Skip to content
Home » கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

ஆப்பிரிக்க வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால் அடிமைத்தளை காலங்காலமாக நடைமுறையில் இருந்தது தெரியவருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவை ஆண்ட பேரரசுகள் பொருளாதாரம், அரசியல், சமயத்தைப் பரப்புதல் என ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒன்றோடொன்று போர்புரிந்தன. அப்போது தங்கள் இனத்தைச் சேராத வேற்றினத்தவர்களைச் சிறைப்பிடித்துக் கட்டாய உழைப்பில் தள்ளின.

ஆப்பிரிக்கர்கள் தங்களுடைய உறவுமுறையினர் மட்டுமின்றி அடிமைகளின்மூலமாகவும் அரச, சமூக நிலைகளையும் செல்வத்தையும் தக்கவைத்துக்கொண்டனர். பிடிபட்ட அடிமைகள் திறனுக்கேற்ப அரண்மனைச் சேவகம், அரசரின் படை, வீட்டுப் பணி, இடைத்தரகு, வாணிகம், செய்தித் தூதுவர்கள் எனப் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாறாக, பண்டைய ஐரோப்பியர்கள் நிலவுடைமையின்மூலம் நிலத்தின் விளைபொருட்களின்மீதான தங்களின் உரிமையை நிலைநாட்டினர். அதன்மூலம் தங்களின் அரச, சமூக நிலையையும் செல்வத்தையும் தக்கவைத்துக்கொண்டனர்.

இரண்டு அமைப்புகளிலும் நிலத்திலிருந்தும் உழைப்பாளர்களின் உழைப்பினாலும் கிடைத்த பொருட்களையும் லாபத்தையும் உயர்குடியினர் தங்களின் உடைமையாக்கிக்கொண்டனர். அட்லாண்டிக் அடிமை வாணிகத்துக்கு முந்தைய காலத்தில் நிலம், மக்கள் இரண்டையும் யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்தந்தப் பகுதியின் அடிமைப்படுத்தும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொஆ 15 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அண்டைநாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்குவது வழக்கமாக இருந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல், காம்பியா நதிகளுக்கிடையே இருக்கும் சிறிய பிரதேசம் செனகாம்பியா. பொஆ 14 முதல் 20ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு வசித்த மக்களில் மூன்றில் ஒருவர் அடிமையாக இருந்தனர். மேற்கு சுடானிலிருந்த கானா, மாலி, செகூ, சோங்காய், போனோமன் நாடுகளிலும் இதே நிலவரம்தான். ஆப்பிரிக்கா முழுவதும் பல நாடுகளில் ஏகான், இக்போ, துஆலா, சொக்வே, அஷாண்டி, யோரூபா, போனோ போன்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் அடிமைத்தளையில் சிக்கி உழன்றனர்.

15ஆம் நூற்றாண்டில் மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பண்டைய கானெம்-போர்னு பேரரசில் வருடத்துக்கு 5000 பேர் வரையிலும் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஓட்டமான் பேரரசுடன் ஏற்பட்ட அரசியல் உறவினால் போர்னு படைகளுக்குப் புதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அரசியல் ஆலோசகர்களின் வழிகாட்டுதலும் உதவியாக இருந்தது. இதன் விளைவாக, இஸ்லாமியரல்லாத அண்டைநாடுகளுடன் போரிட்டு அங்கிருந்த மக்களையும் கவர்ந்து வந்தனர்.

பண்டைய கானெம்-போர்னு பேரரசின் பெரும்பான்மையான வருவாய் அடிமை வாணிகத்தில் இருந்து கிடைத்தது என்பதால் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் அரசே முன்னின்று இந்த வாணிகத்தை நடத்தியது. இதனால் எப்போதும் அண்டை அயலாருடன் போரிட்டுக்கொண்டே இருக்கும் கட்டாயம் வேறு. எனவே, அந்தப் பகுதியில் அரசியல் நிலைமை எப்போதும் வலுவிழந்து காணப்பட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துபோனது. இன்று வரையில் மக்கள் நெருக்கம் குறைவாக இருக்கும் பகுதி அது.

20ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட சியரா லியோன், கேமரூன், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் மக்கள் தொகையில் சரி பாதி பேர் அடிமைகள். கிழக்கிலிருக்கும் ஜன்சிபார் தீவில் 90 சதவீதம் பேர் அடிமைகளாக இருந்தனர். எத்தியோப்பியாவில் 1930கள் வரையிலும் சுமார் 2 மில்லியன் மக்கள் அடிமைகளாக இருந்தனர். 1942இல் எத்தியோப்பிய பேரரசர் ஹெய்லே சேலஸ்ஸி அடிமைத்தளையை ஒழிக்கும் உத்தரவை வெளியிட்ட பிறகு அடிமை வாணிகம் நிறுத்தப்பட்டது.

0

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி பகுதியில் வசித்த மக்கள் பெரும்பாலும் வட ஆப்பிரிக்காவுக்கும் மத்திய கிழக்கு, அரேபிய நாடுகளுக்கும் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். சிலர் இந்தியா, சீனா என்று நெடுந்தொலைவுக்குப் போகவேண்டியிருந்தது. நாளடைவில், அரேபிய, பாரசீக வியாபாரிகள் இந்தப் பகுதியில் குடியேறி, ஆப்பிரிக்க இனங்களைச் சேர்ந்த பெண்களை மணமுடித்தனர். அடுத்த சில நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியில் இஸ்லாமிய மதம் பரவியது.

இஸ்லாமிய சமய விதிகளின் காரணமாக இஸ்லாமியர்களை அடிமைப்படுத்த முடியாததால் அரேபிய அடிமை வாணிகர்கள் ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளுக்கு அச்சமின்றி ஊடுருவிச்சென்று தாங்களே மக்களைக் கவர்ந்துவந்தனர். ஆண்களைவிடவும் பெண் அடிமைகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் வீட்டுவேலை செய்தனர்; ஆண்கள் இராணுவம், கப்பல் பணியிலும் விவசாய வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

17ஆம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகையினால் அரேபியர்கள் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களை அடிமைப்படுத்தினர். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்த காலனிகளில் பணிசெய்வதற்கென 5 லட்சம் மக்களை அடிமைப்படுத்தினர். 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையில் போர்த்துகீசியர்கள் மொசாம்பிக் தீவிலிருந்தவர்களை அடிமைகளாக விலைகொடுத்து வாங்கினர். 18ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலைச் சேர்ந்த ரியூனியன், மொரீஷியஸ், மஸ்கரீன் தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஒரு லட்சம் மக்களை அடிமைப்படுத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க இனத்தவர்கள் அமெரிக்காவுக்கும் இட்டுச்செல்லப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயணம்செய்த ஜெர்மானியத் தேடலாய்வாளர் குஸ்தவ் நாக்டிகல் போர்னுவிலிருந்து எகிப்தை நோக்கிக் கூட்டங்கூட்டமாக அடிமைகள் பாலைவனத்தைக் கடப்பதைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். 19 மில்லியனுக்கும் அதிகமான ஆப்பிரிக்க மக்கள் சொந்த நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்டனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். 9 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையில் சஹாரா பாலைவனம், செங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் என எல்லாத் தடங்களின் வழியாகவும் ஆப்பிரிக்காவின் மனிதவளம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

0

அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின் தொடக்கப்புள்ளி எது? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள் எப்போது வட அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர்? அட்லாண்டிக் அடிமை வாணிகத்தால் எந்தெந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள பண்டைய போர்த்துகலின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொஆ 13ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசிய அரசர்கள் கடல்கடந்த ஏற்றுமதி வாணிகத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இஸ்லாமியக் கடற்கொள்ளையர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகக் கடற்படைகளை அமைத்தனர். 14ஆம் நூற்றாண்டு முதலே தங்கக் காசுகள் அச்சடிப்பதற்காக சூடானில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்துவந்தனர் ஐரோப்பியர்கள். ஆப்பிரிக்காவின் வர்த்தகத் தடங்களையும் சீனா, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பட்டு, நறுமணமூட்டிகள், ஆப்பிரிக்காவின் தங்கம் போன்ற முக்கியக் கச்சாப் பொருட்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அரேபிய, ஆப்பிரிக்க இடைத்தரகர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர்களின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னிச்சையாக வாணிகம் செய்ய விரும்பினார்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான போர்த்துகீசியர்கள். ஆப்பிரிக்காவின் எந்தெந்தப் பகுதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதைத் தெரிந்துகொள்வதோடு சஹாரா பாலைவனத்தினூடாகச் செல்லும் வர்த்தகத் தடத்தின் தொடக்கப்புள்ளியைக் கண்டறியவேண்டுமெனவும் நினைத்தனர்.

கடற்பயணங்களில் ஆர்வம் கொண்ட போர்த்துகீசிய இளவரசன் ஹென்றிக்கு கடலோடி என்ற அடைமொழியுண்டு. பொஆ 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவனுடைய ஆதரவோடும் முன்னெடுப்போடும் பல முறையான கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பான நிர்வாகத் திறனால் புத்தாய்வுகளின் காலத்தைத் தொடங்கிவைத்த பெருமை ஹென்றியைச் சேரும். போர்த்துகீசியப் பெருந்தகைகள், வாணிகர்கள், கப்பல் முதலாளிகள் எனக் கடற்வாணிகத்தில் ஆர்வமுள்ளவர்களின் உதவியோடு புதிய வாய்ப்புகளைத் தேடி வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைச் சென்றடைந்தான் ஹென்றி. கூடவே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதும் போரில் வெற்றிபெற்று மக்களின் மதிப்பைப் பெறுவதும் இலக்காக இருந்தது. இதற்கு ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பின் அனுமதியும் கிடைத்தது.

பசுந்தங்கத்தைத் தேடி வந்த போர்த்துகீசியர்கள் ஆப்பிரிக்காவில் நடைமுறையிலிருந்த அடிமைப்படுத்தும் வழக்கத்தைப் பார்த்தனர். 1441இல் ஆப்பிரிக்க அடிமைகளைச் சிறைப்பிடித்த முதல் கப்பல் பண்டைய போர்த்துகல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தது. பண்டைய ஆப்பிரிக்கப் பேரரசுகளான காங்கோ, பெனின், அங்கோலா ஆகியவற்றுடன் போர்த்துகலின் வர்த்தகம் தொடர்ந்தது. காங்கோ அரசர்கள் எதிரி நாட்டு மக்களைச் சிறைப்பிடித்து போர்த்துகீசியர்களிடம் விற்றார்கள்.

1470களில் போர்த்துகீசியர்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் கினி வளைகுடாவில் இருக்கும் சாவோ தோம், பிரின்சிபே தீவுகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவுகளின் வளமான நிலமும் தட்பவெப்பமும் கரும்பு விளைச்சலுக்கு ஏற்றதாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவுக்கான சர்க்கரையில் பெரும்பகுதி இந்தத் தீவுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. கரும்பு விளைவிப்பதற்குப் பெருமளவில் மனித உழைப்பு தேவை. ஆப்பிரிக்க இனத் தலைவர்களும் இடைத்தரகர்களும் அதற்குத் தேவையான உழைப்பாளர்களைச் சிறைப்பிடித்து போர்த்துகீசியர்களுக்கு விற்றார்கள்.

போர்த்துகீசிய வாணிகர்கள் துப்பாக்கி, வெடிமருந்து, துணி, பித்தளை அல்லது செம்பினாலான மணில்லா எனப்படும் வர்த்தகத்துக்கு உதவும் செலாவணி ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் வர்த்தகம் செய்வதற்காக எடுத்து வந்தனர். ஒரு அடிமையின் விலை 8 முதல் 10 செம்பு மணில்லா, யானைத் தந்தம் வாங்க ஒரு மணில்லா போதும். மேற்கு ஆப்பிரிக்கப் பேரரசுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுப் பொருட்களின் மீதிருந்த மோகத்தினால் அண்டைநாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக விற்றனர்.

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்கப் பேரரசுகளுக்குள் ஏற்பட்ட போரினால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. வலுவான தலைமை இல்லாத காரணத்தால் நிறைய சிறிய அரசுகளாகப் பிரிந்தன. அவற்றை ஆண்ட குறுநில மன்னர்கள் ஐரோப்பியர்களுடன் நேரடியாக வர்த்தகத்திலும் அடிமை வாணிகத்திலும் ஈடுபட்டனர். 16ஆம் நூற்றாண்டில் வருடத்துக்கு ஆயிரம் அடிமைகள் விற்கப்பட்டனர் என்றால் 17ஆம் நூற்றாண்டில் சில பத்தாயிரம் அடிமைகள் வரையில் சிறைப்பிடிக்கப்பட்டனர். பிறகு வருடத்துக்கு 45000 பேர் வரை கப்பல்களில் ஐரோப்பிய காலனிகளுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.

0

இதே காலகட்டத்தில் போர்த்துகலின் அண்டை நாடும் போட்டியாளருமான ஸ்பெயினும் கடற்பயணங்களிலும் கடல் வாணிகத்திலும் ஆர்வம்கொண்டது. 1486ஆம் ஆண்டில் இத்தாலியின் ஜெனோவா நகரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற மாலுமி ஸ்பெயினின் ஆட்சியாளர்களான அரசர் பெர்டினாண்டையும் இசபெல்லாவையும் சந்தித்தார். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஆசியாவுக்குச் செல்லும் வழி தனக்குத் தெரியுமென்றும் அதற்குப் பொருளுதவி செய்யவேண்டுமென்றும் கேட்டார். ஸ்பானியர்களுக்கு ஆசியாவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதில் போர்த்துகீசியர்களை முந்தவேண்டுமென்ற போட்டியோடு கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டுமென்ற முனைப்பும் சேர்ந்துகொண்டது. சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து 1492ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்.

பஹாமாஸ் தீவுகளை அடைந்ததும் அதுதான் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தியா என்ற முடிவு செய்தார். அங்கிருந்து கியூபாவுக்கும் மற்றொரு தீவுக்கும் சென்றார். அந்தத் தீவுக்கு ஹிஸ்பானியாலோ, அதாவது குட்டி ஸ்பெயின் என்று பெயரிட்டார். 1493இல் ஸ்பெயினுக்குத் திரும்புகையில் ஹிஸ்பானியாலோவைச் சேர்ந்த அராவக் இனமக்களை இந்தியர்கள் என அழைத்தார். அவர்களைச் சிறைப்பிடித்து ஸ்பெயினுக்குத் தன்னுடன் கூட்டிச் சென்றார். இப்படி மொத்தம் நான்கு முறை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவுக்கு வந்தார்.

அடுத்த சில வருடங்களில் கொலம்பஸ் கண்டுபிடித்தது இந்தியா அல்ல, புதிய கண்டங்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவற்றுக்கு அமெரிக்கா எனப் பெயரிடப்பட்டது. எப்படியானாலும், ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவுக்குப் பயணிக்கும் கடல்வழியைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ்தான். இந்தக் கண்டுபிடிப்பு அமெரிக்காவில் ஐரோப்பிய காலனியத்துக்கு வித்திட்டது. ஸ்பெயின், போர்த்துகல், மற்ற ஐரோப்பிய நாடுகள் என ஒவ்வொருவராக இந்தக் கண்டங்களிலும் தீவுகளிலும் குடியேறித் தங்கள் நாட்டின் காலனியப் பேரரசை நிறுவி, பின்னர் விரிவாக்கினர்.

ஸ்பானிய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல கொலம்பஸின் பயணங்களினால் பெருஞ்செல்வத்தை அடைய முடியவில்லை. என்றாலும் புத்தாய்வுப் பயணங்களை அவர்கள் நிறுத்திவிடவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரில் உதவியவர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அவர்களின் சேவைகளுக்கு ஈடுசெய்யும் விதமாக என்கோமியண்டா எனப்படும் முறையை அறிமுகப்படுத்தினர். அதாவது, அவர்கள் வெற்றிகொண்ட பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை மக்களின் உழைப்பைப் பெறும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு நிலத்துக்குரிய மக்களை அடிமைப்படுத்துவதை ஸ்பானிய ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் என்கோமியண்டா முறையைப் பின்பற்றிய ஸ்பானிய குடியேறிகள் லாபம் சம்பாதிப்பதற்காக மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர். சில இடங்களில் மக்கள் இதை எதிர்த்துப் போராடினர்.

0

அட்லாண்டிக் பெருங்கடல் பகுத்யில் ஸ்பெயின் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துக் கையகப்படுத்தியதைக் கண்ட போர்த்துகலும் தன்னுடைய கடற்பயணக் குழுவை அங்கே அனுப்பிவைத்தது. தானும் வலுக்கட்டாயமாக நிலங்களை ஆக்கிரமித்தது. ஸ்பெயின், போர்த்துகலைத் தொடர்ந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து நிலங்களைத் தனதாக்கிக்கொண்டன. அங்கே தங்களுடைய காலனிகளை அமைத்தன. அந்த நிலத்தின் வளங்களைத் தடையேதுமின்றிப் பயன்படுத்திப் பொருட்களை உற்பத்திசெய்தன.

இந்தப் பகுதியில் நிலவிய வெப்பமண்டலக் காலநிலை அதிகுளிர்ப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்களுக்கு இதமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களில் வணிகப் பயிர் எனப்படும் செல்வத்தை ஈட்டித் தரும் பயிர்களை வளர்த்தனர். பெரிய கரும்புத் தோட்டங்களை அமைத்தனர். கூடவே பருத்தியும் புகையிலையும் பயிர்செய்தனர். இந்தப் பயிர்களை வளர்ப்பதற்கு மனித உழைப்புத் தேவை. பெரும் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக அந்த நிலத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்திக் கடுமையாக உழைக்கவைத்தனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்துபோயினர். அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கவேண்டிய கட்டாயம்.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு விருப்பத்தோடு குடிபெயர்ந்த மக்கள், ஒப்பந்தக் கூலிகள் போன்றோரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மக்களையும் கைதிகளையும் அமெரிக்கா கொண்டுசென்றாலும் அவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்தது. இப்படிப் பல காரணங்களால் மக்களை அடிமைப்படுத்தி வலுக்கட்டாயமாக அங்கு கொண்டுசெல்வதே தீர்வாக இருந்தது. மக்களை அடிமைப்படுத்தி ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டுசென்ற கப்பல் இப்போது அட்லாண்டிக்கைக் கடந்து அமெரிக்காவை நோக்கிப் பயணித்தது.

அமெரிக்காவில் அமைக்கப்பட்ட காலனிகள் ஐரோப்பிய முதலாளிகளுக்குத் தேவையான செல்வத்தையும் சர்க்கரையையும் அள்ளி அள்ளித் தந்தன. சர்க்கரை உற்பத்தி அதிக லாபம் தந்ததோடு அரசுகளின் கருவூலத்தையும் நிறைத்தது. அடிமைகளை வாங்குவதற்கான நிதியைத் தந்தது. அப்படி வாங்கப்பட்ட அடிமைகள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சுழற்சிபோல ஒன்று மற்றொன்றை வளர்த்தெடுத்தது. அதற்கடுத்த 40 ஆண்டுகளில் போர்த்துகீசியர்கள் அடிமைகளை அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவில் இருக்கும் தங்களின் காலனிகளுக்கு கொண்டுசென்றனர். போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு அடிமை வாணிகத்தில் ஈடுபட்டனர்.

அடிமைத்தளை, கட்டாய அடிமை வாழ்வு, கட்டாய உழைப்பு என வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் அடிமையாகவும் உரிமையாளராகவும் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அட்லாண்டிக் அடிமை வாணிகம் பற்றி எழுதிய டேவிட் எல்டிஸ், டேவிட் ரிச்சர்ட்சன் என்ற வரலாற்றாசிரியர்கள். அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின்மூலம் போர்த்துகீசிய, ஸ்பானியக் காலனிகளுக்கு வந்துசேர்ந்த அடிமைகள் புதிய உலக நாடுகளின் சமூக வளர்ச்சியிலும் அமைப்பிலும் பெரும்பங்காற்றினர். ஆனால் கட்டாய உழைப்பில் தள்ளப்பட்ட அவர்களின் நிலை பண்டைய உலகின் அடிமைகளின் நிலையிலிருந்து பெருமளவில் மாறுபட்டிருந்தது.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *