம். முக்கியமாக, மகுடத்தின் வடிவத்தைக் கவனியுங்கள். தமிழகத்தில் முருகன் சிலை என்றாலே இந்த மகுடத்தின் வடிவுதான் என்ற அளவுக்கு ஒற்றுமை காணப்படுகிறது. ஒரு கையில் அக்க மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம். சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டான் என்றும் விஸ்வகர்மா அதனைச் செய்தார் என்றும் பார்த்தோம். அப்போது சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து அவர் உருவாக்கியதே இந்தச் சக்தி ஆயுதம். இதைக் கொண்டுதான் முருகன் மலைகளைப் பிளக்கிறார்; எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப்படைப்பில் மிக மிக அழகிய சிற்பங்களைக் கொண்டது வெட்டுவான்கோவில். சிரித்த முகத்துடனான இந்த முருகன் அக்கலைப்பாணிக்கு ஒரு சான்று.

லாடன் கோவில் என்ற குகைக்கோவிலில் முருகன் தெய்வானையுடன் இருப்பதுபோன்ற சிற்பம் கிடைக்கிறது. இதுவும் பராந்தக நெடுஞ்சடையன் காலமே. திருச்சி மலைக்கோட்டையில் சிவன், விஷ்ணு ஆகியோருக்கு முதன்மைக் கருவறைகளும் பக்கச் சுவரில் விநாயகர், முருகன், பிரம்மா, சூரியன், துர்கை ஆகியோருக்குச் சிற்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக, வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். இருந்தும் தலையில் வைத்துள்ள கிரீடம், முருகனைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

முருகன் - திருச்சி மலைக்கோட்டை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

முருகன் – திருச்சி மலைக்கோட்டை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

நமக்குத் தெரிந்தவரை எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதிக்கு முன்பாக பாண்டியர் கலையில் முருகன் சிற்பம் கிடைப்பதில்லை.

பல்லவர்களை எடுத்துக்கொண்டால், மகேந்திரவர்மன் காலம் முழுவதிலும் முருகன் சிற்பங்கள் கிடைப்பதில்லை. முதன்முதலில் முருகன் சிற்பங்கள் கிடைப்பது மாமல்லபுரத்தில்தான். வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் மாமல்லபுரம் சிற்பங்கள் யார் காலத்திலிருந்து உருவாக்கப்பட்டன என்பதில் மாற்றுக் கருத்துகளை வைக்கிறார்கள். பெரும்பாலானோர் கருத்து, முதலாம் நரசிம்மவர்மன் காலத்திலிருந்தே மாமல்லை தொடங்கப்பட்டது என்பது. அப்படியானால் 630-ம் ஆண்டு முதலே. முனைவர் நாகசாமி மட்டும், ஒட்டுமொத்த மாமல்லை இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தது என்கிறார். அப்படியானால் 700-ம் ஆண்டு முதல்.

மாமல்லையில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை, ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க, இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்றாவது நாள். நான்காவது நாள் இளைஞனாகிவிட்டான். எனவே சோமாஸ்கந்த வடிவில் நீங்கள் பார்ப்பது மூன்று நாட்களே ஆன குழந்தையை!

சோமாஸ்கந்தர் - மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

சோமாஸ்கந்தர் – மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இந்தக் குழந்தை வடிவக் குமரனுடைய தலைக் கிரீடத்தைப் பாருங்கள். அப்படியே குமரன் சிலைகளின் வடிவத்துக்கு மாற்றமில்லாமல் இருப்பதை!

குழந்தைப் பருவம் அல்லாமல் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் முருகனைக் காண முடியும். பிணிமுகம் என்ற யானையின்மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன், சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

முருகன் - அர்ஜுன ரதம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

முருகன் – அர்ஜுன ரதம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

பிரம்ம சாஸ்தா என்னும் வடிவில் சுப்ரமணியரை மாமல்லையின் திரிமூர்த்தி மண்டபத்தில் காண முடியும். இது தொடர்பான கதை கச்சியப்பரின் கந்தபுராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தகப்பனுக்குப் பாடம் சொன்னவர் என்ற பெயர் கந்தனுக்கு ஏற்பட்டது இந்த நிகழ்வின் போதுதான்.

