சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது. ஒரு விறுவிறுப்பான நாவலுக்கோ திரைப்படத்துக்கோ உண்டான அத்தனை விஷயங்களும் அவர் வாழ்வில் நடந்துள்ளதே என்று நினைத்தபடி இணையத்தைத் தேடினால் ஹாலிவுட்டில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருப்பது தெரியவந்தது.
ஹாரியட் கறுப்பின அடிமைப் பெற்றொருக்குப் பிறந்தவர். என்றாலும் அடிமையாகவே வாழ்ந்து இறந்துபோகக்கூடாது என்று முடிவு செய்தார். தான் விடுதலை பெறுவதோடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் பேறு தன்னைச் சேர்ந்தோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டார். கறுப்பின அடிமையால் கல்வியறிவோ வசதி வாய்ப்புகளோ இல்லாத ஒருவரால் அதுவும் பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் உரிமையும் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணால் என்ன செய்துவிடமுடியும் என்று உளச்சோர்வோடும் குமைச்சலோடும் இருந்துவிடவில்லை ஹாரியட். நடைப்பயணமாகவே சுமார் 70 பேர் வரையிலும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு அழைத்துச்சென்று அடிமைத்தளையில் இருந்து விடுவித்துச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தார். சுமார் 300 முதல் 400 பேரை அழைத்துச் சென்றார் என்ற கணக்கைச் சிலர் சொன்னாலும் வரலாற்றாசிரியர்கள் அதை ஏற்பதில்லை.
விவிலியத்தில் சொல்லப்படும் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்துக்குத் தன்னுடைய மக்களை அழைத்துச்சென்ற மோசஸைப் போன்றவர் என்று மக்கள் கருதியதால் ஹாரியட்டை கறுப்பு மோசஸ் என்று அழைத்தனர். அவரும் தன்னை அந்தப் பெயரால் அடையாளப்படுத்திக்கொண்டார் . ஆனால் மோசஸைவிடவும் துணிச்சலாகவும் தன்னலமின்றியும் செயல்பட்டார்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற எண்ணற்ற பேர் உதவிசெய்திருந்தாலும் ஹாரியட்டைப்பற்றி எழுதவேண்டுமென்ற எண்ணம் தோன்ற என்ன காரணம்? ஹாரியட்டுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. குழந்தைப்பருவமுதலே பல நோய்களால் அவதிப்பட்டார். இருந்தபோதிலும் தெற்கு மாகாணங்களில் வாழ்ந்த கறுப்பின மக்களுக்கு அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஊட்டிய ‘தப்பியோடும் அடிமைகள் சட்டத்தை’ (Fugitive Slave Law) எதிர்த்துச் செயல்பட்டவர்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ஆயுதமேந்திய போராட்டத்துக்குத் தலைமையேற்ற முதல் பெண். முக்கியமான படைத்தளபதிகளின் நம்பிக்கையைப் பெற்றவர். வடக்கு மாகாணங்களின் படைக்குத் தேவையான முக்கிய தகவல்களைச் சேகரிக்கும் உளவாளி.
பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர். சிறுபான்மையினர், உடற் சவால்களை எதிர்கொள்பவர்கள், முதியோரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு மருத்துவமனையொன்றை அமைத்தார்.
ஒவ்வொரு நாளும் அபாயத்தை எதிர்கொண்டு தன்னுடைய உயிரைப் பணயம் வைத்த ஏழை, பெண், வெள்ளை முதலாளித்துவத்தை எதிர்த்த கறுப்பினத்தவர். சமூகம் வரையறுத்த படிநிலைகளைத் தகர்த்து தன் இலட்சியத்தை அடைந்தவர். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தான் எதிர்கொண்ட எண்ணற்ற தடைகளை முறியடித்து இத்தனைச் சாதனைகளை நிகழ்த்திய பெண்ணை இந்த உலகம் அறிந்துகொள்வதுதானே முறை?
ஹாரியட்டின் வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த கதையைப் பார்க்கலாம். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் மக்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்கக் கரையை அடைந்தது எப்படி? இந்த நிகழ்வு எப்போது நடந்தது? அவர்களைக் கடல்கடந்து அழைத்து வந்தது யார்? வரலாற்றின் பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்கலாம் வாருங்கள்.
0
ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த அரசர்கள் கிறிஸ்தவ மதத்தை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். மக்களும் பல்வேறு காரணங்களுக்காக வழக்கிலிருந்த புறச்சமயங்களைத் துறந்து கிறிஸ்தவத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பொஆ 622ஆம் ஆண்டு முகமது நபிகளின் தோற்றத்துக்குப் பிறகு மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மதம் பரவத் தொடங்கியது. அடுத்த நூறாண்டுகளில் தற்போதைய துருக்கி நாடு தொடங்கி மத்தியதரைக்கடலின் கடலோரப் பகுதி, தற்போதைய எகிப்தின் சினாய் (Sinai) தீபகற்பம், வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா வரையிலும் இஸ்லாமிய மதம் பரவியது. ஏசு கிறிஸ்து கடவுளல்ல, இறைத்தூதர் என்று வலியுறுத்தினார் நபிகள் நாயகம்.
பொஆ 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் இஸ்லாமியர்களின் ஆட்சிக்குக் கீழிருந்த பகுதிகளை வெல்லவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள் கிறிஸ்தவர்கள். இரு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே போர்மூண்டது. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மூன்று மதத்தினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எருசலேம் புனித நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணினர். பல ஆயிரம் ஆண்டுகளாக மூன்று மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்த பகுதியில் போர் மூண்டது.
பொஆ 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஐரோப்பிய, ஆசியக் கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போர்களைச் சிலுவைப் போர்கள் என அழைத்தனர். இவற்றில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்தப் போரின் மூலம் கிறிஸ்தவமும் மேலை நாகரிகமும் அந்தப் பகுதிகளில் பரவின என்பது அறிஞர்களின் கருத்து. கூடவே ரோமன் கத்தோலிக்கர்களின் திருச்சபைத் தலைவரான போப்பாண்டவரின் நிலை வலுப்பெற்றது.
ஸ்பானியர்கள் பொஆ 8ஆம் நூற்றாண்டில் மூர் என அழைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐபீரியன் தீபகற்பத்தை மீட்டெடுக்கும் போர்களை முன்னெடுத்தனர். பொஆ 8 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலும் சுமார் 700 ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர்கள் ரீகான்க்விஸ்டா (Reconquista) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றினால் அந்தப் பகுதியில் வசித்த இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடையே பதற்றமான உறவும் மதச் சகிப்பின்மையும் தொடர்ந்து நிலவியது. இந்தப் போர்களின் நீட்சியாகப் புதிய பகுதிகளில் குடியேறுவதைத் தங்கள் மதத்தைப் பரப்புவதற்கான நல்வாய்ப்பாகக் கருதினர் ஐபீரியன் நிலப்பகுதியைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.
0
மதச் சகிப்பின்மைக்கு வித்திட்ட சிலுவைப் போர்களும் மீட்டெடுக்கும் போர்களும் கடல்வழி வர்த்தகம் வளரவும் காரணமாக இருந்தன. கீழை நாடுகளின் மென்பட்டு, நறுமணப் பொருட்கள், சுவையூட்டிகள், விலைமதிப்புமிக்க ரத்தினக் கற்கள், பீங்கான் சாமான்கள், ஆப்பிரிக்காவின் பசுந்தங்கம், தந்தம் போன்றவற்றால் கவரப்பட்ட ஐரோப்பியர்களுக்கு அவற்றையெல்லாம் தங்களின் நாட்டுக்கு எடுத்துவரவேண்டும் என்ற எண்ணமேற்பட்டது.
பட்டுச் சாலை எனவும் பட்டுத் தடம் எனவும் அழைக்கப்பட்ட நிலவழிப் பாதையில் பொருட்கள் மேற்கு ஐரோப்பாவை வந்தடைய அதிகக் காலமானது, செலவும் அதிகம் பிடித்தது. வழியில் இஸ்லாமிய இடைத் தரகர்களுக்குச் சுங்கம் செலுத்த வேண்டியிருந்தது. கூடவே வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டூழியம் வேறு. இந்தக் காரணங்களால் கீழை ஆசிய நாடுகளின் வளம்கொழிக்கும் நகரங்களைச் சென்றடையும் கடல்வழித் தடத்தைக் கண்டறிவது கட்டாயமாகிப் போனது.
ஐபீரியன் தீபகற்பத்தில் ஸ்பெயின், போர்த்துகல் என இரண்டு நாடுகள் இருந்தன. எல்லா அண்டை நாடுகளையும்போலவே எல்லாவற்றிலும் போட்டி. கடல்வழி வர்த்தகத் தடத்தைக் கண்டறிவதிலும் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்து அங்கே குடியேறுவதிலும்தான். 14ஆம் நூற்றாண்டில் இந்தப் போட்டியில் போர்த்துகீசியர்கள் முன்னணியில் இருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களை முந்துவதற்கு ஸ்பானியர்களுக்கு இன்னும் நூறாண்டுகள் பிடித்தது.
போர்த்துகீசியர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் வழியே பயணம் மேற்கொண்டு முதலில் மேற்கு ஆப்பிரிக்காவில் கால் பதித்தனர். பின்னர், ஆப்பிரிக்காவின் தென்பகுதியைச் சுற்றிக் கடந்து இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்து, அங்கிருந்து இந்தோனேசியாவை அடைந்தனர். அதையடுத்து அட்லாண்டிக் கடலைக் கடந்து பிரேசில் நாட்டையும் அட்லாண்டிக் தீவுகளையும் சென்றுசேர்ந்தனர். இறுதியாக இந்தியப் பெருங்கடலைக் கடந்து சீனாவிலும் ஜப்பானிலும் வர்த்தக மையங்களை அமைத்தனர். போர்த்துகீசியர்கள் பெரிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றவில்லையென்றாலும் முக்கியமான துறைமுகங்களையும் தீவுகளையும் தங்களின் வசம் கொண்டுவந்ததால் கடல்வழி வர்த்தகத் தடங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
0
போர்த்துகீசிய வாணிகர்கள் மேற்கு ஆப்பிரிக்காவை அடைந்தபோது அங்கு நிலவிய உள்நாட்டு அடிமைகளின் வாணிகத்தைக் காண நேரிட்டது. அட்லாண்டிக் தீவுகளில் கரும்பு சாகுபடி செய்வதற்கு அடிமைகளைப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உதித்தது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டிய அடிமைகள் வாணிகத்தின் தொடக்கப்புள்ளி இதுதான். தங்கம், யானைத் தந்தம் இவற்றோடு ஆப்பிரிக்க மக்களையும் அடிமைப்படுத்திக் கப்பலில் ஏற்றினர்.
ஆப்பிரிக்காவில் மட்டும்தான் மக்கள் ஒருவரையொருவர் அடிமைப்படுத்தினார்களா? ஆப்பிரிக்க மன்னர்கள் மட்டும்தான் அண்டைநாட்டைச் சேர்ந்த மற்ற இன மக்களைக் கைதுசெய்து ஐரோப்பியர்களுக்கு விற்றார்களா? உலகின் மற்ற பகுதிகளில் எல்லா மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து மாட்சிமையோடு வாழ்ந்தார்களா? இந்தக் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் ‘இல்லை’ என்பதுதான் விடை.
மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் வழக்கம் எப்போது தொடங்கியது என்ற கேள்விக்கு வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் தரும் விடை என்ன? வேட்டையாடும் சமூகமாக இருந்த காலத்தில் தொடங்கியிருந்தாலும் ஓரிடத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்த காலத்தில் தங்களுள் சிலரை உடைமையைப்போல நடத்தும் வழக்கம் உறுதிப்பட்டிருக்கலாம். அனைத்து நாடுகளின் கலாசார, இன, சமயங்களைச் சேர்ந்தவர்களும் சக மனிதர்களை அடிமைப்படுத்தினர் என்பதை வரலாறு சுட்டுகிறது. அதுபோலவே அடிமைப்பட்ட மனிதர்களின் சமூக, பொருளாதார, சட்ட நிலைமையும் உரிமைகளும் ஒன்றுபோல் இருக்கவில்லை. காலம், நிலம், ஆட்சியாளர்கள் போன்ற பல காரணிகளால் அவை மாறுபட்டன.
(தொடரும்)