நடுநிலைப் பள்ளிப் புவியியல் பாடத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லித்தருவார்கள். அதில் ஆப்பிரிக்காவுக்கு ‘இருண்ட கண்டம்’ என்ற பெயருமுண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமூட்டியது. அடர்ந்த காடுகளையும் செழித்து வளர்ந்த தாவரங்களையும் அங்கே வசித்த வினோதமான உயிரினங்களையும் கடக்கமுடியாத கட்டுக்கடங்காத வேகங்கொண்ட காட்டாறுகளையும் இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்ந்த பல இனத்தைச் சேர்ந்த மக்களையும் வெளியிலிருந்து வந்த புதியவர்கள் முழுவதுமாகத் தெரிந்துகொள்ளமுடியாத காரணத்தால் இட்ட பெயர் என்பது காலப்போக்கில் புரிந்தது.
இடைக்காலத்தில் ஆப்பிரிக்கா வளங்கொழிக்கும் பல நாடுகளை உள்ளடக்கிய கண்டமாக இருந்தது. பரந்து விரிந்த பேரரசுகளையும் செல்வச் செழிப்புமிக்க நகரங்களையும் கொண்டது. மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள் ஒட்டுமொத்த உலகநாடுகளின் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகித்தன.
ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளைப் பல புகழ்பெற்ற பேரரசுகள் ஆட்சிபுரிந்தன. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த எகிப்தியப் பேரரசைப்பற்றி எல்லோரும் அறிவோம். சுமார் ஓராயிரமாண்டு ஆட்சிசெய்த குஷ் பேரரசும் அதற்கு நிகரான பெருமைகளையுடையது. பொஆமு 2000இல் அதன் புகழ் உச்சம்பெற்றது. நைல் நதியின் கரையிலுள்ள தற்போதைய சூடான் நாட்டை உள்ளடக்கியது குஷ் பேரரசு. தங்கம், யானைத் தந்தம், சாம்பிராணி, இரும்பு ஆகியவற்றின் வாணிக மையமாக இருந்தது. எகிப்தியக் குறிப்புகளில் இருந்து குஷ் பேரரசு குறித்த தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது.
எகிப்தியப் பேரரசோடு இணைந்து வர்த்தகம் செய்யும் அண்டை நாடாக இருந்தாலும் எதிரியாகவும் இருந்தது குஷ் பேரரசு. சில ஆண்டுகளுக்கு எகிப்தைக் கைப்பற்றி அதன் 25வது வம்சமாக ஆட்சிசெய்தது. அந்தக் காலகட்டத்தில் எகிப்தியக் கடவுளரை வழிபடுவது, இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி வைப்பது, பிரமிடைப்போன்ற கட்டடங்களை எழுப்புவது எனப் பல எகிப்திய வழக்கங்களைப் பின்பற்றியது. எகிப்தைவிடவும் அதிக எண்ணிக்கையில் பிரமிடுகளை குஷ் பேரரசு அமைத்தது. அதன் தலைநகரமான மெரோ இடிபாடுகளில் சுமார் 200க்கும் அதிகமான பிரமிடுகளைத் தற்போது காணலாம்.
0
வரலாற்றுக் குறிப்புகள் பூண்ட் பேரரசின் காலம் பொஆமு 2500 என்று சொல்கின்றன. எகிப்திய ஆவணங்கள் பூண்ட்டை ‘கடவுளின் நிலம்’ என்றும் தங்கம், கருங்காலி மரம், மிர் எனப்படும் நறுமணப் பொருள், விலங்குகளின் தோல், சிறுத்தைப் புலி, பபூன் இனக் குரங்குகள் எனப் பல்வகை வளத்தைக்கொண்டது என்றும் குறிப்பிடுகின்றன.
பொஆமு 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹட்ஷெப்சூட் என்ற எகிப்திய பெண் பாரோவின் ஆட்சியில் பூண்ட்டிற்கு காரவன்களையும் வாணிகக் குழுக்களையும் அனுப்பிவைத்தார். ஆனாலும் இன்று வரையில் பூண்ட் பேரரசு எங்கே அமைந்திருந்தது என்பது உறுதிசெய்ய முடியாத மர்மமாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலின் கரையில் தற்போதைய எரித்ரியா, எத்தியோப்பியா, சோமாலியா நாடுகள் அமைந்திருக்கும் பகுதியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
0
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த கார்தேஜ் பேரரசு ரோமானியப் பேரரசின் வைரியாக இருந்தது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியின் வர்த்தக மையமாக விளங்கியது. பொஆமு 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் தற்போதைய டுனீசியாவில் பீனீசியர்களின் சிறிய குடியேற்றமாக இருந்த கார்தேஜ் காலப்போக்கில் பரந்துவிரிந்த பேரரசாக உருப்பெற்றது. கடற்பயணத்திலும் துணிவகைகள், தங்கம், வெள்ளி, செம்பு வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறந்தது. கார்தேஜின் தலைநகரத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர். அதன் துறைமுகத்தில் 220 கப்பல் துறைகள் இருந்தன.
பேரரசை விரிவுபடுத்தும் ஆசையில் ரோமானியப் பேரரசுடன் மோதியது கார்தேஜ். சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலகட்டத்தில் மூன்று பூனிக் போர்கள் நடந்தன. இறுதியில் ரோமானியர்களே வெற்றி பெற்றனர். கார்தேஜ் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டது, அதன் மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். தற்போது எஞ்சியிருப்பது டூனிஸ் நகரிலுள்ள இடிபாடுகள் மட்டுமே.
0
ரோமானியப் பேரரசு எழுச்சிபெற்ற அதே காலகட்டத்தில் தற்போதைய எரித்ரியா, வடக்கு எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அமைந்துள்ள பகுதியில் தோன்றியது அக்ஸம் பேரரசு. பொஆ 2, 3ஆம் நூற்றாண்டுகளில் செல்வாக்குமிக்க பேரரசாக விளங்கியது என்றாலும் அக்ஸம் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் இல்லை. தங்கம், யானைத்தந்தம் ஆகியவற்றின் வர்த்தகத்தில் பண்டைய ஐரோப்பாவுக்கும் தூர கிழக்கு நாடுகளுக்குமிடையே முக்கியமான கண்ணியாக இருந்தது. செங்கடல் வழியாக நடைபெற்ற வாணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அக்ஸம் பேரரசின் எழுத்துருவான ஜீஸ் ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் எழுத்துரு என நம்பப்படுகிறது. இந்தப் பகுதியில் காணப்படும் 100 அடி உயரம்கொண்ட கற்சதுரத் தூண்கள் அக்ஸமின் தனித்துவம் வாய்ந்த கட்டடக்கலைக்குச் சான்றாக இருப்பவை. பொஆ 4ஆம் நூற்றாண்டில் அக்ஸம் பேரரசு கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது. பொஆ 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சியடைந்தது.
0
சோங்காய் பேரரசு 15ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. ஆப்பிரிக்காவின் பிரம்மாண்டமான செல்வாக்குமிக்க வலிமையான பேரரசு எனக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவைவிடவும் அதிகப் பரப்பளவைக்கொண்டது. திடமான வர்த்தகக் கொள்கைகளையும் நுட்பமான நிர்வாகக் கோட்பாடுகளையும் கொண்டிருந்ததால் வாணிகம் செழித்து நாடு வளம்பெற்று விளங்கியது.
பொஆ 16ஆம் நூற்றாண்டில் அதைக் கைப்பற்றிய முதலாம் முஹம்மது அஸ்கியா மன்னனின் ஆட்சியில் அதன் சிறப்பு உச்சம் பெற்றது. புதிய நிலங்களைக் கைப்பற்றியதோடு எகிப்தின் இஸ்லாமிய காலிப்போடு கூட்டணி அமைத்தான். முக்கிய நகரமான டிம்பக்டுவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் கல்விச்சாலைகளை அமைத்தான். உள்நாட்டுக் கலவரத்தினால் ஆட்சி வலுவிழந்த சமயத்தில் மொரோக்கோ சுல்தான் படையெடுத்து வந்து சோங்காய் பேரரசைத் தோற்கடித்தான்.
0
சஹாரா கீழமை ஆப்பிரிக்கப் பகுதியிலுள்ள பெரிய ஜிம்பாப்வே என்றழைக்கப்படும் கல் கோபுரங்கள், சுவர்கள் ஆகியவை அடங்கிய கற்கோட்டையொன்றின் இடிபாடுத் தொகுதிகளை ஆய்வுசெய்தனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். அவை பொஆ 13 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையில் அந்தப் பகுதியில் ஆட்சிபுரிந்த உள்நாட்டுப் பேரரசு ஒன்றின் கற்கோட்டையின் எச்சங்கள் என்று அறிவித்தனர். தற்போதைய போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.
அந்தப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் ஜிம்பாப்வே பேரரசு எனக் குறிப்பிடுகின்றனர். அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீனக் களிமண் பாண்டங்கள், அரேபிய கண்ணாடி, ஐரோப்பிய துணிவகைகள் போன்றவை அது வர்த்தக மையமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கால்நடைகள், விலைமதிப்புமிக்க உலோகங்கள், தங்கச் சுரங்கங்கள் எனப் பல வளங்களைக் கொண்டிருந்த அந்தப் பேரரசை இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களோடு இணைக்கும் வர்த்தகத் தடமும் அங்கே அமைந்திருந்தது.
பேரரசு உச்சத்தில் இருக்கையில் இங்கே சுமார் 20000 மக்கள் வசித்திருக்கலாம். 15ஆம் நூற்றாண்டில் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது கோட்டையில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
0
மாலி பேரரசு 10ஆம் நூற்றாண்டில் தோன்றி 16ஆம் நூற்றாண்டு வரையில் செழித்து வளர்ந்தது. ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கரையிலுள்ள தற்போதைய நைஜீரியாவை உள்ளடக்கியது. அந்தக் காலத்தில் சுமார் ஒரு கோடி குடிமக்களைக் கொண்டிருந்த பெருநகரங்கள் அமைந்த நிலப்பகுதியாக விளங்கியது. நைஜர் நதியின் கரையிலிருந்த நகரங்களில் 10000 முதல் 30000 மக்கள் வரை வசித்தனர் என்றால் பாருங்கள். மக்கள் மேம்பட்ட கல்வியறிவு கொண்டிருந்தனர். பட்டுச் சாலை வர்த்தகத்தின் மூலம் உயர்விலை ஆடம்பரப் பொருட்களை வாங்கித் துய்த்தனர். வெனிஸ், மாலத்தீவுகள் போன்ற தூரதேசங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பொருட்கள் அங்கே விற்கப்பட்டன.
பொஆ 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலி பேரரசை மன்சா மூசா என்ற பேரரசன் ஆண்டான். அந்த நிலப்பரப்பின் தங்கச் சுரங்கங்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தன. ஸ்பெயினும் மற்ற தென் ஐரோப்பிய நாடுகளும் அவற்றுக்குத் தேவையான தங்கத்தை மாலியில் இருந்து வாங்கின. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல டன் தங்கம் சஹாரா பாலைவனத்தின் வழியாக ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
என்ன, மலைத்துப்போய்விட்டீர்களா. ஆம், சஹாரா பாலைவனமேதான். தொழில்நுட்பமும் போக்குவரத்தும் முன்னேறிய இந்தக் காலத்திலும் எவராலும் எளிதில் கடக்க முடியாத சுட்டுத் தகிக்கும் மணற்பரப்பைக்கொண்ட நிலப்பகுதி. ஆனால், இடைக்கால உலகின் வர்த்தக வலைப்பின்னலின் மையப்புள்ளியாக இருந்தது.
மன்சா மூசாவின் காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவின் தங்கம் உலகை இயக்கும் இயந்திரமாகச் செயலாற்றியது. தங்கம், உப்பு ஆகியவற்றோடு அடிமைகளும் வாணிகம் செய்யப்பட்டனர். பீங்கான், செம்பு, கண்ணாடி மணிகள், தந்தம், தோல், ஆடைகள் ஆகிய பொருட்களும் பல தூரதேசங்களில் வாணிகம் செய்யப்பட்டன.
பேரரசன் மன்சா மூசா பொஆ 1324ஆம் ஆண்டு மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்கையில் 8000 காலாட்கள், 12000 அடிமைகள், 100 ஒட்டகங்கள் எனப் பெரிய பரிவாரத்தோடு போனான்; ஒவ்வொரு ஒட்டகமும் 300 பவுண்டு பசும்பொன்னைச் சுமந்துசென்றன. ஒட்டகக் கூட்டம் ஒரு மணி நேரத்தில் மூன்று மைல் தூரத்தைக் கடக்கும். சஹாராவைக் கடக்க 2500 மைல்கள் பயணிக்கவேண்டும். பசி, தாகம், மரணம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராடிக் கடக்கும் சாகசப் பயணம். அப்படியொரு பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டான் மூசா. உலகின் செல்வந்தர்கள் பட்டியலின் முதலிடத்தை மன்சா மூசாவிடமிருந்து எவராலும் இன்றுவரையில் தட்டிப்பறிக்க முடியவில்லை என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
இடைக்காலத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்களின் பண்டைய வரைபடங்களிலும் சித்திரங்களிலும் செல்வத்திலும் வலிமையிலும் புகழ்பெற்ற ஐரோப்பிய பேரரசர்களுக்கு நிகரானவனாகச் சித்தரிக்கப்பட்டான் மன்சா மூசா. 1375ஆம் ஆண்டில் ஆபிரகாம் கிரஸ்கஸ் என்ற யூத வரைபடவியலாளர் தீட்டிய கடலான் வரைபடத்தில் (Catalan Map) இருக்கும் அவனுடைய ஓவியத்திலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.
0
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி கடற்கரையில் அமைந்த நகர மாநிலங்கள் இந்தியப் பெருங்கடல் வழியே அரேபிய, பாரசீக, இந்திய வாணிகர்களுடன் வர்த்தகம் செய்தன. காலப்போக்கில் இஸ்லாமிய மதமும் ஸ்வாஹிலி மொழியும் இவர்களை ஒன்றிணைக்கும் காரணிகளாக மாறின. சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்தன. இந்த நகர மாநிலங்களில் ஆப்பிரிக்க அடிமைகளை விற்கும் வாணிகமும் நடைபெற்றது.
15ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த போர்த்துகீசியர்கள் கில்வா நாட்டின் சோஃபாலா தங்கச் சுரங்கங்களோடு அந்தப் பகுதியிலிருந்த மற்ற நாடுகளையும் கைப்பற்றினர். ஆனால் ஓட்டாமான்களும் சோமாலியர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசியர்களின் கை ஓங்குவதை விரும்பவில்லை. அவர்களின் ஒன்றிணைந்த தாக்குதலில் போர்த்துகீசியர்களின் பிடி தளர்ந்தது.
0
பொஆ 12ஆம் நூற்றாண்டில் பண்டைய ஸ்பெயின் நாட்டின் கிரனடா நகரில் வாழ்ந்த அல்-ஜுஹ்ரி என்ற புவியிலாளர் சஹாரா பாலைவனத்தினூடாக நிகழ்ந்த வர்த்தகத்தைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஸ்பெயினில் உள்ள அல்மோரவிட் பேரரசு தொடங்கி ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தைத் தாண்டி மேற்கு ஆப்பிரிக்காவின் கானா பேரரசு வரையிலும் வர்த்தகம் நடந்தது. சஹாரா பாலைவனத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளுக்குப் புறத்தே அமைந்த நகரங்கள், வட ஆப்பிரிக்கா முழுவதும், ஐரோப்பாவின் கிழக்கு, மேற்குப் பகுதிகள் என எல்லாப் பகுதிகளும் ஒன்றோடொன்று வர்த்தகத் தொடர்பிலிருந்தன.
இபின் படூட்டா என்ற வரலாற்றாசிரியர் மேற்கு சுடானில் தங்கம், வெள்ளியைப்போல உப்புப் பாளங்களைச் செலாவணியாகப் பயன்படுத்தினார்கள் என்று பதிவுசெய்கிறார். சஹாரா பாலைவனத்தின் மையப்பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட பாறை உப்பு விலைமதிப்புமிக்கதாகக் கருதப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் கிடைத்த பசும்பொன்னும் உப்பும் இடைக்கால உலகின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்தன.
சர்க்கரை, இண்டிகோ எனப்படும் நீல வண்ணம், படிகாரம், பித்தளை, யானைத் தந்தம், கருங்காலி மரம், கோரைப்புல், ஓரிக்ஸ் எனப்படும் மறிமானின் தோலில் செய்யப்பட்ட கவசங்கள் எனப் பலவிதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றோடு ஆண், பெண் அடிமைகளின் விற்பனையும் நடந்தது என அல்-ஜூஹ்ரி எழுதியுள்ளார்.
இந்த வர்த்தகத்தை நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்து செயல்படுத்தவும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களின் திறமை, மனிதவளம், பார்வை, தேவை வழங்கல் கட்டமைப்பு ஆகியவை அவசியமல்லவா. வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெர்பெர் என அழைக்கப்படும் அமெசிக் நாடோடி இனத்தவர்கள் அரபி மொழியைப் பேசுவதோடு இஸ்லாமிய வர்த்தகச் சட்டங்களையும் தெரிந்துவைத்திருந்தனர். பாலைவனத்தைக் கடந்துசெல்லும் பாதைகளும் அவர்களுக்கு அத்துப்படி. ஒட்டகக் கூட்டத்தைச் சாமர்த்தியமாக வழிநடத்தும் திறமைபெற்றவர்கள். அவர்களின் உதவியின்றி எந்த வாணிகமும் நடக்கமுடியாது என்ற நிலைமை நிலவியது.
15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹான்ஸ் மெம்லிங் என்ற ஜெர்மானிய ஓவியர் குழந்தை ஏசு பிறந்தபோது பெத்லஹேம் நகருக்கு வந்து அவரைத் தரிசனம்செய்த மூன்று பேரறிவாளர்களுள் (magi – மாஜை) ஒருவரை ஆப்பிரிக்கராகச் சித்தரித்திருக்கிறார். அந்த ஆப்பிரிக்கப் பேரறிவாளர் அணிந்திருக்கும் ஆடையும் ஆபரணங்களும் அவரின் உயர் சமூகநிலையையும் செல்வச்செழிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. கடல்கடந்த அடிமை வர்த்தகமும் அயல்நாட்டவரின் ஏகாதிபத்தியமும் தலைதூக்கிய பிறகே ஆப்பிரிக்கர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கும் இகழப்படும் இனமாகச் சித்தரிக்கப்பட்டனர்.
(தொடரும்)