பிரமன் ஒருமுறை பிற தேவர்கள் சூழ கைலாயம் வந்து சிவனைத் தரிசித்துவிட்டு வெளியேறும்போது, கந்தன் அவரிடம் அவரது தொழில் குறித்துக் கேட்கிறார். பிரமன், தான் படைப்புத் தொழில் செய்வதாகச் சொல்ல, கந்தன், வேதம் தெரியுமா என்று வினவுகிறார். தெரியும் என்று பிரமன் சொல்ல, அதன் தொடக்க எழுத்தான ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கேட்கிறார் கந்தன். பிரமனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்துக்கே பதில் தெரியவில்லை என்றால் வேதத்தின் பொருள் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவர் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று சொல்லி, அவரைத் தலையில் குட்டி, காலால் உதைத்து, தன் படையினரைக் கொண்டு கைது செய்து சிறையில் அடைந்துவிடுகிறார் கந்தன். பின்னர், பிரமனது வேலையைத் தான் கையில் கொண்டு படைப்புத் தொழிலையும் தானே செய்யத் தொடங்குகிறார்.

கூட வந்த தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று சொல்ல, அவர் தேவர்களுடன் வந்து சிவனிடம் முறையிடுகிறார். சிவன் நந்தி தேவரை அனுப்பி, பிரமனை விடுதலை செய்துவா என்று கட்டளையிட, முருகனோ பிரமனைச் சிறையிலிருந்து அனுப்ப மறுக்கிறார். பிறகு சிவன் தானே வருகிறார். வாக்குவாதத்துக்குப் பிறகு முருகன் பிரமனை விடுதலை செய்ய ஒப்புக்கொள்கிறார். சிவன், முருகனைத் தன் தொடையில் அமர்த்தி, பிரணவத்தின் பொருளை விளக்கு என்கிறார். அதனை வெளிப்படையாகப் பலரும் கேட்கச் சொல்லலாகாது என்று கடிந்துகொள்ளும் முருகன் தன் தந்தைக்குக் காதில் ரகசியமாக உரைக்கிறார்.

இவ்வாறு பிரமனைச் சிறையிலிட்டு, பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா வடிவம்.

முருகன் – திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மேலே நீங்கள் பார்க்கும் மாமல்லையின் இந்த வடிவத்திலும் தனித்துத் தெரியும் தலைக் கிரீடமும் சன்ன வீரமும் முருகனைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பல்லவர்கள் சில இடங்களில் பிரமேஸ்வரவிஷ்ணு கிருகங்கள் என்று பிரம்மா, ஈஸ்வரன் எனும் சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இணைந்த கோவில்களை எழுப்பியுள்ளனர். அதில் விசேஷமாக பிரம்மாவை எடுத்துவிட்டு, பிரம்மாவுக்கே பாடம் கற்பித்த முருகனைச் சேர்த்திருப்பது நல்லதொரு சுவாரசியம்!

இவற்றிலிருந்து, தமிழகத்தில் கிடைக்கும் மிகப் பழமையான முருகனின் சிலைகள் மாமல்லையிருந்தே ஆரம்பிக்கின்றன என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. மாமல்லையைத் தொடர்ந்து, ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் பல கோவில்களை அமைத்தான். அதில் ஒன்று முக்தேசுவரர் கோவில். அதில் கீழ்க்கண்ட அழகிய முருகன் சிலையை நாம் காணலாம். இந்தக் கட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை சுப்ரமணிய வடிவில் மாற்றம் அதிகம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு முகம் மட்டுமே. இரு அல்லது நான்கு கைகள். தனித்துவம் வாய்ந்த கரண்ட மகுடம். பெரும்பாலும் சன்ன வீரம்; சில இடங்களில் அது இல்லாமலும் போகிறது. ஆயுதங்கள் என்றால் கட்டாயம் சக்தி ஆயுதம். சில இடங்களில் வஜ்ராயுதமும். வாகனம் என்றால் யானை. இக்கட்டத்தில் மயில், சேவல் ஆகியவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை.

குமாரன் - காஞ்சி முக்தேசுவரர் கோவில்; மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவில், படம்: விஜய் பட்

குமாரன் – காஞ்சி முக்தேசுவரர் கோவில்; மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவில், படம்: விஜய் பட்

மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவிலின் சப்த மாதர்கள் சிலையைச் சென்ற வாரம் பார்த்தீர்கள். அதே குகைக்கோவிலில் சுப்ரமணியர், மஹிஷாசுரமர்தினி ஆகியோர் சிலைகளும் உள்ளன. ஆனால் வெகுவாக அழிந்துபோய்விட்டன. இந்தக் குகை, நந்திவர்மனின் காலம் ஆகும். எட்டாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனலாம்.

இதற்கடுத்து சோழர்களின் கலை தொடங்குகிறது. அவர்கள் கட்டியுள்ள கோவில்கள் அனைத்திலுமே சுப்ரமணியர் சிலைகளை வைத்தார்கள் என்று சொல்லமுடியாது. இதில் நான் மாதிரிக்குச் சில கோவில்களை மட்டுமே எடுத்துள்ளேன். முக்கியமாகச் சொல்லவேண்டியது திருச்சிக்கு அருகில் கீழையூர் என்னுமிடத்தில் கட்டப்பட்ட அவனிகந்தர்ப ஈசுவரம். சுமார் 884 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. இரு கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றில் கோஷ்டம், விமானம் என்று பார்த்தால் நான்கு முருகன் சிலைகள் கிடைக்கின்றன. அவற்றைப் பக்கம் பக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.

குமாரன் - அவனிகந்தர்ப ஈசுவரம், கீழையூர், படம்: ஶ்ரீனி ராஜகோபாலன்

குமாரன் – அவனிகந்தர்ப ஈசுவரம், கீழையூர், படம்: ஶ்ரீனிவாசன் ராஜகோபாலன்

இவை நான்கும் ஆதித்த சோழனின் காலத்தில், பழுவேட்டரையர்களால் கட்டப்பட்டது. முதல் இரண்டிலும் தெளிவாகக் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருப்பதைக் காணலாம். ஒன்று சக்தி ஆயுதம், இன்னொன்று வஜ்ராயுதம். முதல் சிற்பத்தில் வஜ்ரம் வலது பின்கையிலும் சக்தி இடது பின்கையிலும் உள்ளது. இரண்டாவது சிற்பத்திலோ, அப்படியே மாறியுள்ளது. நான்கு சிற்பங்களிலுமே தலை மகுடம் மிகத் தெளிவாக, குமரனுக்கு உரிய வகையில் உள்ளதைப் பாருங்கள். நான்கிலும் சன்னவீரம்.

இதுவரை நாம் பார்த்த அனைத்தையும்விட மிக அழகு வாய்ந்தது என்றால் அது முதலாம் பராந்தக சோழனின் புள்ளமங்கைக் கோவிலின் விமானத்தில் உள்ளதுதான். இத்தனைக்கும் அந்தச் சிலையின் ஒரு பகுதியை முன்மண்டபம் அமைப்பதற்காகச் சிதைத்துவிட்டனர்.

குமாரன் - புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

அழகிளங்குமரன் – புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

காதுகள் இரண்டிலும் பத்ர குண்டலங்கள், மார்பில் சன்னவீரம், ஒரு கையில் அக்கமாலை, இன்னொன்றில் ஆயுதம் அழிந்துவிட்டது, முன் கை அபயம், ஒரு கை மடிமீது, இளமை ததும்பும் அழகிய முகம், தலையில் ரத்தினம் பதித்த பிரத்யேகக் கரண்ட மகுடம், கழுத்தில் ரத்தினங்கள் பதித்த ஒரு ஹாரம், தோளில் கேயூரம், கைகளில் கங்கணங்கள், வில்லென வளைந்த புருவம். பாண்டியர், பல்லவர் படைப்புகளில் நாம் இதுவரை கண்டதைவிட, சோழர்களிலேயே பிறர் செய்தவற்றைவிட, பராந்தகன் காலத்தின் புள்ளமங்கைச் சிற்பம் தனித்த அழகு கொண்டதாக உள்ளது.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சோழச் சிற்பங்களில் தரம் சற்றே குறைந்துவிடுகிறது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். மிக கம்பீரமான, பெரிய சிற்பமாக ராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரும் கோவிலில் உள்ள முருகனைச் சொல்லலாம். அதேபோல், தென் பாண்டி நாட்டில் திருவாலீசுவரம் என்னும் இடத்தில் பாண்டி நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு ராஜராஜன் அல்லது ராஜேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்ட கோவிலில் உள்ள முருகன் சிற்பத்தைக் காண்போம்.

முருகன் - கங்கைகொண்ட சோழபுரம்; திருவாலீசுவரம், படம்: விஜய் பட்

முருகன் – கங்கைகொண்ட சோழபுரம்; திருவாலீசுவரம், படம்: விஜய் பட்

இரண்டையும் பார்த்த உடனேயே நாம் இதுவரை பார்த்துவந்த படிம இலக்கங்களின்படியான முருகன் என்று சொல்லிவிடுவோம். இப்போது நாம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோம். இன்னமும் தமிழகத்தில் நாம் பார்ப்பது ஒரு முகம், நான்கு கைகள், யானை வாகனம் ஆகியவையே. அல்லது நேராக எந்த வாகனமும் இன்று சமபங்கமாக நிற்கும் வடிவம். அல்லது ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்கும் வடிவம்.

0

இதே காலகட்டத்தில் இந்தியா முழுமையிலும் என்ன நடந்துகொண்டிருந்தது? பொயுமு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்தே முருகனின் சிற்பங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் கிடைத்துள்ளன. இன்று இவை இருந்த கோவில்கள் பெரும்பாலும் சிதைந்துபோய்விட்டன. இவை கிடைப்பது பல்வேறு அருங்காட்சியகங்களில்தாம்.

சில இடங்களில், கோஷ்டம் அல்லது கருவறையில் இல்லாமல், வேறு சிற்பத் தொகுதிகளில் முருகனும் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, பாதாமியில் சாளுக்கியர்களின் சிவன் குகை. இங்கு மயில்மீது இருபக்கமும் கால் போட்டபடி அமர்ந்த முருகனைக் காண்கிறோம். இது சுமார் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் கிடைக்கும் எந்த முருகனைவிடவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்.

அதேபோல உத்தரப் பிரதேசத்தில் தேவ்கர் எனும் இடத்தில் மிக மிக அருமையான ஒரு விஷ்ணு கோவில் உள்ளது. குப்தர் காலத்தையது. 5-6ம் நூற்றாண்டு. அதில் ஒரு சிற்பம், அனந்தசயனம் எனும் சயனித்திருக்கும் விஷ்ணு. அவரைத் தாக்க மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் வருகிறார்கள். விரைவில் விஷ்ணுவுக்கு அந்த அசுரர்களுக்கும் இடையில் மாபெரும் யுத்தம் நடைபெற உள்ளது. அந்த யுத்தத்தைப் பார்க்க சிவன், பிரம்மா, இந்திரன் முதலானோருடன் முருகனும் மயில்மீதேறி வந்திருக்கிறார்.

அதேபோல, எல்லோராவில் கைலாசநாதர் ஒற்றைக்கல் மாபெரும் தளி மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. அந்தக் கோவிலின் உள்ளே நுழையும் முன்பாகவே வாசலில் அதே ஒற்றைக்கல் மாபெரும் மலையின் முகப்பில் பல்வேறு தேவர்கள் அவரவர் வாகனத்தில் இருப்பதாகக் காண்பிக்கப்படுகிறார்கள். அங்கே முருகன் மயில்மீது அமர்ந்துள்ளார். சிற்பம் சிதைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டு. பல்லவருக்குப் பின், பாண்டியர்களுக்குமுன். இவை மூன்றையும் பார்ப்போம்.

மயில்மீது முருகன் - தேவ்கர்; எல்லோரா; பாதாமி

மயில்மீது முருகன்

மேலே, முதலாவது தேவ்கர், இரண்டாவது எல்லோரா, மூன்றாவது பாதாமி. தமிழகத்தில், மயில்மீது முருகன் எனும் சிற்பம் தோன்றுவது மிகப் பின்னாலேதான். அதேபோலக் கையில் வேல் ஏந்திய முருகன் என்பதும் மிகப் பிற்காலத்திலேதான். வட இந்தியா எனும் பெருநிலப் பரப்பில் வெவ்வேறு வகைகளில் முருகன் எனும் கார்த்திகேயன் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் தொடக்கம் முதலாகவே வேல் ஏந்திய வேலவன் வந்துவிடுகிறான்.

கார்த்திகேயன் - உதயகிரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – உதயகிரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மேலே நீங்கள் காண்பது மத்தியப் பிரதேசத்தின் உதயகிரிக் குகையில் காணப்படும் முருகனின் வடிவம். கையில் நீண்ட வேல் ஏந்தியிருப்பதை நீங்கள் காணலாம். இந்தக் குகையின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். இதில் மட்டுமல்ல, குஷாணர்கள் காலத்திலிருந்தே கையில் இவ்வாறு வேல் ஏந்திய கம்பீர கார்த்திகேய வடிவத்தை நாம் காண முடிகிறது.

ஒடிஷாவில் நாம் காணும் கார்த்திகேய வடிவம், வேலையும் மயிலையும் இணைத்தது.

கார்த்திகேயன் - ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இவற்றில் முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. ஆனால் மூன்றில் பூணூல் உள்ளது, ஒன்றில் இல்லை.

கார்த்திகேயன் - ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

அடுத்து, மயிலையும் சேவலையும் பாசத்துடன் தடவிக்கொடுக்கும் அல்லது அணைத்துக்கொள்ளும் முருகன் சிலைகளும் ஒடிஷாவில் கிடைக்கின்றன. இவையும் மேலே சொன்ன அதே 7-9 நூற்றாண்டுக் காலகட்டம்.

தமிழகத்தில் 12-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது அதற்குப்பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர, நாயக்கர் காலத்தில் மாபெரும் அறுமுகனை மயில்மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மயில்மீது அமர்ந்த ஆறுமுகன் - புவனேஸ்வரம் அருங்காட்சியகம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மயில்மீது அமர்ந்த ஆறுமுகன் – தில்லி தேசிய அருங்காட்சியகம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இதேபோன்ற, ஆனால் மயில்மீது இருபுறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலையைக் கீழே காணலாம். பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டுச் சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேலை முதன்முறையாகக் காண முடிகிறது. மறு கையில் பாசக்கயிறு. மற்றொரு கையில் அக்கமாலை. நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம். ஆறு முகம், அதில் மூன்று காணக்கிடைக்கிறது. மயிலை, அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.

மயில்மீது அமர்ந்த குமரன் - நுக்கேஹல்லி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மயில்மீது அமர்ந்த குமரன் – நுக்கேஹள்ளி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

0

இவ்வாறாக நாம் முருகனைப் பலவித வடிவங்களில் காண்கிறோம். இவை குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன?

கோபிநாத ராவ், குமாரதந்த்ரம், ஶ்ரீதத்வநிதி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குமார மூர்த்தங்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று விவரிக்கிறார். முருகன், தனித்து இருக்கலாம், ஒரு அல்லது இரு தேவியருடன் இருக்கலாம். ஒரு முகம், ஆறு முகம் என இருவகையிலும் இருக்கலாம். ஒரு முகம் என்றால் இரு அல்லது நான்கு கைகள். உட்கார்ந்திருந்தால் இரு கரங்கள். நின்றுகொண்டிருந்தால் நான்கு கரங்கள். மயில்மீது அமர்ந்திருந்தால் ஆறு, எட்டு அல்லது பன்னிரு கரங்கள். கைகளில் சக்தி, வஜ்ரம், தண்டம், சேவல் என்று தொடங்கி என்னவெல்லாம் இருக்கலாம் என்பதற்கும் இலக்கணங்கள் உள்ளன. நாட்டின் தலைநகரமாக இருந்தால் எப்படிப்பட்ட முருகன் சிலை இருக்கவேண்டும், கிராமமாக இருந்தால் அல்லது வனத்தை ஒட்டி அமைந்தால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பன பற்றியும் ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.

குமாரதந்த்ரம், பதினாறு வகையான குமார மூர்த்தங்களைக் குறித்துப் பேசுகிறது. அவையாவன:

(1) சக்திதரன்
(2) ஸ்கந்தன்
(3) சேனாபதி
(4) சுப்ரமணியன்
(5) கஜவாஹனன்
(6) சரவணபவன்
(7) கார்த்திகேயன்
(8) குமாரன்
(9) ஷண்முகன்
(10) தாராகாரி
(11) சேனானி
(12) பிரம்ம சாஸ்தா
(13) வள்ளி கல்யாண சுந்தரமூர்த்தி
(14) பாலஸ்வாமி
(15) கிரௌஞ்சபேட்டா
(16) ஷிகிவாஹனன்

சக்திதரன் வடிவத்தில் ஒரு முகமும் இரண்டு கைகளும் இருக்கவேண்டும் என்கிறது குமாரதந்த்ரம். இரு கரங்களிலும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்கள் இருக்கவேண்டும். நான்கு கரங்கள் இருக்கவேண்டும் என்கிறது ஶ்ரீதத்வநிதி. அவற்றில் வஜ்ரம், சக்தி, சேவல் ஆகியவையும் நான்காவது கரம் அபயமுத்திரையிலும் இருக்கவேண்டும். தலையில் ரத்தினம் பதித்த ஜடாமகுடம் இருக்கவேண்டும். மார்பில் வெண்ணிறப் பூணூல் இருக்கவேண்டும். உடலில் சந்தனம் பூசப்பட்டிருக்கவேண்டும். இந்த வடிவம், சுப்ரமணியரின் ஞான சக்தியை உள்ளடக்கியது.

ஸ்கந்தன் வடிவில் ஒரு தலை, இரு கரங்கள் என்கிறது குமாரதந்த்ரம். தாமரையின் நிறத்தில் இருக்கவேண்டும். கோமணம் மட்டுமே கட்டியிருக்கவேண்டும். கையில் ஒரு தண்டம். மற்றொரு கை, இடுப்பின்மீது. இதுதான் பழனியாண்டவர் வடிவம்.

ஆனால் ஶ்ரீதத்வநிதி, மேலே சொல்லப்பட்ட வடிவத்தை வேலாயுத சுப்ரமணியர் என்கிறது. ஸ்கந்தன் வடிவத்துக்கு அது வேறு இலக்கணத்தைச் சொல்கிறது. ஒரு முகம், நான்கு கரங்கள். புகையின் வண்ணத்தில் சிற்பம் இருக்கவேண்டும். தாமரை மலர்மீது அமர்ந்திருக்கவேண்டும். தலையில் கரண்ட மகுடம். அதில் மலர்களால் ஆன வளையம். ஒரு கையில் வஜ்ரம், மறு கையில் சேவல். மற்ற இரு கைகள் அபய, வரத ஹஸ்தத்துடன்.

சேனாபதி வடிவில் ஆறு முகம், அருகில் ஒரு தேவி. அவளை அணைத்து இடது மடியில் அமர்த்தியிருக்கவேண்டும். கைகளில் தாமரை, சூலம், கேடயம், வஜ்ரம், வில், கதை, மணி, சேவல் ஆகியவையும் அபய முத்திரையும் இருக்கவேண்டும்.

சுப்ரமணியர் எனும் வடிவம் குங்கும நிறத்தில் இருக்கவேண்டும். உடலெங்கும் கேயூரம், ஹாரம் முதலான ஆபரணங்கள் அணிந்திருக்கவேண்டும். இரு கைகள் இருந்தால் இடுப்பில் ஒரு கை, அபய ஹஸ்தம். நான்கு கைகள் இருந்தால் சக்தி ஆயுதம், தாமரை, சேவல், அபய ஹஸ்தம்.

கஜவாஹனர் எனும் வடிவம் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டது. சக்தி, சேவல் இரு கைகளில். மற்ற இரு கைகள் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம்.

சரவணபவன், ஆறு முகம், பன்னிரு கரங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். இரு கரங்கள் அபய, வரத ஹஸ்தம். மற்றவற்றில் சக்தி, மணி, கொடி, தாமரை, சேவல், பாசம், தண்டம், உளி (ஆம்!), வில், அம்பு ஆகியவை இருக்கும்.

ஶ்ரீதத்வநிதி, சரவணபவன் வடிவத்துக்கு வேறு இலக்கணத்தைச் சொல்கிறது. ஒரு முகம், மூன்று கண்கள், ஆறு கைகள், சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கவேண்டும். உடல் விபூதியால் பூசப்பட்டிருக்கவேண்டும். கைகளில் அம்பு, கரும்பினால் ஆன வில், வாள், கேடயம், வஜ்ரம், சேவல் ஆகியவை இருக்கவேண்டும்.

கார்த்திகேயன் வடிவத்துக்கு ஆறு முகம், ஆறு கரங்கள், உதயசூரியன் வண்ணம். கரங்களில் வஜ்ரம், சக்தி, வாள், கேடயம், அபய, வரத முத்திரைகள். ஶ்ரீதத்வநிதியின்படி, ஒரு முகம், மூன்று கண்கள், பத்து கரங்கள், உதயசூரியன் வண்ணம். வில்வ இலை அல்லது பழம் தலைமீது இருக்கவேண்டும். கைகளில் சூலம், சக்கரம், அங்குசம், அபய முத்திரை, வேல், பாசம், சங்கு, வஜ்ரம், வரத முத்திரை.

ஷண்முக வடிவம், மயில்மீது அமர்ந்த கோலமாகும். ஆறு முகம், பன்னிரு கரங்கள். குங்கும நிறம். கைகளில் சக்தி, அம்பு, வாள், கொடி, கதை, அபய முத்திரை, வஜ்ரம், வில், கேடயம், தாமரை, கடக முத்திரை, வரத முத்திரை ஆகியவை. ஷண்முகன், ‘மால் மருகன்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

ஶ்ரீதத்வநிதி, ஷண்முகனின் இருபுறமும் ஜயா, விஜயா எனும் இரு பெண் தேவியர் நிற்கவேண்டும் என்கிறது. கைகளில் சங்கு, சக்கரம், சேவல், பாசம், கலப்பை ஆகியவை இருக்கவேண்டும் என்கிறது.

பிரம்ம சாஸ்தா குறித்த கதையை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இவ்வடிவில் முருகனுக்கு ஒரு முகம், நான்கு கரங்கள். கைகளில் அக்கமாலை, கமண்டலம், அபய, வரத முத்திரைகள். தாமரையின் சிவப்பு வண்ணத்தில் சிற்பம் இருக்கவேண்டும்.

பாலஸ்வாமி வடிவில் அவர், சோமாஸ்கந்தராக சிவன் பார்வதியுடன் குழந்தையாக இருக்கவேண்டும். இரு கையிலும் தாமரை மலர் இருக்கவேண்டும். அல்லது தனித்து இருந்தால், ஒரு கையில் தாமரையும் மறு கை இடுப்பின்மீதும் இருக்கவேண்டும். சிவப்பு நிறம் உடையவராக இருக்கவேண்டும்.

வள்ளி கல்யாணசுந்தரராக வள்ளியை மணக்கும் கோலத்தில் இருக்கவேண்டும். கையில் அக்கமாலை, கமண்டலம், அபய, வரத முத்திரைகளுடன் இருக்கவேண்டும். பிரமன் கையில் ஸ்ருவத்தைக் கொண்டு அக்னி வளர்க்கவேண்டும். விஷ்ணு நீர் விட்டு வள்ளியைக் கன்னிகாதானம் செய்யும் நிலையில் இருக்கவேண்டும். அனைத்துக் கடவுள்களும் தேவர்களும் மணமக்களை வாழ்த்தும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஶ்ரீதத்வநிதியில் மேலும் பல வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

தேசிக சுப்ரமணியன் எனும் வடிவம் முருகன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சிவனுக்கு உபதேசிப்பதாகும். மயிலில் அமர்ந்திருக்கவேண்டும். ஒரு முகம், ஆறு கரங்கள். கரண்ட மகுடம். சக்தி ஆயுதம், அக்க மாலை, வரத, அபய முத்திரை, ஆகியவற்றுடன் ஒரு கரம் சின் முத்திரையில் இருக்கவேண்டும். சிவன் ஒரு சீடராக – சிஷ்ய பாவத்தில் அமர்ந்திருக்கவேண்டும். மானசாரத்தில் சிவனது இந்த வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியருக்கு முன் கால்களை மடக்கி, ஒரு வலது கையால் வாய்மூடி, மற்றொன்றை இதயத்தின்மீது ஞான முத்திரையாக வைத்திருக்கவேண்டும். மற்ற இரு கைகளில் மழுவும் மானும் வைத்திருக்கவேண்டும். அவரது ஜடாமுடியில் பிறைநிலவு இருக்கவேண்டும். அருகில் பார்வதி நின்றுகொண்டிருக்கவேண்டும்.

தமிழகத்தில் காணப்படும் வடிவங்கள், பிரம்ம சாஸ்தா அல்லது சக்திதரன் என்றுதான் சொல்லவேண்டும். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பல நூற்றாண்டுகள் கையில் சேவலைப் பிடித்திருக்கும் முருகன் வடிவங்கள் தமிழ்நாட்டில் கிடைத்ததாகத் தெரியவில்லை. மாறாக, நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் ஒடிஷாவில் கிடைக்கின்றன. ஆனால் அங்கே தலையில் கரண்ட மகுடம் இல்லை.

முருகன் என்றால் அழகு. முருகன் என்றால் வீரமும். அழகு என்றால் சோழர்களுடையது. வீரம் என்றால் ஒடிஷாவின் வடிவங்களில் ஒருவித ஆவேசமும் போருக்குச் செல்லும் வீரமும் நன்கு தெரிகின்றன. சோழர் காலக் கலையில் ஒருவித அமைதியும் சாந்தமும் காணக்கிடைக்கின்றன. கீழே உள்ள செப்புச் சிலையுடன் இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். நான்கு கைகள், இரண்டில் வஜ்ரமும் சக்தியும். முன்னுள்ள கைகள் வில்லையும் அம்பையும் பற்றிக்கொள்ளும் வடிவத்தில். சோழர் காலச் செப்புப் படிமமான இது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

7 thoughts on “கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!”

 1. வள்ளி பற்றிய குறிப்புகள் வட மொழி இலக்கியங்களில் உண்டா? தேவி/தேவியருடன் இருப்பது போன்ற சிற்பம் வட இந்தியாவில் உள்ளதா?

  1. இல்லை. அதேபோல் தமிழ் இலக்கியங்களிலும் அவற்றை அடியொட்டி ஆழ்வார் பாசுரங்களிலும் நப்பின்னை என்பவள் வருகிறாள். ஆனால் வடமொழியில் அவள் இல்லை. வள்ளி பரிபாடல், திருமுருகாற்றுப்படையில் வருகிறாள். அதையொட்டி கந்த புராணம், திருப்புகழ் ஆகியவற்றிலும் வருகிறாள். ஆகமங்கள் தென் மரபை ஏற்றுக்கொண்டு வள்ளி கல்யாணசுந்தரமூர்த்தி என்ற மூர்த்தி வடிவத்தைக் கொடுத்திருப்பதை மேலே கொடுத்துள்ளேன்.

 2. பொன். மகாலிங்கம்

  மிக விரிவான கட்டுரை. ஒட்டுமொத்த இந்தியாவெங்கும் உள்ள முருக வடிவங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கவும் விவரமாகத் தெரிந்துகொள்ளவும் உதவியாக உள்ளது. படங்கள் இருப்பதால், தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு வரியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. இனிமேல் முருகன் சிலையைப் பார்க்கும்போது, ஒப்பிட்டுப் பார்க்க இந்கக் கட்டுரை நினைவில் வந்துபோகும். மிக்க நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்.

 3. பொ.சங்கர்

  மிக அருமையான பதிவு. முருக வழிபாடு பற்றியும், பெயர்க் காரணங்கள் பற்றியும் மிக நுண்ணிய அளவில் ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு.

 4. SUNDARARAJAN SUBRAMANIAN

  Sir, There is a damaged Pallava sculpture in Egmore museum with Peacock. Can that be considered the earliest sculpture with a peacock in Tamilnadu?

 5. கிமு 1-ஆம், கி.பி 1-ஆம் நூற்றாண்டுக்கு இடையிலான Yaudheya நாணயங்களில், ஆறுமுகம் கொண்ட குமார கார்த்திகேயனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, சில நாணயங்களில் கையில் வேலும், கீழே சேவலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் அவற்றை காணலாம்: https://en.wikipedia.org/wiki/Yaudheya

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *